24 November, 2020

விவிலியத்தேடல்: உயிர்ப்புக்குப்பின்னும் தொடரும் புதுமைகள் 1

  
Jumping frog

விதையாகும் கதைகள் : கேட்கச் செவியின்றி இருப்பதும் நலமே!

தவளைக் கூட்டமொன்று காட்டைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென, அக்கூட்டத்திலிருந்த மூன்று தவளைகள் ஒரு குழிக்குள் விழுந்துவிட்டன. இதைக் கண்ட தவளைக் கூட்டம் அந்தக் குழியைச் சுற்றி நின்று கீழே பார்த்தன. அந்த மூன்று தவளைகளும் மீண்டும் மேலே வரும் முயற்சியில் குதிக்க ஆரம்பித்தன. அவை எவ்வளவு முயன்றும், அந்தக் குழியின் ஆழத்தைத் தாண்டி, வெளியில் வருமளவு குதிக்க முடியவில்லை.

இந்தப் போராட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த மற்ற தவளைகள், ஒன்று சேர்ந்து, கத்த ஆரம்பித்தன. "நீங்கள் என்னதான் முயன்றாலும் வெளியே வரமுடியாது. எனவே, அங்கேயே தங்கிவிடுங்கள்" என்று தவளைகள் அனைத்தும் சேர்ந்து கத்தின. அந்தக் கத்தலையும் மீறி, மூன்று தவளைகளும் தொடர்நது குதித்தன. அவற்றில் இரு தவளைகள், விரைவில் சோர்வுற்று, மற்ற தவளைகள் கத்தியதற்கு ஏற்ப, குதிப்பதை நிறுத்திவிட்டன.

மூன்றாவது தவளை மட்டும், இன்னும் அதிக முயற்சி எடுத்தது. இறுதியில் அந்தத் தவளை குழியின் ஆழத்தையும் தாண்டி மேலே குதித்து, குழியைவிட்டு வெளியேறியது. இதைக் கண்ட மற்ற தவளைகள், "குதிக்கவேண்டாம் என்று நாங்கள் அவ்வளவு கத்தியும் நீ ஏன் கேட்கவில்லை?" என்று கோபமாகக் கேட்டன. அப்போது அந்தத் தவளை, "எனக்கு காது சரியாகக் கேட்காது. எனவே, நீங்கள் என்னை உற்சாகப்படுத்துவதற்காகத்தான் கத்துகிறீர்கள் என்றெண்ணி, இன்னும் அதிகமாக முயற்சி செய்தேன்" என்று புன்சிரிப்புடன் சொன்னது.

வார்த்தைகள்... ஆக்கவும், அழிக்கவும் வலிமை வாய்ந்தவை. அழிக்கும் வார்த்தைகள், ஓங்கி ஒலிக்கும்போது, அவற்றைக் கேட்காமல் இருப்பது, கூடுதலான வலிமையைத் தரக்கூடும்.

Jesus - after His Resurrection

உயிர்ப்புக்குப்பின்னும் தொடரும் புதுமைகள் 1

இயேசு, தன் பணிவாழ்வில் செய்த புதுமைகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக நம் தேடல் பயணத்தை மேற்கொண்டோம். இனிவரும் தேடல்களில், இயேசுவின் உயிர்ப்புக்குப்பின் நிகழ்ந்த புதுமைகளில் நம் தேடல் முயற்சிகளைத் தொடர்வோம்.
தன் பணிவாழ்வில் இயேசு ஆற்றியதாக, நான்கு நற்செய்திகளில் பதிவு செய்யப்பட்டுள்ள புதுமைகளின் எண்ணிக்கை 35 என்பது பொதுவான கருத்து. இவையன்றி, இயேசு, பல நூறு புதுமைகளைச் செய்திருக்கக்கூடும். அவை அனைத்தையும் நற்செய்தியாளர்கள் பதிவு செய்யவில்லை. இக்கருத்தை, நற்செய்தியாளர் யோவான் தன் நற்செய்தியின் முடிவுரையாகக் கூறியுள்ளார். "வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை" (யோவான் 20:30) 

