06 September, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 38

Crazy Bill: The Gerasene Demoniac Revisited – a poem by Tim Melton

செப்டம்பர் 5, இத்திங்களன்று, சிரியாவில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புக்களில் 48 பேர் கொல்லப்பட்டுள்ளனர், இன்னும் பலர் காயமடைந்துள்ளனர். சிரியாவிலும், அதன் அண்டை நாடுகளான துருக்கியிலும், ஈராக்கிலும் நிகழும் குண்டுவெடிப்புக்கள் நமக்கு தினசரி செய்திகளாகிவிட்டன என்பதால், அவை நம் கவனத்தை அதிகம் ஈர்ப்பதில்லை. இருந்தாலும், சிலவேளைகளில், இந்த வன்முறைகள் எவ்வாறு நிகழ்ந்தன என்று கூறப்படும் ஒரு சில குறிப்புக்கள் நம்மை பாதிக்கின்றன. அண்மையில் என்னைப் பாதித்த ஒரு சில வேதனைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
ஆகஸ்ட் 20ம் தேதி, துருக்கி நாட்டின், காசியான்டெப் (Gaziantep) என்ற ஊரில் திருமண விழா ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த விழாக் கூட்டத்தில் ஏற்பட்ட ஒரு குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவரால் இத்தாக்குதல் நடைபெற்றது என்றும், தன்னைச் சுற்றி குண்டுகளைக் கட்டியிருந்தவர், 12 அல்லது 14 வயதுள்ள ஒரு சிறுவனாக இருக்கக்கூடும் என்றும் செய்திகள் வெளியாயின. அச்சிறுவன் தானாகவே அந்த குண்டுகளை வெடிக்கச் செய்தாரா, அல்லது, வேறொருவர் தூரத்திலிருந்து அதை வெடிக்கச் செய்தாரா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.
இத்தாக்குதலுக்கு அடுத்தநாள், ஆகஸ்ட் 21ம் தேதி, ஞாயிறன்று, ஈராக் நாட்டின் கிர்குக் (Kirkuk) நகரில், 11 வயதுள்ள ஒரு சிறுவனின் உடலைச் சுற்றி கட்டப்பட்டிருந்த குண்டுகளை காவல்துறையினர் அகற்றினர் என்று மற்றொரு செய்தி வெளியாகியிருந்தது. இவ்விரு செய்திகளிலும் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழு ஒன்று தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமிய அரசு என்று தன்னையே அழைத்துக்கொள்ளும் அடிப்படைவாதக் குழுவிடம் சிக்கியுள்ள குழந்தைகள், குண்டு தயாரிக்க பயிற்றுவிக்கப்படுகின்றனர் என்ற செய்தி, செப்டம்பர் 5, இத்திங்களன்று வெளியானது.
அடிப்படைவாதக் குழுவினர், தங்கள் வெறிச் செயல்களுக்கு, சிறுவர், சிறுமியரைப் பயன்படுத்துகின்றனர் என்று கேள்விப்படும்போது, 'இவர்களெல்லாம் மனிதப் பிறவிகள்தாமா?' என்ற கேள்வி எழுகிறது. இவ்வளவு கொடூரமான வெறிச் செயல்களில் சிறுவர், சிறுமிகளையும் பயன்படுத்தும் இவர்களை ஆட்டிப்படைப்பது, நிச்சயம் மத உணர்வுகள் அல்ல; வேறு தீய சக்திகளே என்பதை யாரும் புரிந்துகொள்ளமுடியும்.

