விதையாகும் கதைகள் : நோயைக்
கடந்துவாழும் இறையன்பு
Kate Ogg என்ற இளம் தாயின் கருவில்
வளர்ந்துவந்த இரட்டைக் குழந்தைகள், 6 மாதங்களிலேயே பிறந்துவிட்டனர்.
அவ்விரு குழந்தைகளில், ‘எமிலி’ என்ற பெயர் கொண்ட பெண்
குழந்தை, பிழைத்துவிட்டதாகவும், 'ஜேமி' என்ற பெயர் கொண்ட ஆண் குழந்தை, பிறந்த சில நிமிடங்களில் இறந்துவிட்டதாகவும்
மருத்துவர்கள் கூறினர்.
ஜேமியை தன்னிடம் கொண்டுவரும்படி, தாய் Kate மருத்துவர்களிடம் கெஞ்சிக்
கேட்டார். அவர் தன் மகனுக்கு இறுதி விடை வழங்க உதவியாக, அக்குழந்தையை அவரிடம் கொடுத்தனர். அக்குழந்தையை
தன் மார்போடு அணைத்து, இளம் தாய் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்த
வேளையில், அக்குழந்தையிடம் இலேசான
அசைவுகள் உருவானதை, தாய் Kate உணர்ந்தார்.
இறந்த உடலில் இத்தகைய சிறு அசைவுகள் எழுவது
சாத்தியம் என்று மருத்துவர்கள் சொன்னபோது, அந்த
அன்னை மட்டும், தன் மகன் ஜேமியை இன்னும்
இறுக்கமாக தன்னுடன் அணைத்துக்கொண்டார். சில நொடிகள் சென்று, அக்குழந்தையின் கண்கள் திறந்தன. தன் மகன்
ஜேமிக்கு பிரியாவிடை வழங்க அந்த அன்னை வழங்கிய அணைப்பு, அவனை இவ்வுலகிற்கு வரவேற்க, அவர் தந்த அணைப்பாக
மாறியது.
இளம் தாய் Kate அவர்களின் அணைப்பில்,
ஜேமி உயிர் பெற்றதற்கு, அறிவியல் விளக்கங்கள்
எதையும், மருத்துவர்களால் தர இயலவில்லை.
தற்போது, எமிலியும், ஜேமியும், 10 வயதுள்ள சிறுமியாக, சிறுவனாக, நலமுடன் வாழ்ந்து வருகின்றனர்.
மருத்துவத்தால் விளக்கமுடியாத இத்தகைய நிகழ்வுகள், உலகில் ஒவ்வொருநாளும் நிகழ்ந்தவண்ணம் உள்ளன.
குறிப்பாக, இந்த கோவிட்-19 கொள்ளைநோய்
காலத்தில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும், கொள்ளைநோய்களைக் கடந்து, இறைவனின் அன்பு என்றும்
நிலைக்கும் என்ற செய்தியை, சுமந்து வந்துள்ளது.
இயேசு ஆற்றிய
புதுமைகள் – மீள்பார்வை 3
ஹார்வர்ட்
பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் ஒருவர், தன் அறையின் சுவரில்,
ஓர் அழகிய பீங்கான் தட்டை சட்டமடித்து மாட்டியிருந்தார். பீங்கான் தட்டின் மீது வண்ணத்துப்பூச்சியின்
படம் வரையப்பட்டிருந்தது. அந்த பீங்கான் தட்டு, முழுமையான தட்டாக இல்லாமல், பல்வேறு துண்டுகள்
ஒட்டப்பட்ட தட்டாக இருந்தது. தன்னைச் சந்திக்கும் ஒவ்வோரிடமும், அந்த ஓவியத்தைக் காட்டி, அதன் பின்னணிக் கதையைக் கூறிவந்தார்
பேராசிரியர்:
அந்த
ஓவியத்தை வரைந்தது, அவரது 5 வயது மகன்
எரிக் (Eric). அவன் பள்ளியில் தன் ஓவியக்கலை வகுப்பில்
மிகக் கவனமாக வரைந்த படம் அது. அதை உருவாக்க, அவரது மகனுக்கு பல நாள்கள் ஆயின. கிறிஸ்மஸ்
விடுமுறைக்கு முன் பள்ளியில், கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது. அவ்வேளையில், சிறுவர், சிறுமியர், தங்கள் பெற்றோருக்கென தாங்கள் உருவாக்கியிருந்த
ஓவியங்களை பரிசாக வழங்கினர். தான் உருவாக்கிய ஓவியத்தை, தன் பெற்றோருக்கு வழங்க, எரிக்
விரைந்துசென்ற வேளையில், வழியில் ஏதோ ஒன்று, அவன்
காலை இடறிவிட, அவன் கையிலிருந்த பீங்கான்
தட்டு, தரையில் விழுந்து, பல துண்டுகளாக உடைந்தது. தட்டு உடைந்த சப்தம், அந்த அரங்கத்தை அமைதியாக்கியது. எரிக், தரையில் அமர்ந்து அழுதான்.
