01 March, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 11


Opening of the Holy Door of Caritas Roma Hostel by Pope Francis - 18 December 2015

ஒரு மாதத்திற்கு முன் நாம் மேற்கொண்ட விவிலியத் தேடலில், (பகுதி 8) யூபிலி ஆண்டுகளில் திறக்கப்படும் 'புனிதக் கதவுகள்' பற்றி சிந்தித்தோம். அத்தேடலின் இறுதியில், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், ’புனிதக் கதவு' என்ற எண்ணத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வகுத்துள்ள புதிய இலக்கணத்தையும், அதன் விளைவாக, திருஅவையில் தோன்றியுள்ள மாற்று எண்ணங்களையும் நம் அடுத்தத் தேடலில் தொடர்ந்து சிந்திப்போம் என்று நம் தேடலை நிறைவு செய்தோம். ஆனால், புனிதக் கதவுகளைப் பற்றி நம் தேடல் தொடரவில்லை. இடைப்பட்ட இந்த மூன்று வாரங்களில், திருத்தந்தை அவர்கள், பிப்ரவரி 10, திருநீற்றுப் புதனன்று, 'இரக்கத்தின் மறைப் பணியாளர்களை' அனுப்பிவைத்த நிகழ்வு, மற்றும் மெக்சிகோ பயணம் ஆகியவை நடைபெற்றதால், அவற்றில் கவனம் செலுத்தினோம். இன்று மீண்டும் புனிதக் கதவுகளைப்பற்றி நம் தேடலைத் தொடர்கிறோம்.

திருஅவை வரலாற்றில் இதுவரை இடம்பெற்ற யூபிலி ஆண்டுகளில், உரோம் நகரில் அமைந்துள்ள 4 பசிலிக்காப் பேராலயங்களில் உள்ள குறிப்பிட்டக் கதவுகளே புனிதக் கதவுகளாகக் கருதப்பட்டு வந்தன. இவையன்றி, புகழ்பெற்ற திருத்தலங்களில் யூபிலி நிகழ்வுகள் கொண்டாடப்பட்டபோது, அத்திருத்தலங்களின் கதவுகள், புனிதக் கதவுகளாக அறிவிக்கப்பட்டன.
எடுத்துக்காட்டாக, திருத்தூதர் யாக்கோபுவின் பெயரால் ஸ்பெயின் நாட்டில் உருவான புகழ்பெற்ற சந்தியாகு தே கொம்போஸ்தெலா (Santiago de Compostela) திருத்தலத்தின் கதவுகளை திருத்தந்தை 3ம் அலெக்ஸாண்டர் அவர்கள், புனிதக் கதவென 12ம் நூற்றாண்டில் அறிவித்தார். பங்குத் தந்தையரின் பாதுகாவலர் என்று போற்றப்படும் புனித ஜான் மரிய வியான்னி அவர்களின் பெயரில், பிரான்ஸ் நாட்டின் அர்ஸ் நகரில் திருத்தலம் உருவாக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு, புனித வியான்னி அவர்கள் இறந்ததன் 150ம் ஆண்டு என்பதால், அவ்வாண்டினை, அருள்பணியாளர்களின் ஆண்டு என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் அறிவித்தார். அத்துடன், அவ்வாண்டில், அர்ஸ் நகர் திருத்தலத்தின் கதவுகளை, புனிதக் கதவுகள் என்றும் அறிவித்திருந்தார்.

கத்தோலிக்க உலகெங்கும் கட்டப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஆலயங்களில், விரல் விட்டு எண்ணக்கூடிய வெகு சில ஆலயங்கள் மட்டுமே புனிதக் கதவுகளைக் கொண்ட ஆலயங்கள் என்ற சிறப்பை பெற்றுள்ளன. தற்போது நாம் கொண்டாடிவரும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதக் கதவுகள் பற்றிய எண்ணத்தில் ஒரு புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தினார். இந்த மாற்றம், திருஅவையைக் குறித்து திருத்தந்தை அவர்கள் வெளிப்படுத்திவந்துள்ள எண்ண ஓட்டங்களுக்கு, மற்றோர்  எடுத்துக்காட்டு என்று கூறலாம்.

மக்களைத் தேடி, திருஅவை செல்லவேண்டும் என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மனதுக்கு நெருக்கமான ஓர் எண்ணம். உறுதியாக அமைக்கப்பட்ட ஒரு கட்டடத்தில், அருள்பணியாளர்கள், பாதுகாப்பாக அமர்ந்துகொண்டு, தங்களைத் தேடி வருவோருக்கு மட்டும் பணியாற்றுவது, திருஅவைக்கு அழகல்ல என்பதை, தன் மறையுரைகள் வழியே அடிக்கடி கூறிவந்துள்ளார், திருத்தந்தை. அவரைப் பொருத்தவரை, போர்க்களத்தில் அடிப்பட்டிருப்போருக்கு பணியாற்றும் வண்ணம், அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனையே, (the church as a field hospital after battle) திருஅவைக்கு தகுந்த அடையாளம் என்று கூறியுள்ளார். கோவிலையும், அருள்பணியாளர்களையும் தேடி, மக்கள் வருவர் என்று காத்திருப்பதற்குப் பதில், மக்கள் வாழும் பகுதிகளுக்கு, குறிப்பாக, சமுதாயத்தின் விளிம்புகளுக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களைத் தேடிச்செல்வதற்கே அருள்பணியாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அடிக்கடி வலியுறுத்தியுள்ளார்.

