Debtonation – The Global Financial Crisis
Official Vatican silver medal of Pope John Paul II, commemorating the Holy Year 2000.
2000மாம்
ஆண்டு நெருங்கிவந்த வேளையில், உலகம் அழிந்துவிடும் என்ற வதந்தி
பெருமளவில் பரவியிருந்தது. அழிவைப் பற்றிய பரபரப்பு, மக்கள் மனங்களை ஆக்ரமித்த வேளையில், அடுத்த ஆயிரமாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இவ்வுலகை, எவ்விதம் இன்னும் நல்வழியில் வாழவைக்க முடியும் என்று சிலர் கனவு
கண்டனர். அவர்களில் ஒருவர், ஓய்வுபெற்ற பேராசிரியர், மார்ட்டின் டெண்ட் (Martin
Dent) அவர்கள். இங்கிலாந்து நாட்டின் Keele பல்கலைக் கழகத்தில் பணியாற்றி ஒய்வு பெற்றிருந்த மார்ட்டின் டெண்ட்
அவர்கள், அரசுத் தூதரகப் பணிகளிலிருந்து
ஒய்வு பெற்றிருந்த வில்லியம் பீட்டர்ஸ் (William
Peters) என்பவருடன், இணைந்து, Jubilee
2000 Coalition, அதாவது, யூபிலி 2000 கூட்டணி என்ற
முயற்சியை ஆரம்பித்தார்.
உலக
வரலாற்றில், 2000மாம் ஆண்டு தனித்துவம் வாய்ந்த ஒரு
மைல்கல் என்பதால், அந்த ஆண்டை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடவேண்டும்
என்ற குறிக்கோளுடன், யூபிலி 2000 கூட்டணி முயற்சிகள், 1990ம் ஆண்டு துவக்கப்பட்டன. இம்முயற்சிகள் விரைவில் 40 நாடுகளில்
பரவின.
உலகளாவிய
இந்த முயற்சிக்கு, 'யூபிலி 2000' என்று பெயரிடப்பட்டதன் காரணமே, யூபிலி
குறித்து, விவிலியத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள்
என்று, இந்தக் கூட்டணியின் நிறுவனர்கள் கூறினர்.
லேவியர் நூல் 25ம் பிரிவில் யூபிலி ஆண்டைக் கொண்டாடுவதற்குக் கூறப்பட்டுள்ள வழிமுறைகள், இம்முயற்சிகளுக்கு வித்திட்டன. குறிப்பாக, மக்கள் தாங்கள் இழந்த உரிமைகளையும், நிலங்களையும் மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும்,
மக்களின் கடன்கள் இரத்து செய்யப்பட வேண்டும் என்றும் இறைவன் வழங்கிய கட்டளைகள், 'யூபிலி 2000' முயற்சியின் உயிர் மூச்சாக மாறின.
உலகின்
பல வறிய நாடுகள், செல்வம் மிகுந்த நாடுகளுக்கும், உலக வங்கிக்கும் பட்டிருந்த கடன் தொகை, அந்நாடுகளின் கழுத்தில் ஓர் இயந்திரக் கல்லாக மாறி, அந்நாடுகளின் மூச்சை நிறுத்தும் வண்ணம் இறுக்கி வந்தது. பல
வறிய நாடுகள், தாங்கள் பெற்ற கடனுக்கு வட்டித்தொகை செலுத்திவந்ததால், தங்கள்
நாடுகளில் அடிப்படைத் தேவைகளையும் மக்களுக்கு வழங்க முடியாமல் தத்தளித்தன. கடன்
சுமையால் உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருந்த வறிய நாடுகளைக் காப்பாற்றும் நோக்கத்தில்,
2000மாம் ஆண்டில், வறியநாடுகளின் கடன் தொகை முழுவதையும் இரத்து செய்யவேண்டும் என்ற
அறைகூவலுடன், யூபிலி 2000 கூட்டணி முயற்சி துவக்கப்பட்டது.
இந்தக்
கூட்டணி முயற்சியின் தொடர்ச்சியாக, Jubilee
Debt Campaign அதாவது, 'யூபிலி
கடன் இரத்து' என்ற முயற்சி, 2000மாம் ஆண்டையும் தாண்டி, இன்றளவும் ஓர் உலக அமைப்பாகச் செயல்பட்டு
வருகிறது. 'Drop the Debt', அதாவது, 'கடனைக் கைவிடுங்கள்' என்று செல்வம் மிகுந்த நாடுகளை
நோக்கி எழுப்பப்பட்ட ஓர் அறைகூவலுடன் இந்த உலகளாவிய அமைப்பு தன் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தியது.
இதுவே, “வறுமையை பழங்கால வரலாறாக மாற்றுங்கள்” (Make Poverty History)
என்ற சக்திவாய்ந்த
இயக்கமாக உருவெடுத்தது.