வெறி உணர்வுகளையும், வன்முறைகளையும் உலகில் பரப்புவதால் இலாபம் அடைவது, ஆயுதங்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களே என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பலமுறை கூறியுள்ளார். அமெரிக்க ஐக்கிய நாட்டின் காங்கிரஸ்அவை உறுப்பினர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டு, மார்ச் 24ம் தேதி, ஆற்றிய உரையில், ஆயுதங்களின் உருவாக்கம், வர்த்தகம் இவை குறித்து பேசினார்:
உலகெங்கும் நடைபெறும் ஆயுதம் தாங்கிய மோதல்களை எண்ணிப் பார்க்கிறோம். அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் ஆயுதங்கள் ஏன் இவ்வுலகில் இன்னும் விற்பனை செய்யப்படுகின்றன? ஒரே ஒரு பதில் மட்டுமே உள்ளது. பணம். அப்பாவி மக்களின் இரத்தத்தில் தோய்ந்த பணம். ஆயுத உற்பத்தியையும், வர்த்தகத்தையும் குறித்து ஒன்றும் பேசாமல் அமைதி காப்பது, நம்மையும் இக்குற்றத்திற்கு துணைபோகச் செய்துவிடும்.
தீய ஆவி பிடித்த ஒருவர், கெரசேனர் பகுதி கல்லறைகளிலிருந்து வெளியே வந்து, இயேசுவைச் சந்தித்தார் என்ற நிகழ்வைச் சிந்திக்கும்போது, வெறுப்பு என்ற தீய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டுள்ள அடிப்படைவாதக் குழுவினரையும், அவர்களுக்குப் பின்புலத்தில் இருந்து மறைமுகமாகச் செயலாற்றும் 'மரண வர்த்தகர்களான' ஆயுத உற்பத்தியாளர்களையும் இறைவன் குணமாக்கவேண்டும் என்ற வேண்டுதலுடன் இன்றைய விவிலியத் தேடலைத் தொடர்வோம்.

கல்லறைகளை தன் உறைவிடமாகக் கொண்டு வாழ்ந்த ஒரு மனிதரை, மீண்டும் மனிதர்கள் நடுவே வாழவைப்பதற்காக, இயேசு இப்புதுமையை ஆற்றுகிறார். இயேசு, தனியொருவரை மட்டும் குணப்படுத்துவது கிடையாது; மாறாக, அப்புதுமை வழியே, சூழ இருந்த சமுதாயத்திலும் மாற்றங்களைக் கொணர்ந்தார் என்று இதுவரை சிந்தித்து வந்துள்ளோம். தீய ஆவி பிடித்தவரைக் குணமாக்கியப் புதுமையிலும், கெரசேனர் பகுதியில் மாற்றங்கள் நிகழ்ந்தன. அந்த மாற்றங்களை, நற்செய்தியாளர் மாற்கு இவ்விதம் விவரித்துள்ளார்:
மாற்கு நற்செய்தி 5: 6-13
தீய ஆவி பிடித்தவர் தொலையிலிருந்து இயேசுவைக் கண்டு ஓடிவந்து அவரைப் பணிந்து, “இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? கடவுள் மேல் ஆணை! என்னை வதைக்க வேண்டாம் என்று உரத்த குரலில் கத்தினார். ஏனெனில் இயேசு அவரிடம், “தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ என்று சொல்லியிருந்தார். அவர் அம்மனிதரிடம், “உம் பெயர் என்ன?” என்று கேட்க அவர், “என் பெயர் இலேகியோன், ஏனெனில் நாங்கள் பலர் என்று சொல்லி, அந்தப் பகுதியிலிருந்து தங்களை அனுப்பிவிட வேண்டாமென்று அவரை வருந்தி வேண்டினார்.
அங்கே மலைப்பகுதியில் பன்றிகள் பெருங் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. நாங்கள் அப்பன்றிகளுக்குள் புகும்படி எங்களை அங்கே அனுப்பிவிடும் என்று தீய ஆவிகள் அவரை வேண்டின. அவரும் அவற்றுக்கு அனுமதி கொடுத்தார். பின் தீய ஆவிகள் வெளியேறி, பன்றிகளுக்குள் புகுந்தன. ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள் அடங்கிய அந்தக் கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து, வீழ்ந்து மூழ்கியது.

ஒரு மனிதரைக் காப்பாற்ற 2000 பன்றிகளை இழக்கவேண்டுமா? இக்கணக்கு சரியா, தவறா என்பதைத் தீர்மானிப்பது, நாம் கொண்டிருக்கும் கண்ணோட்டம். நல்லது ஒன்று நடக்க, எவ்வளவும் தியாகம் செய்யலாம் என்பது ஒரு கண்ணோட்டம். எள்ளளவு தியாகம் செய்தாலும், பெருமளவு இலாபம் கிடைக்க வேண்டும் என்பது மற்றொரு கண்ணோட்டம். ஒன்று கருணைக் கண்ணோட்டம், மற்றொன்று வியாபாரக் கண்ணோட்டம். இந்த வியாபாரக் கண்ணோட்டமே, ஒரு தனி மனிதரின் விலை, 2000 பன்றிகளா என்று கணக்கு பார்க்க வைக்கிறது.

