I’ve Been
to the Mountaintop
Martin
Luther King's Granddaughter Speaks at March for Our Lives
இமயமாகும் இளமை – "நான் மலையுச்சிக்குச்
சென்றிருக்கிறேன்"
சரியாக 50 ஆண்டுகளுக்கு முன், 1968ம் ஆண்டு, ஏப்ரல் 4ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டின் மெம்பிஸ் (Memphis) என்ற நகரில், மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள்
சுட்டுக் கொல்லப்பட்டார். 1929ம் ஆண்டு, சனவரி
15ம் தேதி பிறந்த மார்ட்டின் அவர்கள், தன்
39வது வயதில் கொலையுண்டார். கறுப்பின மக்கள் சம உரிமைகள் பெறுவதற்காக தன் 26வது வயது
முதல் போராடியவர், மார்ட்டின். அவரது
போராட்டம், சக்தி மிகுந்த
ஓர் இயக்கமாக மாறியதால், அவருக்கு
பல கொலை மிரட்டல்கள் வந்தன. எனினும், அவர் தன்
போராட்டங்களைத் தொடர்ந்தார்.
1968ம் ஆண்டு, மார்ச் மாதம், மெம்பிஸ்
நகரில், கறுப்பினத்தைச்
சேர்ந்த துப்புரவுத் தொழிலாளர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு
தருவதற்காக, அந்நகருக்குப் புறப்பட்டார்
மார்ட்டின். அவர் செல்லவிருந்த விமானத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக பொய்யான வதந்தி
எழுந்தது. எனவே, அவரது பயணம் தாமதமானது.
தன் உயிருக்கு பல வழிகளிலும் ஆபத்து அதிகரித்து வருகிறது என்பதை உணர்ந்த மார்ட்டின்
அவர்கள், ஏப்ரல் 3ம் தேதி
மெம்பிஸ் நகரில் வழங்கிய உரை, அவரது
உள்ளத்துணிவை உணர்த்தியது. "நான் மலையுச்சிக்குச் சென்றிருக்கிறேன்" ("I've Been to the Mountaintop") என்ற பெயரில்
அவர் வழங்கிய அந்த உரையின் ஒரு பகுதி இதோ:
"மனநோய் கொண்டிருக்கும் நம் வெள்ளையின சகோதரர்களால்
எனக்கு எந்நேரத்திலும் ஆபத்து வரலாம். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ஏனெனில் நான்
மலையுச்சிக்குச் சென்றிருக்கிறேன். மற்றவர்களைப்போல் நானும் நீண்ட ஆயுளுடன் வாழ விரும்புகிறேன்.
ஆனால், இப்போது அதைப்பற்றி கவலையில்லை. கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவது
ஒன்றே என் குறிக்கோள். அவர் என்னை மலையுச்சிக்கு அழைத்துச் சென்றார். வாக்களிக்கப்பட்ட
நாட்டை கண்டுவிட்டேன். அங்கு நான் உங்களுடன் செல்வேனா என்று தெரியவில்லை. ஆனால், நாம் அனைவரும்
வாக்களிக்கப்பட்ட நாட்டில் நுழைவோம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். இப்போது, நான் எந்த
மனிதரைப் பற்றியும் அஞ்சவில்லை. என் கண்கள் இறைவனின் மகிமையைக் கண்டுவிட்டன."
இதுவே, மார்ட்டின் அவர்கள் வழங்கிய இறுதி உரை. இந்த உரை வழங்கிய
மறுநாள்,
ஏப்ரல் 4ம் தேதி, மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
Jesus
cleansing the Jerusalem
temple
புதுமைகள் – அலுவலர் மகன் குணமடைதல் – பகுதி 1
யோவான்
நற்செய்தியில் பதிவுசெய்யப்பட்டுள்ள இரண்டாவது புதுமையில் நம் தேடல் பயணத்தை இன்று
துவங்குகிறோம். யோவான் நற்செய்தி, 4ம் பிரிவில், 43 முதல் 54 முடிய உள்ள 12 இறைவாக்கியங்களில், அரச அலுவலர் மகனை
இயேசு குணமாக்கியப் புதுமை பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தப் புதுமையின் இறுதியில் நற்செய்தியாளர்
யோவான், இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு
செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே (யோவான்
4:54) என்ற சொற்களுடன்,
இப்புதுமையை நிறைவு செய்துள்ளார்.
