Amazon Rainforest
பூமியில் புதுமை: ஓர் அறிமுகம்
நமது
பூமிக்கு இறைவன் வழங்கியுள்ள அரிய கருவூலங்களில் ஒன்றான அமேசான் காடுகளை
மையப்படுத்தி, நாம் துவங்கியுள்ள புத்தாண்டின் அக்டோபர் மாதத்தில், வத்திக்கானில்,
ஆயர்களின் சிறப்பு மாமன்றம் ஒன்று நடைபெறவுள்ளது. நாம் உயிர்வாழ உதவும்
சுவாசத்திற்கு அடிப்படையாக இருப்பது, நம் நுரையீரல். அதேபோல், இந்த உலகம் என்ற
உடலின் நுரையீரலாக விளங்கும் அமேசான் காடுகளை மையப்படுத்தி, இந்த மாமன்றம்
நடைபெறவுள்ளது.
"அமேசான்:
திருஅவைக்கும், ஒருங்கிணைந்த சூழல் இயலுக்கும் புதிய பாதைகள்"
(The Amazon: New
Paths for the Church and for an Integral Ecology”) என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் இந்த
மாமன்றத்தை மனதில் கொண்டு, நம் வானொலி நிகழ்ச்சியில் பூமியில் புதுமை என்ற புதியதொரு
முயற்சியை இன்று துவக்குகிறோம். சென்ற ஆண்டு, இளையோரை மையப்படுத்தி உலக ஆயர்களின்
மாமன்றம் நடைபெற்றதால், இளையோரை சிறப்பிக்கும் வகையில், இமயமாகும் இளமை என்ற
முதல் நிமிடத் தொடரை மேற்கொண்டோம். இவ்வாண்டு, இயற்கையை மையப்படுத்தி, நாம்
மேற்கொள்ளும் இப்புதிய முயற்சி வழியே, இயற்கை அன்னையிடமிருந்து பாடங்களைக்
கற்றுக்கொள்ள முயல்வோம்.
விலங்கிடம்
வினவுக; உமக்கு அது கற்றுக்கொடுக்கும்; வானத்துப் பறவை உமக்கு அறிவுறுத்தும். அல்லது மண்ணில் ஊர்வனவற்றிடம்
பேசுக; அவை உமக்குக் கற்பிக்கும். ஆழியின்
மீன்கள் உமக்கு அறிவிக்கும்... ஆண்டவர் கையில்தான் அனைத்துப் படைப்புகளின் உயிரும்
மனித இனத்தின் மூச்சும் உள்ளன. - யோபு 12, 7-10
விவிலியத்தில்,
யோபு நூல் கூறும் இந்த அறிவுரையைக் கேட்காமல், இறைவன் படைத்த இயற்கையைப் பாதுகாக்காமல்,
நம் சுயநலன்களுக்காக இயற்கை வளங்களை அழித்துவருகிறோம். இந்தப் போக்கினால் உருவாகக்கூடிய
ஆபத்துக்களை இயற்கை அன்னை அவ்வப்போது நமக்கு நினைவுறுத்தி வருகிறார். இருப்பினும், நாம் இயற்கையைப் பேணும் வழிகளை கற்றுக்கொள்ளாமல் வாழ்கிறோம். இயற்கை
நமக்குச் சொல்லித்தரும் பாடங்களைக் கற்றுக்கொள்ள, புதிய ஆண்டில்
இந்தப் புது முயற்சியை துவக்குகிறோம்.
நம்
பொதுவான இல்லமான பூமியைக் காப்பது அவசியம் என்பதை வலியுறுத்தி, 2015ம் ஆண்டு,
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட இறைவா உமக்கே புகழ் (Laudato Si) என்ற திருமடலில் கூறப்பட்டுள்ள
கருத்துக்களை, இப்பகுதியில், அவ்வப்போது, பகிர்ந்துகொள்ள விழைகிறோம்.
இத்திருமடலின் துவக்கத்தில் திருத்தந்தை கூறியுள்ள முதலிரு எண்ணங்கள் இதோ:
நமது
இல்லமான இந்தப் பூமி, நமது வாழ்வைப் பகிர்ந்துகொள்ளும்
சகோதரியைப்போலவும், நம்மை அரவணைக்கும் அன்னையைப் போலவும்
உள்ளதென்று அசிசி நகர் புனித பிரான்சிஸ், 'இறைவா
உமக்கே புகழ்' என்ற அழகிய பாடலில் கூறியுள்ளார்.
