A well-used Bible
புதியதோர்
ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இவ்வேளையில், நாம் ஒருவரையொருவர் சந்திக்கும்போதும், தொலைப்பேசியில் அழைக்கும்போதும், நாம் பயன்படுத்தும்
முதல் சொற்கள், வாழ்த்துக்களாக ஒலிக்கின்றன.
வாழ்த்தும், ஆசியும் அதிகம் ஒலிக்கும் இந்நாள்களில், திருவழிபாட்டிலும், ஆசி நிறைந்த சொற்களையே
நாம் அதிகம் கேட்டுவருகிறோம்.
சனவரி
1, புத்தாண்டு நாளன்று, மரியா இறைவனின் தாய் என்ற பெருவிழாவைக் கொண்டாடிய
வேளையில், நாம் செவிமடுத்த முதல்
வாசகத்தில், இஸ்ரயேல் மக்களுக்கு எவ்வாறு
ஆசி வழங்கவேண்டும் என்பதை, இறைவன், மோசேக்கு சொல்லித்தந்தார் என்று வாசிக்கிறோம்:
எண்ணிக்கை
நூல் 6:22-27
ஆண்டவர்
மோசேயிடம் கூறியது: நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல். நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு
ஆசிகூற வேண்டிய முறை: ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை
உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம்
திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக! இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே
நிலைநாட்டுவர்: நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.
இறைவன்
சொல்லித்தந்த இந்த ஆசி மொழிகளை, முதல் வாசகமாகக் கேட்டபின், திருப்பாடல் 67லிலிருந்து இறைவனின் ஆசியை
மன்றாடி, வேண்டுதல் செய்தது,
நமது பதிலுரைப் பாடலாக அமைந்தது:
திருப்பாடல்
67: 1-2, 4-5,7
கடவுளே!
எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!
உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்:
பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர்.
வேற்று
நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன்
ஆளுகின்றீர்: உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர்.
கடவுளே!
மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள்
நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக!
இவ்வாறு
ஆசி நிறைந்த சொற்களை புத்தாண்டின் முதல் நாளன்று திருவழிபாட்டில் செவிமடுத்த நாம்,
அந்த ஆசியை, ஆண்டு முழுவதும், பிறரோடு பகிர்ந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். இவ்வாறு
ஆசி வழங்க, விவிலியம், நமக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதில், யாருக்கும்
மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
விவிலியம்
முழுவதும் ஆசி மொழிகள் நிறைந்துள்ளன. அதிலும் குறிப்பாக, விவிலியத்தில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும்
நூலான, திருப்பாடல்கள் நூலில், இறைவனின் ஆசிவேண்டி எழுப்பப்படும் விண்ணப்பங்கள் பதிவு
செய்யப்பட்டுள்ளன. ஆசி மொழிகள் நிறைந்த திருப்பாடல்கள் நூலில், இப்புத்தாண்டில், நாம்,
புதியதொரு விவிலியத்தேடல் பயணத்தைக் துவக்குகிறோம்.
என்
நண்பர் ஒருவரும், அவரது மனைவியும், பல செபக்கூட்டங்களை முன்னின்று நடத்திவந்தனர். ஒவ்வொரு
செபக்கூட்டத்திற்கும் அவர்கள் தவறாமல் எடுத்துச்செல்வது, அவர்களது விவிலியம். அவர்களிடம்
இருந்த விவிலியத்தைக் கண்டு நான் வியந்ததுண்டு. அந்த இரு விவிலியங்களும், ஓரங்கள் மடிந்து, ஒரு சில பக்கங்கள், தையல் பிரிந்து... பார்க்கப்
பரிதாபமாய் இருக்கும்.
புது
விவிலியங்கள் அவர்களுக்கு பரிசாக வந்தாலும், பல
ஆண்டுகளாய், அவர்கள் பயன்படுத்திய அந்த விவிலியங்கள்தான் அவர்கள் எப்போதும் ஏந்திச்சென்ற
கருவூலங்கள். அந்த விவிலியங்களை நான் புரட்டிப் பார்த்தபோது, திருப்பாடல்கள் பகுதி, பக்கம் பக்கமாக, வண்ண
மை கொண்டு கோடிடப்பட்டிருந்தன. ஒருசில பக்கங்கள், இலேசாகக்
கிழிந்து, ஒட்டுபோடப்பட்டிருந்தன.
நான்
வைத்திருக்கும் விவிலியத்திற்கும் ஏறத்தாழ இதே நிலைதான். உங்களிடம் உள்ள விவிலியமும்
இப்படி இருக்கும் என்று என்னால் யூகிக்கமுடிகிறது. விவிலியத்தின் பக்கங்கள், கிழிந்துபோய், ஒட்டப்பட்டு, தையல் பிரிந்திருப்பதில் இவ்வளவு பெருமையா? ஆம், அன்பர்களே. இப்படி ஒரு நிலை நம் விவிலியங்களுக்கு
ஏற்படுவது பெருமைக்குரிய விடயம். விவிலியத்தை அவ்வளவு பயன்படுத்துகிறோம் என்பதுதானே
இதன் பொருள்? நாம் பயன்படுத்தும் விவிலியத்தைப்
புரட்டிப்பார்த்தால், அங்கு, மிக அதிகமாக நாம்
பயன்படுத்தும் ஒரு நூல், திருப்பாடல்கள் நூல் என்பது நமக்குத் தெரியவரும்.
