Vigil
service for the victims of London
Bridge attack
2017, மார்ச் மாதத்தின் ஒருநாள், (மார்ச் 7) இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில், ஓடும் இரயிலில் நிகழ்ந்த ஒரு வெடிகுண்டு தாக்குதலுக்குக் காரணமாக
இருந்தவர், சய்ஃபுல்லா (Saifullah) என்ற இளையவர். அவர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இறந்த சய்ஃபுல்லாவின் உடலை அடக்கம் செய்வதற்கு, அவரது தந்தை, சர்தாஜ் (Sartaj) அவர்கள் மறுத்துவிட்டார். "நாங்கள் இந்தியர்கள். நாங்களும், எங்கள் மூதாதையரும் இந்நாட்டில்தான் பிறந்தோம். நாங்கள் பிறந்து, வளர்ந்த தாய்நாட்டைக் காட்டிக்கொடுப்பவர், எங்கள் மகனோ, உறவினரோ கிடையாது" என்று, சர்தாஜ் அவர்கள் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
இம்மாதத்
துவக்கத்தில், (ஜூன் 3, 2017) இலண்டன் மாநகரில் நிகழ்ந்த
தீவிரவாதத் தாக்குதல்களை மேற்கொண்ட மூன்று இளையோரும் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவினரின் பெயரால் இத்தாக்குதல்கள் நிகழ்ந்தன என்று கருதப்படுகிறது.
இந்த மூன்று இளையோருக்கும் இறுதி செபங்களைச் சொல்வதற்கு, இஸ்லாமிய மதத் தலைவர்கள் மறுத்துவிட்டனர். பிரித்தானியாவில் உள்ள
500க்கும் மேற்பட்ட மதத் தலைவர்கள் இணைந்து,
இந்த மறுப்பை, ஓர்
அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். "இத்தகைய வன்முறைப் பாதையை ஒருவர் பின்பற்றினால், அவர், இஸ்லாமிய நம்பிக்கையிலிருந்து விலகி, இறைவனற்ற இருளுக்குச் செல்கிறார்" என்று மதத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
புனிதப்
போரை மேற்கொள்பவர்களுக்கு, உடனடியாக, நேரடியாக, விண்ணகம் கிடைக்கும் என்ற தவறான வாக்குறுதிகளைத்
தந்து, இளையோர் உள்ளங்களை மூளைச்சலவை செய்து, வன்முறையின் பக்கம் திருப்பும் தீவிரவாதிகளின் தவறான படிப்பினைகளை
முறியடிக்க, இஸ்லாமிய மதத் தலைவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய ஓர் இஸ்லாமிய மதத்தலைவர், "பொதுவாக, எந்த ஒரு சூழலில் ஒருவர் இறந்தாலும், அவருக்கு இறுதிச் செபங்கள் சொல்வதன் வழியே, அவர் மறுவாழ்வில் தங்களுடன் பேரின்பத்தில் இணைவதற்கு வாய்ப்பு தரப்படுகிறது.
ஆனால், இந்த மூன்று பேருக்கு அந்த வாய்ப்பைத் தர
எங்களுக்கு விருப்பமில்லை" என்று கூறினார்.
மகனுக்கு
அடக்கச் சடங்குகள் செய்வதற்கு மறுத்த தந்தை,
இறந்த இளையோருக்கு
இறுதிச் செபங்கள் சொல்ல மறுத்த மதத்தலைவர்கள் என்ற இவ்விரு செய்திகளையும் கேட்கும்போது, யோபு நூல், 24ம் பிரிவில், தீயோரைப் பற்றி, யோபு கூறிய சொற்கள் நம் நினைவுக்கு வருகின்றன. இதையொட்டி, சென்ற
விவிலியத் தேடலின் இறுதியில் நாம் கூறிய வரிகளை, மீண்டும் ஒருமுறை நினைவுக்குக் கொணர்வோம்:
“மனித வாழ்வு துவங்குவது, கருவறையில்; முடிவது, கல்லறையில். இவ்விரு இடங்களிலும், மனிதர்கள் ஓரளவு மதிப்பு பெறவேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பு.
