Tears are prayers too
பரந்து
விரிந்த கடல்பரப்பில் மிதந்துசெல்லும் ஒரு கப்பலை கற்பனையில் காணமுயல்வோம். அக்கப்பலில்
பயணிக்கும் பலருக்கு இதமான உணர்வுகள் நிறைந்திருக்கும். கண்ணுக்கெட்டிய தூரம்வரை, நீலக்கடல், மேலே, ஆங்காங்கே வெண்மேகங்கள் மிதக்கும்
நீலவானம், காதால்
கேட்பதெல்லாம், கடல்நீரின் ஓசை. இத்தகைய ஒரு சூழல், இதமான உணர்வுகளைத் தருவதில் வியப்பேதும்
இல்லை.
அப்போது, எதிர்பாராதவண்ணம், திடீரென, கருமேகங்கள் சூழ்ந்து, புயல் உருவானால், பயணிகளின் மனநிலை முற்றிலும் மாறும். அவ்வேளையில், பயணிகளின் மனங்களில் 'எப்போது கரைசேருவோம்' என்ற கேள்வியே மேலோங்கி இருக்கும். புயலும், அலைகளும் சூழ்ந்த கப்பலை ஓட்டிச்செல்லும்
மாலுமி, பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக
இருந்தால், எத்தனை கடினமான ஆபத்திலும், கரையில் இருப்போருடன், தொடர்புகளை ஏற்படுத்தி,
கப்பலை, பத்திரமாகக் கரைசேர்ப்பார்.
19ம்
நூற்றாண்டில் வாழ்ந்த சார்ல்ஸ் ஸ்பர்ஜன் (Charles
Spurgeon) என்ற புகழ்பெற்ற ஆங்கிலேய
மறையுரையாளர், புயல்சூழ்ந்த கப்பலை வழிநடத்தும் இந்த மாலுமியின் உருவகத்தைப் பயன்படுத்தி, 17ம் திருப்பாடலின் விளக்கவுரையைத்
துவக்கியுள்ளார். மன்னர் தாவீது, ஆண்டவருடன் தொடர்புகொள்வதில்
அதிக அனுபவம் பெற்றவர் என்பதால், பிரச்சனைகள் என்ற
புயல் சூழ்ந்ததும், அவரால், ஆண்டவரை, விரைவில்,
தொடர்புகொள்ள முடிந்தது, உதவிகளைப் பெறமுடிந்தது என்று, ஸ்பர்ஜன் அவர்கள், கூறியுள்ளார்.
17ம்
திருப்பாடலின் துவக்கத்தில், ஆண்டவரிடம், தாவீது எழுப்பும் மன்றாட்டு, இவ்வாறு பதிவாகியுள்ளது: ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக்
கேட்டருளும்: என் வேண்டுதலை உற்றுக் கேளும். (திருப்பாடல் 17:1) இந்த ஆரம்ப வரியில், 'என் வேண்டுதலை உற்றுக்கேளும்' (திருப்பாடல் 17:1) என்ற சொற்கள், ஆங்கிலத்தில், "Attend
to my cry", அதாவது, "என் அழுகையைக் கவனித்தருளும்" என்று, பதிவாகியுள்ளன.
‘அழுகை’ என்ற சொல்லை மையப்படுத்தி, மறையுரையாளரான
ஸ்பர்ஜன் அவர்கள் வழங்கியுள்ள விளக்கம்,
அழகானது. "உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், கற்றுக்கொள்ளும் முதல் மொழி, அழுகை. மனித ஒலிகளிலேயே மிக இயல்பாக வெளிப்படுவது, அழுகுரல். நமது செபம், அறிவிலிருந்த உருவான சொற்களாய் இருப்பதைக்காட்டிலும், குழந்தையின் அழுகையைப்போல் இயல்பாக இருந்தால், அது இறைவனுக்கு முன் உண்மையாக ஒலிக்கும்.
பெற்றோரின் உள்ளத்தை வெல்வதற்கு, குழந்தையின்
அழுகுரலைக்காட்டிலும் சக்திவாய்ந்தது வேறெதுவும் இல்லை" என்று, ஸ்பர்ஜன் அவர்கள், 17ம் திருப்பாடலின் முதல்
வரிக்கு விளக்கமளித்துள்ளார்.
அழுகையையும், இறைவேண்டலையும் இணைத்து, ஸ்பர்ஜன் அவர்கள் வழங்கியிருக்கும்
இவ்விளக்கம், கண்ணீருடன் தன் மகனுக்காக
17 ஆண்டுகள் இறைவேண்டல் செய்த ஓர் அன்னையை நம் நினைவுக்குக் கொணர்கிறது. ஆகஸ்ட் 28, கடந்த சனிக்கிழமை, நாம் நினைவுகூர்ந்த மாபெரும்
புனிதரான அகுஸ்தீன் அவர்களின் அன்னை,
புனித
மோனிக்கா அவர்கள், கண்ணீருடன் எழுப்பப்படும்
இறைவேண்டலின் சக்தியை இவ்வுலகிற்கு உணர்த்தியவர்.
