04 September, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 37

Freedom

உரோமை நகரில், திருத்தலங்களைப் பார்க்க வரும் திருப்பயணிகள், மற்றும், வரலாற்றுச் சின்னங்களைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம், ஆண்டு முழுவதும் அலைமோதும். இவ்வாண்டு கொண்டாடப்படும் இரக்கத்தின் சிறப்பு யூபிலியையொட்டி, திருப்பயணிகளின் கூட்டம் இன்னும் அதிகமாகியுள்ளது.
பல்வேறு நாடுகளிலிருந்து வரும் பயணிகளில் பலர், வாசகங்கள் பதிக்கப்பட்ட சட்டைகளை அணிந்து வருவர். ஒரு பயணி அணிந்திருந்த சட்டையில் நான் கண்ட வாக்கியம் இது: PROTECT ME FROM WHAT I WANT. "நான் விரும்புகிறவற்றிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்." அவர் யாருக்கு இந்த வேண்டுகோளை விடுக்கிறார்? தன் குடும்பத்திற்கா? நண்பர்களுக்கா? அல்லது கடவுளுக்கா? சரியாகத் தெரியவில்லை.
"நான் விரும்புகிறவற்றிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்." இந்த வாக்கியம், வேடிக்கையாகத் தெரிந்தாலும், ஆழமான பலக் கோணங்களில் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. நாமே விரும்பி, தேடிச்செல்லும் ஒன்றிலிருந்து ஏன் மற்றொருவர் வந்து நம்மைக் காப்பாற்ற வேண்டும்? விரும்புவது, தேடுவது எல்லாமே நல்லவைகளாக இருந்தால், இந்தக் கேள்வி, பயம், வேண்டுகோள் எழாது. ஆனால் வாழ்வில் நாம் இதுவரை அனுபவித்துள்ள, அல்லது, அனுபவிக்கும் உண்மை என்ன?

யாராவது ஒருவர், நான் விரும்பாத இடத்திற்கு, பலவந்தமாக என்னை இழுத்துச் சென்றாலோ, அல்லது விரும்பாத ஒன்றை செய்யக் கட்டாயப்படுத்தினாலோ, மற்றவர்களை நான் உதவிக்குக் கூவி அழைக்கலாம். ஆனால், நானே விரும்பி ஓரிடத்திற்குப் போகும்போது, அல்லது, ஒன்றைச் செய்யும்போது, "யாராவது காப்பாற்றுங்களேன்" என்று கத்துவேனா? என் கையை, நானே பலவந்தமாக முறுக்கிக் கொண்டு, அல்லது என் கண்ணை, நானே குத்திக்கொண்டு, "யாராவது காப்பாற்றுங்களேன்" என்று கத்துவேனா? என் வாய் கத்தியதில்லை. ஆனால், என் உள்மனம் கத்தியிருக்கிறது. ஆரம்பத்தில் அழகாக, நல்லதுபோல் தோன்றிய பல விடயங்கள், போகப்போக பயத்தை உண்டாக்கியது. பகலிலும், இரவிலும், இந்த பயம் துரத்தியது. கத்தி யாரையாவது கூப்பிடலாம் என்றால், அதற்கும் பயம்.

கொளுந்துவிட்டு எரிகின்ற நெருப்பு பார்க்க அழகாக இருக்கும். அந்த அழகைத் தேடிச்செல்லும் விட்டில் பூச்சிகளை எண்ணி பரிதாபப்படுகிறோம். பூச்சிகள் பாவம், அவை இறப்பதை தடுக்க நம்மால் ஒன்றும் செய்யமுடியாமல் போகலாம். அதே நெருப்பைத் தேடி, நம் வீட்டில் ஒரு குழந்தை போகும்போது, பார்த்துக்கொண்டு சும்மா இருப்போமா? ஓடிச்சென்று காப்பாற்றுவோம். ஆனால், அதே நெருப்பை நாடி, வயதுக்கு வந்த அல்லது வயது முதிர்ந்த ஒருவர் செல்லும்போது, தடுக்கப் பார்ப்போம், அந்நேரத்தில், தடுக்கும் நம்மைத் தள்ளிவிட்டு, அவர் அந்த நெருப்புக்குள் புகுந்தால், இந்த ஆளுக்கென்ன, பேய் பிடித்துவிட்டதா என்று சிந்திக்க மாட்டோமா?

