13 July, 2023

Word of God sown generously அளவின்றி விதைக்கப்படும் அருள்வாக்கு

 
Sowing generously…

15th Sunday in Ordinary Time

In quite many countries, including India, the academic year begins in June – July. Thousands of young minds flock to schools and colleges with the hope of receiving fresh ideas. We can surely imagine these young minds to be the fertile soil ready to receive new ideas as seeds for their future life. At this moment, we are given an opportunity to reflect on the parable of the Sower and the Seed. Hence, at the beginning of our reflection, let us whisper a prayer for these young minds to be the receptive soil where not only their subjects, but, more importantly, life lessons through the word of God may be sown which will yield abundant fruits.

Today’s Gospel passage (Matthew 13:1-23) from Matthew not only talks about the famous parable of the Sower and the Seed, but talks also about the story telling method used by Jesus in his ministry. Jesus spoke to the people in parables so that they could understand God and His Kingdom more easily. Jesus knew the power of stories and used them effectively.  

John Shea, an expert on the theme of ‘storytelling in world religions’, in his famous book ‘Stories of God – An Unauthorized Biography’ talks of the power of stories in these words:
“When we reach our limits, when our ordered worlds collapse, when we cannot enact our moral ideals, when we are disenchanted, we often enter into the awareness of Mystery... Our dwelling within Mystery is both menacing and promising, a relationship of exceeding darkness and undeserved light. In this situation with this awareness, we do a distinctively human thing. We gather together and tell stories of God to calm our terror and hold our hope on high.”

Every major religion in the world has given us inspiring stories of God. Many religious leaders believe that stories play a vital role in shaping our relationship with God. Most of us have grown with stories of God from our childhood. If we have not out-grown this phase, we are truly blessed. 

Jesus, the master storyteller, knew the power of stories. He did not give any lengthy discourse on God and His Kingdom. Most of his teachings have been clothed in stories, imageries and parables. The contemporary religious leaders of Jesus presented God as a cold, distant God represented by the ‘stony laws’. Jesus, on the other hand, brought this God close to the people through His stories as a loving Father.

“Why do you speak to them in parables?” (Mt. 13:10) was the question addressed to Jesus in today’s Gospel. To understand why Jesus spoke in parables, we turn to Fr. Anthony de Mello, S.J. In his book ‘One Minute Wisdom’, there is a lovely story: The Master gave his teaching in parables and stories, which his disciples listened to with pleasure - and occasional frustration, for they longed for something deeper.
The Master was unmoved. To all their objections he would say, "You have yet to understand, my dears, that the shortest distance between a human being and Truth is a story."
Another time he said, "Do not despise the story. A lost gold coin is found by means of a penny candle; the deepest truth is found by means of a simple story."

Why am I giving a ‘treatise’ on stories? Two reasons: Number One – today’s Gospel, as we mentioned earlier, brings to focus the question – why Jesus spoke in parables. Number Two – from this Sunday onwards till the Feast of Christ the King in November (Nov. 26), we shall be journeying through 20 Sundays of the Ordinary Time in the liturgical cycle. Of these 20 Sundays, 10 Sundays present us with 10 parables of Jesus recorded in Matthew. We begin this ‘parable series’ with one of the most famous parables of Matthew - the Parable of the Sower.

When I use a phrase like ‘the most famous’, I am conscious of the danger it entails. Anything ‘famous’ tends to become ‘familiar’ due to over-exposure. The famous quotes and parables of Jesus are no exception to this danger. As if forestalling the danger, resulting from this ‘taken-for-granted’ attitude to the words of Jesus, He gives a warning today at the end of the parable: He who has ears, let him hear.” (Mt. 13:9) Jesus wants us to pay careful attention… But, attention to what? The sower, the seed or the soil?

Traditionally we have focused almost exclusively on the terrains where the seed falls, in order to look at what our attitude is, as we listen to the Gospel. However, it is important to pay attention to the sower and his way of sowing.

