Job
suffering intensely
மூன்றாவது
சுற்று உரையாடலைத் துவக்கிய எலிப்பாசு, முதலில் யோபின் மீது சரமாரியாகக்
குற்றங்களைச் சுமத்தினாலும், 'எல்லாம் வல்லவரிடம் திரும்பிவரச்சொல்லி' (யோபு 22:23) அழைப்பும் விடுத்தார். எலிப்பாசு கூறிய அந்த ஆலோசனைக்குப்
பதில் சொல்வதுபோல், யோபு, 23ம் பிரிவில்
துவக்கத்தில் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறார்:
யோபு
23:3-7
அவரை
எங்கே கண்டுபிக்கலாமென நான் அறிய யாராவது உதவுவாரானால், நான் அவர் இருக்கையை அணுகுவேன். என் வழக்கை அவர்முன் எடுத்துரைப்பேன்; என் வாயை வழக்குரைகளால் நிரப்புவேன். அவர் எனக்கு என்ன வார்த்தை
கூறுவார் என அறிந்து கொள்வேன்;
அவர்
எனக்கு என்ன சொல்வார் என்பதையும் நான் புரிந்து கொள்வேன். மாபெரும் வல்லமையுடன் அவர்
என்னோடு வழக்காடுவாரா? இல்லை; அவர் கண்டிப்பாக எனக்குச் செவி கொடுப்பார். அங்கே நேர்மையானவன்
அவரோடு வழக்காடலாம்; நானும் என் நடுவரால் முழுமையாக
விடுவிக்கப்படுவேன்.
பல
நாட்களாய், மாதங்களாய் வேதனையின் பிடியில் சிக்கியிருப்போர், நம்பிக்கையின்
சிகரத்தைத் தொடும் நேரங்கள் இருக்கும், விரக்தியின் விளிம்புக்குச் செல்லும்
நேரங்களும் இருக்கும். அதே நிலைதான் யோபுக்கும்... கடிகாரத்தின் ஊசலைப்போல
நம்பிக்கைக்கும், விரக்திக்கும் இடையே மாறி, மாறி பயணித்துக்கொண்டிருந்த யோபு, கடவுளைப்பற்றி
இவ்வளவு நம்பிக்கையுடன், நேர்மறை உணர்வுடன் பேசியதற்கு
அடுத்த நொடியிலேயே, தன் இறைவனைக் காணவில்லை என்று முறையிடத் துவங்குகிறார்:
யோபு
23: 8-9
கிழக்கே
நான் சென்றாலும் அவர் அங்கில்லை;
மேற்கேயும்
நான் அவரைக் காண்கிலேன். இடப்புறம் தேடினும் செயல்படுகிற அவரைக் காணேன்; வலப்புறம் திரும்பினும் நான் அவரைப் பார்த்தேனில்லை.
இறைவனைக்
காணவில்லை என்று யோபு முறையிடுவதைக் கேட்கும்போது, அதற்கு நேர்மாறான வரிகள், திருப்பாடல் நூலில் இடம்பெற்றுள்ளதை நம் மனம் அசைபோடுகிறது. திருப்பாடல் ஆசிரியர், தான் செல்லுமிடங்களிலெல்லாம் இறைவன் இருப்பதாகக்
139ம் திருப்பாடலில் கூறுகிறார்:
திருப்பாடல்
139: 5, 8-10
ஆண்டவரே! எனக்கு முன்னும் பின்னும் என்னைச் சூழ்ந்து இருக்கின்றீர்; உமது கையால் என்னைப் பற்றிப்பிடிக்கின்றீர்... நான் வானத்திற்கு
ஏறிச் சென்றாலும் நீர் அங்கே இருக்கின்றீர்! பாதாளத்தில் படுக்கையை அமைத்துக் கொண்டாலும்
நீர் அங்கேயும் இருக்கின்றீர்! நான் கதிரவனின் இடத்திற்கும் பறந்து சென்றாலும் மேற்கே
கடலுக்கு அப்பால் வாழ்ந்தாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்திச்
செல்லும்; உமது வலக்கை என்னைப் பற்றிக் கொள்ளும்.