அழுதுகொண்டிருந்த
மகன், அரங்கத்தில் இருந்த
அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததைக் கண்டு சங்கடமடைந்த தந்தை, அவனிடம் சென்று, "சரி மகனே, அது உடைந்தால் பரவாயில்லை" என்று எரிக்கை
சமாதானப்படுத்த முயன்றார். கூடவே ஓடிவந்த அம்மாவோ, "அது எப்படி பரவாயில்லை என்று சொல்வது? இது உண்மையிலேயே பெரிய வருத்தம்தான்"
என்று சொல்லியபடி, அவரும் தரையில் மகனுடன்
அமர்ந்து, அவனை அணைத்துக்கொண்டு
அழுதார்.
ஒரு
சில நிமிடங்கள் இருவரும் அழுதபின், அந்த அன்னை, "சரி, இப்போது நாம் இந்த துண்டுகளை எடுத்துக்கொண்டு
வீட்டுக்குப் போவோம். இவற்றைக்கொண்டு என்ன செய்யலாம் என்று பார்ப்போம்" என்று
கூறியபடி, அந்த பீங்கான் தட்டின்
துண்டுகளை திரட்டி எடுத்துக்கொண்டு,
எரிக்கை
அழைத்துச்
சென்றார்.
வீட்டுக்குச்
சென்றதும், கண்ணாடித் துண்டுகளை
ஒட்டும் திறன்கொண்ட பசையின் உதவியுடன்,
அந்த
அன்னையும், எரிக்கும் சேர்ந்து, உடைந்துபோன துண்டுகளை இணைத்தனர். ஒன்றுசேர்க்கப்பட்ட
தட்டு, முன்பிருந்ததைவிட இன்னும்
அழகாகத் தெரிந்தது. அந்த ஓவியத்தட்டை,
பேராசிரியர்,
தன் அலுவலகத்தின் சுவரில் மாட்டி, எல்லாருக்கும் அதைப்பற்றி
கூறினார்.
வாழ்வில்
நிகழும் தவறுகளும், இழப்புக்களும் மனதைக்
காயப்படுத்துகின்றன என்பது உண்மை. அந்த இழப்புக்களிலிருந்து கூடுதலான அழகுடன் நம் உள்ளங்கள்
குணமாவது, புதுமை என்பதை, வாழ்வுப்பள்ளி நமக்கு கற்றுத்தருகின்றது. நாம் கடந்த
மூன்று ஆண்டுகளாக தேடலை மேற்கொண்ட புதுமைகள் தொடரின் நிறைவில், இந்த எண்ணம், புதுமைகளைக் குறித்த தெளிவானப் புரிதலை
உருவாக்குகின்றது.