Jesus begins the parable with a matter-of-fact statement : A sower went out to sow. The sower scatters seeds ‘along the path’, ‘on rocky ground’ and ‘upon thorns’. This action of the sower brings up the question: Was he careless or was he generous? If we reflect on this action with the idea that the seed represents God’s word, then it is better to attribute ‘generosity’, rather than ‘carelessness’ of the sower to his action of ‘scattering seeds everywhere’.
That’s how Jesus sowed his message. They saw him go out every morning to announce the Good News of God. He sowed his Word among the simple people who welcomed it, and also among the Scribes and the Pharisees (hard rocky ground) who rejected it. Jesus was keen on scattering seeds to those surrounded by thorns of sin and sickness. He never got tired.

By depicting the reckless generosity of the sower, Jesus says that those of us who are over-cautious and calculative in sowing the seeds only on well ploughed and watered lands, are doing a disservice to the word of God. With all the available lessons on efficiency from the management gurus, we tend to measure our every effort in sowing God’s word. In spite of all our caution, God’s word still manages to have a life of its own. This is ascertained in today’s first reading from Prophet Isaiah.
Isaiah 55: 10-11
For as the rain and the snow come down from heaven, and return not thither but water the earth, making it bring forth and sprout, giving seed to the sower and bread to the eater, so shall my word be that goes forth from my mouth; it shall not return to me empty, but it shall accomplish that which I purpose, and prosper in the thing for which I sent it.
Thank God, the word of God does not depend on our plans! In fact, the reckless generosity with which Jesus scattered God’s word has been followed by many generous followers.

Let us close our reflections with a lovely story that talks of how generosity pays:
There was once a farmer who grew award-winning corn. Each year he entered his corn in the state fair where it won first prize. One year a newspaper reporter interviewed him and learned the farmer’s strategy for growing winning corn. What was it? Simply this: the farmer shared his seed corn with his neighbours.
“How can you afford to share your best seed corn with your neighbours when they are entering corn in competition with yours each year?” the reporter asked.
“Why” said the farmer, “don’t you know? The wind picks up pollen from the ripening corn and swirls it from field to field. If my neighbours grow inferior corn, cross-pollination will steadily degrade the quality of my corn. If I am to grow good corn, I must help my neighbours grow good corn.” (Source: reported in James Bender’s ‘How to Talk Well’ - New York: McGraw-Hill Book Company, Inc., 1994)

Sowing the seed ‘along the path’, ‘on rocky ground’ and ‘upon thorns’ is a real challenge. The challenge become tougher when we are asked not only to sow on the fertile ground under our care, but also share good seeds with our neighbours! May our journey in the parables of Jesus become ever more adventurous!  

A final note would be to break the narrow view of ‘sowing the seed’ as ‘preaching the word of God’. Sowing the seed is more often and more effectively done by the way each one of us lives God’s word in our lives. From this point of view we can understand that this parable does not refer to the sower as those who ‘preach’ but all of us who ‘practice’!

Sowing the Word of God

பொதுக்காலம் 15ம் ஞாயிறு

இந்தியா உட்பட பல நாடுகளில் ஜூன் - ஜூலை மாதங்களில் கல்வியாண்டு துவங்குகிறது. ஒவ்வொரு கல்வியாண்டிலும் பல்லாயிரம் மாணவ, மாணவியர், புதுப் புது எண்ணங்களைப் பெறுவதற்கு பள்ளிகளையும், கல்லூரிகளையும் நாடிச் செல்கின்றனர். நல்லெண்ணங்கள் என்ற விதைகளைப் பெறுவதற்கு இளம் விளை நிலங்கள் வகுப்பறைகளுக்குச் செல்லும் இந்தச் சூழலில், விதைப்பவர், விதைகள் என்ற உவமையைச் சிந்திப்பதற்கு இன்றைய வழிபாடு நம்மை அழைக்கிறது. இந்த வழிபாட்டின் துவக்கத்தில், இளம் உள்ளங்களில், உன்னதமான எண்ணங்களை ஆசிரியப் பெருமக்கள் விதைக்கவேண்டும் என்றும், அத்துடன், இந்த இளம் உள்ளங்கள், இறை வார்த்தை என்ற விதைகளையும் இந்தக் கல்வியாண்டில் தங்கள் உள்ளங்களில் பதித்து, பலன் தரவேண்டும் என்றும் வேண்டுவோம்.