யோவான் நற்செய்தியில் மட்டுமல்ல, ஏனைய மூன்று நற்செய்திகளிலும் எழுதப்படாத அரும் அடையாளங்களை இயேசு தன் பணிவாழ்வில் செய்திருக்கக்கூடும். அவற்றில், தங்கள் நினைவுகளில் பதிந்தவற்றை மட்டுமே நான்கு நற்செய்தியாளர்களும் வழங்கியுள்ளனர். அதேவண்ணம், இயேசுவின் உயிர்ப்புக்குப்பின்னரும், பல்வேறு புதுமைகள் நிகழ்ந்திருக்கவேண்டும். இயேசு உயிர்த்தபின், இவ்வுலகில் நாற்பது நாள்கள் தங்கி, பல்வேறு நிகழ்வுகள் வழியே தான் உயிரோடிருப்பதை சீடர்களுக்கு உணர்த்தினார் என்பதை, திருத்தூதர் பணிகள் நூலின் துவக்கத்தில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: இயேசு துன்புற்று இறந்த பின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார்; பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண்பித்தார். (திருத்தூதர் பணிகள் 1:3) இனிவரும் தேடல்களில், இந்தப் புதுமைகளைப்பற்றி நாம் சிந்திக்க முயல்வோம். 

ஒரு கோணத்தில் சிந்தித்தால், தன் உயிர்ப்புக்குப்பின், இயேசு, தன் சீடர்களைச் சந்தித்த அத்தனை நிகழ்வுகளையுமே, நாம் புதுமைகளாக எண்ணிப்பார்க்கலாம். உயிர்ப்பு என்ற எண்ணம் அதிகமாக வளர்ந்திராத யூத சமுதாயத்தில் பிறந்து வளர்ந்த சீடர்களுக்கு, இயேசு மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்பதே, புரிந்துகொள்ள முடியாத, ஒரு புதுமையாக இருந்திருக்கும். எனவே, உயிர்ப்புக்குப்பின், இயேசு சீடர்களைச் சந்தித்த ஒவ்வொரு நிகழ்வும் ஒரு புதுமையாக அமைந்திருக்கும். அவர்கள், தங்கள் கண்களால் கண்டதை நம்ப இயலாமல் தவித்திருக்கலாம். அந்த நம்பிக்கையை வளர்க்கவே, இயேசு அவர்களை பலமுறை சந்தித்தார்.

சீடர்களில் ஒருவரான தோமா மட்டுமே, இயேசுவின் உயிர்ப்பை நம்பவில்லை என்பதை நற்செய்தியாளர் யோவான் குறிப்பிட்டுள்ளார். நம்ப மறுத்த தோமா உயிர்த்த இயேசுவைச் சந்தித்த நிகழ்வை, அவர், தன் நற்செய்தியின் நிறைவாகக் கூறியுள்ளார். (யோவான் 20: 19-31) 

திருத்தூதர் யோவான் எழுதிய நற்செய்தி, 20ம் பிரிவுடன் நிறைவுபெற்றது என்பது அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள ஒரு தகவல். 21ம் பிரிவு, திருத்தூதர் யோவானின் சீடர்களில் ஒருவரால் எழுதப்பட்டது என்பதால், அது, 'பிற்சேர்க்கை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தன் நூலின் இறுதியில், இயேசு தோமாவை சந்தித்த அந்த நிகழ்வை யோவான் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, நற்செய்தியாளர் யோவான் பின்வரும் சொற்களுடன் தன் நற்செய்தியை நிறைவு செய்துள்ளார்: வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன. (யோவான் 20:30-31) 

மக்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடன், தான் நற்செய்தியை எழுதியதாக தன் நூலை நிறைவுசெய்யும் புனித யோவான், நம்பிக்கையற்றிருந்த தோமாவைக் குறித்த நிகழ்வை, முடிவரை போல பதிவுசெய்துள்ளார். உயிர்த்த இயேசுவை தோமா சந்தித்த அந்த நிகழ்வைக் கூறும் நற்செய்திப் பகுதியின் ஆரம்பத்தை, கொஞ்சம் ஆழமாக ஆய்வு செய்தால், இயேசுவின் உயிர்ப்பை, தோமா மட்டும் சந்தேகப்படவில்லை. எல்லா சீடர்களுமே சந்தேகப்பட்டனர் என்பது தெளிவாகும். 

