24 April, 2018

விவிலியத்தேடல் : புதுமைகள் – அரச அலுவலர் மகன் குணமடைதல் – பகுதி 4


To change or Not to change…

இமயமாகும் இளமை -  அவர் மாறத் துவங்கினார்...

"நீ மாறவேண்டும், நீ மாறவேண்டும்" என்ற சொற்களை மீண்டும், மீண்டும் கேட்டுவந்த ஓர் இளைஞர், எங்கிருந்து துவங்குவது, எப்படி மாறுவது என்று தெரியாமல் குழம்பிப்போனார். மற்றவர்கள் எதிர்பார்க்கும் மாற்றம் தன்னிடம் உருவாகவில்லையே என்ற ஏக்கத்தில், அவர், இன்னும் மோசமாக மாறிவந்தார்.
அவர்மீது ஆழ்ந்த அன்பு கொண்டிருந்த ஓர் இளம்பெண்ணும், "நீ மாறவேண்டும்" என்ற பல்லவியை நாள்தோறும் பாடி வந்தது, இளைஞரை மேலும் விரக்தி அடையச் செய்தது. ஒருநாள், அந்த இளம்பெண், இளைஞரிடம் வந்து, "நீ இப்போது இருப்பதுபோலவே எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. நீ மாறவேண்டாம்" என்று சொன்னார். இதைக் கேட்ட இளைஞரின் உள்ளத்திலிருந்த இறுக்கங்களும், ஏக்கங்களும் மறைந்தன.
அவர் மாறத் துவங்கினார்.

Go, your son will live…

புதுமைகள் அரச அலுவலர் மகன் குணமடைதல் பகுதி 4

யோவான் நற்செய்தி 4ம் பிரிவில் இடம்பெற்றுள்ள புதுமை, அரச அலுவலர் மகனை இயேசு குணப்படுத்தும் புதுமை. இந்தப் புதுமையின் இறுதியில், "இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே" (யோவான் 4 54) என்ற குறிப்பை நற்செய்தியாளர் யோவான், பதிவுசெய்துள்ளார். கலிலேயாவில் உள்ள கானாவில், தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியது, இயேசு செய்த 'முதல் அரும் அடையாளம்'. அரச அலுவலர் மகனைக் குணமாக்கியது, அவர் கலிலேயாவில் செய்த இரண்டாவது அரும் அடையாளம். இவ்விரு நிகழ்வுகளுக்கும் இடையே, இயேசு, எருசலேம் நகரில், அரும் அடையாளங்களைச் செய்திருந்தார் (யோவான் 2:23). இருப்பினும், 'இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே' என்ற சொற்களை, நற்செய்தியாளர் யோவான் ஏன் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார் என்ற கேள்வி, விவிலிய ஆய்வாளர்களைக் கவர்ந்துள்ளது.
யோவான், தன் நற்செய்தியை வெறும் வரலாற்றுப் பதிவாக மட்டும் எழுதவில்லை, மாறாக, ஓர் இறையியல் பாடமாக எழுதியுள்ளார் என்பதை நாம் அவ்வப்போது குறிப்பிட்டு வருகிறோம். இறையியல் கண்ணோட்டத்துடன் சிந்தித்திருக்கும் சில விவிலிய ஆய்வாளர்கள், இயேசு, கானாவில் செய்த முதல் அரும் அடையாளத்திற்கும், கலிலேயாவுக்கு வந்தபின் செய்த இரண்டாவது அரும் அடையாளத்திற்கும் இடையே உள்ள ஒப்புமைகளைப் பதிவு செய்துள்ளனர்.