ஆனால், 'கருப்பையே அவர்களை மறக்கும்' என்றும், கல்லறைப் ‘புழுக்கள் அவர்களைச் சுவைத்துத் தின்னும்’ என்றும் யோபு சொல்லும்போது, தீயோரை, கருப்பையில் சுமந்த பெற்றோர் அவர்களை மறுதலிப்பர் என்பதும், பிறந்ததும், இறந்ததும் தெரியாமல், தீயோர் அழிந்துபோவர்
என்பதும், ஆணித்தரமாகச் சொல்லப்பட்டுள்ளன.”
இரயில்
தாக்குதலை மேற்கொண்ட சய்ஃபுல்லா தங்கள் மகனே அல்ல என்று அவரது தந்தை சர்தாஜ் அவர்கள்
கூறும்போது, 'கருப்பையே அவரை மறக்கும்' என்று யோபு கூறுவதன் பொருள் விளங்குகிறது.
அதேபோல், இலண்டன் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் கொல்லப்பட்டப்
பின்னர், அவர்களுக்கு இறுதி செபங்களைச் சொல்ல,
மதத்தலைவர்கள் மறுத்தனர்
என்பதைக் கேள்விப்படும்போது, இத்தகைய தீமைகளை உலகில் வளர்ப்பவர்கள், மரணத்திலும் மறக்கப்படுவர் என்பது தெளிவாகிறது. இதைத்தான், 'புழுக்கள் அவர்களைச் சுவைத்துத் தின்னும்' என்று யோபு கூறும் சொற்களின் பொருளாக நாம் புரிந்துகொள்கிறோம்.
மூன்றாவது
சுற்று உரையாடலில், நண்பர் எலிப்பாசு கூறியவற்றிற்கு, யோபு
நூல், 23,
24 ஆகிய இரு பிரிவுகளில்
யோபு அளித்த பதிலைத் தொடர்ந்து, 25ம் பிரிவில், நண்பர் பில்தாது பேசுகிறார். 5 இறைச்சொற்றொடர்களாக பதிவு செய்யப்பட்டுள்ள
இவரது கூற்று, இறைவன் எவ்வளவு பெரியவர் என்றும், மனிதர்கள் எவ்வளவு சிறியவர் என்றும் கூறியுள்ளது.
இதைத் தொடர்ந்து, 26ம் பிரிவு முதல், 31ம் பிரிவு முடிய, 6 பிரிவுகள், யோபின் பதில் மொழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆறு பிரிவுகளைப்
பற்றி, விவிலிய விரிவுரையாளர்கள், வெவ்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். 26, 27 பிரிவுகளில், இன்னும்
சொல்லப்போனால், 24 முதல், 27 முடிய
உள்ள 4 பிரிவுகளில், பலரது கூற்றுகள்
ஒரு குவியலாகத் திரட்டப்பட்டுள்ளன என்று, இயேசு சபை அருள்பணியாளரும்,
பேராசிரியருமான ஜோசப் கொட்டெர்ஸ்கி (Joseph Koterski) என்பவர் கூறியுள்ளார்.
அவரைப்
பொருத்தவரை, 4ம் பிரிவு முதல், 23ம் பிரிவு முடிய, யோபும், அவரது 3 நண்பர்களும் ஒருவர்பின்
ஒருவராகப் பேசிவந்தனர். அடுத்தவர் பேசுவதைக் கேட்டு, தங்கள் வாய்ப்பு
வரும்வரைக் காத்திருந்து, பேசிவந்த நால்வரும்,
பொறுமையிழந்து, ஒரே நேரத்தில் பேச ஆரம்பித்துவிட்டதைப்போல் தெரிகிறது என்று, கொட்டெர்ஸ்கி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். நால்வரும் ஒரே நேரத்தில் பேசுவதைப்
பதிவு செய்த ஆசிரியர், இந்த நான்கு பிரிவுகளில், தொடர்பற்ற வகையில், தான் கேட்டதையெல்லாம் திரட்டித்
தந்துள்ளார் என்று, அருள்பணி கொட்டெர்ஸ்கி அவர்கள் விளக்கம்
அளித்துள்ளார்.
