21 March, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 12

Job 7:11

உலகப்புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவரான, கலீல் கிப்ரான் அவர்கள் கூறியுள்ள ஒரு கூற்று, யோபு நூலில் நாம் மேற்கொண்டுள்ள தேடலை இன்று துவக்கி வைக்கிறது. "வேதனையிலிருந்து கூடுதல் சக்தியுடன் பலர் வெளியேறியுள்ளனர்; இவர்களது வாழ்வை நாம் திரும்பிப் பார்க்கும்போது, அங்கு தெரிவன, பல தழும்புகள்" என்று கிப்ரான் அவர்கள் கூறியுள்ளது, யோபுக்கு அதிகம் பொருந்தும். வேதனை வேள்வியில் தகனமாகிக் கொண்டிருந்த யோபுக்கு, ஆறுதல் சொல்லும் நோக்கத்தில் வந்த நண்பர்கள், ஆறுதலுக்குப் பதில், யோபுக்கு ஆழமான மனக்காயங்களை உருவாக்கினர்.
இந்த நண்பர்களில் ஒருவரான எலிப்பாசு, யோபு, ஏதோ ஒரு வகையில் குற்றம் புரிந்திருக்கவேண்டும் என்ற முடிவுடன் பேசியபோது, 'தான் குற்றமற்றவர்' என்பதை வலியுறுத்திக் கூறும் யோபு, தொடர்ந்து வாழ்வை ஓர் அழகிய கவிதை வடிவில் விவரிக்கிறார். "மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போராட்டம்தானே?" (யோபு 7:1) என்று ஆரம்பமாகும் இந்தக் கவிதை வரிகளில், பல உருவகங்கள் வழியே வாழ்வின் இன்னல்களை விளக்கியுள்ளார். இந்த வரிகளை வாசிக்கும்போது, வாழ்வைக் குறித்து, கவிஞர் கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்கள் மனதில் ஒலிக்கின்றன:
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது

வாழ்க்கை என்றால், வேதனையும், குழப்பமும் இயல்பாகவே அமையும் என்பதை, பல அறிஞர்களும், கவிஞர்களும், பல உருவங்களில் கூறியுள்ளனர். அதே எண்ணங்களை யோபு நூல் 7ம் பிரிவு, முதல் 6 இறைச்சொற்றொடர்களில் இந்நூலின் ஆசிரியரும் கூறியுள்ளார். இந்தக் கவிதை வரிகளைத் தொடர்ந்து, யோபு, இறைவனிடம் பேச முயல்கிறார். இந்த வரிகள், இன்றைய நம் தேடலின் மையமாகிறது. யோபு நூல் 7ம் பிரிவு, 6 முதல், 21 முடிய உள்ள 16 இறைச்சொற்றொடர்களில், யோபின் வேதனை, கோப உணர்வுடன் வெளிப்படுகின்றது.
யோபு நூல் 7: 11
நான் என் வாயை அடக்கமாட்டேன்; என் மனத்தின் வேதனையை எடுத்துரைப்பேன்; உள்ளக் கசப்பில் முறையிடுவேன்.
என்று இறைவனிடம் நேருக்கு நேர் பேச ஆரம்பிக்கிறார், யோபு. இந்த வரிகளை வாசிக்கும்போது, வளர் இளம் பருவத்தில், அல்லது இளம் பருவத்தில் உள்ள ஒரு மகனோ, மகளோ தன் பெற்றோருக்கு முன் தன் ஏக்கத்தை, கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு காட்சி மனதில் பதிகிறது. பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் பேசும் இளைஞனைப் போல, யோபும் இறைவன் முன் பேசுகிறார். இறைவன், மனிதரை ஒரு பொருட்டாக மதிப்பது ஏன் என்ற கேள்வியுடன் யோபு தொடர்ந்து பேசுகிறார்:
யோபு நூல் 7: 17-18
மனிதர் எம்மாத்திரம், நீர் அவர்களை ஒரு பொருட்டாய் எண்ண? உமது இதயத்தை அவர்கள்மேல் வைக்க? காலைதோறும் நீர் அவர்களைச் ஆய்ந்தறிய? மணித்துளிதோறும் அவர்களைச் சோதிக்க?
என்று யோபு எழுப்பும் இக்கேள்விகள், 8ம் திருப்பாடலை நம் நினைவுக்குக் கொணர்கிறது.
திருப்பாடல் 8: 4
மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்?
என்று கேள்விகளை எழுப்பும் திருப்பாடலின் ஆசிரியர், அடுத்த வரிகளிலேயே அழகான பதிலையும் வழங்கியுள்ளார்:
திருப்பாடல் 8: 5-8
ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர்.

