21 February, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 8

Job and his wife by Ilya Yefimovich Repin

ஒரு வீடு வாங்கச் செல்வதாக கற்பனை செய்துகொள்வோம். அந்த வீட்டின் வரவேற்பறையைப் பார்த்ததும், அந்த வீட்டை வாங்க முடிவு செய்துவிட மாட்டோம். அதேபோல், கார் ஒன்றை வாங்கச் செல்பவர், அந்தக் காரின் ஒரு 'டயரை'ப் பார்த்துவிட்டு, அது நல்ல கார் என்று முடிவெடுக்கமாட்டார். வீட்டையோ, ‘காரையோ, பகுதி, பகுதியாகவும், முழுமையாகவும் பார்த்தபின்னரே நாம் முடிவெடுப்போம்.
வாழ்வில் நாம் சந்திக்கும் அனுபவங்களையும் அவ்வாறே கண்ணோக்க வேண்டும். ஓரிரு அனுபவங்களை வைத்து, நம் வாழ்வு இப்படித்தான், அல்லது, அப்படித்தான் என்று நாம் முடிவெடுப்பது சரியா என்று சிந்திக்கவேண்டும். 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்ற பழமொழியை அவ்வப்போது பயன்படுத்துகிறோம். ஒரு பானையிலுள்ள சோறு, முழுவதும் வெந்துவிட்டதா என்பதை தீர்மானிக்க, ஓரிரு பருக்கைகளை சோதித்து தெரிந்துகொண்டால் போதும் என்பது உண்மைதான். ஆனால், அந்த வழிமுறை, நம் வாழ்வின் அனைத்து அனுபவங்களுக்கும் பொருந்தும் என்று தீர்மானிப்பது சரியல்ல.
இருப்பினும், வாழ்வில் பல வேளைகளில் இந்த பழமொழியைப் பின்பற்றியுள்ளோம் என்பதை மறுக்க இயலாது. எடுத்துக்காட்டாக, ஒரு தனி மனிதர் நடந்துகொள்ளும் முறையை வைத்து, அவர் சார்ந்திருக்கும் குழுவினரை நாம் எடைபோடுகிறோம். அல்லது, ஒருவர் செய்த ஓரிரு செயல்களை வைத்து, 'அவர் எப்போதும் அப்படித்தான்' என்று முடிவெடுக்கிறோம். இந்த முற்சார்பு முடிவுகளுக்குப் பக்க பலமாக, 'ஒரு சோறு பதம்' என்ற இந்தப் பழமொழியையும் பயன்படுத்துகிறோம். இத்தகைய அவசர முடிவுகள், நம் வாழ்விலும், மற்றவர் வாழ்விலும் குழப்பங்களை உருவாக்கியுள்ளதை நாம் அறிவோம்.

