Time to Change
கடந்தவார
விவிலியத் தேடலின் துவக்கத்தில் சிரியா, ஈராக், துருக்கி ஆகிய நாடுகளில் சிறுவர், சிறுமியரை வன்முறைகளில் ஈடுபடுத்தும் தீய சக்திகளைப் பற்றி நாம்
சிந்தித்தோம். அடிப்படைவாதக் குழுவினர், தங்கள் கொடூரமான வெறிச் செயல்களுக்கு, சிறுவர், சிறுமியரைப் பயன்படுத்துகின்றனர்
என்று கேள்விப்படும்போது, 'இவர்களெல்லாம் மனிதப் பிறவிகள்தாமா?' என்ற கேள்வி நமக்குள் எழுவதை உணர்ந்தோம். தங்கள் வெறிச் செயல்களில்
சிறுவர், சிறுமிகளை பயன்படுத்தும் இவர்களை ஆட்டிப்படைப்பது, நிச்சயம் மத உணர்வுகள் அல்ல; வேறு தீய
சக்திகளே என்பதையும் சிந்தித்தோம்.
இன்று, நாம் இந்தத் தேடலில் ஈடுபடும் வேளையில், தென்னிந்தியாவில், தமிழ்நாடு, கர்நாடகா
மாநிலங்களுக்கு இடையே நிகழ்ந்துவரும் வன்முறைகள் நம்மை கலங்க வைத்துள்ளன. மத வெறியைப்
போலவே, இங்கு மொழிவெறி மனிதர்களை ஆட்டிப்படைப்பதைக்
கண்டு வருந்துகிறோம். கும்பலாகக் கூடிவந்தால்,
அங்கு சிந்திக்கும்
திறன் விடைபெற்றுப் போய்விடுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. காவிரி நீர் பங்கீடு பிரச்சனை,
இரு மாநிலங்களுக்கு இடையே, நல்ல முறையில் தீரவேண்டும் என்ற வேண்டுதலுடன், இன்றைய நம்
தேடலைத் துவக்குகிறோம்.
தீய ஆவிகளால்
வதைக்கப்பட்டு, கெரசேனர் பகுதி கல்லறைகளில் வாழ்ந்த ஒருவரை, இயேசு குணமாக்கிய புதுமையில் நம் தேடல் பயணம் தொடர்கிறது. தங்களால்
எவ்வகையிலும் கட்டுப்படுத்தமுடியாத ஒருவரை, வேற்றூரிலிருந்து வந்த இயேசு என்ற இளம்
போதகர் குணமாக்கியுள்ளார் என்பதை அறிந்து, அவ்வூர் மக்கள் மகிழ்ந்திருக்க வேண்டும்,
இல்லையா? இப்புதுமையைக் கண்ட மக்கள், மேலும் பலரை இயேசுவிடம் அழைத்துவந்து, அவர்களையும் குணமாக்குமாறு
மன்றாடியிருப்பர் என்று நாம் எதிர்பார்க்கும் வேளையில், அவர்களோ, இயேசுவை அங்கிருந்து போய்விடுமாறு
வேண்டிக்கொண்டனர் என்று நற்செய்தியில் கூறப்பட்டுள்ளதைக் கேட்டு, அதிர்ச்சி
அடைகிறோம்.
'இயேசுவே, போய்விடும்' என்ற இந்த வேண்டுதல், இப்புதுமையில் இருமுறை இடம்பெற்றுள்ளது. முதல்முறை இந்த வேண்டுதல், தீய ஆவியிடமிருந்தும், இரண்டாம் முறை, மக்களிடமிருந்தும் எழுவதை, இப்பகுதியில் காண்கிறோம். இயேசு கெரசேனர்
பகுதிக்கு வந்து சேர்ந்ததும், அவரை அடையாளம் கண்டுகொண்ட தீய ஆவி, "இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை?... என்னை வதைக்க வேண்டாம்" (மாற்கு 5:7) என்று அதிகாரத் தொனியில் பேசுகிறது.