மனிதர்கள் மீது இறைவன் ஏன் அக்கறை கொள்ளவேண்டும் என்று திருப்பாடல் ஆசிரியர், கேள்விகளை எழுப்பி, மனிதர்களை இன்னும் உயர் நிலைக்கு அழைத்துச் செல்லவே, அவர்கள் மீது அக்கறை கொண்டார் என்று பதிலும் கூறியுள்ளார்.
இதற்கு மாறாக, மனிதர் மீது இறைவன் கொள்ளும் அக்கறை குறித்து, யோபு நூல் 7ம் பிரிவில் எழுப்பப்படும் கேள்விகளைத் தொடர்ந்து, இன்னும் சில கேள்விகள் வழியே, தன்னை இறைவன் இடைவிடாமல் கண்காணிக்கிறார் என்பதை, யோபு, கோபத்துடன் எடுத்துரைக்கிறார்:
யோபு 7: 19-20
எவ்வளவு காலம் என்மேல் வைத்த கண்ணை எடுக்காதிருப்பீர்? என் எச்சிலை விழுங்குமளவுக்குக் கூட என்னை விடமாட்டீரா? மானிடரின் காவலரே! நான் பாவம் இழைத்துவிட்டேனா? உமக்கு நான் செய்ததென்னவோ? என்னை உம் இலக்காக ஆக்கியதேன்? உமக்கு நான் சுமையாய்ப் போனதேன்?

இறைவன் மனிதரை நினைவில் கொண்டதற்குக் காரணம், அவர்களை படைப்பின் ஆளுநர்களாக மாற்றுவதற்கே என்பது, திருப்பாடல் ஆசிரியரின் கண்ணோட்டம். இக்கண்ணோட்டம், இறைவனை, அக்கறையோடு நம்மைக் கண்காணிக்கும் பெற்றோருக்கு ஒப்புமைப்படுத்துகிறது. இறைவன் மனிதரை ஒரு பொருட்டாக எண்ணுவது, அவர்கள் தவறு செய்யும்போது, அவர்களைத் தண்டிப்பதற்கே என்பது, யோபு நூல் ஆசிரியரின் கண்ணோட்டம். இக்கண்ணோட்டம், குறைகள் கண்டுபிடிக்கும் ஒரு பெற்றோராக, இறைவனைக் காட்டுகிறது. இவ்விரு கண்ணோட்டங்களையும் நம் குடும்பங்களில் நிகழும் ஓர் அனுபவத்தின் உதவிகொண்டு, யூத மத குரு ஹெரால்டு குஷ்னர் அவர்கள், தன் நூலில் இவ்வாறு விளக்குகிறார்:

பத்து வயது மகன், தன் வீட்டுத் தோட்டத்தில், தான் பள்ளியில் கற்றுக்கொண்ட ஒரு சில விளையாட்டு சாகசங்களைச் செய்துகொண்டிருக்கும்போது, வீட்டுக்குள் இருக்கும் தன் பெற்றோரை அழைக்கிறான். "அம்மா, அப்பா, இங்க வந்து பாருங்க" என்று அவன் அழைத்ததும், அங்கு செல்லும் பெற்றோருக்கு முன், தன் சாகசங்களை இன்னும் திறமையாகச் செய்துகாட்டுகிறான் மகன். சாகசங்களைக் காணும் பெற்றோர், தன்னைப் பாராட்டுவர், உற்சாகப்படுத்துவர், என்ற எண்ணத்தில், அச்சிறுவன் பெற்றோரின் கனிவுப் பார்வையை தன் பக்கம் திருப்புகிறான்.
அதே நேரம், வீட்டுக்குள், தன் அறையில் தனித்திருக்கும் பதினாறு வயது இளம்பெண், தன் அப்பாவோ, அம்மாவோ அனுமதியின்றி தன் அறைக்குள் நுழைவதை விரும்புவதில்லை. "தயவுசெய்து, என்னைத் தனியே விடுங்கள்" என்பதை, அப்பெண் பல வழிகளில் தன் பெற்றோருக்கு உணர்த்துகிறார். குற்றம் காண்பதற்கே, தன் பெற்றோர் தன்னை கண்காணிக்கின்றனர் என்பது, அவ்விளம்பெண்ணின் கண்ணோட்டம்.

பெற்றோரின் கண்முன்னே சாகசங்கள் செய்து பெருமைகொள்ளும் சிறுவனின் கண்ணோட்டம், திருப்பாடல் 8ல் காணப்படும் வரிகளில் புலனாகிறது என்றும், குற்றம் காண்பதற்கென்றே தன் பெற்றோர் தன்னை இடைவிடாமல் கண்காணிக்கின்றனர் என்ற இளம்பெண்ணின் கண்ணோட்டம், யோபு நூலில் வெளியாகிறது என்றும், ஹெரால்டு குஷ்னர் அவர்கள் தன் நூலில் விளக்கியுள்ளார்.

