விதையாகும் கதைகள் : எலிப்பொறி
என்னை ஒன்றும் செய்யாது...
விவசாயி ஒருவர் வீட்டில், கோழி, ஆடு, பசுமாடு ஆகியவை வளர்க்கப்பட்டன. அவ்வீட்டில்
ஓர் எலியும் வாழ்ந்துவந்தது. ஒருநாள், அந்த விவசாயி, எலிப்பொறி ஒன்றை வாங்கிவந்து, தன் மனைவியிடம் கொடுப்பதை, அந்த எலி பார்த்தது.
உடனே, அது, கோழி, ஆடு, மாடு அனைத்தையும் சந்தித்து, "வீட்டில் ஓர் எலிப்பொறி உள்ளது, எலிப்பொறி உள்ளது" என்று அலறியது.
"எலிப்பொறி எங்களை ஒன்றும் செய்துவிடாது. அது உன் பாடு. பத்திரமாக இரு" என்று
அவை அறிவுரை வழங்கின. மனமுடைந்த எலி,
தன்
வளைக்கு வருத்தத்துடன் திரும்பியது.
அன்றிரவு, எலிப்பொறியில் ஏதோ ஒன்று சிக்கிய சப்தம்
கேட்டது. சிக்கியது என்ன என்று பார்க்க, வீட்டுத்தலைவி, இருளில் தட்டுத் தடுமாறி அந்த அறைக்குள்
நுழைந்தார். அங்கு, ஒரு நச்சுப்பாம்பின் வால்
அந்தப் பொறியில் சிக்கியிருந்தது. வீட்டுத்தலைவி அருகில் வந்ததும், பாம்பு அவரைக் கொத்தியது.
வீட்டுத்தலைவர் தன் மனைவியை மருத்துவமனைக்குக்
கூட்டிச்சென்றார். மீண்டும் வீட்டுக்கு வந்த மனைவிக்குக் காய்ச்சல் அதிகமாகவே, வீட்டுத்தலைவர், தான் வளர்த்துவந்த கோழியை அடித்து, 'சூப்' செய்து, மனைவிக்குக் கொடுத்தார்.
மனைவியின் உடல்நலம் தேறவில்லை. அவரைக்
காணவந்த உறவினர்கள், அங்கேயே தங்கியதால், வீட்டுத்தலைவர்
ஆட்டை அடித்து அவர்களுக்கு விருந்து கொடுத்தார்.
இன்னும் இருநாள்கள் சென்று, வீட்டுத்தலைவி இறந்தார். ஊரெல்லாம் கூடிவந்ததால், வீட்டுத்தலைவர், தான் வளர்த்த பசுமாட்டைக் கொன்று விருந்து
கொடுத்தார்.
இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த எலி, "வீட்டில் எலிப்பொறி உள்ளது என்று நான் சொன்னபோது, எல்லாரும் அலட்சியம் செய்தனரே" என்று
மனம் வருந்தியது.
நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்குப் பிரச்சனைகள்
வரும்போது, 'எலிப்பொறி என்னை ஒன்றும்
செய்துவிடாது' என்று நாம் ஒதுங்கினால்,
நம் அக்கறையின்மைக்கு, ஏதோ ஒரு வழியில் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
உயிர்ப்புக்குப்பின்னும்
தொடரும் புதுமைகள் 2
கிராமத்தில்
வாழும் ஒரு குடும்பத்தின் தாயும், தந்தையும், குடும்பப்
பகையின் காரணத்தால் கொல்லப்படுகின்றனர். அவர்களுக்கு இரு குழந்தைகள். தாக்கவந்த கும்பலிடமிருந்து
தப்பி, அந்த இரு குழந்தைகளும்
காட்டிற்குள் ஓடும்போது, வெவ்வேறு திசையில் பிரிந்துவிடுகின்றனர்.
20
ஆண்டுகள் கழிந்து, இருவரும் சந்திக்கும்
ஒரு சூழல் உருவாகிறது. ஆனால், ஒருவர் ஒருவரை அடையாளம்
கண்டுகொள்ளமுடியவில்லை. அப்போது, சிறு வயதில், அவர்களது அம்மா பாடிய ஒரு பாடலை, அண்ணன்
பாடுகிறான். தம்பி அதைக் கேட்டதும்,
அவனும்,
அந்தப் பாடலை இணைந்து பாடுகிறான். அந்தப் பாடல், அவ்விருவரையும், மீண்டும் ஒன்று சேர்க்கிறது.
