17 April, 2018

விவிலியத்தேடல் : புதுமைகள் – அரச அலுவலர் மகன் குணமடைதல் – பகுதி 3


Ms. Shoba receiving the award from Dr.M.S.Swaminathan

இமயமாகும் இளமை - அரசு பள்ளிகளுக்குப் புத்துயிர் தந்து...

போதிய மாணவர் சேர்க்கை இல்லை எனக் கூறி, அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வரும் நிலையில், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கி, மூடவிருக்கும் பள்ளிகளை பாதுகாத்து வருகிறார், ஊட்டியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் ஷோபா. இதுவரை 4 அரசு பள்ளிகள், இவரால், மூடு விழாவில் இருந்து தப்பித்துள்ளன.
ஊட்டி அருகே உள்ள சோளூரில் பிறந்த ஷோபா அவர்கள், ஆங்கிலம் மற்றும் தமிழில் பட்டம் பெற்று, 1988-ல் கூடலூர் அரசுப் பள்ளியில் ஆசிரியர் பணிக்குச் சேர்ந்தார். பின்னர் 2003-ல் பதவி உயர்வு பெற்று, தலைக்குந்தா பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியர் ஆனார்.
இப்பள்ளி, சுடுகாட்டுக்கு அருகே இருந்ததால் சடலங்கள் எரியூட்டப்படும்போதெல்லாம் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால், மாணவரின் படிப்பு பாதித்தது மட்டுமல்லாமல், மாணவர் சேர்க்கையும் குறைந்தது. படிப்படியாக பள்ளி மூடப்படும் நிலைக்கு வந்தது.
பிரச்சனையை உணர்ந்த ஷோபா அவர்கள், உடனே பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணியில் இறங்கினார். பள்ளியின் உட்புறமும், வெளிப்புறமும் தூய்மையாக்கப்பட்டதால், பள்ளி புதுப்பொலிவு பெற்றது. மாணவர் சேர்க்கையும் அதிகரித்தது.
தலைக்குந்தா தொடக்கப் பள்ளியைக் காப்பாற்றிய ஷோபா அவர்கள், அடுத்து, மூடும் நிலையில் இருந்த டி.ஆர்.பஜார் மற்றும் கிளென் மார்க்கன் கேம்ப் நடுநிலைப் பள்ளிகள், இந்திரா நகர் தொடக்கப் பள்ளி ஆகியவற்றையும் காப்பாற்றினார்.
தற்போது, ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் ஷோபா அவர்கள், 2015ம் ஆண்டு, இப்பள்ளியில் பொறுப்பேற்றபோது, மாணவர் எண்ணிக்கை வெறும் 18ஆக இருந்ததால், மூட வேண்டிய நிலையில் பள்ளி இருந்தது. ஒரே ஆண்டில், ஷோபா அவர்கள், மாணவர் எண்ணிக்கையை 138ஆக உயர்த்தினார்.
ஷோபா அவர்களுடன் ஏனைய ஆசிரியர்களும் இணைந்து, பள்ளியில், மூலிகை, ரோஜா, காய்கனித் தோட்டங்கள், மண்புழு உரம் தயாரிப்புக் கூடம் ஆகியவற்றை அமைத்துள்ளனர். இதனால் பசுமையும் தூய்மையுமாய் இருக்கிறது பள்ளி.
மேலும் மாணவர்களுக்கு யோகா, கராத்தே, கர்நாடக இசை, ஆங்கிலத்தில் பேசுதல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுவதுடன், தினமும் ஊட்டச்சத்து பாலும் கிடைக்கிறது. இத்தனை தொழில்நுட்ப வசதிகளுடன் இப்பள்ளி இயங்கிவருவதற்காக, புதுமைப் பள்ளி விருதுக்கு இப்பள்ளியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
2015-16 ஆண்டின் நல்லாசிரியர் விருது, எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் சிபிஆர் (CPR) சுற்றுச்சூழல் கல்வி மையத்தின் சுற்றுச்சூழல் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளும் ஷோபா அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