தீய ஆவி விடுத்த அந்த விண்ணப்பத்தின் பொருள்,
'இயேசுவே போய்விடும்' என்பதுதானே? தீய ஆவியின் வேண்டுதலைக் கேட்க
மறுத்த இயேசு, அதே விண்ணப்பம், மீண்டும் ஒருமுறை, மக்களிடமிருந்து வந்தபோது, அவர்களுக்குச் செவிமடுத்தார். அவ்விடம்விட்டு அகன்றார்.
மக்கள்
விண்ணப்பம் விடுத்தச் சூழல், மாற்கு, லூக்கா என்ற இரு நற்செய்திகளிலும் ஒருசில வேறுபாடுகளுடன் பதிவு
செய்யப்பட்டுள்ளது:
மாற்கு
5: 15-17
அவர்கள்
இயேசுவிடம் வந்தபோது, பேய் பிடித்திருந்தவர், ... ஆடையணிந்து அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருப்பதைக்
கண்டு அச்சமுற்றார்கள். நடந்ததைப் பார்த்தவர்கள் பேய் பிடித்தவருக்கும் பன்றிகளுக்கும்
நேரிட்டதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் பகுதியை விட்டுப்
போய்விடுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள்.
லூக்கா
8: 35-37
நடந்தது
என்ன என்று பார்க்க மக்கள் இயேசுவிடம் வந்தனர்; பேய்கள் நீங்கப்பெற்றவர் ஆடை அணிந்து அறிவுத் தெளிவுடன் இயேசுவின்
காலடியில் அமர்ந்திருப்பதைக் கண்டு அஞ்சினர். நடந்ததைப் பார்த்தவர்கள் பேய் பிடித்தவர்
எப்படி விடுவிக்கப்பட்டார் என்பதை அவர்களுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது கெரசேனரைச்
சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரண்டு வந்திருந்த மக்கள் அனைவரும் அச்சம் மேலிட்டவர்களாய்த்
தங்களை விட்டுப் போகுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள்.
அம்மக்களை
அச்சம் சூழ்ந்தது என்பதை, மாற்கு ஒரு முறையும்,
லூக்கா இருமுறையும்
கூறியுள்ளனர். கெரசேனர் மக்கள் விடுத்த இந்த விண்ணப்பத்திலும் ஒரு சிறு வேறுபாடு பதிவு
செய்யப்பட்டுள்ளது. இந்த வேறுபாடு நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. மாற்கு நற்செய்தியில், "தங்கள் பகுதியைவிட்டுப் போய்விடுமாறு இயேசுவை
வேண்டிக்கொண்டார்கள்" (மாற். 5:17) என்றும், லூக்கா நற்செய்தியில், "தங்களை விட்டுப் போகுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள்"
(லூக்.
8:37) என்றும்
கூறப்பட்டுள்ளன. தங்கள் பகுதியைவிட்டுப் போகச் சொல்வதற்கும், தங்களை விட்டுப்
போகச் சொல்வதற்கும் இடையே உள்ள வேறுபாடுகள், நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.
தங்கள்
பகுதியைவிட்டுப் போகச் சொல்வது, ஒரு தற்காலிகமான விண்ணப்பம்
போல் தெரிகிறது. ஆனால், தங்களை விட்டுப் போய்விடும்படி மக்கள் இயேசுவை
வேண்டிக்கொள்வது, நிரந்தரமாக தங்கள் வாழ்விலிருந்து அவரைப்
போய்விடும்படி சொல்வதைப்போல் ஒலிக்கிறது.
இயேசுவைப்
போய்விடுமாறு அவர்கள் வேண்டிக்கொண்டதற்கு, இரு காரணங்களை சுட்டிக்காட்டுகின்றனர், சில விவிலிய விரிவுரையாளர்கள். முதல் காரணம், நாம் கடந்த வாரம் சிந்தித்ததைப் போல், ஒரு மனிதருக்காக 2000 பன்றிகளை இழப்பதா என்ற கணக்கு. மற்றொரு காரணம், குணமான அந்த மனிதரில் அவர்கள் கண்ட மாற்றங்களும், அதனால், எழுந்த அச்சங்களும். முதல் காரணம், வியாபாரக் கண்ணோட்டம் என்றும், இரண்டாவதை, வாழ்வுக் கண்ணோட்டம்
என்றும் சொல்லலாம்.
