Pope Francis opnes the Holy Door at Bangui Cathedral
Vatican Television Centre
Cardinal Luis Antonio Tagle opens the Holy Door
of the Manila Cathedral
மத்திய
ஆப்ரிக்கக் குடியரசின் புதிய அரசுத் தலைவர் இம்மாத இறுதியில் (மார்ச் 30) பதவியேற்கிறார்.
நாம் விவிலியத் தேடல்களில் சிந்தித்துவரும் இறை இரக்கத்தின் யூபிலிக்கும் அந்நாட்டில்
நிகழ்ந்த அரசுத் தலைவர் தேர்தலுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு உள்ளது என்பதால், இச்செய்தியுடன் இன்றையத் தேடலைத்
துவக்குகிறோம். இதுவரை அந்நாட்டின் பிரதமராகப் பணியாற்றிவந்த Faustin-Archange
Touadéra அவர்கள், புதிய அரசுத்
தலைவராகப் பொறுப்பேற்கவிருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக, அரசுக்கும், புரட்சிக் குழுக்களுக்கும் இடையே நிகழ்ந்துவந்த
மோதல்களால், அந்நாடு வன்முறைகளைச் சந்தித்து வந்துள்ளது. இந்நிலையில், அந்நாட்டில், பிப்ரவரி மாதம் நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தல்,
ஓரளவு அமைதியான முறையில் நடைபெற்றதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள், அந்நாட்டில் நவம்பர் மாதம்
மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் ஒரு முக்கியக் காரணம் என்று, பாங்கி (Bangui) உயர்மறைமாவட்டப் பேராயர்
தியுதோன்னே இன்சபலைங்கா (Dieudonné Nzapalainga) அவர்கள் கூறியுள்ளார்.
2015ம்
ஆண்டு, நவம்பர் 29, 30 ஆகிய நாட்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மத்தியக்
கிழக்கு குடியரசு நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட வேளையில், அந்நாட்டிற்கு அமைதியும், ஒப்புரவும் வரவேண்டும் என்ற நோக்கத்துடன்
பொருள்நிறைந்த ஒரு சடங்கை அங்கு நிறைவேற்றினார். மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் தலைநகரான
பாங்கியில் உள்ள பேராலயத்தில், புனிதக் கதவைத் திறந்து, அந்நாட்டில் இரக்கத்தின் யூபிலி ஆண்டைத்
துவக்கி வைத்தார். திறந்துவைக்கப்பட்டப் புனிதக் கதவின் வழியே இறைவனின் இரக்கம் அந்நாட்டில்
பாய்ந்து செல்லவேண்டும் என்று திருத்தந்தை விரும்பினார்.
புனிதக்
கதவுகள் என்றாலே, உரோம் நகரில் அமைந்துள்ள
நான்கு பசிலிக்காப் பேராலயங்களின் கதவுகள் என்று நிலவிவந்த எண்ணத்தை மாற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தின்
சிறப்பு யூபிலி ஆண்டில், புனிதக் கதவுகளை உலகெங்கும் திறப்பதற்கு, புதிய வழிமுறைகளை வகுத்தார் என்று, சென்ற விவிலியத் தேடலில் நாம் சிந்தித்தோம்.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் புனிதக் கதவுகளைத் திறந்ததன் வழியே, புனிதக் கதவுகள் குறித்து, மற்றொரு புதிய எண்ணத்திற்கும் திருத்தந்தை
செயல்வடிவம் கொடுத்துள்ளார். இதுவரை, திருஅவையில் கொண்டாடப்பட்ட
யூபிலி ஆண்டுகள் அனைத்தும், முதல் முதலாக, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் கதவுகளை
திறக்கும் நிகழ்வுடன் ஆரம்பமாயின. அதன் வழியே,
கத்தோலிக்க
உலகின் ஆன்மீகத் தலைநகர் வத்திக்கான் என்பதை,
இச்சடங்கு
நிலைநாட்டியது. இந்தப் பாரம்பரியத்திலிருந்து விலகி, திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தின் சிறப்பு யூபிலி
ஆண்டின் முதல் புனிதக் கதவை, மத்திய ஆப்ரிக்கக் குடியரசின்
பாங்கியில் திறந்துவைத்தார். அதுமட்டுமல்ல, பாங்கியை, கத்தோலிக்க உலகின் ஆன்மீகத் தலைநகரம் என்றும்
குறிப்பிட்டார்.
Notre-Dame, அதாவது, நமது நாயகி என்ற பெயரில் உயர்ந்து
நிற்கும், பாங்கி பேராலயத்தின் புனிதக்
கதவைத் திறப்பதற்கு முன், திருத்தந்தை வழங்கிய ஒரு
சில எண்ணங்கள் இதோ: "தந்தையாம் இறைவனின் இரக்கத்தை இவ்வுலகிற்குக் கொணரும்
ஆன்மீகத் தலைநகராக பாங்கி இன்று மாறியுள்ளது.