கிழக்கு,
மேற்கு, இடப்புறம், வலப்புறம் என்று, நான்கு திசைகளிலும் தான் தேடியும் இறைவனைக் காணவில்லை
என்று யோபு முறையிடுகிறார். அதற்குப் பதில்சொல்லும் வண்ணம், ஒரு விவிலிய விரிவுரையாளர்,
"நாற்புறமும்
தேடி, இறைவன் கிடைக்கவில்லையெனில் மேல் நோக்கிப்
பார்க்கலாமே!" என்று யோபுக்கு ஆலோசனை வழங்குகிறார்.
கீழ்
நோக்கியேப் பார்க்கும் வண்ணம், பெரும்பாலான உயிரினங்களைப் படைத்த
இறைவன், நேராக நிற்கும்வண்ணம் மனிதரைப் படைத்ததற்கு
ஒரு முக்கியக் காரணம், மனிதர்கள் மேல்நோக்கிப் பார்க்கவேண்டும்
என்பதற்காக. ஆனால், மேல்நோக்கிப் பார்க்கும் பழக்கத்தை நம்மில்
பலர் இழந்துவருகிறோமோ என்று கவலைப்பட வேண்டியுள்ளது. இன்று, நம் கரங்களில் உள்ள செல்லிடப்பேசிகள், நமது பார்வையை கீழ்நோக்கியேக் கட்டிப்போட்டு விடுகின்றன இது நமக்கு ஓர் எச்சரிக்கையாக அமைந்தால், நமது பார்வையை மீண்டும் மேல்
நோக்கி உயர்த்தும் முயற்சிகளை நாம் மேற்கொள்ள முடியும்.
எங்கு
தேடினாலும் இறைவனை தன்னால் காணமுடியவில்லை என்று கூறும் யோபு, அதே மூச்சில், தான் எங்கு சென்றாலும், இறைவன் தன்னை அறிவார் என்றும், புடமிடப்பட்டு
பொன்னாக தான் ஒளிர்வேன் என்றும் கூறுகிறார்.
யோபு
23:10
ஆயினும்
நான் போகும் வழியை அவர் அறிவார்;
என்னை
அவர் புடமிட்டால், நான் பொன்போல் துலங்கிடுவேன்.
தன்னால்
இறைவனைக் காணமுடியாவிடினும், இறைவன் தன்னைக் காண்கிறார் என்று
யோபு கூறுவது, ஒரு சிறுகதையை நினைவுக்குக் கொணர்கிறது.
கடும்குளிர்
காலத்தில் ஒரு நாள். நள்ளிரவில், ஊருக்கு ஓரத்தில் இருந்த அந்த வீடு திடீரென தீப்பிடித்து
எரிந்தது. வீட்டில் இருந்த குழந்தைகளையெல்லாம் எழுப்பி, தந்தையும் தாயும் வீட்டுக்கு
வெளியே விரைந்தனர். அந்த அவசரத்தில் ஒரு குழந்தையை மாடியில் விட்டுவிட்டு வெளியேறி
விட்டனர். சன்னலருகே வந்து அழுது கொண்டிருந்த அச்சிறுமியை, கீழே நின்றுகொண்டிருந்த
தந்தை, சன்னல்வழியே குதிக்கச் சொன்னார்.
சிறுமி
அங்கிருந்து, "அப்பா, ஒன்னும் தெரியலியே. ஒரே இருட்டா,
புகையா இருக்கே. எப்படி குதிக்கிறது?" என்று கத்தினாள். அப்பா, கீழிருந்தபடியே,
"உனக்கு ஒன்னும் தெரியலனாலும் பரவயில்லமா. தைரியமா குதி. என்னாலே ஒன்னைப் பார்க்க
முடியுது. குதிம்மா" என்று தைரியம் சொன்னார். தந்தை சொன்னதை நம்பி குதித்தாள்
சிறுமி... தந்தையின் பாதுகாப்பான அரவணைப்பிற்குள்
தஞ்சம் புகுந்தாள்.
