30 May, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 22

The Visitation of Mary to Elizabeth.
(Church of Resurrection, St. Petersburg, Russia).

துன்புறும் அன்னையரைச் சந்திக்கும் மரியா

மே 31, கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தத் திருநாள். "மரியா புறப்பட்டு யூதேயா மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்" (லூக்கா 1: 39) என்று இத்திருநாளின் நற்செய்தி ஆரம்பமாகிறது. தேவையில் இருந்த தன் உறவினர் எலிசபெத்தை, அன்று தேடிச்சென்ற மரியா, இன்றும், தேவையில் இருப்போரைத் தேடி வருகிறார்.
தன் கருவிலும், கரங்களிலும் குழந்தை இயேசுவைத் தாங்கியவண்ணம், மரியன்னை மேற்கொண்ட பயணங்கள் கடினமானவை. கருவில் இயேசு உருவான அத்தருணமே, உறவினரான எலிசபெத்தைச் சந்திக்க, யூதேயா மலைப்பகுதியில் பயணமானார். தன் பேறுகாலம் நெருங்கிய வேளையில், பெத்லகேம் என்ற ஊருக்கு கடினமானதொரு பயணம் மேற்கொண்டார். இயேசுவின் உயிரைக் காப்பாற்ற, பச்சிளம் குழந்தையைச் சுமந்தவண்ணம், இரவோடிரவாக எகிப்துக்குத் தப்பித்துச் சென்றார். எருசலேமில் விழா கொண்டாடச் சென்றவர், அங்கு சிறுவன் இயேசு தொலைந்துபோனதை அறிந்து, மீண்டும், பதைபதைப்புடன் அவரைத் தேடி, எருசலேமுக்குச் சென்றார். இறுதியாக, தன் மகன் சிலுவை சுமந்து சென்றபோது, அவருடன் அச்சிலுவைப்பாதை பயணத்திலும் பங்கேற்றார். அன்னை மரியா மேற்கொண்ட இந்த துயரமான பயணங்களை, இன்றும், ஆயிரமாயிரம் அன்னையர் மேற்கொள்கின்றனர்.
நெருக்கடியானச் சூழல்களிலும், கருவில் வளரும் குழந்தையைக் கலைத்துவிடாமல் வாழும் அன்னையரை நினைவில் கொள்ள...
பிறந்தநாளன்றே, பச்சிளம் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு, புலம்பெயர்ந்து செல்லும் அன்னையரை நினைவில் கொள்ள...
திருவிழாக் கூட்டங்களில் குழந்தைகளைத் தொலைத்துவிட்டு, பரிதவிக்கும் அன்னையரை நினைவில் கொள்ள...
அநியாயமாகக் கொல்லப்படும் மகன்களை தங்கள் மடியிலேந்தி, மனம்நொறுங்கும் அன்னையரை நினைவில் கொள்ள...
மே 31ம் தேதி, தகுந்ததொரு தருணம்.

Job is Patient as His Friends Bemoan Him

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 22

"மனிதர்கள் அடைந்த வெற்றியைக் கண்டு, மலைத்துப் போகாதே! பொறாமை கொள்ளாதே! அந்த வெற்றிக்கு விலையாக, அவர்கள் அடைந்த துன்பங்களை மறவாதே!" என்று அறிஞர்கள் பலர் நமக்கு நினைவுறுத்தியுள்ளனர். இதையொத்த மற்றோர் அறிவுரை, இன்றைய விவிலியத் தேடல் வழியே நம்மை வந்தடைகிறது. தவறுகள் செய்வோர், குற்றம் புரிவோர், தாறுமாறான இன்பத்துடன் வாழ்வதைக் கண்டு அவர்கள் மீது பொறாமை கொள்ளாதே... அவர்களுக்கு நேரும் அழிவு பயங்கரமானது என்பதை மறவாதே! என்ற அறிவுரையை, யோபின் நண்பர் சோப்பார், யோபு நூல் 20ம் பிரிவில் அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளார். பலரும் அறியும்படி பகிரங்கமாக குற்றம் புரிந்த பலர், எவ்வித தண்டனையும் பெறாமல் வாழ்வதைக் கண்டு, நம்மில் பலருக்கு வேதனை நிறைந்த கேள்விகள் எழுந்துள்ளன. இந்தக் கேள்விகளுக்கு ஓரளவு தெளிவான பதிலை இன்றைய விவிலியத் தேடலில் பெற முயல்வோம்.