1. இவ்விரு அரும் அடையாளங்களும் 'மூன்றாம் நாளில்' நிகழ்ந்தன. (யோவான் 2:1; 4:43) 'மூன்றாம் நாள்' என்ற குறிப்பு, விவிலியத்தில் பல இடங்களில் காணப்படுகின்றது. ஆபிரகாம், தன் மகனைப் பலியிடச் சென்றபோது, மூன்றாம் நாள், இறைவன் குறித்திருந்த மலையை அவர் அடைந்தார். (தொடக்க நூல் 22:4-5)
இஸ்ரயேல் மக்களைச் சந்திக்க, இறைவன், மூன்றாம் நாள், பேரிடி, மின்னல், கார்மேகம் புடைச்சூழ வந்தார் என்று விடுதலைப்பயண நூல் கூறுகிறது. (வி.ப. 19:16-19)
பெரிய மீனின் வயிற்றில் சிறைப்பட்டிருந்த இறைவாக்கினர் யோனாவை, அந்த மீன், மூன்றாம் நாள் கரையில் கக்கியது (யோனா 1:17, 2:1). அதேபோல், கல்லறையில் புதைக்கப்பட்ட இயேசுவும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் (மத்தேயு 12:40, 16:21; 17:23).
எனவே, 'மூன்றாம் நாள்' என்ற குறிப்பை, வெறும் காலத்தை உணர்த்தும் குறியீடாக அல்லாமல், மாற்றத்தை உணர்த்தும் ஓர் இறையியல் குறியீடாக நற்செய்தியாளர் யோவான் பயன்படுத்தியுள்ளார்.

2. கானா திருமண விருந்தில், 'திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது' என்ற குறையை, அன்னை மரியா, இயேசுவின் கவனத்திற்குக் கொணர்ந்தபோது, இயேசு, அவரிடம் கடினமாகப் பேசுவதுபோன்ற சொற்களைப் பயன்படுத்துகிறார் (யோவான் 2:4). அதேபோல், தன் மகன் உடல் நலமற்று இருக்கிறான் என்ற குறையை, அரச அலுவலர் தெரிவித்தபோதும், இயேசு அவரைக் கடிந்துகொள்வதுபோல் பேசுகிறார் (யோவான் 4:48).

3. இவ்விரு நிகழ்வுகளிலும், கட்டளைகள்போல் ஒலிக்கும் இயேசுவின் சொற்கள், புதுமைகளை நிகழ்த்துகின்றன. "இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்" (யோவான் 2:7) என்று கானா திருமண விருந்தில் இயேசு கூறிய சொற்களும், "நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்" (யோவான் 4:50) என்று அரச அலுவலரைப் பார்த்து இயேசு கூறிய சொற்களும் புதுமைகளை ஆற்றின.

4. இவ்விரு புதுமைகளிலும், இயேசு கூறியச் சொற்களின் மீது நம்பிக்கை கொண்டு, அவரது கட்டளைகள் நிறைவேற்றப்படுகின்றன. 'தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்' என்று இயேசு கூறியதைக் கேட்டு, பணியாளர்கள் அத்தொட்டிகளை விளிம்புவரை நிரப்பினார்கள் என்றும், அந்த நம்பிக்கையே, தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியது என்றும் சிந்தித்தோம். அதேபோல், 'நீர் புறப்பட்டுப்போம். உன் மகன் பிழைத்துக் கொள்வான்' என்று இயேசு கூறியதை நம்பி, அரச அலுவலர் புறப்பட்ட அந்த நேரமே, அவரது மகன் குணமடைந்தான்.

5. கானா திருமண விருந்தில், புதுமையாக உருவான திராட்சை இரசத்தைப்பற்றி பணியாளர்கள் அறிந்திருந்தனர், பந்தி மேற்பார்வையாளருக்கோ, மணமகனுக்கோ அதைக் குறித்து ஒன்றும் தெரியவில்லை (யோவான் 2:9). அதேபோல், மகன் குணமான அதிசயத்தை முதலில் தெரிந்துகொண்டவர்கள், அந்த அலுவலரின் பணியாளர்கள். அவர்கள் தங்கள் தலைவனைத் தேடிச்சென்று இந்த நல்ல செய்தியைக் கூறினர். (யோவான் 4:51-52)

6. கானாவில் இயேசு முதல் அரும் அடையாளத்தைச் செய்ததும், அவருடைய சீடர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர் (யோவான் 2:11). கலிலேயாவில் இயேசு செய்த இரண்டாவது அரும் அடையாளத்தைக் கண்டு, 'அரச அலுவலரும், அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர்' (யோவான் 4:53). யோவான் நற்செய்தியின் 20ம் பிரிவில், அரும் அடையாளங்களையும், நம்பிக்கையையும் இணைத்து, யோவான் கூறியுள்ள இறுதி வரிகள், இந்த நற்செய்தியில் கூறப்பட்டுள்ள அரும் அடையாளங்கள் அனைத்தும், மக்களிடம் நம்பிக்கையை உருவாக்க செய்யப்பட்டன என்ற கருத்துடன் நிறைவடைகிறது. வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன. (யோவான் 20:30-31)