இன்றைய நற்செய்திப் பகுதி (மத்தேயு 13:1-23), விதைப்பவர் உவமையை வழங்குவதோடு, இயேசு மக்களிடம் ஏன் உவமைகள் வழியே பேசினார் என்ற கேள்வியை எழுப்பி, அதற்கு விளக்கமும் வழங்குகிறது. கதைகளுக்கு உள்ள சக்தியை நன்கு உணர்ந்திருந்த இயேசு, அதை தன் போதனைகளின் முக்கிய அங்கமாகப் பயன்படுத்தினார்.

அமெரிக்கப் பழங்குடியில் பிறந்த வழக்கறிஞர் Oren Lyons அவர்கள் கதைகளுக்கும், கலைக்கும் உள்ள சக்தியை அழகாகக் கூறியுள்ளார்: "உலகின் ஏதோ ஒரு மூலையில், யாரோ ஒருவர் பாடுவதற்கும், ஆடுவதற்கும், கதை சொல்வதற்கும், கதை கேட்பதற்கும் இருக்கும்வரை வாழ்வு தொடரும்" (Life will go on as long as there is someone to sing, to dance, to tell stories and to listen) என்பது அவரது கூற்று. கலையும் கதையும் இவ்வுலகில் இருக்கும்வரை வாழ்க்கை தொடரும் என்பது, மனதுக்கு நிம்மதி தரும் ஓர் எண்ணம். இவ்வுலகின் இயக்கத்தையும், இவ்வுலகை இயக்கும் கடவுளையும் கலை வடிவில், கதை வடிவில் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ளனர்.

கடவுளைப் புரிந்துகொள்வதற்குத் தலைசிறந்த வழி, கதைகள் என்பதை உலகின் எல்லா மதங்களும் உணர்ந்துள்ளன. எனவே, கதைகள் இல்லாத மதங்களே இல்லை என்று சொல்லலாம். எந்த ஒரு குழந்தைக்கும் கடவுளை அறிமுகம் செய்ய பயன்படும் சிறந்த கருவி கதைகளே. வயதில் முதிர்ந்த பின்னரும் கதைகளின் மீது நம் ஈடுபாடு குறையாமல் இருந்தால் அதை தனிப்பட்ட ஒரு வரம் என்றே சொல்லவேண்டும். கதைகளுக்கு உள்ள ஆற்றலை நன்கு உணர்ந்தவர் இயேசு. எனவே, அவர் கடவுளைப்பற்றி, கடவுளின் அரசைப்பற்றி விரிவான இறையியல் விளக்கங்களை சொல்லித் தரவில்லை. கடவுளையும், அவரது அரசையும் அவர் கதைகள், மற்றும் உவமைகள் வழியே அறிமுகப்படுத்தினார்.

இயேசு ஏன் உவமைகளில் பேசினார் என்ற கேள்வியை இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கிறோம். இயேசு ஏன் உவமைகள் வழியே கற்பித்தார் என்பதைப் புரிந்துகொள்ள, புகழ்பெற்ற ஆன்மீக வழிகாட்டி, அருள்பணி Anthony de Mello அவர்களின் 'One Minute Wisdom' அதாவது, 'ஒரு நிமிட ஞானம்' என்ற நூலில் காணப்படும் எளியதொரு கதை உதவியாக இருக்கும்:
குரு எப்போதும் கதைகளையேக் கூறிவந்தார். அவர் கூறிய கதைகள் சீடர்களுக்குப் பிடித்திருந்தன. இருந்தாலும், இன்னும் ஆழமான உண்மைகளை தங்கள் குரு கற்றுத் தரவேண்டும் என்று சீடர்கள் கேட்க ஆரம்பித்தனர். அவர்கள் என்னதான் வற்புறுத்திக் கேட்டாலும், குரு சொன்ன ஒரே பதில் இதுதான்: "மனிதர்களுக்கும், உண்மைக்கும் இடையே உள்ள சுருக்கமான வழி, கதையே. இதை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை."

