19 January, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 6

Moses And The Burning Bush Painting
ஒரு கற்பனைக் காட்சியுடன் இன்றையத் தேடலைத் துவக்குவோம். வெளியூர் பயணத்திற்காக இறுதி நேரத்தில் இரயில் நிலையம் செல்கிறோம். நாம் இருக்கையில் அமர்ந்ததும், இரயில் கிளம்புகிறது. அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறோம். ஆயினும், அவசரமாக ஓடிவந்து ஏறிய படபடப்பு இன்னும் குறையவில்லை. அவ்வேளையில், பயணச் சீட்டைப் பரிசோதிக்க, கண்காணிப்பாளர் வருகிறார். நம் முன்பதிவு விவரங்களை அவரிடம் காட்டும்போது, கண்காணிப்பாளர், நம்மிடம், ஏதேனும் அடையாள அட்டை (Identity Card) உள்ளதா?” என்று கேட்கிறார். 'பாக்கெட்'டைத் தடவிப் பார்க்கும்போது, அடையாள அட்டைகள் நிறைந்த நம் 'பர்ஸ்'சை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டோம் என்ற உண்மை நம்மைத் தாக்குகிறது. இரத்த அழுத்தமும், இதயத் துடிப்பும் கூடுகின்றன. உடலெங்கும் வேர்வைத் துளிகள் வெளிப்படுகின்றன. மயக்கம் வருவதைப்போல் உணர்கிறோம். இந்தக் கற்பனைக் காட்சி, எப்போதாவது நமக்கோ, நமக்கு நெருங்கியவர்களுக்கோ நடந்திருக்கலாம்.

'அடையாள அட்டை'கள் இன்றி வீட்டைவிட்டு வெளியேறுவது, எவ்வளவு ஆபத்தானது என்பதை, எல்லாரும் அறிவோம். சில மாதங்களுக்கு முன், ஓர் அருள் பணியாளர், சென்னை 'சென்ட்ரல்' இரயில் நிலையத்திற்கருகே, சுரங்கப் பாதையில் அவசரமாகச் சென்றுகொண்டிருந்தபோது, மாரடைப்பு வந்து, அங்கேயே மயங்கி வீழ்ந்தார். அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் அறிவித்தனர். அவரிடம் எந்த ஓர் அடையாள அட்டையும் இல்லை. அவர் வைத்திருந்த பையில், அருள் பணியாளர்கள் அணியும் தனிப்பட்ட உடை இருந்ததால், பல கோவில்கள், துறவு இல்லங்களுக்குத் தொடர்பு கொண்டு, இறுதியில் அவர் பணி செய்துவந்த இல்லத்தில் உள்ளோருக்குத் தகவல் சொல்லப்பட்டது. இந்தத் தேடல், நான்கு நாட்கள் நீடித்தது. அதற்குப் பின், அவரது அடக்கம் நிகழ்ந்தது. 'அடையாள அட்டை'கள் இல்லாவிட்டால், நாம் 'அனாதை'யாகி விடுவோம் என்பது, இன்றைய நிலை.
வாக்காளர் அட்டை, வங்கிக்கணக்கு அட்டை, ஓட்டுனர் உரிமம், பணிபுரியும் அலுவலக அட்டை, அல்லது பயிலும் கல்விக்கூடத்தின் அடையாள அட்டை, நாடுவிட்டு நாடு செல்வதற்குத் தேவையான கடவுச் சீட்டு (Passport)  என்று பல வழிகளில் நம் அடையாளத்தைப் பதிவு செய்துள்ள அட்டைகள் ஏதுமின்றி வாழ்வது, இன்று மிகக் கடினம்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையொட்டி, 'இரக்கத்தின் முகம்' என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு மடலின் ஆரம்ப வரிகள், நாம் பயன்படுத்தும் 'அடையாள அட்டை'களைப் பற்றி நம்மைச் சிந்திக்கவைக்கின்றன.
"இறை தந்தையின் இரக்கத்திற்கு, இயேசு கிறிஸ்துவே முகமாக விளங்குகிறார்" என்ற ஆரம்ப சொற்களுடன் இந்த அறிவிப்பு மடலை திருத்தந்தை துவக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து, தன்னை அறிமுகப்படுத்த, இறைவன் மோசேயிடம் பயன்படுத்திய சொற்களை நினைவுபடுத்துகிறார்.