அவசர, அரைகுறை முடிவுகள் எடுப்பதைப்பற்றி சிந்திக்கும்போது, கதையொன்று நினைவுக்கு வருகிறது. இது, பலருக்கும் தெரிந்த கதை என்றாலும், இன்று மீண்டும் அதை ஒருமுறை அசைபோடுவது பயனளிக்கும். ஒரு சிற்றூரில் வாழ்ந்த ஒரு விவசாயி, அழகான வெள்ளைக் குதிரையை வளர்த்துவந்தார். சுற்றுவட்டாரத்தில் இருந்த அனைத்து ஊர்களிலிருந்தும், அந்தக் குதிரையைப் பார்க்க பலர் வந்தனர். பல செல்வந்தர்கள் அந்தக் குதிரையை வாங்க முன்வந்தனர். ஆனால், விவசாயியோ, "இக்குதிரை என் நண்பன். ஒரு நண்பனை என்னால் விற்கமுடியாது" என்று மறுத்துவிட்டார். ஒருநாள் காலை அக்குதிரையைக் காணவில்லை.
ஊர் மக்கள் விவசாயியிடம் வந்து, "நாங்கள் எவ்வளவோ சொல்லியும், அந்தக் குதிரையை நீ விற்கவில்லை. இப்போது, யாரோ ஒருவர், அதை திருடிச் சென்றுவிட்டார். இது உனக்கு வந்த சாபக்கேடு" என்று சொன்னார்கள். விவசாயி அவர்களிடம், "என் குதிரை இப்போது இங்கு இல்லை. அது மட்டும்தான் உண்மை. மற்றபடி, அது திருடப்பட்டது, அது, எனக்கு வந்த சாபக்கேடு என்று சொல்வதெல்லாம், நீங்கள் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள்" என்று கூறினார்.
ஒரு சில நாட்கள் சென்று, அந்த வெண்குதிரை திரும்பி வந்தது. அத்துடன், வேறு நான்கு காட்டுக் குதிரைகளும் வந்து சேர்ந்தன. கிராமத்தில் இருந்தவர்கள், "நீ உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவன்" என்று வாழ்த்தினர். விவசாயி மறுமொழியாக, "மீண்டும் சொல்கிறேன். அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம். என் குதிரை மீண்டும் வந்துள்ளது; அத்துடன், இன்னும் நான்கு குதிரைகள் வந்துள்ளன. இதுதான் உண்மை" என்றார்.
வீட்டுக்கு வந்த காட்டுக் குதிரைகளைப் பழக்குவதற்கு, விவசாயியின் மகன் முயன்றபோது, ஒரு குதிரை அவனைத் தூக்கி எறிந்ததால், அவனது கால்கள் உடைந்தன. மீண்டும் ஊர்மக்கள் கூடிவந்து, "காட்டுக் குதிரைகள் வந்தது, ஒரு சாபம்" என்று சொல்ல, விவசாயி, மீண்டும் அதை மறுத்து, "என் மகனுக்குக் கால்கள் உடைந்தன என்பது மட்டுமே உண்மை" என்று அமைதியாகப் பதிலளித்தார்.
அதற்கடுத்த வாரம், ஊருக்கு வந்த இராணுவ அதிகாரிகள், அங்கிருந்த இளைஞர் அனைவரையும் இராணுவத்தில் பணியாற்ற வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். விவசாயியின் மகன் காலுடைந்து படுத்திருந்ததால், அவனை மட்டும் விட்டுச் சென்றனர்.
இம்முறை, ஊர்மக்கள் கூடிவந்து, விவசாயியின் மகனுக்கு கால் உடைந்ததும் ஒருவகை ஆசீர்வாதம்தான் என்று சொல்ல, மீண்டும் விவசாயி அவர்களிடம், "என் மகனை இராணுவத்திற்கு இழுத்துச் செல்லவில்லை என்பது மட்டுமே உண்மை. மற்றபடி, இதை ஆசீர் என்றோ, சாபம் என்றோ நான் சொல்ல விரும்பவில்லை. அது, கடவுளுக்கு மட்டுமே தெரியும்" என்று தெளிவாகக் கூறினார்.

நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும், நல்லது, அல்லது, தீயது என்று தீர்மானித்து, அதை, ஆசீர், அல்லது, சாபம் என்று முடிவெடுத்த ஊர் மக்கள் நடுவே, நடந்தவற்றை நிகழ்வுகளாக மட்டுமே கண்டுவந்த அந்த விவசாயியின் மனநிலையை, விவிலியத்தில் கூறப்பட்டுள்ள யோபிடம் நாம் காண்கிறோம். யோபு, தன் சொத்துக்கள், பணியாளர்கள், இறுதியில், தன் புதல்வர், புதல்வியர் என்று அனைத்தையும் இழந்தபின்னரும், "ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக்கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக!" (யோபு 1: 21) என்று கூறினார்.
யோபின் உடல், வேதனைத் தீயில் வெந்துகொண்டிருந்தபோது, எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதுபோல், அவரது மனைவி அவரிடம், "இன்னுமா மாசின்மையில் நிலைத்திருக்கிறீர்! கடவுளைப் பழித்து மடிவதுதானே?" (யோபு 2:9) என்று கூறுகிறார். அக்கொடிய வேதனையின் நடுவிலும், "நன்மையைக் கடவுளிடமிருந்து பெற்ற நாம், ஏன் தீமையைப் பெறக்கூடாது?" (யோபு 2:10) என்று கூறக்கூடிய மனப் பக்குவத்தைப் பெற்றிருந்தார் யோபு.