இவ்விரு அரும் அடையாளங்கள் வழியே, படைக்கப்பட்ட பொருள்கள் மீதும், காலம், தூரம் ஆகியவற்றின் மீதும் இயேசுவுக்கு இருந்த சக்திகளை நாம் புரிந்துகொள்கிறோம். இயேசு, தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியப் புதுமையில், முதல் இரு சக்திகள் வெளிப்படுகின்றன.
முதலில் - படைக்கப்பட்ட பொருள்கள் மீது இயேசு கொண்டுள்ள அதிகாரம். மனிதன் என்ற நிலையில், இயற்கையின் அனைத்து விதிகளுக்கும் இயேசு உட்பட்டவர் என்றாலும், அந்த விதிகளை, தேவைப்பட்ட நேரத்தில் மாற்றுவதற்கும் அவரிடம் வல்லமை இருந்தது. எனவே, அவரால் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்ற முடிந்தது என்பதை, இப்புதுமையில் நாம் புரிந்துகொள்கிறோம்.

இரண்டாவது - காலத்தின்மீது இயேசு கொண்டிருந்த அதிகாரம். பொதுவாக, திராட்சை இரசத்தை உருவாக்க, பல ஆண்டுகள் தேவைப்படும். திராட்சை செடி நடப்படும் நேரம் துவங்கி, அது கொடியாக வளர்ந்து, கனி தந்து, அந்த கனிகளைக் கொண்டு, தரமான திராட்சை இரசத்தை உருவாக்க, குறைந்தது, 4 முதல், 40 ஆண்டுகள் வரையிலும் கூட ஆகலாம். ஆனால், கானா திருமணத்தில், இயேசு, உயர்தரமான திராட்சை இரசத்தை ஒரு நொடியில் உருவாக்கினார். 40 ஆண்டுகளில் உருவாகவேண்டிய உயர்தரமான திராட்சை இரசத்தை, ஒரு நொடியில் உருவாக்கியதால், காலத்தின் மீது இயேசுவுக்கு இருந்த அதிகாரம் தெளிவாகிறது.

அரச அலுவலர் மகனை இயேசு குணமாக்கிய இரண்டாவது அரும் அடையாளத்தின் வழியே, தூரத்தின் மீது அவர் கொண்டிருந்த சக்தி வெளியாகிறது. கப்பர்நாகும் ஊருக்கும், கானாவுக்கும் இடையே உள்ள 25 கி.மீ. தூரத்தை, இயேசுவின் வார்த்தைகள் கடந்து சென்றன. "நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்" என்று இயேசு கூறிய அந்த நொடியில் அலுவலரின் மகன் பிழைத்தெழுந்தான் என்பதை இப்புதுமையில் காண்கிறோம்.

இறுதியாக, இந்தப் புதுமை வழியே நாம் கற்றுக்கொள்ளக் கூடிய மிக முக்கியமான பாடம் ஒன்று உள்ளது. அதுதான், அரச அலுவலரிடம் படிப்படியாக வளர்ந்த நம்பிக்கை என்ற பாடம். அவரது நம்பிக்கையின் வளர்ச்சியை மூன்று படிகளாக நாம் புரிந்துகொள்ள முயல்வோம்.

தன் மகன் சாகும் நிலையிலிருந்ததால், அவனைக் குணமாக்கும் பல வழிகளை அரச அலுவலர், பதைபதைப்புடன், தீவிரமாக, துரிதமாகத் தேடிக்கொண்டிருந்தார். அவ்வேளையில், அவர், இயேசுவைப்பற்றி கேள்விப்பட்டார். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் ஒருவருக்கு, அந்த நீரில் மிதந்து வரும் எந்த ஒரு பொருளும், தன்னைக் காக்க வந்த படகு போலத் தெரியுமல்லவா? அத்தகைய நிலையில், இருந்த அரச அலுவலர், இயேசுவைப்பற்றிக் கேள்விப்படுகிறார். எருசலேமில், கானாவில் நிகழ்ந்த அரும் அடையாளங்களை நேரில் கண்டவர்கள், அந்த அலுவலரிடம் இயேசுவைப்பற்றி கூறியிருக்கலாம். அவர்கள் கூறியவற்றை நம்பி, அரச அலுவலர், கப்பர்நாகுமிலிருந்து கானாவுக்கு விரைந்து செல்கிறார். மற்றவர்கள் கூறும் கருத்துக்களை நம்பி, முயற்சிகளை மேற்கொள்வது, நம்பிக்கையின் முதல் படி.