மனித வரலாற்றை இரத்தத்தில் தோய்த்த பல கொடுங்கோலர்களில், இத்தாலியைச் சேர்ந்த பெனிட்டோ முசோலினியும் ஒருவர். ஜெர்மனியின் அடால்ப் ஹிட்லருடன் இணைந்து, இவரும் பல இலட்சம் உயிர்களைக் கொன்று குவித்தார். 1943ம் ஆண்டு, இவர் தன் அதிகாரங்களை இழந்தபின் வழங்கிய ஒரு பேட்டியில், "ஏழு ஆண்டுகளுக்கு முன் நான் முக்கியமான மனிதனாக இருந்தேன். இப்போது நான் உயிரற்ற சடலமாக உலவிவருகிறேன்" என்று கூறினார். 1945ம் ஆண்டு, ஏப்ரல் 28ம் தேதி, முசோலினி, இத்தாலியிலிருந்து தப்பித்துச் செல்ல முயன்றபோது, அவரது எதிரிகள் அவரைச் சுட்டுக் கொன்றனர். அவரது சடலத்தை மிலான் நகரில் ஒரு சதுக்கத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டனர். மக்கள் அச்சடலத்தின் மீது கல்லெறிந்து, காரி உமிழ்ந்தனர்.

இரண்டு நாட்கள் சென்று, 1945ம் ஆண்டு, ஏப்ரல் 30ம் தேதி, ஹிட்லர், தற்கொலை செய்துகொண்டார். அவர் பதுங்கி வாழ்ந்த நிலத்தடி அறையில், அவர் தன்னைத்தானேச் சுட்டுக்கொண்டு இறந்தார் என்று சொல்லப்படுகிறது. அவர் ஒருவேளை 'சயனைட்' எனப்படும் நஞ்சையும் உட்கொண்டிருக்கலாம் என்று ஒரு சிலர் சந்தேகப்படுகின்றனர். அவரது உடல் உடனடியாக எரிக்கப்பட்டதால், இன்றுவரை, அவரது மரணம் குறித்து சரியான, உண்மையான விவரங்கள் வெளிவரவில்லை.

2016ம் ஆண்டு, டிசம்பர் மாதத் துவக்கத்தில், தமிழ்நாட்டில், அரசியல் தலைவர் ஒருவர் காலமானார். தமிழகத்தின் முதலமைச்சராகவும், பல கோடி மதிப்புள்ள சொத்துக்களைக் குவித்தவராகவும் கருதப்பட்ட அவரது மரணம், பதில் சொல்லமுடியாத பல கேள்விகளை விட்டுச் சென்றுள்ளது. அவரது மரணத்திற்குப்பின் வெளிவந்த உச்சநீதி மன்றத் தீர்ப்பு, அவரை ஒரு குற்றவாளியென முத்திரை குத்தியுள்ளது. கோடி, கோடியாய் சொத்துக்களைக் குவித்திருந்த அத்தலைவர், இறுதியில், ஒரு குற்றவாளியென முத்திரை குத்தப்பட்டு, ஓர் அனாதையைப்போல இறந்தது பற்றி, பலர், பலவிதமான கருத்துக்களை வெளியிட்டவண்ணம் உள்ளனர். அதேபோல், ஜெர்மன் நாடு முழுவதையும், ஏன்... சொல்லப்போனால், இவ்வுலகம் முழுவதையும் ஆளவேண்டும் என்ற கனவு வெறியுடன் செயல்பட்ட ஹிட்லர், இறுதியில், ஓர் அனாதையைப்போல இறக்கவேண்டியிருந்தது.

