உலகைச்
சுற்றிவந்த இரு வானத்தூதர்களைப் பற்றிய ஒரு பாரம்பரியக் கதையுடன் இன்றையத் தேடலைத்
துவக்குவோம். இவ்விரு வானத்தூதர்களும், தனித்தனியே சுமந்து சென்ற கூடைகளில், உலகிலிருந்து எழுப்பப்படும் செபங்களையெல்லாம்
சேகரித்தவண்ணம் சென்றனர். அந்த நாள் இறுதியில், ஒரு வானதூதரின் கூடை நிறைந்து வழிந்ததால், அவரால், அதைச் சுமக்கமுடியாமல் தடுமாறினார்.
மற்றொருவரின் கூடையிலோ மிகக் குறைந்த செபங்களே இருந்தன.
முதல்
தூதர், இவ்வுலகிலிருந்து விண்ணப்பங்களாக
எழுந்த செபங்களைத் திரட்டினார். 'இது வேண்டும், அது வேண்டும்' என்ற வேண்டுதல்கள் திரட்டப்பட்ட அவரது கூடை
நிரம்பி வழிந்தது. இரண்டாவது தூதரோ, இவ்வுலகிலிருந்து, நன்றியாக எழுந்த செபங்களைத்
திரட்டினார். நன்றி செபங்கள் திரட்டப்பட்ட அந்தக் கூடை, ஏறத்தாழ காலியாக இருந்தது.
கிடைத்த
நன்மைகளுக்கு நன்றி சொல்லும் நேரங்களைவிட, இன்னும்
தேவை என்று விண்ணப்பிக்கும் நேரங்களே நம்வாழ்வில் அதிகம் என்பதை நாம் மறுக்க
இயலாது. மனித உணர்வுகளில், அரிதாகிவரும் நன்றி உணர்வைக்
குறித்த சிந்தனைகளை மீண்டும் ஒருமுறை நமக்குள் புதுப்பித்துக்கொள்ள, நாம் தற்போது தேடலை மேற்கொண்டுள்ள 18வது திருப்பாடல் நமக்கு உதவியாக உள்ளது.
திருப்பாடல்கள்
நூலில் காணப்படும் 150 பாடல்களில், 24 பாடல்கள், அதாவது, 6ல் ஒரு பகுதி பாடல்களே, நன்றியும், புகழும் ஒலிக்கும் பாடல்களாக அமைந்துள்ளன.
ஏனைய பாடல்கள் விண்ணப்பங்களையும், வேதனைகளையும் வெளிப்படுத்தும் பாடல்களாக
அமைந்துள்ளன. நாம் தற்போது தேடலை மேற்கொண்டுள்ள 18வது திருப்பாடல் முழுவதிலும், நன்றியுணர்வும், இறைவன் ஆற்றிய செயல்களைக் குறித்த வியப்புணர்வும்
வெளிப்படுகின்றன. எதிரிகள் கையினின்றும், சவுலின்
கையினின்றும் ஆண்டவர் தன்னை விடுவித்ததால், தாவீதின்
உள்ளத்தில் மேலோங்கியிருந்த நன்றியுணர்வு, இப்பாடலின்
பல வரிகளை, கவிதை நயத்துடனும், உருவகச் செறிவுடனும் உருவாக்கியுள்ளது.
18வது திருப்பாடலின் கவிதை நயத்தையும்,
உருவகச்
செறிவையும், முதல் இரு இறைவாக்கியங்களில்
நம்மால் உணரமுடிகிறது.
திருப்பாடல்
18:1-2
என்
ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்பு கூர்கின்றேன். ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; என் இறைவன்; நான் புகலிடம் தேடும்
மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும்
வல்லமை, என் அரண்.
நாம்
இப்போது வாசித்த இந்த முதல் இரு இறைவாக்கியங்களில், என் ஆற்றல், என் கற்பாறை, என் கோட்டை, என் மீட்பர், என் இறைவன், என் மலை, என் கேடயம், என் வல்லமை, என் அரண்... என்று, தாவீது, இறைவனுக்கு,
ஒன்பது உருவகங்களை வழங்கியுள்ளார். இந்த உருவகங்களை, “ஆண்டவர் ஒரு கற்பாறை, அரண், கேடயம்” என்று, பொதுவாகக் குறிப்பிடாமல், “ஆண்டவர், என் கற்பாறை, என் கோட்டை, என் அரண், என் கேடயம்…” என்று உரிமை கொண்டாடுகிறார்
தாவீது. “என் அப்பாதான் உலகிலேயே மிகப்பெரிய பலசாலி” என்று, பலருக்கும் கேட்கும்படி
கத்திச்சொல்லும் ஒரு குழந்தையை நினைவுபடுத்துகிறார் தாவீது.