அந்த மனிதருக்குக் கிடைத்த விடுதலையைக் கண்டு, அவரது குடும்பத்தினர் நிம்மதி அடைந்திருக்கலாம். ஆனால், ஊரிலிருந்த மற்றவர்கள் தங்கள் நிம்மதியை இழந்தனர். அவர்கள் அச்சமுற்றனர், இயேசுவை ஊரைவிட்டு போய்விடுமாறு வேண்டிக்கொண்டனர் என்று நற்செய்தி கூறுகிறது.
மாற்கு நற்செய்தி 5: 14-20
பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்களோ ஓடிப்போய் நகரிலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தார்கள். நடந்தது என்னவென்று பார்க்க மக்கள் வந்தனர். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பேய் பிடித்திருந்தவர், அதாவது இலேகியோன் பிடித்திருந்த அவர், ஆடையணிந்து அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு அச்சமுற்றார்கள். நடந்ததைப் பார்த்தவர்கள் பேய் பிடித்தவருக்கும் பன்றிகளுக்கும் நேரிட்டதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் பகுதியை விட்டுப் போய்விடுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள்.

மனித உயிருக்கு விலை நிர்ணயிப்பது, மனிதர்களைவிட பணத்திற்கு, அதிக முக்கியத்துவம் தருவது, நமது சமுதாயத்தை மீண்டும் கல்லறைகளுக்குள் புதைத்துவிடும் என்பதற்கு, 2009ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கொடூரம், எச்சரிக்கையாக அமைந்துள்ளது. மெக்ஸிகோ நகருக்கருகே நடந்த இந்நிகழ்வு, நம்மை நிலைகுலையச் செய்கிறது. நம் விசுவாசத்திற்கு மீண்டும் ஒரு சவாலைத் தருகிறது.
போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விடுதலை பெற விழைவோருக்கு மறுவாழ்வு தரும் ஒரு மையம், மெக்சிகோ நகருக்கருகே அமைந்துள்ளது. 2009ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் ஒரு நாள், பட்டப்பகலில், துப்பாக்கி ஏந்திய இரண்டு அல்லது மூன்று பேர், அந்த மறுவாழ்வு மையத்தில் நுழைந்தனர். போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விடுதலை பெற முயற்சிகளை மேற்கொண்டிருந்த 17 இளைஞர்களை அந்த மையத்தின் வாசலுக்கு கொண்டு வந்தனர். வரிசையாக அவர்களை நிறுத்தி, ஒருவர் பின் ஒருவராகச் சுட்டுக்கொன்றனர். போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விடுதலை பெற விழைந்தவர்களுக்கு, நிரந்தர விடுதலை தந்துவிட்ட வெற்றிக் களிப்புடன் அவர்கள் மறைந்தனர். காவல் துறையினர் கொலையாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை என்று அந்நாட்களில் வெளியான செய்திகள் கூறின. அவர்கள் இன்றுவரை கண்டுபிடிக்கப்பட்டிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.
ஆயுத வர்த்தகம் போலவே, போதைப்பொருள் வர்த்தகமும் பல்லாயிரம் கோடி டாலர்கள் மூலதனத்துடன் நடத்தப்பட்டு வருகிறது என்பது, அனைவரும் அறிந்த உண்மை. அரசு அதிகாரிகளின் ஆதரவுடன் நடைபெறும் இத்தொழிலால் அழியும் ஆயிரமாயிரம் இளையோரின் ஒரு பிரதிநிதியாக, கெரசேனர் கல்லறைகளிலிருந்து வெளியேறிய மனிதரை நாம் எண்ணிப்பார்க்கலாம். கல்லறையிலிருந்து வெளியேறியவரை மீண்டும் மனிதராக மாற்றினார் இயேசு. அவர் மனிதராக மாறியதால், 2000 பன்றிகளை இழந்தோம் என்ற வருத்தம், ஊர் மக்களுக்கு. எனவே, இதுபோன்ற நன்மைகள் தொடராமல் இருப்பதற்காக, அவர்கள் இயேசுவை அங்கிருந்து போய்விடுமாறு வற்புறுத்தினர்.