இறைவன் பயன்படுத்திய அறிமுக அட்டைகள் (Visiting Cards) அல்லது, அடையாள அட்டைகள் (Identity Cards) விவிலியத்தில் ஆங்காங்கே உள்ளன. ஆதாம், ஏவாள், நோவா, ஆபிரகாம், சாரா, ஈசாக், யாக்கோபு ஆகியோருடன் தொடர்புகொள்ளும் இறைவனை நாம் தொடக்க நூலில் சந்திக்கிறோம். அவர்கள் அனைவரின் வாழ்விலும் இறைவன் குறிக்கிட்டு, தாக்கங்களை உருவாக்கினாலும், இவர்கள் யாரும் இறைவனிடம், "நீர் யார்?" என்ற அடையாளக் கேள்வியை எழுப்பவில்லை. இந்தக் கேள்வியை முதன்முதலாக, கடவுளிடம் எழுப்பியவர், மோசே.
எரியும் புதர்வழியே இறைவன் மோசேக்கு அறிமுகமாகிறார். அப்புதரிலிருந்து, "உங்கள் மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே" (விடுதலைப் பயணம் 3:6) என்று தன்னையே அறிமுகம் செய்துகொள்ளும் இறைவன், அதே மூச்சில், தான் மோசேயைச் சந்திக்கவந்ததன் காரணத்தையும் கூறுகிறார்:


விடுதலைப் பயணம் 3:  7-8
அப்போது ஆண்டவர் கூறியது: எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்: அவர்களின் துயரங்களை நான் அறிவேன். எனவே எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு... அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கிவந்துள்ளேன்.

தலைமுறை, தலைமுறையாய் வாழும் கடவுள் என்று தன்னையே அறிமுகப்படுத்தும் இறைவன், அதே மூச்சில், மக்கள் படும் துன்பங்களைக் கண்டு இறங்கி வருபவராக தன்னை அடையாளப்படுத்துகிறார். இதைத் தொடர்ந்து, அவர் மோசேயை விடுதலைப் பணிக்கு அனுப்பி வைக்கிறார்.
விடுதலைப் பயணம் 3:  7-8
அப்போது ஆண்டவர் கூறியது: இஸ்ரயேல் இனத்தவராகிய என் மக்களை எகிப்திலிருந்து நடத்திச் செல்வதற்காக நான் உன்னைப் பார்வோனிடம் அனுப்புகிறேன்.மோசே கடவுளிடம், “பார்வோனிடம் செல்வதற்கும், இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து அழைத்துப் போவதற்கும் நான் யார்?” என்றார். அப்போது கடவுள், “நான் உன்னோடு இருப்பேன்.என்றார்.
மோசே கடவுளிடம், “இதோ! இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, அவர் பெயர் என்ன? என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்கு என்ன சொல்வேன்?” என்று கேட்டார். கடவுள் மோசேயை நோக்கி, “இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே என்றார்.

இறைவன் நம்மோடு என்பது இறைவனின் ஓர் அழகிய இலக்கணம். இறைவன் நம்மோடு இருக்கிறார், அதிலும் முக்கியமாக துன்புறும் நேரத்தில் நம் ஒவ்வொருவரோடும் இருக்கிறார் என்ற எண்ணத்தை விளக்க, Harold Kushner என்ற யூதமத குரு, இறைவனுக்கும், மோசேக்கும் இடையே நிகழ்ந்த இந்த உரையாடலை, எடுத்துக்காட்டாகக் கூறுகிறார்.

இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து கொண்டு வருவதற்கு நான் யார் என்று மோசே கேட்கிறார். தன்னைப் பற்றிய தெளிவு பெற விழைந்த மோசேக்கு, அந்தத் தெளிவை இறைவன் தரவில்லை. மோசே யார் என்பதைக் கூறாமல், இறைவன் அளிக்கும் பதில்: "நான் உன்னோடு இருப்பேன்" என்பதே. தனது திறமை, முக்கியமாக, தனது பேசும் திறமை குறித்து மிகவும் நம்பிக்கையின்றி இருந்தார் மோசே. இந்தப் பணிக்குச் செல்ல தனக்குத் தகுதியில்லை, சக்தியில்லை என்பதை வலியுறுத்திச் சொல்லவே, அவர், 'இதைச் செய்ய நான் யார்?' என்று கேட்கிறார். அதற்கு இறைவன், 'நான் உன்னுடன் இருப்பது தான் நீ தேடும் சக்தி' என்கிறார். தனது பேசும் திறமையைக் குறிப்பிட்டுக் கூறி பின் வாங்க நினைக்கும் மோசேயிடம், நான் உன்னோடு இருப்பேன், உன் நாவிலும் இருப்பேன், உன் சகோதரன் ஆரோனின் நாவிலும் நான் இருப்பேன் என்று இந்த சந்திப்பின் இறுதியில் உறுதியளிக்கிறார் இறைவன். (விடுதலைப் பயணம் 4: 12-17)