மற்றொரு முறை குரு தன் சீடர்களிடம், "கதையை இகழ்வுடன் காணாதீர்கள். தங்க நாணயம் ஒன்று தொலைந்துபோனால், அதைத் தேடி கண்டுபிடிக்க விலை மலிவான மெழுகுதிரியை பயன்படுத்துகிறோம் அல்லவா? அதேபோல், மிக ஆழமான உண்மைகளைக் கண்டுபிடிக்க எளிய கதைகள் உதவியாக இருக்கும்" என்று சொன்னார்.

உண்மைக்கும், நமக்கும், உண்மைக் கடவுளுக்கும், நமக்கும் இடையே உள்ள சுருக்கமான, எளிதான வழி கதைகளே என்று இயேசு உணர்ந்திருந்தார். அதுவரை, மதத் தலைவர்களால் இஸ்ரயேல் மக்களுக்கு அறிமுகமான கடவுள், கல்லில் பொறிக்கப்பட்ட கட்டளைகளில் உறைந்திருந்த கடவுள். அவர் மக்களிடமிருந்து வெகு தூரத்தில் வாழ்ந்துவந்தார். அத்தகையக் கடவுளை, கனிவான ஒரு தந்தையாக, கதைவடிவில், இயேசு தன் இஸ்ரயேல் மக்களுக்கு மீண்டும் அறிமுகம் செய்துவைத்தார். கதைகளைப்பற்றி, இந்த அறிமுகத்தை இன்று தருவதற்கு இரு காரணங்கள் உண்டு.

இயேசு ஏன் உவமைகளில் பேசினார் என்ற கேள்வியை இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கிறோம் என்பது ஒரு காரணம். இன்று முதல் நவம்பர் மாத இறுதிவரை நாம் பயணம் செய்யவிருக்கும் நமது வழிபாட்டு ஆண்டில், இன்னும் 20 ஞாயிறுகள் உள்ளன. இவற்றில், 10 ஞாயிறுகள் மத்தேயு நற்செய்தியில் இயேசு வழங்கிய அற்புதமான உவமைகளைச் சிந்திக்கும் வாய்ப்பு பெறுகிறோம் என்பது மற்றொரு முக்கியமான காரணம். நற்செய்தியாளர் மத்தேயு தொகுத்துள்ள உவமைகளிலேயே புகழ்பெற்ற 'விதை விதைப்பவர் உவமை' இன்றைய நற்செய்தியாக நமக்கு வழங்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற உவமை என்று சொல்லும்போது, கூடவே ஓர் எச்சரிக்கை மணியும் ஒலிக்கிறது. புகழ்பெற்றவை எதையும், அடிக்கடி கேட்கவும், பார்க்கவும் வாய்ப்புக்கள் எழுவதால், ", இது நமக்குத் தெரிந்ததுதானே!" என்ற ஓர் அலட்சிய மனநிலை நமக்குள் தோன்றும் ஆபத்து உண்டு. இயேசுவின் புகழ்பெற்ற கூற்றுக்களுக்கு, குறிப்பாக, அவர் சொன்ன புகழ்பெற்ற உவமைகளுக்கு இந்த ஆபத்து உள்ளது. நமது அலட்சியப் போக்கை உணர்ந்தவர்போல, 'விதை விதைப்பவர் உவமை'யின் இறுதியில் இயேசு ஓர் எச்சரிக்கை விடுக்கிறார்: "கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" (மத்தேயு 13:9) என்ற வார்த்தைகளுடன் அவர் தன் உவமையை நிறைவு செய்கிறார். இவ்வார்த்தைகளை இயேசு கூறும்போது, "நான் சொன்ன உவமையைக் கூர்ந்து கவனியுங்கள்" என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்.

எதைக் கவனிப்பது? இயேசு கூறும் இவ்வுவமையில், விதைப்பவர், விதை, விளைநிலம் என்ற மூன்று கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. இவற்றில், விதை, விளைநிலம் இரண்டையும் குறித்து இயேசு விளக்கங்கள் தருகிறார். இந்த உவமையைச் சிந்திக்கும்போதெல்லாம், நமது சிந்தனைகளும் பொதுவாக விதை, விளைநிலம் என்பனவற்றையேச் சுற்றிவந்துள்ளன. இன்று, ஒரு மாற்றமாக, நாம் விதைப்பவர் மீது நமது கவனத்தைத் திருப்புவோம்.

