16 November, 2021

விவிலியத்தேடல்: திருப்பாடல் 19 – ஆண்டவரின் திருச்சட்டம் 2

 
God’s Law is Perfect

Words are the lawyers’ tools of trade” அதாவது, "வார்த்தைகள், வழக்கறிஞர்களின் வியாபாரக் கருவிகளாக உள்ளன" - இங்கிலாந்தின் வழக்கறிஞராகவும், பின்னர் நீதியரசராகவும் பணியாற்றிய Lord Alfred Denning அவர்கள், 1979ம் ஆண்டு வெளியிட்ட ‘The Discipline of Law’ என்ற நூலில் பதிவுசெய்துள்ள சொற்கள் இவை. நீதிமன்றங்களில், மக்களால் எளிதில் புரிந்துகொள்ள இயலாத மொழி பயன்படுத்தப்படுவதைக்குறித்து Denning அவர்கள், பதிவுசெய்துள்ள இக்கருத்து, நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றது. மாதங்கள் பலவாக, ஏன், ஆண்டுகள் பலவாக நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில், வலிமைமிக்கவர்களும், பணம்படைத்தவர்களும், சட்டங்களின் கண்களைக் கட்டிப்போட்டுவிட்டு, தப்பித்துக்கொள்வதற்கும், ஒன்றுமில்லா வறியோரும், எளியோரும், சட்டங்களின் பிடிகளில் சிக்கித் துன்புறுவதற்கும் ஏற்றவண்ணம், வழக்கறிஞர்கள் பயன்படுத்தும் வார்த்தை விளையாட்டுக்களை நாம் அறிவோம்.

இதையொத்த ஒரு நிலை, மருத்துவத்துறையிலும் நிலவுவதை மறுப்பதற்கில்லை. கடந்த இரு ஆண்டுகளாக இவ்வுலகை, அதிலும் குறிப்பாக, வறியோரை பெருமளவு வதைத்துவரும் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், மருத்துவத் துறையைச் சார்ந்தவர்கள், குறிப்பாக, அடிமட்ட நலப்பணியாளர்கள் ஆற்றிய பணி, நமது பாராட்டுக்கும், நன்றிக்கும் உரியது. அதேவேளை, இந்தப் பெருந்தொற்றை மூலதனமாக்கி, பல மருத்துவமனைகளும், மருந்து உற்பத்தி நிறுவனங்களும் கொள்ளைக்கூடங்களாக மாறியுள்ளன என்பதும், வேதனை தரும் உண்மை.

இலாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும், மருத்துவர்களும், வழக்கறிஞர்களும் பயன்படுத்தும் சக்திமிக்க வியாபாரக் கருவி, அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள். தங்களுக்கு நலம்வேண்டி, மருத்துவமனைக்கோ, அல்லது, நீதிவேண்டி, நீதி மன்றத்திற்கோ செல்லும் எளிய மக்கள், முதலில் சந்திப்பது, அவர்கள் எளிதில் புரிந்துகொள்ளமுடியாத மொழி. நோயைப்பற்றியும், அதற்குத் தேவையான பரிசோதனைகள் பற்றியும், மருந்துகள் பற்றியும் மருத்துவர்கள், வாய்ச்சொல்லாலும், எழுத்துவடிவத்திலும் பயன்படுத்தும் வார்த்தைகள், வறியோருக்கு நம்பிக்கை தருவதற்குப் பதில், அவர்களை மேலும் குழப்பத்திலும், விரக்தியிலும் ஆழ்த்துகின்றன. அதேவண்ணம், மாதக்கணக்கில், வருடக்கணக்கில், நீதிமன்றங்களை, சுற்றிச்சுற்றி வரும் வறியோருக்கு, நம்பிக்கை தரும் மொழிகள், மிக, மிக அரிதாகவே கிடைக்கின்றன.

பயன்படுத்தும் மொழியில் துவங்கி, நீதித்துறையும், மருத்துவத்துறையும், எளிய மக்களுக்கு எதிராக இயங்கிவந்தாலும், மனிதர்களின் மனசாட்சியில், ஆண்டவர், ஆழப்பதித்துள்ள சட்டங்களைப்பற்றி, எளிய மக்கள், கொண்டிருக்கும் தெளிவானச் சிந்தனைகள், நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. சென்றவார விவிலியத்தேடலில் நாம் குறிப்பிட்ட 'ஜெய் பீம்' திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி, இங்கே நினைவுகூரத்தக்கது.

