07 March, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 10

Job and his Friends

அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும், சார்ல்ஸ் ஸ்விண்டோல் (Charles Swindoll) என்ற எழுத்தாளர், 'வாழ்வதற்கு உள்ளொளி' (Insight for Living) என்ற ஓர் இயக்கத்தை உருவாக்கி, நடத்திவருகிறார். நமக்கு முன் வாழ்ந்து, மறைந்துபோன பல நாயகர்கள், நம் வாழ்வுக்கு உந்துசக்தியாக விளங்குகின்றனர் என்பதை, தன் நூல்கள் வழியே பகிர்ந்து வருகிறார். விவிலிய நாயகர்களான, தாவீது, எஸ்தர், மோசே, திருத்தூதர் பவுல் உட்பட, பலரைப்பற்றி, ஸ்விண்டோல் அவர்கள் நூல்கள் வெளியிட்டுள்ளார். இந்த நாயகர்கள் வரிசையில், "யோபு: உன்னத தாங்கும் சக்தி கொண்ட மனிதர்" (Job: A Man of Heroic Endurance) என்ற நூலை 2004ம் ஆண்டு வெளியிட்டார். இந்நூலின் முதல் பிரிவில் அவர் கூறும் அறிமுக வரிகள், நம் தேடலை இன்று துவக்கி வைக்கின்றன:
"'வாழ்க்கை கடினமாக உள்ளது' என்ற மூன்று சொற்கள், நம்மில் பலர் பயன்படுத்தியுள்ள சொற்கள். யோபு நூலின் ஆசிரியர், தன் கதை நாயகனைப்பற்றி எழுதியபோது, அவர் மனதில் மேலோங்கியிருந்த சொற்கள் - 'வாழ்க்கை அநியாயமாக உள்ளது'.
துன்பங்களாலும், மனவருத்தங்களாலும் நிறைந்த வாழ்க்கை, கடினமாக உள்ளதென்பதை ஏற்றுக்கொள்ள நாம் பழகிக்கொள்கிறோம். நம்மையே பக்குவப்படுத்திக்கொள்கிறோம். ஆனால், 'வாழ்க்கை அநியாயமாக உள்ளது' என்பதை உணரும்போது, நம் ஆழ்மனதில் ஓர் ஏக்கம் உருவாகிறது. அந்த 'அநியாயம்' நீங்கி, 'நியாயம்' நிலைநாட்டப்பட வேண்டும் என்ற எண்ணம், நமக்குள் பொறுமையின்மையைத் தூண்டிவிடுகிறது." 'வாழ்வு, கடினமாக உள்ளது' என்பதையும், 'வாழ்வு, அநியாயமாக உள்ளது' என்பதையும் வேறுபடுத்திக் காட்ட, ஸ்விண்டோல் அவர்கள் கூறியுள்ள ஓர் எடுத்துக்காட்டு, நமக்குத் தெளிவைத் தருகிறது.

கனடாவில் பிறந்து, வளர்ந்த ஒரு சிறுமிக்கு, பனிச்சறுக்கு விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்தது. என்றாவது ஒருநாள், ஒலிம்பிக் விளையாட்டில் தங்கப்பதக்கம் பெறவேண்டும் என்று அச்சிறுமி கனவு கண்டுவந்தார். பனிச்சறுக்குப் பயிற்சியில் பலமுறை விழுந்து, எழுந்து பழகி வந்தார், அச்சிறுமி. 2002ம் ஆண்டு, அமெரிக்க ஐக்கிய நாட்டின், சால்ட் லேக் (Salt Lake) நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டில், ஓர் இளம்பெண்ணாகப் பங்கேற்றார்.
போட்டியில், மிக அழகாக, தன் பனிச்சறுக்குத் திறமையை வெளிப்படுத்தினார். தங்கப்பதக்கம் நிச்சயம் என்ற எண்ணத்தில் அவரும், அவரது பயிற்சியாளரும், பார்வையாளர்கள் பலரும், காத்திருந்த வேளையில், அவருக்கு வெள்ளிப்பதக்கம் என்று அறிவிக்கப்பட்டது. அவரைக் காட்டிலும், சிறிது குறைவாகவே தன் திறமைகளை வெளிப்படுத்திய மற்றொரு பெண்ணுக்கு தங்கப்பதக்கம் அறிவிக்கப்பட்டபோது, அரங்கத்தில் பலரும் அதிர்ச்சியுற்றனர். வாழ்க்கை மிகக் கடினமானது என்பதை, அவ்விளம்பெண் அவ்வேளையில் உணர்ந்தார்.
சில மணி நேரம் சென்றபின், ஒரு செய்தி வெளியானது. அந்தப் போட்டியில் முடிவுகள் வழங்கிய நடுவர்களில் ஒருவர், ஏதோ ஒரு காரணத்திற்காக, வேண்டுமென்றே மதிப்பெண்களை மாற்றி எழுதினார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர், நடுவர் குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால், அறிவித்த முடிவுகள் மாற்றப்படவில்லை. இச்செய்தியைக் கேட்ட இளம்பெண் உள்ளத்தில், 'வாழ்க்கை மிக அநியாயமானது' என்ற எண்ணம் மேலோங்கவே, அவர் நொறுங்கிப்போனார்.
இந்நிகழ்வை தன் நூலின் முதல் பிரிவில் கூறும் ஸ்விண்டோல் அவர்கள், "வாழ்க்கை கடினமானது மட்டுமல்ல, அது, மிக, மிக, அநியாயமானது என்பதை உணரும் அனைவரையும், யோபின் உலகம் வரவேற்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