கோட்டைச்சுவர்களுக்குள் பாதுகாப்பாக வாழ்ந்துவந்ததுபோல் தோன்றிய திருஅவையை, மக்களைத் தேடி, அவர்கள் வாழும் பகுதிகளுக்குச் செல்லும் திருஅவையாக மாற்றியப் பெருமை, 2ம் வத்திக்கான் பொதுச் சங்கத்தைச் சேரும். இச்சங்கத்தின் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வண்ணம், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த யூபிலி ஆண்டின் ஆரம்பத் திருப்பலியை, டிசம்பர் 8, அமல அன்னை திருநாளன்று கொண்டாடியத் திருத்தந்தை, தன் மறையுரையின் இறுதியில், புனிதக் கதவையும், 2ம் வத்திக்கான் சங்கத்தையும் இணைத்து வழங்கிய ஒரு சில எண்ணங்கள் இதோ:
"இன்னும் சிறிது நேரத்தில் இரக்கத்தின் புனிதக் கதவைத் திறக்கும் மகிழ்வைப் பெறுவேன்... இன்று, இக்கதவின் வழியே நாம் கடந்து செல்லும்போது, 50 ஆண்டுகளுக்குமுன் 2ம் வத்திக்கான் சங்கத்தில் கலந்துகொண்ட தந்தையர் திறந்துவைத்த மற்றொரு கதவை நினைவில் கொள்வோம். அச்சங்கம் உருவாக்கிய கொள்கைத் திரட்டு ஏடுகள்மட்டும் சங்கத்தின் பெருமையைப் பறைசாற்றவில்லை. அச்சங்கம், ஒரு சந்திப்பை உருவாக்கியது என்பதே, அதன் சிறப்பு. அன்று வாழ்ந்த மனிதர்களை, அவர்கள் வாழும் இடங்களில் திருஅவை சந்திக்கச் சென்றது.
நல்ல சமாரியரிடம் விளங்கியப் பரிவு, 2ம் வத்திக்கான் சங்கத்தின் அமர்வுகளில் வெளிப்பட்டது என்று, இச்சங்கத்தின் நிறைவு நாளன்று, திருத்தந்தை அருளாளர் 6ம் பவுல் அவர்கள் கூறினார். நல்ல சமாரியரின் மனநிலையோடு இவ்வுலகில் பணியாற்ற, இந்த யூபிலி நமக்கு சவால் விடுக்கிறது. நாம் இந்தப் புனிதக் கதவைக் கடந்து செல்கையில், நல்ல சமாரியரின் அர்ப்பண உணர்வைப் பெறுவோமாக" என்று திருத்தந்தை தன் மறையுரையை நிறைவுசெய்தார்.