கலிலேயாவில்
உள்ள கானாவில், ஒரு திருமண நிகழ்வில் இயேசு தண்ணீரை திராட்சை
இரசமாக மாற்றியபோது, தன் முதல் அரும் அடையாளத்தைச் செய்தார்
(யோவான் 2:11) என்று கூறிய யோவான், இந்த குணமாக்கும் புதுமையை, கலிலேயாவிற்கு வந்தபிறகு இயேசு செய்த இரண்டாவது அரும் அடையாளம்
என்று குறிப்பிடுகிறார். இவ்விரு அரும் அடையாளங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், இயேசு, யூதேயா, சமாரியா பகுதிகளில் ஒரு சில நாட்கள் செலவிட்டதையும், எருசலேம் நகரில் அரும் அடையாளங்கள் செய்ததையும் யோவான் குறிப்பிட்டுள்ளார்
(யோவான் 2:23).
இயேசு
ஆற்றிய அரும் அடையாளங்களின் விளைவாக, மக்களின் நம்பிக்கை வளர்ந்தது என்ற
கோணத்தில் நற்செய்தியாளர் யோவான் இந்நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார். இதிலிருந்து
மாறுபட்ட ஒரு கோணத்தில், ஏனைய மூன்று நற்செய்திகளில், புதுமைகள் நிகழ்வதைக்
காண்கிறோம். இந்த மூன்று நற்செய்திகளில், ஒருவர் கொண்டிருந்த நம்பிக்கை, புதுமையை நிகழ்த்தியது என்ற கோணத்தில் இயேசு பேசியிருப்பதைக் காண
முடிகிறது. (மத்தேயு 9:22, மாற்கு 5:34, லூக்கா 17:19; 18:42)
அரும்
அடையாளங்கள், அவற்றைக் கண்டதால் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை, அந்த நம்பிக்கையைக் குறித்து இயேசு கொண்டிருந்த கருத்து ஆகியவற்றை, நற்செய்தியாளர் யோவான், 2 மற்றும் 4ம் பிரிவுகளில் குறிப்பிடுகிறார்.
இந்த எண்ணங்களை இன்றையத் தேடலில் புரிந்துகொள்ள முயல்வோம்.
கானா
திருமணத்திற்குப் பின், கப்பர்நாகும் ஊரில் தங்கிய இயேசு, அங்கிருந்து எருசலேமுக்குச் சென்றார். யூதர்களுடைய பாஸ்கா
விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார் (யோவான் 2:13)
என்று யோவான் குறிப்பிட்டுள்ளார். எருசலேம் சென்ற இயேசு, கோவிலைத் தூய்மைப்படுத்தினார். இயேசு, எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்திய
பரபரப்பான நிகழ்வு, நான்கு நற்செய்திகளிலும் கூறப்பட்டுள்ளது.
எந்த ஒரு நிகழ்வு நான்கு நற்செய்திகளிலும் இடம்பெற்றுள்ளதோ, அந்நிகழ்வு, சீடர்களின் உள்ளங்களில் ஆழமான பாதிப்புக்களை உருவாக்கிய
நிகழ்வு என்று, விவிலிய விரிவுரையாளர்கள் விளக்கமளிக்கின்றனர். இயேசு, எருசலேம் கோவிலைத்
தூய்மைப்படுத்திய நிகழ்வை, நற்செய்தியாளர்கள் யாரும் ஒரு புதுமை
என்று குறிப்பிடவில்லை. எனினும், ஒரு கோணத்தில் சிந்திக்கும்போது, இந்நிகழ்வை ஒரு புதுமை என்றே சொல்லவேண்டும்.
மதத்தலைவர்களின்
அதிகாரக் கோட்டையாக அமைந்திருந்த எருசலேம் கோவிலுக்குள், ஊர், பேர் தெரியாத 30 வயது நிறைந்த ஓர்
இளைஞன், நுழைந்து, அங்கிருந்த வர்த்தகர்களை
விரட்டயடித்தது, நம்பமுடியாத செயலாக உள்ளது. அதிலும், இதை அவர் பாஸ்கா விழா நெருங்கிவந்த நேரத்தில் செய்தது, மேலும் நம்ப முடியாததாகத் தெரிகிறது.
பாஸ்கா
விழா காலத்தில், எருசலேம் கோவிலுக்கு ஒரு இலட்சம் பக்தர்களாகிலும் வந்தனர் என்பது,
விவிலிய ஆய்வாளர்களின் கணிப்பு. அந்த ஒரு இலட்சம் பேருக்குத் தேவையான ஆடு, மாடு, புறா என்ற காணிக்கைகள், கோவிலில்
குவிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வளவு பெரிய ஒரு நிறுவனத்தை, எப்படி, தனியொரு மனிதர்
தலைகீழாக மாற்றத் துணிந்தார், எப்படி, அந்த நேரத்திலேயே, அவர்
கொல்லப்படாமல் தப்பித்தார், என்பதெல்லாம் புதுமையே. தன் தந்தையின் இல்லத்தின் மீதுள்ள
ஆர்வம், தணியாத ஒரு நெருப்பாக அவருக்குள் எரிந்ததால்
(யோவான் 2:17), இந்தத் துணிகரச் செயலை அவரால் செய்ய முடிந்தது.