பல ஆண்டுகளாக
அவர்கள் பார்த்துப் பழகிப்போயிருந்த ஒரு மனிதருக்கும், குணமடைந்தபின், முற்றிலும் உடையணிந்து, இயேசுவின் காலடியில் அமர்ந்திருந்த புதுமனிதருக்கும் இடையே அவர்கள்
கண்ட பெரும் மாற்றம், அவர்களுக்கு அச்சத்தை உருவாக்கியது. ஒரு
கோணத்தில் பார்த்தால், அந்த மனிதருக்கு உண்டான நல்ல மாற்றத்தைக் கண்டு, அவர்கள்
மகிழ்ந்திருக்க வேண்டும். அதற்குப்பதிலாக, அவர்கள் ஏன் அச்சமுற்றனர் என்ற கேள்வி
எழுகிறது. அதையொத்த மாற்றங்கள், தங்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டால், வாழ்வு தலைகீழாக மாறிவிடுமோ என்ற அச்சம் அது. எனவே, அவர்கள் இயேசுவைப் போய்விடும்படி வேண்டிக்கொண்டனர் என்று, ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் விளக்கம் தருகின்றனர்.
வியாபாரக்
கண்ணோட்டத்தின் அடிப்படையில், தங்கள் பகுதியைவிட்டுப் போகுமாறு அவர்கள்
விடுத்த வேண்டுதலை, தற்காலிகமான விண்ணப்பமாகக் கருதலாம். தாங்கள் இழந்த பொருளை, அதாவது, பன்றிகளை, மீண்டும் அவர்கள் வேறுவழிகளில்
அடைந்துவிட முடியும். தங்கள் வாழ்வில், பெரும் மாற்றங்கள் ஏதும் இல்லாமல்,
முன்போல் தொடர முடியும். இயேசு மீண்டும் தங்கள் பகுதிக்கு வருவதற்கும் அவர்கள் அனுமதி
வழங்கக்கூடும். எனவேதான் அவர்கள் விடுத்த விண்ணப்பம் தற்காலிகமானது என்று
கூறினோம். ஆனால், வாழ்வுக் கண்ணோட்டத்தில், தங்களை
விட்டுப் போகுமாறு எழுந்த வேண்டுதல், நிரந்தரமானது. அதாவது, இயேசு கொணரும் முழுமையான மாற்றங்கள் வேண்டாம் என்ற எண்ணத்துடன், அவரைத் தங்களைவிட்டுப் போகச்சொல்லும் விண்ணப்பம் இது.
இரண்டாவது
கண்ணோட்டத்தை நம் வாழ்வுடன் தொடர்புபடுத்திச் சிந்திக்கலாம். 'இயேசுவே, போய்விடும்' என்றோ, 'இயேசுவே, என்னைத் தனியாக இருக்கவிடும்' (Jesus, leave me alone) என்றோ, நாம் எத்தனைமுறை விண்ணப்பித்துள்ளோம்!
'போய்விடும்' என்றோ, 'தனியே விடும்' என்றோ நாம் கூறுவதற்கு, ஒரு முக்கிய காரணம், மாற்றங்களைக் கண்டு நாம்
கொள்ளும் அச்சம்.
How to Change Your Thinking
மாறவேண்டுமே
என்று நமக்குள் எழும் அச்சத்தைப்பற்றி எண்ணிப்பார்க்க, பரிணாம வளர்ச்சியை மையப்படுத்தி சொல்லப்படும் ஓர் உவமை நமக்கு உதவும்.
'மோனோ செல்' அதாவது, ஒரு நுண்ணுயிர் என்ற வடிவத்திலிருந்து, படிப்படியாக வளர்ந்து, மனிதர் என்ற நிலையை அடைய, உயிரினங்கள் மேற்கொண்ட மாற்றமே, பரிணாம வளர்ச்சியென்று
சொல்லப்படுகிறது. அந்த வளர்ச்சியில், ஒவ்வொரு நிலையிலிருந்தும் அடுத்த நிலைக்கு மாறுவதற்கு
எழுந்த தயக்கம், கலக்கம், பயம் இவற்றை,
இவ்வுவமை கூறுகிறது:
நீருக்குள்
சுகமாக மூழ்கிக்கிடந்த ஓருயிர் வடிவங்களிடம், 'மாறுங்கள்' என்ற அந்தக் குரல் இடியென முழங்கியது. புழுக்கள் தோன்றின.
