05 April, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 16

I was in prison…

ஒரு கற்பனைக் காட்சியுடன் இன்றையத் தேடலைத் துவக்குவோம். ஒரு செல்வந்தரின் மகனுக்குத் திருமணம் நிகழ்கிறது. திருமண விழாவின் முக்கியக் கட்டமாக, மாலை மாற்றுதல், தாலி கட்டுதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன. பொதுவாக, இந்நேரங்களில் முக்கியமான ஒருவர், மாலைகளை எடுத்துக் கொடுக்க, அவற்றை மணமக்கள் மாற்றிக்கொள்வர். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த அந்நிகழ்வுக்கு முன், மணமகனின் தந்தை மேடையில் ஏறி, 'மைக்'கில் பேசுகிறார்: "இந்தத் திருமணவிழா நல்ல முறையில் நடைபெற பெரிதும் உதவியவர்கள் பலர். அவர்களில் ஒருவரை, நான் மேடைக்கு அழைக்கப்போகிறேன்" என்று அந்த செல்வந்தர் கூறுகிறார்.
மணமேடைக்கு முன், முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் பல முக்கியப் புள்ளிகள், தங்களில் யாரை அவர் அழைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். மணமகனின் தந்தையோ, அரங்கத்திற்குப் பின்புறம் செல்கிறார். வீடியோ காமராக்கள் அவரைத் துரத்திச் செல்கின்றன. அரங்கத்தின் பின்புறம், துப்புரவு செய்யும் பத்து தொழிலாளர்கள் நின்று கொண்டிருக்கின்றனர். அவர்களில் வயது முதிர்ந்த ஒருவரை, அரங்கத்திற்குள் அழைத்து வருகிறார், மணமகனின் தந்தை. மாலைகளை எடுத்து, மணமக்களிடம் தரும்படி அந்த முதியவரிடம் கேட்கிறார், செல்வந்தர்.
இது ஒரு கற்பனைதான். இவ்விதம் நிகழ்ந்தால், அங்கு உண்டாகும் அதிர்ச்சியை நம்மால் ஊகிக்க முடியும். ஒருவகையில் இதை, ஆனந்த அதிர்ச்சி என்றும் சொல்லலாம். இதையொத்த ஆனந்த அதிர்ச்சியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள ஒரு மடல் நமக்குத் தருகிறது. யூபிலி ஆண்டில் நாம் பெறக்கூடிய பரிபூரணப் பலன் குறித்து, யூபிலி ஆண்டு நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் பேராயர் ரீனோ பிசிக்கெல்லா அவர்களுக்கு, திருத்தந்தை எழுதிய மடலில்நம் கவனத்தை, சமுதாயத்தின் விளிம்புகளில் வாழ்வோரிடம் கொண்டு செல்கிறார், திருத்தந்தை.

சமுதாயத்தின் ஓரங்களில் வாழ்வோரைத் தேடிச்செல்வதும், அவர்களை மீண்டும் மையங்களுக்குக் கொணர்வதும் திருஅவையின் முக்கியப் பணி என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளதை நாம் அறிவோம். பரிபூரணப் பலன் குறித்து திருத்தந்தை வெளியிட்ட மடல், ஓரங்களை மையமாக்கும் அவரது எண்ண ஓட்டத்திற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
யூபிலி ஆண்டு, புனிதக் கதவு, பரிபூரணப் பலன் என்ற கருத்துக்களைச் சிந்திக்கும்போது, புனிதக் கதவுகளைத் தேடிவருபவர் எவ்விதம் பரிபூரணப் பலனை அடைய முடியும் என்ற எண்ணமே முதலில் தோன்றும். ஆனால், புனிதக் கதவுகளைத் தேடிவர இயலாதவர்களை, இம்மடலில், சிறப்பாகக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, அவர்கள் வாழும் இடங்களிலேயே புனிதக் கதவுகள் உள்ளன, அதன் வழியே இறைவன் அவர்களைத் தேடிச் செல்வார் என்ற பாணியில் பேசியிருப்பது, ஆனந்த அதிர்ச்சி அளிக்கிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதியோரை, நோயுற்றோரை முதன்மைப்படுத்தி சிந்தித்திருப்பதும், அவர்களுக்கு அடுத்தப்படியாக, சிறைக் கைதிகளைப்பற்றி குறிப்பிட்டிருப்பதும் நம் ஆனந்த அதிர்ச்சிக்குக் காரணங்கள்.

