23 December, 2010

Thy Rod and Thy Staff… உம் கோலும் நெடுங்கழியும்…



The closing words of verse 4 of Psalm 23 are taken for our reflection today. “Thy rod and thy staff, they comfort me.” When I read this line, I felt that the word ‘comfort’ was out of place there. “Thy rod and thy staff, they chastise me,” sounded more logical. Having been brought up in a generation where ‘spare the rod and spoil the child’ was almost a formula, I am inclined to think in this line.
Corporeal punishment is anathema now. Children and students who receive corporeal punishment can go to court against teachers and even against parents. Last week a catholic news website reported of a 9th standard boy hitting the principal of a catholic school. This was quite shocking for me. It happened in Kolkatta where a school function was in progress. The principal seemed to have hit the boy for some reason and the boy retaliated in front of the whole school. I was wondering whether such an incident would have happened when I was doing school. Perhaps they did happen. But, such incidents did not receive media attention. If a legal process were to be pursued in this Kolkatta incident, probably the principal would stand accused more than the student. Corporeal punishment is a no-no now. In such an ambience, my preoccupation is: how do I understand this line from Psalm 23 and how do I share my thoughts. Still, let me venture into this.

In the last few weeks we have seen a few salient features of verse 4 of Psalm 23. This verse is the centre of the Psalm; in this verse the Shepherd becomes a first person to the psalmist etc. There is another feature in the following verses. From verse 5 till the end of the psalm, the author talks of all the blessings he would be receiving from the Shepherd. This list of blessings stands in stark contrast to the valley of darkness and death the psalmist was talking about in verse 4. I feel that the last line of verse 4 serves as a portal to all the blessings that follow. If we are ‘comforted’ by the rod and staff of the Shepherd, then there will be a feast laid out, oil of gladness, overflowing cup, and everlasting life in God’s own house. This portal is a narrow door (similar to the one mentioned by Jesus in Matthew 7: 13-14) and hence requires lot of humility to understand how the Shepherd’s rod and staff will comfort us.

The author of the psalm was either a shepherd himself or one who knew quite a lot about shepherds. Hence, when he talks of the rod and staff of a shepherd, he has quite a few thoughts attached to these symbols. “The shepherd used his staff not only to lean on as he walked, but to help straying or fallen sheep climb out of the pits they may have stumbled into…He used his rod to discipline stubborn sheep that got out of line and wandered into danger. The staff was a symbol of help and support, the rod a symbol of discipline and punishment.
The image of God striking people with His rod, using it to punish even those whom He loves, is common in the Bible. God’s word to the prophet Isaiah (10:5) warns Israel that ‘I will send Assyria, the rod of My anger, against an ungodly people.’… God promises the aging King David that He will bless his son Solomon with His favour but will demand righteous behaviour from him: ‘I will be a father to him. When he does wrong, I will chastise him with the rod’ (II Samuel 7: 14). And perhaps the most familiar reference to the use of the rod to discipline even those whom we love is found in the Book of Proverbs (13:24), ‘He who spares the rod hates his son.’”
(Harold Kushner)

It is very significant that the psalmist thinks of the rod and the staff while walking through the valley of death. During our reflections on this Psalm, we have spoken very often about how we raise quite many questions on God when we are in pain. Not only do we raise questions, but we give some answers too. One such answer during painful moments is that God is punishing us through this pain. The other answer is that God is testing or strengthening our faith through pain. These are good thoughts in themselves. But, I am afraid that we bring in God too readily into our painful situations. For instance, when a child trips and falls on the ground since she ran very fast, it is our duty to make her understand that there are limits to her speed. Instead, we easily say: “You ran fast without listening to me. Now, you see, God has made you fall.” The fear of God may be the beginning of wisdom. But, this way of feeding the fear of God is rather warped! This way of positing God, we think, is an easier way to control the child. But, we should also think about what type of God we are imprinting on the child’s consciousness.
Such easy interpretations are given even in very grave matters like natural disasters. We may be aware that Graham Stein and his two children were burnt alive while they were asleep in a jeep in Orissa. This happened in January 1999. That same year in October there were cyclone and tidal waves in Orissa that took away 10,000 lives. I had heard pastors and priests linking these two isolated events and saying that the tidal waves and cyclone were God’s way of punishing the people of Orissa… A totally unacceptable way of interpreting the natural disaster in Orissa. The care and concern as well as the chastisement of God are symbolised in the rod and the staff of the Shepherd. Let us continue our search on these two symbols of the Shepherd.