இந்நிகழ்வைக் குறித்து சிந்திக்கும், யூத மத குரு, ஹெரால்டு குஷ்னர் அவர்கள், 'யோபு நூல் - நல்லவர் ஒருவருக்கு பொல்லாதவை நிகழ்ந்தபோது' என்ற தன் நூலில், யோபின் மனைவியும், சாத்தானும், தங்கள் எண்ண ஓட்டங்களில் ஒருமித்திருந்ததைப் பற்றி குறிப்பிடுகிறார்.
மனிதர்கள், துன்பங்களைச் சந்திக்கும்போது, கடவுளைப் பழித்து, சாபமிடுவர் என்பது, சாத்தானின் எதிர்பார்ப்பு. தன் எதிர்பார்ப்பு சரியானது என்பதை, கடவுளுக்குக் காட்டவே, சாத்தான், யோபின் உடைமைகள் மீதும், உடல் மீதும் துன்பங்களைச் சுமத்துகிறான். இத்தனை துன்பங்களுக்குப் பிறகும், யோபு இறைவனைப் பழிக்காமல் இருப்பது, சாத்தானைத் தோல்வியுறச் செய்கிறது. தன் தோல்வியை, எரிச்சலை, யோபின் மனைவி வழியே சாத்தான் வெளிப்படுத்துகிறான்: "இன்னுமா மாசின்மையில் நிலைத்திருக்கிறீர்! கடவுளைப் பழித்து மடிவதுதானே?" (யோபு 2:9) என்பது, உண்மையிலேயே சாத்தான் கூற விழைந்த வார்த்தைகள் என்று, ஹெரால்டு குஷ்னர் அவர்கள் கூறுகிறார்.

நாம் அனைவரும் வாழ்வில் இழப்புக்களையும், நோயையும் அனுபவிக்கிறோம். அவ்வேளைகளில், நம் நெருங்கிய உறவுகள், நண்பர்கள் வழியே ஆறுதல் வருகிறது. ஒரு சில நேரங்களில், உறவுகளும், நண்பர்களும் ஆறுதல் வழங்குவதோடு நின்றுவிடுவதில்லை; மாறாக, நம் துயரங்களுக்கு காரணம் என்ன என்ற ஆய்விலும் இறங்கிவிடக்கூடும். அவ்வேளைகளில், அவர்களது பிரசன்னம், பிரச்சனையாக மாறவும் வாய்ப்புண்டு.
இதையொத்த சூழல், யோபின் வாழ்வில் உருவானது. வேதனையின் பிடியில் யோபு சிக்கித் தவித்தபோது, அவரது மனைவி, 'கடவுளைப் பழித்து மடியச்' சொன்னது, யோபுக்கு உதவியாக இல்லை. இதைத் தொடர்ந்து, யோபின் நண்பர்கள் மூவர் வந்து சேர்ந்தனர். இந்தக் காட்சி, யோபு நூல் 2ம் பிரிவின் இறுதியில் இவ்வாறு சித்திரிக்கப்பட்டுள்ளது:

