03 October, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 40


Featured Icons - St. Francis and The Sultan - Robert Lentz O.F.M.

பாசமுள்ள பார்வையில் - "இறைவனின் சமாதானம் உங்களுக்கு உரித்தாகுக"

கிறிஸ்தவருக்கும், இஸ்லாமியருக்கும் இடையே, பகைமை உணர்வுகள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த அசிசி நகர் புனித பிரான்சிஸ், தன்னால் இயன்ற அளவு, இந்தப் பகைமைத் தீயைத் தணிக்க முயன்றார்.
1219ம் ஆண்டு, எகிப்தில் வாழும் இஸ்லாமியர் மீது கிறிஸ்தவர் மேற்கொண்ட போர், திருத்தந்தையின் ஆசீரோடு நிகழ்ந்து வந்தது. இதையறிந்து வெகுண்டெழுந்த எகிப்திய சுல்தான், மாலிக்-அல்-கமில் (Malik-al-Kamil) அவர்கள், கிறிஸ்தவர்களின் தலைகளைக் கொண்டு வருவோருக்கு, தங்க நாணயங்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
நைல் நதிக்கரையோரம் திரண்டிருந்த கிறிஸ்தவ வீரர்களுக்குத் தலைமை வகித்த கர்தினால் பெலாஜியுஸ் (Pelagius) அவர்களிடம், போரைக் கைவிடுமாறு சகோதரர் பிரான்சிஸ் அவர்கள் மன்றாடினார். பெலாஜியுஸ் அவர்கள் மறுக்கவே, போர்க்களத்தின் மறுமுனையில் இருந்த சுல்தானைச் சந்திக்கச் சென்றார், பிரான்சிஸ்.
அவர் பகைவரின் உளவாளி என்று எண்ணிய இஸ்லாமிய வீரர்கள், அவரை அடித்து, துன்புறுத்தி, சுல்தான் முன் கொண்டு சென்றனர். சகோதரர் பிரான்சிஸ், சுல்தானைக் கண்டதும், தான் வழக்கமாகக் கூறும், "இறைவனின் சமாதானம் உங்களுக்கு உரித்தாகுக" என்று வாழ்த்தைக் கூறினார். இதைக் கேட்ட சுல்தான், அந்த வாழ்த்து, இஸ்லாமியர் பயன்படுத்தும் வாழ்த்தை ஓத்திருந்ததைக் கண்டு, ஆனந்த அதிர்ச்சியடைந்தார்.
சுல்தானுக்கும், சகோதரர் பிரான்சிஸ் அவர்களுக்கும் இடையே நிகழ்ந்த அந்த அழகான சந்திப்பின் இறுதியில், சுல்தான், அவருக்கு அளித்த பல பரிசுகளை அவர் நிராகரித்தார். இஸ்லாமியரை, தொழுகைக்கு அழைப்பதற்கென பயன்படுத்தப்படும் ஒரு ஊதுகுழலை மட்டும் தன்னுடன் எடுத்துச்சென்றார், பிரான்சிஸ். அன்று முதல், மக்களை வழிபாட்டிற்கு அழைப்பதற்கு அவர் அந்த ஊதுகுழலையே பயன்படுத்தினார்.
அன்றைய திருஅவை, இஸ்லாமியர் மீது காட்டிவந்த பகைமையுணர்வைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், சகோதரர் பிரான்சிஸ், தன் துறவு சபையினருக்கு, ஒரு புதிய சட்டத்தைக் கொணர்ந்தார். பிரான்சிஸ்கன் துறவியர், இஸ்லாமியரோடு நல்லுறவை வளர்ப்பதில் அதிக அக்கறை காட்டவேண்டும் என்பதை ஒரு சட்டமாகப் புகுத்தினார், பிரான்சிஸ்.
ஒரு சில இஸ்லாமியரின் தவறான போக்குகளால், உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியரை சரிவரப் புரிந்துகொள்ளமுடியாமல் தவிக்கும் நம் உலகை, அமைதியின் தூதனாக வாழ்ந்த அசிசி நகர் புனித பிரான்சிஸ், அன்புப் பாதையில் வழிநடத்திச் செல்லட்டும். இப்புனிதரின் திருநாள், அக்டோபர் 4ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது


Father forgive them…

வேதனை வேள்வியில் யோபு – பகுதி 40

ஞானிகள் பலர் இறைவனைக் குறித்து கூறும் ஒரு கருத்து இது: "கடவுள் ஒரு கண்ணாடி போல. கண்ணாடி ஒருபோதும் மாறுவதில்லை; ஆனால், கண்ணாடி முன் நிற்பவர்கள் ஒவ்வொருவரும், வெவ்வேறு உருவங்களைக் காண்கின்றனர்."
விவிலிய நூல்களும் அவ்வாறே! நாம் ஒவ்வொருவரும் கடவுளைப்பற்றி கொண்டிருக்கும் எண்ணங்களின்படி, அந்நூல்களில் நாம் கடவுளைக் காண்போம். யோபு நூலை வாசிக்கும்போது, கடவுளைப்பற்றியும், வாழ்வைப்பற்றியும் நாம் ஏற்கனவே நமக்குள் வகுத்துக்கொண்ட கருத்துக்களை மீண்டும் அங்கு வாசிக்கமுடியும்.
இதற்கு மாறாக, நமக்குள் வகுக்கப்பட்டுள்ள முற்சார்பு எண்ணங்களை விலக்கிவிட்டு, திறந்த மனதோடு யோபு நூலைத் திறந்தால், அங்கு, அற்புதமான, ஆழமான பல உண்மைகளைக் கற்றுக்கொள்ளமுடியும். பல வேளைகளில், அட, இந்தக் கோணத்தில் நான் எண்ணிப்பார்த்ததே இல்லையே என்று வியக்குமளவு, புதிய கோணங்களில் பல உண்மைகள் புலனாகலாம். அடுத்த சில விவிலியத் தேடல்களில் இந்த முயற்சியை மேற்கொள்ள முயல்வோம்.

யோபு நூலின் மையக்கருத்து, துன்பம் என்பது, பலரும் ஏற்றுக்கொள்ளும் உண்மை. குறிப்பாக, துன்பத்திற்கும், கடவுளுக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்ள இந்நூல் உதவும் என்பது பரவலான கருத்து. நம் தேடல்களை, துன்பம் சார்ந்த கேள்விகளுடன் துவங்குவோம்.
·          துன்பம் ஏன்?
·          மாசற்றவர்கள் துன்புறுவது ஏன்?
·          கடவுளின் கட்டுப்பாட்டினால் இவ்வுலகம் இயங்குகிறதென்றால், நீதிமான்கள் துன்புறுவது ஏன்?
·          நல்லவர்கள் துன்புற்று வீழ்வதும், பொல்லாதவர்கள் இன்புற்று வாழ்வதும் ஏன்?
என்பன, யோபு நூலில் எழுப்பப்பட்ட வலி மிகுந்த கேள்விகள். மனித வரலாற்றில் ஆழப்பதிந்துள்ள இக்கேள்விகளுக்கு தகுந்த பதில்களைத் தேட, நாம் கல்வாரிக்குச் செல்வோம். அங்கு, சிலுவையில் அறையப்பட்டு, உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் இயேசு, இக்கேள்விகளுக்குப் பதில் சொல்லக் காத்திருக்கிறார். அந்தப் பள்ளியில் நாம் கற்றுக்கொள்ளக் கூடிய பாடங்கள், நம் அடுத்த சில தேடல்களாக அமையட்டும்.

எந்த ஒரு மனிதரும் சாகப்போகும் நேரத்தில் சொல்வதை மிகக் கவனமாகக் கேட்போம். மறு வாழ்வின் வாசலில் நிற்கும் அந்த மனிதரின் வார்த்தைகளில் ஆழமான அர்த்தங்கள் இருக்கும் என்று நம்புகிறோம். இறுதி மூச்சு போகும் வேளையில் அவர் சொல்வது மிக முக்கியமான ஒரு செய்தியாக இருக்கும் என்று நம்புகிறோம். அதுவும் இறக்கும் நிலையில் இருப்பவர் அதிக உடல் வேதனைப்படுகிறார் என்று தெரிந்தால், அந்நேரத்தில், தன் வேதனையையும் பொறுத்துக்கொண்டு அவர் சொல்லும் வார்த்தைகள், இன்னும் அதிக மதிப்பு பெறும். இயேசு வேதனையின் உச்சியில், அந்த சிலுவையில் தொங்கியபடி, நமக்குப் பாடங்களைச் சொல்லித்தருகிறார்.