Dear Friends,This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch. Thank you.

திருப்பாடல் 23ன் நான்காம் திருவசனத்தில் நாம் காணும் இறுதி வரி இது: "உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்." இந்த வரியை நான் வாசித்தபோது, முரண்பட்ட எண்ணங்கள் உள்ளத்தில் எழுந்தன. கோல், கழி என்ற வார்த்தைகளைக் கேட்கும் போது, என் மனதில் கண்டிப்பு, தண்டனை என்ற வார்த்தைகள் எதிரொலிப்பதை உணர்கிறேன். 'கோலெடுத்தால் குரங்காடும்' என்று தமிழிலும் ‘Spare the rod and spoil the child’ அதாவது, 'கோலைப் பயன்படுத்தத் தவறினால், குழந்தையைப் பயனில்லாமல் ஆக்கி விடுவாய்.' என்று ஆங்கிலத்திலும் சொல்லப்படும் பழமொழிகளுடன் வளர்ந்தவன் நான். அடி உதவுவதுபோல், அண்ணன் தம்பி உதவ மாட்டான் என்பதும் என் தலைமுறையில் அடிக்கடி சொல்லப்பட்டப் பழமொழி.
இன்றையத் தலைமுறையின் கதையே வேறு. உடலை வருத்தும் தண்டனைகள் பள்ளிகளிலிருந்து, வீடுகளிலிருந்து மறைந்துவரும், அல்லது, மறைக்கப்படும் காலம் இது. பிரம்படிகள் இன்று எந்தப் பள்ளியிலும் ஒலிப்பதில்லை என்றே சொல்லலாம். நம் குடும்பங்களிலும் உடலை வருத்தும் தண்டனைகள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன. ஆசிரியரோ, பெற்றோரோ, கையை ஓங்கினால், கம்பியெண்ண வேண்டியிருக்கும் என்பது போன்ற எண்ணங்கள் இன்று நகைச்சுவையாகப் பேசப்படுகின்றன.

சென்ற வாரம் கொல்கத்தாவில் ஒரு கத்தோலிக்கப் பள்ளியில் நடந்ததாய்ச் சொல்லப்படும் செய்தி எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. கடந்த செவ்வாய்க் கிழமை (14-12-10) அப்பள்ளியில் ஒரு விழா நடந்தது. ஒருவேளை, அது கிறிஸ்மஸ் விழாவாகக் கூட இருக்கலாம். அந்த விழாவின் போது, 9ம் வகுப்பு பயிலும் ஒரு மாணவனைத் தலைமை ஆசிரியர் ஏதோ ஒரு காரணத்திற்காக அடித்தார். பதிலுக்கு அந்த மாணவன் விழா நேரத்தில், அரங்கத்திலேயே தலைமை ஆசிரியரைத் திரும்ப அடித்தான் என்று செய்தி வந்திருந்தது. அனைவர் முன்னிலையிலும் இது நடந்ததால், எல்லாரும் அதிர்ச்சி அடைந்தனர் என்று செய்தி கூறியது. இதை வாசிக்கும்போது, எனக்கே அதிர்ச்சியாக இருந்ததெனில், அவர்களது அதிர்ச்சியை என்னால் உருவகிக்க முடிந்தது. நான் பள்ளியில் பயின்ற காலத்தில் இது போல் நடந்திருக்குமா, அல்லது, அப்படியே நடந்திருந்தாலும் அது செய்தியாக வெளியாகி இருக்குமா என்பது சந்தேகம்தான். இன்று வியாபாரம், இலாபம் என்ற குறிக்கோள்களை மட்டும் வைத்து ஊடகங்கள் செயல்படுவதால், எல்லாவற்றையும் செய்தியாக்கிவிடுகின்றன. இளைய தலைமுறையினரைப் பற்றி வரும் செய்திகளில் பல மனதைப் பாதிக்கும் செய்திகள்:
ஆசிரியர் அடித்ததால், மாணவன் அல்லது மாணவி தற்கொலை...
வெயிலில் முழந்தாள் படியிட்ட மாணவி சுருண்டு விழுந்து மரணம்...
பெற்றோர் திட்டியதால் விஷம் குடித்து இளைஞன், அல்லது இளம்பெண் தற்கொலை...
என்று இன்றைய செய்திகள் தினம் ஒன்று வந்த வண்ணம் உள்ளன.
இப்படி ஒரு சூழல் வளர்ந்து வரும் இன்றைய உலகில் "உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்" என்ற இந்த வரியை எப்படி புரிந்து கொள்வது, புரிந்து கொண்டதை எப்படி உங்களுடன் பகிர்ந்து கொள்வது என்பதில் எனக்குத் தயக்கம் இருக்கத்தான் செய்கிறது.
மருந்து கசக்கிறது, நெருப்புச் சுடுகிறது என்பதால், அவைகளைப் பயன்படுத்தாமல் ஒதுக்கி வைக்க முடியாதே. அதேபோல், திருப்பாடல் 23ன் நான்காம் திருவசனத்தை ஒதுக்கி வைக்காமல், அலசிப் பார்ப்பது நமக்கு நன்மைத் தரும் முயற்சியாக இருக்கும். முயல்வோம் வாருங்கள்.

