23 November, 2021

விவிலியத்தேடல்: திருப்பாடல்கள் 20,21 – அரசரின் வெற்றிக்காக வேண்டுதலும், நன்றியும்


'இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர்' என்ற திருநாளை, நவம்பர் 21, கடந்த ஞாயிறன்று கொண்டாடினோம். 1925ம் ஆண்டு, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையில், 'கிறிஸ்து அரசர்' திருநாளை உருவாக்குவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது, 1918ம் ஆண்டு முடிவுக்கு வந்திருந்த முதல் உலகப்போர். அரசர்கள் மற்றும், அரசுத்தலைவர்களிடையே வளர்ந்துவந்த அதிகாரப்போட்டிகள், போர்களை உருவாக்கின என்பதை உணர்ந்து, வேதனையுற்ற திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், இந்த உலக அரசர்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக, 'இவ்வுலகைச் சாராத அரசை நிறுவவந்த' (காண்க. யோவான் 18:36) இயேசுவை, 'அனைத்துலக அரசர்' என்று அறிவித்தார்.

கிறிஸ்துவின் அரசத்தன்மை வெளிப்படுத்திய பண்புகளை, காண மறந்த, அல்லது, காண மறுத்த இவ்வுலகத் தலைவர்கள், மீண்டும் ஒருமுறை, 2ம் உலகப்போரை மேற்கொண்டனர். தற்போது, உலகத்தலைவர்கள் நடுவே வளர்ந்துவரும் அதிகாரப் போட்டிகளின் விளைவாக, உலகின் பல பகுதிகளில், மூன்றாம் உலகப்போர், சிறு, சிறு துண்டுகளாக நடைபெற்றவண்ணம் உள்ளன. இந்த எண்ணத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெவ்வேறு தருணங்களில், தன் உரைகளில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய ஒரு சூழலில், குறிப்பாக, 'கிறிஸ்து அரசர்' திருநாளைத் தொடர்ந்துவரும் இன்றைய விவிலியத்தேடலில், அரசரின் வெற்றிக்காக வேண்டல், அரசரின் வெற்றிக்காக இறைவனுக்கு நன்றி செலுத்தல் என்ற இரு தலைப்புக்களுடன் பதிவாகியுள்ள 20, மற்றும், 21 ஆகிய இரு திருப்பாடல்களில், நாம் சிந்தனைகளை மேற்கொள்கிறோம். இதை, இறைவன் நமக்கு வழங்கியுள்ள அருள் நிறைந்ததொரு வாய்ப்பாகக் கருதலாம். 'அரசரின் வெற்றி' என்ற எண்ணத்தை மையப்படுத்தி பதிவாகியுள்ள இவ்விரு திருப்பாடல்களின் வழியே, இன்றைய உலகிற்குத் தேவையான 'அரசத்தன்மை', 'வெற்றிபெறுதல்' ஆகிய கருத்துக்களை, சரியான முறையில் புரிந்துகொள்ள முயல்வோம்.

அரசர் என்றதும், அவர் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றிபெறவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது. குறிப்பாக, அரசர் மேற்கொள்ளும் போர்களில், அவர் எப்போதும் வெற்றிபெற வேண்டும் என்று வேண்டுதல்களும், வேள்விகளும் நடைபெறுவதை வரலாற்றில் காண்கிறோம்.
போருக்குப் புறப்படும் அரசர், அதற்கு முன்னதாக, தன் வெற்றியை உறுதிசெய்யும் ஓர் அடையாளத்தை, கடவுளிடமிருந்து பெறுவதற்கு, ஆலயம் செல்லும் பழக்கம், ஏறத்தாழ, அனைத்து கலாச்சாரங்களிலும் காணப்படுகின்றது. அதேவண்ணம், அரசருக்கு வெற்றி வழங்க, அரசரோடு இணைந்து, மக்கள், பலிகளையும், வேள்விகளையும் நிறைவேற்றுவது, அனைத்து மதங்களிலும் பொதுவாக நிலவும் ஒரு பழக்கம்.

அத்தகைய ஒரு காட்சியைக் கற்பனை செய்துபார்க்க, 20வது திருப்பாடல் உதவுகிறது. போருக்குப் புறப்படும் அரசர் தாவீது, பலிபீடத்திற்கு முன் நிற்பதாகவும், அவரைச் சுற்றிலும், படைவீரர்களும், மக்களும் நின்று, ஒரே குரலில், தங்கள் வேண்டுதலை எழுப்புவதாகவும் நாம் கற்பனை செய்துபார்க்கலாம்.
நெருக்கடி வேளையில் உமக்கு ஆண்டவர் பதிலளிப்பாராக! யாக்கோபின் கடவுளது பெயர் உம்மைப் பாதுகாப்பதாக! தூயகத்திலிருந்து அவர் உமக்கு உதவி அனுப்புவாராக! சீயோனிலிருந்து அவர் உமக்குத் துணை செய்வாராக! (திருப்பாடல் 20:1-2) என்று ஆரம்பமாகும் 20வது திருப்பாடலில், முதல் 5 இறைவாக்கியங்கள், மக்களிடமிருந்து எழும் வேண்டுதலாகவும், அவர்கள், தாவீதுக்கு வழங்கும் ஆசி மொழிகளாகவும் ஒலிக்கின்றன.