இறைவன்
மீதும், உன்னதக் கொள்கைகள் மீதும் கொண்டுள்ள ஆர்வம்
ஒருவருக்குள் எரிந்துகொண்டிருந்தால், மலையெனத் தடைகள் வந்தாலும், அவற்றை
எதிர்த்து வெற்றிகொள்ள இயலும் என்பதை, பல இளையோர் தங்கள் வாழ்வின் வழியே
உணர்த்தி வருகின்றனர்.
இந்த
இளையோரில் ஒருவரை இன்று சிறப்பாக நினைவுகூருகிறோம். அவர்தான் மார்ட்டின் லூத்தர் கிங்
ஜுனியர். சரியாக, 50 ஆண்டுகளுக்கு முன், 1968ம் ஆண்டு, ஏப்ரல் 4ம் தேதி, தன் 39வது
வயதில், இவர், சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்க ஐக்கிய
நாட்டில் வாழ்ந்த கறுப்பின மக்கள், வெள்ளையின மக்களைப்போல சம உரிமைகள்
பெறவேண்டும் என்ற கொள்கை, இவருக்குள் பற்றியெரிந்ததால், இனவெறி கொண்ட வெள்ளையினத்தவரையும், அவர்களுக்கு மறைமுகமாகத் துணைபோன அமெரிக்க அரசையும் இவர் எதிர்த்தார்.
காந்தியடிகளின் சத்தியாகிரக நெறிமுறைகள் இவரைப் பெரிதும் கவர்ந்ததால், வன்முறையற்ற ஒத்துழையாமை இயக்கத்தின் வழியே தன் போராட்டங்களை மேற்கொண்டார்.
வெற்றியும் கண்டார்.
அண்மையில், அதாவது, மார்ச் 24ம் தேதி, சனிக்கிழமை, துப்பாக்கியின் பயன்பாட்டை
அமெரிக்க அரசு கட்டுப்படுத்தவேண்டும் என்ற வேண்டுகோளுடன் 6 இலட்சத்திற்கும் அதிகமான
இளையோர், அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைநகர் வாஷிங்டனில் பேரணியாக திரண்டபோது, மார்ட்டின் லூத்தர் கிங் அவர்களின் பேத்தி, 9 வயதான Yolanda Renee King,
மேடையேறி
பேசினார். அச்சிறுமியின் தாத்தா, "எனக்கொரு கனவு உள்ளது" என்று,
1963ம் ஆண்டு, ஆகஸ்ட் 28ம் தேதி, வாஷிங்டனில் வழங்கிய
உலகப் புகழ்பெற்ற உரையை எதிரொலிப்பதுபோல், யொலான்டா ஒரு சில நிமிடங்கள் பேசினார்.
"என் தாத்தா கூறியதுபோல், எனக்கும் கனவு உள்ளது. இந்த நாட்டில்
இதுவரை நிகழ்ந்துள்ள வன்முறைகள் போதும் என்ற கனவு உள்ளது. துப்பாக்கியிலிருந்து விடுதலை
பெற்ற தலைமுறையாக என் தலைமுறை வாழும் என்ற கனவு எனக்கு உள்ளது" என்று சிறுமி யொலான்டா பேசினார்.
இனவெறி
கொண்ட, சக்தி வாய்ந்த, வெள்ளையினத்தவரையும்,
அவர்களின் அநீதியைத்
தடுக்காமல் துணைபோன அமெரிக்க அரசையும், மார்ட்டின் லூத்தர் கிங் அவர்கள்
எதிர்த்துப் போராடினார். சக்தி வாய்ந்த துப்பாக்கி உற்பத்தியாளர்களையும், அவர்களிடம்
தங்கள் அரசியல் விளம்பரங்களுக்கு நிதி உதவி பெற்றதால் மௌனமாகிப்போன அரசியல் தலைவர்களையும்
எதிர்த்து, இளையோர் போராடத் துவங்கியிருப்பது,
ஒரு வகையில் புதுமைதான்.
இதேபோல், ஸ்டெர்லைட் என்ற வர்த்தக அரக்கனை அழிக்க,
மக்கள் திரண்டு வந்திருப்பது, தமிழகத்தின் தூத்துக்குடியில் நடைபெற்று வரும் ஒரு புதுமை.