திருப்பாடல் 23ன் நான்காம் திருவசனத்தில் உள்ள ஒரு முக்கியமான மாற்றத்தை நாம் ஒரு சில வாரங்களுக்கு முன் சிந்தித்தோம். அதாவது, இத்திருப்பாடலின் மூன்றாம் திருவசனம் முடிய 'அவர்' என்று இறைவனைப்பற்றி பேசி வந்த ஆசிரியர், நான்காம் திருவசனம் முதல் 'நீர்' என்று இறைவனிடம் பேச ஆரம்பித்தார் என்பதைச் சிந்தித்தோம். நான்காம் திருவசனத்திற்குப்பின் நிகழும் மற்றொரு மாற்றத்தையும் நாம் புரிந்து கொள்வது நல்லது. நான்காம் திருவசனத்தில் இருள், சாவின் நிழல் சூழ்ந்த பள்ளத்தாக்கு என்று மனத்தைக் கலங்க வைத்த எண்ணங்களை எடுத்துரைத்த ஆசிரியர், ஐந்தாம் திருவசனத்திலிருந்து திருப்பாடலின் இறுதிவரை சுகமான, இனிமையான எண்ணங்களை வழங்கியுள்ளார். இறைவன் ஏற்பாடு செய்யும் விருந்து, தலை மீது பூசப்படும் தைலம், நிரம்பி வழியும் கிண்ணம், இறைவனின் இல்லத்தில் தொடரும் வாழ்வு என்று எல்லாமே இனிமையை உணர்த்தும் வரிகளாக உள்ளன. தொடரும் இந்த இனிய எண்ணங்களுக்குள் நுழையும் ஒரு நுழை வாயிலாக நான்காம் திருவசனத்தின் இறுதி வரியை நான் எண்ணிப்பார்க்கிறேன்.
இறைவனாம் ஆயனின் கோலும், நெடுங்கழியும் நம்மைத் தேற்றினால், இறைவனின் இல்லம், அங்கு கிடைக்கும் விருந்து என்று தொடரும் நன்மைகளுக்கு நாம் தயாராக இருப்போம். இந்த நுழை வாயில் சிறிது குறுகலான வாயில் தான். இயேசு நற்செய்தியில் சொன்ன இடுக்கமான வாயில் என் மனதில் திறக்கிறது.
மத்தேயு நற்செய்தி 7: 13-14
இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே.
திருப்பாடல் 23ன் நான்காம் திருவசனத்தின் இறுதி வரி இடுக்கமான ஒரு வாயில். இதில் நுழைய முயல்வோம்.

