Pope Francis blesses 5-year-old Lizzy Myers
Pope Francis with Ignazio Fucci
ஏப்ரல்
6, கடந்த புதனன்று, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில்
ஒரு சிறுமியும் அவரது பெற்றோரும் பெற்ற புதுமையான அனுபவம் நம் விவிலியத் தேடலை இன்று
துவக்கி வைக்கிறது. லிஸ்ஸி மாயர்ஸ் (Lizzy Myers) என்ற ஐந்து வயது சிறுமி,
அமெரிக்க ஐக்கிய நாட்டின்
ஓஹயோ (Lexington, Ohio) மாநிலத்திலிருந்து, திருத்தந்தையைச் சந்திக்க, தன் பெற்றோருடன் (Steve
and Christine Myers) வந்திருந்தார். இச்சிறுமி, Usher's
Syndrome என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நோயினால் இச்சிறுமியின் பார்க்கும் திறனும்,
கேட்கும் திறனும்
படிப்படியாகக் குறைந்து, இன்னும் சில ஆண்டுகளில், அவற்றை
முற்றிலும் இழந்துவிடும் நிலையில் உள்ளார். தனக்கு இந்த நோய் உள்ளதென்று அச்சிறுமிக்குத்
தெரியாது. லிஸ்ஸி தன் திறன்களை முற்றிலும் இழப்பதற்கு முன், அவர் ஏராளமானவற்றைக் கண்டு, கேட்டு மகிழ வேண்டும் என்று விரும்பிய
அவரது பெற்றோர், ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
சிறுமி
லிஸ்ஸி என்னென்ன பார்க்கவேண்டும், யார் யாரை பார்க்க அவர் விரும்புகிறார்
என்று ஒரு பட்டியலை, அவருடன் சேர்ந்து தயார் செய்தனர், அவரது பெற்றோர். அச்சிறுமி, தான், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற
ஆவலை வெளியிட்டாராம். அவரது விருப்பத்திற்கிணங்க, அவரை வத்திக்கான்
வளாகத்திற்கு அழைத்து வந்தனர், அவரது பெற்றோர். திருத்தந்தை, சிறுமி லிஸ்ஸியைச் சந்தித்து, பல நிமிடங்கள்
அவருடன் செலவிட்டார். அவர் கண்கள் மீது கரங்களை வைத்து செபித்தார். சிறுமி லிஸ்ஸிக்கு
இச்சந்திப்பின் ஆழம் புரிந்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், அச்சிறுமியின் பெற்றோருக்கு இந்த அனுபவம், புதுமையாக இருந்திருக்கும்.
இதேபோல், மிக அரிய வகை நோயால் துன்புறும் இஞ்ஞாசியோ புச்சி (Ignazio Fucci) என்ற எட்டு வயது சிறுவனையும், அவனது பெற்றோரையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 30, புதனன்று சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
உணவுக் குழாயில் அரிய வகையான குறையுள்ள சிறுவன் இஞ்ஞாசியோவைப் போல் துன்புறும் சிறுவர்கள், உலகில், 40 பேர் என்ற அளவிலேயே உள்ளனர்
என்றும், இத்தாலியில் இவ்வகை நோயுள்ளதாக
அறியப்பட்டுள்ள ஒரே சிறுவன் இஞ்ஞாசியோ என்றும்,
UNITALSI என்ற பிறரன்புப்பணி
அமைப்பினர் தலைவர் Emanuele Trancalini அவர்கள் கூறினார்.
சில வாரங்களுக்கு
முன்னர், திருத்தந்தையின் செபங்களுக்காக விண்ணப்பித்து,
சிறுவன் இஞ்ஞாசியோ, எழுதியிருந்த மடலைக் கண்ட திருத்தந்தை, அச்சிறுவனின் குடும்பத்தை சாந்தா மார்த்தா இல்லத்திற்கு அழைத்திருந்தார்.
சிறுவனோடும், பெற்றோருடனும் திருத்தந்தை செலவிட்ட நேரத்தில், கடவுள் மீது தாங்கள் கொண்ட கோபம் குறித்து இஞ்ஞாசியோவின் பெற்றோர்
திருத்தந்தையிடம் பேசியதாகவும், கடவுள் மீது அவர்கள் கொண்டிருக்கும்
கோபத்தையும் செபமாக மாற்றும்படி திருத்தந்தை அவர்களுக்குக் கூறியதாகவும் UNITALSI அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.
