'முன்னெப்போதும் இல்லாத வகையில்
இன்று நமக்கு அமைதி தேவைப்படுகிறது. உலகெங்கும் பரவியுள்ள போருக்கு நடுவே, நாம் அமைதிக்காகச்
செபிப்போம்' என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 18, இஞ்ஞாயிறன்று அழைப்பு விடுத்தார்.
“Thirst for Peace: religions and cultures
in dialogue” அதாவது, "அமைதிக்காகத்
தாகம்: உரையாடலில் மதங்களும், கலாச்சாரங்களும்" என்ற தலைப்பில், செப்டம்பர் 18, இஞ்ஞாயிறு முதல், 20 இச்செவ்வாய் முடிய, அசிசி நகரில்,
ஒரு பன்னாட்டு, பல்சமய சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பின்
சிகரமாக, செவ்வாய் மாலை 4 மணிக்கு, உலக அமைதிக்காக பல்வேறு
சமயங்களும் இணைந்து செபிக்கும் நிகழ்வை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
தலைமையேற்று நடத்தினார்.
முப்பது
ஆண்டுகளுக்கு முன், 1986ம் ஆண்டு, திருத்தந்தை, புனித 2ம் ஜான்பால் அவர்கள், செப்டம்பர்
20ம் தேதி, அசிசி நகருக்குச் சென்று, அங்கு பல்சமயத் தலைவர்களுடன் இணைந்து, உலக அமைதிக்காகச் செபித்ததைப் போல், தானும் இச்செவ்வாயன்று உலக அமைதி வேண்டி செபிப்பதற்காக அசிசி நகர்
செல்வதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஞாயிறன்று வழங்கிய மூவேளை செப உரையில் கூறினார்.
தான் மேற்கொள்ளும் இந்த செப முயற்சியில், உலகெங்கும் உள்ள பங்குகள், கத்தோலிக்க நிறுவனங்கள்,
துறவு இல்லங்கள், குடும்பங்கள் அனைத்திலும் உள்ளவர்கள், தன்னுடன் இணைந்து, உலக
அமைதிக்காக செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு விடுத்தார். திருத்தந்தையின் இந்த அழைப்பிற்குச்
செவிமடுத்து, வானொலி குடும்பத்தினராகிய நாம் அனைவரும், இந்த விவிலியத் தேடல் வேளையில், திருத்தையுடன்
இணைந்து, உலக அமைதிக்கென செபிப்போம்.
போரில்லா
உலகிற்காக திருத்தந்தையுடன் இணைந்து செபிக்கும் இவ்வேளையில், கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக, போரின் அனைத்து
கொடுமைகளையும் தாங்கிவரும் சிரியாவை சிறப்பாக எண்ணி, செபிக்க
கடமைப்பட்டுள்ளோம். கெரசேனர் பகுதியில், தீய ஆவியால் துன்புறுத்தப்பட்ட மனிதரை
இயேசு குணமாக்கிய புதுமையில் நாம் மேற்கொண்டுவரும் விவிலியத் தேடல்கள், கடந்த இரு
வாரங்களாக சிரியா நாட்டைப்பற்றிய சிந்தனைகளுடன் துவங்கின. இன்று மீண்டும் சிரியா
நம் சிந்தனைகளை நிரப்புகின்றன.
சிரியாவில்
கடந்த 5 ஆண்டுகளாக நிகழ்ந்துவரும் உள்நாட்டுப் போர், இன்னும்
சொல்லப்போனால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறுவதுபோல்,
சிறிதும், பெரிதுமாக உலகின் பல பகுதிகளில் நிகழ்ந்து
வரும் ‘மூன்றாம் உலகப் போர்’, ஒரு தீய சக்தியாக இவ்வுலகை ஆட்டிப்படைக்கிறது என்பதை நாம்
மறுக்க இயலாது. வன்முறை, சுயநலம் என்ற தீய ஆவிகளால் தூண்டப்பட்டுள்ள பலர்
தொடுத்துவரும் போர்கள், கெரசேனரில், தீய ஆவியால் துன்புறுத்தப்பட்ட மனிதரை நமக்கு நினைவுறுத்துவதால், போரையும், இந்தப் புதுமையையும் இணைத்துச்
சிந்திக்க இன்றையத் தேடலில் முயல்வோம்.
கடந்த
சனிக்கிழமை (செப்.17), வெளியான ஒரு காணொளிச் செய்தி, நம் தேடல் முயற்சிகளை இன்று துவக்கிவைக்கிறது.
நான் பார்த்த அந்தக் காணொளிச் செய்தி, என் மனதில் முள்ளென தைத்துள்ளது. "கல்லறையில்
வாழ்ந்துகொண்டிருக்கும் அலெப்போ நகர் குடும்பம்" (The Aleppo Family living in the cemetery) என்ற தலைப்பில் பிபிசி ஊடகத்தில் வெளியான அச்செய்தி, கெரசேனர் பகுதியில் இயேசு ஆற்றியப் புதுமையை நினைவுக்குக்
கொணர்ந்தது.