கெரசேனரில் நடந்தது, இன்றும் தொடர்கிறது. போதைப்பொருள் பயன்பாடு போன்ற தீயபழக்கங்களிருந்து இளையோர் விடுதலை அடைவது, போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு வருத்தமாக இருக்கும். இளையோர் அந்த விடுதலையைப் பெறுவதற்கு உதவும் பலரை, போதைப்பொருள் வர்த்தகர்கள், தங்கள் ஊரைவிட்டு போகச் சொல்வார்கள், அப்படிப் போகாமல், அந்த நல்ல உள்ளங்கள், தங்கள் சேவைகளைத் தொடர்ந்தால், அவர்களைக் கொல்லவும் தயங்கமாட்டார்கள், இந்த மரண வியாபாரிகள்.

இந்தப் புதுமையின் இறுதி வரிகள் நம்பிக்கை தருகின்றன. பொதுவாக, இயேசுவிடம் குணம் பெற்றவர்கள், தங்கள் வாழ்வைத் தொடர்ந்தனர் என்பதையே நற்செய்தியாளர்கள் பதிவு செய்துள்ளனர். இந்தப் புதுமையில் மட்டுமே, குணம் பெற்றவர், இயேசுவைத் தொடர விழைவதாகக் கூறுகிறார். அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளாத இயேசு, அதற்கு மாறாக, குணமடைந்தவரை, நற்செய்திப் பணியாளராக மாற அழைக்கிறார்.
அதேபோல், தங்கள் தீய பழக்கங்களிலிருந்து விடுதலை பெற்ற பலர், மற்றவர்களுக்கு தங்கள் விடுதலையைப் பற்றி எடுத்துச்சொல்லி, பலரையும் நல்வழிப்படுத்துவதை, தங்கள் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். நாம் இப்புதுமையின் இறுதிப் பகுதியில் வாசிக்கும் நம்பிக்கை வரிகள் இவையே:
மாற்கு நற்செய்தி 5: 18-20
இயேசு படகில் ஏறியதும் பேய் பிடித்திருந்தவர் தாமும் அவரோடு கூட இருக்க வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார். ஆனால் அவர் அதற்கு இசையாமல், அவரைப் பார்த்து, “உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும் என்றார். அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி நாட்டில் அறிவித்து வந்தார். அனைவரும் வியப்புற்றனர்.
Gerasene demoniac saved

செப்டம்பர் 4ம் தேதி, அன்னை தெரேசா புனிதராக உயர்த்தப்பட்ட நாள். செப்டம்பர் 5, திங்களன்று, புனித அன்னை தெரேசாவின் திருநாள். இவ்வேளையில், அந்த அன்னை உருவாக்கிய பிறரன்பு மறைப்பணியாளர்கள் துறவு சபையைச் சேர்ந்த நான்கு அருள் சகோதரிகளும், அவர்களுடன் உழைத்த 12 பணியாளர்களும் சரியாக 6 மாதங்களுக்கு முன், அதாவது, மார்ச் 4ம் தேதி, ஏமன் நாட்டில், கொலையுண்ட நிகழ்வை நினைவில் கொணர்கிறோம். அவர்கள் கொல்லப்பட்டதற்கு ஒரே காரணம், அவர்கள் இறைவனின் கருணைக்குச் சாட்சிகளாக வாழ்ந்தனர் என்பது ஒன்றே.
கல்லறைகளில் வாழ்ந்த ஒருவரை, இயேசு மீண்டும் மனிதராக மாற்றிய புதுமையைச் சிந்திக்கும்போது, இத்தகையக் கல்லறை வாழ்வு வாழும் மனிதர்களுக்குப் பணியாற்றும் அனைத்து அன்புள்ளங்களுக்காகவும் இறைவனுக்கு நன்றி சொல்வோம். மனிதகுலத்தில் பகமை, வெறுப்பு, பழிக்குப் பழி இவற்றை வளர்த்து, உலகம் முழுவதையும் கல்லறையாக்கி, அக்கல்லறைகளில், இரவும், பகலும், ஓலமிட்டு வாழும் மனிதர்களை மூலதனமாக வைத்து, இலாபம் சம்பாதிக்கும் மரண வியாபாரிகளை ஆட்டிப்படைக்கும் தீயசக்திகளை இயேசு விரட்டியடிக்க வேண்டுமென மன்றாடுவோம்.


No comments:

Post a Comment