இத்திரைப்படத்தில் இருளர் இனத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவர்மீது திருட்டுப்பழியைச் சுமத்தி, காவல்துறையினர், நாள் கணக்கில் அவரை, சித்ரவதை செய்கின்றனர். சிலநாள்கள் சென்று, ராஜாக்கண்ணு சிறையிலிருந்து தப்பித்துச் சென்றுவிட்டதாக காவல்துறையினர் கூறுவதை நம்பாத அவரது மனைவி செங்கேணி அவர்கள், காவல்துறையினரிடமிருந்து தன் கணவரைக் காப்பாற்ற, வழக்கறிஞர் சந்துருவின் உதவியை நாடுகிறார்.
இந்த வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், ஒரு நாள், செங்கேணி அவர்கள், வழக்கறிஞர் சந்துருவிடம், இந்த வழக்கை நடத்துவதற்கு, அவருக்கு தன்னால் பணம்தர இயலாத நிலையை எடுத்துச்சொல்கிறார். அப்போது, சந்துரு அவர்கள், அப்பெண்ணிடம், ‘பாம்புக்கடி பட்ட ஒருவருக்கு வைத்தியம் செய்யும்போது, அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டுதான் வைத்தியம் பாப்பீர்களா என்று கேட்கும்போது, செங்கேணி அவர்கள், ‘உயிரைக் காக்கும் பணியில் பணம் வாங்கக்கூடாது என்று சொல்வார். அத்துடன் நிறுத்தாமல், “என் கணவரைத் துன்புறுத்திய போலீஸ்காரர்களில் ஒருவர், பாம்புக்கடிபட்டு வந்தாலும், அவரிடமும் காசு வாங்காமல் வைத்தியம் பார்ப்பேன் என்று செங்கேணி அவர்கள் சொல்வதாக இந்தக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து உயிர்களையும் மதிக்குமாறு, ஆண்டவர் வழங்கிய சட்டங்கள், தங்கள் உள்ளங்களில் ஆழப்பதிந்துள்ளன என்பதை, ஒவ்வொரு நாளும் நமக்கு உணர்த்திவரும் கோடிக்கணக்கான வறியோரின் சார்பாக, செங்கேணி அவர்கள் பேசுவதாக நாம் எண்ணிப்பார்க்கலாம்.
ஆண்டவர் உருவாக்கியுள்ள திருச்சட்டம், வறியோருக்கும் எளியோருக்கும் எளிதில் ஞானம் அளிக்கின்றது என்பதை வலியுறுத்தி, மன்னர் தாவீது, 19வது திருப்பாடலில் கூறும் சொற்கள், எளியமக்களின் செவிகளில் தேனாகப் பாய்கின்றன:
ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. (திருப்பாடல் 19:7)

19வது திருப்பாடலில், 7 முதல் 10 முடிய உள்ள நான்கு இறைவாக்கியங்களில், ஆண்டவரின் திருச்சட்டத்தைப்பற்றி, தாவீது பதிவுசெய்துள்ள சொற்கள், பொருள்செறிவு மிக்க சொற்கள். ஆண்டவரின் திருச்சட்டத்தின் பண்புகளையும், அதைப் பின்பற்றுவதால் வரும் பயன்களையும், தாவீது இவ்வாறு விவரித்துள்ளார்:
திருப்பாடல் 19:7-10
ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது.
ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன.
ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை.
அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும் தேனடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை.

இந்த நான்கு இறைவாக்கியங்களில், மன்னர் தாவீது, ஆண்டவரின் திருச்சட்டத்தைக் குறிப்பிட, திருச்சட்டம், ஒழுங்குமுறை, நியமங்கள், கட்டளைகள், நீதிநெறிகள் ஆகிய ஐந்து சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். அத்துடன், இத்திருச்சட்டம் நிறைவானது, நம்பத்தக்கது, சரியானது, ஒளிமயமானது, தூயது, உண்மையானது, நீதியானது, விலைமிக்கது, இனிமையானது என்று 9 பண்புகளைக் குறிப்பிட்டுள்ளார். திருச்சட்டத்தைப் பின்பற்றுவோருக்கு விளையும் ஐநது நன்மைகளை, தாவீது, இவ்வாறு பதிவுசெய்துள்ளார்: அது புத்துயிர் அளிக்கின்றது, அது ஞானம் அளிக்கின்றது இதயத்தை மகிழ்விக்கின்றன, கண்களை ஒளிர்விக்கின்றன, அது எந்நாளும் நிலைத்திருக்கும். 