சூழ்ந்துள்ள
இருளும், கொழுந்துவிட்டு எரியும் நெருப்பும், புகையும், கண்களை மறைப்பதால், கடவுள் நம் பார்வையில் படுவதில்லை. ஆனால், கடவுளின் பார்வையில் நாம் என்றும் இருக்கிறோம். தீ, இருள், புகை இவற்றிலேயே நமது கவனம் முழுவதும்
இருப்பதால், நம்மைத் தாங்கிக்கொள்ள காத்திருக்கும் தந்தையாம்
இறைவன் கண்களுக்குத் தெரியாமல் போகிறார். அத்தகைய உணர்வுடன், யோபு, 23ம் பிரிவின் இறுதியில், நம்பிக்கையிழந்து,
இவ்வாறு பேசுகிறார்:
யோபு
23: 16-17
இறைவன்
எனை உளம் குன்றச் செய்தார்; எல்லாம் வல்லவர் என்னைக் கலங்கச்
செய்தார். ஏனெனில் இருள் என்னை மறைக்கிறது; காரிருள் என் முகத்தைக் கவ்வுகிறது.
நம்பிக்கை
இழந்த தொனியுடன் 23ம் பிரிவு நிறைவுறுகிறது.
நம்பிக்கை, நம்பிக்கையின்மை என்ற இரு துருவங்களுக்கிடையே ஊசலாடிய தன்
உள்ளத்தின் எண்ணங்களை 23ம் பிரிவில் பதிவு செய்த யோபு, தொடர்ந்து, 24ம் பிரிவில், மனச்சாட்சி ஏதுமின்றி தீயோர்
மேற்கொள்ளும் செயல்களைப் பட்டியலிடுகிறார். குறிப்பாக, ஏழைகளை ஏமாற்றும் செயல்களைக்
குறிப்பிடுகிறார்.
யோபு
24: 2-4அ
தீயோர்
எல்லைக்கல்லை எடுத்துப்போடுகின்றனர். மந்தையைக் கொள்ளையிட்டு மேய்கின்றனர்.
அனாதையின் கழுதையை ஓட்டிச் செல்கின்றனர். விதவையின் எருதை அடகாய்க் கொள்கின்றனர்.
ஏழையை வழியினின்று தள்ளுகின்றனர்.
இதைத்
தொடர்ந்து, தீயோரின் ஏமாற்று வேலைகளால் ஏழைகள் படும் துன்பங்களை யோபு
பட்டியலிடுகிறார். யோபு விவரிக்கும் இவ்வரிகளைக் கேட்கும்போது, இன்றையச் செய்தித்தாள் ஒன்றை வாசிப்பதுபோன்ற உணர்வைப் பெறுகிறோம்.
யோபின் காலத்தில் வறியோரை வாட்டிய துயரங்கள், இன்றும் தொடர்கின்றன என்பதை, இவ்வரிகள்
நமக்குத் தெளிவாக்குகின்றன:
யோபு
24: 5,7-9
ஏழைகள்
உணவுதேடும் வேலையாய்க் காட்டுக் கழுதையெனப் பாலைநிலத்தில் அலைகின்றனர்; பாலைநிலத்தில் கிடைப்பதே அவர்கள் பிள்ளைகளுக்கு உணவாகும்...
ஆடையின்றி இரவில் வெற்று உடலாய்க் கிடக்கின்றனர்; வாடையில் போர்த்திக் கொள்ளப் போர்வையின்றி இருக்கின்றனர்; மலையில் பொழியும் மழையால் நனைகின்றனர்; உறைவிடமின்றிப் பாறையில் ஒண்டுகின்றனர்; தந்தையிலாக் குழந்தையைத் தாயினின்று பறிக்கின்றனர்; ஏழையின் குழந்தையை அடகு வைக்கின்றனர்.