பொதுவாக, சிறைகளில் வாழ்வோர மீது சமுதாயத்தின் கவனம் அதிகம் பதிவது கிடையாது. சிறைகளில் பெரிய அளவில் கலவரங்கள் நடைபெறும்போது மட்டுமே, அவை, உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும். ஆனால், திருத்தந்தை அவர்கள் தன் பணிவாழ்வில் சிறைக்கைதிகள் மேல் காட்டிவரும் அக்கறை, அவர்களை அடிக்கடி உலக ஊடகங்களின் கவனத்திற்குக் கொணர்ந்துள்ளது.
இத்தாலியின் பதுவை சிறையில் இருக்கும் ஜாங் அகோஸ்தீனோ ஜியான்கிங் என்பவரைக் குறித்து சென்ற விவிலியத் தேடலில் சிந்தித்தோம். இதோ, மற்றொரு நிகழ்வு. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்வாக, திருத்தந்தை அவர்கள், மெக்சிகோ நாட்டில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின்போது, ஹுவாரெஸ் நகருக்குச் சென்றார். ஒரு சில ஆண்டுகளுக்கு முன் வரை, இந்நகரம், குற்றங்களின் உலகத் தலைநகர் என்று அழைக்கப்பட்டது. இங்குள்ள சிறைச்சாலை பல வன்முறைகள் இடம்பெற்ற சிறைச்சாலை. இச்சிறைச்சாலைக்கு திருத்தந்தை செல்ல விழைந்தபோது, திருத்தந்தையின் பாதுகாப்பு குறித்து, பலருக்கும் தயக்கம் எழுந்தது. இருப்பினும், திருத்தந்தை அங்கு செல்லும் திட்டத்தைக் கைவிடவில்லை. கைதிகளிடம் அவர் பேசியபோது, நம் சிறைகள், மனித சமுதாயம் எந்நிலையில் உள்ளது என்பதைக் கூறும் அடையாளங்கள் என்று கூறினார்:
"நாம் எவ்வகையான சமுதாயத்தில் வாழ்கிறோம் என்பதற்கு ஓர் அடையாளமாக நம் சிறைகள் உள்ளன. அநியாயங்களுக்கு எதிராக நாம் காக்கும் மௌனம், நாம் செய்யத் தவறியவை, தூக்கியெறியும் கலாச்சாரம், வாழ்வை ஆதரிக்கும் மனமின்றி, நம் குழந்தைகளை திக்கற்றவர்களாக விட்டுவிடும் போக்கு என்று, நம் கலாச்சாரத்தில் மலிந்துவிட்ட தவறுகளுக்கு அடையாளமாக நம் சிறைகள் உள்ளன" என்று கூறினார் திருத்தந்தை.

குற்றம் புரிந்தவரை, சமுதாயத்திலிருந்து பிரித்து, அடைத்து வைப்பது, குற்றங்களைக் குறைக்கும் வழியல்ல என்றும், அக்குற்றங்கள் சமுதாயத்தில் தோன்றுவதற்குக் காரணங்களாக இருக்கும் சூழல்களை சரி செய்வதே, குற்றங்களைக் களைவதற்கு வழி என்றும், பல தருணங்களில் கூறிவந்ததை, ஹூவாரெஸ் சிறையில் மறுபடியும் கூறினார், திருத்தந்தை. சமுதாயத்தைப் பாதுகாப்பதாக எண்ணிக்கொண்டு, குற்றவாளிகளை, சமுதாயத்தின் விளிம்புகளில், சிறைகளில், தனிமைப்படுத்துவது தவறு என்பதை உறுதியாக நம்பும் திருத்தந்தை, சிறையில் இருப்போரை, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு கொண்டாட்டங்களில் இணைத்துள்ளார் என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
யூபிலியின் பரிபூரணப் பலனைப் பெறுவதில், சிறைக் கைதிகளை திருத்தந்தை முன்னிலைப் படுத்தியுள்ளது, யூபிலியின் நோக்கமாக விவிலியத்தில் கூறப்பட்டுள்ள எண்ணம் என்றே சொல்லவேண்டும். லேவியர் நூல், 25ம் பிரிவில், யூபிலி ஆண்டுகளின் கடமைகள் கூறப்பட்டுள்ளன. இந்தக் கடமைகளில், கடன்களை இரத்து செய்தல், அடிமைகளை விடுவித்தல், அவரவருக்குரிய நிலங்களைத் திரும்பப்பெறுதல் என்பவையே முதன்மையான கடமைகளாகக் கூறப்பட்டுள்ளன. வழிபாடுகள், பலிகள், புனிதக் கதவுகள் என்ற கருத்துக்கள் யூபிலி ஆண்டின் கடமைகளாக இடம்பெறவில்லை. விவிலியம் முதன்மைப்படுத்தும் யூபிலிக் கடமைகளை மீண்டும் புதுப்பிக்கும் வகையில், சிறைக்கைதிகளை, யூபிலி கொண்டாட்டத்தில் இணைத்துள்ளார் திருத்தந்தை.