19வது திருப்பாடலை முழுமையாகச் சிந்திக்கும்போது, அதில், நம் கவனத்தை முதலில் ஈர்ப்பது, கடவுளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள இரு சொற்கள். இத்திருப்பாடலின் முதல் 6 இறைவாக்கியங்கள், 'படைப்பில் கடவுளின் மாட்சி' என்ற கருத்தை வெளிப்படுத்துகின்றன. 7 முதல் 14 முடிய உள்ள 8 இறைவாக்கியங்கள், 'ஆண்டவரின் திருச்சட்டம்' என்ற கருத்தை விளக்குகின்றன. படைப்பைக் குறித்து பேசும் முதல் 6 இறைவாக்கியங்களில், கடவுளைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ள சொல், 'இறைவன்'. எபிரேய மொழியில், 'El' என்று குறிக்கப்படும் இந்தச் சொல், இஸ்ரயேல் மக்களின் கடவுளையும், ஏனைய மதங்களின் கடவுள்களையும் குறிக்கும் பொதுவான சொல்.
'ஆண்டவரின் திருச்சட்டம்' என்ற இரண்டாம் பகுதியில், கடவுளைக் குறிப்பிட, 'Yahweh', அதாவது 'ஆண்டவர்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சொல், மோசே வழியாகவும், அவரிடம் வழங்கிய சட்டங்கள் வழியாகவும், இஸ்ரயேல் மக்களுக்கு மட்டும் வெளிப்படுத்தப்பட்ட கடவுளைக் குறிப்பிடும் தனிப்பட்ட சொல்.

7 மற்றும் 8 ஆகிய இரு இறைவாக்கியங்களில், ஆண்டவரின் திருச்சட்டம், ஒழுங்குமுறை, நியமங்கள் மற்றும் கட்டளைகள் ஆகியவற்றின் பண்புகளையும், அவற்றைப் பின்பற்றுவதால் விளையும் பயன்களையும் கூறும் திருப்பாடலின் ஆசிரியர், 9ம் இறைவாக்கியத்தில் 'ஆண்டவரைப்பற்றிய அச்சம் தூயது' என்று கூறுவது, நம் கவனத்தை ஈர்க்கிறது. ஆண்டவரைப்பற்றிய அச்சத்தைக் குறித்து, விவிலியம் கூறும் ஒருசில கூற்றுகள், சிந்திக்கத்தக்கவை: குறிப்பாக, நீதிமொழிகள் நூலில், பல்வேறு இடங்களில், ஆண்டவர் மீது அச்சம் கொள்வதன் விளைவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்; தூயவராகிய அவரைப்பற்றிய உணர்வே மெய்யுணர்வு. (நீதிமொழிகள் 9:10)
ஆண்டவருக்கு அஞ்சுவது தீமையைப் பகைக்கச் செய்யும்; ஆணவத்தையும் இறுமாப்பையும் தீமையையும் உருட்டையும் புரட்டையும் நான் வெறுக்கின்றேன். (நீதிமொழிகள் 8:13)
ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் வாழ்வளிக்கும் ஊற்றாகும்; சாவை விளைவிக்கும் கண்ணிகளுக்கு அது மனிதரைத் தப்புவிக்கும். (நீதிமொழிகள் 14:27)
ஆண்டவருக்கு அஞ்சி நடப்போருக்கு கிடைக்கும் நன்மையை, அன்னை மரியா தன் புகழ்ப்பாடலில் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்:
அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். (லூக்கா 1:50)

காலநிலை மாற்ற உலக உச்சி மாநாடு, COP26 நிறைவு பெற்றிருக்கும் இவ்வேளையில், 19வது திருப்பாடலில், 'படைப்பின் கடவுளின் மாட்சி' என்ற பகுதியை நாம் சிந்தித்ததை ஒரு வரமாகக் கருதலாம். இறைவன் வழங்கிய மாபெரும் கொடைகளான இயற்கை வளங்களை, உலக மக்கள் அனைவரும், இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள், அனுபவித்து வாழும்வண்ணம், உலகத்தலைவர்கள், அடுத்துவரும் ஆண்டுகளில், இன்னும் உறுதியான முடிவுகள் எடுக்கவேண்டும் என்று மன்றாடுவோம்.
நிறைவான, நம்பத்தக்க, சரியான, ஒளிமயமான, தூய, உண்மையான, நீதியான, விலைமிக்க, இனிமையான ஆண்டவரின் திருச்சட்டம், ஏழை-செல்வந்தர், உயர்ந்தவர்-தாழ்ந்தவர், வலிமைமிக்கோர்-வலுவற்றோர் என்ற பாகுபாடுகள் ஏதுமின்றி, அனைவருக்கும் புத்துயிரையும், ஞானத்தையும் வழங்குவதாக. அனைவரின் இதயங்களையும் மகிழ்வித்து, கண்களை ஒளிர்விப்பதாக. மனிதரின் ஆணவம் நிறைந்த குறுக்கீடுகள் ஏதுமின்றி, ஆண்டவரின் திருச்சட்டம், எந்நாளும் நிலைத்திருப்பதாக.

19வது திருப்பாடலின் இறுதி வரிகளில், மன்னர் தாவீது, ஆண்டவரிடம் எழுப்பும் வேண்டுதலை நம் ஒவ்வொருவரின் வேண்டுதலாக நாம் எழுப்புவோம்:
என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். (திருப்பாடல் 19:14)

No comments:

Post a Comment