Ploughing a dry land
விதையாகும் கதைகள் : மழை
பொழிய மறந்த மேகங்கள்
ஜோதிடத்தில்
மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த ஓர் ஊருக்கு வந்த ஒரு ஜோதிடர், அடுத்த 10 ஆண்டுகளுக்கு அந்த ஊரில் மழைபெய்யாது
என்று சொல்லிவிட்டுச் சென்றார். இதைக் கேட்ட ஊர் மக்கள், மிகவும் மனமுடைந்து, தங்கள் கலப்பைகளை விறகாக உடைத்து, எரித்துவிட்டு, வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தனர்.
ஊரில்
ஒரே ஒருவர் மட்டும், தினமும் தன் நிலத்திற்குச்
சென்று உழுதுவந்தார். அவர் உழுவதைக் கண்ட மேகங்கள் அவரிடம், "நாங்கள் 10 ஆண்டுகள் மழைபெய்யப் போவதில்லை
என்று ஜோதிடர் சொன்னபிறகும் நீ ஏன் உழுதுகொண்டிருக்கிறாய்?" என்று கேட்டன. அதற்கு அந்த விவசாயி, "பத்தாண்டுகள் நான் உழுவதை நிறுத்திவிட்டால், உழுவது எப்படி என்பதே எனக்கு மறந்துவிடும்.
பிறகு, நீங்கள் மழை பெய்யும்போது,
நிலத்தை உழத் தெரியாமல் திகைத்து நிற்பேன். எனவேதான், தொடர்ந்து உழுது வருகிறேன்"
என்று பதில் சொன்னார்.
இதைக்
கேட்ட மேகங்கள், "ஆஹா, பத்தாண்டுகள் மழை பெய்யாமல் இருந்தால், மழை பொழிவது எப்படி என்பதை நாமும் மறந்துவிடுவோமே!"
என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு,
அடுத்த
நாளே மழையைப் பொழிந்தன.
நல்லது
நடக்கும் என்று நம்புவோருக்கு, ஜாதகமும், ஜோதிடமும் தேவையில்லை.
லூக்கா நற்செய்தி – பத்து தொழுநோயாளர்
நலமடைதல் 5
இந்த
விவிலியத் தேடலை ஒரு கற்பனை வகுப்பறையில்
துவக்குவோம். நமக்கு வகுப்பு நடத்தப்போகும் ஆசிரியர்... இயேசு. நாம் அனைவரும் ஏகப்பட்ட
மகிழ்ச்சியுடன், எதிர்பார்ப்புடன், கொஞ்சம்
பக்திகலந்த உணர்வுடன் அங்கே அமர்ந்திருக்கிறோம். இயேசு வகுப்பறைக்குள் வருகிறார். ஒரே
ஆரவாரம், கைதட்டல், வரவேற்பு. இந்த ஆரவாரங்கள் எல்லாம் ஓய்ந்தபின், இயேசு, நம்மை பார்த்து, “இங்கு அமர்ந்திருக்கும் உங்களில் எத்தனை
பேர் இன்றைக்கு வாழ்கிறீர்கள்?” என்ற கேள்வியைக் கேட்கிறார்:
கேள்வியின் அர்த்தம் சரிவரத் தெரியவில்லை. நமது புருவங்கள் சுருங்குகின்றன. ஆனாலும், அனைவரும் கரங்களை உயர்த்துகிறோம்.
இயேசு
ஒரு புன்முறுவலுடன், "என் கேள்வியை நன்கு புரிந்துகொண்டு, பிறகு கைகளைத் தூக்குங்கள். மீண்டும் கேட்கிறேன்.
உங்களில் எத்தனை பேர் உண்மையில் இன்றைக்கு வாழ்கிறீர்கள்?" இயேசு 'இன்றைக்கு' என்ற வார்த்தையை அழுத்திச்
சொல்கிறார். நாம் சிந்திக்கத் துவங்குகிறோம். இயேசு, தொடர்ந்து, பொறுமையாய் விளக்குகிறார்: "இன்றைக்கு வாழ்வதென்பது, நேற்றைய நினைவுகளில் சிக்கிக்கொண்டோ, நாளையக் கனவுகளைத் தாங்கிக்கொண்டோ வாழ்வதல்ல.
