13 January, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 5


Pope's Book ‘The Name of God is Mercy’- in different languages

'இறைவனின் பெயர் இரக்கம்' (“The Name of God is Mercy”) என்ற நூல், சனவரி 12, இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டது. உரோம் நகரில் பணியாற்றிவரும் ஆந்திரேயா தோர்னியெல்லி (Andrea Tornielli) என்ற பத்திரிகையாளர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் மேற்கொண்ட சில பேட்டிகளின் தொகுப்பாக, இந்நூல் வெளிவந்துள்ளது. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஓர் அங்கமாக உருவாகியுள்ள இந்நூல், 20 மொழிகளில், 86 நாடுகளில் வெளியாகியுள்ளது.
ஒரு மனிதனாக, ஓர் அருள் பணியாளராக இரக்கம், மன்னிப்பு என்ற உன்னத உண்மைகள், தனக்கு என்ன அர்த்தம் தருகின்றன என்று, திருத்தந்தை அவர்கள் பகிர்ந்துள்ள கருத்துக்களை, இந்நூலில் தான் தொகுத்து வழங்கியிருப்பதாக, தோர்னியெல்லி அவர்கள் கூறினார்.
'இரக்கத்தின் சிறப்பி யூபிலி ஆண்டு' என்ற எண்ணம், பல ஆண்டுகளுக்கு முன்னரே தன் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்த ஓர் எண்ணம் என்பதை, திருத்தந்தை தன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ஆர்ஜென்டீனா நாட்டில், புவனஸ் அயிரெஸ் (Buenos Aires) உயர் மறைமாவட்டத்தின் பேராயராக, தான் பணியாற்றியபோது, அந்நாட்டின் இறையியலாளர்களுடன் மேற்கொண்ட ஒரு சந்திப்பில், இந்த எண்ணம் தனக்கு முதன்முதலாகத் தோன்றியது என்பதை, திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளார்:
"தீர்வே இல்லாத பல பிரச்சனைகளால் சூழப்பட்டுள்ள இவ்வுலக மக்களை, குறிப்பாக, கத்தோலிக்கரை, ஒரு திருத்தந்தையால் எவ்விதம் ஒன்று சேர்க்கமுடியும் என்ற கேள்வி, அச்சந்திப்பில் பேசப்பட்டது. அப்போது, அங்கிருந்தவர்களில் ஒருவர், 'மன்னிப்பின் புனித ஆண்டை' திருத்தந்தை அறிவிக்கலாம் என்ற யோசனையைக் கூறினார். அந்த எண்ணம், எனக்குள் ஆழமாய்ப் பதிந்து, அங்கேயேத் தங்கிவிட்டது" என்று திருத்தந்தை கூறியது, இந்நூலில் பதிவாகியுள்ளது.

இரக்கமும் மன்னிப்பும் மனித குலத்தின் தேவை என்பதைக் குறித்து தன் மனதில் பதிந்த எண்ணங்கள், பல திருத்தந்தையரின் மனங்களிலும் பதிந்திருந்தன என்பதைத் தெளிவுபடுத்த, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் கூறிய ஒரு கூற்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் பேட்டியில் நினைவு கூர்ந்துள்ளார்:
"நாம் வாழும் இன்றையக் காலக்கட்டத்தில், பாவம் என்ற உணர்வு தொலைந்துவருவதே, நாம் சந்திக்கும் பெரும் துன்பம்" என்று, அரை நூற்றாண்டுக்கு முன்னதாக, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் கூறியதை, தன் பேட்டியில் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் வாழும் 21ம் நூற்றாண்டில், இத்துன்பம், இன்னும் ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை விளக்கிக் கூறியுள்ளார்:
"இன்று நம்மைத் துன்புறுத்தும் பாவம், நோய் ஆகியவற்றை, குணமாக்கவே முடியாது என்ற மனத்தளர்ச்சி, நாம் சந்திக்கும் கூடுதலான கொடுமை" என்று கூறும் திருத்தந்தை, "மீட்படைய ஒரு வாய்ப்பு உண்டு என்பதை எளிதில் நம்பாத நமக்கு, இரக்கம் மிக, மிக அவசியம்" என்று தன் பேட்டியில் விளக்கிக் கூறியுள்ளார். உலக சமுதாயத்தின் கவனத்தை ஈர்த்துள்ள இந்தப் பேட்டியில் திருத்தந்தை பகிர்ந்துள்ள உன்னதமான எண்ணங்களை, நம் தேடல்களில் அவ்வப்போது  சிந்திப்போம்.