Unless you see signs and wonders…

புதுமைகள் அரச அலுவலர் மகன் குணமடைதல் பகுதி 3

சென்றவார விவிலியத்தேடலின் இறுதியில் நாம் பகிர்ந்துகொண்ட ஒரு கருத்தை, மீண்டும் நினைவுக்குக் கொணர்வோம்:
தனக்கு சரியான வரவேற்பு கிடைக்காது என்று எதிர்பார்த்து, கலிலேயா சென்ற இயேசுவுக்கு, ஓர் ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது. கலிலேய மக்கள் இயேசுவை வரவேற்றனர் என்றும், அந்த வரவேற்பிற்கு காரணம் என்ன என்பதையும் யோவான் குறிப்பிட்டுள்ளார். "இயேசு கலிலேயா வந்தபோது கலிலேயர் அவரை வரவேற்றனர். ஏனெனில் அவர்கள் திருவிழாவுக்குச் சென்றிருந்தபோது எருசலேமில் அவர் செய்தவை அனைத்தையும் கண்டிருந்தனர்." (யோவான் 4:45)
அரும் அடையாளங்கள் தங்கள் நடுவிலும் நடைபெறும் என்ற எதிர்பார்ப்புடன், கலிலேய மக்கள், இயேசுவை வரவேற்றனர் என்பதை சிந்திக்கும்போது, அவர்கள், இயேசுவைவிட, அவர் செய்த அற்புதங்களை உயர்வாக நினைத்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

மந்திர வித்தைகள் காட்டப்படும் இடங்களில், மந்திரவாதி செய்யும் வித்தைகளைக் கண்டு, பிரமித்து, கைதட்டி இரசிப்போம். பல வேளைகளில், மந்திரவாதியைவிட, அவர் செய்யும் வித்தைகள், நம் மனங்களில் ஆழப்பதிகின்றன என்பதும் உண்மை. அத்தகைய மனநிலையை நாம் கலிலேய மக்களிடம் காண்கிறோம். எருசலேம் கோவிலில் இயேசு செய்த அரும் அடையாளங்களைக் கண்டு வியந்தவர்கள், இம்மக்கள். எருசலேமிலிருந்து தங்கள் ஊருக்குத் திரும்பிய பின்னரும், அவர்கள், தாங்கள் கண்ட புதுமைகளைப் பற்றி அதிகம் பேசியிருப்பர். அவற்றை செய்த இயேசுவைப்பற்றியோ, எருசலேம் கோவிலில் இயேசு வழங்கிய அறிவுரைகளைப் பற்றியோ அவர்கள் அதிகம் பேசியிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

சொந்த ஊரில் தனக்கு சரியான வரவேற்பு கிடைக்காது என்ற எண்ணத்துடன் வந்த இயேசுவுக்கு, கலிலேயர்கள் தந்த வரவேற்பு மகிழ்வைத் தந்திருக்கும். இருப்பினும், அம்மக்கள் தன்னைவிட, தன் சொற்களைவிட, புதுமைகளுக்கு முதலிடம் கொடுத்தனர் என்ற எண்ணம், இயேசுவுக்கு வருத்தத்தையும் தந்திருக்கும். அத்தகையச் சூழலில், அரச அலுவலர் ஒருவர், இயேசுவைத் தேடி வந்தார். அங்கு நிகழ்ந்ததை நற்செய்தியாளர் யோவான் இவ்வாறு கூறியுள்ளார்:
யோவான் 4:46ஆ-48
கப்பர்நாகுமில் அரச அலுவலரின் மகன் ஒருவன் நோயுற்றிருந்தான். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அரச அலுவலர் அவரிடம் சென்று, சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார். இயேசு அவரை நோக்கி, "அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள்" என்றார்.