நாம்
தற்போது சிந்தித்த இந்நிகழ்வை, சிறிது ஆழமாக ஆய்வு செய்வோம். சிறுவன் எரிக், அந்த அரங்கத்தில்
தடுமாறி கீழே விழுந்தபோது, ஏதோ ஓர் அரியசக்தியால், அவன் கையிலிருந்த பீங்கான் தட்டு, அவனுடன் சேர்ந்து கீழே விழாமல், அதுமட்டும் அந்தரத்தில் மிதந்திருந்தால், அந்நிகழ்வு, அரங்கத்தில் இருந்த அனைவருக்கும் பெரும்
வியப்பைத் தந்திருக்கும். அந்நிகழ்வு, ஒரு புதுமை என்று, பலராலும் பேசப்பட்டிருக்கும்.
அந்த பரபரப்பு, ஒரு சில நாள்கள் நீடித்திருக்கும்.
அதற்கு
மாறாக, அந்த அரங்கத்தில்
அன்று உண்மையில் நிகழ்ந்ததை, மற்றுமொரு கோணத்தில், ஒரு புதுமையாக நாம் எண்ணிப்பார்க்கலாம்.
எந்த ஓர் அற்புத சக்தியும், அந்த தட்டு உடையாமல் காக்கவில்லை என்றாலும், அது உடைந்தபின், அதை, அந்த அன்னையும் மகனும் சேர்ந்து, மீண்டும் இணைத்ததால், அவர்கள் உணர்ந்த நிறைவு,
அக்குடும்பத்தினரின் உள்ளங்களில் நீடித்த தாக்கத்தை உருவாக்கிய புதுமையாக நாம் எண்ணிப்பார்க்கலாம்.
இயேசு
ஆற்றிய புதுமைகள், ஒரு நொடிப்பொழுது வியப்பை வழங்கிய மந்திர, தந்திரக் காட்சிகள் அல்ல, மாறாக, அவை, தனிப்பட்ட மனிதர்களின் வாழ்வில், நீடித்த
மாற்றங்களை உருவாக்கிய அருள்நிறை தருணங்களாக இருந்தன. இவ்வேளையில், இயேசு ஆற்றிய புதுமைகளில்,
நாம் ஆங்காங்கே சிந்தித்த இன்னும் சில அம்சங்களை, மீண்டும் அசைப்போடுவது பயனளிக்கும்.
இயேசு
ஆற்றிய பெரும்பாலான புதுமைகள், தனிப்பட்ட மனிதர்களின்
நலனை மையப்படுத்தி செய்யப்பட்ட நற்செயல்கள். 5000த்திற்கும் அதிகமான மக்களுக்கு உணவளித்தது, உட்பட, வெகுசில புதுமைகளே, மக்கள்
கூட்டத்திற்குமுன் செய்யப்பட்டன. பெரும்பாலான புதுமைகளில், தன் சக்தியைப்பற்றி கூறாமல், "உன் நம்பிக்கை உன்னைக் குணமாக்கியது"
என்று இயேசு கூறுவதையும் காண்கிறோம். அத்துடன், புதுமைகளால் நலம்பெற்றவர்கள், அதைப்பற்றி யாருக்கும் சொல்லவேண்டாம் என்பதையும்,
இயேசு, வலியுறுத்திக் கூறியுள்ளதை நாம் நற்செய்திகளில் காண்கிறோம். இவை அனைத்திற்கும்
மேலாக, இயேசு, சட்டங்களைக் காட்டிலும், மனிதர்களின் விடுதலைக்கு முதலிடம் வழங்கினார்
என்பதை, ஒய்வு நாளில், தொழுகைக்கூடத்தில் அவர் ஆற்றிய புதுமைகள்
நமக்கு உணர்த்தியுள்ளன.
