Schoolchildren
in a climate protest in Hong Kong - March 15, 2019
பூமியில் புதுமை – உலகைக் காக்கப்
போராடிவரும் இளையோர்
மார்ச்
15, வெள்ளியன்று, உலகின் 125 நாடுகளில், பள்ளி, மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் தங்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து, சாலைகளுக்கு வந்தனர். 2000த்திற்கும் அதிகமான நகரங்களில் ஊர்வலங்களும், கூட்டங்களும் நடத்தினர். அவர்களது
ஒரே அறைகூவல் - பூமிக்கோளத்தைக் காப்பாற்றுங்கள்! மார்ச் 15ம் தேதியைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமைகளில் இளையோரின் போராட்டங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.
ஏப்ரல் 12, கடந்த வெள்ளியன்று, இங்கிலாந்தின் 50 நகரங்களில், இளையோரின் போராட்டம் தொடர்ந்தது.
உலகை
இன்று அச்சுறுத்திவரும் பெரும் ஆபத்து, பருவநிலை மாற்றம். இதைக் குறித்து பல
ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்தவரும், ‘புவி வெப்பமாதல்‘ (global warming) என்ற சொற்றொடரை அறிமுகப்படுத்தியவருமான முன்னோடி அறிவியலாளர், வாலஸ்
ஸ்மித் புரோக்கர் (Wallace Smith Broecker) அவர்கள், இவ்வாண்டு, பிப்ரவரி
18ம் தேதி, தன் 87வது வயதில், காலமானார். அவரைக் குறித்து, ஆதி வள்ளியப்பன்
அவர்கள், 'தி இந்து' நாளிதழில் பகிர்ந்துகொண்ட கருத்துக்களின்
சுருக்கம் இதோ:
அமெரிக்காவின்
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துவந்த புரோக்கர் அவர்கள், வளிமண்டலத்தில் அதிகரிக்கும் கரியமில வாயு, புவியை வெப்பப்படுத்தும்
என்பதை, 1975ம் ஆண்டிலேயே சரியாகக் கணித்து, ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். கரியமில
வாயு போன்றவை, வளிமண்டலத்தில் கூடிவருவதைத் தடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பருவநிலை அமைப்பு, ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு எதிர்பாராதவிதமாகத்
தாவி, பயங்கர அழிவை ஏற்படுத்தக்கூடும் என்று, அமெரிக்க நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களிடம்,
புரோக்கர் அவர்கள் விளக்கமளித்தார். பெட்ரோல், டீசல் போன்ற, புதைப்படிவ எரிபொருள்களை பேரளவு எரிப்பதன் விளைவாக,
நம் வளிமண்டலத்தில் கரியமில வாயுவை அதிகரிப்பது, ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்
என்று புரோக்கர் அவர்கள் எச்சரித்தார்.
அண்மையில்
இளையோர் மேற்கொண்ட போராட்டங்களில் வெளியான ஒரு முக்கிய எச்சரிக்கை, புதைப்படிவ எரிபொருள்களின் பயன்பாட்டைக் குறையுங்கள் என்பது! பருவநிலை
மாற்றம் குறித்து, இளையோரும், வளர் இளம் பருவத்தினரும் உணர்ந்துள்ள அளவுக்கு, அரசியல் தலைவர்கள் உணராமல் இருப்பது, வேதனை தரும் உண்மை! (தி இந்து)
A man was
there whose right hand was withered. (Lk. 6:6)
ஒத்தமை நற்செய்தி – உலர்ந்த கரம் உயிர்பெற... 1
ஒத்தமை
நற்செய்திகள் என்றழைக்கப்படும் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ள 12
பொதுவான புதுமைகளில், 4வது புதுமையில் இன்று நம் தேடல் பயணம்
துவங்குகிறது. கை சூம்பிய ஒருவருக்கு இயேசு குணமளிக்கும் இப்புதுமைக்கு, (மத். 12:9-14;
மாற். 3:1-6; லூக். 6:6-11) மூன்று நற்செய்திகளிலும் வழங்கப்பட்டுள்ள
தலைப்பு, முதலில் நம் கவனத்தை ஈர்க்கிறது. "கை
சூம்பியவர் ஓய்வுநாளில் நலமடைதல்" என்று, இப்புதுமைக்கு, தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.
கை சூம்பியவர் நலமடைந்ததை மட்டும் குறிப்பிடாமல், அவர், ஓய்வுநாளில் நலமடைந்தார் என்பதை, இத்தலைப்பு, தெளிவாக, திட்டவட்டமாக அறிவிக்கிறது.