இயேசுவைத் தேடி வந்த அரச அலுவலர் யார் என்ற கேள்வி நம் மனதில் முதலில் எழுகிறது. இந்தக் கேள்விக்கு, நற்செய்தியாளர் யோவான் தெளிவான பதிலைத் தரவில்லை என்றே கூறவேண்டும். அரச அலுவலர், கப்பர்நாகும் ஊரிலிருந்து வந்திருந்தார் என்பதைத் தவிர, வேறு எந்த விவரத்தையும் யோவான் குறிப்பிடவில்லை. வந்தவர், ஏரோதின் அரண்மனையில் பணியாற்றியவராக இருக்கலாம் என்பது, பல விவிலிய விரிவுரையாளர்கள் கூறும் கருத்து. அவர் யூதரா, சமாரியரா, அல்லது, உரோமைய நாட்டவரா என்பதில் பல கருத்துக்கள் நிலவுகின்றன.
இதையொத்த ஒரு நிகழ்வை, நற்செய்தியாளர்கள், மத்தேயுவும், லூக்காவும், பதிவு செய்துள்ளனர். அங்கு, தன் பணியாளனுக்கு நலம் வேண்டி இயேசுவிடம் வந்தவர், 'நூற்றுவர் தலைவன்' (மத்தேயு 8:5; லூக்கா 7:2) என்று குறிப்பிட்டுள்ளதால், அவர் உரோமைய நாட்டவர் என்பது தெளிவாகப் புரிகிறது.

'நூற்றுவர் தலைவன்' வாழ்ந்துவந்த கப்பர்நாகும் ஊருக்கு இயேசு சென்றதாக மத்தேயுவும், லூக்காவும் குறிப்பிடுகின்றனர். ஆனால், யோவான், குறிப்பிட்டுள்ள நிகழ்வில், கப்பர்நாகும் ஊரிலிருந்து, அரச அலுவலர் இயேசுவைத் தேடி, கானா வந்தார் என்று கூறப்பட்டுள்ளது. கப்பர்நாகும் ஊருக்கும், கானாவுக்கும் இடையே உள்ள தூரம், குறைந்தது, 25 கி.மீ. என்பதையும், அந்த தூரத்தைக் கடந்து, அரச அலுவலர் இயேசுவைத் தேடி வந்தார் என்பதையும் உணரும்போது, அவர் இயேசுவின் மீது கொண்டிருந்த நம்பிக்கை தெளிவாகிறது. மேலும், தன் மகன் சாகும் நிலையில் இருந்ததால், அந்த அரச அலுவலர், தூரத்தைப் பற்றிய எண்ணங்கள் ஏதுமின்றி இயேசுவைத் தேடி வந்தார் என்பதை புரிந்துகொள்கிறோம்.
தங்கள் பிள்ளைகளின் நலனுக்காக, பெற்றோர் பல மருத்துவர்களை நாடிச் செல்கின்றனர். மருத்துவர்களால் ஒன்றும் செய்ய இயலாது என்ற நிலை உருவாகும்போது, கோவில்களையும், திருத்தலங்களையும், கடவுளையும், புனிதர்களையும் நாடி, பல நூறு மைல்கள் பயணம் செல்ல முன்வரும் கோடான கோடி பெற்றோரின் பிரதிநிதியாக, இந்த அரச அலுவலரை நாம் எண்ணிப் பார்க்கலாம்.

