Mineworkers at work at Harmony Gold Mine - Johannesburg
முழுமையான
பரிணாம வளர்ச்சி பெற்ற மனித இனம், இவ்வுலகில், 2,00,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்கவேண்டும்
என்பது, மனிதவியல் ஆய்வாளர்களின் கணிப்பு. மனித
சமுதாயத்தின் வளர்ச்சியை, அவர்களிடம் நிலவிய கலாச்சாரத்தைக் கொண்டு அளவிடமுடியும்.
இந்த அளவுகோலின்படி, இந்து சமவெளி, சீனா, எகிப்து, கிரேக்கம், இன்கா, அஸ்டெக், மெசப்பொட்டேமியா, அசீரியா கலாச்சாரங்கள், மிகப் பழமையானவை
என்று வரலாறு சொல்கிறது.
கலாச்சார
வளர்ச்சியை கணிக்க பயன்படுத்தப்பட்ட அளவுகோல்களில் ஒன்று, அம்மக்கள் பயன்படுத்திய கருவிகள். கற்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள்
பயன்படுத்திய பல கருவிகள், கற்களால் செய்யப்பட்டவை. அதற்கு
அடுத்த நிலையில், மனிதர்கள் உலோகங்களைப் பயன்படுத்தினர்.
பூமியின் மேற்பரப்பில் இருந்த கற்களைப் பயன்படுத்திவந்த மனிதர்கள், பூமிக்கடியில் இருந்த உலோகங்களுக்கு அறிமுகமானதும், மண்ணைத் தோண்ட ஆரம்பித்தனர். உலோகங்களின் மின்னும் பண்பு, மனிதர்களை
அதிகம் ஈர்க்கவே, மண்ணைத் தோண்டும் முயற்சிகளும் அதிகரித்தன.
சுரங்கத் தொழில் உருவானது.
சுரங்கத்
தொழிலைப் பற்றி இன்று நாம் பேசுவதற்குக் காரணம், நாம் தேடலை
மேற்கொண்டுள்ள யோபு நூலில் காணப்படும் 28ம் பிரிவு. இப்பிரிவு, மிக தனித்துவம் மிக்கது. யோபுக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே
நிகழ்ந்த மூன்றாவது சுற்று உரையாடலில், 26 முதல் 31 முடிய உள்ள ஆறு பிரிவுகள், யோபு கூறும் பதிலுரையாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆறு
பிரிவுகளில் ஒன்றாக இடம்பெறும் 28வது பிரிவு,
யோபின் சொற்கள் அல்ல
என்றும், இது ஒரு தனிப்பட்ட கவிதை என்றும் விவிலிய
ஆய்வாளர்கள் கருதுகின்றனர். யோபு நூலில் இணைக்கப்பட்டுள்ள இக்கவிதை, 'ஞானத்தின் மேன்மை' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
28 இறைச்சொற்றொடர்களைக்
கொண்ட இப்பிரிவின் முதல் 11 இறைச்சொற்றொடர்கள்,
சுரங்கங்களைப் பற்றிப்
பேசுகின்றன; குறிப்பாக, சுரங்கங்களை உருவாக்குவதில் மனிதர்கள் மேற்கொள்ளும் கடினமான முயற்சிகளைச்
சித்திரிக்கின்றன. யோபு நூல் எழுதப்பட்ட காலத்தில், மனித இனம், சுரங்கங்கள் வழியே பல்வேறு உலோகங்களைக் கண்டுபிடித்து,
பயன்படுத்தினர் என்பதை, இப்பிரிவின் அறிமுக வரிகள் கூறுகின்றன:
யோபு
28: 1-2
வெள்ளிக்கு
விளைநிலம் உண்டு; பொன்னுக்குப் புடமிடும் இடமுண்டு.
மண்ணிலிருந்து இரும்பு எடுக்கப்படுகின்றது; கல்லிலிருந்து செம்பு உருக்கப்படுகின்றது.
