Not by
Accident – Isabel Fleece
16 வயதுநிறைந்த
Ned Fleece என்ற இளையவர், முதன்முறையாக ஓட்டுநர் உரிமத்தைப் பெற்ற சில நாட்களில், தன் பெற்றோருடன், ஒரு சிறு தீவுக்கு விடுமுறையைக்
கழிக்கச் சென்றார். உரிமம் பெற்ற மகிழ்ச்சியில், சின்னச்
சின்ன வேலைகளுக்கும் அவர் காரில் செல்வதை விரும்பினார். அவர்கள் விடுமுறையைக் கழித்த
தீவில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இல்லாததால், பெற்றோரும்
அவரது ஆசையைத் தடுக்கவில்லை.
ஒருநாள், இளையவர் Nedம், உறவுக்காரப் பெண் Katherineம் அருகிலிருந்த அவர்கள் வீட்டில் ஏதோ ஒன்றை எடுத்து வர, காரில்
சென்றனர். அரைமணி நேரத்தில் இருவரும் திரும்பிவிடுவர் என்று எதிர்பார்த்த Nedன் பெற்றோருக்கு, ஒரு மணி நேரம் சென்று, அதிர்ச்சிதரும் செய்தியொன்று வந்து சேர்ந்தது. அவர்கள் மகன் ஒட்டிச்சென்ற
கார், விபத்திற்குள்ளானது என்ற செய்தி அது.
செய்தியைக்
கேட்டதும், Nedன் தாய்,
இசபெல் (Isabel Fleece) அவர்கள், கணவரோடும், மற்ற பிள்ளைகளோடும் சேர்ந்து செபித்தார்:
"இறைவா, இந்தச் செய்தியை, எவ்வளவுக்கெவ்வளவு நன்மைதரும் செய்தியாக மாற்றமுடியுமோ, அவ்வளவுக்கவ்வளவு அதை மாற்றியருளும்" என்று அவர்கள் செபித்தபின், விபத்து நடந்த இடத்திற்குச் சென்றனர். இளையவர், Ned விபத்து நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்ததையும்.
கூடச்சென்ற Katherine சிறு காயங்களுடன் தப்பித்ததையும் அறிந்தனர். வேறு யாருக்கும் எவ்வித
பாதிப்பும் இன்றி, விபத்து நிகழ்ந்திருந்தது.
விபத்து
நிகழ்ந்து 4 ஆண்டுகள் கழிந்தபின், இசபெல் அவர்கள், சிறு நூல் ஒன்றை வெளியிட்டார்.
அந்நூலின் தலைப்பு, "Not by Accident". இந்நூலின் தலைப்பை, தமிழில் சொல்லவேண்டுமெனில், "விபத்தினால் அல்ல" என்று சொல்லலாம், அல்லது, "எதேச்சையாக அல்ல" என்றும்
சொல்லலாம். தன் மகனின் விபத்து, சந்தர்ப்ப வசமாக, எதேச்சையாக நிகழ்ந்ததல்ல,
மாறாக, இறைவனின் விளக்கமுடியாத ஒரு திட்டத்தால் நிகழ்ந்தது என்பதை, இசபெல் அவர்கள், இந்நூலில் விளக்க முயற்சி செய்துள்ளார். "What I learned
from my son's untimely death" - அதாவது, "என் மகனின் அகால மரணத்திலிருந்து
நான் கற்றுக்கொண்டவை" என்பது, இந்நூலின் உபதலைப்பு. சற்றும் எதிர்பாராத
நேரத்தில், சூழலில் நிகழ்ந்த இவ்விபத்தில் மகனைப் பறிகொடுத்த
தாய் எழுதிய இந்நூலின் அறிமுகப் பிரிவு, யோபு நூலில் நாம் மேற்கொண்டுவரும் விவிலியத்
தேடலை இன்று துவக்கி வைக்கிறது.
