29 January, 2019

விவிலியத்தேடல் : ஒத்தமை நற்செய்தி புதுமை – தொழுநோயாளரைத் தொட்டு...

St Francis of Assisi by Albert Chevallier Tayler

பூமியில் புதுமை – படைப்பின் மீது பாசம் கொண்ட புனிதர்

சுற்றுச்சூழலை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடலை 2015ம் ஆண்டு வெளியிட்டார். படைப்பனைத்தும், இறைவனைப் புகழ்ந்து பாடுவதாக, அசிசி நகர் புனித பிரான்சிஸ் உருவாக்கிய ஒரு புகழ்பாடலில் காணப்படும் 'இறைவா உமக்கே புகழ்' என்ற சொற்களை, இத்திருமடலின் தலைப்பாக திருத்தந்தை தெரிவு செய்தார். இத்திருமடலின் அறிமுகப் பகுதியில், இப்புனிதரைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள ஒரு சில எண்ணங்களின் சுருக்கம் இதோ: (காண்க. எண்கள் - 10,11,12)
நான் உரோமை ஆயராகத் தெரிவுசெய்யப்பட்ட வேளையில், என் வழிகாட்டியாகவும், உந்துசக்தியாகவும் நான் தேர்ந்தெடுத்த புனிதரைப்பற்றி குறிப்பிடாமல் இந்த திருமடலை எழத விரும்பவில்லை. சுற்றுச்சூழல் என்ற துறையில் பயில்வோர், மற்றும் பணியாற்றுவோர் அனைவருக்கும் பாதுகாவலராக, அசிசி நகர் புனித பிரான்சிஸ் விளங்குகிறார். படைப்பின்மீது இப்புனிதர் ஆழ்ந்த காதல் கொண்டதால், கதிரவனையும், நிலவையும் காணும்போது, பாடல்கள் பாடினார்; ஏனைய படைப்புக்களையும் தன்னோடு இணைந்து பாடும்படி அழைத்தார். படைப்பை, அறிவுசார்ந்த கருத்தாகவும், பொருளாதார எண்ணிக்கையாகவும் காண்பதற்குப் பதில், தன் உடன்பிறப்பாகக் கண்டார், இப்புனிதர்.
இத்தகையதொரு வியப்புணர்வு இல்லாமல், இத்தகைய உடன்பிறந்த உணர்வு இல்லாமல், இயற்கையை நாம் அணுகும்போது, அதனை ஆள்பவர்களாக, நுகர்பவர்களாக, பரிவின்றி பறிப்பவர்களாக மாறிவிடுகிறோம். இதற்கு மாறாக, நம்மைச் சுற்றியுள்ள உயிரினங்கள் அனைத்தின்மீதும் அக்கறை கொண்டவர்களாக மாறினால், அவற்றைப் பாதுகாக்கும் வகையில், நம் பயன்பாடுகளைக் கட்டுப்படுத்துவோம்.
புனித பிரான்சிஸ், தன் வாழ்வில் பின்பற்றிய வறுமையும், கட்டுப்பாடும், பிறர் காண்பதற்கென அவர் உருவாக்கிக்கொண்ட காட்சிப் பொருள்கள் அல்ல; மாறாக, படைப்பின்மீது அவர் கொண்டிருந்த தீவிரமான அக்கறையும், ஏனைய உயிர்களை பொருள்களாக அல்லாமல், உறவுகளாகக் கருதும் மனநிலையும், அவரது வறுமையாக, கட்டுப்பாடான வாழ்வாக வெளிப்பட்டது.
துறவு இல்லத் தோட்டத்தின் ஒரு பகுதியில், மலர்களும், புதர்களும், இயற்கையாக வளர்வதற்கு விட்டுவிடும்படி, புனித பிரான்சிஸ், தன் சபையின் ஒவ்வொரு இல்லத்திலும் வாழும் துறவியரிடம் கேட்டுக்கொண்டார். மனித குறுக்கீடு ஏதுமின்றி, இயற்கையாகவே வளரும் அப்பகுதியைக் காண்போர், இறைவனை நோக்கி தங்கள் உள்ளத்தைத் திருப்பமுடியும் என்பது, புனிதரின் விருப்பமாக இருந்தது.
இவ்வுலகமும், படைப்பும், நமது தீர்வுகளுக்காகக் காத்திருக்கும் பிரச்சனைகள் அல்ல; மாறாக, அவை, மகிழ்ந்து, புகழ்ந்து, தியானிப்பதற்கென்று, இறைவன் வழங்கிய மறைப்பொருள்.