மக்களைத் தேடிச்சென்றத் திருஅவை என்ற எண்ணத்தை, இன்னும் ஆழமாக நம் மனங்களில் பதிக்க, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த யூபிலி ஆண்டில், புனிதக் கதவுகள் குறித்து ஒரு புதிய வழிமுறையை வகுத்தார். இதுவரை நடைபெற்ற யூபிலி ஆண்டுகளில், புனிதக் கதவுகளை நாடி, மக்கள், ஆயிரமாயிரம் மைல்கள் பயணம் செய்து, உரோம் நகருக்கு செல்வதே வழக்கமாக இருந்தது. இந்த யூபிலி ஆண்டில்,  அத்தகையப் பயணங்கள் தேவையில்லை; அந்தந்த நாடுகளில், மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள பல கோவில்களில் புனிதக் கதவுகள் திறக்கப்படும் என்று திருத்தந்தை அறிவித்தார். கத்தோலிக்க திருஅவையின் யூபிலி வரலாற்றில் முதல் முறையாக வழங்கப்பட்டுள்ள புதிய வழிமுறை இது.
இறைவனைத் தேடி மக்கள் கூட்டம், கூட்டமாக உரோம் நகர் நோக்கி வருவதற்குப் பதில், மக்களைத் தேடி, அவர்கள் வாழும் பகுதிகளுக்கு இறைவன் வருகிறார், அதுவும், தன் இரக்கத்தை வழங்க வருகிறார் என்பதை உணர்த்தவே, உலகெங்கும் புனிதக் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. பேராலயங்கள், திருத்தலங்கள் போன்ற புனித இடங்களில் மட்டுமல்லாமல், பிறரன்புப் பணிமனைகள், மக்கள் பயன்படுத்தும் பணித்தளங்கள் போன்ற இடங்களிலும் புனிதக் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணத்தை வலியுறுத்தும் வகையில், டிசம்பர் 18ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் செயலாற்றிவரும் காரித்தாஸ் பிறரன்பு விடுதியின் கதவுகளை, ‘பிறரன்பின் புனிதக் கதவுகள் என்று சொல்லி, திறந்துவைத்தார். உரோம் நகரில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள தாவின்சி விமானத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சிற்றாலயத்தில், புனிதக் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இவ்வாண்டு, சனவரி 17, புலம்பெயர்ந்தோர் மற்றும் குடியேற்றதாரர் உலக நாள் கடைபிடிக்கப்பட்டதையொட்டி, சனவரி 16, சனிக்கிழமை மாலை, இத்தாலியின் தென் முனையில் அமைந்துள்ள இலாம்பதூசா என்ற தீவில், புனிதக் கதவுகள் திறக்கப்பட்டன. புலம்பெயந்தோர் பலர், இலாம்பதூசா தீவின் வழியே ஐரோப்பாவிற்குள் நுழைய முயற்சிகள் செய்வதால், அத்தீவில் 'ஐரோப்பாவின் வாயில்' என்ற ஒரு நினைவுச் சின்னத்தை அமைத்துள்ளனர். பாதுகாப்பற்றப் படகுளில், ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொள்ளும் புலம் பெயந்தோர் பலர், இத்தீவை அடைவதற்கு முன், கடலில் மூழ்கி இறந்துள்ளனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைமைப் பொறுப்பேற்ற ஒரு சில வாரங்களில், உரோம் நகருக்கு வெளியே முதல்முறையாக அவர் மேற்கொண்ட பயணத்தில், இலாம்பதூசா தீவுக்குச் சென்று, கடலில் இறந்தவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அங்கு நிறைவேற்றியத் திருப்பலியில், "உலகமயமாக்கப்பட்ட அக்கறையின்மை" (Globalisation of indifference) என்று, திருத்தந்தை தன் மறையுரையில் பயன்படுத்திய ஒரு சொற்றொடர், உலகத் தலைவர்கள் பலரின் மனசாட்சியைத் தட்டி எழுப்பியுள்ளது.
மீட்பின் வாயிலான நம் அன்னை என்ற பெயரில் அத்தீவில் அமைந்துள்ள ஒரு திருத்தலத்தின் கதவுகளை, சனவரி 16, சனிக்கிழமை மாலை, கர்தினால் பிரான்செஸ்கோ மோந்தேநெக்ரோ (Francesco Montenegro) அவர்கள் புனிதக் கதவுகளாகத் திறந்துவைத்தார். புனிதக் கதவுகளைத் திறந்துவைத்த வழிபாட்டிற்குப் பின், கர்தினால் மோந்தேநெக்ரோ அவர்கள், திருத்தந்தை வழங்கிய ஓர் அடையாளப் பரிசை இத்திருத்தலத்திற்கு வழங்கினார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கியூபா நாட்டிற்குச் சென்ற வேளையில், அந்நாட்டின் அரசுத் தலைவர் இரவுல் காஸ்த்ரோ அவர்கள், திருத்தந்தைக்கு ஒரு சிலுவையை, பரிசாக அளித்தார். அச்சிலுவை, கியூபாவின் கலைஞர் ஒருவர் உருவாக்கிய சிலுவை. படகுத் துடுப்புக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இச்சிலுவையை, இலாம்பதூசா மக்களுக்கு திருத்தந்தை ஒரு நினைவுப் பரிசாக அனுப்பி வைத்தார். படகுத் துடுப்புக்களை நம்பி, சிலுவைப் பாதையை மேற்கொள்ளும் புலம்பெயர்ந்தோர் பலருக்கு, பொருத்தமான அடையாளமாக இச்சிலுவை இலாம்பதூசா தீவின் திருத்தலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மக்கள் வாழும் இடங்களில் புனிதக் கதவுகள் திறக்கப்பட வேண்டும் என்றும், கோவில்கள், திருத்தலங்கள் தவிர, பிறரன்புப் பணிமனைகளிலும், மக்களின் துயரங்களுக்கு அடையாளமாக இருக்கும் இலாம்பதூசா தீவைப் போன்ற இடங்களிலும் புனிதக் கதவுகள் திறக்கப்பட வேண்டும் என்றும் திருத்தந்தை வகுத்த புதிய வழிமுறை, புனிதக் கதவுகள் பற்றிய புதியக் கண்ணோட்டத்தை நாம் பெறுவதற்கு உதவியாக உள்ளது. இரக்கத்தின் யூபிலி ஆண்டில் திறக்கப்பட்டுள்ள புனிதக் கதவுகள் பற்றிய நம் தேடல் தொடரும்.


No comments:

Post a Comment