The Aleppo
Family living in the cemetery
தீய ஆவிகளால்
வதைக்கப்பட்டதால், கல்லறைகளை தன் உறைவிடமாகக் கொண்டு வாழ்ந்த
(மாற்கு 5,3) ஒருவரை, இயேசு குணப்படுத்தி, மீண்டும் மனித சமுதாயத்தில் இணைத்தார் என்று இப்புதுமையில் காண்கிறோம்.
ஆனால், சிரியாவில் நிகழ்வதோ, தலைகீழான கொடுமையாக உள்ளது. மனித சமுதாயத்தில் வாழ்ந்தவர்களை, போர் என்ற தீய ஆவி, கல்லறைகளில் வாழும்படி துரத்தியுள்ளதை, இக்காணொளிச் செய்தியில் காண்கிறோம். 40 வயதுள்ள ஒரு குடும்பத் தலைவியும், அவரது 10 வயது மகனும் கல்லறையில் அமர்ந்திருப்பதை இக்காணொளி
நமக்குக் காட்டுகிறது. ஆயிஷா அலி என்ற அக்குடும்பத்தலைவி, கல்லறைமேல் அமர்ந்தபடி, தங்கள் நிலையை இவ்விதம் கூறியுள்ளார்:
"வேறு
எந்த இடத்தையும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. குளிர்காலம் நெருங்கிவருவதால், வேறு எங்கு செல்வதென்று தெரியாமல், இங்கு வந்துள்ளோம். பார்க்கப்போனால், இதை ஓர் ஆசீர்வாதம் என்றே கருதுகிறோம். இந்த இடத்தை யாரும் தங்கள்
சொந்தமென்று உரிமை கொண்டாடப் போவதில்லை" என்று ஆயிஷா அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, அவரது மகனை, வீடியோ காமரா, நெருக்கமாகக் காட்டுகிறது. அகமது முகம்மது என்ற அந்த 10 வயது சிறுவன், மாற்றுக்கண் பார்வை கொண்டவர் என்பது தெரிகிறது. தன் மகனைப்பற்றி
ஆயிஷா அவர்கள் இவ்வாறு கூறுகிறார்:
"எங்கள்
வீட்டில் குண்டு விழுந்து, வெடித்தபோது,
அகமதுவின்
தலையில் பலமாக அடிபட்டது. மூளையில் இரத்தம் உறைந்து, மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதால், மற்றவர்கள் சொல்வதை அவனால் சரிவர புரிந்துகொள்ள முடியாது. தலையில்
அடிபட்டதால், அவனுக்கு மாற்றுக்கண் பார்வையும் வந்துவிட்டது" என்று ஆயிஷா அவர்கள் தன்
மகனின் நிலைக்கு காரணங்களை விளக்குகிறார்.
பக்ரீத்
பண்டிகையை முன்னிட்டு, செப்டம்பர் 12ம் தேதி முதல் சிரியாவில் அறிவிக்கப்பட்டுள்ள போர்
நிறுத்தத்தைப் பயன்படுத்தி, பல்வேறு உலக அமைப்புக்கள் அங்குள்ள
மக்களுக்கு உதவிகளை கொண்டு செல்கின்றன என்பதை செய்திகளில் வாசிக்கிறோம். இது குறித்து
ஆயிஷா அவர்கள் பேசும்போது, "இப்போது சிரியாவில் மக்களுக்கு
உதவிகள் வருகின்றன என்று சொல்கிறார்கள். ஆனால், கல்லறையில் இருக்கும் எங்களைத் தேடி யாரும் வருவார்களா என்று தெரியவில்லை"
என்று சொல்கிறார்.
அந்தத்
தாய் கூறிய சொற்கள், நம் உள்ளங்களைக் கீறி, இரணமாக்குகின்றன. ஆனால்,
இவற்றைச் சொல்லும்போது, அந்தத் தாயின் கண்களில் கண்ணீரோ, அவரது குரலில்
அழுகையின் தொனியோ இல்லாதது, நம்மை இன்னும் வேதனைபடுத்தி, ஓர்
ஆழமான உண்மையை நமக்கு உணர்த்துகிறது. அதாவது, கடந்த ஐந்தாண்டுகளாய் அந்நாட்டில் நிகழ்ந்துவரும்
உள்நாட்டுப் போரின் அழிவுகளை ஒவ்வொரு நாளும் கண்டவர்கள், இப்போது, அழிவையும், மரணத்தையும் கண்டு, கண்ணீர் வடிப்பதை நிறுத்தி
விட்டனர் என்பதே, அந்த வேதனையான உண்மை.
அந்த
அன்னை பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு சில காட்சிகள் திரையில் தோன்றுகின்றன.
அவர் தன் குடும்பத்திற்கு ரொட்டி தயாரிப்பது,
பாத்திரங்களைக் கழுவுவது, தலையில் நீர் சுமந்து வருவது போன்ற இக்காட்சிகளுடன், அவரது மகன்
ஒரு கல்லறை மீது அமர்ந்து, பூனைக்குட்டியுடன் விளையாடுவதையும்
நாம் காண்கிறோம். கல்லறை, அவர்களுக்கு, மிகச் சாதாரணமான உறைவிடமாக மாறிவிட்டது என்பதை, இக்காட்சிகள் சொல்லாமல் சொல்கின்றன.