Jesus meets the leprosy patient

ஒத்தமை நற்செய்தி புதுமை தொழுநோயாளரைத் தொட்டு...

சனவரி 30, இப்புதனன்று, மகாத்மா காந்தி அவர்கள் கொலையுண்ட நாளை நினைவுகூருகிறோம். 1869ம் ஆண்டு, அக்டோபர் 2ம் தேதி, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் பிறந்ததால், இவ்வாண்டு, காந்தி பிறந்ததன் 150ம் ஆண்டு நிறைவை நாம் கொண்டாடி வருகிறோம்.
மகாத்மா காந்தி அவர்கள் மரணமடைந்த நாள், சாட்சிய மரணமடைந்தோரின் நாள் (Martyrs' Day) என்று இந்தியாவில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நினைவு நாளன்று, இந்தியக் குடியரசுத் தலைவர், பிரதமர், மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும், புது டில்லியில் அமைந்துள்ள காந்தி சமாதியில் மலர் வளையங்கள் வைத்து வணங்குவது வழக்கம்.
காந்தி அவர்களின் நினைவுநாளில், இத்தகையச் சடங்குகளைக் கடைபிடிப்பதோடு தங்கள் கடைமைகள் நிறைவுற்றதாக, இத்தலைவர்கள் திருப்தியடைந்துவிடாமல், அவர் விட்டுச்சென்ற உன்னத கொள்கைகளையும், எடுத்துக்காட்டான வாழ்வையும் பின்பற்றினால், இந்தியாவும், இவ்வுலகமும் மேன்மையுறும் என்பதில் ஐயமில்லை.

காந்தி அவர்கள் விட்டுச்சென்ற உன்னத எடுத்துக்காட்டுகளில் ஒன்று, தொழுநோயாளர் மீது, அவர் காட்டிய அக்கறை. எனவே, மகாத்மா காந்தி கொலையுண்ட சனவரி 30ம் தேதி, அல்லது, அதற்கு நெருக்கமாக வரும் ஞாயிறன்று, உலகத் தொழுநோயாளர் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இவ்வாண்டு, சனவரி 27, கடந்த ஞாயிறன்று, உலகத் தொழுநோயாளர் நாள், உலகெங்கும் கடைபிடிக்கப்பட்டது. இந்தியாவில், ஒவ்வோர் ஆண்டும், சனவரி 30, காந்தி கொலையுண்ட அதே நாளில், தொழுநோயாளர் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இத்தருணத்தில், தொழுநோயுற்ற ஒருவரை இயேசு குணமாக்கியப் புதுமையை, இன்றைய விவிலியத்தேடலில் நாம் சிந்திக்க வந்திருப்பது, இறைவன் நமக்கு வழங்கியுள்ள ஒரு வரம் என்றே கூறவேண்டும்.

மனித வரலாற்றில் நம்மைப் பாதித்து வந்துள்ள மிகப் பழமையான நோய், தொழுநோய். அன்று முதல், இன்று வரை, மனிதர்கள் மத்தியில் அச்சத்தையும், அருவருப்பையும் உருவாக்கிவரும் நோய் இது என்று சொன்னால் அது மிகையல்ல. இந்த நோய் கண்டவர்கள் அனுபவித்துள்ள, இன்றும் அனுபவித்துவரும் கொடுமைகள், ஏராளம்.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டோர், இஸ்ரயேல் மக்கள் மத்தியில், கண்டனத்தைப் பெற்றனர். சமுதாயத்திலிருந்து விலக்கிவைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரை, இயேசு குணமாக்கிய புதுமை, ஒத்தமை நற்செய்திகள் மூன்றிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாற்கு நற்செய்தியில், இப்புதுமையின் அறிமுக வரிகள் இவ்வாறு ஒலிக்கின்றன:
மாற்கு நற்செய்தி 1: 40-42
ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவுகொண்டு, தமது கையை நீட்டி, அவரைத் தொட்டு, அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