இயேசு சிலுவையில் கூறியதாய் சொல்லப்படும் ஏழு வாக்கியங்கள், துன்பம் குறித்து நாம் எழுப்பும் கேள்விகளுக்கு, பதில் சொல்கின்றன. இந்த வாக்கியங்களைச் சிந்திப்பதற்கு முன், இந்த வாக்கியங்களை சொன்ன அந்தச் சூழலை, கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம்.
உரோமையர்கள் கண்டுபிடித்த சித்ரவதைகளின் கொடுமுடியாக, சிகரமாக விளங்கியது, சிலுவை மரணம். சிலுவையில் அறையப்பட்டவர்கள் எளிதில் சாவதில்லை. அணு அணுவாக சித்ரவதைபட்டு சாவார்கள். கைகளில் அறையப்பட்ட இரு ஆணிகளால் உடல் தாங்கப்பட்டிருப்பதால், உடல் தொங்கும். அந்நிலையில், மூச்சுவிட முடியாமல் திணறுவார்கள். மூச்சுவிடுவதற்கு உடல் பாரத்தை மேலே கொண்டுவர வேண்டியிருக்கும். அப்படி கொண்டு வருவதற்கு, ஆணிகளால் அறையப்பட்டிருந்த கைகளையே பயன்படுத்த வேண்டியிருக்கும். மணிக்கட்டின் வழியே ஊடுருவிச் சென்றிருந்த அந்த ஆணிகள் தந்த வேதனை, அளவிடமுடியாதது. இப்படி, விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் மரண வேதனை அனுபவிப்பார்கள்.
ஒரு சிலர், இவ்வாறு, போராடும் வேளையில் எழுப்பும் மரண ஓலம், எருசலேம் நகருக்கும் கேட்கும் என்று விவிலிய ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இந்த மரண ஓலத்தை நிறுத்த, அவர்கள் மூச்சடைத்து விரைவில் இறக்கட்டும் என்பதற்காக, அவர்கள் மூச்சுவிடுவதற்கு, மீண்டும் மேலே எழுந்து வரமுடியாதபடி, அவர்கள் கால்களை முறித்துவிடுவார்கள். இதையே நாம் நற்செய்தியில் வாசிக்கிறோம். (யோவான் 19: 31-32)

இந்த மரண ஓலத்தில், வேதனைக் கதறலில், சிலுவையில் அறையப்பட்டவர்கள் சொல்லும் வார்த்தைகள், பெரும்பாலான வேளைகளில், வெறுப்புடன் வெளிவரும். தங்களை அந்த நிலைக்குக் கொண்டு வந்த தங்கள் வாழ்வை, பெற்றோரை, பிறரை, தங்கள் கடவுள்களைச் சபித்துக் கொட்டும் வார்த்தைகளே அங்கு அதிகம் ஒலிக்கும். தன் வேதனையின் உச்சத்தில் யோபு தான் பிறந்தநாளைச் சபித்து வெளியிட்ட கூற்றுகளை யோபு நூல் 3ம் பிரிவில் நாம் கேட்டோம்.
யோபு நூல் 3: 3,4,11
யோபு கூறியது: "ஒழிக நான் பிறந்த அந்த நாளே! ஓர் ஆண்மகவு கருவுற்றதெனச் சொல்லிய அந்த இரவே! அந்த நாள் இருளாகட்டும்; மேலிருந்து கடவுள் அதை நோக்காதிருக்கட்டும்; ஒளியும் அதன்மேல் வீசாதிருக்கட்டும்... கருப்பையிலேயே நான் இறந்திருக்கலாகாதா? கருவறையினின்று வெளிப்பட்டவுடனே நான் ஒழிந்திருக்கலாகாதா?