1964ம்
ஆண்டு வெளியிடப்பட்டு, பல மறுபதிப்புக்களைக் கண்ட இந்நூலின்
அறிமுகப் பிரிவில், இசபெல் அவர்கள் கூறியுள்ள கருத்துக்கள், நம் சிந்தனையைத் தூண்டுகின்றன: "என் கடைசி மகன் Nedஐ, 1960ம் ஆண்டு, ஒரு கார் விபத்தின் வழியே, இறைவன் தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். அந்நாள் முதல், இறைவன், எவ்விதம் எங்கள் குடும்பத்தை தன்
அரவணைப்பில் வைத்து, அமைதி வழங்கினார் என்பதை, மற்றவர்களுக்குச் சொல்லவேண்டும் என்ற தூண்டுதல் எனக்குள் எழுந்தவண்ணம்
இருந்தது"
என்று, இவ்வறிமுகப்பகுதியைத் துவக்கும் இசபெல்
அவர்கள், தொடர்ந்து, அந்த விபத்தைக் குறித்து சுருக்கமாக
விவரிக்கிறார். பின்னர், அவர் கூறும் வார்த்தைகள் மிக ஆழமானவை:
"விபத்து
நிகழ்ந்ததும், எனக்குள் ஏராளமான கேள்விகள் எழுந்தன.
'இது எப்படி நிகழ்ந்தது?' 'எங்கே நிகழ்ந்தது?'
என்ற கேள்விகளுடன், 'இது ஏன் நிகழ்ந்தது?'
என்ற கேள்வி, மீண்டும், மீண்டும் எனக்குள் எழுந்தது. இக்கேள்விகள், என் மனதை, சக்திகொண்ட மட்டும் பலமாக அறைந்தன.
அப்போது, என்னிடமிருந்து எழுந்த ஒரே பதில்
இதுதான்: இறைவனின் குழந்தைக்கு ஒரு விபத்து நிகழும்போது, அவ்விபத்தைச் சூழ்ந்து எழும் கேள்விகள் முக்கியமல்ல, அக்கேள்விகளைச் சூழ்ந்து நிற்கும் இறைவன், அளவற்றவர் என்பதே முக்கியம்".
துன்பம்
நம்மைத் தாக்கும்போது, கேள்விகள் எழுவது இயற்கை; ஆயினும், அக்கேள்விகளில் மட்டும்
தங்கிவிடாமல், அக்கேள்விகளைச் சூழ்ந்து நிற்கும் இறைவனைக் குறித்து சிந்திப்பது
மிக முக்கியம் என்று, இசபெல் அவர்கள், இந்நூலின் வழியே சொல்லித்தருகிறார். 'Not by Accident'
என்ற இந்நூல், பல்லாயிரம் பேருக்கு, அவர்களது துயரங்களில் ஆறுதல் வழங்கியுள்ளது.
தங்கள் துயரங்களின் நடுவே, இறைவனின் பராமரிப்பை முற்றிலும்
புரிந்துகொள்ள முடியவில்லையெனினும், அதை ஏற்றுக்கொள்வதற்கு, இந்நூலில் கூறப்பட்டுள்ள சிறு தியானங்கள் உதவி செய்துள்ளன என்பது,
இந்நூலை வாசித்த பலரின் கருத்து.
துயரங்களில்
ஆறுதல் பெற, நாம் பல வழிகளைத் தேடுகிறோம். தனித்திருத்தல், தியானம் செய்தல், நூல்களை வாசித்தல், என்ற தனிப்பட்ட முயற்சிகள் உதவுகின்றன. அல்லது, அடுத்தவர் துணையைத் தேடுகிறோம். நமக்கு மிக நெருங்கிய உறவுகளும், நண்பர்களும் உதவி செய்யலாம். அல்லது, நம்மையொத்த துயரைச் சந்தித்தவர்கள், தங்கள் அனுபவத்திலிருந்து நமக்குக் கூறும் ஆலோசனைகள், உதவி செய்யலாம்.
பல நகரங்களில் இத்தகையக் குழுக்கள் இயங்கிவருவதை அறிவோம். குழந்தைகளைப் பறிகொடுத்த
பெற்றோர், விபத்துக்களில் தங்கள் இளையோரை இழந்த பெற்றோர்
என தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள இக்குழுக்கள், குறிப்பிட்ட
நாள்களில் சந்தித்து, தங்கள் வேதனைகளையும், அவற்றை மேற்கொண்ட
வழிகளையும் பகிர்ந்துகொள்வது, பலருக்குப் பெரும் உதவியாக உள்ளது.