வாழ்வு, கடினமாகவும், அநியாயமாகவும் உள்ளது என்பதை, இன்று நாம் சிந்திக்கும்போது, நம் எண்ணங்கள், பெண்கள் பக்கம் திரும்புகின்றன. மார்ச் 8, இப்புதனன்று, பெண்கள் உலக நாளைச் சிறப்பிக்கின்றோம். ஆணும், பெண்ணும் சரி நிகர் சமம் என்பதை வலியுறுத்துவதற்காக, 1914ம் ஆண்டு முதல், இந்த உலக நாள், நினைவுகூரப்படுகின்றது.
International Women’s Day

நூறு ஆண்டுகளைக் கடந்த பின்னரும், பாலினச் சமத்துவம், பெண் விடுதலை, பாதுகாப்பு ஆகிய அடிப்படை உரிமைகள், பெண்களுக்கு, இன்னும் தூரத்துக் கனவாகவே உள்ளன. வாழ்வின் கடினத்தையும், அநீதிகளையும் ஒவ்வொரு நாளும் சந்தித்தாலும், வாழ்வென்ற போராட்டத்தில் பங்கேற்கவும், தலைமையேற்கவும் துணிந்திருக்கும் பெண்களுக்கு வணக்கங்களைக் கூறி, நம் தேடலைத் தொடர்வோம்.

யூஜின் பேட்டர்சன் (Eugene Peterson) என்ற விவிலிய அறிஞர், யோபு நூலுக்கு எழுதியுள்ள முகவுரையில், யோபின் வாழ்வு நமக்கு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை, இவ்வாறு கூறியுள்ளார்:
"யோபு துன்புற்றார் என்பதால், அவர் நமக்கு முக்கியமானவராக மாறவில்லை; மாறாக, அவர் நம்மைப்போலத் துன்புற்றார் என்பதாலேயே முக்கியமானவராக மாறியுள்ளார். அவர் துன்புற்றார் என்ற உண்மையைவிட, காரணம் ஏதுமின்றி, துன்புற்றார் என்ற உண்மையே நம்மை அதிகம் பாதிக்கின்றது.
சிறு வயதில் நாம் தவறுகள் செய்தோம், தண்டனைகள் பெற்றோம். செய்த தவறுக்குத் தண்டனையாக வருவது, நம் துன்பம் என்பதை ஏற்றுக்கொண்டோம். ஆனால், நாம் வளர, வளர, உலகில் நடப்பவை, கேள்விகளால் நம்மை துளைக்கின்றன. தவறு செய்பவர், துன்பம் ஏதுமின்றி வாழ்வதைக் காணும்போதும், தவறேதும் செய்யாத நமக்கு, துன்பங்கள் ஏற்படும்போதும், அவற்றை, புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கிறோம்."

நல்லதொன்று நடக்கும் என்ற காரணத்திற்காக, தற்போது துன்பம் அடைகிறோம் என்பதை நாம் புரிந்துகொண்டால், அத்துன்பங்களைத் தாங்கும் வலிமை பெறுகிறோம். எடுத்துக்காட்டாக, விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வோர், விழுந்து, காயப்பட்டாலும், தொடர்ந்து துன்பங்களைத் தாங்கிக்கொள்ள தயாராக இருக்கின்றனர். அவர்கள் பெற விழையும் பதக்கம், அத்துன்பங்களைத் தாங்கிக்கொள்ளும் உறுதியைத் தருகின்றது. அதேபோல், பிரசவ வேதனையை அனுபவிக்கும் தாய், அந்த வேதனையின் பயனாக, குழந்தையொன்று பிறக்கும் என்பதை உணர்ந்திருப்பதால், அவரால், அந்த வேதனையைத் தாங்கிக்கொள்ள முடிகிறது. ஆனால், வாழ்வில் நிகழும் அனைத்து துன்பங்களுக்கும், இத்தகையத் தெளிவானப் பதில்கள் கிடைப்பதில்லை. இருப்பினும், அவை ஏன் நிகழ்கின்றன என்பது, இறைவனுக்குத் தெரியும் என்ற நம்பிக்கையில், நாம் வாழ்வைத் தொடர்கின்றோம்.

இத்தகைய நம்பிக்கையை, தனியே மேற்கொள்ளும் சிந்தனைகள், செபங்கள் வழியே நாம் பெற்றுக்கொள்ளலாம், அல்லது, நமது உறவுகள், நண்பர்கள் வழியே பெற்றுக்கொள்ளலாம். ஒரு சில வேளைகளில், நமது துன்பங்களுக்குக் காரணம் என்ன என்று, நமக்கேத் தெரியாமல் தடுமாறும்போது, நம்மைச் சுற்றியிருக்கும் உறவினரும், நண்பர்களும், காரண, காரியங்களை அறிந்தவர்கள்போல் பேசினால், அது, நமக்குச் சங்கடங்களை விளைவிக்கும்.