ஸ்டெர்லைட்
போராட்டத்தின் எதிரொலியாக, காவிரி நதி நீர் குறித்த மற்றொரு
போராட்டமும் இளையோரால் துவக்கப்பட்டுள்ளது. இந்தப் புதுமைகள் அனைத்தும், நம்பிக்கையின் அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இந்தப் புதுமைகள்,
மக்களுக்கு நன்மைகளை வழங்கவேண்டும், மக்களின் ஒன்றுபட்ட சக்தி மீது அவர்களுக்கு
நம்பிக்கையை வளர்க்கவேண்டும் என்று இறைவனிடம் செபிப்போம்.
எருசலேம்
கோவிலை இயேசு தூய்மைப்படுத்தியபோது, அதைச் செய்வதற்கு அவருக்கு உரிமை உள்ளது
என்பதை நிரூபிக்க, அவர் காட்டும் அடையாளம் என்ன என்று கேள்வி எழுந்தபோது, அவர்களிடம்
அடையாளம் எதையும் காட்டாத இயேசு, பின்னர் கோவிலில் சாதாரண மக்களுக்கு அரும்
அடையாளங்களைச் செய்தார். இதனை, நற்செய்தியாளர்
யோவான் இவ்வாறு பதிவு செய்துள்ளார்:
யோவான்
2:23-25
பாஸ்கா
விழாவின்போது இயேசு எருசலேமில் இருந்த வேளையில் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டு
பலர் அவரது பெயரில் நம்பிக்கை வைத்தனர். ஆனால் இயேசு அவர்களை நம்பிவிடவில்லை; ஏனெனில் அவருக்கு அனைவரைப் பற்றியும் தெரியும். மனிதரைப்
பற்றி அவருக்கு யாரும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை. ஏனெனில் மனித உள்ளத்தில் இருப்பதை
அவர் அறிந்திருந்தார்.
அரும்
அடையாளங்களைக் கண்டதால் தன் மீது மக்கள் நம்பிக்கை கொள்வதை, இயேசு பெரிதாகக் கருதவில்லை. இதற்கு நேர் மாறாக, இயேசு சமாரியா பகுதிக்குச் சென்ற வேளையில் அங்கிருந்தோர் இயேசுவின்
போதனைகளைக் கேட்டு, அவர் மீது நம்பிக்கை கொண்டனர் என்பதை யோவான்
சுட்டிக்காட்டியுள்ளார்.
சமாரியாவில்
உள்ள சிக்கார் என்ற ஊரில் நடந்தவற்றை, யோவான் 4ம் பிரிவில் 42 இறை வாக்கியங்களில்
கூறியுள்ளார். இந்த நிகழ்வில், இயேசு எந்த ஓர் அரும் அடையாளத்தையும்
செய்ததாகக் குறிப்புகள் இல்லை. கிணற்றுக்கு வந்த ஒரு பெண்ணிடம், தனக்குத் தண்ணீர் தரும்படி
கேட்ட இயேசுவுக்கும், அப்பெண்ணுக்கும் இடையே நிகழும் உரையாடலில், இயேசு, அப்பெண்ணின் உள்ளத்தைத்
திறந்து, உயர்ந்த உண்மைகளை வெளிப்படுத்தினார். அப்பெண் ஊருக்குள் சென்று மற்றவர்களையும்
இயேசுவிடம் அழைத்து வந்தார். அவர்கள் இயேசுவின் சொற்களைக் கேட்டு, அவர் மீது நம்பிக்கை கொண்டனர். இந்நிகழ்வின் இறுதி வரிகள் சமாரிய
மக்களின் நம்பிக்கையைக் குறித்து இவ்வாறு சொல்கின்றன:
யோவான்
4:40-42
சமாரியர்
இயேசுவிடம் வந்தபோது அவரைத் தங்களோடு தங்குமாறு கேட்டுக்கொண்டனர். அவரும் அங்கு இரண்டு
நாள் தங்கினார். அவரது வார்த்தையை முன்னிட்டு இன்னும் பலர் அவரை நம்பினர். அவர்கள்
அப்பெண்ணிடம், "இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள்
நம்பவில்லை; நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம்.
அவர் உண்மையிலே உலகின் மீட்பர் என அறிந்து கொண்டோம்" என்றார்கள்.
இயேசுவின்
புதுமைகள் எதையும் காணாமல், அவரது வார்த்தைகளை மட்டும் கேட்டு, அவரை உலகின் மீட்பர் என்று ஏற்றுக்கொள்ளும் அளவு, நம்பிக்கை கொண்டனர் சமாரியர். இதற்கு நேர்மாறாக, தான் வளர்ந்த கலிலேயப் பகுதி மக்களின் நம்பிக்கையைக் குறித்து இயேசு
கொண்டிருந்த எண்ணங்களையும், அவ்வேளையில் அவரை அணுகி வந்த அரச
அலுவலரைப் பற்றியும் நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.
No comments:
Post a Comment