நான்கு
நற்செய்திகளிலும், புதுமைகளைக் குறிப்பதற்குப்
பயன்படுத்தப்பட்டுள்ள மூன்று சொற்கள்,
புதுமைகளின்
இன்னும் சில அம்சங்களை உணர்ந்துகொள்ள உதவியாக இருக்கும். ‘துனாமிஸ்’ (Dunamis) என்ற கிரேக்கச் சொல்லுக்கு, 'வல்லமை' என்று பொருள். இறைவனின் வல்லமையால் நிறையப்பெற்ற
இயேசு, இயற்கையை மீறிய வல்லமையோடு, புதுமைகள் ஆற்றினார். இரத்தப் போக்கினால்
வருந்தியப் பெண், இயேசுவின் மேலுடையைத்
தொடும் நிகழ்வில், நற்செய்தியாளர் மாற்கு
‘துனாமிஸ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் - மாற்கு 5: 29-30
இயேசு
ஆற்றிய புதுமைகளைப்பற்றி பேசும்போது,
நற்செய்தியாளர்கள்
பயன்படுத்தும் இரண்டாவது சொல், 'செமெயியோன்' (Semeion). கிரேக்க மொழியில், இச்சொல்லுக்கு, 'அடையாளம்' என்று பொருள். இச்சொல்லை, நற்செய்தியாளர் யோவான், அடிக்கடி பயன்படுத்தியுள்ளார்.
புதுமைகளைக்
குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ள மூன்றாவது சொல், ‘தேரெசா’ (Teresa). இந்தச் சொல், புதுமைகள் நிகழும்போது மக்களிடையே ஏற்பட்ட
வியப்பு, திகைப்பு, மலைப்பு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும்
சொல்லாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
புயல்காற்று
சூழ்ந்த படகில் உறங்கிக்கொண்டிருந்த இயேசு, விழித்தெழுந்து, காற்றையும், அலைகளையும் அடக்கியபோது, "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றவே!
இவர் எத்தகையவரோ?" (மத். 8:27) என்று சீடர்கள்
வியந்ததாக மத்தேயு நற்செய்தி கூறுகிறது.
இயேசு
ஆற்றிய புதுமைகளைக் கண்டவர்கள், வியப்பு, மலைப்பு, திகைப்பு ஆகிய புனிதமான உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு
மாற்றாக, ஏரோது மன்னன், இயேசுவின் புதுமைகளை, கண்கட்டி வித்தையைப்போல் வேடிக்கைப் பார்க்கும்
ஆவலில் இருந்தான் என்று நாம் லூக்கா நற்செய்தியில் (லூக்கா 23: 8-9) வாசிக்கிறோம்.
சிலுவையில்
இயேசு அறையப்பட்டிருந்த வேளையிலும்,
அவர்
தன்னைக் காத்துக்கொள்ள சிலுவையிலிருந்து இறங்கிவந்தால், அவரை நம்புவதாக,
சிலுவையைச் சுற்றி நின்றவர்களும், மதத்தலைவர்களும் சவால்விடுத்ததை, மத்தேயு நற்செய்தியில் (மத்தேயு 27:38-43) வாசிக்கிறோம்:
தன்னையே
விளம்பரப்படுத்தவோ, தன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவோ, இயேசு புதுமைகளை ஆற்றவில்லை.
தன் சக்தியை கேலிசெய்தவர்களுக்கு சரியான பதில் சொல்லும்வண்ணம் அவர் புதுமைகளை ஆற்றவில்லை.
அவர் ஆற்றிய புதுமைகள் எல்லாமே, அதிகத் தேவையில் உள்ள
மக்களுக்கு ஆற்றப்பட்ட புதுமைகளாக அமைந்தன.
தன்மீது
நம்பிக்கை கொள்பவர்கள், தன்னைவிட அதிகமான, சக்தி
மிகுந்த புதுமைகளை ஆற்றுவர் என்பதையும், இயேசு இறுதி இரவுணவின்போது தெளிவாகக் கூறினார்:
நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும்
செய்வார். (யோவான் 14 12)
அவர்
கூறியதைப்போலவே, இயேசுவிடம் நம்பிக்கை
கொண்டவர்கள் கடந்த 20 நூற்றாண்டுகளுக்கும் மேலாக, உன்னதமான புதுமைகளைச் செய்தவண்ணம் உள்ளனர்.
