A Mother’s Love
பாசமுள்ள பார்வையில் - "ஓர் அம்மாவின்
அன்பு"
அமெரிக்க
ஐக்கிய நாட்டில் வாழும் கவிஞரும், இசையமைப்பாளருமான ஜிம் பிரிக்மன்
(Jim Brickman) அவர்கள், "ஓர் அம்மாவின் அன்பு" என்ற
பெயரில் உருவாக்கிய பாடலிலிருந்து ஒரு சில வரிகள்:
வாழ்வில்
நான் உயர்ந்திட படிக்கற்கள் அமைத்தாய்
வீடு
திரும்பி வர பாதையைக் காட்டினாய்
என் இதயத்தினுள்
நுழைந்து, அதை ஒழுங்குபடுத்த நேரம் ஒதுக்கினாய்
வாழ்வில்
நான் வளர்ந்திட வேர்கள் தந்தாய்
வானில்
நான் பறந்திட சிறகுகளும் தந்தாய்
நீ என்னை
நம்பியதால், கனவு காண நான் கற்றுக்கொண்டேன்
இவ்வுலகில்
வேறெந்த சக்தியும் இதற்கிணையில்லை
வேறெந்த
கருவூலமும் இதற்கு நிகரில்லை
அதுதான்
ஓர் அம்மாவின் அன்பு.
Mary and
John stood by the Cross
வேதனை வேள்வியில் யோபு – பகுதி 43
ஏறத்தாழ
பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி இப்போது நினைவுக்கு வருகிறது. இயேசு
சபையைச் சேர்ந்த இளம் குருக்களில் ஒருவர், என் நண்பர், மருத்துவமனையில் இருந்தார்.
வயிற்றில் புற்று நோய் முற்றிய நிலை. அதிக வேதனையில் இருந்தார். ஆனால், வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.
நானும், இன்னொரு நண்பரும் அவரைப் பார்க்கச் சென்றோம். அந்த வேதனையின் நடுவிலும், எங்களைப் பார்த்ததும் புன்னகைத்தார். நாங்கள் அவரது வலியைப்பற்றி
பேசியபோது, "அது கிடக்குது உடுங்க... உங்க அப்பாவுக்கு
சுகமில்லன்னு போன வாரம் சொன்னீங்களே. இப்ப எப்படி இருக்கார்?" என்று கேட்டார். எங்கள் சந்திப்பின் முழு நேரமும் என் முதுகு வலி
எப்படி இருக்கிறதென்று, என் நண்பர் தேர்வு எப்படி எழுதினார்
என்று... எங்களைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்.
வெளியே
வந்ததும் நானும் நண்பரும் எங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டோம். இது எப்படி ஒருவரால்
முடியும்? என் தந்தையைப் பற்றி போன வாரம் சொன்னதை,
இந்த வேதனையின் மத்தியிலும் அவரால் எப்படி நினைவில் வைத்துக்கொள்ள முடிந்தது என்று
நான் ஆச்சரியப்பட்டேன்.
தன் வலியை
மறக்க, அதிலிருந்து தன் எண்ணங்களைத் திசைதிருப்ப
வேறு பல எண்ணங்களை அவர் மனதில் நிறைக்கிறார் என்று என் நண்பர் விளக்கம் தர முயன்றார்.
மனமும் உடலும் ஒன்றையொன்று அதிகம் பாதிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மைதானே.
உடல் காயப்பட்டால், மனம் சோர்ந்துவிடும், ஆனால் காயப்பட்ட நேரங்களிலும் மனம் நினைத்தால், காயங்களை மறந்து உடலைச் செயல்பட வைத்துவிடலாம்.
நாங்கள்
அவரைச் சந்தித்துவிட்டு வந்த, ஒரு வாரத்திற்குப் பின், அவர் இறைவனடி
சேர்ந்தார். கடைசி நேரம் வரை மற்றவர்களைப் பற்றியே அதிகம் பேசிவந்தார் என்று அவருடன்
இருந்தவர்கள் சொன்னார்கள். இப்படி எண்ணுவதற்கு,
பேசுவதற்கு தனிப்பட்ட, உயர்ந்ததோர் உள்ளம் வேண்டும்.