இந்த
சகோதரி, இப்போது நம்மை நோக்கி அழுகிறார்.
அவருக்கு இறைவன் வழங்கிய நன்மைகளை, பொறுப்பற்ற முறையில் நாம் தவறாகப்
பயன்படுத்தியதால், அவர் மீது நாம் சுமத்தியுள்ள தீமையை
எண்ணி, அவர் அழுகிறார். பாவத்தின் காரணமாக, நம் உள்ளங்களில் உறைந்திருக்கும் தீமை, நமது மண்ணில், நீரில், காற்றில், மற்றும், அனைத்து உயிர்களில் வெளிப்படுகிறது. மண்ணிலிருந்து வந்தவர்கள் என்பதை
நாம் மறந்துவிட்டோம். (இறைவா உமக்கே புகழ் - எண் 1,2)
Miracles
everywhere
ஒத்தமை நற்செய்தி புதுமைகள் – அறிமுகம்
கிரகோரியன்
நாள்காட்டியின்படி, ஆண்டின் முதல் மாதம், Janus என்ற உரோமையத் தெய்வத்தின் பெயரால், ஜ(ச)னவரி என்றழைக்கப்படுகிறது. Janus தெய்வத்திற்கு
இரு முகங்கள் உள்ளன. வயதான ஒரு முகம், பின்னோக்கிப் பார்ப்பதுபோலவும், இளமையான மற்றொரு முகம் முன்னோக்கிப் பார்ப்பது போலவும் இவ்விரு
முகங்களும் அமைந்திருக்கும். கடந்துவந்த ஆண்டைப் பின்னோக்கிப் பார்க்கவும், புலர்ந்திருக்கும் புத்தாண்டை முன்னோக்கிப் பார்க்கவும் Janus தெய்வம் நினைவுறுத்துவதால், ஆண்டின் முதல் மாதம், அந்தத் தெய்வத்தின் பெயரைத் தாங்கியுள்ளது.
முடிவுற்ற
2018ம் ஆண்டை, கடந்த சில நாட்களாக, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், நாளிதழ்களும், இணையத் தளங்களும் அலசிவருகின்றன. ஊடகங்கள் வெளியிட்டு வரும் பின்னோக்கிய
அலசல்கள், இவ்வுலகைக் குறித்த ஓர் அயர்வையும், சலிப்பையும் உருவாக்குகின்றன. 'சே, என்ன உலகம் இது' என்று நமக்குள் உருவாகும் சலிப்பு, நம் உள்ளங்களில் நம்பிக்கை வேர்களை அறுத்துவிடுகிறது.
ஆனால், ஊடகங்கள் நமக்கு முன் படைக்கும் சலிப்பூட்டும் உலகம், உண்மையான உலகம் அல்ல என்பதை நாம் உணரவேண்டும். ஒவ்வொரு நாளும்
100 நிகழ்வுகள் நடந்தால், அவற்றில் 10 நிகழ்வுகள் எதிர்மறையான, துயரமான நிகழ்வுகளாகவும்,
மீதி 90 நிகழ்வுகள், நேர்மறையான, நம்பிக்கை தரக்கூடிய நிகழ்வுகளாகவும்
உள்ளன என்பதே, நடைமுறை உண்மை. ஆனால், நல்ல நிகழ்வுகளைக் காட்டுவதோ, அவற்றைப்பற்றி பேசுவதோ, விறுவிறுப்பைத் தராது என்பதாலும், அவற்றால், இலாபம் இல்லை என்பதாலும், ஊடகங்கள், மீண்டும், மீண்டும் வன்முறைகளையும், குற்றங்களையும், விறுவிறுப்பாகப் படைக்கின்றன.
ஒவ்வொரு நாளும், காட்டப்பட்ட அந்நிகழ்வுகளின் தொகுப்பையே, ஆண்டின் இறுதியில், மீண்டும் ஒருமுறை திரட்டி, ஊடகங்கள்,
நம்முன் படைக்கின்றன, நம் நம்பிக்கையைச் சிதைக்கின்றன.