திருப்பாடல்கள்
நூல், அள்ள, அள்ள, குறையாத, ஓர் அமுதசுரபி.
பல்வேறு வண்ணங்களை வெளிப்படுத்தும், ஒரு வைரம். தோண்ட, தோண்ட, பொங்கிவரும் ஒரு நீர்ச்சுனை... இன்னும்
பல்வேறு அடைமொழிகளில், இந்நூலை வர்ணிக்கலாம். அனைத்தும் இந்த நூலுக்குப் பொருத்தமாக
இருக்கும்.
நமது
தனிப்பட்ட வாழ்வில், பல நிகழ்வுகளில்,
பல்வேறு
மன நிலைகளில், திருப்பாடல்களின் வரிகளை, தியானித்திருக்கிறோம். பயனடைந்திருக்கிறோம்.
அதேபோல், நமது இல்ல விழாக்களில், குழு செபங்களில், திருவழிபாடுகளில், நாம் திருப்பாடல்களைப்
பயன்படுத்தியிருக்கிறோம். அனைத்துச் சூழல்களிலும், அர்த்தமுள்ள எண்ணங்களை இந்நூல்
வழங்குவதால், இது ஓர் அமுதசுரபி.
ஒவ்வொரு
முறையும் ஒரு திருப்பாடலைப் பயன்படுத்துகிறோம். அடுத்தமுறை, அதே திருப்பாடலை, வேறொரு
நாள் படிக்கும்போது, அன்றையச் சூழ்நிலைக்குத் தகுந்தது போல், அந்தத் திருப்பாடல், நமக்கு
பொருள் தருவதையும் உணர்ந்திருக்கிறோம். வெவ்வேறு நாள்களில், வெவ்வேறு வண்ணங்களை,
எண்ணங்களாகத் வெளிப்படுத்துகின்றதே, அதனால், இது ஒரு வைரம்.
விவிலியத்திலேயே,
திருப்பாடல்கள், ஒரு சராசரி நாளில், எவ்வளவு அதிகமாய் பயன்படுத்தப்படுகிறது என்பதைப்
புரிந்துகொள்ள, இதோ, ஒரு கணக்கு:
கத்தோலிக்க
அல்லது கிறிஸ்தவ திருவழிபாடுகளில், வருடத்தின் 365 நாட்களில், குறைந்தது, 300 நாட்களாகிலும்,
திருப்பலியில், பதிலுரைப்பாடலாக, திருப்பாடல்கள் இடம்பெறுகின்றன. ஒரு நாளுக்கு, 24
மணி நேரங்கள். அந்த 24 மணி நேரங்களில், உலகின் ஏதாவது ஒரு மூலையில், ஒரு திருப்பலி
நிகழ்ந்தவண்ணம் இருக்கும். அங்கு, திருப்பாடல்கள், வாசிக்கப்படும், அல்லது,
இசைக்கப்படும்.
அத்துடன், பல துறவு இல்லங்களில், அருள்பணித்துவ பயிற்சி இல்லங்களில், தினமும், காலை, மதியம், மாலை செபங்களில் திருப்பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த இரு நிகழ்வுகளை மட்டும் கருத்தில்கொண்டு கணக்கிடும்போது, இந்த பூமிக்கோளத்திலிருந்து, திருப்பாடல்கள்
என்ற நூலின் பல பகுதிகள், பாடல்களாக,
வாசகமாக, செபமாக, வான்வெளியில், 24 மணி நேரமும்,
365 நாட்களும், ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
இவையன்றி, தனிப்பட்டவர்களின் வீட்டு விழாக்களில், செபக்கூட்டங்களில், நோயுற்றோர் படுக்கையருகில் என்று, பல சூழல்களிலும்,
இந்நூலின் பல பகுதிகள் வாசிக்கப்பட்ட வண்ணம் இருக்கும். மொத்தத்தில், இந்த உலகத்தை ஒரு மனிதப்பிறவியாக கற்பனை
செய்தால், அந்த மனிதப்பிறவி, இடைவிடாமல்,
உள்வாங்கி, வெளிவிடும் மூச்சைப்போல், திருப்பாடல்கள் அமைந்திருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.
அமுதசுரபி, வைரம், நீர்ச்சுனை, உயிர்மூச்சு... என்று, பல கோணங்களில்
நாம் சிந்திக்கும் இந்நூல், இவ்வளவு பயனுள்ள நூலாக விளங்க காரணம் என்ன? இந்நூல் தருவதெல்லாம் இறைவேண்டல்களும், கவிதைகளும். நம் தனிப்பட்ட வாழ்விலும், பொதுவாழ்விலும் காணக்கிடக்கும் பல உண்மைகளை, உணர்ச்சிக் கொந்தளிப்புகளை, மகிழ்ச்சிகளை, துக்கங்களை எடுத்துக்கூறும் எளிய நூல்
இது.