விதைப்பவர் எடுத்துச்சென்ற விதைகள், விளைநிலத்தில் மட்டுமல்ல, சுற்றியிருந்த பாதை, பாறைகள், முட்புதர்கள் என்று பல இடங்களிலும் விழுந்தன என்று இயேசு கூறினார். இது விதைப்பவரின் கவனக்குறைவால் நிகழ்ந்ததா அல்லது, விதைப்பவர் தாராள மனதுடன் விதைகளை அள்ளித் தெளித்தாரா? என்ற கேள்விகள் எழுகின்றன. இயேசுவின் இவ்வுவமை, இறை வார்த்தையை மையப்படுத்தியது என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, விதைப்பவர் இவ்வாறு செயல்பட்டது, அவரது தாராள மனதைக் காட்டுகிறது என்ற பொருளே பொருத்தமாக உள்ளது.

விதை விழும் இடம், பாதையோரமாக இருந்தால் என்ன, பாறையாக இருந்தால் என்ன, முட்புதராக இருந்தால் என்ன... அவற்றிலும் விதைகளைத் தெளிப்பது, இறைவார்த்தையைச் சுமந்து செல்பவரின் கடமை. பாதையோரம் விழுந்தால் பயன்தருமா? பாறையிலும், முட்புதரிலும் விதைப்பது மதியீனம் அல்லவா? என்று கணக்குப்பார்த்து, தயங்கித் தயங்கிச் செயல்படுவோர், இறை வார்த்தை என்ற விதைக்கு தடை விதிப்பவர்களே!

நாம் என்னதான் தடைகள் விதித்தாலும், இறைவார்த்தை, தன் செயல்களை ஆற்றியே தீரும் என்பதை, இறைவாக்கினர் எசாயா இன்றைய முதல் வாசகத்தில் திட்டவட்டமாகக் கூறுகிறார். அதுவும், இவ்வார்த்தைகளை இறைவனே நேரடியாகச் சொல்வதாக இன்றைய முதல் வாசகம் நமக்கு உணர்த்துகின்றது:
இறைவாக்கினர் எசாயா 55: 10-11
ஆண்டவர் கூறுவது: மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன: அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.

தன் உவமையில் இயேசு அறிமுகப்படுத்தும் விதைப்பவர் வழியாக நமக்கு நல்லதொரு பாடத்தை புகட்டுகிறார். அதாவது, இனம், குலம், மதம், தரம் என்ற பல எல்லைகளை நாமே வரையறுத்துக்கொண்டு, அந்த எல்லைகளுக்குள் மட்டுமே இறைவார்த்தை என்ற விதையைப் பயன்படுத்த வேண்டும் என நினைப்பது தவறு என்பதை இயேசு இந்த விதைப்பவர் வழியே சொல்லித்தருகிறார்.

நிபந்தனைகள் ஏதுமின்றி, தங்கு தடையின்றி, தாராளமாக, இறைவார்த்தையை அள்ளித் தெளிக்கவேண்டும் என்பதை இயேசு உவமையில் மட்டும் கூறாமல், தன் வாழ்விலும் கடைபிடித்தார். மதத் தலைவர்கள் என்ற பாறைகளில் அவர் விதைத்த வார்த்தைகள் வெறுப்பாக வெடித்தாலும் அவர் சளைக்காமல் தொடர்ந்து விதைத்தார். பாவம் என்ற முட்புதர்களில் சிக்கியிருந்தோரிடம், அவர் விதைத்த வார்த்தைகள் சென்றடைந்தன என்பதை நற்செய்தியில் நாம் அடிக்கடி காண்கிறோம்.