மனித வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது, ஹிட்லரைப் போன்ற, முசோலினியைப் போன்ற பலரை நாம் சந்திக்க முடியும். உகாண்டாவின் இடி அமின், கம்போடியாவின் போல் போட் (Pol Pot) போன்ற பலர், தங்கள் சுயநலக் கனவுகளுக்காக, தீமையின் மறுபிறப்பாகவே மாறினர். இவர்கள் அனைவரும் தங்கள் தீமைகளுக்கு ஏற்ற விளைவுகளைச் சந்தித்தனர் என்று வரலாறு சொல்கிறது. இதையே, யோபின் நண்பர் சோப்பார் தன் இரண்டாவது சுற்று உரையாடலில் யோபிடம் கூறினார். நோயுற்ற உடல், துன்புறும் மனசாட்சி, பாழாக்கப்பட்ட சொத்துக்கள், பிச்சையெடுக்கும் குடும்பம், மதிப்பு அனைத்தையும் இழந்த நிலை, இறுதியில் அழிவு என்று... கொடியவர்களுக்கு நேரும் அனைத்து கொடுமைகளையும் யோபு நூல் 20ம் பிரிவில், சோப்பார் பட்டியலிட்டுள்ளார்.

கொடியவர்கள், இவ்வுலகில் மகிழ்வுடன் வலம்வருவதுபோல் தோன்றினாலும், அவர்களுக்கு உண்மையில் என்ன நிகழும் என்பதை, சோப்பார், மிகக் கூர்மையான சொற்களில் படம்பிடித்துக் காட்டுகிறார். சோப்பாரின் கூற்றைக் கேட்கும்போது, ஹிட்லர், இடி அமின், முசோலினி ஆகியோரின் நினைவுகள் நம்மில் தோன்றி மறைகின்றன. இதோ, சோப்பாரின் கூர்மையான சொற்கள்:
யோபு நூல் 20: 5-9
கொடியவரின் மகிழ்ச்சி நொடிப்பொழுதே! கடவுளுக்கு அஞ்சாதவரின் களிப்பு கணப்பொழுதே! அவர்களின் பெருமை விசும்பு மட்டும் உயர்ந்தாலும், அவர்களின் தலை முகிலை முட்டுமளவு இருந்தாலும், அவர்கள் தங்களின் சொந்த மலம் போன்று என்றைக்கும் ஒழிந்திடுவர்; அவர்களைக் கண்டவர், எங்கே அவர்கள்? என்பர். கனவுபோல் கலைந்திடுவர்; காணப்படார்; இரவு நேரக் காட்சிபோல் மறைந்திடுவர். பார்த்த கண் இனி அவர்களைப் பார்க்காது; வாழ்ந்த இடம், அவர்களை என்றும் காணாது.

அவர்கள் விரும்பி உண்ட தீமையும், அநியாயமாகத் திரட்டியச் செல்வமும், அவர்களுக்குள் நஞ்சாக மாறும் என்பதை, சோப்பார் கடுமையாகச் சித்திரிக்கிறார்:
யோபு நூல் 20: 12-16
தீங்கு அவர்களின் வாயில் இனிப்பாய் இருப்பினும், நாவின் அடியில் அதை அவர்கள் மறைத்து வைப்பினும், இழந்து போகாமல் அதை அவர்கள் இருத்தி வைத்தாலும், அண்ணத்தின் நடுவே அதை அடைத்து வைத்தாலும், வயிற்றிலே அவர்களின் உணவு மாற்றமடைந்து, அவர்களுக்கு விரியன் பாம்பின் நஞ்சாகிவிடுமே; செல்வத்தை விழுங்கினர்; அதை அவர்களே கக்குவர்; இறைவன் அவர்களின் வயிற்றிலிருந்து அதை வெளியேற்றுவார். விரியன் பாம்பின் நஞ்சை அவர்கள் உறிஞ்சுவர்; கட்டு விரியனின் நாக்கு அவர்களைக் கொன்றுபோடும்.