வாழ்க்கையின்
எதார்த்தங்கள், இந்நூலின் பல பாடல்களில் எதிரொலிப்பதால், வாழ்வின் பலச் சூழல்களுக்கு, இந்நூலிலிருந்து,
பொருள் தேடிக்கொள்கிறோம். நம் தேடல், சில வேளைகளில், குழந்தைத்தனமாக இருப்பதுபோல் தெரியலாம்.
எடுத்துக்காட்டாக, நம்மில் பலர், நம் தினசரி வாழ்வில், ஒரு
பிரச்சனைக்குத் தீர்வுகாண விழையும்போது, ஒரு முக்கிய முடிவெடுப்பதற்கு
முன், விவிலியத்தைக் கையில்
எடுத்து, கண்களை மூடி, எதேச்சையாக
ஒரு பக்கத்தைத் திறப்போம், அங்கு, நம் கண்களில் படும்
விவிலிய வாக்கியத்தைப் படிப்போம். அதை, இறைவன், அன்று நமக்கு வழங்கும் வார்த்தையாக, நாம் எதிர்கொண்டுள்ள பிரச்சனைக்கு ஒரு முடிவாக
நாம் ஏற்றுக்கொள்வோம்.
இத்தகைய
ஒரு சூழ்நிலையில், நாம் விவிலியத்தில் அடிக்கடி திறக்கும் ஒரு பகுதி திருப்பாடல்கள்
நூலாக இருக்கும். இவ்வாறு நாம் சொல்வதற்கு, காரணம் உண்டு. எந்த ஒரு விவிலியத்திலும், திருப்பாடல்கள் நூல், ஏறத்தாழ, மையப்பகுதியில்
அமைந்திருப்பதால், விவிலியத்தை, எதேச்சையாகப்
பிரிக்கும்நேரத்தில், திருப்பாடல்கள் நூலை நாம் பிரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இவ்வாறு,
வாழ்வில் பிரச்சனைகளைத் தீர்க்க, முக்கியமான முடிவுகள்
எடுக்க, நம்மில் பலர், விவிலியத்தை
எதேச்சையாக திறக்கும் வேளையில், அது, திருப்பாடல்கள் நூலாக இருந்திருக்க வாய்ப்பு
உண்டு.
விவிலியத்தின்
மையப்பகுதியாக திருப்பாடல்கள் இருப்பதைக் குறித்து, இணையதளத்தில் பல்வேறு தகவல்கள்
உள்ளன. ‘Centre
of the Bible’ ‘விவிலியத்தின் மையம்’
என்ற தலைப்பில், இணையதளத்தில் தேடினால், நமக்குக்
கிடைக்கும் தகவல்கள் இவை:
விவிலியத்தின்
மையம் திருப்பாடல்களின் 118ம் பிரிவு. அதாவது, 118ம் திருப்பாடலுக்கு முன், விவிலியத்தில்,
594 பிரிவுகள் உள்ளன. 118ஆம் திருப்பாடலுக்குப் பின் 594 பிரிவுகள் உள்ளன. பிரிவுகள்
என்ற எண்ணிக்கையில், விவிலியத்தின் மையமாக உள்ள 118ம் திருப்பாடல், அழகான ஒரு நன்றிப்
புகழ்மாலை. நாம் துவங்கியிருக்கும் புத்தாண்டில் இத்தகைய நன்றி உணர்வுடன் அந்தத் திருப்பாடலிலிருந்து
ஒரு சில வரிகளை இப்போது கேட்போம்.
திருப்பாடல்
118
ஆண்டவருக்கு
நன்றி செலுத்துங்கள்,
ஏனெனில்
அவர் நல்லவர்: என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு... நெருக்கடியான வேளையில் நான் ஆண்டவரை
நோக்கி மன்றாடினேன்: ஆண்டவரும் எனக்குச் செவி கொடுத்து என்னை விடுவித்தார். ஆண்டவர்
என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும்? மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும்? மனிதர்மீது நம்பிக்கை
வைப்பதைவிட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!... ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.
நான் இறந்தொழியேன்: உயிர் வாழ்வேன்: ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன்... ஆண்டவருக்கு
நன்றி செலுத்துங்கள்: ஏனெனில், அவர் நல்லவர்: என்றென்றும் உள்ளது அவரது
பேரன்பு.
திருப்பாடல்கள்
நூலில் புதியதொரு விவிலியத் தேடல் தொடரை ஆரம்பித்திருக்கிறோம். முதல் சில தேடல்களில்,
இந்நூலின் தனி சிறப்புகளைச் சிந்தனை செய்வோம். இந்நூலை, ஒரு கவிதைத் தொகுப்பாக, இறைவேண்டல் தொகுப்பாக, நாம் அடுத்துவரும்
விவிலியத்தேடல்களில் சிந்திப்போம்.
No comments:
Post a Comment