24 April, 2019

விவிலியத்தேடல் : ஒத்தமை நற்செய்தி – உலர்ந்த கரம் உயிர்பெற... 2


Earth Day 2019 – Youth protest

பூமியில் புதுமை – பூமிக்கோள நாளும், இளையோரும்

1970ம் ஆண்டு, ஏப்ரல் 22ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டின் பல நகரங்களில் நடத்தப்பட்ட போராட்ட ஊர்வலங்களில், 2 கோடிக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர், இளையோர். உலகம் தொழில்மயமாக்கப்பட்டபின், 150 ஆண்டுகளாக, பூமிக்கோளத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் நிகழ்ந்துவரும் சீரழிவுகளை எதிர்த்து இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்களை நினைவுகூரும்வண்ணம், ஒவ்வோர் ஆண்டும், ஏப்ரல் 22ம் தேதி, ‘பூமிக்கோள நாள் (Earth Day) சிறப்பிக்கப்படுகிறது.
2019ம் ஆண்டு ஏப்ரல் 22, இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்ட பூமிக்கோள நாளுக்கு, "நமது உயிரினங்களைக் காப்பாற்றுக" (Protect Our Species) என்ற மையக்கருத்து தெரிவு செய்யப்பட்டிருந்தது. 2018ம் ஆண்டு, "ஞெகிழி மாசுக்கேட்டை முடிவுக்குக் கொணர்க" (End Plastic Pollution) என்பது பூமிக்கோள நாளின் மையக்கருத்தாக அமைந்தது. 2020ம் ஆண்டு, 'பூமிக்கோள நாள்' ஆரம்பமானதன் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாட, இளையோரை ஈடுபடுத்தும் முயற்சிகள் துவங்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் மீதும், பூமிக்கோளத்தின் மீதும் இளையோர் காட்டும் அக்கறை ஆண்மையக்காலங்களில் தெளிவாகத் தெரிகின்றது. 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சுவீடன் நாட்டைச் சேர்ந்த, 15 வயது நிறைந்த இளம்பெண் கிரேட்டா துன்பர்க் (Greta Thunberg) அவர்கள், Skolstrejk för klimatet ('School strike for the climate') 'காலநிலைக்காக பள்ளி புறக்கணிப்பு' என்ற சொற்கள் எழுதப்பட்ட அறிவிப்பு பலகையுடன், சுவீடன் பாராளுமன்றத்திற்கு முன் அமர்ந்தார். "எங்களுடைய எதிர்காலத்தின் மீது அரசியல்வாதிகள் பெருமளவுக் கழிவுகளை வீசுகின்றனர்" என்ற கருத்தை, இளம்பெண் துன்பர்க் அவர்கள் செய்தியாளர்களிடம் ஆணித்தரமாகக் கூறினார்.
இவரைத் தொடர்ந்து, பல நாடுகளில், இலட்சக்கணக்கான மாணவ, மாணவியர், வெள்ளிக்கிழமைகளில், “Fridays for Future’’, அதாவது, "வருங்காலத்திற்காக வெள்ளிக்கிழமைகள்" என்ற விருதுவாக்குடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏப்ரல் 17, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய புதன் பொது மறைக்கல்வி உரையில் கலந்துகொள்ள, புனித பேதுரு வளாகத்திற்கு வந்திருந்த இளம்பெண் துன்பர்க் அவர்கள், மறைக்கல்வி உரைக்குப்பின் திருத்தந்தையைச் சந்தித்தபோது, "திருத்தந்தையே, சுற்றுச்சூழல் மீது நீங்கள் காட்டிவரும் அக்கறை, எங்களுக்கு நம்பிக்கை தருகிறது" என்று கூறினார். அவரிடம் திருத்தந்தை, "தொடர்ந்து போராடுங்கள்" என்று கூறினார்.
பூமிக்கோளத்தின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் சீரழிவு ஆகியவற்றைக் குறித்து அக்கறையேதும் இல்லாமல் அரசியல் தலைவர்கள் நடந்துகொள்ளும் கேவலத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் இளையோர், பூமிக்கோளத்தைக் காப்பாற்றுவார்கள் என்று நம்புவோம்.
(ஆதாரம் - https://www.earthday.org/earthday/ வலைத்தளம்)