அத்துடன், இப்புதுமைக்கு முந்தையப் பகுதியில், மூன்று நற்செய்திகளிலும், ஓய்வுநாளுடன் தொடர்புள்ள மற்றொரு நிகழ்வு
கூறப்பட்டுள்ளது. "ஓய்வுநாளில் கதிர் கொய்தல்" (மத். 12:1-8; மாற். 2:23-28; லூக். 6:1-5) என்ற தலைப்புடன் பதிவு செய்யப்பட்டுள்ள அந்நிகழ்வில், ஒய்வு நாளன்று, இயேசுவின் சீடர்கள், வயல் வழியே நடந்து சென்றபோது, கதிர்களைக்
கொய்து சாப்பிட்டதும், அதைக் குறித்து இயேசுவுக்கும்,
பரிசேயருக்குமிடையே எழுந்த விவாதங்களும் கூறப்பட்டுள்ளன.
எனவே, கை சூம்பியவர் நலமடைந்த புதுமையைக் குறித்து நாம் சிந்திக்கும்
வேளையில், ஒய்வுநாளை இயேசு ஏன் மீறினார் என்பதைக்
குறித்தும் நாம் தேடல்களை மேற்கொள்ளவேண்டும்.
முதலில், இப்புதுமையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடியப் பாடங்களைப்
பயில முயல்வோம். அக்காலத்தில் இயேசு மீண்டும் தொழுகைக்கூடத்திற்குள் சென்றார்.
அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். (மாற்கு 3:1) என்று, இப்புதுமையை,
நற்செய்தியாளர் மாற்கு அறிமுகம் செய்துள்ளார். இப்புதுமையின் இரு முக்கிய நாயகர்களான
இயேசுவும், கை சூம்பியவரும் இங்கு நமக்கு
அறிமுகமாகின்றனர்.
"இயேசு
மீண்டும் தொழுகைக்கூடத்திற்குள் சென்றார்" என்ற சொற்களின் வழியே, இயேசு, ஓய்வுநாள்களில் தொழுகைக்கூடத்திற்குச்
செல்லும் பழக்கத்தைக் கொண்டிருந்தார் என்பதை, நற்செய்தியாளர் சுட்டிக்காட்டுகிறார்.
மாற்கு நற்செய்தி முதல் பிரிவிலும், அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள்.
ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார் (மாற்கு 1:21) என்ற சொற்களின் வழியே, இயேசு
பின்பற்றிய இப்பழக்கம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இயேசு
தன் பணிவாழ்வின் துவக்கத்தை நாசரேத்தின் தொழுகைக்கூடத்தில் ஆரம்பித்தார் என்பதை, லூக்கா நற்செய்தியில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: இயேசு... தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச்
சென்று வாசிக்க எழுந்தார். (லூக்கா 4:16). 'வழக்கத்தின்படி' என்ற சொல்லின் வழியே, தொழுகைக்கூடத்திற்குச் செல்வது இயேசுவின் வழக்கம் என்பதை லூக்காவும்
தெளிவாக்கியுள்ளார். அந்நிகழ்வுக்குப் பின்னர்,
மீண்டும், நற்செய்தியாளர்
லூக்கா, இப்புதுமையின் அறிமுக வரிகளில், மற்றோர் ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்று கற்பித்தார்
(லூக். 6:6) என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, ஓய்வுநாள்களில் தொழுகைக்கூடம் செல்வதும், அங்கு கற்பிப்பதும், இயேசுவின் வழக்கம் என்பதை நற்செய்தியாளர்கள் நமக்கு பலமுறை நினைவுறுத்துகின்றனர்.
அடுத்ததாக, நம் சிந்தனைகளை, இப்புதுமையின் மற்றொரு நாயகன் மீது
திருப்புவோம். "அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார்" (மத்.
12:10; மாற். 3:1) என்ற சொற்களுடன், நற்செய்தியாளர்கள் மத்தேயுவும், மாற்கும்
இவரை அறிமுகம் செய்துள்ளனர். மருத்துவத் துறையில் அறிவு பெற்றிருந்த நற்செய்தியாளர்
லூக்கா, இவரைப்பற்றிக் கூறும்போது, "அங்கே வலக்கை சூம்பியவர் ஒருவர் இருந்தார்"
(லூக்.
6:6) என்று அவரது
'வலக்கை'யைப் பற்றி சிறப்பாகக் குறிப்பிட்டுக்
காட்டுகிறார்.
அவரது
'வலக்கை'யில் இக்குறை இருந்ததென, நற்செய்தியாளர்
லூக்கா, சிறப்பாகக் குறிப்பிட்டிருப்பதை வைத்து, ஒரு சில
விரிவுரையாளர்கள், கூடுதலான சில அர்த்தங்களைக் காண்கின்றனர்.