ஏழைகளை வதைத்து, பிறரை ஏமாற்றி அவர்கள் திரட்டியச் செல்வத்தைப் பற்றி சோப்பார் பேசும்போது, சுயநலமிக்க அரசியல்வாதிகள், மனசாட்சியை மழுங்கடித்த வர்த்தக முதலைகள் பலர் நம் நினைவுகளில் வலம் வருகின்றனர்.
யோபு நூல் 20: 19-23
அவர்கள் ஏழைகளை ஒடுக்கி, இல்லாதவராக்கினர்; தாங்கள் கட்டாத வீட்டை அவர்கள் அபகரித்துக் கொண்டனர். அவர்களின் ஆசைக்கோர் அளவேயில்லை; ஆதலால், அவர்கள் இச்சித்த செல்வத்தில் மிச்சத்தைக் காணார். அவர்கள் தின்றபின் எஞ்சியது எதுவும் இல்லை; எனவே அவர்களது செழுமை நின்று நிலைக்காது. நிறைந்த செல்வத்திடை அவர்களுக்கு நெருக்கடி ஏற்படும்; அவலத்தின் பளுவெல்லாம் அவர்கள்மேல் விழும். அவர்கள் வயிறு புடைக்க உண்ணும்போது, இறைவன் தம் கோபக்கனலை அவர்கள்மேல் கொட்டுவார்; அதையே அவர்களுக்கு உணவாகப் பொழிவார்.

இவ்வளவு அநீதிகளை செய்தவர்கள் இறந்தபின், அவர்களை ஏற்றுக்கொள்ள இந்த மண்ணும் மறுத்துவிடும் என்று சோப்பார் கூறுவது, கவிதை நயம் மிக்க, அதே நேரம், சுட்டெரிக்கும் உண்மை.
யோபு நூல் 20: 27,29
விண்ணகம் அவர்களின் பழியை வெளியாக்கும்; மண்ணகம் அவர்களை மறுத்திட எழுந்து நிற்கும்... இதுவே பொல்லார்க்குக் கடவுள் அளிக்கும் பங்கு; அவர்களுக்கு இறைவன் குறிக்கும் உரிமைச் சொத்து.
ஹிட்லர் போன்றோருக்கு சமாதி இல்லை என்பது, கொடியவர்களை ஏற்றுக்கொள்ள இந்த மண்ணே மறுப்பு சொல்லும் என்று சோப்பார் கூறிய வார்த்தைகளுக்கு நிரூபணமாக அமைந்துள்ளது.
இவ்வாறு, யோபின் நண்பர் சோப்பார், கொடியவர்களுக்கு வரும் தீமைகளை கடுமையாகப் பட்டியலிட்டதைக் கேட்டபின், யோபு, 21ம் பிரிவில் தன் பதிலை வழங்குகிறார். சோப்பார் கூறிய கொடுமைகள் எதுவும் தீயவர்களைத் தீண்டாது என்பதுபோல் யோபு பேசுவது, நமக்குள் அவ்வப்போது எழும் கேள்விகளை, எண்ணங்களை எதிரொலிக்கிறது:
யோபு நூல் 21: 7-9
தீயோர் வாழ்வதேன்? நீண்ட ஆயுள் பெறுவதேன்? வலியோராய் வளர்வதேன்? அவர்களின் வழிமரபினர் அவர்கள்முன் நிலைபெறுகின்றனர்; அவர்களின் வழித்தோன்றல்கள் அவர்கள் கண்முன் நிலைத்திருக்கின்றனர். அவர்களின் இல்லங்களில் அச்சமற்ற அமைதி நிலவுகின்றது. கடவுளின் தண்டனை அவர்கள்மேல் விழவில்லை.