Jesus cures the man with withered hand

ஒத்தமை நற்செய்தி உலர்ந்த கரம் உயிர்பெற... 2

தொழுகைக்கூடம் ஒன்றில், ஓய்வுநாளன்று, இயேசு ஆற்றிய ஒரு புதுமையை சென்ற விவிலியத் தேடலில் சிந்திக்க ஆரம்பித்தோம். ஓய்வுநாள், தொழுகைக்கூடம் என்ற சொற்கள், நம்மை, இலங்கையை நோக்கி அழைத்துச் செல்கின்றன. இலங்கையில், ஏப்ரல் 21, உயிர்ப்பு ஞாயிறன்று காலையில், புனித அந்தோனியார், புனித செபஸ்தியார் மற்றும் சீயோன் ஆலயங்களிலும் ஒருசில நட்சத்திர விடுதிகளிலும் நடைபெற்ற குண்டு வெடிப்புக்களில், இதுவரை, 310 பேர் இறந்துள்ளனர், இன்னும் பலர் படுகாயமுற்று, உயிருக்குப் போராடி வருகின்றனர். இறந்தோர் அனைவரும் இறைவனின் நிறையமதி பெறவும், உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் ஆறுதல் அடையவும், காயமடைந்தோர் நலமடையவும் இறைவனை இறைஞ்சி, நம் தேடலைத் துவங்குவோம்.

கை சூம்பிய ஒருவரை இயேசு குணப்படுத்தியப் புதுமையில் நம் தேடல் பயணத்தை சென்ற வாரம் ஆரம்பித்த வேளையில், இப்புதுமையின் இரு முக்கிய நாயகர்களான இயேசுவையும், கை சூம்பிய மனிதரையும் அறிமுகம் செய்தோம். இந்த அறிமுக வரிகளைத் தொடர்ந்து, நற்செய்தியாளர் மாற்கு, அந்தத் தொழுகைக்கூடத்தில் நிலவிய இறுக்கமானதொருச் சூழலை பின்வருமாறு சித்திரிக்கிறார்: "சிலர் இயேசுமீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர்." (மாற்கு 3:2). நற்செய்தியாளர் மாற்கு, 'சிலர்' என்ற சொல்லால் குறிப்பிட்டுள்ளவர்களை, நற்செய்தியாளர் லூக்கா, "மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருந்தனர்" (லூக்கா 6:7) என்று, இன்னும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

எந்த ஒரு வழிபாட்டுத்தலத்திற்கும் மக்கள் செல்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சில, ஒன்றுக்கொன்று எதிரெதிர் துருவமாகவும் அமைகின்றன. எடுத்துக்காட்டாக, ஏப்ரல் 21, ஞாயிறன்று காலை, இலங்கையில் ஆலயங்களுக்குச் சென்றவர்கள், உயிர்ப்புப் பெருவிழாவை இறைவனின் சன்னதியில் கொண்டாடச் சென்றனர். சாவுக்கு இறுதி வெற்றி இல்லை என்ற உண்மையை உலகறியப் பறைசாற்ற உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைச் சந்திக்கச் சென்றனர். வாழ்வைக் கொண்டாட மக்கள் சென்ற அதே ஆலயங்களுக்கு, வெடிகுண்டுகளின் வடிவில், சாவைச் சுமந்து சென்ற ஒரு சிலரும் இருந்தனர். வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வோர் எதிரெதிர் நோக்கங்களுடன் செல்வதை, இலங்கைத் தாக்குதல்கள் நமக்கு உணர்த்துகின்றன.

நாம் தேடலை மேற்கொண்டுள்ள இப்புதுமையில், தொழுகைக்கூடத்தில் கூடியிருந்தோர் கொண்டிருந்த நோக்கங்களை அலசிப்பார்ப்பது பயனுள்ள முயற்சியாக இருக்கும். தொழுகைக்கூடத்திற்கு இயேசு சென்றதன் நோக்கம்? மக்களுக்கு நல்ல செய்தியைச் சொல்ல. மக்கள் அங்கு கூடிவந்ததன் நோக்கம்? இயேசுவின் போதனைகளைக் கேட்க. அதிலும் சிறப்பாக, இயேசுவின் போதனைகள், மற்ற மறைநூல் அறிஞர்கள் போதிப்பதுபோல் இல்லாமல், நன்றாக உள்ளன என்ற செய்தி பரவி வந்ததால், அவரது போதனையைக் கேட்க மக்கள் இன்னும் ஆர்வமாக வந்திருந்தனர். (காண்க - மாற்கு 1:22, மத்தேயு 7:28-29)