2004ம்
ஆண்டு ஆசிய நாடுகளை அதிர்ச்சியுறச் செய்த சுனாமியைத் தொடர்ந்து, பல ஆசிய நாடுகள், செல்வம் மிகுந்த நாடுகளுக்குப்
பட்டிருந்த கடன் சுமையைக் குறைக்க, இவ்வமைப்பினர் முயற்சிகள் எடுத்து, ஓரளவு வெற்றியும் கண்டனர்.
2010ம்
ஆண்டு, ஹெயிட்டி நாட்டை நிலைக்குலையச் செய்த நிலநடுக்கத்தைத்
தொடர்ந்து, அந்நாட்டின் கடன்களை இரத்து செய்யும் முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டன.
காங்கோ
குடியரசை, இராணுவத்தின் துணைகொண்டு 1965 முதல், 1997 முடிய சர்வாதிகார ஆட்சி செய்துவந்த Joseph-Desiré
Mobutu என்ற தலைவரின் வெகு ஆடம்பரமான வாழ்வால், அந்நாடு மிகுந்த கடன்பட்டது. அந்தக் கடன் சுமையைக் குறைக்க, இவ்வமைப்பினரால், 2011ம் ஆண்டு சிறப்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
2015ம்
ஆண்டு, ஏப்ரல், மே மாதங்களில்
நேபாள நாட்டை தரைமட்டமாக்கிய நிலநடுக்கத்தையடுத்து, அந்நாடு
உலக வங்கிக்கும், ஆசிய வளர்ச்சி வங்கிக்கும் பட்டிருந்த
140 கோடி டாலர்கள் கடன்தொகையை முற்றிலும் இரத்து செய்யும் முயற்சிகள் தொடர்ந்து வருகின்றன.
கடன்
சுமையால் குனிந்து வாழும் வறிய நாடுகளின் கடன் இரத்து செய்யப்பட்டால், அவை ஓரளவு தலை நிமிர்ந்து நிற்க முடியும்; தங்கள் சொந்த நாட்டின் முன்னேற்ற முயற்சிகளில் முழு மூச்சாய் ஈடுபடமுடியும்
என்பதே, ‘யூபிலி 2000 கூட்டணி’, அல்லது ‘யூபிலி கடன் இரத்து’ என்ற உலகளாவிய முயற்சிகளின் அடிப்படை நோக்கம்.
இந்த
உலக அமைப்புக்கள், தங்கள் உந்து சக்தியை, விவிலியத்திலிருந்து பெற்றுள்ளன.
குறிப்பாக, லேவியர் நூல், இணைச் சட்ட நூல் இரண்டிலும், கடன்களை
இரத்து செய்வது குறித்து, மோசே வழியாக இறைவன் வழங்கிய கட்டளைகள், மனிதாபிமானம் கொண்ட அமைப்புக்களின் மனசாட்சியாகச் செயல்பட்டுள்ளன.
இவ்விரு நூல்களிலும், கடனை இரத்து செய்வது குறித்து
கூறப்பட்டுள்ள வார்த்தைகளை, இரக்கத்தின் யூபிலி ஆண்டில் மீண்டும்
நாம் ஒருமுறை கேட்பது பயனளிக்கும்:
லேவியர்
25: 35-37, 39-41
உன் சகோதரர்கள் ஏழ்மைப்பட்டு இளைத்துப்போனால், அவர்களுக்கு உதவு... அவர்களிடமிருந்து வட்டியோ இலாபமோ பெறவேண்டாம்.
உன் கடவுளுக்கு அஞ்சி நட; உன் சகோதரர்கள் உன்னோடு வாழட்டும்.
அவர்களுக்கு உன் பணத்தை வட்டிக்குக் கொடாதே; உணவை அதிக விலைக்கு விற்காதே.
உன் சகோதரர் ஏழ்மைப்பட்டு உனக்கு விலையாகிப் போனால், அவர்களை அடிமைபோல் நடத்த
வேண்டாம். அவர் கூலியாள்போலும், விருந்தினர்போலும், உன்னோடு தங்கி யூபிலி ஆண்டுவரை உன்னிடத்தில் பணியாற்றட்டும்.
பின்னர் அவரும், அவர்தம் பிள்ளைகளும் விடுதலையாகி,
தங்கள் இனத்திற்கும், மூதாதையரின் நிலபுலங்களிடத்திற்கும்
திரும்பிச் செல்லட்டும்.
இணைச்சட்ட
நூல் 15: 1,2,4,7-11
ஏழாம் ஆண்டின் முடிவில் நீ விடுதலை அளிப்பாய். விடுதலையின் விவரம் இதுவே; ஒருவன் தனக்கு அடுத்திருப்பவனுக்குக் கொடுத்த கடனிலிருந்து
அவனை விடுதலை செய்யட்டும். அது ஆண்டவருக்கெனக் குறிக்கப்பட்ட விடுதலை ஆண்டாகையால், தனக்கு அடுத்திருப்பவனுக்கோ தன் சகோதரனுக்கோ கொடுத்த கடனைத்
தண்டல் செய்ய வேண்டாம்.