இவ்வறிமுக
வரிகளில் வெள்ளி, பொன், இரும்பு, செம்பு என்ற நான்கு உலோகங்களை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இவற்றில்
வெள்ளியும், பொன்னும், பெரும்பாலும் அணிகலன்களாகவும், இரும்பும், செம்பும், மனிதரின் தினசரி வாழ்வில்
பயன்படும் கருவிகளாகவும் பயன்பட்டிருக்க வேண்டும். மின்னும் பண்பு கொண்ட வெள்ளியும், பொன்னும் மனிதர்களை பெருமளவு ஈர்த்ததால், கடினமான முயற்சிகளைச்
செய்யத் தூண்டின என்பதை, பின்வரும் வரிகள் கூறுகின்றன:
யோபு
28: 3-4, 9-10
மனிதர்
இருளுக்கு இறுதி கண்டு, எட்டின மட்டும் தோண்டி, இருட்டிலும் சாவின் இருளிலும் கனிமப் பொருளைத் தேடுகின்றனர்.
மக்கள் குடியிருப்புக்குத் தொலையில் சுரங்கத்தைத் தோண்டுவர்; வழிநடப்போரால் அவர்கள் மறக்கப்படுவர்; மனிதரிடமிருந்து கீழே இறங்கி ஊசலாடி வேலை செய்வர்...
கடினப் பாறையிலும் அவர்கள் கைவைப்பர்; மலைகளின் அடித்தளத்தையே பெயர்த்துப் புரட்டிடுவர். பாறைகள் நடுவே சுரங்க வழிகளை
வெட்டுகின்றனர்; விலையுயர் பொருளையே அவர்களது கண்
தேடும்.
இருட்டிலும், சாவின் இருளிலும் பணியாற்றும் சூழல், பூமியின் மேற்பரப்பில் நடமாடும் மனிதரிடமிருந்து கீழே இறங்கி, ஊசலாடியவண்ணம் வேலை செய்தல், மலைகளின்
அடித்தளத்தையே பெயர்த்துப் புரட்டுதல் என்று, இவ்வரிகள் விவரிக்கும் கடின முயற்சிகளைக்
கேட்கும்போது, சுரங்கத் தொழிலில் தங்களையே பலியாக்கிய
கோடான கோடி மனிதர்களை நம் நினைவு அசைபோடுகின்றது.
2010ம்
ஆண்டு, அக்டோபர் 12, நள்ளிரவு. சிலே நாட்டில் மக்கள் தூங்காமல் விழித்திருந்தனர். நள்ளிரவு
தாண்டி பத்து நிமிடங்களில், அந்த நாடே மகிழ்ச்சி ஆரவாரத்தில்
வெடித்தது. சிலே நாட்டின் அட்டக்காமா (Atacama)
என்ற பகுதியில் பாறையில்
செய்யப்பட்ட ஒரு துளை வழியே, குழாய் வடிவக் கருவி ஒன்று வெளியே
வந்தது. அந்தக் குழாயிலிருந்து Florencio
Avalos என்ற 31 வயது
இளைஞர் வெளியேறினார். கண்ணீருடன் ஓடி வந்த அவரது 7 வயது மகனையும், தன் மனைவியையும் கட்டி அணைத்து முத்தமிட்டார். இந்தக் காட்சியைக்
கண்ட பலரது கண்களில், ஆனந்த கண்ணீர். நாடே மகிழ்ச்சி ஆரவாரத்தில் அதிர்ந்தது.
2010,
ஆகஸ்ட் 5ம் தேதி சிலே நாட்டில் அட்டக்காமா பகுதியில்
2300 அடி ஆழத்தில், தாமிரம், மற்றும் தங்கம்
வெட்டியெடுக்கப்படும் சுரங்கம் ஒன்றில், 33 தொழிலாளர்கள் தங்கள் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஏற்பட்ட ஒரு நிலச்சரிவால் ஏழு இலட்சம் டன் எடையுள்ள பாறைகள், சுரங்கப் பாதையை
அடைத்துவிட்டன. அந்த 33 தொழிலாளர்களும் நிலத்திற்கடியில் அரைமைல் தூரத்தில் உயிரோடு
புதைக்கப்பட்டனர். போராட்டம் ஆரம்பமானது.
அவர்களைக்
கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளும் தோற்றுப்போயின. 17 நாட்கள் கழித்து, அவர்கள் உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையே ஒரு புதுமை
என்று பலர் கூறினர். உயிரோடு புதைக்கப்பட்ட 33 சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள்
ஆரம்பமாயின. அந்த முயற்சிகளின் பலனாக, 69 நாட்கள் பூமிக்கடியில்
புதையுண்டிருந்த 33 தொழிலாளர்களும், அக்டோபர் 14 அதிகாலையில் வெளியேற்றப்பட்டனர்.