தன்
மனமாற்றத்திற்காக, தன் அன்னை வடித்த கண்ணீரையும், எழுப்பிய செபங்களையும் குறித்து, புனித அகுஸ்தீன் அவர்கள், தான் எழுதிய 'Confessions' என்ற
நூலில் தன் எண்ணங்களை பதிவுசெய்துள்ளார்.
அற்புத
அறிவுத்திறன் கொண்ட இளைஞர் அகுஸ்தீன்,
Manichean என்றழைக்கப்பட்ட தவறான கொள்கையை நம்பி, வேறு பல தவறான வழிகளில் செல்வதைக் கண்ட அவரது
அன்னை மோனிக்கா அவர்கள், ஒரு கத்தோலிக்க ஆயரின்
துணையை நாடினார். இந்த ஆயர், மிலான் நகரின் புனித அம்புரோஸ்
என்று வரலாற்று குறிப்புகள் கூறினாலும், அவரது
பெயரைக் குறிப்பிடாமல், புனித அகுஸ்தீன், 'ஒரு கத்தோலிக்க ஆயர்' என்று மட்டும் தன் நூலில் பதிவு செய்துள்ளார்.
அந்த
கத்தோலிக்க ஆயரிடம் சென்ற அன்னை மோனிக்கா அவர்கள், தன் மகனுக்கு ஆயர் அவர்கள்
அறிவுரை வழங்குமாறு அவரை வேண்டினார். தன் உதவியை நாடிவந்த அன்னை மோனிக்காவிடம், ஆயர்
அவர்கள், அறிவுரைகளுக்கு செவிமடுக்கும்
பக்குவம் இளைஞர் அகுஸ்தீனிடம் இல்லை என்று கூறி, அவருக்கு உதவிசெய்ய
மறுத்துவிட்டார். இருப்பினும், அந்த அன்னை, தொடர்ந்து, ஆயரைச் சந்தித்து, கண்ணீருடன் தன் விண்ணப்பத்தை, மீண்டும், மீண்டும் சமர்ப்பித்தார். இறுதியில், அந்த
ஆயர், பொறுமை இழந்து, புனித மோனிக்காவிடம் கூறியதை, அகுஸ்தீன், தன் நூலில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்:
"நீ அமைதியாகப் போ. கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார். இவ்வளவு கண்ணீருக்குச்
சொந்தமான உன் மகன் அழிவதற்கு அவர் விடமாட்டார்" என்று, ஆயர், தன் அன்னையிடம்
கூறியதாக, புனித அகுஸ்தீன் கூறியுள்ளார்.
இதே
நூலில், மற்றுமொரு இடத்தில், புனித அகுஸ்தீன், நயீன் நகரக் கைம்பெண்ணைப் பற்றி தன் சிந்தனைகளை
எழுதியபோது, இறந்த மகனின் இறுதி ஊர்வலத்தில்
கண்ணீருடன் நடந்து சென்ற அந்த கைம்பெண்ணின் கண்ணீரை இயேசு துடைத்தார். அதுபோலவே, ஆன்மீக அளவில் இறந்துபோன தான் மீண்டும் உயிர்
பெறவேண்டும் என்று தன் அன்னை, கண்ணீருடன் எழுப்பிய வேண்டுதல்,
ஆண்டவரால் கேட்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
தன்
அன்னையின் கண்ணீர் நிறைந்த இறைவேண்டுதல்களால் மனம் மாறிய புனித அகுஸ்தீன், தன் மனமாற்றத்திற்குப்பின், தன் பாவங்களைக் கழுவ சிந்திய கண்ணீரைப்பற்றியும்
தன் சிந்தனைகளைப் பகிர்ந்துள்ளார். இவரைப்போலவே, மன்னர் தாவீதும், தன் பாவங்களுக்காக கண்ணீருடன் இறைவேண்டல்
செய்திருப்பார் என்பது உறுதி. 17ம் திருப்பாடலின் முதல் வரிகளில், 'என் வேண்டுதலை உற்றுக்கேளும்' அல்லது, "என் அழுகையைக் கவனித்தருளும்" என்று கூறப்பட்டுள்ள சொற்கள், கண்ணீருடன் எழுப்பப்படும் இறைவேண்டலின்
சக்தியை நமக்கு உணர்த்துகின்றன.
அழுகையின், கண்ணீரின் சக்தியை மன்னர் தாவீது நன்கு அறிந்திருந்தார்.
