Job 15:16
‘கால்வின் அண்ட் ஹாப்ஸ்’ (Calvin and Hobbes) என்ற 'கார்ட்டூன்' தொடர், 1985ம் ஆண்டு முதல், 1995ம் ஆண்டு முடிய அமெரிக்க ஐக்கிய
நாட்டு பத்திரிக்கைகளில் வெளியாகி வந்தது. பின்னர், அது 50க்கும்
மேற்பட்ட நாடுகளில், 2,400க்கும் அதிகமான பத்திரிக்கைகளில்
இடம் பெற்ற ஒரு தொடரானது. கால்வின் என்ற 6 வயது சிறுவன், தன்னிடமிருந்த ஹாப்ஸ் என்ற புலி பொம்மையை, ஒரு நண்பனாகக் கருதி, அந்தப் பொம்மையுடன் வளர்த்துக்கொள்ளும்
நட்புறவையும், அவர்கள் இருவருக்கும் இடையே நிகழும் உரையாடல்களையும்
அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தொடர் இது. வாழ்வுக்குத் தேவையான பல ஆழமான
உண்மைகளை, சிறுவன் கால்வின் கூறும் கூற்றுகள் வழியே, இத்தொடரின் ஆசிரியர், பில் வாட்டர்சன் (Bill Watterson) அவர்கள், இவ்வுலகிற்குத் தந்துள்ளார்.
‘கால்வின் அண்ட் ஹாப்ஸ்’ 'கார்ட்டூன்' தொடரில் இடம்பெறும் ஒரு காட்சி, நம் விவிலியத் தேடலை இன்று
துவக்கி வைக்கிறது. ஒருநாள், கால்வின், பூங்காவில் உள்ள ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, அப்பக்கமாய் மோ (Moe)
என்ற மற்றொரு சிறுவன்
வருகிறான். உடலில் பலமிக்க மோ, மற்ற சிறுவர்களை அரட்டி, மிரட்டிப் பணியவைப்பதில் தனிப்பட்ட மகிழ்வு கொள்பவன். கால்வின்
ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலை விட்டு அவனை எழுந்துபோகச் சொல்கிறான், மோ. கால்வின் மறுக்கவே, மோ, அவனைக் கீழே தள்ளிவிட்டு,
தான் அந்த ஊஞ்சலில்
ஏறிக்கொள்கிறான். கீழே விழுந்த கால்வின் தனக்குள், "ஒரு சிலரைச் சாம்பலாக்க, அவர்கள்
மீது இடி மின்னல் விழாமல் இருப்பதை பார்க்கும்போது, மத நம்பிக்கையுடன் வாழ்வது, மிகக் கடினமாக மாறுகிறது" என்று முணுமுணுக்கிறான்.
நம்மைச்
சுற்றி நிகழும் அக்கிரமங்களைக் காணும்போது, அந்த அக்கிரமங்களைச் செய்வோருக்கு
ஏதாவது தண்டனை வராதா என்று ஏங்கியிருக்கிறோம். தவறு செய்தவர்களுக்கு, ஏதாவதொரு துன்பம் வரும்போது, அதை, கடவுளின் தண்டனை என்றும் கூறியிருக்கிறோம். நமது எண்ணங்களுக்கு
வலு சேர்ப்பதுபோல், 'அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்'
போன்ற பழமொழிகளும்
நம் கைவசம் உள்ளன. சில மாதங்களுக்கு முன், தமிழ் நாட்டில் ஓர் அரசியல் தலைவர்
இறந்தது, அத்தலைவருடன் கூட்டு சேர்ந்து தவறு செய்தவருக்குக்
சிறை தண்டனை கிடைத்தது அகியவற்றை, நம்மில் பலர், இந்தக் கண்ணோட்டத்தில்
கண்டிருப்போம் என்பதை மறுக்க இயலாது. இதைப்போலவே, ஏனையத் தலைவர்களுக்கும் நேரும் என்பதை,
ஓர் எச்சரிக்கையாக, நாம் சமூக வலைத்தளங்களில் பலமுறை பகிர்ந்து வந்துள்ளோம்.
தவறு
செய்தவர்கள், துன்பம் அனுபவிக்கவேண்டும் என்று நாம் எடுத்துள்ள இந்த நிலைப்பாடு, சிலவேளைகளில், நேர் மாறாகவும், சிந்திக்கப்படுவதுண்டு. அதாவது, துன்பம் அனுபவிப்பவர்கள், தவறு
செய்திருக்கவேண்டும் என்ற நேர்மாறானச் சிந்தனைகளும் நம்மிடம் எழுவதுண்டு.
யோபு
நூலில் நாம் சந்திக்கும், யோபின் நண்பர்களான, எலிப்பாசு, பில்தாது, சோப்பார் என்ற மூன்று பேரும், இத்தகைய
சிந்தனையுடன் யோபிடம் வாதாடினர். யோபு அனுபவிக்கும் துன்பங்களுக்கு அவர் செய்த குற்றங்களே
காரணம் என்றும், யோபு, தன் குற்றத்தை
இறைவன் முன் ஒத்துக்கொள்வதே, அவரை, துன்பத்திலிருந்து விடுவிக்கும் என்றும், அந்த மூவரும் ஒருவர் பின் ஒருவராகக் கூற... அவர்கள் ஒவ்வொருவரிடமும்,
தான் குற்றமற்றவன்
என்பதை, யோபு மீண்டும் மீண்டும் விளக்கிச் சொல்ல...