மனதை
பாரமாக்கும் இவ்வரிகளை வாசிக்கும்போது, உணவு,
உடை, உறைவிடம் ஏதுமின்றி, நம் நகரங்களில் தெருவோரம் வாழ்ந்துவரும்
வறியோர், நாடுவிட்டு, நாடு துரத்தப்படும்
புலம்பெயர்ந்தோர், அகியோர் நம் உள்ளங்களில் பதிகின்றனர். ஏழைகள் படும் கொடுமைகள் என
கூறப்பட்டுள்ள இந்த அவலங்களில், 'குழந்தையை அடகு வைக்கின்றனர்' என்ற சொற்களைக் கேட்கும்போது, அண்மையில், அதாவது, ஜூன் 12ம் தேதி, நாம் கடைபிடித்த குழந்தைத் தொழிலை
எதிர்க்கும் உலக நாள் மீண்டும் ஒருமுறை நம் நினைவில் எழுகின்றது. குடும்பக் கடனைத்
தீர்ப்பதற்காக, ஆயிரமாயிரம் குழந்தைகளும், சிறாரும், கொத்தடிமைகளாக அடகு வைக்கப்படும் கொடுமை, நாம் வாழும் 21ம் நூற்றாண்டில் தொடர்வது, நம் அனைவரையும் குற்றவாளிக்
கூண்டில் ஏற்றுகிறது.
இத்தனை
தீமைகளுக்குக் காரணமாக விளங்கும் தீயோருக்கு என்ன நிகழும் என்பதை, யோபு, கடுமையான மொழியில்
விவரிக்கின்றார்:
யோபு
24: 18, 19ஆ, 20, 24
வெள்ளத்தில்
விரைந்தோடும் வைக்கோல் அவர்கள்;
பார்மேல்
அவர்கள் பங்கு சபிக்கப்பட்டது;
அவர்தம்
திராட்சைத் தோட்டத்தை எவரும் அணுகார்... தீமை செய்வோரைப் பாதாளம் விழுங்கும்.
தாங்கிய கருப்பையே அவர்களை மறக்கும்; புழு அவர்களைச் சுவைத்துத் தின்னும். அவர்கள் கொடுமை மரம்போல் முறிந்துபோம்.
அவர்கள் உயர்த்தப்பட்டனர்; அது ஒரு நொடிப்பொழுதே; அதன்பின் இல்லாமற் போயினர்; எல்லோரையும் போல் தாழ்த்தப்பட்டனர்; கதிர் நுனிபோல் கிள்ளி எறியப்பட்டனர்.
யோபு
விவரிக்கும் இந்த எச்சரிக்கைகளில், தாங்கிய கருப்பையே அவர்களை மறக்கும்; புழு அவர்களைச் சுவைத்துத் தின்னும் என்று 20ம் இறைச்சொற்றொடரில்
காணப்படும் வரிகள், நம் கவனத்தைக் கூடுதலாக ஈர்க்கின்றன. மனித வாழ்வு துவங்குவது, கருவறையில்; முடிவது, கல்லறையில். இவ்விரு இடங்களிலும், மனிதர்கள் ஓரளவு மதிப்பு பெறவேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பு.
ஆனால், 'கருப்பையே அவர்களை மறக்கும்' என்றும், கல்லறைப் புழுக்கள் அவர்களைச் சுவைத்துத் தின்னும் என்றும்
யோபு சொல்லும்போது, தீயோரைச் சுமந்த பெற்றோர் அவர்களை மறுதலிப்பர்
என்பதும், பிறந்ததும், இறந்ததும் தெரியாமல், தீயோர் அழிந்துபோவர் என்பதும், ஆணித்தரமாகச்
சொல்லப்பட்டுள்ளன.
இவ்வரிகளைக்
கேட்கும்போது, அண்மையில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதல்
நிகழ்வுகளும், அவற்றின் பின்விளைவுகளும் நினைவில் வலம் வருகின்றன. இந்த விவரங்களை நாம்
அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.
No comments:
Post a Comment