திருப்பாடலின் ஆசிரியர் ஆயனாக இருந்திருக்கலாம், அல்லது ஆயர்களைப்பற்றி நன்கு தெரிந்தவராக இருக்கலாம். எனவே, அவர் ஆயனின் கோல், நெடுங்கழி இவைகளைப்பற்றிப் பேசும்போது, அவரது அனுபவம் பேசுகிறது. அவைகளில் சிலவற்றையேனும் நாம் புரிந்து கொள்ள முயல்வோம்.
ஆயனிடம் சிறு கோல் ஒன்றும், நீளமான கழி ஒன்றும் இருக்கும். ஆடுகளை ஒழுங்குபடுத்தி அழைத்துச் செல்ல கோல் உதவியது. வழிமாறி, கூட்டத்திலிருந்து விலகிச் செல்லும் ஆடுகளைச் செல்லமாக, அல்லது சில வேளைகளில் கொஞ்சம் வலுவாகத் தட்டி, மீண்டும் அவைகளை மந்தைக்குள் திருப்பிக் கொண்டு வருவதற்குக் கோல் உதவியது.
நெடுங்கழி பலவற்றிற்குப் பயன்பட்டது. நாள் முழுவதும் நின்றபடி, அல்லது நடந்தபடி இருந்த ஆயன் களைத்துப் போன போது, அந்த நெடுங்கழி மீது கொஞ்சம் சாய்ந்து இளைப்பாற அது உதவியது.
தரை மட்டத்தில் ஆடுகள் உண்பதற்கு புல் இல்லாத போது, நெடுங்கழியின் உதவியால் மரத்தின் சில கிளைகளை வளைத்து, அல்லது அவைகளை ஒடித்து தன் ஆடுகளுக்குத் தேவையான உணவளிக்க நெடுங்கழியை ஆயன் பயன்படுத்தினார்.
சில வேளைகளில் பள்ளங்களில் தவறி விழும் ஆடுகளைக் காப்பாற்ற தானே இறங்கிச் செல்ல வேண்டியிருந்தாலோ, அல்லது அந்த ஆடு ஏறிவருவதற்கோ நெடுங்கழி ஒரு சிறு ஏணி போலவும் பயன்பட்டது.
இவ்வாறு கோலும், நெடுங்கழியும் பல்வேறு காரணங்களுக்குப் பயன்படுத்தப்பட்டன. கண்டிப்பு, கனிவுடன் கூடிய கரிசனை என்று ஆயனின் இரு குணங்களுக்கு இவை அடையாளங்களாய் இருந்தன.
ஆண்டவனை ஓர் ஆயனாக நினைத்துப் பார்க்கும் போது, இறைவனின் இந்த இரு முகங்களும் வெளிப்படும் வகையில் இவ்வரியைக் கூறியுள்ளார் திருப்பாடலின் ஆசிரியர். இருளையும், சாவின் நிழல் சூழ்ந்த பள்ளத்தாக்கையும் கடக்கும் போது, ஆயனின் கோலும் கழியும் தன்னைத் தேற்றும் என்று அவர் கூறுவது கூடுதல் அழகு.

துன்பம் நம்மைச் சூழும்போது, இறைவனைப் பற்றிய ஒரு குறுகிய எண்ணம் மனதில் பதியும் என்று திருப்பாடல் 23ன் தேடல்கள் பலவற்றில் நாம் சொல்லி வருகிறோம். நமக்குத் துன்பம் வரும்போது, கடவுள் இருக்கிறாரா, அப்படியே அவர் இருந்தால் என்னதான் செய்து கொண்டிருக்கிறார், இப்போது எங்கே மறைந்துவிட்டார் என்று கேள்விகள் பல மனதில் குவியும்.
பல சமயங்களில் துன்ப நேரத்தில் நாமே ஒரு சில விடைகளையும் நமக்குச் சொல்லிக்கொள்கிறோம். நமக்கு வந்திருக்கும் துன்பம் கடவுளிடமிருந்து வந்திருக்கிறது என்பது அந்த விடைகளில் ஒன்று. கடவுளிடமிருந்து வரும் துன்பங்களையும் இரு வழிகளில் நாம் புரிந்து கொள்ள முயல்கிறோம். நாம் செய்த தவறுகளுக்காக கடவுள் இத்துன்பத்தின் வழியாக நம்மைத் தண்டிக்கிறார், நமக்குப் பாடம் சொல்லித் தருகிறார் என்பது அடிக்கடி நாம் சொல்லும் பதில். அல்லது, நமது விசுவாசத்தைச் சோதிக்கவோ, பலப்படுத்தவோ கடவுள் துன்பங்களைத் தருகிறார் என்பது நாம் சொல்லும் மற்றொரு பதில்.

துன்பங்களின் வழியாக இறைவன் நம்மைத் கண்டிக்கிறார் என்பது புதிதான எண்ணங்கள் அல்ல. இஸ்ரயேல் மக்கள் மத்தியில் பரவலாக இந்த எண்ணங்கள் இருந்தன. இதோ ஒரு சில எடுத்துக்காட்டுகள்:
இறைவாக்கினர் எசாயா 10: 5
ஆண்டவர் கூறுவதாவது: அசீரிய நாடு! சினத்தில் நான் பயன்படுத்தும் கோல் அது: தண்டனை வழங்க நான் ஏந்தும் தடி அது.
தாவீதின் மகனான சாலமோனைத் தான் எவ்வாறு வழி நடத்துவார் என்று நாத்தானின் வழியாக இறைவன் பேசுகிறார்.
சாமுவேல் - இரண்டாம் நூல் 7: 14
நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறுசெய்யும்போது மனித இயல்புக்கேற்ப அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன்.
நீதிமொழிகள் நூலின் ஆசிரியர் கூறும் அறிவுரைகளில் ஒன்று இது:
நீதிமொழிகள் 13: 24
பிரம்பைக் கையாளாதவர் தம் மகனை நேசிக்காதவர்: மகனை நேசிப்பவரோ அவனைத் தண்டிக்கத் தயங்கமாட்டார்.