இறைவார்த்தையை விதைப்பது என்றதும், கோவில்களிலும், வேறு பல மத மேடைகளிலும் இறைவார்த்தையைப் பறைசாற்றுவதை மட்டும் எண்ணவேண்டாம். இறைவார்த்தையை விதைப்பது என்பது ஒவ்வொருவர் வாழ்வின் வழியாக நிகழும் அமைதியான விதைத்தல். அதன் வழியாக, சுற்றியிருப்போரின் வாழ்வில் உருவாகும் விளைச்சல்!

பாகுபாடுகள் பார்க்காமல், கேள்விகள் கேட்காமல் விதைகளைத் தெளிப்பதைப் பற்றி சிந்திக்கும்போது, பொருள் நிறைந்த கதையொன்று நினைவுக்கு வருகிறது...
நாட்டிலேயே தலைசிறந்த சோளத்தை வளர்ப்பவர் என்ற விருதை திருவாளர் மைக்கிள் அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் பெற்றுவந்தார். அவரது தொடர் வெற்றியின் இரகசியத்தை அறிய, ஒரு நாளிதழின் நிருபர் அவரைப் பேட்டி கண்டார். பேட்டியின்போது திரு.மைக்கிள் பகிர்ந்துகொண்ட ஒரு விவரம் நிருபருக்கு வியப்பாக இருந்தது. திரு.மைக்கிள் அவர்கள், தன் நிலத்தைச் சுற்றியிருந்த மற்ற நில உரிமையாளர்களுக்கு, தன்னிடம் இருந்த சிறந்த விதைகளைக் கொடுத்தார் என்பதே அந்த வியப்பான விவரம்.
"உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களுடன் போட்டி போடுகிறவர்கள் என்பதை அறிந்தும், நீங்கள் ஏன் அவர்களுக்கு சிறந்த விதைகளைத் தந்தீர்கள்?" என்று நிருபர் கேட்டபோது, திரு.மைக்கிள் கூறிய விளக்கம் இதுதான்: "இதைப்பற்றி ஏன் ஆச்சரியப்படுகிறீர்கள்? நன்கு வளர்ந்துள்ள சோளக் கதிரின் மகரந்தத் தூள் காற்றில்  கலந்து அடுத்த நிலங்களில் உள்ள சோளக் கதிர்களில் மகரந்த சேர்க்கை செய்கின்றன, இல்லையா? அப்படியிருக்க, என் நிலத்தைச் சுற்றியுள்ளவர்களின் நிலங்களில், தரக் குறைவான சோளக் கதிர்கள் வளர்ந்தால், அது என் கதிர்களின் தரத்தையும் குறைத்துவிடுமே! அதனால், நான் தலை சிறந்த சோளத்தை உருவாக்க வேண்டுமென்றால், என்னைச் சுற்றியிருப்போரும் நல்ல சோளத்தை உருவாக்க வேண்டும். எனவேதான் நல்ல விதைகளை சுற்றியுள்ள நில உரிமையாளர்களுக்கும் தருகிறேன்" என்று அவர் சொன்ன பதில் வியப்பைத் தந்தாலும், ஆழ்ந்ததோர் உண்மையையும் சொல்லித் தருகின்றது.

விதை விதைப்பவர் உவமையை இன்று இறைவார்த்தையாக ஏற்கும் நாம், திறந்த மனதுடன் இறைவார்த்தையைக் கேட்கும் செவியுடையோராய் மாற இறைவனிடம் வரம் வேண்டுவோம். நாம் கேட்கும் இறைவார்த்தையை, தங்கு தடையேதுமின்றி, தாராள மனதோடு, பிறர் உள்ளங்களில் விதைக்கும் நல்ல விதைப்பாளர்களாக மாறுவோம். இறைவார்த்தையை வாய்மொழியாக விதைப்பதைவிட, வாழ்வின் வழியே விதைப்பதில், ஆற்றலோடு செயலாற்றுவோம். நாம் உன்னத வாழ்வு வாழ்வதற்கு உதவியாக, நம்மைச் சுற்றியிருப்போரும் உன்னத வாழ்வு பெறவேண்டும் என்ற உயர்ந்த இலட்சியம் கொண்டு வாழ்வோம். இறைவன் இந்த நற்பணியில் நமக்குத் துணை புரிவாராக!

No comments:

Post a Comment