யூதர்கள் நடுவே, 'வலக்கை' என்பது, வலிமை, திறமை, தூய்மை என்ற பல பொருள்களை உணர்த்தியது. எடுத்துக்காட்டாக:
ஆண்டவரே, உம் வலக்கை வலிமையில் மாண்புற்றது; ஆண்டவரே, உமது வலக்கை பகைவரைச் சிதறடிக்கின்றது. (விடுதலைப் பயணம் 15:6)
அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்; கலங்காதே, நான் உன் கடவுள், நான் உனக்கு வலிமை அளிப்பேன்; உதவி செய்வேன்; என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன். (எசாயா 41:10) என்று நாம் விவிலியத்தின் பல இடங்களில்
வாசிக்கிறோம். வழிபாடுகளிலும், மற்றவரை வாழ்த்துவதற்கும் ஆசீர்
வழங்குவதற்கும், வலக்கை முக்கிய பங்காற்றியது. எனவே, 'வலக்கை'யை இழப்பதென்பது மிகவும் வேதனையான
ஒரு சூழல்.
வலக்கை
சூம்பியவர்
ஏன் தொழுகைக்கூடத்திற்கு வந்திருந்தார் என்ற கேள்விக்கு, பல்வேறு விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. திருஅவையால் அதிகாரப்பூர்வமாக
ஏற்றுக்கொள்ளப்படாத 'எபிரேயர்கள் எழுதிய நற்செய்தி' (The Gospel
according to the Hebrews) என்ற நூலில், இப்புதுமையைக் குறித்து கூறப்பட்டுள்ள கூடுதல் விவரங்களை, விவிலிய அறிஞர், புனித ஜெரோம் தன் விரிவுரையில்
குறிப்பிட்டுள்ளார். மத்தேயு 12ம் பிரிவில் கூறப்பட்டுள்ள இப்புதுமையைக் குறித்து,
தன் விரிவுரையை வழங்கியுள்ள புனித ஜெரோம், 'எபிரேயர்கள் எழுதிய நற்செய்தி'யில், இந்நிகழ்வைக்குறித்து வழங்கப்பட்டுள்ள
விவரங்களை திரட்டித் தந்துள்ளார்.
இப்புதுமையின்
நாயகன், கற்களைக் கொண்டு கட்டடம் எழுப்பும் கலைஞர்
என்றும், அவர் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் ஏற்பட்ட ஒரு விபத்தால், இவரது வலக்கை செயலிழந்து,
சூம்பிப்போய்விட்டது
என்றும், கூறப்பட்டுள்ளது. அவர், அன்று, தொழுகைக்கூடத்தில் இயேசுவைச் சந்தித்த வேளையில், அவரிடம், "நான் என் கரங்களால் கட்டடம் எழுப்பி
வாழ்ந்தவன். இப்போது என் கரம் செயலற்றுப் போனது. இதைக் கொண்டு நான் பிச்சையெடுத்து
வாழ்வதைவிட, தயவுசெய்து என்னைக் கொன்றுவிடுங்கள்"
என்று, விண்ணப்பித்ததாக, 'எபிரேயர்கள் எழுதிய நற்செய்தி'யில் பதிவு
செய்யப்பட்டுள்ளது. வலக்கை சூம்பியவரின் வாழ்வை நிறைத்திருந்த வேதனை, இந்த நற்செய்தியில் வெளிச்சமிடப்பட்டுள்ளது.
மறையுரையாளரும், எழுத்தாளருமான மார்க் ஆர்னால்டு (Mark J.Arnold) அவர்கள், இப்புதுமையின் நாயகனைக் குறித்து
கூறியுள்ள எண்ணங்கள், வேறுபட்டதொரு கண்ணோட்டத்தில் நம்மைச் சிந்திக்கத்
தூண்டுகின்றன. ஆர்னால்டு அவர்களின் மகன், 'ஆட்டிசம்' (Autism) என்ற மாற்றுத்திறனுடன் பிறந்ததையடுத்து, ஆர்னால்டு அவர்கள், மாற்றுத்திறனும், சிறப்புத் தேவைகளும் (special needs) உள்ளவர்களைக் காணும் தன் கண்ணோட்டம்
மாறியது என்று குறிப்பிட்டுள்ளார். தேவையில் இருக்கும் பலர், இயேசுவை அணுகிவந்து, அவரிடம் நன்மைகள் அடைந்த நிகழ்வுகளை, வேறுபட்ட ஒரு கண்ணோட்டத்துடன், ஆர்னால்டு
அவர்கள், தன் வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
"கை சூம்பியவர் நமக்குச் சொல்லித் தருபவை" என்ற தலைப்பில், ஆர்னால்டு அவர்கள் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து சில எண்ணங்கள்
இதோ:
சூம்பியக்
கையுடையவர் தொழுகைக் கூடத்தில் ஏன் இருந்தார் என்ற கேள்வியை எழுப்பும் ஆர்னால்டு அவர்கள், இயேசுவை மடக்குவதற்கு, இந்த நோயாளியை பரிசேயர்கள் அங்கு
அழைத்து வந்திருக்கலாம் என்பதும், தன் குறையை எடுத்துச் சொல்லி, குணம் பெற அவர் வந்திருக்கலாம் என்பதும், இக்கேள்விக்கு வழங்கப்படும்
வழக்கமான இரு பதில்கள் என்று கூறியுள்ளார்.