அதே தொழுகைக்கூடத்தில், வலக்கை சூம்பிய ஒருவரும் இருந்தார். அவர் ஏன் அங்கு வந்திருந்தார் என்ற கேள்வி எழும்போது, அவர், இயேசுவிடம் தன் குறையைச் சொல்லி ஏதாவது ஒரு தீர்வு காணலாம் என்று நம்பிக்கையோடு வந்திருக்கக் கூடும் என்பதே, நாம் எண்ணிப்பார்க்கும் முதல் காரணம்.
ஆனால், சென்றவாரம் நாம் சிந்தித்த ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தை மீண்டும் நினைவுகூர்வது நல்லது. மறையுரையாளரும், எழுத்தாளருமான மார்க் ஆர்னால்டு (Mark J.Arnold) அவர்கள், "கை சூம்பியவர் நமக்குச் சொல்லித் தருபவை" என்ற தலைப்பில், எழுதியுள்ள கட்டுரையில் கூறும் மாறுபட்ட கண்ணோட்டம், கை சூம்பியவரைப் பற்றி நல்ல எண்ணங்களை விதைக்கின்றது.

கை சூம்பியவர், இயேசுவின் போதனைகளைக் கேட்க அங்கு வந்திருந்தார் என்று எண்ணிப்பார்க்க, ஆர்னால்டு அவர்கள் அழைப்பு விடுக்கிறார். அங்கக் குறையுள்ளவர்கள் எல்லாருமே, ஆண்டவனைத் தேடிவருவதற்கு ஒரே காரணம், தங்கள் குறைகளைத் தீர்ப்பது மட்டுமே என்ற குறுகியக் கண்ணோட்டத்திலேயே நாம் எப்போதும் சிந்திப்பதால், கை சூம்பியவர், இயேசுவின் போதனைகளைக் கேட்க வந்திருக்கலாம் என்று சிந்திப்பது, வியப்பைத் தருகிறது. அங்கக் குறையுள்ளவர்கள், தங்கள் குறைகளை மையப்படுத்தாமல், உண்மையான ஆர்வத்தோடு, இயேசுவின் போதனைகளைக் கேட்க வந்திருந்தனர் என்று எண்ணிப்பார்க்கும்போது, அவர்களைப் பற்றிய நம் மதிப்பு கூடுகிறது என்று ஆர்னால்டு அவர்கள் கூறியுள்ளார்.

இறுதியாக, அந்தத் தொழுகைக்கூடத்தில் இருந்த மறைநூல் அறிஞர், மற்றும், பரிசேயர் பக்கம் நம் கவனம் திரும்புகிறது. அவர்கள் அங்கு வந்ததன் நோக்கம்? இயேசுவின் போதனைகளைக் கேட்கவா? தொழுகை செய்யவா? அல்லது, மக்களை, தொழுகையில் வழிநடத்தவா? ஒருவேளை இந்த நோக்கங்களுடன் அவர்கள் அங்கு வந்திருக்கலாம். ஆனால், இயேசுவையும், அங்கிருந்த கை சூம்பிய மனிதரையும் அந்த தொழுகைக்கூடத்தில் பார்த்ததும், அவர்கள் வந்த காரணம், குறிக்கோள் எல்லாம் மாறின. இதைத்தான், நற்செய்தியாளர் லூக்கா, "மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருந்தனர்" (லூக்கா 6:7) என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