இப்போது நாம் கேட்ட இப்பகுதியை, ஆண்டவர் வழங்கும் நற்செய்தி என்று, உரத்தக் குரலில், அழுத்தந்திருத்தமாகக் கூறலாம். இப்பகுதியில் சொல்லப்பட்டுள்ள கருத்து மட்டுமல்ல, அக்கருத்தைச் சொல்ல பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களும் நற்செய்தியாக ஒலிக்கின்றன. தொழுநோயுற்ற ஒருவர் நலமடைகிறார் என்ற நிகழ்வு, நல்ல செய்திதான். சந்தேகமேயில்லை. ஆனால், அந்நிகழ்வைப் பதிவுசெய்யப் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள், அதைவிட, நல்ல செய்தி. அந்த சொற்களைப்பற்றி நாம் முதலில் சிந்திப்பது நல்லது.

இப்போது நாம் வாசித்த நற்செய்திப் பகுதியில், இயேசுவை அணுகிய தொழுநோயாளரைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள், மரியாதை கலந்த சொற்களாக ஒலிக்கின்றன. இந்த அழகிய மாற்றம், கடந்த சில ஆண்டுகளாக, நம் சமுதாயத்தில் உருவான மனமாற்றம்.

முப்பது ஆண்டுகளுக்கு முன், நாம் பயன்படுத்திய விவிலியத்தில், தொழுநோயாளருக்குச் சரியான மரியாதை வழங்கப்படவில்லை. 1986ம் ஆண்டு வெளியிடப்பட்ட நமது தமிழ் விவிலியப் பதிப்பில், இன்று நாம் வாசித்த நற்செய்தி பகுதி எவ்விதம் எழுதப்பட்டிருந்தது என்பதையும், 1995ம் ஆண்டு வெளியிடப்பட்டு, இப்போது நாம் பயன்படுத்தும் விவிலியப் பதிப்பில், இதே பகுதி, எவ்விதம் எழுதப்பட்டுள்ளது என்பதையும் இணைத்துப் பார்த்தால், நாம் அடைந்துள்ள மனமாற்றத்தைப் புரிந்து கொள்ளலாம்.
1986 விவிலியப் பதிப்பில் நாம் வாசிப்பது இதுதான்:
மாற்கு நற்செய்தி 1: 40-42
ஒரு நாள் தொழுநோயாளி ஒருவன் இயேசுவிடம் வந்து முழந்தாளிட்டு, “நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும் என்று வேண்டினான். இயேசு அவன்மீது மனமிரங்கி கையை நீட்டி அவனைத் தொட்டு, “விரும்புகிறேன், குணமாகு என்றார். உடனே தொழுநோய் அவனைவிட்டு நீங்க, அவன் குணமானான்.
தற்போது நாம் பயன்படுத்தும் விவிலியப் பதிப்பில், இதேப் பகுதியை நாம் இவ்வாறு வாசிக்கிறோம்:
மாற்கு நற்செய்தி 1: 40-42
ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவுகொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

இந்த இரு பகுதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களில் காணப்படும் வேறுபாடுகளை இந்நேரம் நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். பழைய விவிலியப் பதிப்பில் அவன், இவன் என்ற ஏகவசனச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புதிய விவிலியப் பதிப்பில், தொழுநோயாளியை அவர், இவர் என்று, மரியாதை கலந்த சொற்களால் குறிப்பிடுகிறோம். தொழுநோயாளியை ஒரு மனிதராகப் பாவித்து, அவருக்கு உரிய மரியாதையை வழங்குவது, நாம் அண்மையக் காலங்களில் பின்பற்றும் ஓர் அழகான பழக்கம்.

தொழுநோய், தொழுநோயாளி என்ற வார்த்தைகளைப் பற்றி கொஞ்சம் சிந்திப்போம். 1986க்கும் முந்தைய விவிலியப் பதிப்புக்களில் தொழுநோயாளி என்ற வார்த்தைக்குப் பதில் குஷ்டரோகி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளோம். ஆங்கிலத்திலும் அவர்களை leper என்று அழைத்துவந்தோம். நல்ல வேளையாக, இப்போது, ஆங்கிலத்திலும், தமிழிலிலும் சரியான வார்த்தைகளைப்  பயன்படுத்துகிறோம்.