இதற்குப் பின், மோசே ஓரளவு தெளிவு பெறுகிறார். மீண்டும் அவருக்கு எழும் அடுத்த கேள்வி இது: " நீர் என்னுடன் இருக்கிறீர், சரி. உம்மை நான் எப்படி எகிப்தில் அறிமுகம் செய்வது?" இந்தக் கேள்விக்கும் இறைவனின் பதில்: "இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே."
நான் இருக்கிறேன், நான் உன்னோடு இருப்பேன் என்று கடவுள் தரும் பதில்களை இறையியல், மெய்யியல் கண்ணோட்டங்களில் பார்த்தால், இந்த வார்த்தைகளுக்கு  பெரிய விளக்கங்கள் தரலாம். ஆனால், கடவுள் மோசேக்கு அளிக்கும் பதில்களை எளிய வழியில் சிந்தித்தால், இந்தப் பதில்கள், கடவுளின் ஒரு முக்கியமான இலக்கணத்தை அறிய உதவும் பதில்கள் என்பதை உணரலாம். இறைவன் என்றும் இருக்கிறவர் என்ற இலக்கணத்தையும், அவர் இருப்பதெல்லாம் துன்புறும் மக்களுடன் இருப்பதற்கே என்ற இலக்கணத்தையும் இப்பதில்கள் தெளிவாக்குகின்றன.

இவ்விதம் மோசேயிடம் தன்னை அறிமுகப்படுத்தி, மக்களின் துயரோடு தன்னை அடையாளப்படுத்திய இறைவனைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் 'இரக்கத்தின் முகம்' மடலின் துவக்கத்திலேயே நமக்கு அறிமுகப்படுத்துகிறார். தன் மடலின் அறிமுகப்பகுதியில் திருத்தந்தை சுட்டிக்காட்டும் வரிகள், விடுதலைப் பயணம் 34ம் பிரிவிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. இப்பிரிவில், மோசே, இறைவனைச் சந்திக்க இரண்டாம் முறை சீனாய் மலைக்குச் சென்ற நிகழ்வு கூறப்பட்டுள்ளது.
மோசே இறைவனைச் சந்திக்க முதல்முறை சென்றபோதும், இரண்டாம் முறை சென்றபோதும், தன்னை இரக்கத்தின் இறைவனாக அவர் அறிமுகம் செய்துகொள்கிறார்:
விடுதலைப் பயணம் 20: 1-2
கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே: நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர்.

விடுதலைப் பயணம் 34: 5-7
ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து, அங்கே அவர் பக்கமாய் நின்றுகொண்டு, "ஆண்டவர்" என்ற பெயரை அறிவித்தார்.
அப்போது ஆண்டவர் அவர் முன்னிலையில் கடந்து செல்கையில், "ஆண்டவர்! ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்பு மிக்கவர்; நம்பிக்கைக்குரியவர்.
ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு செய்பவர்; கொடுமையையும் குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர்..." என அறிவித்தார்.

இரக்கம், பரிவு, பேரன்பு, மன்னிப்பு, என்ற அனைத்து அழகிய பண்புகளையும் தன் இலக்கணமாக வெளிப்படுத்தும் இறைவனை நமக்கு அறிமுகப்படுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த இறைவனின் முகமாக இவ்வுலகிற்கு வந்தவர் இயேசு என்பதை தன் மடலின் ஆரம்பத்தில் ஆணித்தரமாகக் கூறியுள்ளார். திருத்தந்தை வழங்கியுள்ள 'இரக்கத்தின் முகம்' என்ற மடலில் நம் தேடல் பயணம் தொடரும்.


No comments:

Post a Comment