கடவுள் தண்டிக்கிறார் என்பதை பல சமயங்களில் வெகு எளிதாக, மேலோட்டமாகப் புரிந்து கொள்கிறோம். நாமே சரியாகப் புரிந்து கொள்ளாத, அல்லது மேலோட்டமாகப் புரிந்து கொண்ட எண்ணங்களைப் பிறருக்கு, முக்கியமாக குழந்தைகளுக்குச் சொல்லியும் தருகிறோம்.
வேகமாக ஓடி, கீழே விழுந்து அடிபடும் குழந்தையிடம், சக்தியை மீறிச் செயல்படுவது ஆபத்து என்று சொல்லித் தருவதற்குப் பதிலாக, "நான் ஓடாதேன்னு சொன்னேன். நீ கேட்கல. இப்பப்பாரு. கடவுள் உன்னைக் கீழே விழவெச்சுட்டார்." என்று எளிதாகச் சொல்லி விடுகிறோம். இப்படி நாம் சொல்லும்போது, அக்குழந்தையின் பிஞ்சு மனதில் எவ்வகையான கடவுளை நாம் பதிக்கிறோம் என்பதைச் சிந்திக்க வேண்டும். குழந்தையைக் கட்டுப்படுத்த, குழந்தையின் எல்லைகளைச் சொல்லித்தர நேரம் எடுத்துக் கொள்ளாமல், வெகு எளிதாக கடவுளை அங்கு நுழைப்பதால், ஒரு தவறான கடவுளைக் குழந்தைக்கு ஊட்டி விடுகிறோம்.

இப்படி சிறு காரியங்களில் நாம் இழுத்துப் போடும் கடவுளை சில நேரங்களில் பெரிய விஷயங்களிலும் இழுத்துப் போட்டு விடுகிறோம். கடவுளைத் தவறாக மக்களிடம் எடுத்துச் சொல்லும் போதகர்களைக் கண்டு வருத்தப்பட்டிருக்கிறேன். சில சமயங்களில் கோபமும் பட்டிருக்கிறேன். அப்படி எனக்குள் கோபத்தை, வருத்தத்தை உண்டாக்கிய ஒரு நிகழ்ச்சி இது. ஏற்கனவே இதை உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன். மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.
ஒரிஸ்ஸாவில் தொழு நோயாளர்கள் மத்தியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வந்த Graham Stein என்ற கிறிஸ்தவப் போதகரும் அவரது இரு குழந்தைகளும் 1999ம் ஆண்டு ஜனவரியில் உயிரோடு எரிக்கப்பட்டனர். அதே ஆண்டு அக்டோபர் மாதம் ஒரிஸ்ஸாவில் வீசிய ஒரு பெரும் புயல் மற்றும் வெள்ளத்தில் 10,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர். இவ்விரண்டையும் இணைத்துப் பேசிய சில குருக்கள், மதப் போதகர்கள் ஒரிஸ்ஸாவில் பெரியதொரு புயலையும், வெள்ளத்தையும் இறைவன் அனுப்பினார் என்று கடவுள் மேல் பழி சொன்னார்கள். நம் மனித அறிவால் புரிந்து கொள்ள முடியாத சம்பவங்களில் கடவுளைப் புகுத்தி விடுகிறோம். உலக நிகழ்வுகளுக்கு நாம் தரும் இது போன்ற எளிதான விளக்கங்கள் எப்படிப்பட்ட கடவுளை நம்மில் பதிக்கின்றன என்பதை உணர வேண்டும்.
தன் கோலையும் நெடுங்கழியையும் கொண்டு ஆயனாம் இறைவன் நம்மை எவ்விதம் வழிநடத்துகிறார், தண்டிக்கிறார், தேற்றுகிறார் என்பதைத் தொடர்ந்து அடுத்த வாரம் சிந்திப்போம்.


இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org

No comments:

Post a Comment