தீயோர் எவ்விதத் தீங்குமின்றி வாழ்கின்றனர் என்று மனம் வெறுத்துப் பேசும் யோபு, ஒரு சில வரிகளுக்குப் பின், தெளிவடைந்து பேசுகிறார். தீயோரின் அழிவை அவர்களது கண்களே காணும் என்ற பாணியில் அவர் பேசுவது, சோப்பார் கூறியவற்றை உறுதி செய்கிறது:
யோபு நூல் 21: 17-20
எத்தனைமுறை தீயோரின் ஒளி அணைகின்றது? அழிவு அவர்கள்மேல் வருகின்றது? கடவுள் தம் சீற்றத்தில் வேதனையைப் பங்கிட்டு அளிக்கின்றார். அவர்கள் காற்றுக்குமுன் துரும்பு போன்றோர்; சூறாவளி அடித்துப் போகும் பதர் போன்றோர். அவர்களின் தீங்கை, கடவுள், அவர்களின் பிள்ளைகளுக்கா சேர்த்து வைக்கின்றார்? அவர்களுக்கே அவர் திரும்பக் கொடுக்கின்றார்; அவர்களும் அதை உணர்வர். அவர்களின் அழிவை அவர்களின் கண்களே காணட்டும்; எல்லாம் வல்லவரின் வெஞ்சினத்தை அவர்கள் குடிக்கட்டும்.

இவ்விதம், யோபுக்கும், அவரது நண்பர்களான எலிப்பாசு, பில்தாது, சோப்பார் ஆகிய மூவருக்கும் நிகழ்ந்த இரண்டாம் சுற்று உரையாடல், 21ம் பிரிவின் இறுதியில், நிறைவடைகிறது. மூன்றாவது சுற்று உரையாடலில் நம் தேடல் பயணம் அடுத்த வாரம் தொடரும்.


28 May, 2017

Making disciples from families… குடும்பங்களில் சீடர்கள்


Meeting Risen Jesus in Galilee

The Ascension of Our Lord

After attending a convention led by Billy Graham, a woman wrote to him: “Dear Sir, I feel that God is calling me to preach the Gospel. But the trouble is that I have twelve children. What shall I do?” The televangelist replied: “Dear Madam, I am delighted to hear that God has called you to preach the Gospel. I am even more delighted to hear that He has already provided you with a congregation in your own home.”
Humorous though this may sound, it is the simple truth. While the lady saw the children as a hurdle to pursue her mission of preaching the Gospel, Mr Graham saw them as the means to fulfil that mission. All of us have a ‘congregation’ in our own families where we are called to share the good news and make disciples. This is the core message of the Feast we are celebrating today – the Feast of the Ascension!

This Feast is not about Jesus going up into heaven in a splendid show of glory. It is more about the final message Jesus shared with his disciples. In the Gospels as well in the Acts of the Apostles there are different versions of where and when the Ascension took place. Was it in Jerusalem, in Bethany or in Galilee? Was it forty days later or soon after the Resurrection? These are unanswered questions. The Evangelists and the author of the Acts of the Apostles were not interested in the historical details of the event. They were more interested in the message – the Mission – entrusted to the disciples by Jesus. Hence, dear Friends, we shall focus our attention on the farewell message of Jesus.

This message, like many other statements of Jesus, has been interpreted by Christians in very different (I am afraid, contrary) ways. The parting message of Jesus given in today’s Gospel goes like this: Go therefore and make disciples of all nations (Matthew 28:19). In the Gospel of Mark the message is: Go into all the world and proclaim the good news to the whole creation. (Mark 16:15).