நம்பிக்கையைச்
சிதைக்கும் ஊடகங்களின் முயற்சிகளுக்கு ஒரு மாற்றாக, நல்லவர்களின் கூற்றுக்களும் செயல்பாடுகளும்
அவ்வப்போது, ஆங்காங்கே, எழுந்தவண்ணம் உள்ளன. எடுத்துக்காட்டாக, தமிழ் நாட்டை நிலைகுலையச் செய்த கஜாப் புயலிலும், கேரளாவைச் சூழ்ந்த வெள்ளத்திலும், ஆயிரமாயிரம் நல்ல மனிதர்கள், எவ்வித ஆர்ப்பாட்டமோ, விளம்பரமோ இன்றி, உயிர்களைக் காப்பாற்றியது,
உதவிகள் செய்தது, ஊடகங்களில் அதிகம் வெளிவராத உன்னத சிகரங்கள்.
அச்சிகரங்களைத் தொட விருப்பமில்லாத ஊடகங்கள்,
அரசியல் சகதியையும், சாக்கடையையும் மட்டுமே மீண்டும், மீண்டும்
காட்டின என்பதை நாம் அறிவோம். நல்லவேளை, அண்மையக் காலங்களில் பரவி, பெருகி வரும் சமூக வலைத்தளங்களின் உதவியுடன், நல்லவர்கள் செய்துவந்த
உன்னத செயல்களும் நம்மிடையே பகிர்ந்துகொள்ளப்பட்டன.
நல்லவர்களின்
செயல்பாடுகளை பகிர்ந்துகொள்ளும் சமூக வலைத்தளங்கள் வழியாகவும், இன்னும் பல
வழிகளிலும், நாம் ஒருவருக்கொருவர் அனுப்பும் புத்தாண்டு வாழ்த்துக்களில், புதுமை என்ற சொல், பல்வேறு வடிவங்களில் இடம்பெறுவதை
உணர்ந்திருப்போம். கடந்துவந்த ஆண்டை திரும்பிப் பார்க்கும்போதும், நம்மை வியப்பில், மலைப்பில், பிரமிப்பில் ஆழ்த்திய நிகழ்வுகளை, இப்போது, அசைபோட்டுக் கொண்டிருக்கிறோம்.
இந்நிகழ்வுகளை, அதிசயம், ஆச்சரியம், அற்புதம், அபாரம் என்ற சொற்களால் விவரிக்க
முயல்கிறோம். இத்தகைய மனநிலையில் இருக்கும் நாம்,
இன்று இயேசு ஆற்றிய புதுமைகளில் நம் தேடல் பயணத்தைத் தொடர்கிறோம்.
கடந்த
ஆண்டு முழுவதும் நாம் மேற்கொண்ட விவிலியத்தேடல்களில் யோவான் நற்செய்தியில் பதிவு
செய்யப்பட்டுள்ள ஏழு புதுமைகளைச் சிந்தித்தோம். இவ்வாண்டு, ஒத்தமை நற்செய்திகள் என்றழைக்கப்படும் மத்தேயு, மாற்கு,
மற்றும் லூக்கா நற்செய்திகளில் பதிவு செய்யப்பட்டுள்ள புதுமைகளில் நம் தேடல் பயணத்தைத்
துவக்கியுள்ளோம். சென்ற ஆண்டைப் போலவே, இவ்வாண்டும், புத்தாண்டு மலர்ந்துள்ள வேளையில், புதுமைகளைப்பற்றி தொடர்ந்து சிந்திப்பது, பொருத்தமாகத் தெரிகிறது.
குழந்தைப்
பருவத்தில், நம்மை வியப்பில், பிரமிப்பில் ஆழ்த்திய தருணங்கள் அதிகம் இருந்தன என்பதை அனைவரும்
ஏற்றுக்கொள்கிறோம். வயதில் வளர, வளர, நமது வியப்பும், பிரமிப்பும் குறைந்துபோகின்றன.
சலிப்பும், சந்தேகங்களும் நம்மைச் சூழ்ந்துகொள்கின்றன.
அதேபோல், மனித வரலாறு, குழந்தைப் பருவத்தில் இருந்தபோது, இயற்கையில் நிகழ்ந்தது அனைத்தும், மனிதர்களை வியப்பில் ஆழ்த்தின. இயற்கையின் சக்திகளாக வெளிப்பட்ட
இடி, மின்னல் போன்றவற்றையும், இயற்கையின் கொடைகளான மலை,
கடல் போன்றவற்றையும், தெய்வங்களாக வழிபட்டனர்,
நம் முன்னோர். ஆனால், அறிவியலில் நாம் வளர்ந்தபிறகு, நமது வியக்கும்
திறமை குறைந்துவிட்டதென்று தோன்றுகிறது.
