17 October, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 42

Welcome lights

பாசமுள்ள பார்வையில் வரவேற்கும் விளக்குகள்

தன் பெற்றோருடன் சண்டைபோட்டு, வீட்டை விட்டுச்சென்ற மகன், சில நாட்கள் சென்று வீட்டுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். "அப்பா, அம்மா, என்னை மன்னித்துவிடுங்கள். நான் என் தவறை உணர்ந்துவிட்டேன். நான் வீட்டுக்குத் திரும்பிவர ஆவலாக இருக்கிறேன். நான் வருகிற ஞாயிறு இரவு 8 மணி அளவில், நம் வீட்டுப் பக்கம் வருவேன். வீட்டின் முன்புறம் உள்ள விளக்கு எரிந்துகொண்டிருந்தால், நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டதற்கு அதை ஓர் அடையாளமாக நான் எடுத்துக்கொள்வேன். விளக்கு எரியவில்லையென்றால்என்னை வரவேற்க நீங்கள் தயாராக இல்லை என்பதை புரிந்துகொள்வேன்" என்று மடலில் எழுதியிருந்தார் மகன்.
அடுத்த ஞாயிறு மாலை அவர் வீட்டை நெருங்கும்போது, மனம் பதைபதைத்தது. ஒருவேளை, விளக்கு எரியவில்லையென்றால்... என்று உள்ளம் அஞ்சியது. மகன் தெருவோரம் திரும்பியதும், அவரது கண்கள் ஆச்சரியத்தில் மலர்ந்தன. வீட்டுக்கு முன்புறம் ஒரு விளக்கு மட்டுமல்ல, பல வண்ண விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. Welcome என்ற சொல், விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நடுவே வைக்கப்பட்டிருந்தது.

TODAY You Will Be With Me in Paradise!

வேதனை வேள்வியில் யோபு – பகுதி 42

அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும், சார்ல்ஸ் ஸ்விண்டோல் (Charles Swindoll) என்ற எழுத்தாளர், 'வாழ்வதற்கு உள்ளொளி' (Insight for Living) என்ற ஓர் இயக்கத்தை உருவாக்கி, நடத்திவருகிறார். நமக்கு முன் வாழ்ந்து, மறைந்துபோன பல நாயகர்கள், நம் வாழ்வுக்கு உந்துசக்தியாக விளங்குகின்றனர் என்பதை, தன் நூல்கள் வழியே பகிர்ந்து வருகிறார். விவிலிய நாயகர்களான, தாவீது, எஸ்தர், மோசே, திருத்தூதர் பவுல் உட்பட, பலரைப்பற்றி, ஸ்விண்டோல் அவர்கள் நூல்கள் வெளியிட்டுள்ளார். இந்த நாயகர்கள் வரிசையில், "யோபு: உன்னத தாங்கும் சக்தி கொண்ட மனிதர்" (Job: A Man of Heroic Endurance) என்ற நூலை 2004ம் ஆண்டு வெளியிட்டார். இந்நூலின் முதல் பிரிவில் அவர் கூறும் அறிமுக வரிகள், நம் தேடலை இன்று துவக்கி வைக்கின்றன:
"'வாழ்க்கை கடினமாக உள்ளது' என்ற மூன்று சொற்கள், நம்மில் பலர் பயன்படுத்தியுள்ள சொற்கள். யோபு நூலின் ஆசிரியர், தன் கதை நாயகனைப்பற்றி எழுதியபோது, அவர் மனதில் மேலோங்கியிருந்த சொற்கள் - 'வாழ்க்கை அநியாயமாக உள்ளது'.
துன்பங்களாலும், மனவருத்தங்களாலும் நிறைந்த வாழ்க்கை, கடினமாக உள்ளதென்பதை ஏற்றுக்கொள்ள நாம் பழகிக்கொள்கிறோம். நம்மையே பக்குவப்படுத்திக்கொள்கிறோம். ஆனால், 'வாழ்க்கை அநியாயமாக உள்ளது' என்பதை உணரும்போது, நம் ஆழ்மனதில் ஓர் ஏக்கம் உருவாகிறது. அந்த 'அநியாயம்' நீங்கி, 'நியாயம்' நிலைநாட்டப்பட வேண்டும் என்ற எண்ணம், நமக்குள் பொறுமையின்மையைத் தூண்டிவிடுகிறது. வாழ்க்கை கடினமானது மட்டுமல்ல, அது, மிக, மிக, அநியாயமானது என்பதை உணரும் அனைவரையும், யோபின் உலகம் வரவேற்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