இத்தகையைச் சூழல், யோபின் வாழ்வில் உருவானது. எலிப்பாசு, பில்தாது, சோப்பார் என்ற மூன்று நண்பர்கள், யோபுக்கு நேர்ந்ததை அறிந்து, அவரைக் காண வந்தனர். நண்பர்கள் மூவரும், ஏழு பகலும், ஏழு இரவும் யோபுடன் அமைதியில் அமர்ந்திருந்தனர் என்று கூறப்பட்டுள்ளது. ஆழ்ந்த துன்பத்திற்கு முன் நாம் தரக்கூடிய பொருத்தமான பதிலிறுப்பு, மௌனம். இந்த ஆழ்ந்த அமைதியைத் தொடர்ந்து, தன் நண்பர்கள் முன், யோபு, தன் துயரங்களைக் கொட்டினார். யோபின் மனதிலிருந்து வெடித்தெழுந்த வேதனைச் சொற்களைக் கேட்ட நண்பர்கள், தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும், யோபு தன் பதில்களையும் அளித்தார். யோபுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே நிகழ்ந்த இந்த உரையாடல், 4ம் பிரிவு முதல், 31ம் பிரிவு முடிய, 28 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த உரையாடலிலும் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடமொன்று பொதிந்துள்ளது. அதாவது, யோபும், அவரது நண்பர்களும், ஒருவர் பின் ஒருவராகப் பேசுகின்றனர். அடுத்தவர் கருத்துக்களுக்குச் செவிமடுத்து, தகுந்த பதில் தருவது, இன்றைய அவசர உலகில் அரிதாகி வருகிறது. குறிப்பாக, நம் கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்படும் வேளையில், அக்கருத்துக்களை அடக்கிவிடும் முயற்சிகளே அதிகம் எழுகின்றன. யோபுக்கும், நண்பர்களுக்குமிடையே, கருத்துவேறுபாடுகள் நிறைந்திருந்தாலும், நால்வரும் ஒருவருக்கொருவர் செவிமடுத்து பேசுவது, நமக்கு நல்லதொரு பாடமாக அமைகிறது.

மூன்று நண்பர்களில் முதலில் பேசும் எலிப்பாசு, "மாசற்றவர் எவரும் துன்புறுவதில்லை; யோபு, துன்பப்படுவதால், அவர் மாசற்றவர் அல்ல" என்ற  கருத்துடன் பேசுகிறார்:
யோபு 4: 7-9
அதன்பின் தேமானியன் எலிப்பாசு பேசத் தொடங்கினான்: நினைத்துப்பாரும்! குற்றமற்றவர் எவராவது அழிந்ததுண்டா? நேர்மையானவர் எங்கேயாவது ஒழிந்ததுண்டா? நான் பார்த்த அளவில், தீவினையை உழுது, தீங்கினை விதைத்தவர் அறுப்பது அதையே! கடவுளின் மூச்சினால் அவர்கள் அழிவர்; அவரின் கோபக் கனலால் எரிந்தொழிவர்.

வண்டிக்கு முன்பக்கம் குதிரையைப் பிணைப்பதற்குப் பதில், குதிரைக்கு முன்பக்கம் வண்டியைப் பிணைப்பதுபோல், எலிப்பாசு கூறும் கருத்துக்கள் அமைந்துள்ளன. ஒருவர் தவறு செய்தால், அதற்குத் தண்டனையாக, துன்பங்கள் வந்து சேரும் என்பது, பலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துதான். ஆனால், அந்தக் கருத்து, எல்லாருக்கும், எல்லா இடங்களிலும், எல்லா சூழல்களிலும் பொருந்தும் உண்மை என்று கருதி, உலகில் நிலவும் துன்பங்கள் அனைத்துமே, தவறுகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் என்று முடிவுகட்டுவது, முற்சார்பு எண்ணமாக மாறுகிறது. அத்தகைய முற்சார்பு எண்ணத்துடன், யோபிடம் பேசும் எலிப்பாசு, யோபு செய்த தவறுதான், அவரது துன்பங்களுக்குக் காரணம் என்ற தன் முடிவை, அவர்மீது திணிக்க முற்படுகிறார்.

எலிப்பாசுக்கு, யோபு அளித்த பதிலும், அதைத் தொடரும் உரையாடலும், அடுத்த வாரம் நம் தேடலில் இடம்பெறும். துன்பம் என்ற தீயில் புடமிடப்படும் அனைத்து பெண்களும், பொன்னென ஒளிவீசவேண்டும் என்றும், பெண்களை தங்களுக்கு இணையாகக் கருதும் அளவு, ஆண்கள் அறிவொளி பெறவேண்டும் என்றும், பெண்கள் உலக நாளன்று, வேண்டிக்கொள்வோம்.



No comments:

Post a Comment