யூதர்களுக்கு அஞ்சி, சீடர்கள், கதவு சன்னல் எல்லாவற்றையும் மூடி வைத்திருந்த (காண்க. யோவான் 20:19) அந்த அறைக்குள் இயேசு வந்து நின்றார். மூடியிருந்த கதவு காற்றில் இலேசாக ஆடினாலும், கதவை யாரோ தட்டுவது போலவும், தங்களைத் தாக்க யாரோ வந்துவிட்டது போலவும் சந்தேகத்தில், அச்சத்தில் வாழ்ந்தனர் சீடர்கள். அத்தகையதொருச் சூழலில், கதவு மூடியபடி இருக்க, இயேசு அவர்கள் நடுவே நின்றபோது, அவர்கள் மகிழ்ந்திருப்பார்களா? சந்தேகம் தான். அரண்டு போயிருப்பார்கள். யோவான் நற்செய்தியில் சீடர்கள் அச்சமுற்றதாக நேரடியான குறிப்பு எதுவும் இல்லை ஆனால், சீடர்கள் அச்சமுற்றனர் என்பதை, லூக்கா நற்செய்தி வெளிப்படையாகக் கூறுகிறது.
லூக்கா 24: 36-37
சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று,  “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று அவர்களை வாழ்த்தினார். அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள். 

லூக்கா, யோவான் என்ற இரண்டு நற்செய்திகளிலும் இயேசு அவர்களுக்குத் தன் கையையும், விலாவையும் காட்டினார் என்றும், தன்னைத் தொட்டுப் பார்க்க அழைத்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. மூடப்பட்ட அறைக்கு நடுவே இயேசு வந்து நின்றதும், சீடர்கள், அவரை, மகிழ்வாய் வணங்கித் தொழுதிருந்தால், இயேசு அவர்களிடம் தன்னை வந்து தொடும்படி அழைப்பு விடுத்திருக்கமாட்டார். இல்லையா? அவர்கள் கண்களில் அச்சமும், சந்தேகமும் தெரிந்ததால், இயேசு இந்த அன்பு அழைப்பைத் தந்தார். 

இயேசுவிடம் கேட்கமுடியாமல், மனதுக்குள் மற்ற சீடர்கள் புதைத்து வைத்திருந்த இதே சந்தேகத்தைத்தான், தோமா, வாய்விட்டு சொன்னார். எனவே தோமாவை மட்டும் சந்தேகப் பேர்வழி என்று கண்டனம் செய்யாமல், எல்லா சீடர்களுமே சந்தேகத்தில் பயத்தில் வாழ்ந்து வந்தார்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களது பயம், சந்தேகம் எல்லாவற்றிற்கும் காரணம் இருந்தது. அதையும் புரிந்துகொள்ள முயல்வோம். 

தங்கள் மீன் பிடிக்கும் தொழில், தங்கள் பெற்றோர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவை நம்பி மூன்றாண்டுகள் வாழ்ந்தவர்கள் இந்தச் சீடர்கள். இந்த மூன்று ஆண்டுகளில் இயேசுதான் அவர்களது உலகம் என்று ஆகிப்போன நேரத்தில், அந்த உலகம் ஆணிவேரோடு வெட்டப்பட்டு, சிலுவையில் தொங்கவிடப்பட்டது.

எருசலேமில், கல்வாரியில் அவர்கள் கண்ட காட்சிகள், அவர்களை முற்றிலும் நிலைகுலையச் செய்துவிட்டன. இயேசு அவர்கள் வாழ்வில் விட்டுச்சென்ற வெற்றிடத்தை, சந்தேகமும் பயமும் நிரப்பிவிட்டன. யாரையும், எதையும் சந்தேகப்பட்டனர். தங்கள் குழுவைச் சேர்ந்த ஒருவர், இக்கொடுமைகள் நடக்கக் காரணமாய் இருந்தது, அவர்களது சந்தேகத்தை இன்னும் அதிகமாக்கியது. அதுவரை, அவர்கள், ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த நம்பிக்கை தொலைந்துபோனது. 