ஆசீரும், வேண்டுதலும் கலந்த இந்த ஐந்து இறைவாக்கியங்களைத் தொடர்ந்து, 6வது இறைவாக்கியத்தில், தாவீது, இறைவனிடமிருந்து தனக்குக் கிடைக்கும் பதிலிறுப்பை அறிக்கையிடுகிறார். 7,8 ஆகிய இரு இறைவாக்கியங்களில், இறைமக்கள், ஆண்டவர் மீது தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர். இறுதியில், 9வது இறைவாக்கியத்தில் எழுப்பப்படும் ஓர் இறைவேண்டலோடு இப்பாடல் நிறைவடைகின்றது.

20வது திருப்பாடலின் இந்த 9 இறைவாக்கியங்களில் 7வது இறைவாக்கியம் வெளிப்படுத்தும் ஒரு சில எண்ணங்களை அசைபோடுவது உதவியாக இருக்கும்: சிலர் தேர்ப்படையிலும், சிலர் குதிரைப் படையிலும் பெருமை கொள்கின்றனர்; நாமோ நம் கடவுளாகிய ஆண்டவரின் பெயரில் பெருமை கொள்கின்றோம். (திருப்பாடல் 20:7) என்ற இச்சொற்களை இஸ்ரயேல் மக்கள் பறைசாற்றிய வேளையில், பல்வேறு எண்ணங்கள் அவர்கள் உள்ளத்தில் அலைமோதியிருக்கும்.

எகிப்திலிருந்து இஸ்ரயேல் மக்கள் புறப்பட்டுச் சென்றதும், அவர்களை, தேர்ப்படை, மற்றும் குதிரைப்படை கொண்டு துரத்திச்சென்ற எகிப்தியரிடமிருந்து தங்கள் முன்னோரைக் காத்து, செங்கடலை அவர்கள் கடக்கச்செய்த இறைவன், எகிப்தியரின் படையினர் அனைவரையும் செங்கடலில் மூழ்கச்செய்த நிகழ்வு, தாவீதுக்கும், அவரைச் சுற்றி நின்ற மக்களுக்கும், கட்டாயம் நினைவில் தோன்றியிருக்கும். இந்நிகழ்வை நாம் விடுதலைப்பயண நூல் 14 மற்றும் 15 ஆகிய பிரிவுகளில் காண்கிறோம்.

மோசே, தன் மரணத்திற்குமுன் இஸ்ரயேல் மக்களுக்கு வழங்கிய தெளிவான விதிமுறைகளில், 'போரைப்பற்றிய விதிமுறைகள்' என்ற பகுதியின் துவக்கத்தில் கூறிய அறிமுகச் சொற்கள், மக்களின் உள்ளங்களில் மீண்டும் ஒலித்திருக்கும்:
நீ உன் பகைவருக்கு எதிராகப் போருக்குப் போகையில், உன்னிடம் உள்ளதைவிட மிகுதியான குதிரைகளையும், தேர்களையும், பெரும் படையையும் நீ கண்டால், அவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஏனெனில், எகிப்திலிருந்து உன்னை வெளியே கூட்டிவந்த உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னோடு உள்ளார். (இணைச்சட்டம் 20:1) 

குதிரைகளையும், தேர்களையும், படைகளையும் நம்புவதற்குப்பதில், ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்ளவேண்டும் என்று தாவீதும், மக்களும், 20வது திருப்பாடலில் வெளிப்படுத்தும் இந்த நம்பிக்கை அறிக்கை, மீண்டும், 33வது திருப்பாடலில் இவ்வாறு வெளிப்படுத்தப்பட்டுள்ளது:
தன் படைப்பெருக்கத்தால் வெற்றிபெரும் அரசருமில்லை; தன் வலிமையின் மிகுதியால் உயிர்தப்பிய வீரருமில்லை. வெற்றிபெறப் போர்க்குதிரையை நம்புவது வீண்; மிகுந்த வலுவுள்ளதாயினும் அது விடுவிக்காது. தமக்கு அஞ்சி நடப்போரையும், தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும், ஆண்டவர் கண்ணோக்குகின்றார். (திருப்பாடல் 33:16-18)

ஆண்டவர் செய்த அற்புதங்களைக் கண்டு அவர்மீது நம்பிக்கை கொண்டிருந்த இஸ்ரயேல் மக்கள், நாளடைவில், மீண்டும், ஏனைய அரசுகள் போல தங்கள் படைபலத்தை நம்பிவாழ்ந்ததை வரலாறு சொல்கிறது. இஸ்ரயேல் மக்கள், ஆண்டவர்மீது வைத்திருக்கவேண்டிய நம்பிக்கையை விட்டுவிலகி, மீண்டும் எகிப்தியரை நாடிச்செல்லும் ஆபத்து உள்ளதென்று உணர்ந்த இறைவாக்கினர் எசாயா, அவர்களுக்கு வழங்கிய எச்சரிக்கையை, நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: துணை வேண்டி எகிப்துக்குச் செல்வோருக்கு ஐயோ கேடு! அவர்கள் குதிரைகளுக்காகக் காத்துக் கிடக்கின்றர்; பெரும் தேர்ப்படைகளையும் வலிமைமிகு குதிரை வீரர்களையும் நம்பியிருக்கிறார்கள்; இஸ்ரயேலின் தூயவருக்காக ஆவலுடன் காத்திருக்கவில்லை; ஆண்டவரைத் தேடுவதுமில்லை (எசாயா 31:1)