ஆனால், மற்றொரு கோணத்தில் நாம் சிந்திக்கவேண்டும் என்று கட்டுரை ஆசிரியர்
அழைப்பு விடுக்கிறார். கை சூம்பியவர், இயேசுவின் போதனைகளைக் கேட்க அங்கு
வந்திருந்தார் என்று எண்ணிப்பார்க்க, ஆர்னால்டு அவர்கள் அழைப்பு விடுக்கிறார்.
இவ்வாறு சொல்வது, பலருக்கு வியப்பாக இருக்கலாம். அங்கக் குறையுள்ளவர்கள்
எல்லாருமே, ஆண்டவனைத் தேடிவருவதற்கு ஒரே காரணம், தங்கள் குறைகளைத் தீர்ப்பது மட்டுமே என்ற குறுகியக் கண்ணோட்டத்திலேயே
நாம் எப்போதும் சிந்திப்பதால், அவர்கள், இயேசுவின் போதனைகளைக்
கேட்க வந்திருக்கலாம் என்று சிந்திப்பது வியப்பைத் தருகிறது. தங்கள் குறைகளை மையப்படுத்தாமல், உண்மையான ஆர்வத்தோடு, அவர்கள், இயேசுவின் போதனைகளைக் கேட்க வந்திருந்தனர்
என்று எண்ணிப்பார்க்கும்போது, அவர்களைப் பற்றிய நம் மதிப்பு கூடுகிறது
என்று ஆர்னால்டு அவர்கள் கூறியுள்ளார்.
மாறுபட்ட
இக்கண்ணோட்டத்தை ஆழப்படுத்த, நாம் கடந்தவாரம் வரை சிந்தித்து
வந்த முடக்குவாதமுற்றவரையும் ஓர் எடுத்துக்காட்டாக நம் முன் வைக்கிறார், ஆர்னால்டு.
முடக்குவாதமுற்ற தங்கள் நண்பரைத் தூக்கிவந்த நால்வரும், இயேசுவின் போதனைகளை ஏற்கனவே கேட்டவர்களாக இருக்கலாம், அல்லது, அவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கலாம்.
இயேசு கூறுவதை தாங்கள் மட்டுமல்லாமல், படுக்கையில் இருக்கும் தங்கள் நண்பனும்
கேட்கவேண்டும் என்ற ஆவலில், அவரை, படுக்கையோடு சுமந்து வந்திருந்தனர் நண்பர்கள். வந்த
இடத்தில், அவர்கள், இயேசுவை அணுக முடியாமல் கூட்டம் சூழ்ந்திருந்ததால், அவர்கள், வீட்டின் கூரையைப் பிரித்து, தங்கள் நண்பனை இயேசுவுக்கு முன் கொண்டு சென்றனர்.
இப்புதுமையில்,
தங்கள் நண்பனைக் குணமாக்க வேண்டும் என்று, நண்பர்களோ, தான் குணம் பெறவேண்டும் என்று, முடக்குவாதமுற்றவரோ ஒரு வார்த்தையும்
சொல்லவில்லை என்பதை ஆர்னால்டு அவர்கள் வெளிச்சமிட்டுக் காட்டுகிறார். அந்த ஐவரும்,
இயேசுவின் போதனைகளைக் கேட்கவே அவரை அணுகிவந்தனர் என்று எண்ணிப்பார்க்கும் வேளையில், அதை நம்மால் எளிதில் ஏற்றுக்கொள்ள இயலவில்லை எனினும், இக்கோணத்தில் சிந்திக்கும்போது, நோயுற்றோரைக்
குறித்து நம் மதிப்பு உயர்வதைக் காணலாம் என்று ஆர்னால்டு அவர்கள், தன் கட்டுரையில்
குறிப்பிட்டுள்ளார்.
இப்புதுமையின்
அறிமுக வரிகளைத் தொடர்ந்து, அத்தொழுகைக் கூடத்தில் இயேசுவுக்கும், பரிசேயருக்கும் நிகழ்ந்த மோதலை, நாம் அடுத்தத்
தேடலில் சிந்திப்போம்.
No comments:
Post a Comment