நம்பிக்கையோடு, அவசரத்தோடு அரச அலுவலர் தன் விண்ணப்பத்தை வெளியிட்டதும், இயேசு கூறும் சொற்கள், சங்கடத்தை உருவாக்குகின்றன: இயேசு அவரை நோக்கி, "அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள்" என்றார். (யோவான் 4:48)
இச்சொற்களை, 'அவரை நோக்கி' அதாவது, 'அரச அலுவலரை நோக்கி' இயேசு கூறியதாக யோவான் குறிப்பிட்டிருந்தாலும், 'நீங்கள் நம்பவே மாட்டீர்கள்' என்று இயேசு பயன்படுத்தியுள்ள சொற்கள், பன்மையில் ஒலிப்பதால், இந்தக் கூற்றை, இயேசு, சூழ இருந்த அனைவருக்கும் கூறினார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இயேசு, இந்தக் கூற்றில் பயன்படுத்தியுள்ள 'அடையாளங்கள்', 'அருஞ்செயல்கள்' என்ற இரு சொற்கள், யோவான் நற்செய்தியில் இடம்பெற்றுள்ள இரு வேறு நிகழ்வுகளை நினைவுக்குக் கொணர்கின்றன.
முதல் நிகழ்வு... எருசலேம் கோவிலை இயேசு தூய்மைப்படுத்தியபோது, யூதர்கள் அவரைப் பார்த்து, "இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?" என்று கேட்டார்கள். (யோவான் 2:18)
இரண்டாவது நிகழ்வு... இயேசு, 5000 பேருக்கு உணவு வழங்கியபின், அம்மக்கள் அவரைத் தேடி மீண்டும் சென்றபோது, "நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்." (யோவான் 6:26) என்று இயேசு அவர்களைக் கடிந்துகொள்வதைக் காண்கிறோம்.
அதே உரையாடலில், இன்னும் சிறிது நேரம் சென்று, மக்கள் இயேசுவின் மீது நம்பிக்கை வைப்பதற்கு அடையாளங்களும், அருஞ் செயல்களும் தேவை என்ற தொனியில் பேசுகின்றனர்.
இயேசு அவர்களைப் பார்த்து, "கடவுள் அனுப்பியவரை நம்பவதே கடவுளுக்கேற்ற செயல்;" என்றார். அவர்கள், "நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்?" என்றனர். (யோவான் 6:29-30)

அடையாளங்களும், அருஞ்செயல்களும் நம் நம்பிக்கையை வளர்ப்பது உண்மைதான். இருப்பினும், அவற்றில் மட்டுமே நம் முழு கவனத்தையும் செலுத்தி, அந்த அரும் அடையாளங்களை ஆற்றும் இறைவனை மறந்துவிட்டால், நம் நம்பிக்கை வலுவிழந்து போகும். மேலும், அரும் அடையாளங்கள் நிகழாதபோது, ஆண்டவனே இல்லை என்று மறுக்கக்கூடிய மனநிலையும் உருவாகும். இத்தகைய மனநிலையையே, "அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள்" என்ற சொற்களின் வழியே இயேசு சுட்டிக்காட்டுகிறார்.
மக்களின் நம்பிக்கையின்மையைக் குறித்து, இயேசு, கடினமான சொற்களில் பேசினாலும், அரச அலுவலர், மனம்தளராமல், இயேசுவிடம், தன் விண்ணப்பத்தை மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறார். அங்கு நிகழ்ந்தனவற்றை, யோவான், இவ்விதம் பதிவு செய்துள்ளார்:

யோவான் 4:49-54
அரச அலுவலர் இயேசுவிடம், "ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்" என்றார். இயேசு அவரிடம், "நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்" என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார்.
அவர் போய்க் கொண்டிருக்கும்போதே அவருடைய பணியாளர்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்து மகன் பிழைத்துக்கொண்டான் என்று கூறினார்கள். "எத்தனை மணிக்கு நோய் நீங்கியது?" என்று அவர் அவர்களிடம் வினவ, அவர்கள், "நேற்றுப் பிற்பகல் ஒருமணிக்கு காய்ச்சல் நீங்கியது" என்றார்கள். "உம் மகன் பிழைத்துக் கொள்வான்" என்று இயேசு அந்நேரத்தில்தான் கூறினார் என்பதை அவன் தந்தை நினைவுகூர்ந்தார். அவரும் அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே.

இந்தப் புதுமையின் இறுதியில், நற்செய்தியாளர் யோவான், "இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே" என்று தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டிருப்பது, பல விவிலிய ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தக் கூற்றில் பொதிந்துள்ள எண்ணங்களை நாம் அடுத்தத் தேடலில் புரிந்துகொள்ள முயல்வோம்.


No comments:

Post a Comment