யூஜின் பேட்டர்சன் (Eugene Peterson) என்ற விவிலிய அறிஞர், யோபு நூலுக்கு விளக்கமளித்து நூலொன்றை வெளியிட்டுள்ளார். இந்நூலுக்கு அவர் எழுதியுள்ள முகவுரையில், யோபின் வாழ்வு நமக்கு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை, இவ்வாறு கூறியுள்ளார்:
"யோபு துன்புற்றார் என்பதால், அவர் நமக்கு முக்கியமானவராக மாறவில்லை; மாறாக, அவர் நம்மைப்போலத் துன்புற்றார் என்பதாலேயே முக்கியமானவராக மாறியுள்ளார். அவர் துன்புற்றார் என்ற உண்மையைவிட, காரணம் ஏதுமின்றி, துன்புற்றார் என்ற உண்மையே நம்மை அதிகம் பாதிக்கின்றது.
சிறு வயதில் நாம் தவறுகள் செய்தோம், தண்டனைகள் பெற்றோம். செய்த தவறுக்குத் தண்டனையாக வருவது, நம் துன்பம் என்பதை ஏற்றுக்கொண்டோம். ஆனால், நாம் வளர, வளர, உலகில் நடப்பவை, கேள்விகளால் நம்மை துளைக்கின்றன. தவறு செய்பவர், துன்பம் ஏதுமின்றி வாழ்வதைக் காணும்போதும், தவறேதும் செய்யாத நமக்கு, துன்பங்கள் ஏற்படும்போதும், அவற்றை, புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கிறோம்."

தவறு ஏதும் செய்யாதபோது, சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் இருபுறமும், தாங்கள் செய்த குற்றங்களுக்காக, இருவர் சிலுவையில் அறையப்பட்டிருந்தனர். மரணப் படுக்கையில், வேதனையின் உச்சியில் இருந்த அந்த மூவரும் பெசிக்கொண்டது, இன்றைய விவிலியத் தேடலின் மையமாகிறது.

கல்வாரியைப் பற்றி, சிலுவைச் சாவைப் பற்றி நாம் அடிக்கடி கோவிலில் திருவழிபாடுகளில் கேட்டுவந்துள்ளதால், இந்த காட்சியைப் பற்றிய நம் எண்ணங்கள் சுத்தம் செய்யப்பட்ட எண்ணங்களாகவே இருக்கும். இயேசுவும் மற்றவர்களும் சொன்ன வார்த்தைகள் வெகு அமைதியாய் பக்தியாய் சொல்லப்பட்ட செபங்களைப் போல் நாம் நினைக்கத் தோன்றும். ஆனால், அசல் கல்வாரி, அசல் சிலுவை எந்த வகையிலும் அழகாய், அமைதியாய் நடக்கவில்லை.
உடலை மட்டும் வதைத்தால் போதாதென, அங்கு அறையப்பட்டவர்களின் உள்ளத்தையும் உடைக்கும் வண்ணம் அந்தக் குற்றவாளிகள் மக்கள் முன்னிலையில் முழுவதும் நிர்வாணமாக்கப்பட்டு சிலுவையில் அறையப்படுவார்கள். உடல் வேதனைகளையாகிலும் எப்பாடு பட்டாவது பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், தன்மானத்தை இழந்து உள்ளத்தை நொறுக்கும்படி அவமானங்களை அவர்கள் மீது சுமத்தும்போது, அது கொடூர தண்டனையாக மாறுகிறது.
பல நாடுகளில் இன்றும் பின்பற்றப்படும் சித்ரவதைகளின் கொடு முடிகள் உடல் வேதனைகள் அல்ல. உள்ளத்தை உடைக்கும் சித்ரவதைகள். அந்தக் கொடுமைகளின் மத்தியிலும் இந்த மூவரும் பேசிக்கொண்டவற்றை எடுத்துக் கூறும் நற்செய்தி இதோ:
லூக்கா 23 : 39-43
சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், “நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று என்று அவரைப் பழித்துரைத்தான். ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, “கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!என்று பதிலுரைத்தான். பின்பு அவன், “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும் என்றான். அதற்கு இயேசு அவனிடம், “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன் என்றார்.