இவ்வாறு, முதல் சுற்று உரையாடல், எவ்விதப்
பயனும் இன்றி முடிவுற்றது. இதை, நாம் சென்ற தேடலில் சிந்தித்தோம்.
இரண்டாவது
சுற்று உரையாடல், யோபு நூல், 15 முதல் 21 முடிய உள்ள 7 பிரிவுகளில் இடம் பெற்றுள்ளது. இரண்டாவது
சுற்றில், மூன்று நண்பர்களும் பேசும் கருத்துக்கள், முதல் சுற்றில் அவர்கள் பேசிய கருத்துக்களைவிட, நீளமாக உள்ளன; கூடுதல் கோபத்தோடும் பேசப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டாக, எலிப்பாசு, முதல்முறை பேசியது, 4ம் பிரிவில் 21 இறைச் சொற்றொடர்களாகப்
பதியப்பட்டுள்ளது. இரண்டாவது முறை பேசியது, 15ம் பிரிவில், 35 இறைச் சொற்றொடர்களாகப் பதியப்பட்டுள்ளது. அதேபோல், சோப்பார் முதல்முறை பேசியது, 11ம் பிரிவில்
20 இறைச் சொற்றொடர்களாகவும், இரண்டாவது முறை பேசியது, 20ம் பிரிவில், 29 இறைச் சொற்றொடர்களாகவும் பதியப்பட்டுள்ளது.
மேலும், எலிப்பாசு முதல்முறை பேசியபோது, யோபின் நற்பண்புகளை
நினைவில் கொண்டு பேசினார் என்பதை, 4ம் பிரிவில் இவ்வாறு வாசித்தோம்:
யோபு
4: 3-4
பலர்க்கு
அறிவுரை பகர்ந்தவர் நீர்! தளர்ந்த கைகளைத் திடப்படுத்தியவர் நீர்! உம் சொற்கள், தடுக்கி விழுவோரைத் தாங்கியுள்ளன; தள்ளாடும் கால்களை உறுதியாக்கியுள்ளன.
என்று
ஆரம்பித்து, பின்னர், யோபிடம்
தான் கண்ட குறைகளைக் கூறினார் எலிப்பாசு. ஆனால், 15ம் பிரிவில்
அவர் பேசும்போது,
யோபு
15: 4-6
நீர்
இறையச்சத்தை இழந்துவிட்டீர்; இறைச்சிந்தனை இல்லாது போனீர்.
உம் குற்றம் உம் வாயை உந்துகின்றது; வஞ்சக நாவை நீர் தேர்ந்துகொண்டீர். கண்டனம் செய்தது உம் வாயே; நானல்ல; உம் உதடே உமக்கு எதிராய்ச் சான்றுரைக்கின்றது. என்ற குற்றப்பட்டியலோடு ஆரம்பிக்கிறார்.
யோபு
குற்றம் புரிந்தவர் என்பதை, தாங்கள் மூவரும் பல்வேறு வகையில் எடுத்துச் சொல்லியும், யோபு, தன்னை குற்றமற்றவர் என்று கூறிவருவதைக் கண்ட எலிப்பாசு, ஒருவேளை, யோபு தன் குற்றத்திலேயே அதிக நாள்
தங்கி, பழகிப்போய்விட்டதால், அவருக்கு தன் குற்றமே தெரியாமல் போய்விட்டது என்ற கோணத்தில் பேசுகிறார்.
குற்றத்திலேயே ஊறிப்போயிருப்போரைக் குறித்து அவர் கூறும் சொற்கள், கடினமாக
ஒலிக்கின்றன:
யோபு
15: 16-17
தீமையை
தண்ணீர் போல் குடிக்கும் அருவருப்பும் ஒழுங்கீனமும் நிறைந்த மாந்தர் எத்துணை இழிந்தோர்
ஆவர்? கேளும்! நான் உமக்கு விளக்குகின்றேன்; நான் பார்த்த இதனை நவில்கின்றேன்.
இவ்வரிகளில்
பயன்படுத்தப்பட்டுள்ள ஓர் உருவகம் நம் கவனத்தை ஈர்க்கிறது. தாகம் உருவாகும்போது தண்ணீர்
குடிக்கிறோம். இந்த உருவகத்தைப் பயன்படுத்தி,
எலிப்பாசு, தீமை செய்வோரை விவரிக்கிறார். ஒழுக்கமற்ற மனிதருக்கு உருவாகும்
தாகம், அவர்களை தீமை செய்யத் தூண்டுவதால், அவர்கள், தீமையை தண்ணீர் போல் குடிக்கின்றனர்
என்று கூறுகிறார். தண்ணீர் அருந்தாமல் சாதாரண மனிதர்கள் உயிர் வாழ முடியாததுபோல், தீமையை குடிக்காமல் இவர்களால் வாழ முடியாது என்று சொல்வதன் வழியே, அவர்கள் தீமைக்கு எவ்வளவு தூரம் பழகிப்போயுள்ளனர் என்பதை எலிப்பாசு
சித்திரிக்கிறார்.