நோயுற்ற ஒரு மனிதரையும், இயேசுவையும் ஒரே இடத்தில் கண்டதும், மறைநூல் அறிஞரும், பரிசேயரும், அங்கு என்ன நடக்கப்போகிறது என்பதை முடிவு செய்துவிட்டனர். இயேசு அவரைக் குணமாக்குவார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ஒரு கோணத்தில் சிந்திக்கும்போது, அவர்கள் இயேசுவின் மீது கொண்டிருந்த நம்பிக்கை, நாம் இறைவன் மீது கொள்ளும் நம்பிக்கைக்கு சவாலாக அமைகிறது. இயேசு ஆற்றல் மிகுந்தவர், துன்பங்களைக் கண்டதும் அவற்றைத் தீர்ப்பவர் என்ற எண்ணங்கள் அவர்கள் உள்ளங்களில் ஆணித்தரமாகப் பதிந்திருந்தன. ஆனால், இயேசுவைக் குறித்து அவர்கள் கொண்டிருந்த இந்த நேர்மறையான எண்ணங்கள், அவர்களை இயேசுவிடம் அழைத்துச் செல்லவில்லை என்பது, வருத்தத்திற்குரிய உண்மை.
இயேசு நன்மைகள் செய்யும் ஆற்றல் கொண்டவர் என்பதை, தீய ஆவிகளும் அறிந்திருந்தன என்பதை நாம் நற்செய்தியில் காண்கிறோம். ஆனால், தீய ஆவிகள் பெற்றிருந்த இந்த அறிவு, இயேசுவை விட்டு விலகிச் செல்லும் அச்சத்தையே அவர்களுக்கு ஊட்டியது. மாற்கு நற்செய்தியில் பதிவாகியுள்ள முதல் புதுமையில், இயேசு, தீய ஆவி பிடித்த ஒருவரைக் குணமாக்கும்போது, அவரைப் பிடித்திருந்த ஆவி, "நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்" என்று கத்தியது. (மாற்கு 1:24) என்று வாசிக்கிறோம்.

இயேசுவைக் குறித்து அறிவுப்பூர்வமாக, தெளிவாக அறிந்து வைத்திருந்த மறைநூல் அறிஞரும், பரிசேயரும், தொழுகைக்கூடத்தில் நிலவியச் சூழலைக் கண்டு, உதட்டோரம் லேசான ஒரு புன்னகை சிந்தினர். இயேசுவை, மக்கள் முன் மட்டம் தட்ட இதைவிட அவர்களுக்கு சிறந்த சந்தர்ப்பம் கிடைக்காது என்று கணக்கு போட்டனர்.
கை சூம்பிய அந்த மனிதருக்கு இயேசு உதவாவிடில், அவர் இதயமற்றவர் ஆகிவிடுவார். ஆனால், அந்த மனிதர் மேல் இரக்கம் காட்டி, அவரை குணமாக்கினால், மோசே வகுத்த சட்டங்களை, இறைவனே நேரடியாகத் தந்த ஓய்வு நாள் சட்டத்தை மீறுபவர் ஆகிவிடுவார். நல்லது செய்தாலும் தப்பு, செய்யாமல் இருந்தாலும் தப்பு. இயேசு தங்கள் வலையில் சரியாகச் சிக்கிக்கொண்டார் என்று அவர்கள் கணித்தனர். அவர்கள் போட்ட கணக்கில் ஒரே ஒரு தப்பு... இயேசுவின் அறிவுத்திறனைக் கொஞ்சம் குறைவாக மதிப்பிட்டுவிட்டனர்.

இத்தருணத்தில், லூக்கா நற்செய்தியில் நாம் வாசிக்கும் அழகான ஒரு வாக்கியம் நம் கவனத்தை ஈர்க்கிறது. "இயேசு அவர்களுடைய எண்ணங்களை அறிந்து, கை சூம்பியவரை நோக்கி, ‘எழுந்து நடுவே நில்லும்! என்றார். அவர் எழுந்து நின்றார்" (லூக்கா 6:8) என்று வாசிக்கிறோம். "அவர்கள் எண்ணங்களை அறிந்த இயேசு..." என்ற அழகான சொற்றொடரை நமது இன்றைய பேச்சு வழக்கில் சொல்ல வேண்டுமென்றால், இயேசு அவர்களை அளந்து வைத்திருந்தார் என்று எண்ணிப்பார்க்கலாம்.
மறைநூல் அறிஞரும், பரிசேயரும், நோயுற்ற ஒருவரை பகடைக்காயாகப் பயன்படுத்தி, துவங்கவிருந்த 'ஒய்வு நாள்' என்ற சதுரங்க விளையாட்டிற்கு இயேசுவும் தயாரானார். எனவே, அவர், கை சூம்பியவரை, தொழுகைக்கூடத்தின் மையத்திற்குக் கொணரும்வண்ணம், எழுந்து நடுவே நில்லும்! என்று அழைத்தார்.


கை சூம்பியவரை, தொழுகைக்கூடத்தின் நடுவே வரும்படி இயேசு தந்த அவ்வழைப்பைத் தொடர்ந்து, அங்கு நிகழ்ந்தனவற்றை நாம் அடுத்தத் தேடலில் சிந்திக்க முயல்வோம்.

No comments:

Post a Comment