எனவே, திருப்பாடல்கள் நூலில், மூன்றில் இரண்டு பகுதி, கண்ணீரில் நனைந்த பாடல்களாக அமைந்துள்ளன
என்று விவிலிய விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர். நாம் சிந்தும் கண்ணீரை இறைவன் நன்கு
அறிவார் என்பதை, தாவீது, 56ம் திருப்பாடலில் அழகாகப் பதிவுசெய்துள்ளார்:
என் துன்பங்களின் எண்ணிக்கையை நீர் அறிவீர்; உமது தோற்பையில் என் கண்ணீரைச்
சேர்த்து வைத்துள்ளீர்;
இவையெல்லாம்
உம் குறிப்பேட்டில் உள்ளன அல்லவா? (திருப்பாடல்
56:8)
இறைவாக்கினர்களும், கண்ணீருடன் செபிப்பதை, மேன்மையான ஆன்மீக சக்தியாகக் கருதினர். 'புலம்பும் இறைவாக்கினர்' என்று பெயர் பெற்ற எரேமியா உருவாக்கிய ஒரு நூல், 'புலம்பல் நூல்' அல்லது, 'புலம்பல் ஆகமம்' என்று அழைக்கப்படுகிறது. எருசலேமுக்கு நேரிட்ட
பேரழிவையும், அதன் விளைவாக, இஸ்ரயேல்
மக்கள் நாடுகடத்தப்பட்டதையும் மையப்படுத்தி, 'புலம்பல்
நூல்' உருவானது. எரேமியாவைப்போலவே, இறைவாக்கினர்கள் எசாயா, மற்றும், தானியேல்
ஆகியோரும், வழிதவறி சென்ற இஸ்ரயேல் மக்களுக்காக, கண்ணீர் சிந்தி, இறைவனிடம்
பரிந்துபேசினர் என்பதை, விவிலியத்தில் காண்கிறோம்.
மக்களின்
பாவங்கள் பெருகியதைக் கண்டு, இறைவன் மனம் வருந்தினார்
என்பதை தொடக்க நூலில் இவ்வாறு வாசிக்கிறோம்: மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை
பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும்
ஆண்டவர் கண்டார். மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது
உள்ளம் துயரமடைந்தது. (தொடக்க நூல் 6:5-6)
பழைய
ஏற்பாட்டில், ‘தோரா’ (Torah) என்றழைக்கப்படும் முதல்
ஐந்து நூல்களுக்கு, யூத மத ‘ரபி’கள் வழங்கிய விளக்கங்கள் அடங்கிய 'மித்ராஷ்' (Midrash) என்ற நூலில், இறைவனின் உள்ளம் துயரமடைந்தது என்ற கூற்றுக்கு, 'இறைவன் கண்ணீர் சிந்தினார்' என்ற
விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டில், இயேசு, தன் நண்பர் இலாசரின் கல்லறை அருகில்
கண்ணீர் வடித்ததையும், எருசலேம் நகருக்காகப்
புலம்பியதையும் அறிவோம் (காண்க. யோவான் 11:35; லூக்கா 13:34)
இவ்வாறு, கண்ணீருடன் எழுப்பப்படும் இறைவேண்டல், விவிலியத்தில், தனியிடம் பெற்றுள்ளது. நாம்
சிந்தும் கண்ணீர், வெறும் துன்பத்தின் வெளிப்பாடாக, நம்பிக்கையற்ற நிலையின் வெளிப்பாடாக இல்லாமல், இறைவன் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் வெளிப்படும்
கண்ணீராக அமையவேண்டும். இந்த எண்ணத்தை,
புனித
பவுல் கொரிந்தியருக்கு எழுதிய 2ம் திருமுகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: கடவுளுக்கு
ஏற்புடைய முறையில் தாங்கிக் கொள்ளப்படும் மனவருத்தம், மீட்புதரும் மனமாற்றத்தை விளைவிக்கிறது.
இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் உலகப் போக்கிலான மனவருத்தம், சாவை விளைவிக்கும்.
(2 கொரிந்தியர் 7:10) இத்தகைய நம்பிக்கை நிறைந்த
கண்ணீர், தாவீதிடமிருந்து எழுந்தது.
புனித மோனிக்காவிடமிருந்து எழுந்தது.
'என் வேண்டுதலை உற்றுக்கேளும்' அல்லது, "என் அழுகையைக் கவனித்தருளும்" என்று ஆரம்பமாகும்
17ம் திருப்பாடலில் நாம் தேடலை மேற்கொண்டுள்ள இவ்வேளையில், கண்ணீரோடு இறைவேண்டல் மேற்கொண்ட அன்னை, புனித
மோனிக்காவைப் போல, தற்போது, ஆப்கானிஸ்தானில் ஆயிரமாயிரம் அன்னையர், கண்ணீரோடு
இறைவேண்டலை எழுப்பிவருவதை நாம் அறிவோம். கண்ணீரோடு, அவர்கள் எழுப்பிவரும் இறைவேண்டலுக்கு
ஆண்டவர் செவிமடுத்து, அவர்களுக்கும்,
அவர்களது குடும்பங்களுக்கும், நல்வாழ்வை வழங்கவேண்டும் என்ற உருக்கமான வேண்டுதலுடன்,
நம் தேடலை இன்று நிறைவுசெய்வோம்.
No comments:
Post a Comment