அரச அலுவலர், கானாவில், இயேசுவைச் சந்தித்தவேளையில், இயேசு, புதுமைகள் எதையும், அவர் கண்முன் நிகழ்த்தவில்லை. இருப்பினும், இயேசுவைச் சந்தித்ததும், அரச அலுவலருக்கு நம்பிக்கை பிறந்திருக்கவேண்டும். முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவரைக் கண்டதும், அவர் மீது நமக்கு உருவாகும் நல்லெண்ணங்கள், நம்பிக்கையின் இரண்டாவது படி.

இவ்விரு படிகளையும் அரச அலுவலர் கடந்திருந்தாலும், அவருடைய நம்பிக்கை இன்னும் அரைகுறையாகத்தான் இருந்தது. எனவேதான், அரச அலுவலர் இயேசுவை, தன்னுடன் கப்பர்நாகும் வந்து தன் மகனைக் குணமாக்கவேண்டும் என்று விண்ணப்பிக்கிறார். இயேசு நேரடியாக வந்தால் மட்டுமே தன் மகனுக்குக் குணம் கிடைக்கும் என்று அரச அலுவலர் நினைத்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. பொதுவாக, குணமளிக்கும் புதுமைகளில், அப்புதுமையைச் செய்பவர், நோயுற்றவரைத் தொடவேண்டும், அல்லது, நோயுற்றவருக்கு முன் நின்று ஒரு மந்திரத்தைச் சொல்லவேண்டும், அல்லது, தன் சக்தி அடங்கிய ஒரு பொருளை அனுப்பி, அதை நோயாளி மீது வைக்கும்படி சொல்லவேண்டும். இவைகளே குணமாக்கும் வழிகள் என்பது, அன்றும், இன்றும் நிலவிவரும் பொதுவான நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில், அரச அலுவலர், இயேசுவை, தன் இல்லத்திற்கு வரும்படி அழைக்கிறார். அதுவும், அவர் விடுத்த வேண்டுதலில், அவசரமும், பரிதவிப்பும் கலந்து ஒலிக்கின்றன: "ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்" (யோவான் 4:49) என்று இயேசுவை வற்புறுத்தி அழைக்கிறார்.

பொதுவாக, தன்னை நாடி வருபவர்கள் கேட்பதை, கேட்டபடியே செய்வது இயேசுவின் வழக்கம். அரச அலுவலர் அவரது வீட்டுக்கு வரும்படி இயேசுவை அழைத்தபோது, அவருடன் செல்லாமல், "நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்" என்று சொல்லி அனுப்புகிறார். இங்கு, நாம் அரச அலுவலரின் நம்பிக்கையில் உருவாகும் மூன்றாவது படியைக் காணலாம். முன்பின் அறிமுகம் இல்லாத இயேசு தன்னிடம் கூறியச் சொற்களை நம்பி அரச அலுவலர் தன் இல்லம் திரும்புகிறார். இது, நம்பிக்கையின் மிக உயர்ந்த நிலை.
கானா திருமண விருந்தில், இயேசுவை முன்பின் பார்த்திராத பணியாளர்கள், அவர் சொற்களைக் கேட்டு, முழுமனதுடன், தொட்டிகளை, விளிம்புவரை தண்ணீரால் நிரப்பியபோது, அந்த தண்ணீர், திராட்சை இரசமாக மாறியது. அதேபோல், இயேசுவை முன்பின் பார்த்திராத அரச அலுவலர், "நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்" என்று இயேசு சொன்னதை நம்பி புறப்பட்ட அந்த நொடியில், அவரது மகன் நலமடைந்தான்.
இயேசுவின் சொற்கள் புதுமைகளை ஆற்றும் வல்லமை கொண்டது என்பதை நம்பிய பணியாளர்களும், அரச அலுவலரும், நமக்கு, நம்பிக்கை பாடங்களைச் சொல்லித் தருவார்களாக.


No comments:

Post a Comment