முதியோரும், நோயுற்றோரும் தாங்கள் வாழும் இடங்களிலேயே யூபிலியின் பரிபூரணப்பலனைப் பெறமுடியும் என்று தன் மடலில் குறிப்பிட்டத் திருத்தந்தை, சிறைக் கைதிகளையும் இறைவன் தேடிச்சென்று தன் இரக்கத்தை வழங்குகிறார் என்று சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிறைப்பட்டோரை இறைவன் சந்திக்கிறார் என்ற எண்ணம், சில விவிலிய நிகழ்வுகளை நம் நினைவுக்குக் கொணர்கின்றது. அவற்றில் முதலாவது, யாக்கோபின் மகன், யோசேப்பைப் பற்றியது. எகிப்தில் அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பு, தவறாகக் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சிறையில் அவருடன் ஆண்டவர் இருந்தார் என்பதை தொடக்க நூலில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்:
தொடக்க நூல் 39: 20-23
யோசேப்பின் தலைவன், அரசக் கைதிகள் காவலில் வைக்கப்பட்டிருந்த அதே சிறைச்சாலைக்கு அவரை இழுத்துச் சென்று அடைத்து வைத்தான். ஆண்டவர் யோசேப்புடன் இருந்து, அவர்மீது பேரன்பு காட்டி, சிறை மேலாளன் பார்வையில் அவருக்குத் தயை கிடைக்கும்படி செய்தார். எனவே சிறைமேலாளன் சிறையிலிருந்த கைதிகள் அனைவரையும், அங்குச் செய்யப்பட்ட வேலைகள் அனைத்தையும், யோசேப்பின் பொறுப்பில் ஒப்படைத்தான். அவர் பொறுப்பில் விடப்பட்ட எதைப்பற்றியும் சிறைமேலாளன் விசாரிக்கவில்லை. ஏனெனில், ஆண்டவர் யோசேப்புடன் இருந்தார். அவர் செய்த யாவற்றிலும் வெற்றி அளித்தார்.

அடுத்ததாக, நம் நினைவுக்கு வருவது, திருமுழுக்கு யோவான். மன்னன் ஏரோதின் நடத்தை சரியில்லை என்பதை, துணிவுடன் எடுத்துரைத்த திருமுழுக்கு யோவான், சிறையிலடைக்கப்படுகிறார். இறைவனோ, இயேசுவோ, அவரை, சிறையில் சந்தித்தாக நற்செய்தியில் சொல்லப்படவில்லை. ஆனால், யோவான் அனுப்பிய சீடர்கள் வழியே, இயேசு அவருக்கு ஆறுதலும், உறுதியும் வழங்கினார். இது, யோவானுக்கும், இயேசுவுக்கும் இடையே நிகழ்ந்த மறைமுகச் சந்திப்பு என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். (மத்தேயு 11: 2-6; லூக்கா 7: 21-23)

தன் பணிவாழ்வில் நோயுற்றோருக்கும், தீய ஆவியால் துன்புற்றோருக்கும் இயேசு புதுவாழ்வு தந்துள்ளார். ஆனால், அவர் சிறைக்கைதிகளைச் சந்தித்தார் என்றோ, அவர்களுக்கு உதவினார் என்றோ, ஒரு நிகழ்வும் நற்செய்திகளில் இடம்பெறவில்லை. அவர் சந்தித்த இரு கைதிகள், அவருடன் சிலுவையில் அறையுண்ட இரு குற்றவாளிகள் மட்டுமே. அவர்களில் ஒருவருக்கு இயேசு முழு விடுதலை தந்து, தன்னுடன் விண்ணகத்திற்கு அழைத்துச் சென்றார் என்பதை அறிவோம் (லூக்கா 23: 39-43).
சிறையில் இருந்தோர் இயேசுவின் தனிப்பட்ட கவனத்தையும், கனிவையும் பெற்றவர்கள் என்பதை, அவர் வழங்கிய இறுதித் தீர்ப்பு உவமையில் காணலாம் (மத்தேயு 25: 31-46). இவ்வுவமையில், அவர் தன்னை ஒரு சிறைக்கைதியாக உருவகப்படுத்திப் பேசியிருப்பது, நம் கவனத்தை அதிகம் ஈர்க்கிறது. சிறையில் இருப்போரைக் காணச் செல்வதால் ஒருவர் ஆசீர் பெறுவார் என்று பொதுப்படையாகச் சொல்லாமல், தன்னையே ஒரு சிறைக் கைதியாக உருவகித்து இயேசு பேசியிருக்கிறார்: "சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்" (மத்தேயு 25: 36) என்று அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளார். சிறைக் கைதியான இயேசுவைத் தேடி வந்தவர்கள், இறைவனால் ஆசீர் பெறுவர், நித்திய வாழ்வடைவர் என்று இயேசு கூறுவது, நம் மனதில் ஆழப்பதிகிறது.