குஷ்டரோகி என்றோ, leper என்றோ சொல்லும்போது, இந்த நோய் உடையவர்கள், ஏதோ, அந்த நோயாகவே மாறிவிட்டதைப் போல எண்ணி, அவர்களை மனிதப் பிறவிகளாகவே நாம் பார்க்கவில்லை. இன்றும் இந்நிலை தொடர்வது, வேதனைக்குரிய ஒரு போக்கு.

குஷ்டரோகி என்பதற்கும், தொழுநோயாளி என்பதற்கும் எத்தனையோ வேறுபாடுகள் உள்ளன. Leper என்பதற்கும் leprosy patient என்பதற்கும் எத்தனையோ வேறுபாடுகள் உள்ளன. வெறும் வார்த்தைகளில் காணப்படும் வேறுபாடுகள் அல்ல, மாறாக, அச்சொற்கள், நம் உள்ளங்களில் உருவாக்கும் உணர்வுகளிலும், வேறுபாடுகள் உள்ளன.

ஆங்கிலத்தில் பல சொற்களுக்கு நாம் மாற்று சொற்கள் கண்டுபிடித்திருக்கிறோம். Servant என்ற சொல்லுக்குப் பதில், domestic help, அல்லது domestic employee என்ற சொற்றொடர்களையும், handicapped  என்ற சொல்லுக்குப் பதில், physically challenged அல்லது diffrently abled என்ற சொற்றொடர்களையும் பயன்படுத்துகிறோம். இது என்ன வெறும் வார்த்தை விளையாட்டுக்கள்தானே என்று நம்மில் சிலர் நினைக்கலாம்.

நாம் பயன்படுத்தும் வார்த்தைகளின் வலிமையைப் பற்றி நாம் நன்கறிவோம். உள்ளத்தின் நிறைவிலிருந்துதான் வாய் பேசும் என்றும், தீயினால் உருவாகும் காயங்களை விட, வார்த்தைகளால் உருவாகும் காயங்கள் மிக ஆழமானவை, ஆறாதவை என்றும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம், உணர்ந்தும் இருக்கிறோம். வார்த்தைகளை மாற்றும்போது, எண்ணங்களும் மாறும் என்பது உண்மை.

ஒருவரைக் குஷ்டரோகி என்று சொல்வதற்குப் பதில், அவரை, தொழுநோயாளி என்று குறிப்பிடும்போதே, அவரைப் பற்றிய நமது எண்ணங்களும் உணர்வுகளும் வேறுபடும். குஷ்டரோகி என்று சொல்லும்போது உருவாகும் அருவருப்பு, தொழுநோயாளி என்று சொல்லும்போது உருவாவதில்லை. அவரைப்பற்றி, சிறிதளவாகிலும், உள்ளத்தில் மரியாதை பிறக்கும். நாம் வார்த்தைகளில் காட்டும் மரியாதை, வெறும் வாயளவு மந்திரங்களா, அல்லது, உள்ளத்திலிருந்து எழும் உண்மை உணர்வுகளா என்பதையும், நாம் அலசிப் பார்க்கலாம்.

அதேபோல், சாதிய மடமை புரையோடிப் போயிருக்கும் இந்திய சமுதாயத்தில் ஒரு சில குலங்களில், குடும்பங்களில், இடங்களில் பிறந்தவர்களுக்குப்  பிறப்பிலேயே  முத்திரை குத்திவிடுகிறோம். அதனால், அவர்களை பார்க்கும் விதம், அவர்களோடு பழகும் விதம் இவற்றில் வேறுபாடுகள் காட்டுவது, இந்திய சமுதாயத்தின் சாபக்கேடு. இந்தச் சமுதாயக் குற்றத்திற்கும் இந்நேரத்தில் இறைவனிடம் மன்னிப்பு வேண்டுவோம்.

தொழு நோயாளிக்கும் இயேசுவுக்கும் இடையே நிகழ்ந்த சிறு உரையாடல், அதன் பின், நோயுற்ற அவரை இயேசு குணமாக்கிய முறை ஆகியவை, பல பாடங்களைத் தாங்கி, நம்மை அடுத்த வாரம் வந்தடையும்.


No comments:

Post a Comment