ஆண்டவருக்கு
இத்தனை உருவகங்களையும், அடைமொழிகளையும் தாவீது பயன்படுத்தியிருப்பது, இந்தியாவில் பல
ஆலயங்களிலும், இல்லங்களிலும் அதிகாலையில் ஒலிக்கும் ‘சுப்ரபாதம்’ என்ற அழகிய பாடலை நினைவுறுத்துகிறது. 'சுப்ரபாதம்' என்பது, ஆண்டவனை துயிலெழுப்பப் பாடப்படும் பாடல்
என்று, பாரம்பரியமாக சொல்லப்பட்டாலும்,
அந்தப்
பாடல் வழியே, நாம், அதிகாலையில், ஆண்டவன்
பக்கம் நம் உள்ளங்களை எழுப்பும் முயற்சி அது என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம். அதேவண்ணம், மார்கழி மாதத்தில், பக்தி நிறைந்த பஜனைப்பாடல்கள்
ஒலிப்பதைக் கேட்டிருக்கிறோம்.
சுப்ரபாதம், பஜனை, நாமசெபம் என்ற வெவ்வேறு வடிவங்களில்
உருவாக்கப்பட்டுள்ள இப்பாடல்களில், கடவுளின் பல குணங்கள் வரிசையாகப் பாடப்படும், திரும்பத் திரும்பப் பாடப்படும். கண்களை
மூடி, இந்தப் பாடல்களைக் கேட்பது, அல்லது பாடுவது, மனதில்
பல நல்ல உணர்வுகளை எழுப்பும். கடவுளின் அற்புதமான பல குணங்களை ஆழமாய் உள்ளத்தில் பதிக்க, அந்த குணங்களில் நம்பிக்கையை வளர்க்க, இந்தப்
பாடல்கள் நல்லதொரு வழி.
அதேபோல், 18வது திருப்பாடலின் முதல் வரிகளில் உள்ள
இந்த அடைமொழிகளை, அல்லது திருப்பாடல்கள் அனைத்திலுமே இறைவனுக்கென வழங்கப்பட்டுள்ள அடைமொழிகளை, உருவகங்களையெல்லாம் தொகுத்து, தினமும் அவற்றை, திரும்பத் திரும்பச் சொல்லிவந்தால்,
நல்ல பலன் அடைவோம். இறைவன் என் ஆற்றல், என் கற்பாறை, என் கோட்டை... என்று அடிக்கடி சொல்லப்
பழகிவந்தால், காக்கும் அந்தக் கடவுளின்
பாதுகாப்பை நாள் முழுவதும் உணர்வோம்.
பல்வேறு
திருப்பாடல்களில், தாவீது, பறைசாற்றும் கடவுளின் ஓர் அற்புத குணம், அவரது காக்கும்
குணம். காக்கும் குணத்தை வலியுறுத்தும்வண்ணம், கடவுளை, தன் கற்பாறை, கோட்டை, அரண், கேடயம் என்று, தாவீது, பல
திருப்பாடல்களில் கூறியிருக்கிறார்.
எனக்கு
அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்; என்னைப் பாதுகாக்கும் வலிமை மிகு கோட்டையாய்
இரும். ஆம், என் கற்பாறையும் கோட்டையும்
நீரே -
திருப்பாடல் 31:2-3
என்
அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும்
அரணாகவும் இருக்கின்றீர். – திருப்பாடல் 71:3
என்
கற்பாறையும் கோட்டையும் அவரே! எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே! என் கேடயமும்
புகலிடமும் அவரே! – திருப்பாடல் 144:2
இவ்வாறு,
இறைவன் தன் கற்பாறையாக, கேடயமாக, அரணாக இருப்பதை,
தாவீது, மீண்டும், மீண்டும் பறைசாற்றியுள்ளார்.
கடவுளை
ஒரு கற்பாறையாக தாவீது ஏன் கற்பனை செய்தார் என்பதை புரிந்துகொள்வதற்கு, தாவீதின் வாழ்க்கையைக் கொஞ்சம் புரட்டிப்பார்ப்பது
உதவியாக இருக்கும். பசும் புல்தரைகளில், சமவெளிகளில்
ஆடுகளை மேய்த்துக்கொண்டு, எந்த ஒரு கவலையும் இல்லாமல்
வாழ்ந்தவன், சிறுவன் தாவீது. வீட்டின் கடைசிப் பிள்ளை. பொறுப்புகள் குறைவு. செல்லம்
அதிகம்.
இறைவன்
தன்னைச் சுற்றி நின்று காக்கின்றார் என்ற எண்ணமே, தாவீதை, இப்படி, கவலை, பொறுப்பு அகியவற்றின் பாரங்களை உணராமல் வாழவைத்தது.
இப்படி வாழ்வை அனுபவித்துக் கொண்டிருந்த சிறுவன் தாவீதை, இறைவாக்கினர் சாமுவேல் தேடிச்சென்று,
இஸ்ரயேலின் அரசனாக அர்ச்சிக்கிறார்.