இதைத்
தொடர்ந்து, எலிப்பாசு கூறும் வார்த்தைகள், யோபை நேரடியாகத் தாக்காமல்,
மறைமுகமாகத் தாக்குகின்றன.
எலிப்பாசு பயன்படுத்தும் இந்த மறைமுகத் தாக்குதல், நம் உறவுகள்
மத்தியில் நமக்கு ஏற்படும் ஓர் அனுபவத்தை நினைவுக்குக் கொணர்கிறது.
நம் உறவினர், அல்லது, நண்பரிடம், அவரது குறையை நேருக்கு
நேர் சுட்டிக்காட்டாமல், நாம் மறைமுகமாகப் பேசுவதை எண்ணிப்
பார்க்கலாம். "உங்களைப் பற்றி ஊரில் இப்படி பேசிக்கொள்கிறார்களே" என்று ஆரம்பித்து, நாம் அவரைப்பற்றி எண்ணியிருக்கும் குறைகளைக் கூறுவோம். அல்லது, நண்பர்கள் குழுவில்,
"இங்கே இருக்கும்
ஒரு சிலர் இப்படியெல்லாம் செய்கின்றனர். நான் யாரைக் குறித்து சொல்கிறேன் என்பது அவர்களுக்கேத்
தெரியும்" என்று பேசுவோம். இத்தகையப் பாணியில், எலிப்பாசு, யோபை மறைமுகமாகத் தாக்கிப் பேசுவதை, 15ம் பிரிவில் நாம் காணலாம்.
'அருவருப்பும் ஒழுங்கீனமும் நிறைந்த மாந்தர்' என்று பொதுவில் ஆரம்பித்து,
எலிப்பாசு மேற்கொள்ளும்
தாக்குதலில், அவர் யோபை மறைமுகமாக இணைத்துவிடுகிறார்.
குறிப்பாக, அவர் கூறும் இரு இறைச் சொற்றொடர்கள், யோபுக்கு
நேர்ந்த துயரங்களை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகின்றன:
யோபு
நூல் 15: 29-30
அவர்கள்
செல்வர் ஆகார்; அவர்களின் சொத்தும் நில்லாது; அவர்களது உடைமை மண்ணில் பெருகாது. இருளுக்கு அவர்கள் தப்புவதில்லை; அவர்களது தளிரை அனல் வாட்டும். அவர்களது மலர் காற்றில் அடித்துப்போகப்படும்.
யோபு
தன் உடைமைகளை இழந்ததையும், குறிப்பாக, தன் புதல்வர், புதல்வியரை இழந்து நிற்பதையும்
இந்த வார்த்தைகள் வழியே எலிப்பாசு குத்திக்காட்டுவது, யோபின் மனதை இன்னும் ஆழமாகப் புண்படுத்தியிருக்கவேண்டும். 15ம்
பிரிவின் இறுதியில் எலிப்பாசு கூறும் வார்த்தைகள், யோபின் மீது
மறைமுகமாக விடுக்கப்படும் ஒரு சாபமாக ஒலிக்கின்றன:
யோபு
நூல் 15: 35
இறையச்சமிலாரின்
கூட்டம் கருகிப்போம்; கையூட்டு வாங்குவோரின் கூடாரம்
எரியுண்ணும். இன்னலைக் கருவுற்று அவர்கள் இடுக்கண் ஈன்றெடுப்பர்; வஞ்சகம் அவர்களது வயிற்றில் வளரும்.
எலிப்பாசு
தொடுத்த வேதனைக் கணைகளுக்கு, யோபு அளித்த பதில், நம் அடுத்த தேடலில் இடம்பெறும். அதுவரை, நாம், உயிர்த்த இயேசு காட்டிய
ஒப்புரவு வழிகளை ஓரளவாகிலும் பின்பற்ற முயல்வோம். தன்னை மறுதலித்த பேதுரு, தன் உயிர்ப்பைச்
சந்தேகப்பட்ட தோமா ஆகியோரைப்பற்றி தவறான முடிவுகள் எடுக்காமல், அவர்களைத்
தேடிச்சென்று தன்னுடன் இணைத்துக்கொண்ட இயேசுவின் பரிவு, நம்மையும் நல்வழியில் நடக்கத்
தூண்டுவதாக! அடுத்தவரைப்பற்றி தவறான முடிவுகள் எடுப்பதையும், அவர்களை மறைமுகமாகத் தாக்குவதையும் விடுத்து, உறவுகளில் உருவாகும் காயங்களை குணமாக்க, உயிர்த்த இயேசுவைப்போல் நாமும் முபற்சிகள் மேற்கொள்வோமாக!
‘My Lord and my God’ - Thomas
No comments:
Post a Comment