19ம்
நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற தத்துவச் சிந்தனையாளர்களில் ஒருவர், Ralph Waldo
Emerson. அவர் வாழ்ந்து வந்த அமெரிக்க ஐக்கிய நாட்டு சமுதாயம், இயற்கையைவிட்டு விலகி வந்ததால், இறைவனையும்
விட்டு விலகிச் சென்றது என்பதை, தன் கட்டுரைகளில் வருத்தத்துடன்
குறிப்பிட்டு வந்தார், எமர்சன். 'இயற்கை' என்ற தலைப்பில், அவர் எழுதியிருந்த ஒரு கட்டுரையில், விண்மீன்களைப் பற்றி அழகானதோர் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்:
"வானில்
தோன்றும் விண்மீன்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும்
நம் கண்களுக்குத் தோன்றினால், நாம் அவற்றை நம்பிக்கையுடன் ஆராதிப்போம்.
அந்த விண்மீன்கள் வழியே, கடவுளின் நகரம் நமக்குக் காட்டப்பட்டது என்ற நினைவை, பத்திரமாகப் பாதுகாத்து, அடுத்தத்
தலைமுறைகளுக்கு, அந்நினைவை, ஒரு கருவூலமாக விட்டுச் செல்வோம். ஆனால், அழகின் தூதர்களான விண்மீன்கள், ஒவ்வொரு இரவும் தோன்றி, இவ்வுலகை
வெளிச்சமாக்குவதால், அவை விடுக்கும் வியத்தகு அழைப்பைக்
காணத் தவறுகிறோம்" என்று எமர்சன் அவர்கள் கூறியுள்ளார்.
ஆயிரம்
ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றியிருந்தால், நம்மை வியப்பில் ஆழ்த்தும் வலிமைபெற்ற
விண்மீன்கள், ஒவ்வோர் இரவும் தோன்றுவதால், அந்தப் புதுமையை நாம் இரசிப்பதில்லை. இரவில் தோன்றும் வானத்து நட்சத்திரங்களைப்
பார்த்து வியப்பதற்குப் பதில், நம் தொலைக்காட்சிப் பெட்டிகளில்
தோன்றும் நட்சத்திரங்களைப் பார்த்து வியக்கிறோம்.
ஒவ்வொரு
நாளும் தோன்றும் விண்மீன்களைப் போலவே, நம்மைச் சுற்றி ஒவ்வொரு நாளும்
பல நூறு புதுமைகள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. இவை அனைத்தையும் கண்டு, வியக்கும் பக்குவத்தை நாம் அடைந்தால், ஒவ்வொரு நாளும், நாம் முழந்தாள் படியிட்டு, நன்றி செபங்களை எழுப்புவோம்.
ஒவ்வோர்
ஆண்டும், டிசம்பர் 31, ஆண்டின் இறுதிநாளன்று, கத்தோலிக்கத் திருஅவையில், Te Deum என்றழைக்கப்படும் நன்றி வழிபாடுகள் நிகழ்ந்து வருகின்றன. டிசம்பர்
31, இத்திங்கள் மாலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்காப்
பேராலயத்தில், நன்றி வழிபாட்டை தலைமையேற்று நடத்திய வேளையில், இயேசு, வாழ்ந்த 30
ஆண்டுகள், அவரது அன்பு சக்தி அளவற்ற முறையில் வெளியானது என்று கூறினார்.
தன்
சொற்களால் மட்டுமல்ல, அவற்றைக் காட்டிலும், தன் செயல்களால் இயேசு வெளிப்படுத்திய
அன்பின் சக்தி, இன்றும் இவ்வுலகை வாழ வைத்து வருகிறது. குறிப்பாக, இயேசு ஆற்றிய
புதுமைகள், இன்றும், நம்மிடையே பல வடிவங்களில் தொடர்கின்றன.
நாம்
கடந்துவந்த ஆண்டில் நிகழ்ந்த புதுமைகளுக்கு நன்றியுணர்வும், புதிய ஆண்டில்
புதுமைகள் நிகழும் என்ற நம்பிக்கை உணர்வும் நிறைந்த மனதுடன், இயேசு ஆற்றிய
புதுமைகளாக, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய நற்செய்திகளில் காணப்படும் பொதுவான
புதுமைகளில் நம் தேடல் பயணத்தைத் தொடர்வோம்.
No comments:
Post a Comment