தங்கள்
நோயின் தீவிரத்தை அறியாத இவ்விரு குழந்தைகளும்,
திருத்தந்தையைச் சந்திக்க
ஆவல் கொண்டிருந்தனர் என்றாலும், அவரைச் சந்தித்த தருணத்தின் முக்கியத்துவத்தை
முழுவதுமாக உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால்,
இவ்விரு குழந்தைகளின்
பெற்றோர், இச்சந்திப்பினால் ஓரளவு நம்பிக்கை பெற்றிருப்பர், அவர்கள் உள்ளத்தில் சுமந்து வந்த பாரம் ஓரளவு குறைந்திருக்கும்
என்று நம்பலாம். இதுதான், அவர்களுக்குக் கிடைத்த புதுமை என்று
சொல்லவேண்டும்.
புதுமைகள்
என்றால், அங்கு மாற்றங்கள் நிகழவேண்டும். அந்த மாற்றங்கள், நாம் எதிர்பார்த்த வகையில்,
எதிர்பார்த்த அளவு
இல்லாமல் போகலாம். இவ்விரு குழந்தைகளின் பெற்றோருக்கும் இச்சந்திப்பு கட்டாயம் ஒரு
மாற்றத்தை உருவாக்கியிருக்கும். திருத்தந்தையைச் சந்தித்ததால், அக்குழந்தைகள் நலம் பெறுவார்களா என்று தெரியவில்லை. ஆனால், நோயுற்ற அக்குழந்தைகளுடன் வாழ்வதற்கு, அந்த பெற்றோர் ஓரளவு நம்பிக்கையும், சக்தியும் பெற்றிருப்பர் என்று நம்பலாம். இதுவும் ஒருவகை புதுமைதான்.
தன் மகள் லிஸ்ஸியை, திருத்தந்தை ஆசீர்வதித்ததைக் கண்ட அச்சிறுமியின் தந்தை ஸ்டீவ் அவர்கள், "இதுபோல் நடக்கும் என்று, நாங்கள்
ஒரு கோடி ஆண்டுகளிலும் கனவு காணவில்லை. என் மகளுக்கு ஏதாவது புதுமை நிகழவேண்டும்
என்று நாங்கள் நினைத்திருந்தால், அது, இதுதான்" என்று கூறினார்.
இயேசு
இவ்வுலகில் வாழ்ந்தபோது ஆற்றிய புதுமைகளில் நம் தேடல் பயணத்தை இன்று துவக்குகிறோம்.
இயேசுவின் புதுமைகளை பல நூறு கோணங்களில் சிந்திக்க முடியும். ஆயினும், இரக்கத்தின் யூபிலி ஆண்டின் ஒரு பகுதியாக நாம் இயேசுவின் புதுமைகளைச்
சிந்திக்கும்போது, அப்புதுமைகளை அவர் ஆற்ற அடித்தளமாக இருந்த
இரக்கத்தை மையப்படுத்தி, நம் தேடல் பயணத்தை மேற்கொள்வோம்.
இயேசு
எத்தனை புதுமைகள் செய்தார் என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. நம்
தேடலுக்கு இது தேவையில்லை என்பது என் கருத்து. நான்கு நற்செய்தி யாளர்களும் பதிவு செய்திருப்பது, அவர் தன் பொது வாழ்வில் ஆற்றிய புதுமைகள் மட்டுமே. அவர் நாசரேத்தில்
30 ஆண்டுகள் வாழ்ந்த காலத்தில் புதுமைகள் செய்தார் என்பதைக் கூறும் ஒரு சில ஏடுகளும்
உள்ளன. இவற்றை கத்தோலிக்கத் திருஅவை அதிகாரப்பூர்வ விவிலியப் பகுதியாக ஏற்றுக்கொள்ளவில்லை.
தன் வாழ்நாளின் ஒவ்வொரு நாளும் இயேசு புதுமைகள் செய்திருக்க வேண்டும்.
நான்கு
நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ள புதுமைகளைத் தொகுத்து, இரு கூறுகளாகப் பிரித்துள்ளனர்,
சில விவிலிய விரிவுரையாளர்கள். இயற்கையோடு இயேசு கொண்ட தொடர்பினால் உருவான புதுமைகள், மனிதர்களோடு இயேசு கொண்ட தொடர்பினால் உருவான புதுமைகள் என்று இரு
பகுதிகளாக பிரித்துள்ளனர்.
புயலை
அடக்குதல், கடல் மீது நடந்து செல்லுதல், தோற்ற மாற்றம் போன்ற நிகழ்வுகள், இயற்கையைக்
கட்டுப்படுத்தி, அல்லது, மாற்றியமைத்து
இயேசு ஆற்றிய புதுமைகள். மற்றவை அனைத்தும், இயேசு, மனிதர்களின் தேவையை உணர்ந்து
செய்த புதுமைகள். இயற்கை சார்ந்த புதுமைகளையும், இயேசு, தன்னைச்
சுற்றியிருந்தோரின் தேவைகளை உணர்ந்து செய்தார் என்றே கூறவேண்டும்.