கருத்துக்
கோர்வையின்றி, குழப்பமான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ள
இந்த நான்கு பிரிவுகளிலும், ஆங்காங்கே, அழகான, மிக ஆழமானப் பகுதிகளைக் காணமுடிகிறது என்று, யூத மத குரு, ஹெரால்டு குஷ்னர் அவர்கள் தன்
நூலில் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய அழகியப் பகுதிகளில் ஒன்று, 27ம் பிரிவின் துவக்கத்தில்
உள்ளது. இப்பகுதி, உண்மையில், யோபின் உள்ளத்திலிருந்து வெளிப்பட்ட சொற்களாக ஒலிக்கின்றன:
யோபு
27: 2-6அ
என்றுமுள்ள
இறைவன்மேல் ஆணை! அவர் எனக்கு உரிமை வழங்க மறுத்தார்; எல்லாம் வல்லவர் எனக்கு வாழ்வைக் கசப்பாக்கினார். என் உடலில்
உயிர் இருக்கும்வரை, என் மூக்கில் கடவுளின் மூச்சு இருக்கும்வரை, என் உதடுகள் வஞ்சகம் உரையா; என் நாவும் பொய்யைப் புகலாது... சாகும்வரையில் என்வாய்மையைக்
கைவிடவும் மாட்டேன். என் நேர்மையை நான் பற்றிக் கொண்டேன்; விடவே மாட்டேன்; என் வாழ்நாளில் எதைக் குறித்தும் என் உள்ளம் உறுத்தவில்லை.
உண்மை
பேசுவோருக்கு அரிச்சந்திரனையும், வாரி வழங்குவோருக்கு பாரியையும்
எடுத்துக்காட்டாகக் கூறுவதுபோல், பொறுமையுள்ளோருக்கு, யோபை ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டாக, இலக்கணமாக நாம் சுட்டிக்காட்டி வருகிறோம். ஆனால், இதுவரை நாம் சந்தித்த யோபிடம், பொறுமை அதிகம்
காணப்பட்டதாகத் தெரியவில்லை. அதற்குப் பதிலாக,
தான் நேரிய உள்ளம்
கொண்டவர் என்றும், தன்னை வதைப்பது இறைவனே என்றாலும், அவரிடம் தன் நம்பிக்கை குறையவில்லை என்றும் யோபு கூறுவதை நாம் இந்நூலில்
அடிக்கடி கேட்டு வருகிறோம். எனவே, யோபை, பொறுமையுள்ளோருக்கு, ஓர் எடுத்துக்காட்டாகச் சிந்திப்பதற்குப் பதில், நேரிய உள்ளம் கொண்டோருக்கு,
வாய்மையைக் கைவிடாதோருக்கு, ஓர் எடுத்துக்காட்டாக நாம் சிந்திக்கலாம். யார் என்ன சொன்னாலும், தன் நேர்மையின் மீதும், வாய்மையின் மீதும் யோபு கொண்டிருந்த
அசைக்கமுடியாத நம்பிக்கை, யோபு நூல் முழுவதும், வெவ்வேறு பகுதிகளில் வெளிவருகின்றது. 27ம் பிரிவின் துவக்க வரிகளும்
இதே உணர்வைப் பதிவு செய்துள்ளன.
24ம்
பிரிவின் பிற்பகுதியில், தீயோருக்கு நேரும் அவலங்கள் கூறப்பட்டுள்ளதுபோல், 27ம் பிரிவின் பிற்பகுதியிலும், 'கொடிய மனிதர் இறைவனிடமிருந்து பெறும் பங்கு' (27:13) எத்தகையதாய் இருக்கும் என்று விவரிக்கப்பட்டுள்ளது.
இவ்வரிகளை, யோபு கூறவில்லை என்பது, பல விவிலிய ஆய்வாளர்களின் கருத்து.
மூன்றாவது
சுற்று உரையாடலில், எலிப்பாசு, பில்தாது இருவரின் கூற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன (யோபு நூல், 22, 25 பிரிவுகள்). ஆனால், மூன்றாவது
நண்பர் சோப்பாரின் கூற்று காணப்படவில்லை. 27ம் பிரிவின் பிற்பகுதியில் காணப்படும்
11 இறைச்சொற்றொடர்கள், சோப்பாரின் கூற்றாக இருக்கலாம் என்பது, ஆய்வாளர்களின் கணிப்பு.