நாம்,
பலமுறை, பலவடிவங்களில் பார்த்து
இரசித்த திரைக்கதைகளில் இதுவும் ஒன்று. திரைக்கதைகளில் மட்டுமல்ல, உண்மை வாழ்விலும் இதுபோன்ற நிகழ்வுகள், நடந்துகொண்டுதான்
இருக்கின்றன. சிறு வயதில் பிரிந்து,
பல
ஆண்டுகள் கழித்து சந்திக்கும் குடும்பங்களில் ஒருவர் ஒருவரைப் பார்த்து அடையாளம் கண்டுகொள்ள
முடியாதபோது, ஏதோ ஒரு வார்த்தை, அல்லது ஒரு செயல், பழைய வாழ்வை நினைவுபடுத்தி, குடும்பங்களை மீண்டும் சேர்த்து வைத்துள்ளது.
இயேசுவின்
உயிர்ப்புக்குப் பிறகு, அவருக்கும், சீடர்களுக்கும் இடையே, இதையொத்த ஓர் அனுபவம்
பலமுறை ஏற்பட்டது. இவ்வளவுக்கும், அவர்கள் பிரிந்திருந்தது, மூன்றே நாட்கள்தான். ஆனால், அந்த மூன்று நாட்களில் நடந்தவை, சீடர்கள்
நினைவிலிருந்து இயேசுவின் உருவத்தை முற்றிலும் அழித்துவிட்டதைப்போல் இருந்தது. அதனால், அவர் உயிர்த்தபின், அவரை அடையாளம் கண்டுகொள்ள
முடியாமல் சீடர்கள் தடுமாறினர்.
வாழ்க்கையில்
ஏற்படும் மிக ஆழமான காயங்களை, அதிர்ச்சிதரும் வேதனைகளை,
நமது நினைவுகளிலிருந்து அழித்துவிடும் வலிமை பெற்றது நமது மூளை என்பது, உளவியல் அறிஞர்கள்
சொல்லும் ஓர் உண்மை. இந்த நிலைக்கு, Amnesia என்று பெயர். ஒருவேளை சீடர்களின் நினைவிலிருந்து,
அந்தக் கடைசி மூன்று நாட்கள் அழிக்கப்பட்டுவிட்டதைப் போல் தெரிந்தது.
இயேசுவின்
உயிர்ப்புக்குப் பின் நிகழ்ந்த பல சந்திப்புகளில், இயேசுவை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல்
தவிக்கும் சீடர்களும், இயேசுவுக்கு மிக நெருக்கமானவர்களும்,
இயேசுவின் ஒரு சொல், அல்லது, செயலால் அவரை அடையாளம் கண்டுகொள்கின்றனர்.
இயேசு
உயிர்த்தெழுந்த அன்று காலை, கல்லறைக்கு அவரைத் தேடிச்சென்றார்,
மகதலாவின் மரியா. அவருக்கு முன் இயேசுவே நேரில் தோன்றியும், அவரால் அடையாளம் கண்டுகொள்ள
முடியவில்லை. இயேசு அவரிடம், “ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். மரியா
அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், “ஐயா, நீர் அவரைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால்
எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச்செல்வேன்” என்றார். அத்தருணத்தில், இயேசு
அவரை "மரியா" என்று அழைத்ததும், அவர்
அடையாளம் கண்டுகொள்கிறார். (காண்க. யோவான் 20: 11-16)
எம்மாவு
என்ற ஊருக்கு இரு சீடர்கள் நடந்துசென்றனர். இயேசுவும் அவர்களோடு சேர்ந்து பேசிக்கொண்டே
நடந்தார். வழியெங்கும், அவர்களால் அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அன்று
மாலை, அவர்களோடு உணவருந்துகையில், இயேசு, அப்பத்தை எடுத்து
பிட்டுத் தந்தபோது, அவர்கள் கண்கள் திறந்து,
அவரை அடையாளம் கண்டனர் (லூக்கா 24: 30-31) என்று லூக்கா நற்செய்தியில்
வாசிக்கிறோம்.
கல்வாரியின்
கொடூர மரணத்திற்குப் பின், இயேசு மீண்டும் உயிரோடு
தங்கள் நடுவே வந்துள்ளார் என்ற புதுமையை, சீடர்கள்
புரிந்துகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும், அவர்களுக்கும், இயேசுவுக்கும் இடையே பல சந்திப்புக்கள் நிகழ்ந்தன.