The moment we hear the phrases ‘making disciples’ and ‘proclaiming the good news’, our minds tend to assign these ‘duties’ to Priests and Religious. It would be good to take a look at those standing around Jesus when these mission statements were made. They were all simple family persons – fishermen, tax collector etc.
Moreover, most of us may imagine churches and pulpits as appropriate places to proclaim the good news, as did the mother of the twelve children. Billy Graham tried to bring her back to the solid ground by saying that the family – familiar surrounding – is the best ‘pulpit’. In the Gospel of Matthew, we see that Jesus chooses Galilee as the final meeting spot. Galilee is the place where Jesus and his disciples spent quality time together. By choosing Galilee, Jesus gives us a clear indication that from familiar surroundings the Gospel needs to be proclaimed.

How are we to ‘proclaim the good news’? Many interpretations have been given to this statement and, accordingly, many methods of this ‘proclamation’ have been adopted. Here is one such attempt described by Joseph Bayly in his book ‘The Gospel Blimp’. It is about the attempt of Christian neighbours reaching out to the community for Christ. The family purchased a hot air balloon to broadcast the Gospel to the community and dropped "bombs" on the town (These "bombs" were tracts wrapped in coloured cellophane). They were also blaring Gospel songs so loudly from the blimp that the people had to run away closing their ears and the dogs began howling in response. In spite of the trouble and expense of this attempt at witnessing to Jesus, it failed miserably.

The point Joseph Bayly was making is that there is no substitute for loving care and personal witness, even though this is slow, time-consuming, likely to cause anxiety and even likely to create some hostility. We have heard these sayings, "I'd rather see a sermon than hear one", and "Actions speak louder than words." There is truth in these sayings, but there are still those times when words are necessary, and we must speak. But, unfortunately, we have come to lay more emphasis on ‘speaking’ – rather, ‘shouting’ – the good news than ‘living’ the good news.

To correct this aggressive mode of proclaiming the good news, we need to embrace some basic biblical principles that make it possible for us to lead others to the same personal faith in Christ that we enjoy. They are suggested by Bill Hybels and Mark Mittelberg in their book, “Becoming a Contagious Christian...”. I have not read this book, but when I browsed the internet for this book, what caught my attention was the cover-page illustration of this book - a row of match sticks with one of them just having caught fire. One can easily imagine what would happen to the other match sticks! Given, that any symbol is limited, this illustration gives me some idea as to what would be the effect of a ‘Contagious Christian’ in a group.

Contagious Christians like St Francis of Assisi, St Mother Teresa have ‘proclaimed the good news’ without being aggressive with their eloquence. Their life and actions spoke louder than words. They were ‘walking sermons’ all their lives. Here is an anecdote about Dr Albert Schweitzer:
Reporters and city officials gathered at a Chicago railroad station one afternoon in 1953. The person they were meeting was the 1952 Nobel Peace Prize winner. A few minutes after the train came to a stop, a giant of a man – six feet four inches – with bushy hair and a large moustache stepped from the train. Cameras flashed. City officials approached him with hands outstretched. Various people began telling him how honored they were to meet him.
The man politely thanked them and then, looking over their heads, asked if he could be excused for a moment. He quickly walked through the crowd until he reached the side of an elderly black woman who was struggling with two large suitcases. He picked up the bags and with a smile, escorted the woman to a bus. After helping her aboard, he wished her a safe journey. As he returned to the greeting party he apologized, “Sorry to have kept you waiting.”
The man was Dr. Albert Schweitzer, the famous missionary doctor who had spent his life helping the poor in Africa. In response to Schweitzer’s action, one member of the reception committee said with great admiration to the reporter standing next to him, “That’s the first time I ever saw a sermon walking.” (Francis Kong)
It is more interesting to note that Albert was a famous preacher in his younger days. So, he must have known the difference between ‘proclaiming the good news’ from the pulpit and through his clinic in Africa.