இன்றைய நாளின், நிகழ்காலத்தின் ஒவ்வொரு
மணித்துளியிலும், நொடியிலும் வாழ்வது. உங்களில்
எத்தனை பேர் இந்த வகுப்பில், இந்த நேரத்தில், முழுமையாக
இங்கு இருக்கிறீர்கள், இந்த வகுப்பு
அனுபவத்தை, முழுமையாக வாழ்கிறீர்கள்?"
என்று
இயேசு விளக்கம் சொல்லி, கேள்வியை மீண்டும் கேட்கும்போது,
உயர்த்தப்பட்ட நமது கரங்கள் ஒவ்வொன்றாய் கீழே இறங்குகின்றன.
இன்றைய
நாளில், இந்தப் பொழுதில் வாழ்வதென்பது
அவ்வளவு எளிதல்ல. நம் கற்பனை வகுப்பில் சொல்லித்தந்த இந்த பாடத்தை, அன்று நாசரேத்தின்
தொழுகைக் கூடத்திலும் தன் மக்களுக்குச் சொல்லித்தந்தார் இயேசு. அந்நிகழ்வைக் கூறும்
லூக்கா நற்செய்திக்குச் செவி மடுப்போம்.
லூக்கா 4: 16-21
இயேசு
தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக்
கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம்
கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது: "ஆண்டவருடைய ஆவி
என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு
செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர்.
பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை
முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்."
பின்னர்
அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின்
கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை
நோக்கி, "நீங்கள் கேட்ட இந்த மறைநூல்
வாக்கு இன்று நிறைவேறிற்று" என்றார்.
இயேசு
வாழ்ந்த காலத்தில், யூதர்கள், அடுத்தநாளைக் குறித்து, எதிர்காலத்தைக் குறித்து
கவலைப்படுவதற்கு, அதிகம் பழகிப்போயிருந்தனர்.
இதை நன்கு உணர்ந்த இயேசு, தன் மலைப்பொழிவில், இந்தக் கவலையைப்பற்றி பேசினார்
மத்தேயு
6:34
ஆகையால்
நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும்; அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள
தொல்லையே போதும்.
நாளையப்
பொழுதைப்பற்றி கவலைப்பட்டுவந்த அவர்களிடம், இயேசு
நாசரேத்து தொழுகைக் கூடத்தில் நின்று முழங்கிய வார்த்தைகள் இவை: "நீங்கள் கேட்ட
மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று." இன்று, இப்போது, இங்கே... நிறைவு, விடிவு, மீட்பு வந்துவிட்டது என்று இயேசு கூறினார்.
தான் கூறியதை அவர் நம்பினார். வாழ்ந்தும் காட்டினார்.
இயேசு
இவ்வுலகில் வாழ்ந்த ஒவ்வொரு நாளையும்,
ஒவ்வொரு
பொழுதையும் முழுமையாக வாழ்ந்தவர். நேற்று, நாளை,
என்ற எண்ணங்களெல்லாம் அவரது உள்ளத்தையும், சிந்தனையையும் ஆக்ரமிக்க விடவில்லை அவர்.
அவர் ஆற்றிய புதுமைகள், சொன்ன சொற்கள், இவற்றைச் சிந்தித்தால், அவர் நிகழ் காலத்தில், நிகழ் நொடியில் வாழ்ந்தவர் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக,
நாம் கடந்த விவிலியத் தேடலில் பகிர்ந்துகொண்ட கானா திருமணப் புதுமையில், தண்ணீர், திராட்சை இரசமாய் மாறியதைக் குறிக்க
அவர் சொன்ன வார்த்தைகள்: "இப்போது, மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு
போங்கள்." (யோவான் 2:8) அவர் செய்த ‘முதல் அரும் அடையாளத்திலேயே’ இப்போது என்ற எண்ணத்தை, ஒரு விதையாக
ஊன்றிவைத்தார்.
அதேபோல்,
நாம் தற்போது தேடலை மேற்கொண்டுள்ள, பத்துத் தொழுநோயாளர் குணமாகும் புதுமையில், "நீங்கள் நாளைச் சென்று, குருக்களிடம் காட்டுங்கள்." என்று சொல்லாமல், "நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம்
காண்பியுங்கள்" (லூக்கா 17:14) என்றார். இயேசு இப்படி
சொன்னபோது, தொழுநோய் அவர்களைவிட்டு
நீங்கியிருக்கவில்லை. ஆனால், அவர்கள், அப்போதே, நம்பிக்கையுடன் எழுந்து போனார்கள்.