அந்த மூவரும் பேசிய சொற்கள் நமக்குள் பல்வேறு சிந்தனைகளை எழுப்புகின்றன. ஆனால், நாம் இயேசுவின் சொற்களை மட்டும் நம் சிந்தனைகளுக்கு எடுத்துக்கொள்வோம். இயேசு தன்னோடு அறையுண்டிருந்தவருக்கு கொடுத்த அந்த உறுதிமொழியில் மூன்று உறுதிமொழிகள் அடங்கியுள்ளன.
"நீர் பேரின்ப வீட்டில் இருப்பீர்.
நீர் என்னோடு இருப்பீர்.
நீர் இன்றே இருப்பீர்."

பேரின்ப வீட்டில் இருப்பீர்: இறைமகன் இயேசு சிலுவையில் கொடுத்த இந்த உறுதி மொழியில் "பேரின்ப வீடு" என்ற சொற்களைப்  பயன்படுத்தியிருக்கிறார். எபிரேய மொழியில் அவர் சொன்ன இந்த அபூர்வ வார்த்தை, விவிலியத்தில் இன்னும் இரு இடங்களில் மட்டுமே (2 கொரி. 12: 3, திருவெளிப்பாடு 2: 7) பயன்படுத்தப் பட்டுள்ளது.  இயேசு விண்ணகத்தை ஒரு வீடு என்று, அதுவும், பேரின்ப வீடு என்று, குறிப்பிடுகிறார். விண்ணகம் என்ற வார்த்தையை விட வீடு என்ற சொல், மனதுக்கு நெருக்கமான, நிறைவான ஒரு சொல்லாய் ஒலிக்கிறது.
ஆங்கிலத்தில் House என்பது நான்கு சுவர்கள், ஒரு கூரை, செங்கல் இவைகளால் ஆனது. Home என்பது மனங்களால், அன்பால் கட்டப்படுவது. ஆழமான அர்த்தம் தரும் ஒரு சொல் இது. அதேபோல், நம் தமிழ் மரபிலும், வீடு பேறு என்று சொல்வது இந்த உலகத்தைக் கடந்து, ஒரு நிறைவான, நிலையான அமைதியை, அன்பை நாம் பெறுவதை உணர்த்தும் ஒரு சொல். வீடு என்பதை ஓர் இடம் என்று சொல்வதை விட ஒரு நிலை என்று சொல்வதே அதிகம் பொருளுள்ளது. வீடு என்பது நாம் நாமாக, சுதந்திரமாக உணரக்கூடிய ஒரு நிலை. இயேசு அந்த மனிதருக்குத் தந்த உறுதிமொழி இது தான். நீர் அலைந்து திரிந்தது போதும். "வீட்டுக்கு வாரும்" என்பதுதான்.