'இரக்கத்தின் சிறப்பு யூபிலி' என்ற எண்ணம், ஏதோ திடீரென தனக்குத் தோன்றிய ஓர் எண்ணம் அல்ல, மாறாக, பல ஆண்டுகளாக தன் உள்ளத்தில் பதிந்திருந்த ஓர் எண்ணம் என்பதை, திருத்தந்தையின் பேட்டி  நமக்குத் தெளிவாக்குகிறது. கடந்த மூன்றாடளவாய் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிவந்துள்ள தலைமைத்துவப் பணியின் தனிப்பட்ட முத்திரை, அவரது பணிவும், பரிவும் என்பதை பலரும் ஏற்றுக்கொள்வர். தனிப்பட்ட மனிதராக, அருள் பணியாளராக, ஆயராக அவர் இவ்வுலகில் பதிக்க விழைந்த மன்னிப்பு, இரக்கம், பரிவு என்ற முத்திரைகளை, தற்போது ஒரு திருத்தந்தையாக அவர் இவ்வுலகில் பதித்துவருகிறார். அவரது பரிவுப் பணிக்கு, 'இரக்கத்தின் சிறப்பு யூபிலி' ஒரு சிறந்த வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளது.

இந்த யூபிலியையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு மடலுக்கு (Bull of Indiction), 'Misericordiae Vultus', அதாவது, 'இரக்கத்தின் முகம்' என்று அவர் தலைப்பிட்டுள்ளார். 'இறைவனின் பெயர் இரக்கம்' என்பதை, தன் அண்மையப் பேட்டியில் ஆணித்தரமாகக் கூறும் திருத்தந்தை, அந்த இரக்கத்திற்கு இறைவன் வழங்கியுள்ள ஒரு முகம், இயேசு கிறிஸ்துவின் முகம் என்பதை, தன் அறிவுப்பு மடலில் விளக்கிக் கூறியுள்ளார். இரக்கத்தின் சிறப்பு யூபிலியைக் குறித்து, திருத்தந்தை விளக்கியுள்ள இந்த அறிவிப்பு மடலில், நம் தேடல் பயணத்தைத் தொடர்வோம்.
25 எண்கள் கொண்ட பகுதிகளாக வெளிவந்துள்ள இந்த மடலின் ஆரம்ப வரிகளே நம் கவனத்தை ஈர்க்கின்றன.
Francis, Bishop of  Rome, Servant of the Servants of God
To All who read this letter, Grace, Mercy, and Peace
'உரோமைய ஆயரும், இறைவனின் பணியாளர்களுக்கெல்லாம் பணியாளருமான பிரான்சிஸ்' என்று தன்னையே அறிமுகப்படுத்திக் கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இம்மடலை வாசிக்கும் அனைவருக்கும் அருள், இரக்கம், மற்றும் அமைதி உரித்தாகுக' என்ற வாழ்த்துச் சொற்களுடன் இம்மடலைத் துவக்கியுள்ளார்.

இந்த அறிமுக வரிகளை வாசிக்கும்போது, நம் மனம், முந்தையத் திருத்தந்தையரின் மடல்களை நோக்கித் திரும்புகிறது. முந்தைய நூற்றாண்டுகளில், திருத்தந்தையர் எழுதிய மடல்கள், திருஅவைத் தலைவர்களுக்கும், கத்தோலிக்க மக்களுக்கும் என்ற குறிப்பிட்ட வட்டத்தை மனதில் கொண்டு எழுதப்பட்டன. இந்த வட்டத்தை விட்டு முதலில் வெளியேறி வந்தவர், திருத்தந்தை, புனித 23ம் ஜான். 1963ம் ஆண்டு, அவர் எழுதிய 'Pacem in Terris' - 'உலகில் அமைதி' என்ற திருமடல், இந்த வட்டத்தைக் கடந்து, உலக மக்கள் அனைவரையும் மனதில் கொண்டு வெளியிடப்பட்டது.
1962ம் ஆண்டு, அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், இரஷ்ய ஒன்றியத்திற்கும் கியூபா நாட்டை மையப்படுத்தி எழுந்த ஓர் இறுக்கமானச் சூழல், ஒருவேளை, 3ம் உலகப் போரைத் துவக்குமோ என்று, மனித சமுதாயம் பயந்து வாழ்ந்த வேளையில், திருத்தந்தை புனித 23ம் ஜான் அவர்கள் 'உலகில் அமைதி' என்ற திருமடலை வெளியிட்டார். இத்திருமடலின் ஆரம்பத்தில், "முதுபெரும் தந்தையர், பேராயர்கள், அருள் பணியாளர்கள், கத்தோலிக்க உலகின் விசுவாசிகள்" என்று வழக்கமான பாணியில் ஆரம்பித்து, அதைத் தொடர்ந்து, "நல்மனம் கொண்ட அனைத்து மக்களுக்கும்" என்ற சொற்களை திருத்தந்தை புனித 23ம் ஜான் அவர்கள் இணைத்தார். இது, அன்றையக் காலக் கட்டத்தில் புதுமையாகத் தெரிந்தது.
பல நூற்றாண்டுகளாக மூடப்பட்ட ஒரு கோட்டையாகக் காட்சி தந்த திருஅவையை ஓர் அன்னையாக உலகிற்கு காட்ட விழைந்தது, 1962ம் ஆண்டு துவங்கிய 2ம் வத்திக்கான் பொதுச்சங்கம். அச்சங்கம் நடைபெற்றுவந்த வேளையில், திருத்தந்தை புனித 23ம் ஜான் அவர்கள் வெளியிட்ட 'உலகில் அமைதி' திருமடலில், உலக மக்களை உள்ளடக்கும் வகையில் அவர் எழுதியிருந்த வாழ்த்து, மக்களுக்கு ஆனந்த அதிர்ச்சியாக அமைந்தது. கத்தோலிக்கர் அல்லாத பலரும் இந்த திருமடலை வாசித்துப் பயன் பெற்றனர்.
2ம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு, 1968ம் ஆண்டு, திருத்தந்தை, அருளாளர் 6ம் பவுல் அவர்கள் வெளியிட்ட "Humanae Vitae", அதாவது, 'மனித வாழ்வு' என்ற திருமடலிலும், 'நல்மனம் கொண்ட அனைத்து மனிதருக்கும்' என்ற சொற்களை, தன் ஆரம்ப வரிகளில் இணைத்துள்ளார்.