போகும்வழியில் குணமடைந்தார்கள். இதேபோல், முடக்குவாதமுற்றவரைப்
பார்த்து, "நீ எழுந்து உன்னுடைய
கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ" (காண்க. மத்தேயு 9:6) என்று கூறினார்.
பாலை
நிலத்தில் ஐயாயிரம் பேருக்கு உணவளித்த புதுமையில், மாலையானபோது, சீடர் அவரிடம் வந்து, "இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, நேரமும் ஆகிவிட்டது. ஊர்களுக்குச்
சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்"
என்றனர். இயேசு அவர்களிடம், "அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு
கொடுங்கள்" என்றார். ஆனால் அவர்கள் அவரைப் பார்த்து, "எங்களிடம் இங்கே ஐந்து
அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை" என்றார்கள். அவர், "அவற்றை என்னிடம் இங்கே
கொண்டு வாருங்கள்" என்றார். (மத்தேயு 14:15-18).
இந்த
நற்செய்திப் பகுதியில், ‘இங்கே’ என்ற சொல் இருமுறை
பயன்படுத்தப்பட்டுள்ளது. சீடர்கள் ‘இங்கே’ என்ற சொல்லைப்
பயன்படுத்திய வேளையில், அதில் நம்பிக்கையின்மையும், அதே சொல்லை, இயேசு
பயன்படுத்தியபோது, நம்பிக்கையும் வெளிப்படுகின்றது.
இயேசு
சொல்லித்தந்த ‘விண்ணுலகில் இருக்கின்ற
எங்கள் தந்தையே’ என்ற அந்த அற்புதமான செபத்திலும், "எங்கள் அனுதின உணவை எங்களுக்கு நாளை தாரும்."
என்றா சொல்லித்தந்தார்? இல்லையே. மாறாக, இன்றே தாரும் என்றார். இன்றே, இப்போதே எங்களுக்கு உணவைத் தாரும், தந்தையே என்று மன்றாட சொல்லித்தந்தார்.
இன்று,
இப்போது, இங்கு என்று வாழ்ந்து காட்டிய இயேசு, இறுதியில், கல்வாரியில், சிலுவையில் தொங்கியபோதும்,
அதே எண்ணங்களை வெளிப்படுத்தினார். தன்னுடன் சிலுவையில் அறையப்பட்டிருந்த
குற்றவாளியிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக
உமக்குச் சொல்கிறேன்" (லூக்கா 23:43) என்று இயேசு கூறியது, இவ்வுலகில்
அவர் விட்டுச்சென்ற இறுதி வாக்கியங்களில் ஒன்று.
இயேசுவுடன்
சிலுவையில் அறையப்பட்டவர், விண்ணரசில் நுழையும்போது, தன்னை நினைவிற்கொள்ளுமாறு
விண்ணப்பித்தபோது, அந்தக் கொடிய துன்பத்தின்
உச்சியில், இயேசு, ஒரு விரக்தியுடன்,
"என்ன பெரிய அரசு... அந்த அரசுக்கு வந்த கதியைத்தான் பார்க்கிறீரே. ஒரு வேளை,
நாளை, அந்த அரசு வரலாம். அப்போது நான் அந்த அரசில் ஒரு வேளை நுழைந்தால், நீரும் நாளை என்னோடு வரலாம்" என்று
நம்பிக்கை இழந்து சொல்லியிருக்கலாம். ஆனால், அதற்கு
பதில், இயேசு கூறிய நம்பிக்கையூட்டும்
சொற்கள் இவை: "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக
உமக்குச் சொல்கிறேன்." இயேசு இன்றையப் பொழுதில், இப்போதைய நொடியில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்தார்
என்பதற்கு இதைவிட சக்திவாய்ந்த சாட்சி இருக்க முடியாது. The Grace of the Present Moment, அதாவது, ‘நிகழ் பொழுதின் அருள்’ என்ற உண்மையின் முழு விளக்கமாக இயேசு வாழ்ந்தார்.