வேதனையின் சிகரத்தில் தன்மீதும், அடுத்தவர் மீதும், வெறுப்பை வெளிப்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்குப் பதில், மன்னிப்பு, அன்பு, வாக்குறுதி, நிறைவான கையளிப்பு என்ற அற்புதப் பாடங்களை சொல்லித்தந்தார் இயேசு. தான் விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் மரண போராட்டம் நிகழ்த்தி வந்த இயேசு, சிலுவையில் சொன்ன வார்த்தைகள் அவரது மரண சாசனம். அந்த மரண சாசனத்தின் முதல் வரிகள் இவை: 'தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை' (லூக்கா 23: 34)

இயேசு, தான் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் மன்னிப்பைப் பற்றி பேசினார். மன்னிப்பைச் செயலாக்கினார். நோயுற்றோரைக் குணமாக்கியபோது, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று கூறி குணம் அளித்தார். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை தீர்ப்பிடாமல் மன்னித்து அனுப்பினார். (யோவான் 8) காணாமற்போன மகன் போன்ற அற்புதமான கதைகள் வழியே (லூக்கா 15) கடவுளின் நிபந்தனையற்ற அன்பை, அதனால் வரும் மன்னிப்பைப் பற்றி அழகாகச் சொன்னார்.
மன்னிப்பைப் பற்றி இயேசு சொன்னவை, செய்தவை அனைத்தையும் சிந்திக்க பல விவிலியத் தேடல்கள் தேவைப்படும். இன்று, அவர் மன்னிப்பைப்பற்றி கூறிய ஒரு கருத்தை மட்டும் சிந்திப்போம். ஒருவர் தவறு செய்யும்போது, எத்தனை முறை மன்னிப்பது? நமது சிந்தனைக்கு உறுதுணையாக நற்செய்தியிலிருந்து ஒரு பகுதியைக் கேட்போம்.
மத்தேயு நற்செய்தி 18 21-22
பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?” எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.

ஏழு முறை மன்னிக்கலாமா? இது கேள்வி. ஏழு முறை அல்ல, எழுபது தடவை ஏழுமுறை. இது பதில். தயவு செய்து கணக்கு போட ஆரம்பிக்காதீர்கள். இயேசுவுக்கும் பேதுருவுக்கும் இடையே நடந்தது கணக்குப் பாடம் அல்ல. இங்கு சொல்லப்பட்டுள்ள எண்கள் கணக்கைத் தாண்டியவை. யூதர்களுக்கு, ஏழு என்பது, நிறைவைக் குறிக்கும் எண். எனவே, பேதுரு ஏழு முறை மன்னிக்கலாமா? என்ற இந்தக் கேள்வியைக் கேட்டபோது, ஏதோ பெரிய ஒரு சாதனையைப் பற்றி தான் பெசிவிட்டதைப் போன்று அவர் எண்ணியிருக்கலாம். இயேசு, எண்களைத் தாண்டி, கணக்கையெல்லாம் தாண்டி எப்போதும் மன்னிக்கச் சொன்னார். அதைக் கொஞ்சம் வித்தியாசமாகச் சொன்னார்.
இயேசு சொன்னதை இப்படி நாம் கற்பனை செய்து பார்க்கலாம். பேதுருவே, நீ கேட்கும் கேள்வி எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனை முறை மன்னிக்க வேண்டும் என்று நீ கேட்பது, ‘எத்தனை முறை சுவாசிக்க வேண்டும் என்று கேட்பது போல் உள்ளது. சுவாசிப்பதற்கு ஒரு கணக்கா? சுவாசிப்பதற்கு கணக்கு பார்த்தால், உடல் இறந்து விடும். அதே போல், மன்னிப்பதற்கு கணக்கு பார்த்தால்... உள்ளம் இறந்து விடும். இப்படி சொல்வதற்கு பதில், இயேசு "எழுபது தடவை ஏழுமுறை" என்று கூறினார்.

கணக்கு பார்க்காமல், நாம் மூச்சு விடுவதுபோல், மன்னிப்பையும், கணக்கு ஏதுமின்றி வழங்கவேண்டும் என்று சொல்லித்தந்த இயேசு, தான் விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் மரண வேதனையை அனுபவித்துவந்த வேளையிலும், தான் சொல்லித்தந்த மன்னிப்பு பாடத்திற்கு தானே ஓர் எடுத்துக்காட்டாக மாறினார்.


No comments:

Post a Comment