ஆகஸ்ட்
மாதம் நிகழ்ந்த இந்த விபத்து உலகின் கவனத்தைப் பல வழிகளில் ஈர்த்தது. அதிலும் முக்கியமாக, 17 நாட்கள் கழித்து 33 தொழிலாளர்களும் உயிரோடு பூமிக்கடியில் புதைந்துள்ளனர்
என்ற செய்தியை அறிந்த பிறகு, உலகமே இந்நிகழ்வை, தொடர்ந்து கவனித்தது.
உயிரோடு புதைக்கப்பட்ட இத்தொழிலாளர்களுக்கு உதவிகள் பல வழிகளில் அனுப்பப்பட்டன. உடல்
அளவில் அவர்களுக்குச் செய்யப்பட்ட உதவிகளை விட,
அவர்கள் உள்ளத்தில்
நம்பிக்கையை வளர்க்க வழங்கப்பட்ட ஆன்மீக உதவிகள், செப உதவிகள்
ஏராளம். அப்போது திருத்தந்தையாகப் பணியாற்றிய 16ம் பெனடிக்ட் அவர்கள், தன் கைப்பட ஆசீர்வதித்த
செபமாலைகளை இத்தொழிலாளர்களுக்கு அனுப்பி வைத்தார். இத்தொழிலாளர்கள், தாங்கள் அடைபட்டிருந்த
இடத்தில், சிறு பீடம் ஒன்றை அமைத்து, செபித்து வந்தனர் என்று செய்திகள்
கூறுகின்றன. இதைக் கேள்விப்பட்டபோது, பழங்கால உரோமைய அரசுக்கும்,
பின்னர் கம்யூனிச அரசுகளுக்கும் தெரியாமல், பூமிக்கடியில், மறைவிடங்களில் கூடி வந்து செபித்த கிறிஸ்தவர்கள், நம்
எண்ணங்களில் தோன்றினர். அக்டோபர் 14ம் தேதி, 33 தொழிலாளர்களும் உயிருடன்
மீட்கப்பட்டதும், அந்நாட்டின் ஆயர் ஒருவர் கூறிய வார்த்தைகள் இவை: "இன்று,
சிலே நாடு, உயிர்ப்பின் மகிமைக்குச் சான்று பகர்ந்துள்ளது."
Chilean miner Esteban Rojas, 44, prays after
being brought to surface
சிலே
சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட செய்தி உலகின் கவனத்தை ஈர்த்த வேளையில், சுரங்கத் தொழிலால் ஏற்படும் ஆபத்துக்களையும்,
உயிரிழப்புக்களையும், ஊடங்கங்கள் அசைபோட்டன. உலகின் நிலக்கரி உற்பத்தியில், 40 விழுக்காடு
உற்பத்தி செய்வது, சீனா. அதே வேளை, ஒவ்வோர் ஆண்டும் 3000த்திற்கும்
அதிகமான தொழிலாளிகள், சீனாவின் சுரங்கங்களில் இறக்கின்றனர்.
பூமியைத்
தோண்டி, எவ்வளவுக்கெவ்வளவு கனிமங்களை வெளிக்கொணர்வது
என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கும் சுரங்க உரிமையாளர்கள், அங்கு நிலவவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை சரிவர பின்பற்றாமல் போவதே,
விபத்துக்களுக்கு காரணமாக அமைகின்றன. சுரங்கத் தொழில் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள
பயங்கரமான விபத்துக்களில் ஒரு சில இதோ:
1942ம்
ஆண்டு, சீனாவின் லியாவோனிங் (Liaoning) எனுமிடத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட தீ, மற்றும் வெடிவிபத்து காரணமாக, 1549 பேர்
இறந்தனர். இறந்தோரின் உடல்களை வெளியேற்றுவதற்கு 10 நாட்களுக்கு மேல் ஆனது.
1906ம்
ஆண்டு, பிரான்ஸ் நாட்டின் கூரியேர்ஸ் (Courrieres) எனுமிடத்தில், நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட
வெடிவிபத்து, சுற்றுப்புறத்தையும் பாதித்ததால், பெண்கள், குழந்தைகள், தொழிலாளிகள் என, 1099 பேர் இறந்தனர்.