நிகழ்
பொழுதின் அருளில் நாம் வாழ்கிறோமா என்பதைச் சிந்திப்பது நல்லது. நமது ஒவ்வொருநாள் நிகழ்வுகளைக்
கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம்.
ஒரு
சராசரி காலை நேரத்தைக் கற்பனை செய்து பார்ப்போம். காலை எழுந்ததும், சுய நினைவு தெளிந்ததும், நேற்றைய நிகழ்வுகள், முக்கியமாக கசப்பான நிகழ்வுகள் நமது நினைவை
நிறைக்கும். அல்லது, அன்று நாம் எதிர்கொள்ளவிருக்கும் வேலைகளைப் பற்றிய கவலைகள் உள்ளத்தை
நிறைக்கும்.
நம்மில்
எத்தனை பேர், பல் துலக்கும்போது, வாயில் நடக்கும் விந்தைகளைச் சிந்திக்கிறோம்? அல்லது முகத்தில் நாம் தெளிக்கும் அந்த நீரினால்,
முகத்திலுள்ள உயிரணுக்களெல்லாம் கண்விழித்து, குளித்து, சிலிர்த்து, முகமெங்கும் இரத்த ஓட்டம் பரவுவதை
உணர்கிறோம்?
அதன்
பின் ஒரு வேளை நாம் ஒரு சில உடல் பயிற்சிகள் செய்தால், உடலின் பல பாகங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் உயிர்
பெறுவதை எத்தனை பேர் அனுபவித்து, இரசித்திருக்கிறோம்? காலை வேளையில் நம்மில் சிலர் தியானத்திலோ, யோகப் பயிற்சிகளிலோ ஈடுபட்டால், நாம் உள்ளிழுக்கும் சுவாசம் குளிர்ச்சியாகவும், வெளியில் விடும் சுவாசம் சூடாகவும் இருப்பதை
எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்?
அதன்
பின் காபி, காலை உணவு, பள்ளிக்கு அல்லது அலுவலகத்திற்கு மேற்கொள்ளும்
பயணம் என்று, நாம் அனுபவித்து இரசிக்கக்கூடிய, ஆயிரமாயிரம் சின்னச் சின்னச் செயல்கள்,
ஒவ்வொரு நாளும் நடக்கின்றன. நம்மில் எத்தனை பேர் இந்தச் செயல்களையெல்லாம் முழு ஈடுபாட்டுடன்
இரசித்துச் செய்கிறோம்?
முக்கியமாக,
சாப்பிடும்போது, வேறு சிந்தனைகளில் மூழ்கிப்போய்,
என்ன சாப்பிடுகிறோம் என்பதையும் மறந்து, ஏதோ ஒரு கடமையைச் செய்வதைப்போல் சாப்பிடுவது,
மருத்துவ கண்ணோட்டத்தின்படி, நம் உடலுக்கு நல்லதல்ல என்பதை நாம் அறிந்தவர்கள்தானே.
இருந்தாலும், சாப்பிடும் நேரங்களில்
பல சிந்தனைகளுடன் சாப்பிட்டு, அதன் பின்விளைவாக, மருத்துவரை எத்தனை முறை நாம் நாடியிருக்கிறோம்? நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், வாழும் ஒவ்வொரு நொடியையும் ஈடுபாட்டுடன்
வாழ்ந்தால், மருந்துகளை
நாடிச்செல்லத் தேவையில்லையே. நிகழ் பொழுதின் அருளில் வாழ்வது, மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் அதிகப் பயன் தரும்.
"நீங்கள்
போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்" (லூக்கா 17:14) என்று இயேசு தந்த கட்டளைக்குப்
பணிந்து, "அவர்கள் புறப்பட்டு
போகும்போது, அவர்கள் நோய்
நீங்கிற்று." என்று நற்செய்தி கூறுகிறது. அந்த பத்து
நோயாளிகளை வதைத்துவந்த தொழுநோய் என்ற துன்பம், அவர்கள் நடுவே இருந்த பாகுபாடுகளை மறக்க
வைத்தது. சேர்த்து வைத்தது. ஆனால், தொழுநோய் நீங்கியதும், அங்கு நடந்தது வேறு.
இதை நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.
No comments:
Post a Comment