தங்கள்
மகன் ஆரோன், Progeria
என்ற குணமாக்கமுடியாத, அரியவகை நோயினால் இறந்ததும், யூத மத குரு, ஹெரால்டு குஷ்னர் அவர்களும், அவரது மனைவியும், ஆறுதல் பெறமுடியாமல் தவித்தனர். பின்னர், குழந்தைகளை இழந்த பெற்றோருக்கென உருவாக்கப்பட்டிருந்த ஒரு குழுவில்
இணைந்து, தங்களுக்குத் தேவையான ஆறுதலைப் பெற்றனர்
என்பதை, 'ஆண்டவர் என் ஆயன்' என்ற நூலில் ஹெரால்டு குஷ்னர் அவர்கள் கூறியுள்ளார். அதேபோல், தன் மகனை விபத்தில் இழந்த இசபெல் அவர்கள், இத்தகையத் துயரத்தில் சிக்கியிருந்த பலருக்கு, குழுப்பகிர்வுகளில்
ஆலோசனை வழங்கியதன் வழியாகவும், தான் எழுதிய நூலின் வழியாகவும்
உதவியாக இருந்துள்ளார்.
நம் ஒவ்வொருவர்
வாழ்விலும் இழப்புகள், பல்வேறு சூழல்களில், பல வடிவங்களில் நிகழ்ந்திருக்கலாம்.
ஆனால், இழப்புக்களைச் சந்தித்தவர்கள் கூடிவரும்போது, அவர்கள் மத்தியில் உருவாகும் 'புரிதல்', ஆறுதலையும், தெளிவையும் தருகின்றது. அத்தகையப் 'புரிதல்' இல்லாதபோது, குழுப்பகிர்வுகளில், அல்லது, நண்பர்களின் பகிர்வுகளில்,
ஆறுதலும், தெளிவும் கிடைப்பதற்குப் பதில், இன்னும்
ஆழமான காயங்கள் உருவாக அதிக வாய்ப்புண்டு.
Job Rebuked
by His Friends – William Blake
'புரிதல்' இல்லாத
ஒரு சூழல், யோபின் வாழ்வில், அவரது நண்பர்கள் வடிவில் வந்து சேர்ந்தது. யோபுக்கு நிகழ்ந்த கொடுமைகளைப்
புரிந்துகொள்ளாமல், ஏட்டளவில் தாங்கள் கற்றுவைத்திருந்த, தாங்கள் நம்பிவந்த கருத்துக்களை வலியுறுத்திக் கூறினர், அவரது மூன்று நண்பர்கள்.
அவர்களில்,
முதலில் பேசிய எலிப்பாசு, யோபின் நல்ல குணங்களைப்பற்றி துவக்கத்தில்
பேசினார். "பலருக்கு அறிவுரை பகர்ந்தவர் நீர்! தளர்ந்த கைகளைத் திடப்படுத்தியவர்
நீர்! உம் சொற்கள், தடுக்கி விழுவோரைத் தாங்கியுள்ளன; தள்ளாடும் கால்களை உறுதியாக்கியுள்ளன" (யோபு 4:3-4) என்று யோபின் குணங்களைப் பாராட்டியபின், அவரது நேர்மையைக் குறித்து தனக்கிருந்த சந்தேகத்தை வெளிப்படுத்தினார், எலிப்பாசு.
இரண்டாவதாகப்
பேசிய பில்தாது என்பவரோ, ஆரம்பத்திலேயே தன் பொறுமையை இழந்து, யோபைக் கடிந்துகொள்கிறார். "எதுவரை இவ்வாறே பேசிக் கொண்டிருப்பீர்? உம் வாய்ச்சொற்கள் புயல்காற்றைப் போல் இருக்கின்றன"
(யோபு
8:2) என்று
ஆரம்பிக்கும் பில்தாது அவர்கள், தொடர்ந்து யோபின்
புதல்வர்களைப் பற்றி கூறும் ஒரு கூற்று, நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது.
யோபு
அடைந்த இழப்புக்களிலேயே பேரிழப்பாக இருந்த அவரது பிள்ளைகளின் மரணம் குறித்து பில்தாது
அவர்கள் இவ்வாறு கூறுகிறார்: "உம் புதல்வர்கள் அவருக்கெதிராய்ப் பாவம் செய்ததால், குற்றப்பழியின் ஆற்றலிடம் அவர்களைக் கையளித்தார்." (யோபு 8:4). இக்கூற்றிலிருந்து வெளிப்படும்
பில்தாதின் இரு குணங்கள், நமக்கு பாடங்களாக அமைகின்றன. பில்தாது
இவ்வாறு கூறுவது, அவரை, கடின உள்ளம்
கொண்டவராகவும், மற்றவர் மனங்களைப் புண்படுத்துகிறவராகவும்
காட்டுவதோடு, அரைகுறையான அறிவோடு, அடுத்தவரைத் தீர்ப்பிடுபவராகவும் காட்டுகிறது.