புயலில்
சிக்கிய படகில் சீடர்கள் தத்தளித்த வேளையில்,
அவர்களுக்கு நம்பிக்கை
தேவை என்பதை உணர்ந்து, இயேசு புயலை அடக்கினார் (மத்.
8:23-27; மாற். 4:35-41; லூக். 8:22-25). எதிர் காற்றில் படகை ஓட்டிச் செல்ல முடியாமல் தவித்த
சீடர்களுக்கு உதவி செய்யவே இயேசு கடல் மீது நடந்து சென்றார். (மத். 14:22-33; மாற். 6:45-51; யோவா. 6:15-21)
தேவையில்
இருப்போரைத் தேடி, அவர்களது தேவைகளை நிறைவு செய்யவே தான் வந்ததாக, இயேசு தன் பணிவாழ்வின் துவக்கத்தில் கூறினார். நாசரேத்து தொழுகைக்
கூடத்தில் அவர் தன் பணியைப்பற்றி கூறிய சொற்கள் இந்த கருத்தை உறுதி செய்கின்றன:
லூக்கா
4 16-21
இயேசு
தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக்
கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம்
கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது; "ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்
சிறைப்பட்டோர் விடுதலை அடைவர். பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை
விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர்
என்னை அனுப்பியுள்ளார்."
பின்னர்
அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின்
கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, "நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று
நிறைவேறிற்று" என்றார்.
தன் பணிவாழ்வை
துவங்கிய வேளையில், இயேசு, நாசரேத்து
தொழுகைக் கூடத்தில் கூறிய வார்த்தைகள், அவரது புதுமைகளில் நிறைவேறின. ஏழைகள், சிறைப்பட்டோர், பார்வை இழந்தோர், ஒடுக்கப்பட்டோர் என்று, இயேசு தன் முதல் உரையில் பட்டியலிட்டவர்களே,
அவரது புதுமைகளின் நாயகர்களாக மாறினர்.
இயேசு
ஆற்றிய அனைத்து புதுமைகளையும் ஆய்வு செய்தால்,
அவை அனைத்துமே, இரக்கத்தின் வெளிப்பாடாக நிகழ்ந்த புதுமைகள் என்பதை உணரலாம். இயேசு
ஆற்றிய எந்தப் புதுமையும், தன் சக்தியை வெளிப்படுத்த, அவர்
செய்த புதுமை அல்ல. அவர் தன் சக்தியை பயன்படுத்தி, புதுமைகள் செய்யவேண்டும் என்று அலகை
கூறியபோது, அவற்றை சோதனைகள் என்று ஒதுக்கினார் (மத்.
4:1-11; லூக். 4:1-13). பாலைநிலத்தில் அவர் பசித்திருக்கையில், கற்களை அப்பங்களாக்கி பசியைத் தீர்த்துக்கொள்ள அலகை தூண்டியபோது, அதற்கு செவி மடுக்காத இயேசு, மற்றொரு
பாலை நிலத்தில், மக்கள் பசியுடன் இருப்பார்கள் என்பதை உணர்ந்து, அப்பங்களைப் பலுகச் செய்தார் என்பதைக் காண்கிறோம் (மத். 14:
13-21; மாற். 6: 30-44; லூக். 9: 10-17; யோவா. 6: 1-15) தன் சக்தியை நிலைநாட்டவோ, தன் தேவைகளை நிறைவேற்றவோ அதிசயங்களைச் செய்பவர்கள், மந்திரவாதிகளாக இருக்கலாமே தவிர, இறைத் தன்மை
கொண்டவர்களாக இருக்க முடியாது.
இந்தப்
பின்னணி எண்ணங்களை மனதில் கொண்டு, இயேசு ஆற்றிய புதுமைகளுக்குள் காலடி
எடுத்துவைப்போம். நான்கு நற்செய்திகளிலும் இயேசுவின் மனிதத் தன்மையையும், அவரது இரக்கத்தையும் வெளிச்சமிட்டு காட்டும் நற்செய்தி, லூக்கா எழுதியுள்ள நற்செய்தி. 'இரக்கத்தின்
நற்செய்தி' என்று அழைக்கப்படும் இந்நூலில் இயேசு ஆற்றிய
முதல் புதுமை, ஒரு தொழுகைக் கூடத்தில் நிகழ்ந்தது (லூக்கா 4: 31-37).
தீய ஆவியால்
துன்புற்ற ஒருவருக்கு இயேசு ஆற்றிய இந்தப் புதுமையையும், இதை, இயேசு ஏன் தொழுகைக் கூடத்தில் நிகழ்த்தினார்
என்பதையும் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.
No comments:
Post a Comment