மாசற்றவர்
துன்புறுவது ஏன் என்று, யோபு நூல் எழுப்பிய கேள்விக்கு விடைதேடி, கடந்த மூன்று வாரங்களாக,
இயேசு, கல்வாரியில், சிலுவையில், வேதனை நிறைந்த தன் மரண படுக்கையில் பேசியவற்றைச் சிந்தித்து
வருகிறோம். இயேசு, தன் பணிவாழ்வில் எப்போதும் சொல்லித்தந்த ஓர் ஆழமான உண்மை – இறையன்பும், பிறரன்பும், ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது, பிரிக்க முடியாதது என்ற உண்மை. இந்த மறையுண்மையின் மிகச் சிறந்த
பாடங்களை, சிலுவையில், இயேசு, மீண்டும் போதித்தார்.
"தந்தையே, இவர்களை மன்னியும்" என்றும், "இன்றே நீர் என்னுடன் பேரின்ப வீட்டில் இருப்பீர்" என்றும் இயேசு சொன்ன வார்த்தைகள்,
பிறரன்பின் ஆணிவேரைக் காட்டும் அற்புத சொற்கள். இன்றைய விவிலியத்தேடலிலும், இயேசு,
சிலுவையில், பிறரன்பை உணர்த்தும்வண்ணம் சொன்ன மற்றொரு வாக்கியத்தில், தேடலை மேற்கொள்வோம்.
யோவான்
நற்செய்தி 19: 25-27
சிலுவை
அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின்
மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர்.
இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா,
இவரே
உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று
ஆதரவு அளித்து வந்தார்.
இயேசுவின்
கூற்றை சிந்திப்பதற்கு முன், இப்போது நாம் கேட்ட இந்த நற்செய்தியில்
வாசித்த முதல் வாக்கியத்தை சிந்திக்க உங்களை அழைக்கிறேன். “சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர்.” இயேசுவின் இறுதி சித்ரவதை நேரத்தில்,
அவரது சிலுவையைச் சுற்றி மூன்று பெண்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களோடு இயேசுவின்
அன்பு சீடர் யோவானும் நின்று கொண்டிருந்தார். மூன்று பெண்கள், ஓர் இளைஞன்.
தன் மகனின்
கொடூர வேதனையைப் பார்த்து, உள்ளமெல்லாம் நொறுங்கி, மண்ணில் அழுது புரண்டு வீழ்ந்திருக்க வேண்டும், தேவதாய். ஆனால், அவர் நின்று கொண்டிருந்தார். பெண்களுக்கு, சிறப்பாக, அன்னையருக்கு இருக்கும் மன உறுதியைச் சிந்தித்துப்
பார்க்க, இந்தக் காட்சி நம்மைத் தூண்டுகிறது.
உலகப்
புகழ் பெற்ற ‘பியெத்தா’ (Pieta) திரு உருவத்தை படங்களில் பார்த்திருப்போம். 1499ம் ஆண்டு, கலை
மேதை மிக்கேலாஞ்சலோ அவர்கள் வடித்த இந்த உருவம், பல கோடி மக்களின் மனங்களில் இடம் பெற்றிருக்கும்.
33 வயது நிறைந்த ஆண் மகனை முழுவதுமாக மடியில் சுமப்பதென்பது, எந்த ஒரு பெண்ணாலும் முடியாத
காரியம். ஆனால், மரியா அப்படி தாங்கினார் என்று, மிக்கேலாஞ்சலோ
அவர்கள் செய்த கற்பனையே மிக அழகானது. மரியாவைப் பற்றி மிக்கேலாஞ்சலோ அவர்கள் வைத்திருந்த
உயர்ந்த எண்ணங்களுக்கு அவர் கொடுத்த ‘பியெத்தா’ வடிவம், பலகோடி மக்களின், சிறப்பாக பெண்களின் மனதில் ஆழமான உறுதியை உருவாக்கியிருக்கும் என்பதில்
எவ்வித ஐயமுமில்லை.
விருப்பப்பட்டு, மனமுவந்து, மனதார துன்பங்களை ஏற்கும் உறுதி,
பெண்களுக்கு, சிறப்பாக தாய்களுக்கு அதிகம் உண்டு. கருவில்
ஓர் உயிர் தோன்றியதும், ஒரு தாயின் உடல் வேதனைகள் பல வழிகளில் ஆரம்பமாகின்றன. குழந்தையைப்
பெறும்போது, தாய் படும் உடல் வேதனை, மிகப் பெரிது. வலியின்றி குழந்தையைப் பெறுவதற்கு,
இன்றைய மருத்துவ உலகம், பல செயற்கை வழிகளைக் கண்டுபிடித்திருந்தாலும், இன்னும் பலகோடி அன்னையர், வேதனையோடு குழந்தை பெறுவதையே தேர்ந்தெடுக்கின்றனர்.