இச்சந்திப்புக்களில், மூடிய அறைக்குள் வந்து
நின்றது, எம்மாவு சீடர்களின் கண்களிலிருந்து
மறைந்தது போன்ற செயல்களை, இயேசு ஆற்றிய புதுமைகளாகக்
கருதலாம். ஆனால், உயிர்ப்புக்குப்பின் நடந்ததாக,
நான்கு நற்செய்திகளிலும் பதிவாகியுள்ள நிகழ்வுகளில், ஒரே ஒரு தருணத்தில் மட்டுமே, இயேசு,
கூடுதலாக புதுமையொன்றை நிகழ்த்தினார். அதுதான், திபேரியக் கடலில் கிடைத்த மீன்பிடிப்பு என்ற
புதுமை.
யோவான்
நற்செய்தியின் இறுதியில் காணப்படும் இந்நிகழ்வை, (யோவான் 21: 1-19) நாம் ஒரு 'கிளைமாக்ஸ்' என்று கூறலாம். ஒரு 'நாவலை' வாசிக்கும்போது, அல்லது, ஒரு திரைப்படத்தைப்
பார்க்கும்போது, இறுதி பக்கங்களில்,
அல்லது, இறுதி மணித்துளிகளில் வரும் 'கிளைமாக்ஸ்', நமது கவனத்தை அதிகம் ஈர்க்கும். நாவல் முழுவதும்
நம் மனதில் தோன்றிய பல கேள்விகளுக்கு, இறுதிப் பகுதியில் பதில்கள் கிடைக்கும்.
உண்மையிலேயே, இந்நிகழ்வு இடம்பெற்றுள்ள 21ம் பிரிவு, யோவானின்
சீடர்களில் ஒருவர் இணைத்துள்ள பிற்சேர்க்கை என்பதை சென்ற விவிலியத்தேடலில்
சிந்தித்தோம். சில வேளைகளில், நாம் கடிதங்கள் எழுதும்போது, இறுதியில், ‘பின்குறிப்பு’ என்ற பகுதியில், "ஓ, சொல்ல மறந்துட்டேனே..." என்று
ஆரம்பித்து, ஒரு முக்கியமானச் செய்தியைச் சொல்வோமே, அவ்விதம் இந்த பிற்சேர்க்கைப் பகுதியை நாம்
எண்ணிப்பார்க்கலாம். திபேரியக் கடலில் கிடைத்த மீன்பிடிப்பு என்ற புதுமை, ஆழமான உண்மைகளை
உள்ளத்தில் விதைக்கின்றது.
யோவான்
தன் நற்செய்தியை, ஒரு வரலாற்றுப் பதிவாக
எழுதாமல், ஓர் இறையியல் பாடமாக அளித்துள்ளார்
என்பதை அறிவோம். இயேசுவின் கூற்றுகள்,
இயேசுவின்
செயல்கள் அனைத்தும், யோவான் நற்செய்தியில் பல இறையியல் எண்ணங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் வெளிப்படுத்துகின்றன. இந்தக்
கண்ணோட்டத்துடன், இப்புதுமையின் ஆரம்ப வரிகளுக்கு இப்போது செவிமடுப்போம்:
யோவான்
21: 1-3
பின்னர்
இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு: சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச்
சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு
இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர், அப்போது சீமோன் பேதுரு
அவர்களிடம், “நான் மீன்பிடிக்கப் போகிறேன்” என்றார். அவர்கள், “நாங்களும் உம்மோடு வருகிறோம்” என்று போய்ப் படகில் ஏறினார்கள்.
அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.
இந்நிகழ்வின்
ஆரம்பத்தில், கதைமாந்தர்களை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல்
என்று, ஆசிரியர் தன் அறிமுகத்தை ஆரம்பிக்கிறார். திதிம் என்ற தோமா என்று ஆசிரியர் குறிப்பிட்டதும், நமது நினைவில், உயிர்த்த இயேசு,
தோமாவைச் சந்தித்த நிகழ்வு நிழலாடுகிறது. அந்த நிகழ்வில், சந்தேகத்துடன் போராடி புண்பட்டிருந்த
தோமாவை இயேசு சந்தித்து, குணமாக்கியதை அறிவோம்.
அந்நிகழ்வின் ஒரு தொடர்ச்சிபோல, மற்றொரு குணமாக்குதல்
நிகழ்வு திபேரியக் கடலருகே நிகழ்ந்தது. இயேசுவைத் தனக்குத் தெரியாது என்று மறுதலித்த
பேதுருவை, உயிர்த்த இயேசு குணமாக்குவதை,
இந்த நிகழ்வில் காண்கிறோம்.