இரக்கத்தின்
புனித ஆண்டு, உலகெங்கும் துவங்குவதற்குக்
குறிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே ஆப்ரிக்காவில் ஆரம்பமாகிறது. புரிந்துகொள்ளுதல்
இல்லாததாலும், வெறுப்பினாலும் அமைதி
இழந்து தவிக்கும் ஆப்ரிக்க பூமியில்,
பல
நாடுகள், போர் என்ற சிலுவையைச்
சுமந்து துன்புறுகின்றன.
பாங்கியிலும், மத்திய ஆப்ரிக்கக் குடியரசிலும், போரின் துயரங்களை அனுபவித்துவரும் அனைத்து
நாடுகளிலும், அமைதி வரவேண்டும் என்ற
வேண்டுதலோடு இந்தப் புனித ஆண்டை இங்கு துவங்குகிறோம்" என்று திருத்தந்தை
கூறினார்.
நவம்பர்
29, திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று, பாங்கி பேராலயத்தில், புனிதக்கதவைத் திறந்துவைத்த திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 8ம் தேதி, அமல அன்னை திருநாளன்று, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் புனிதக்கதவைத்
திறந்துவைத்து, இரக்கத்தின் யூபிலி ஆண்டை,
திருஅவையின் மரபுப்படி துவக்கி வைத்தார். டிசம்பர் 13ம் தேதி, திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறன்று, உரோம் நகரின் ஆயர் என்ற முறையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறைமாவட்டப் பேராலயமான இலாத்தரன் பசிலிக்காவில்
புனிதக் கதவைத் திறந்தார். அதே நாளன்று, உலகெங்கும் உள்ள அனைத்து
மறைமாவட்டங்களின் பேராலயங்களிலும் புனிதக் கதவுகள் திறக்கப்பட்டன.
இலாத்தரன்
பசிலிக்காவில் புனிதக் கதவைத் திறந்தபோது, திருத்தந்தை பகிர்ந்துகொண்ட
சில கருத்துக்கள், இரக்கத்தின் சிறப்பு யூபிலி
ஆண்டின் நோக்கத்தை இன்னும் ஆழமாகத் தெளிவுபடுத்துகின்றன: "இன்று, இந்த பசிலிக்காவிலும், உலகமெங்கும் உள்ள பல ஆலயங்களிலும் புனிதக்
கதவுகளைத் திறந்துள்ளோம். இந்த அடையாளச் செயல்வழியே, உலகமனைத்திலும் வாழும் மக்களுக்கு ஓர் அழைப்பை
விடுத்துள்ளோம். இறைவனின் மென்மையான குணத்தை இவ்வுலகம் மீண்டும் ஒருமுறை கண்டுகொள்வதற்கு
நாம் அழைப்பு விடுத்துள்ளோம். நீதி, நியாயம், சட்டம், ஒழுங்கு என்ற அளவுகோல்களையெல்லாம் தாண்டி, தந்தையாம் இறைவனைப் போல் கனிந்த உள்ளம்கொண்டு
வாழ, நாம் அழைக்கப்பட்டுள்ளோம்" என்று திருத்தந்தை மறையுரையாற்றினார்.
இரக்கத்தின்
புனித யூபிலியையொட்டி, உலகின் அனைத்து மறைமாவட்டங்களிலும்
புனிதக் கதவுகள் திறக்கப்பட்ட வேளையில், தலத்திருஅவைகள் பல்வேறு
பொருளுள்ள முயற்சிகளை மேற்கொண்டன என்பதை, செய்திகள் வழியே அறிந்துகொண்டோம்.
இந்த முயற்சிகளில் என் மனதைத் தொட்ட இரு நிகழ்ச்சிகளை இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
இரக்கத்தின்
சிறப்பு யூபிலி ஆண்டினையொட்டி, பிலிப்பைன்ஸ் நாட்டில்,
அமல அன்னைக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள மணிலா பேராலயத்தின் புனிதக் கதவை, கர்தினால்
லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், டிசம்பர் 9ம் தேதி, திறந்து வைத்தார். பொதுவாக, புனிதக் கதவு திறக்கப்படும் வேளையில், ஆயர்களுக்கு உதவியாக ஏனைய அருள் பணியாளர்கள்
அருகிலிருந்து கதவைத் திறப்பர். ஆனால், மணிலா பேராலயத்தில், ஒரு மாற்றம் நிகழ்ந்தது.
திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டிற்குச் சென்றபோது, அவருடன் மனம்திறந்து உரையாடிய தெருவோரக்
குழந்தைகள், மற்றும், உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், கர்தினால் தாக்லே அவர்களுடன் இணைந்து, மணிலா
பேராலயத்தின் புனிதக் கதவைத் திறந்தது, பொருள்செறிந்த
சடங்காக அமைந்தது.