To drive home the message that the Gospel of Christ is best served by personal examples, Jesus did not choose his disciples to be eloquent preachers but his true witnesses.
There is an ancient legend about Jesus’ ascension into heaven. He is met by the angel Gabriel who asks him, "Now that your work is finished, what plans have you made to ensure that the truth that you brought to earth will spread throughout the world?"
Jesus answered, "I have called some fishermen and tax-collectors to walk along with me as I did my Father’s will."
"Yes, I know about them," said Gabriel, "but what other plans have you made?"
Jesus replied, "I taught Peter, James and John about the kingdom of God; I taught Thomas about faith; and all of them were with me as I healed and preached to the multitudes."
Gabriel replied. "But you know how unreliable that lot was. Surely you must have other plans to make sure your work was not in vain."
Jesus quietly replied to Gabriel "I have no other plans. I am depending on them!" (Rev. Martin Dale)

The Feast of the Ascension reminds us that Jesus does not have ‘other plans’ than us, to continue ‘proclaiming the good news’ and ‘making disciples’!

 Go and Make Disciples
http://katy-katyrose.blogspot.it


ஆண்டவரின் விண்ணேற்றம்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் புகழ்பெற்ற விவிலியப் போதகர், பில்லி கிரஹாம் (Billy Graham) அவர்கள், மேடைகளிலும், தொலைகாட்சி நிகழ்வுகளிலும் ஆற்றியுள்ள உரைகள், பல கோடி மக்களின் உள்ளங்களைத் தொட்டுள்ளன. அவரது உரையை தொடர்ந்து கேட்டுவந்த ஓர் இல்லத்தலைவி, ஒருநாள், கிரஹாம் அவர்களுக்கு மடலொன்றை அனுப்பினார். "அன்பு ஐயா, கடவுள் தன் நற்செய்தியைப் போதிக்கும்படி என்னை அழைப்பதை நான் உணர்கிறேன். ஆனால், எனக்கு பன்னிரு குழந்தைகள் உள்ளனர். அதுவே எனக்குள்ள பிரச்சனை. நான் என்ன செய்யட்டும்?" என்று அப்பெண் எழுதியிருந்தார்.
சில நாள்கள் சென்று, கிரஹாம் அவர்களிடமிருந்து, இல்லத்தலைவிக்கு பதிலொன்று வந்தது. "அன்பு அம்மையாரே, நற்செய்தியைப் போதிக்கும்படி கடவுள் உங்களை அழைக்கிறார் என்பதைக் கேட்டு, எனக்கு மிக்க மகிழ்ச்சி. அதைவிட, எனக்கு, கூடுதல் மகிழ்வு என்னவென்றால், உங்கள் நற்செய்தி போதனைகளைத் துவங்குவதற்கு, கடவுள் ஏற்கனவே, உங்கள் வீட்டிற்குள் ஒரு சபையை உருவாக்கிக் கொடுத்துள்ளார் என்பதே!" என்று கிரஹாம் அவர்கள் பதில் அனுப்பியிருந்தார்.