கதாப்பாத்திரங்களின்
அறிமுகத்திற்குப்பின், பேதுருவின்
தூண்டுதலால், அவர்கள் மீன்பிடிக்கப் புறப்பட்டனர் என்பதை யோவான்
குறிப்பிட்டுள்ளார். யூதர்களுக்கும்,
உரோமையர்களுக்கும்
அஞ்சி, மேல்மாடியில், பூட்டிய
அறைக்குள் பதுங்கியிருந்த சீடர்கள்,
தங்கள்
பழைய வாழ்வுக்கேத் திரும்பிவிடலாம் என்ற எண்ணத்துடன் போராடிக்கொண்டிருந்தபோது, அவர்களது போராட்டத்தைத் தீர்க்கும் ஓர்
அழைப்பைப்போல் ஒலித்தது, பேதுருவிடமிருந்து வந்த
யோசனை: "நான் மீன் பிடிக்கப் போகிறேன்".
மீன்
பிடிப்பதை தங்கள் வாழ்வாகக் கொண்டிருந்த எளிய மனிதர்களை, "இனி நான் உங்களை மனிதரைப்
பிடிப்பவர் ஆக்குவேன்" (மத். 4:19; மாற். 1:17; லூக். 5:10) என்று உறுதி அளித்து,
இயேசு அழைத்தார். அவரை நம்பி, தங்கள் தொழிலை, படகுகளை, வலைகளை, தங்கள் குடும்பங்களை விட்டு விட்டு இயேசுவைப்
பின்தொடர்ந்தவர்கள் அந்தச் சீடர்கள். இப்போது... இயேசுவே இல்லை என்றான பின், அவரது அந்த சொல்லை மட்டும் நம்பி எத்தனை
நாட்கள் வாழமுடியும்? மேலும், சீடர்கள், மக்களைப்
பிடிப்பதற்குப்பதில், மக்கள், இவர்களைப் பிடித்து,
உரோமையர்களிடம் ஒப்படைத்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், அந்தச் சீடர்கள் பதுங்கிவாழ்ந்தனர்.
மக்களைப்
பிடிக்கும் கனவுகளையெல்லாம் மூட்டை கட்டிவிட்டு, மீண்டும் பழையபடி மீன்களைப் பிடிக்கும் தொழிலுக்கேத்
திரும்பலாம் என்று தீர்மானித்தனர் சீடர்கள். பேதுருவின் அழைப்பு வந்ததுதான் தாமதம்...
"நாங்களும் உம்மோடு வருகிறோம்" என்று அனைவரும் கிளம்பினர். கடந்த
மூன்றாண்டுகள், இயேசுவுடன் அவர்கள் வாழ்ந்த அற்புதமான வாழ்வு இனி திரும்பப் போவதில்லை
என்ற தீர்மானத்தில், பழைய பாதுகாப்பான வாழ்வைத்
தேடிச்செல்லும் மீனவர்களாக அவர்கள் மாறிவிட்டனர். அந்தப் பழைய வாழ்வில் அவர்கள் முதலில்
சந்திப்பது, ஏமாற்றம்.
“இரவு முழுவதும்
அவர்கள் முயன்றும், 'மீன் ஒன்றும்
கிடைக்கவில்லை' (யோவான் 21:
3) என்று கூறப்பட்டுள்ளது. பொதுவாக, இரவில்தான் அதிகமாக மீன்பிடிக்க
முடியும். ஆனால்,
இவர்களுக்கோ, இரவு முழுவதும் மீன்கள் கிடைக்கவில்லை. யோவான் கூறும்
‘இரவு’, அவர்கள் மீண்டும் தங்கள் பழைய வாழ்வுக்குச் சென்ற அந்த நிலையையும் சேர்த்துக்
குறிப்பதாக நாம் எண்ணிப்பார்க்கலாம். அவர்கள் தங்கள் பழைய வாழ்வைத் தேடிச்சென்றும், ஒரு பலனும் அவர்களுக்குக்
கிடைக்கவில்லை என்பதைத்தான், “இரவு முழுவதும் அவர்கள் முயன்றும் ஒன்றும் கிடைக்கவில்லை”
என்று யோவான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். சீடர்கள் அடைந்த அந்த ஏமாற்றத்தைத்
தொடர்ந்து, அங்கு நிகழ்ந்ததை, நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.
No comments:
Post a Comment