திருஅவையானது, உலகிலிருந்து பிரிந்து, தனித்து நிற்காமல், உலகில் ஓர் அங்கமாக வாழவேண்டும் என்று விழைந்த 2ம் வத்திக்கான் சங்கத்தின் பொன்விழாவையொட்டி, திருத்தந்தை  பிரான்சிஸ் அவர்கள் துவக்கியுள்ள இரக்கத்தின் சிறப்பு யூபிலியை அறிவிக்கும் 'இரக்கத்தின் முகம்' அறிவிப்பு மடலிலும், 'இம்மடலை வாசிக்கும் அனைவருக்கும் அருள், இரக்கம், மற்றும் அமைதி உரித்தாகுக' என்று கூறப்பட்டுள்ள வாழ்த்துச் சொற்கள் பொருத்தமாகத் தெரிகின்றன.
'இரக்கத்தின் முகம்' என்ற அறிவிப்பு மடல், கத்தோலிக்கத் திருஅவையைத் தாண்டி, உலக மக்களின் கவனத்திற்குச் செல்லவேண்டும் என்ற ஆவலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள இந்த ஆரம்ப சொற்களுக்கு பொருள் சேர்க்கும் வகையில், இந்த மடலை மற்ற மதத்தவரும், மத நம்பிக்கையற்றவரும் வாசித்து, தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
வேற்று மதத்தினரும், மத நம்பிக்கையற்றவரும் 'இரக்கத்தின் முகம்' என்ற அறிவிப்பு மடலைக் குறித்து வெளியிட்டுள்ள ஒரு சில கருத்துக்களையும், இந்த மடல் வழியே திருத்தந்தை கூறவிழையும் கருத்துக்களையும் அடுத்தத் தேடலில் நாம் தொடர்ந்து சிந்திப்போம்.

இறுதியாக, சனவரி 12, இச்செவ்வாயன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளைச் சிறப்பிக்கிறோம். அந்த உன்னத மனிதரின் பிறந்தநாளை, இந்தியாவில் 'இளையோர் நாள்' என்று கொண்டாடிவருகிறோம். இளையோர் மீது நல்லெண்ணமும், நம்பிக்கையும் கொண்டிருந்த விவேகானந்தர், இரக்கத்தைப் பற்றிக் கூறும் வார்த்தைகள் இன்றைய நம் தேடலுக்கு ஒரு முத்தாய்ப்பாக அமைகின்றன:
"இரக்கமே விண்ணகம்; நாம் நல்லவர்களாக இருப்பதற்கு, இரக்கம் மிக்கவர்களாக இருக்கவேண்டும். நீதியும், உரிமையும், இரக்கம் என்ற அடித்தளத்தின் மீதே நிற்கவேண்டும்."
அடுத்துவரும் நாட்களில் நாம் போகி, பொங்கல், உழவர் திருநாள்களைக் கொண்டாடும்போது, இறைவனின் இரக்கத்தால், பழையன களைந்து, புதியன பிறக்கவேண்டும் என்றும், நம் உள்ளங்களில் இரக்கம் பொங்கி வழியவேண்டும் என்றும் மன்றாடுவோம். உழவர் திருநாளை கொண்டாடமுடியாமல் தவிக்கும் உழவர் பெருமக்களை, இறைவனின் இரக்கம் அரவணைத்து காக்க வேண்டும் என்றும் மன்றாடுவோம்.

Misericordiae Vultus


No comments:

Post a Comment