ஒருவர்
இறந்தபின், பொதுவாக, அவரைப்பற்றிய
குறைகளை நாம் வெளிப்படையாகப் பேசுவதில்லை. நாம் கடைபிடிக்கும் இக்கட்டுப்பாட்டை, இறந்தவருக்கு நாம் காட்டும் மரியாதை என்ற கோணத்தில் பார்க்கலாம், அல்லது, இறந்தோரின் சுற்றங்களை மேலும் புண்படுத்தாத
நாகரீகம் என்ற கோணத்திலும் பார்க்கலாம்.
தான்
இழந்த அனைத்திலும், தன் புதல்வர், புதல்வியரின் மரணமே, மிகப் பெரிய இழப்பாக யோபின் மனதை
புண்படுத்தியிருக்கவேண்டும். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், பில்தாது, யோபின் பிள்ளைகளை, பாவிகள் என்று முத்திரை குத்தியது,
அவரை, நாகரீகம் தெரியாத, மென்மை உணர்வுகளற்ற ஒரு
மனிதராகக் காட்டுகிறது.
தன் ஏழு
புதல்வரும், மூன்று புதல்வியரும் பாவத்தில் விழக்கூடியவர்கள்
என்பதை, யோபு நன்கு அறிந்திருந்தார். குறிப்பாக, அவர்கள் வெவ்வேறு நாள்களில், தங்கள் இல்லங்களில்
விருந்து வைக்கும்போது, அங்கு தவறுகள் நிகழ்ந்திருக்கலாம்
என்று யோபு முன்கூட்டியே சிந்தித்து, அதற்குத் தகுந்த பரிகாரத்தையும் தேடிவந்தார் என்று
முதல் பிரிவில் கூறப்பட்டுள்ளது..
யோபு
நூல் 1: 5
விருந்து
நாள்களின் முறை முடிந்ததும், யோபு அவர்களை வரவழைத்துத் தூய்மைப்படுத்துவார்.
"என் பிள்ளைகள் ஒருவேளை பாவம் செய்து, உள்ளத்தில் கடவுளைத் தூற்றியிருக்கக்கூடும்" என்று யோபு
நினைத்து, காலையில் எழுந்து அவர்களின் எண்ணிக்கைக்கு
ஏற்ப எல்லாருக்காகவும் எரிபலியை ஒப்புக்கொடுப்பார். யோபு எப்பொழுதும் இவ்வாறு செய்வது
வழக்கம்.
ஒவ்வொரு
விருந்துக்கும் பிறகு, யோபு மேற்கொண்ட இந்தப் பரிகார முயற்சிகளைக்
கண்டு, யோபின் நண்பர்கள் அவரிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்.
தன் பிள்ளைகள் ஒருவேளை தவறு செய்திருக்கலாம் என்ற எண்ணத்தில் தான் அவ்வாறு செய்வதாக
யோபு விளக்கம் கூறியிருக்கலாம்.
யோபு
கூறிய இந்த விளக்கத்தை கேட்ட நண்பர்களில் ஒருவரான பில்தாது, 'தன் பிள்ளைகள் பாவம் செய்திருக்கக்கூடும்' என்று யோபு சொன்னதை வைத்து,
'யோபின் புதல்வர்கள்
பாவம் செய்தவர்கள், எனவே, தண்டனை பெற்றார்கள்' என்று அவர் முடிவெடுத்தது தவறு. தனது தவறான முடிவை,
துன்பங்களுடன் போராடிக்கொண்டிருந்த யோபிடம் கூறியது, அதைவிட பெரியத் தவறு.
அரைகுறையாய்
அறிந்த விவரங்களின் அடிப்படையில், அல்லது, முற்சார்பு எண்ணங்களின்
அடிப்படையில், நாம் எடுத்த தவறான முடிவுகளை எண்ணிப் பார்க்க, பில்தாதின் கூற்று நம்மை அழைக்கிறது. அதேவண்ணம், துயரில் இருப்போருக்கு
ஆறுதல் தருவதற்குப் பதில், நம் சொற்களால் கூடுதல் வேதனை தந்த
தருணங்களை எண்ணிப்பார்க்கவும், பில்தாதின் சொற்கள் நமக்கு வாய்ப்பளிக்கின்றன.
பில்தாதுக்கும்,
யோபுக்கும், இடையே நிகழ்ந்த உரையாடலில், நம் தேடல் தொடரும்.
No comments:
Post a Comment