அண்மையில் நாம் கொண்டாடிய இறை இரக்கத்தின் ஞாயிறன்று, திருத்தூதர் தோமாவைச் சந்திக்க, சீடர்கள் தங்கியிருந்த மேலறைக்கு இயேசு சென்றார் என்பதை நற்செய்தியாக வாசித்தோம். அந்த மேலறை, ஒரு சிறைக்கூடம் என்று சொன்னால், அது மிகையல்ல. யூதர்களுக்கும், உரோமையர்களுக்கும் பயந்து, தங்களையே அந்த மேலறையில் சிறைப்படுத்திக் கொண்ட சீடர்களைத் தேடி இயேசு சென்றார். கதவு, சன்னல்கள் அனைத்தையும் மூடி வாழ்ந்த சீடர்கள், தங்கள் உள்ளங்களையும், சந்தேகம் என்ற கதவால் மூடி வைத்திருந்தனர். சீடர்கள், தாங்களாகவே உருவாக்கிக் கொண்ட அந்தச் சிறையின் கதவுகள் மூடியபடியே இருக்க, இயேசு அவர்கள் நடுவே நின்றார்; தூய ஆவியைப் பொழிந்தார்; அவர்களை விடுவித்தார் (லூக்கா 24:36-43; யோவான் 20:19-29).

யூதர்களுக்குப் பயந்து, மேலறை என்ற சிறையில் தன்னை அடைத்துக்கொண்டவர், திருத்தூதர் பேதுரு. கிறிஸ்தவர்கள் மேல் கொண்ட வெறுப்பு என்ற சிறையில் தன்னை அடைத்துக்கொண்டவர் திருத்தூதர் பவுல். இவ்விருவரும் உயிர்த்த கிறிஸ்துவால் விடுதலை பெற்றனர். தாங்கள் அடைந்த விடுதலை அனுபவத்தை மக்களோடு பகிர்ந்துகொண்டபோது, இவ்விருவரும் மதத்தலைவர்களால் சிறையில் அடைக்கப்பட்டனர். இறைவன் அவர்களை சிறையில் சந்தித்து, மீண்டும் ஒரு முறை விடுதலை தந்தார் என்பதை, திருத்தூதர் பணிகள் நூலில் வாசிக்கிறோம் (தி.தூ. 12: 5-17; 16: 25-34).

இவ்வாறு, சிறைப்பட்டோரைச் சந்தித்து, இறைவன் தன் இரக்கத்தை பொழியும் பல நிகழ்வுகள் விவிலியத்தில் இடம்பெற்றுள்ளன. சிறைப்பட்டோர் தங்கள் சிறையிலேயே இறைவனின் இரக்கத்தைப் பெறமுடியும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூறியுள்ள வார்த்தைகளைக் கேட்கும்போது, இந்நிகழ்வுகள் மனதில் தோன்றுகின்றன.
சட்டத்தின் பார்வையில் குற்றவாளிகள் என்று முத்திரை குத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டோருக்கு இயேசு பணியாற்றவில்லை எனினும், அவர் ஆற்றிய பணிகள் அனைத்திலும், விடுதலை என்பது, உயிர் நாடியாக இருந்தது. அவர் வழங்க வந்த விடுதலை, சொற்களால் மட்டுமல்ல, அவற்றைவிட, அவரது செயல்கள் வழியே வெளியானது. நோயினின்று அவர் தந்த விடுதலை, அவர் ஆற்றிய புதுமைகளாக நற்செய்திகளில் பதிவாகியுள்ளது.

இரக்கத்தின் யூபிலி ஆண்டில், நாம் மேற்கொண்டுள்ள விவிலியத் தேடல்களில், அடுத்த சில வாரங்கள், இயேசு ஆற்றிய புதுமைகளில் நம் பயணத்தைத் தொடர்வோம்.

Angel visiting St Peter in prison


No comments:

Post a Comment