7ம் பிரிவில் யோபு வெளிப்படுத்தும் கோபம், பல விவிலிய விரிவுரையாளர்களை சங்கடம் அடையச் செய்துள்ளது. "யோபு துன்புற்றபோது, எதிர்த்துப் போராடினார். ஆனால், ஆபிரகாம், தாவீது போன்றோர் துன்புற்றபோது, அதை, பொறுமையுடன் ஏற்றுக்கொண்டனர்" என்று சில விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர். "யோபு துன்புற்றபோது, கடவுளுக்கு எதிராக அவர் முறையீடு செய்யாமலிருந்திருந்தால், விவிலிய நாயகர்களில் அவரே அதிக அளவு பெருமை பெற்றிருப்பார்" என்று வேறு சில விரிவுரையாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.
யோபு ஆத்திரமடைந்ததைக் குறித்து தன் நூலில் விவாதிக்கும் ஹெரால்டு குஷ்னர் அவர்கள், கடவுள் மீது கோபப்படுவது, ஏற்றுக்கொள்ளக்கூடிய பண்புதானா என்ற கேள்வியை எழுப்புகிறார். இதற்குப் பதில் சொல்லும்போது, இறைவனுக்கு, போலி வார்த்தைகளால் முகத்துதி செய்பவர்களைவிட, நேரிய மனதுடன், உள்ளதை உள்ளவாறு சொல்பவர்கள் மேல் என்று குறிப்பிடுகிறார்.

உண்மையான அன்பு உள்ள இடத்தில், கோபமும் இருக்கும் என்று கூறும் குஷ்னர் அவர்கள், கணவன்-மனைவிக்கிடையே இருக்க வேண்டிய உண்மையான உறவைக் குறித்து பேசுகிறார். தன் கணவர்மீது உண்மையிலேயே அன்புகொண்டிருக்கும் மனைவி, அவரிடம் தன் வருத்தம், கோபம் இவற்றை வெளிப்படுத்தும் சுதந்திரத்தையும் பெற்றிருக்கவேண்டும். கணவருக்குப் பிடிக்காது என்ற காரணத்தால், தன் கோபத்தையும், வருத்தத்தையும் மூடி மறைத்து, புன்னகை செய்யும் மனைவி, உண்மையில் அன்பு காட்டுபவராக இருக்கமுடியாது.
அதேபோல், ஓர் இளைஞன், தன் பெற்றோருக்குப் பிடிக்காது என்று தானே நினைத்துக்கொண்டு, தன் உண்மையான உணர்வுகளை அவர்களிடம் வெளிப்படுத்தத் தயங்கினால், அங்கு, பெற்றோர்-பிள்ளைகளிடம் உண்மையான அன்பு இல்லை என்றே சொல்லவேண்டும்.

இவ்விரு எடுத்துக்காட்டுகளைக் கூறும், ஹெரால்டு குஷ்னர் அவர்கள், இறைவனுக்கும், மனிதருக்கும் இடையே உள்ள உறவில், உள்ளத்தின் உண்மை உணர்வுகளை மறைத்து, வெறும் புகழுரைகளாக மட்டும் நம் செபங்கள் இருந்தால், அது போலியான பக்தி என்று கூறியுள்ளார். இறைவன் மீது ஆழ்ந்த, உண்மையான அன்பு கொண்டதாலேயே, யோபு, அவர் மீது தன் கோபத்தையும், ஆத்திரத்தையும் வெளிப்படுத்தினார் என்று, குஷ்னர் அவர்கள் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இறைவன் மீது அச்சம் கொண்டு உருவாகும் ஓர் உறவினால், நாம் இறைவன் முன் ஓர் அடிமையாக ஆராதனை செய்யமுடியும், அத்தகைய இறைவன் மீது அன்பு உருவாகாது. என் புகழுரைகளை மட்டும் கேட்கும் கடவுளைக் காட்டிலும், ஆத்திரத்தோடு நான் வெளிப்படுத்தும் என் உண்மை உணர்வுகளுக்குச் செவிமடுக்கும் இறைவனையே நான் வழிபட விரும்புகிறேன் என்று, ஹெரால்டு குஷ்னர் அவர்கள், யோபு நூல் 6,7 பிரிவுகள் பற்றிய தன் விளக்கத்தை நிறைவு செய்துள்ளார்.

யோபின் 2வது நண்பர், பில்தாது கூறிய அறிவுரைகளும், அவற்றிற்கு யோபு அளித்த பதிலுரையும் நம் அடுத்த தேடலை வழிநடத்தும்.


No comments:

Post a Comment