உன்னிடம் வறியவர் இல்லாதிருக்கட்டும். அப்பொழுது நீ உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்படி
உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டில் உன்னை ஆசியால் நிரப்புவார்.
கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டிலுள்ள எந்த நகரிலாவது உன் சகோதரன்
ஒருவன் வறியவனாய் இருந்தால்,
உன்
வறிய சகோதரன் மட்டில் உன் உள்ளத்தைக் கடினப்படுத்தாதே, உன் கையை மூடிக்கொள்ளாதே. மாறாக, அவனுக்கு உன் கரங்களைத் தாராளமாகத் திறந்து, அவன் தேவைக்கு ஏற்ப, எவ்வளவு தேவையானாலும், கடன் கொடு.
விடுதலை ஆண்டாகிய ஏழாம் ஆண்டு அண்மையில் உள்ளதே என்று ஏங்குமாறு உன் உள்ளத்தில்
நெறி கெட்ட சிந்தனைகள் எழாதபடி எச்சரிக்கையாய் இரு. ஏனெனில் உன் வறிய சகோதரனை எரிச்சலுடன்
நோக்கி, அவனுக்கு எதுவும் தரவில்லையெனில், உனக்கு எதிராக அவன் ஆண்டவரிடம் முறையிடுவான். அது உன்னைக்
குற்றத்திற்கு உள்ளாக்கும். நீ அவனுக்குத் தாராளமாய்க் கொடு. அவனுக்குக் கொடுக்கும்போது
உள்ளத்தில் பொருமாதே. அப்போது,
நீ
செய்யும் அனைத்துச் செயல்களிலும், மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளிலும் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு
ஆசி வழங்குவார்.
உனது நாட்டில் ஏழைகள் என்றும் இருப்பர். எனவே நான் உனக்குக் கட்டளையிட்டுச்
சொல்கிறேன்; உன் சகோதரனுக்கும், உன் நாட்டிலுள்ள வறியவர்க்கும், தேவையுள்ளோர்க்கும் உன் கையைத் தாராளமாய்த் திற.
2000மாம்
ஆண்டு யூபிலிக்கென, 'மனுவுருவெடுத்ததன் மறையுண்மை' (Incarnationis
Mysterium) என்ற தலைப்பில், திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள், வெளியிட்ட அதிகாரப்பூர்வமான ஆவணத்தில், இந்த மில்லென்னய யூபிலியைக் கொண்டாட இவ்வுலகம் மேற்கொள்ளக்கூடிய
பல முயற்சிகளைக் குறித்து கூறியுள்ளார். அவர் கூறியுள்ளக் கருத்துக்கள், யூபிலி 2000 என்ற உலகளாவிய முயற்சிகளுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டவை:
"முன்பு
இல்லாத வகையில் அடிமைத்தனத்தின் புது வடிவங்களை மனித சமுதாயம் சந்திக்கிறது. பல்லாயிரம்
மக்களுக்கு, சுதந்திரம் என்பது, பொருளற்ற ஒரு வார்த்தையாக விளங்குகிறது. பல வறிய நாடுகள், கடன் என்ற பாரத்தால் நசுக்கப்பட்டுள்ளன. மிகக் கொடுமையான வறுமை, வன்முறைக்கு வழிவகுக்கிறது.
பல்வேறு
மொழி, இனம், நாடு, மதம் ஆகியவற்றைச் சார்ந்த மக்களிடையே
கூட்டுறவு முயற்சிகள் இன்றி, உண்மையான முன்னேற்றம் சாத்தியமாகாது.
இந்த யூபிலி, நம் வாழ்வை மாற்றக்கூடிய மனமாற்றத்திற்கு அழைப்பு விடுக்கிறது. செல்வந்தரின்
மேசையிலிருந்து விழும் துண்டுகளால் பசியாற்றும் நிலையில், ஏழை இலாசர் இனி வாழக்கூடாது.
செல்வந்தரும், இலாசரும் ஒரே பந்தியில் அமர்ந்து, உணவைப் பகிர்ந்துகொள்ளும் காலத்தை, இனி தள்ளிப் போடமுடியாது. (லூக்கா 16: 19-31)"
என்ற
அர்த்தம் செறிந்த, ஆழமான சவால்களை, திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள்,
2000மாம் யூபிலி ஆண்டையொட்டி இவ்வுலகிற்கு விடுத்தார்.
லேவியர்
நூல், இணைச்சட்ட நூல் இரண்டிலும், இறைவன், மோசே
வழியாகக் கூறும் நீதி நிறைந்த கருத்துக்களும்,
2000மாம் ஆண்டையொட்டி
திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்களும் இன்னும் மனித
சமுதாயத்தில் முழுமையாக நிறைவேறாத கனவுகளாகவே உள்ளன என்பதை நாம் உணர்ந்துள்ளோம். துவங்கியிருக்கும்
இரக்கத்தின் யூபிலி ஆண்டில் இந்தக் கனவுகள் நனவாகவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவோம்.
No comments:
Post a Comment