In God We Trust

தங்கள் படைபலத்தையும், அழிவுக்கருவிகளின் சக்திகளையும் நம்பி இன்றைய அரசுகள் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட முயலும் பல்வேறு முயற்சிகளுக்கு, 20வது திருப்பாடலின் 7வது இறைவாக்கியம் ஒரு சாட்டையடிப்போல் விழுவதை நாம் உணர்கிறோம். உலகின் வல்லரசுகளில் ஒன்றாகக் கருதப்படும் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு, தன் டாலர் நோட்டுகளில் “In God We Trust”, அதாவது, "கடவுளில் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம்" என்று பதிவுசெய்திருப்பதை எவ்விதம் பொருள்கொள்வது என்று புரியாமல் திகைத்து நிற்கிறோம். செல்வத்தைக் குவித்து, அதைக் காப்பதற்காக தங்கள் நாட்டு படைபலத்தையும், ஆயுதங்களையும் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துவரும் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு, 'கடவுளை நம்பியிருப்பதாக' கூறுவது, அதிலும், தங்கள் டாலர் நோட்டுகளில் அவ்வாறு கூறியிருப்பது, முரண்பாடாகவும், ஒரு கோணத்தில், கேலியாகவும் தெரிகிறது.

திருப்பாடல்கள் நூலில், கடவுள் தேர்ந்து கொண்ட அரசர் (2), அரசரின் வெற்றிப் பாடல் (18), அரசரின் வெற்றிக்காக வேண்டுதலும், நன்றியும் (20,21), அரசரின் திருமணப்பாடல் (45), அரசருக்காக மன்றாடல் (72), அரசரின் வாக்குறுதி (101), ஆண்டவரும் அவர் தேர்ந்து கொண்ட அரசரும் (110) ஆகிய 8 திருப்பாடல்கள், அரசரை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள பாடல்கள். இவையன்றி, 93வது திருப்பாடல் முதல், 99வது திருப்பாடல் முடிய உள்ள 7 திருப்பாடல்கள், ஆண்டவரை ஓர் அரசராக உருவகித்துக் கூறும் பாடல்களாக அமைந்துள்ளன.

இப்பாடல்களில், கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! (திருப்பாடல் 72:1-2) என்று ஆரம்பமாகும் 72வது திருப்பாடல், இன்றைய அரசர்களும், அரசுத்தலைவர்களும் பதவியேற்கும் வேளையில் சொல்லக்கூடிய அழகான ஓர் இறைவேண்டுதலாக அமைந்துள்ளது.

அதே வண்ணம், நாம் தற்போது தேடலை மேற்கொண்டுள்ள 21வது திருப்பாடலின் வரிகளும், அரசர்களுக்கும், அரசுத்தலைவர்களுக்கும் இறைவன் வழங்கும் ஆசிகளை அறிக்கையிடும் சொற்களாக அமைந்துள்ளன. இந்த ஆசி மொழிகளுடன் இன்றைய தேடலை நாம் நிறைவு செய்வோம்:
திருப்பாடல் 21:1-6,13
ஆண்டவரே, உமது வல்லமையில் அரசர் பூரிப்படைகின்றார்; நீர் அளித்த வெற்றியில் எத்துணையோ அவர் அக்களிக்கின்றார்! அவர் உள்ளம் விரும்பியதை நீர் அவருக்குத் தந்தருளினீர்; அவர் வாய்விட்டுக் கேட்டதை நீர் மறுக்கவில்லை.
உண்மையில் நலமிகு கொடைகள் ஏந்தி நீர் அவரை எதிர்கொண்டீர்; அவர் தலையில் பசும்பொன்முடி சூட்டினீர். அவர் உம்மிடம் வாழ்வுவேண்டி நின்றார்; நீரும் முடிவில்லா நீண்ட ஆயுளை அவருக்கு அளித்தீர்.
நீர் அவருக்கு வெற்றியளித்ததால் அவரது மாட்சிமை பெரிதாயிற்று; மேன்மையையும் மாண்பையும் அவருக்கு அருளினீர், உண்மையாகவே, எந்நாளும் நிலைத்திருக்கும் ஆசிகளை அவர் பெற்றுள்ளார்; உமது முகத்தை அவர் மகிழ்ச்சியுடன் கண்டு களிக்கச் செய்தீர்....
ஆண்டவரே, உமது வலிமையோடு எழுந்து வாரும்; நாங்கள் உமது வல்லமையைப் புகழ்ந்து பாடுவோம்.

No comments:

Post a Comment