1975ம்
ஆண்டு, அன்றைய பீகார் மாநிலத்தின் தன்பாத் (Dhanbad) நகரின் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தால், சுரங்கம் முழுவதும் நீரால் நிரம்பி, 372 தொழிலாளிகள் இறந்தனர்.
இதேபோல், ஜப்பான், அமெரிக்க ஐக்கிய நாடு, பிரித்தானியா, தென் ஆப்ரிக்கா, சிம்பாப்வே என, பல நாடுகளில் ஏற்பட்ட சுரங்க விபத்து, நிலச் சரிவு காரணமாக, ஆயிரமாயிரம் உயிர்கள் பலியாகியுள்ளன.
ஆபத்துக்கள்
ஆயிரம் சூழந்தாலும், சுரங்கங்களால் பூமிக்கோளத்திற்கு ஈடு செய்யமுடியாத
சீரழிவுகள் உருவானாலும், சுரங்கங்கள் தோண்டும் முயற்சிகள்
இன்னும் நிறுத்தப்படவில்லை. பூமிக்கடியிலிருந்து கிடைக்கும் கனிமங்கள், முதலாளிகளின் பேராசைகளை மேலும், மேலும் தூண்டி
வருகின்றன.
2008ம்
ஆண்டு திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, தென் ஆப்ரிக்காவின் தவ் தோனா (Tau Tona) சுரங்கம், உலகிலேயே மிக ஆழமான சுரங்கம் என்று
சொல்லப்படுகிறது. 3,900 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள இச்சுரங்கத்தில் தங்கம் திரட்டப்படுகிறது.
இச்சுரங்கத்தில் அமைந்துள்ள பல்வேறு பாதைகளின் மொத்த நீளம், 800 கிலோ மீட்டர்கள் என்றும், இந்த ஆழத்தில்
நிலவும் வெப்பநிலை, 55 முதல் 60 டிகிரி செல்சியஸ் என்றும் கூறப்படுகிறது.
5,600 பேர் பணியாற்றும் இச்சுரங்கத்தில், ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது, 5 பேர்
இறக்கின்றனர்.
2015ம்
ஆண்டு, இச்சுரங்கத்திலிருந்து 58,520 கிலோ கிராம் தங்கம் வெட்டியெடுக்கப்பட்டது. இதன் மதிப்பு, 18,45,47,000 அமெரிக்க டாலர்கள். இவ்வளவு
பணம் திரட்டும் இந்த சுரங்கத்தின் உரிமையாளர்கள் யாரும் சுரங்கத்தில் நுழைந்து, அங்கு நிலவும் கடினச் சூழல்களை அனுபவித்தது கிடையாது. குளிர்சாதனம்
பொருத்தப்பட்ட அறைகளில் இருந்துகொண்டு, ஒவ்வோர் ஆண்டும், ஏறத்தாழ 18 கோடி
டாலர்கள் சம்பாதிக்கும் இந்த முதலாளிகள், ஆப்ரிக்கத் தொழிலாளர்களுக்கு வழங்கும்
ஊதியம் மிகக் குறைவானதே. ஆப்ரிக்காவில் நிலவும் பஞ்சம், வறுமை, வேலையின்மை ஆகிய அவலங்களை, தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, மிகக் குறைந்த ஊதியத்திற்கு தொழிலாளர்களை பணியமர்த்தி, இந்த முதலாளிகள் அடைந்துவரும் வருமானம், ஏராளம்.
சுரங்கத்
தொழிலில் நிலவும் இத்தகைய அநீதிகளையும், இத்தொழிலால் ஏற்படும் ஆபத்தான விளைவுகளையும்
உணர்வதற்கு நமக்கு ஞானம் தேவை. இதையே, 28ம் பிரிவின் பிற்பகுதியில் ஆசிரியர்
அழகாகக் கூறியுள்ளார்.
யோபு
28: 12-13
ஞானம்
எங்கே கண்டெடுக்கப்படும்? அறிவின் உறைவிடம் எங்கேயுள்ளது? மனிதர் அதன் மதிப்பை உணரார்; வாழ்வோர் உலகிலும் அது காணப்படாது.
மனிதரால்
எளிதில் உணரமுடியாத 'ஞானத்தின் மேன்மை'யைக் குறித்து, யோபு நூல் ஆசிரியர் கூறும் எண்ணங்களை நம் அடுத்தத்
தேடலில் தொடர்ந்து சிந்திப்போம்.
No comments:
Post a Comment