"இங்கேயே இருப்போம். சேறும், சகதியும் சுகமாக உள்ளன. வேறெங்கும்
போகத் தேவையில்லை" என்று புழுக்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டன. ஆனால், அந்தக் குரல் அவற்றை விடுவதாகத் தெரியவில்லை. 'மாறுங்கள்' என்று தொடர்ந்து முழங்கியது அந்தக்
குரல். "ஐயோ, வேண்டாம். எங்களை விட்டுவிடுங்கள்.
நாங்கள் இங்கே சுகமாகவே இருக்கிறோம்" என்று புழுக்கள் கெஞ்சின. ஆனாலும், புழுக்களுக்கு உள்ளிருந்து தொடர்ந்து ஒலித்த அந்தக் குரல், மாறச்
சொல்லி அழைத்தது.
புழுக்கள்
மாறி, மீன்கள், பறவைகள், மிருகங்கள் தோன்றின. நான்கு கால்களை
நிலத்தில் ஊன்றி நின்ற மிருகங்கள், தாங்கள் பாதுகாப்புடன் இருப்பதாக
உணர்ந்தன. ஆனால், மிருகங்களுக்கு உள்ளிருந்து அந்தக்
குரல் மீண்டும், மீண்டும் ஒலித்தது... 'மாறுங்கள், எழுந்து நில்லுங்கள்' என்று கட்டளையிட்ட அந்தக் குரலைக் கேட்டு, மிருகங்கள் நிமிர்ந்து நின்றன. மனிதர்கள் தோன்றினர்.
உடலளவில்
மனிதர்கள் என்ற நிலையை அடைந்தாலும், எண்ணங்களில், உணர்வில், ஆன்மாவில் ஒவ்வொரு நாளும் மாற்றங்களைச்
சந்திக்க மனிதர்களாகிய நாம் அழைக்கப்படுகிறோம். ஒவ்வொரு மாற்றமும் அடுத்த
உயர்நிலையை அடைய நமக்குத் தரப்படும் அழைப்பு. இந்த அழைப்பு, இறைவனிடமிருந்து வருகிறது என்று அனைத்து உண்மையான மதங்களும் சொல்லித்
தருகின்றன. ஒவ்வொருநாளும் மாறச் சொல்லி நம்மை அழைக்கும் இறைவனைக் கண்டு பயந்து விலகிச்செல்கிறோம்,
அல்லது, அவரை, நம்மைவிட்டுப் போய்விடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நாம்
இருந்த இடத்திலேயே, இருந்த நிலையிலேயே, சுகம் கண்டவர்களாய், மாற்றத்தை வெறுத்து வாழ்வதை, ஒருவகையில் பார்க்கப்போனால், தீய ஆவியால்
கட்டப்பட்டவர்களாக உருவகிக்கலாம். Rosa
Luxemburg என்ற சிந்தனையாளர், நம் நிலையை இவ்விதம் சித்திரிக்கிறார்: "அசையாமல் நிற்பவர்கள், தங்களைக் கட்டிப் போட்டிருக்கும் சங்கிலியை உணர முடியாது"
“Those
who do not move, do not notice their chains.” ― Rosa Luxemburg
நம்மைப்
பிணைத்திருக்கும் அச்சம், தயக்கம் என்ற சங்கிலிகளை உடைத்து, நம்மை மாற்றவரும் இறைவனை நாம் வரவேற்போம். கெரசேனர் ஊர் மக்கள்
இயேசுவை போய்விடும்படி சொன்ன வேளையில், குணமான மனிதர் அவருடன் தன்னை அழைத்துச்
செல்லுமாறு இயேசுவிடம் கூறியதை மனதில் கொண்டு,
மாற்றங்களைக்
கொணரும் இயேசுவைப் பின்தொடர்வதற்கு வரம் கேட்போம். மதம், இனம், மொழி, சாதி என்று பல்வேறு வெறிகளால் கட்டுண்டிருக்கும் மக்களுக்கு, இறைவன், உண்மையான விடுதலை வழங்குமாறு மன்றாடுவோம்.
No comments:
Post a Comment