இதேபோல், குழந்தை வளரும்போது, நோயுறும் குழந்தையைப் பேணும்போது, என்று பல தருணங்களில், தாய் விருப்பப்பட்டு
ஏற்கும் வேதனைகளின் பட்டியல், மிக நீளமானது.
இறைவனின்
விருப்பத்திற்கு ‘ஆம்’ என்று சொல்லி, இயேசுவைக் கருவில் தாங்கியது முதல், பிரச்சனைகளையும், சவால்களையும் சந்தித்தவர், மரியா. தன் பிரச்சனைகள் பெரிதென்று, அவையே தன் உலகமென்று, அவற்றைச் சமாளிக்கவே தன் வாழ் நாள்
முழுவதும் போதாதென்று மரியா வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி வாழவில்லை. தன் பிரச்சனைகளைப்
பெரிதுபடுத்தி, சிறைபட்டுவிடவில்லை. மற்றவர் பிரச்சனைகளில் பங்கேற்று, விடைதேட முயன்றார்.
தான் இறைவனின் தாயாகப் போகிறோம் என்பதை அறிந்ததும், கன்னியான தான்
கருவுற்றிருப்பது பெரும் ஆபத்து என்ற அச்சத்திலேயே தங்கிவிடவில்லை, இளம்பெண்
மரியா. தன் உறவினராகிய எலிசபெத்து, தன் முதிர்ந்த வயதில் கருவுற்றிருக்கிறார்
என்பதை அறிந்து, அவரைத் தேடிச் சென்றார். அதேபோல், கானாவில் நிகழ்ந்த திருமணத்தில்
உண்டான பிரச்சனையை, மிக அமைதியான வழியில் தீர்த்து வைத்தார். இப்படி, எங்கெங்கு பிரச்சனைகள்
வந்ததோ, அங்கெல்லாம் உறுதியாக நின்று பிரச்சனைகளைத் தீர்த்தவர் மரியா. இன்று கல்வாரியில்,
தன் மகனுக்கு எவ்வகையிலும் உதவ முடியவில்லை என்றாலும், தன் பிரசன்னத்தால், மகனின் வேதனைகளில் பங்கெடுத்து, அந்த வேதனைகளை
ஓரளவாகிலும் குறைக்கும் நோக்கத்துடன், சிலுவையடியில் நின்றார்.
மரியாவுடன்
நின்றது வேறு இரு பெண்கள். இயேசுவின் அன்பைப் பெற்ற சீடர். சீடரின் பெயர் குறிக்கப்படவில்லை
என்றாலும், அது யோவான் என்பது மரபு வழி நமக்கு வரும்
ஒரு தெளிவு. சீடர்களிலேயே மிக இளவயதுள்ளவர், யோவான். மற்ற சீடர்களெல்லாம் ஓடி ஒளிந்துகொண்டபோது, யோவானுக்கு மட்டும் எப்படி இந்த துணிவு வந்தது? இளவயது ஒரு காரணமாக இருக்கலாம். இளங்கன்று பயமறியாது என்று சொல்வதில்லையா? ஆனால், அதை விட, யோவான், இயேசுவின் மீது கொண்டிருந்த ஆழமான அன்பு, அவரை அந்த சிலுவைக்கடியில்
வேரூன்றி நிற்க வைத்தது.
இதே யோவானும், அவரது சகோதரர் யாக்கோபும் இயேசுவுக்கு மிக நெருக்கத்தில் இருக்க
விரும்பிய காலம் உண்டு. நெருக்கமேன்றால்... ஒருவர், இயேசுவின் வலது புறம், மற்றொருவர், அவரது இடது புறம் என்று, அவ்வளவு நெருக்கம் தேடினர்.
வெறும் நெருக்கம் மட்டும் அல்ல. நெருக்கத்தோடு, அரியணைகளும் தேடினர். இதனால் பிறர்
கோபத்தையும் தூண்டிவிட்டனர். அவர்கள் இந்த அரியணைகளைக் கேட்ட நேரமும், பரிதாபமான நேரம்.
இயேசு தான் ஏறப்போகும் அரியணையைப்பற்றி, சிலுவையைப்பற்றி, தெளிவாகச் சொன்னதும், யோவானும் யாக்கோபும் இயேசுவிடம் அரியணைகள் கேட்டனர். (மாற்கு
10: 35-45; மத்தேயு 20: 20-28) அந்த நேரத்தில் யோவானுக்கு
எதுவும் விளங்கவில்லை. இதோ, இங்கே, இப்போது, அவருக்கு, எல்லாம் தெளிவானது. இயேசு கூறிய அரியணை எது
என்று கண்டார், அதில் ஏற தயாராக, அவரும் அங்கு நின்றார்.