புரிந்துகொள்ள முடியாத செயல்பாடுகளில் ஒருவர் ஈடுபடும்போது, விளக்கமுடியாத ஈர்ப்பினால் ஒருவர் வாழ்வு தடம்புரண்டு செல்லும்போது, ஏதோ ஒரு சக்தி அவரை ஆட்டிப்படைப்பதாக நாம் கூறுகிறோம். நம்மில் பலர், இந்தச் சக்தியை பேய், சாத்தான், தீய ஆவி என்று பல பெயர்களால் அழைக்கிறோம்.
பேய் பிடித்த ஒருவரை, இல்லை, இல்லை... 6000 பேய்கள் பிடித்த ஒருவரை, இயேசு குணமாக்கும் புதுமையை இன்றைய விவிலியத் தேடலில் சிந்திக்க வந்திருக்கிறோம். தன் இரக்கத்தின் வெளிப்பாடாக, இயேசு ஆற்றிய குணமளிக்கும் புதுமைகள் வரிசையில், நற்செய்தியாளர் லூக்கா கூறும் அடுத்த புதுமை இதுதான் - லூக்கா நற்செய்தி 8: 26-39

பேய் பிடித்ததாகச் சொல்லப்பட்ட ஒரு சிலரைப் பார்த்திருக்கிறேன். வழக்கமாக இவர்கள் சுய நினைவு இல்லாமல், தங்கள் கட்டுப்பாட்டில் தாங்கள் இல்லாமல், வேறு ஒருவருடைய கட்டுப்பாட்டில் இருப்பதுபோல பேசுவார்கள், செயல்படுவார்கள். ஒரு சில கோவில்களில் இவர்களுக்கென தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு கட்டப்பட்டிருந்தவர்களைப் பார்த்து, பயந்திருக்கிறேன், வேதனை அடைந்திருக்கிறேன். ஒரு சில ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாட்டில், இப்படி ஒரு கோவிலில் கட்டப்பட்டிருந்த பலர், தீவிபத்தில் உடல் கருகி இறந்தது, நம்மில் பலருக்கு நினைவிருக்கலாம்.
தீய ஆவியால் கட்டுண்ட ஒருவரை, இயேசு குணமாக்கும் இப்புதுமை, மத்தேயு, மாற்கு, லூக்கா என்ற மூன்று நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில், நற்செய்தியாளர் மாற்கு, தீய ஆவி பிடித்தவரை விவிரிக்கும் வரிகள் இதோ
மாற்கு நற்செய்தி 5: 1-5
அவர்கள் கடலுக்கு அக்கரையிலிருந்த கெரசேனர் பகுதிக்கு வந்தார்கள். இயேசு படகைவிட்டு இறங்கிய உடனே தீய ஆவி பிடித்த ஒருவர் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தார். கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம். அவரை எவராலும் ஒருபொழுதும் சங்கிலியால்கூடக் கட்டி வைக்க முடியவில்லை. ஏனெனில், அவரைப் பல முறை விலங்குகளாலும் சங்கிலிகளாலும் கட்டியிருந்தும் அவர் சங்கிலிகளை உடைத்து விலங்குகளைத் தகர்த்து எறிந்தார். எவராலும் அவரை அடக்க இயலவில்லை. அவர் இரவு பகலாய் எந்நேரமும் கல்லறைகளிலும் மலைகளிலும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்; தம்மையே கற்களால் காயப்படுத்தி வந்தார்.

பயம், பரிதாபம் என்று பல உணர்வுகளை எழுப்பும் ஒரு காட்சி இது. நாம் ஒவ்வொருவரும் இறுதியில் சென்று சேருமிடம் கல்லறை. ஆனால், அங்கு நாம் வாழ்வது கிடையாது. கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம் என்று நற்செய்தியாளர் மாற்கு கூறும்போது, அந்த மனிதர், ஏதோ ஒருவகையில் இறந்துவிட்டார் என்பதை, சொல்லாமல் சொல்கிறார். இந்நிலையில் உள்ள ஒருவரை சந்தித்தபோதெல்லாம் என் மனதில் மேலோங்கியிருந்த முதல் எண்ணம் - அந்த ஆளைவிட்டு, அந்த இடத்தை விட்டு, தூரமாய் சென்றுவிட வேண்டும் என்பதே.
பொதுவாகவே, தீய சக்தி, எந்த வடிவத்தில் வந்தாலும், அந்த சக்திக்கு முன், நமது முதல் பதில்? அந்த இடத்தை விட்டு விலகுதல். துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்று, சிறுவயது முதல் சொல்லித் தரப்படும் பாடம், நம்மை, இத்தகைய முடிவெடுக்க வைக்கிறது. தீய சக்தியைச் சந்தித்ததும், நம்மில் பலருக்கு, விசுவாசம் விடைபெற்று போய்விடுகிறது. தீய சக்திகளுக்கு முன், துணிந்து நிற்க முடியாமல் பின்வாங்குவது, அந்த சக்திகளுக்கு நாம் தரும் வெற்றி. தீய சக்தியை இயேசு சந்தித்தபோது, அவருடைய பதில் என்ன? நற்செய்தியாளர் மாற்கு அதனை இவ்விதம் சித்திரித்துள்ளார்.