எதிர்பாராமல்
வந்த அந்தப் பொறுப்பின் பாரங்களை, முழுமையாகப் புரிந்துகொள்ளாத நிலையில், தாவீது, அரண்மனை
வாழ்வைத் துவக்குகிறார். அங்கு, சவுலின் வெறுப்பு, பொறாமை ஆகியவற்றைக் கண்டு, தாவீது, உண்மையிலேயே
அரண்டு, போயிருக்கவேண்டும். வாழ்வின்
எதார்த்தங்கள், முதன்முறையாக இளையவர் தாவீதைத் தாக்கியிருக்கவேண்டும். இந்த ஆபத்திலிருந்து
தப்பியோடி, இரவில், மலையில் பாறைகளின் இடுக்கில், குகையில் தங்கவேண்டிய கட்டாயம் தாவீதுக்கு
ஏற்பட்டது.
ஆடுகளை
மேய்த்தபோது, அவற்றைத் தாக்கவந்த சிங்கம், கரடி ஆகிய விலங்குகளிடமிருந்து தன் ஆடுகளையும், தன்னையும் இறைவன் காத்தார் என்பதை, தாவீது,
தன் வாழ்வில் அடிக்கடி அசைபோட்டிருக்கிறார். பெலிஸ்தியனான கோலியாத்திற்கு எதிராக தாவீது
போரிடச் சென்ற வேளையில், இறைவன், அதுவரை, தன்னை,
எவ்வாறு பாதுகாத்தார் என்பதை, மன்னன் சவுலிடம் தெளிவாகப் பறைசாற்றுகிறார். (காண்க.
1 சாமுவேல் 17:34-36) இப்போதோ, அதே
சவுலிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள, மலைக்குகைகளில், கடினமான பாறைமீது படுத்து, குகையின் இருட்டில், உறங்கமுடியாமல் தவித்தார்
தாவீது. அந்நேரத்தில், இறைவன், அந்தக் குகையாக, மலையாக, பாறையாகத் தன்னைச் சுற்றிநிற்கிறார் என்று,
சிறுவயது முதல் நம்பிவந்த எண்ணங்கள், மீண்டும், தாவீதின் நினைவுகளை நிறைத்து, அவருக்கு
நிம்மதியளித்திருக்கவேண்டும்.
‘ஆண்டவர், என் கற்பாறை’ – என்பது, பாதுகாப்பும், நிம்மதியும் தரும் ஓர் உருவகம். இஸ்ரயேலர்களுக்கும், தாவீதுக்கும், இறைவன் ஒரு பாறை என்ற எண்ணம்,
ஆழமாய் வேரூன்றிய ஓர் எண்ணம். பல நாட்டினராலும் அடிமைப்படுத்தப்பட்டு, நாடு விட்டு நாடு ஓடி, பயந்து, பதுங்கி வாழ்ந்துவந்த இஸ்ரயேல் மக்களுக்கு, மலைமீது கட்டப்பட்ட சீயோன், உறுதியாகக் கட்டப்பட்ட எருசலேம், ஆகியவை,
பாதுகாப்பின் அடையாளங்களாக விளங்கின. எனவே, கடவுளை,
பாறையாக உருவகிப்பதென்பது, அவர்களுக்கு, மிக ஆறுதலான ஒரு கற்பனை.
பாறை
என்ற உருவகத்தில் ஒரு சிக்கலும் உண்டு. உணர்வற்று, இறுகிப்போன உள்ளங்களையும், நாம், ‘பாறைகள்’ என்று உருவகப்படுத்துகிறோம்.
கடவுளை, பாறையாக உருவகிக்கும்போது, இந்த ஓர் ஆபத்தும் உண்டு.
ஆனால், பாறைக்குள் பலவித புதுமைகளைப்
பார்த்தவர் தாவீது. மலைகளில், பாறை இடுக்குகளில், தேனீக்கள் கட்டும் தேன் கூடுகளை நாம்
பார்த்திருக்கிறோம். பாறைக்குள்ளிருந்து தேன் பருகிய அனுபவம், இடையனாக இருந்த தாவீதுக்கு,
கட்டாயம் இருந்திருக்கும். தன் முன்னோர்களான இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில்
தாகத்தால் துவண்டபோது, பாறையிலிருந்து நீரை வரவழைத்த மோசேயின் செயலும், தாவீதின் மனதில்
ஆழமாய்ப் பதிந்த ஒரு புதுமையாக இருந்ததில் வியப்பில்லையே!
இவ்வாறு,
பாறை, உறுதி, பாதுகாப்பு ஆகியவற்றிற்கு
அடையாளமாக இருக்கும் அதே வேளை, அந்தப் பாறையிலிருந்து
சுவைமிகு தேன், தாகம் தணிக்கும் நீர்
ஆகியவைகளும் உருவாகும் என்பதும், பாறையின் அம்சங்களாய் இருக்கின்றன. இவைகளையெல்லாம்
ஒட்டுமொத்தமாக உள்ளடக்கிய ஒரு கோணத்தில், தாவீது இறைவனைப் பாறையாகக் கற்பனை செய்துள்ளார்.
கற்பனை
வளமும், கவிதை நயமும், உருவகங்களும் நிறைந்த 18வது திருப்பாடலில் நம் தேடலைத்
தொடர்வோம்.
No comments:
Post a Comment