சிரியாவின் பல நகரங்கள் இன்று பெயரளவில் மட்டும் நகரங்களாக
உள்ளனவே தவிர, அவை அனைத்தும் உண்மையில் 'நரகங்களாக' மாறிவிட்டன. இந்நகரங்களில் மிக
அதிக அளவு அழிவைச் சந்தித்துள்ள நகரம், அலெப்போ. நரகமாக மாறிவிட்ட அலெப்போவில், வாழமுடியாத எளிய குடும்பங்களில் ஒன்று, இப்போது கல்லறையில் தஞ்சம் புகுந்துள்ளது. சிரியாவின் உள்நாட்டுப்
போர், அந்நாட்டின் பாதிப் பகுதியை சிதைத்து, தரைமட்டமாக்கிவிட்டதால்,
அந்நாடு முழுவதையுமே, பரந்து விரிந்த ஒரு கல்லறை என்று சொன்னாலும் பொருந்தும்.
A family
walks on empty streets of Aleppo
அதேபோல், மத்தியக் கிழக்குப் பகுதியில் உள்ள சில நாடுகளிலும், ஆப்ரிக்காவின் சில நாடுகளிலும் போர்கள் பல ஆண்டுகளாக நீடித்துவருவதால், அந்நாடுகளை விட்டு, கடல் வழி தப்பித்துச் செல்ல முயலும்
பல ஏழைகளுக்கு, அந்தக் கடலே கல்லறையாகிவிடுவதை நாம் அறிவோம்.
அந்தக் குடும்பத்தலைவி ஆயிஷா அவர்கள் கூறுவதுபோல், கல்லறைகளை
சொந்தம் கொண்டாட யாரும் படையெடுத்து செல்லமாட்டார்கள் என்பது, வேதனையான உண்மை.
'அரேபிய வசந்தம்' என்ற ஓர் உன்னதமான அறைகூவலுடன், 2011ம் ஆண்டு, மார்ச் 15ம் தேதி, சிரியாவில் ஆரம்பமான உள்நாட்டுப்
போர், கடந்த 66 மாதங்களுக்கும் மேலாகத் தொடர்கின்றது.
இது, வெறும் உள்நாட்டுப் போராக மட்டும் நிகழ்ந்திருந்தால், ஒருவேளை, விரைவில், ஏதோ ஒரு தீர்வு வந்திருக்கலாம். ஆனால், இந்தப் போரில், இரஷ்யா, அமெரிக்க ஐக்கிய நாடு, பிரித்தானியா, ஐரோப்பா என்ற பல சக்தி வாய்ந்த நாடுகள் நுழைந்துவிட்டதால், யார் பெரியவர் என்ற பலப் பரீட்சை உருவாகியுள்ளது. அரசுகளின் பெயரால்
போரில் ஈடுபட்டுள்ளவர்கள் போதாதென்று, எந்த அரசாலும் கட்டுப்படுத்த முடியாத
சுயநல சுறாமீன்கள், சிரியாவில் ஓடும் இரத்த வெள்ளத்தில் நீந்தி
மகிழ்கின்றன. ஆம், ஆயுத விற்பனை, மனித வர்த்தகம் என்ற பல்வேறு தீய சக்திகளின் தொழிற்சாலையாக சிரியா
மாறிவிட்டதால், இந்தப் போர் இன்னும் தொடர்கிறது.
சிரியாவின்
உள்நாட்டுப் போர் துவங்கிய ஒரு சில நாட்களில்,
(மார்ச் 29, 2011) National
Catholic Reporter என்ற இணையத்தள செய்தித்தாளில், "Expelling
the demons of war" அதாவது, "போர் என்ற பேய்களை விரட்டுதல்" என்ற தலைப்பில், எழுத்தாளரும், அருள் பணியாளருமான John Dear என்பவர் பகிர்ந்துள்ள கருத்துக்கள்
நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. பாலஸ்தீனாவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், Ched Myers என்ற விவிலிய அறிஞர் வழங்கிய ஓர் உரையிலிருந்து, John Dear அவர்கள் பல கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
கெரசேனர்
பகுதியில் தீய ஆவி பிடித்த மனிதரை இயேசு குணமாகிய புதுமையையும், போரில் ஈடுபடும் பல வல்லரசு நாடுகளையும், குறிப்பாக, அமெரிக்க ஐக்கிய நாட்டையும் இணைத்து, Myers அவர்கள் எழுதியுள்ள ஒரு நூலின் தலைப்பு: “Binding the Strong Man: A Political Reading of Mark’s
Story of Jesus” "சக்திவாய்ந்த மனிதரைக் கட்டிப்போடுதல்:
மாற்கு கூறும் இயேசுவின் கதையை அரசியல் கண்ணோட்டத்துடன் வாசித்தல்". Ched Myers, John Dear இருவரும், கெரசேனர் புதுமையுடன், போர்களை இணைத்து பகிர்ந்துகொள்ளும் கருத்துக்களை அடுத்தத் தேடலில்
தொடர்ந்து சிந்திப்போம்.
No comments:
Post a Comment