மாற்கு நற்செய்தி 5: 6-10
தீய ஆவி பிடித்தவர் தொலையிலிருந்து இயேசுவைக் கண்டு ஓடிவந்து அவரைப் பணிந்து, “இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? கடவுள் மேல் ஆணை! என்னை வதைக்க வேண்டாம் என்று உரத்த குரலில் கத்தினார். ஏனெனில் இயேசு அவரிடம், “தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ என்று சொல்லியிருந்தார். அவர் அம்மனிதரிடம், “உம் பெயர் என்ன?” என்று கேட்க அவர், “என் பெயர் இலேகியோன், ஏனெனில் நாங்கள் பலர் என்று சொல்லி, அந்தப் பகுதியிலிருந்து தங்களை அனுப்பிவிட வேண்டாமென்று அவரை வருந்தி வேண்டினார்.
இலேகியோன் என்பது உரோமைப் படையின் 6000 போர் வீரர்கள் கொண்ட பெரும் படைப் பிரிவு என்று விவிலியக் குறிப்பொன்று கூறுகிறது. 6000 பேர் ஒரு மனிதரில், ஒரு மனதில் குடிகொள்ள முடியுமா? முடியும். நாம் ஒவ்வொருவரும் பிறக்கும்போது ஒருவராகப் பிறக்கிறோம். ஆனால், வளரும்போது, அவரைப் போல, இவரைப் போல என்று எத்தனை பேராக மாறத் துடிக்கிறோம். நம் குடும்பத்தில், அல்லது பள்ளியில், அடுத்தவரோடு நம்மை ஒப்புமைப்படுத்தி, “அவனப்பாரு, அவளப்பாரு... நீயும் இருக்கியே என்று தவறானத் தீர்ப்புகள் வாசிக்கப்படும்போது, அவனாக, அவளாக மாறும்படி நாம் கட்டாயப்படுத்தப்படுகிறோம். இல்லையா?
சாதியக்கொடுமை, இனவேறுபாடு என்ற அரக்கர்களின் பிடியில் சிக்குண்டிருக்கும் சமுதாயங்களில், பலர், வளரும்போது, அவர்களது பெயர்களே மறைந்து, மறந்துபோகும் அளவு, மற்ற கீழ்த்தரமான பெயர்களால், அடைமொழிகளால் அழைக்கப்படுகின்றனர். இப்படி வளரும் ஒரு குழந்தை, தன் சொந்த உருவை, தன் சொந்த பெயரை, தன் சொந்த இயல்பை புதைத்துவிட்டு மற்ற முகமூடிகளை அணிந்துகொள்ள முற்படுகிறது. இந்த முகமூடிகளே அந்த குழந்தையின் அடையாளங்களாக மாறும்போது, அவராக, இவராக இருக்கலாமே என்று ஆரம்பித்து ஆயிரமாயிரம் அடையாளங்களைத் தாங்கி வாழ ஆரம்பித்து விடுகிறது.
நாம் பிறந்ததிலிருந்து எத்தனை பேர் நமக்குள் குடிபுகுந்தனர் என்று கணக்கெடுத்தால், வியப்பாக இருக்கும். நம்மில் குடி புகுந்தவர்களை நாம் அவ்வப்போது வெளியேற்றி வருவதால், நாம் சம நிலையில் இருக்கிறோம். அந்தக் கூட்டத்தை நமக்குள் தொடர்ந்து தங்கவைத்தால், நாமும் பலராக மாறியிருப்போம்.
ஒரு வேளை, கெரசேனர் பகுதி கல்லறைகளில் வாழ்ந்த இந்த மனிதரும் பலரை தனக்குள் தொடர்ந்து தங்கவைத்து, பலராக வாழப் பழகி, அதுவே அவரது வாழ்வாகி விட்டதென நினைக்கிறேன். ஒவ்வொரு நாளும், பலராக வாழ்வதை, மருத்துவ கண்ணோட்டத்தில் பார்த்தால், Split Personaltiy, அல்லது Multiple personality Disorder என்று அழைப்பர்.

6000 பேரை உடலில், மனதில் தாங்கி போராடி வந்தவரைக் குணமாக்குகிறார் இயேசு. படையாக வந்த தீய சக்திகள் சாதாரணமாகப் போகவில்லை. ஏறத்தாழ இரண்டாயிரம் பன்றிகளை அழித்துவிட்டுச் சென்றன. இயேசு செய்த இப்புதுமை உருவாக்கிய விளைவுகளை அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.



2 comments:

  1. நல்ல சிந்தனை தந்தையே! உங்களது பல பணிகளுக்கு மத்தியிலும் நல்ல நல்ல சிந்தனைகளை விவிலிய அடிப்படையில் தியானித்து நீங்கள் எழுதுவதைப் பாராட்டாமல் இருக்க முடியிவில்லை. தொடரட்டும் உங்கள் நற்பணி. இந்த சின்ன தம்பியிடமிருந்து வாழ்த்துக்களும் செபங்களும்

    ReplyDelete
  2. மனம் நிறைந்த உங்கள் பாராட்டுக்கு சிரம் தாழ்த்தி நன்றி சொல்கிறேன்.

    ReplyDelete