“நாட்டின் எல்லா
நிலைகளிலும் பரவிவரும் ஊழலை நிறுத்துங்கள், பெண்களையும், குழந்தைகளையும் தவறாகப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள், முடிவே இல்லாத வண்ணம், வலுவற்றோருக்கு தீங்கிழைப்பதை
நிறுத்துங்கள்” என்ற சக்திவாய்ந்த அழைப்பொன்றை
கர்தினால் தாக்லே அவர்கள் அன்றையத்
திருப்பலியில் விடுத்தார்.
“பேராலயத்தின் புனிதக்
கதவு வழியே நுழைவது மட்டும் போதாது, வீடற்றோர், சிறைப்பட்டோர், நோயுற்றோர், வறியோர் ஆகியோர் வாழும் இடங்களில் நாம் நுழைவதற்கு, 'பிறரன்புக் கதவுகள்' வழியே செல்லவேண்டும்” என்றும் கர்தினால் தாக்லே அவர்கள் தன்
மறையுரையில் கூறினார்.
டிசம்பர்
13ம் தேதி உலகெங்கும் புனிதக் கதவுகள் திறக்கப்பட்டபோது, உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகரான டாஷ்கென்ட்டில்
பொருள் நிறைந்த வகையில் புனிதக் கதவு திறக்கப்பட்டது. அந்நகரில் அமைந்துள்ள திரு இருதயப்
பேராலயத்தின் புனிதக் கதவை, குழந்தைகள் திறந்து வைத்தனர்.
கள்ளம் கபடமற்ற சிறுவர், சிறுமியர் புனிதக் கதவைத்
திறப்பதற்கு ஏற்றவர்கள் என்பதால், அவர்கள் திறந்துவைத்த
கதவின் வழியே தான் ஒரு விவிலியத்தைச் சுமந்துகொண்டு நுழைந்ததாக அந்நாட்டின் அப்போஸ்தலிக்க
நிர்வாகியான ஆயர் Jerzy Maculewicz அவர்கள் கூறினார்.
இஸ்லாமியரைப்
பெரும்பான்மையாகக் கொண்ட உஸ்பெகிஸ்தான் நாட்டில், அவர்களுடன்
நல்லுறவு கொண்டு வாழ்வதே, இந்தப் புனித ஆண்டின் முக்கியப் பணி என்று ஆயர் Maculewicz அவர்கள் தன் மறையுரையில்
எடுத்துரைத்தார். உஸ்பெகிஸ்தான் நாட்டில் ஒவ்வொரு கிறிஸ்தவரும் டாஷ்கென்ட் பேராலயத்திற்கு
வரமுடியாது என்பதால், இறைவனின் இரக்கம், அவர்களைத்
தேடி, ஒவ்வொரு பங்குக் கோவிலுக்கும் செல்லும் என்பதே, தாங்கள் வகுத்திருக்கும் திட்டம் என்று ஆயர்
Maculewicz அவர்கள்
கூறினார்.
டிசம்பர்
13ம் தேதிக்கு அடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் இயங்கிவரும்
காரித்தாஸ் பிறரன்பு இல்லத்தில் புனிதக் கதவைத் திறந்தார் என்பதை அனைவரும் அறிவோம். இரக்கத்தின்
யூபிலி ஆண்டைப் பொருத்தவரை, புனிதக் கதவுகள், பேராலயங்களிலும், பசிலிக்காக்களிலும் மட்டும் அல்ல,
மாறாக, பிறரன்பு இல்லங்களிலும் உள்ளன என்பதைக் கூறவே, காரித்தாஸ் இல்லத்தில் புனிதக் கதவைத் திறந்துவைத்தார், திருத்தந்தை. டிசம்பர் 18, வெள்ளியன்று மாலை, காரித்தாஸ் இல்லத்தில் புனிதக் கதவைத் திறந்த
வேளையில், தன் மறையுரையில் திருத்தந்தை
பகிர்ந்துகொண்ட ஒரு சில கருத்துக்கள் இதோ:
"இன்று
இவ்வில்லத்தில் புனிதக் கதவைத் திறக்கும் வேளையில், இரு வரங்களுக்காக வேண்டுகிறோம்: தேவையில்
உள்ள அனைவருக்காகவும் நம் இதயங்களைத் திறப்பதற்கு வேண்டுகிறோம். நாம் அனைவருமே தேவையில்
இருப்பவர்கள் என்ற உணர்வே, நம்மை, தேவையில் உள்ள அனைவரோடும் ஒன்றாக இணைக்க
உதவும். இரண்டாவதாக, நாம் வேண்டும் வரம்...
செல்வம், பெருமை, அகங்காரம் ஆகியவை மீட்பின் வழி அல்ல என்பதை
உணரும் வரத்திற்காக வேண்டுவோம்" என்று கூறினார்.
புனிதக் கதவு வழி நுழைவோர், நிறையருள் பலனைப்
(பரிபூரணப் பலன்) பெறுவர் என்பது, யூபிலி ஆண்டுக்கென
வழங்கப்பட்டுள்ள தனி வரம். இந்த எண்ணத்திலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மாற்றங்களை
அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த மாற்றங்களை நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.
No comments:
Post a Comment