இவ்வரிகளை, யோபு கூறியிருந்தாலும் சரி,
சோப்பார் கூறியிருந்தாலும்
சரி, இவ்வரிகளில் கூறப்பட்டுள்ள எண்ணங்கள், இன்றைய நிலையை சித்திருப்பதாகவும், நமக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளன:
யோபு
27: 13-16,18-19
இதுவே
கொடிய மனிதர் இறைவனிடமிருந்து பெறும் பங்கு; பொல்லாதவர் எல்லாம் வல்லவரிடம் பெறும் சொத்து. அவர்களின்
பிள்ளைகள் பெருகினும் வாளால் மடிவர்; அவர்களின் வழிமரபினர் உண்டு நிறைவடையார். அவர்களில் எஞ்சியோர் நோயால் மடிவர்; அவர்களின் கைம்பெண்கள் புலம்ப மாட்டார். மணல்போல் அவர்கள்
வெள்ளியைக் குவிப்பர்; அடுக்கடுக்காய் ஆடைகளைச் சேர்ப்பர்...
சிலந்தி கூடு கட்டுவதுபோலும்,
காவற்காரன்
குடில் போடுவதுபோலும் அவர்கள் வீடு கட்டுகின்றனர். படுக்கைக்குப் போகின்றனர் பணக்காரராய்; ஆனால் இனி அவ்வாறு இராது; கண் திறந்து பார்க்கின்றனர்; செல்வம் காணாமற் போயிற்று.
சட்டங்களின்
கண்களில் மண்ணைத் தூவி, மனசாட்சியின் கண்களைக் கட்டிவிட்டு
செல்வம் சேர்ப்பவர் பலரும், ஏதோ ஒருநாள், இத்தகைய நிலையை அடைந்துள்ளனர் என்பதை, வரலாறு அடிக்கடி நமக்கு நினைவுறுத்தி வருகிறது.
தவறான
வழிகளில் செல்வம் சேர்ப்போர் அமைதியாக வாழ முடியுமா என்பது பெரும் கேள்விக்குறியே!
உளவுத் துறை, அல்லது, வருமான வரித்துறையின் படையெடுப்பு
எந்நேரமும் நிகழலாம் என்ற அச்சத்துடன் இவர்கள் ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்கின்றனர்.
இந்த அச்சத்தால் தூக்கமின்றி தவிப்போர், தூக்க மாத்திரைகளையும், போதைப்பொருள்களையும் ஒவ்வோர் இரவும் நாடவேண்டியிருக்கும். மனசாட்சியைத்
தூங்கவைப்பதற்கு அவர்கள் எவ்வளவுதான் முயன்றாலும், அது, மீண்டும், மீண்டும் விழித்தெழுந்து, அவர்களை, பல வழிகளில் சித்திரவதை செய்யும் என்பதை, 27ம் பிரிவின் இறுதி வரிகள் இவ்வாறு கூறுகின்றன:
யோபு
27: 20-23
திகில்
வெள்ளம்போல் அவர்களை அமிழ்த்தும்; சுழற்காற்று இரவில் அவர்களைத் தூக்கிச் செல்லும். கீழைக் காற்று அவர்களை அடித்துச்
செல்லும்; அவர்களின் இடத்திலிருந்து அவர்களைப்
பெயர்த்துச் செல்லும்; ஈவு இரக்கமின்றி அவர்களை விரட்டும்; அதன் பிடியிலிருந்து தலைதெறிக்க ஓடுவர். அவர்களைப் பார்த்து
அது கைகொட்டி நகைக்கும்; அதன் இடத்திலிருந்து அவர்கள்மேல்
சீறிவிழும்.
விழித்தெழுந்த
மனசாட்சி ஒருவரை எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கும் என்பதைக் கூறும் இவ்வரிகள், நம் அனைவருக்கும் எச்சரிக்கையாக அமையவேண்டும்! "உன் ஒவ்வொரு
குற்றத்திற்கும் அவ்வப்போதே தண்டனை கிடைக்கவில்லை என்றால், நீ அதிபுத்திசாலி என்றோ, இறைவன்
இல்லையென்றோ அர்த்தம் இல்லை. உனக்கான தண்டனை கடுமையாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்!" ரௌத்திரன் என்பவர்,
சமூகவலைத்தளத்தில் பதிவுசெய்துள்ள இந்த வரிகள்,
யோபு நூல் 27ம் பிரிவின்
இறுதி வரிகளில் கூறப்பட்டுள்ள எச்சரிக்கையை உறுதி செய்கின்றன.
No comments:
Post a Comment