'நிற்பது' என்ற தமிழ்
சொல்லுக்கும் Stand என்ற ஆங்கிலச் சொல்லுக்கும் பல பொருட்கள்
உண்டு. stand, withstand, understand என்று ஆங்கிலத்தில் stand என்ற சொல்லுக்கு இன்னும் பல பரிணாமங்கள் உண்டு. கொள்கைப் பிடிப்போடு
வாழ்வது, எதிர்ப்புகளைச் சமாளித்து வாழ்வது, புரிந்து கொண்டு செயல்படுவது என்ற பல கோணங்களில், stand என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
தமிழிலும்,
நிலைத்து நிற்பது, வேரூன்றி நிற்பது, மலைபோல் உயர்ந்து நிற்பது என்ற கோணங்களிலும், நின்று நிதானமாய் செயல்படுவது என்ற கோணத்திலும் 'நிற்பது' என்ற வார்த்தை, நம்மைச் சிந்திக்க
வைக்கிறது.
இயேசுவின்
தாயும், அன்பு சீடரும் அந்தச் சிலுவைக்கடியில் நின்று
கொண்டிருந்தனர் என்று சொல்லும்போது, 'நிற்பது' என்ற சொல்லில் புதைந்திருக்கும் அத்தனை அர்த்தங்களையும் கூட்டிச்
சேர்த்து நாம் சிந்திக்க வேண்டும்.
தன்னை
ஆணிகளால் அந்தச் சிலுவையில் நிற்கவைத்து வேடிக்கைப் பார்க்கும் தீய சக்திகளைக் கண்டும்,
தங்கள் நம்பிக்கையை இழக்காமல் நின்ற, தன் தாயையும், அன்பு சீடரையும்
கண்ட இயேசு, மன நிறைவடைந்திருப்பார். தான் சொல்லித்தந்த நம்பிக்கை பாடங்களுக்கு சிறந்த
சாட்சிகளாக, தன் தாயும், அன்புக்குரிய சீடரும், சிலுவைக்கடியில் நின்றது, அவருக்கு
ஆறுதலைத் தந்திருக்கும். தான் செய்த பணிக்கும்,
தான் இப்போது அனுபவிக்கும்
இந்த கொடிய வேதனைக்கும் அர்த்தம் உண்டு என்பதை, இயேசு, அவ்வேளையில் உணர்ந்திருப்பார்.
இன்பங்களை விட, தன்னோடு துன்பங்களையே அதிகம் பகிர்ந்துகொண்ட
இந்த இரு உள்ளங்களும் ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன், நிறைவுடன், அவர்கள் இருவருக்கும், இயேசு பிரியா விடை அளிக்கிறார்.
"அம்மா, இதோ உம் மகன்... இதோ உம் தாய்."
மகாபாரதத்தில்
வரும் கர்ணன் என் நினைவுக்கு வருகிறார். கொடுப்பதொன்றையே வாழ்வின் கொள்கையாய் கொண்டிருந்ததாய்
சொல்லப்படும் கர்ணன், தன் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் கொடுத்தக் கொடைகள், மிக உன்னதமானவை.
பிறப்பிலேயே தன்னைக் காக்க தன் உடலோடு பிறந்த கவசத்தையும், காதணிகளையும், அவற்றை யாசித்து வந்த ஒரு முனிவருக்கு கர்ணன் வெட்டித்
தந்தார். அந்த முனிவர், வஞ்சகமாய் வேடமணிந்து வந்திருக்கும் கண்ணன் என்பது தெரிந்தும், தான் அளிக்கும் கவசமும்,
காதணியும்தான் தன்
உயிரைக் காக்கும் கேடயங்கள் என்பதை உணர்ந்திருந்தும், அவற்றை கர்ணன் வெட்டித் தந்தார்
என்று மகாபாரதம் சொல்கிறது.
தன் வாழ்நாள்
முழுவதும் மற்றவரை வாழவைக்க பல வழிகளில் தன்னையே தந்த இறைமகன் இயேசு, சிலுவையில் தன் உயிர் பிரியும் அந்த நேரத்தில், தனது கொடைகளின்
சிகரமாக தன் தாயையும் உலகிற்களித்தார்.
No comments:
Post a Comment