இரண்டாவது உறுதி - நீர் என்னோடு இருப்பீர்: வட துருவத்தில்  ஒரு பனிப் பாறையின் உச்சியில் ஒருவர் மட்டும் தனியாக நின்றால், எப்படி இருக்கும்? குளிராக இருக்கும். தனிமையாக இருக்குமா? அது அவரது மனதைப் பொருத்தது. தனியாக இருப்பதற்கும், தனிமையாக இருப்பதற்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உள்ளன. ஆயிரம் பேர் கூடி, இசை, நடனம், என்று கொண்டாடும் நேரங்களிலும் தனிமையாய் இருக்க வாய்ப்புகள் உண்டு. நம் பெருநகரங்களில் டிஸ்கோ நடனங்கள் நடக்கும் இடங்களுக்குப் போனால், காதைப் பிளக்கும் ஓசைகளின் நடுவில், அங்குள்ளவர்கள் ஆடிக் கொண்டிருக்கும் வேளையில், உள்ளத்தைக் காட்டக்கூடிய இயந்திரத்தைக் கொண்டு அவர்கள் மனதைப் பார்த்தால், அங்குள்ளவர்களில் பலர், தனிமைச் சிறைகளில் சிக்கியிருப்பது தெரியும்.
தனிமையில் இருப்பது வெறும் சிறை அல்ல. அதுதான் நரகம். தனிமை நரகத்திலிருந்து விடுதலை பெற அன்பு, அரவணைப்பு இவற்றை உணர வேண்டும். இயேசு அந்த அரவணைப்பைத் தான் "நீர் என்னோடு இருப்பீர்" என்ற வார்த்தைகள் வழியே அளிக்கிறார்.

இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்டவர் பிறந்தது முதல் வாழ்க்கையின் ஓரங்களுக்கு தள்ளப்பட்டு, அன்பு, அரவணைப்பு, வாழக்கூடிய வாய்ப்பு இவற்றை இழந்ததனால், குற்றவாளியாய் மாறியிருக்க வேண்டும். குற்றங்கள் புரிய ஆரம்பித்ததும், அவர், இன்னும், மற்றவர்களிடமிருந்து விலகி, தனிமையில் வாழ்ந்திருக்க வேண்டும்.
"நாம் தண்டிக்கப்படுவது முறையே" என்று அவர் சிலுவையில் சொன்னபோது, தன் குற்றங்களை, தன் தனிமை உணர்வுகளை இயேசுவின் பாதங்களில் கொட்டுகிறார். அன்புக்கு, அரவணைப்புக்குக் காத்திருக்கும் அந்தக் குழந்தையின் மனதை புரிந்து கொண்ட இயேசு, அவரை உடலால் அரவணைக்க முடியவில்லையெனினும் உள்ளத்தால் அரவணைத்து, தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் உறுதி மொழிகளே, நீர் என்னுடன் பேரின்ப வீட்டில் இருப்பீர் என்ற சொற்கள்.
இயேசு மனுவுருவெடுத்ததன் நோக்கமே, "கடவுள் நம்மோடு" என்பதை உணர்த்தத்தானே. தான் ஒரு எம்மானுவேல் என்ற உண்மையை, சிலுவையிலும் இயேசு உணர்த்தியது, அழகான இறை வெளிப்பாடு.

மூன்றாவது உறுதி - இன்றே இருப்பீர். இயேசு சிலுவையில் அந்த குற்றவாளிக்குத் தந்த இந்த உறுதிமொழியில் எவ்வித நிபந்தனையும் இல்லை. இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும் என்று சொன்ன அந்த மனிதரைப் பார்த்து, நிபந்தனைகளோடு பேசியிருந்தால், இயேசு இப்படி பேசியிருக்க வேண்டும்: நீயா? இத்தனைக் குற்றங்கள் செய்தவனா? விண்ணகத்திலா? ம். பார்ப்போம். ஒரு சில ஆண்டுகள் உன் பாவங்களுக்குப் பரிகாரம் செய்துவிட்டு, பிறகு வா. அப்போது உன்னை விண்ணகத்தில் சேர்க்கமுடியுமா என்று பார்ப்போம்என்ற பாணியில் இயேசு பேசியிருக்கவேண்டும். ஆனால், இயேசு சொன்னது இன்றே நீர் என்னுடன் பேரின்ப வீட்டில் இருப்பீர் என்ற உறுதி மட்டுமே.

இயேசு கல்வாரியில் தன்னோடு அறையப்பட்டவருக்கு கடவுளின் நிபந்தனையற்ற அன்பை உணர்த்தி, அவருக்கு மீட்பளித்ததைப் போல், நமக்கும் கடவுளின் பேரன்பை உணர்த்தி, அவரது பேரின்பத்தில் நம்மையும் இணைக்க வேண்டுவோம்.


No comments:

Post a Comment