புதுமைகளின் காலம் இன்றும் நம்மிடையே தொடர்ந்துவருகிறது. அவற்றைக் காண்பதற்கு நம்பிக்கை
நிறைந்த கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
19ம்
நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற தத்துவச் சிந்தனையாளர்களில் ஒருவர், Ralph
Waldo Emerson. அவர் வாழ்ந்த
காலத்தில், அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்கள், இயற்கையை
விட்டு விலகிவந்ததால், இறைவனையும் விட்டு விலகிச்சென்றனர்
என்பதை, தன் கட்டுரைகளில் வருத்தத்துடன்
குறிப்பிட்டு வந்தார். 'இயற்கை' என்ற தலைப்பில், எமர்சன் அவர்கள் எழுதியிருந்த ஒரு கட்டுரையில், விண்மீன்களைப் பற்றி அழகானதோர் எண்ணத்தை
வெளிப்படுத்தியுள்ளார்:
"வானில்
தோன்றும் விண்மீன்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை
மட்டும் நம் கண்களுக்குத் தோன்றினால், நாம் அவற்றை நம்பிக்கையுடன் ஆராதிப்போம்.
அந்த விண்மீன்கள் வழியே, கடவுளின் நகரம் நமக்குக்
காட்டப்பட்டது என்ற நினைவை, பத்திரமாகப் பாதுகாத்து, அடுத்தத் தலைமுறைகளுக்கு, அந்நினைவை, ஒரு கருவூலமாக விட்டுச்செல்வோம். ஆனால், அழகின் தூதர்களான விண்மீன்கள், ஒவ்வோர் இரவும் தோன்றி, இவ்வுலகை வெளிச்சமாக்குவதால், அவை விடுக்கும் வியத்தகு அழைப்பைக் காணத்
தவறுகிறோம்" என்று எமர்சன் அவர்கள் கூறியுள்ளார்.
இரவில்
தோன்றும் உண்மையான நட்சத்திரங்களைப் பார்த்து வியப்பதற்குப் பதில், நம் தொலைக்காட்சியில் தோன்றும் போலி நட்சத்திரங்களைப்
பார்த்து வியக்கிறோம். ஒவ்வொரு நாளும் தோன்றும் விண்மீன்களைப் போலவே, நம்மைச்சுற்றி ஒவ்வொரு நாளும் பல நூறு புதுமைகள்
நிகழ்ந்தவண்ணம் உள்ளன. இவை அனைத்தையும் கண்டு, வியக்கும் பக்குவத்தை நாம் அடைந்தால், ஒவ்வொரு நாளும், நாம் முழந்தாள் படியிட்டு, நன்றி செபங்களை எழுப்புவோம்.
ஒவ்வோர்
ஆண்டும், டிசம்பர் 31, ஆண்டின் இறுதிநாளன்று, கத்தோலிக்கத் திருஅவையில், Te
Deum என்றழைக்கப்படும்
நன்றி வழிபாடு நிகழ்ந்து வருகின்றது. நாம் கடந்து வந்துள்ள 2020ம் ஆண்டில் இறைவனின்
கருணை நம்மை வழிநடத்தியதற்காகவும், நம்மைச் சுற்றி புதுமைகளை
ஒவ்வொருநாளும் புரிந்து வருவதற்காகவும், டிசம்பர் 31, இவ்வியாழன் மாலையில், ஆண்டவருக்கு நன்றி
கூறுவோம்.
நிறைவுபெறும்
2020ம் ஆண்டில், கோவிட்-19 கொள்ளைநோய்,
நம் முகங்களில் கவசங்களை மாட்டிவிட்டது. சாவையும், நோயையும், மட்டுமே பெரிதாகக் காட்டி, வேறு நல்லவற்றைக் காண இயலாமல், நம் கண்ணோட்டத்தைக் குறுக்கிவிட்ட கடிவாளமாகவும்
மாறிவிட்டது. இந்த கவசங்களையும், கடிவாளங்களையும் விரைவில்
நீக்கும் புதுமைகள், புத்தாண்டில் நடைபெறும் என்று ஆண்டவனை வேண்டி, அவர் தரும் நம்பிக்கையுடன் 2021ம் ஆண்டை
வரவேற்போம்.