யோபு நூல் 2:11-13
அப்போது யோபின் நண்பர் மூவர், அவருக்கு நேர்ந்த இத்தீமை அனைத்தையும் பற்றிக் கேள்விப்பட்டனர். தேமாவைச் சார்ந்த எலிப்பாசு, சூகாவைச் சார்ந்த பில்தாது, நாமாவைச் சார்ந்த சோப்பார் ஆகியோர், தம்மிடத்திலிருந்து கிளம்பி வந்து, அவரிடம் துக்கம் விசாரிக்கவும், அவருக்கு ஆறுதல் கூறவும் ஒன்றுகூடினர்.
தொலையிலிருந்தே கண்களை உயர்த்திப் பார்த்தபோது, அவரை அவர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அவர்கள் வாய்விட்டு அழுதார்கள்; ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்கள். வானத்தை நோக்கித் தங்கள் தலையில் புழுதியை வாரிப்போட்டுக் கொண்டார்கள்.
அவரோடு அவர்கள் ஏழு பகலும், ஏழு இரவும் தரையில் உட்கார்ந்திருந்தனர். அவருடைய துயரின் மிகுதியைக் கண்டு எவரும் ஒரு வார்த்தைகூட அவருடன் பேசவில்லை.

யோபும், அவரது நண்பர்களும், ஏழு நாட்கள், இரவும் பகலும் காத்த அந்த மௌனத்தைத் தொடர்ந்து, யோபு தனக்குள் புதைத்து வைத்திருந்த எண்ணங்களை ஓர் அருவிபோல கொட்டுகிறார்.

தன் நண்பர்களின் தோழமையில், தன் வேதனைகளை யோபு பகிர்ந்துகொள்வதைப் பார்க்கும்போது, புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர், ஆல்பிரெட் டென்னிசன் (Alfred Tennyson) அவர்கள் எழுதிய, "Home They Brought Her Warrior Dead" அதாவது, அவளது இறந்த வீரனை இல்லம் கொணர்ந்தனர் என்ற கவிதை நினைவுக்கு வருகிறது.
போரில் இறந்த இளம் வீரரின் உடல், இல்லத்திற்குக் கொண்டுவரப்படுகிறது. அந்த உடலைக் கண்ட வீரரின் மனைவி, எவ்வித உணர்வும் இன்றி, ஒரு சிலைபோல அமர்ந்திருக்கிறார். இதைக் காணும் அவரது தோழியர், "அவள் அழவேண்டும், இல்லையெனில் இறந்துவிடுவாள்" என்று தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர். அவரை அழவைப்பதற்காக, வெவ்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். வீரரின் குணம், அவர் அடைந்த புகழ் அனைத்தையும் பற்றி பேசுகின்றனர். வீரரின் முகத்தை மூடியிருந்த துணியை அகற்றுகின்றனர். எனினும், அவ்விளம்பெண் சிலைபோல அமர்ந்திருக்கிறார். அவ்வேளையில், 90 வயது நிறைந்த ஒரு மூதாட்டி, அவ்விளம் பெண்ணின் கைக்குழந்தையை, அவரது மடியில் வைக்கிறார். உடனே, அவ்விளம்பெண்ணின் உள்ளத்தில் புதைந்திருந்த துயரம், ஒரு கோடைப் புயலாக கொந்தளிக்கிறது. கண்ணீரோடு அவர் அக்குழந்தையிடம், "என் இனிய செல்லமே, உனக்காக நான் வாழ்கிறேன்" என்று கூறுகிறார்.
குழந்தையின் வருகை, அந்த இளம்பெண் பூட்டிவைத்திருந்த அனைத்து உணர்வுகளையும் வெளிக் கொணரந்ததுபோல், நண்பர்களின் வருகை, யோபின் உள்ளத்தில் பூட்டிவைக்கப்பட்டிருந்த உணர்வுகளைத் திறந்து விட்டன. நண்பர்கள் முன் யோபு வேதனையோடு கொட்டிய வார்த்தைகள், எழுப்பிய கேள்விகள் அனைத்தும், அடுத்தத் தேடலில், நம்மை வழிநடத்திச் செல்லட்டும்.


No comments:

Post a Comment