பயத்தில், சந்தேகத்தில், பூட்டப்பட்ட அந்த அறையின் இருளில் இனி வாழ்ந்தால் போதும் என்று தீர்மானித்த தன் சீடர்களை இயேசு அப்படியே விடுவதாய் இல்லை. அவர்கள் வாழ்வில் மீண்டும் நுழைந்தார். இயேசு அவர்கள் வாழ்வில் மீண்டும் நுழைய, சாத்தப்பட்ட கதவுகள் ஒரு தடையாய் இல்லை. தன் கல்லறையை மூடியிருந்த அந்தப் பெரும் பாறையே அவரைத் தடுக்க முடியவில்லை.  இந்தக் கதவுகள் எம்மாத்திரம். 

சாத்தப்பட்ட அந்த அறைக்குள் இயேசு வந்து நின்றதை, ஒருசில விவிலிய விரிவுரையாளர்கள், புதுமை என்று குறிப்பிட்டுள்ளனர். கதவு, சன்னல்கள் எல்லாம் சாத்தப்பட்ட ஓர் அறைக்குள் உடலோடு ஒருவரால் வரமுடியுமா? முடியாது. இயற்கை நியதிக்கு, அறிவியல் கூற்றுகளுக்கு முரணான ஒரு செயல் அது. இயற்கை நியதிகள், அறிவியல் இவை மீறப்படும்போது, அதை, புதுமை என்று கூறுகிறோம். 

கதவுகள் மூடியிருந்த நிலையில் இயேசு சீடர்கள் முன் வந்து நின்றபோது, புதுமை செய்யும் தன் சக்தியால், அவர்களை, வியப்படையவோ, அச்சம் கொள்ளவோ செய்வது, இயேசுவின் நோக்கமாக இருந்திருக்காது. அவர்கள் எழுப்பியிருந்த சந்தேகச் சுவர்களைத் தகர்த்து, நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதற்காகவே, அவர் மூடியிருந்த கதவுகளைத் தாண்டி அவர்கள் நடுவே வந்தார். உடலோடு தங்கள் நடுவே நின்ற இயேசுவை, எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் சீடர்கள் தடுமாறினர். 

இதேபோல், இயேசு, எம்மாவு சென்ற சீடர்களைத் தேடிச்சென்ற நிகழ்விலும், வழியெங்கும் அவர் அவர்களோடு உரையாடியவண்ணம் சென்றபோது, இயேசுதான் தங்களுடன் வருகிறார் என்பதை அவர்களால் உணரமுடியவில்லை. ஆனால், அன்று மாலை, அவர்களோடு உணவு அருந்த அமர்ந்தபோது, இயேசு அவர்கள் கண்களைத் திறந்தார். இந்நிகழ்வையும் விவிலிய விரிவுரையாளர்கள் ஒரு புதுமை என்று குறிப்பிட்டுள்ளனர். எம்மாவு சீடர்களுடன் இயேசு நிகழ்த்திய அச்சந்திப்பை, நற்செய்தியாளர் லூக்கா இவ்வாறு சித்திரிக்கிறார்:
லூக்கா 24:30-33
அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்து போனார். அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?” என்று பேசிக்கொண்டார்கள். அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். 

"எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று" (லூக்கா 24:29) என்று, கலக்கத்துடன் வேண்டிக்கொண்ட சீடர்கள், இயேசு அவர்களுடன் அப்பம் பகிர்ந்தபோது, கண்கள் திறக்கப்பட, அதே மாலை நேரத்தில், எவ்வித கலக்கமும் இன்றி, மீண்டும், எருசலேம் திரும்பிச்சென்றனர். இந்த மாற்றம் நிகழ்ந்ததற்குக் காரணம், இயேசுவை அடையாளம் கண்டுகொண்ட புதுமை.

இவ்வாறு, உயிர்த்த இயேசு தன் சீடர்களைச் சந்தித்த ஒவ்வொரு நிகழ்விலும், மாற்றங்கள் என்ற புதுமை, சீடர்களிடம் நிகழ்ந்தது. இச்சந்திப்புக்களின் ஒரு சிகரமாக, யோவான் நற்செய்தியின் பிற்சேர்க்கையில் கூறப்பட்டுள்ள ஒரு நிகழ்வை நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.


No comments:

Post a Comment