உங்கள் வீட்டிற்குள்ளேயே நீங்கள் நற்செய்தியைப் போதிக்கமுடியும் என்று, கிரஹாம் அவர்கள் கூறியது, இந்த ஞாயிறன்று நாம் கொண்டாடும், விண்ணேற்றப் பெருவிழாவின் கருப்பொருளுக்கு நம்மை அழைத்துவருகிறது. இப்பெருவிழாவின் கருப்பொருள், இயேசு, பிரமிக்கத்தக்க முறையில், விண்ணேற்றம் அடையும் நிகழ்வு அல்ல; மாறாக, அவர் தன் சீடர்களுக்கு வழங்கிய இறுதி அன்புக் கட்டளைகள். நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்(மத்தேயு 28:19) என்ற கட்டளையை, மத்தேயு நற்செய்தியும், "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" (மாற்கு 16:15) என்ற கட்டளையை, மாற்கு நற்செய்தியும் குறிப்பிட்டுள்ளன.
'சீடராக்குதல்', 'நற்செய்தியைப் பறைசாற்றுதல்' என்ற சொற்களைக் கேட்டதும், இவற்றை ஆற்றவேண்டியவர்கள் அருள்பணியாளர்களும், துறவியரும் என்ற தவறான எண்ணம் எழக்கூடும். இயேசுவிடமிருந்து இந்த இறுதி கட்டளைகளைப் பெற்றவர்களில் யாரும் அருள்பணியாளரோ, துறவியோ இல்லை. அவர்கள் அனைவருமே குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருந்த சாதாரணத் தொழிலாளிகள். இந்தக் கோணத்திலிருந்து பார்த்தால், நாம் அனைவரும் நற்செய்தியைப் பறைசாற்றுவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணரலாம். மேலும், இப்பணிகளை ஆற்ற சிறந்த இடங்கள், கோவில், பிரசங்க மேடை, மக்கள் கூட்டம் என்ற பாணியில் நம் எண்ணங்கள் செல்லக்கூடும். அவ்வேளையில், பில்லி கிரஹாம் அவர்கள் இல்லத்தலைவிக்கு அனுப்பிய பதில் கடிதத்தை நினைத்துப் பார்க்கலாம்.
நற்செய்தியைப் போதிக்கச் சொல்லி இறைவன் தன்னை அழைப்பதாக இல்லத்தலைவி சொன்னபோது, பில்லி கிரஹாம் போன்று, தானும் மேடைகளில் ஏறி நின்று போதிப்பதை, அவர்  நினைத்துப் பார்த்திருப்பார். தன் அழைப்பிற்கு, ஒரு தடையாக தன் குடும்பம் இருக்கின்றது என்பதை அவர் தன் மடலில் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். கிரஹாம் அவர்கள் அனுப்பிய பதிலில், இல்லத்தலைவியின் கண்ணோட்டத்தை மாற்றியமைக்க அவர் அழைக்கிறார். இல்லத்தலைவியின் நற்செய்திப் போதனைக்கு, அவரது குடும்பம் ஒரு தடையல்ல, மாறாக, அதுவே, அப்பணிக்கு தகுந்த ஆரம்பம் என்பதை, கிரஹாம் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்.

நற்செய்தியைப் பறைசாற்றுவதும், சீடர்களை உருவாக்குவதும் உலகெங்கும் நிகழவேண்டிய ஒரு பணி என்றாலும், அதன் ஆரம்பம் அவரவர் வாழும் இடங்களில் துவங்கவேண்டும் என்பதை, இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்லித்தருகிறது. இயேசு தன் சீடர்களை இறுதி முறையாகச் சந்தித்த நிகழ்வு, இன்றைய நற்செய்தியாக நம்மை அடைந்துள்ளது. இந்த நிகழ்வு, கலிலேயாவில் நிகழ்ந்ததென்று, நற்செய்தியாளர் மத்தேயு குறிப்பிடுவது, நம் சிந்தனைகளைத் தூண்டுகிறது.
இயேசு வாழ்ந்த காலத்தில், யூதேயா, சமாரியா, கலிலேயா ஆகிய மூன்று பகுதிகள் இருந்தன. இவற்றில், எருசலேம் கோவிலை மையமாகக் கொண்டிருந்த யூதேயா, உயர்ந்ததாக, புனிதம் மிக்கதாக கருதப்பட்டது. இதற்கடுத்திருந்த சமாரியா, இஸ்ரயேல் மக்களின் பார்வையில் மிகத் தாழ்ந்ததாகக் கருதப்பட்டது. வடக்கில், ஏனைய நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்த கலிலேயா, பிற இனத்தாருடன் கலப்படம் கொண்ட பகுதியாக, புனிதம் குறைந்த பகுதியாகக் கருதப்பட்டது.

இயேசு, தன் நற்செய்தியை அறிவிக்க, இறையரசை அறிமுகப்படுத்த கலிலேயாவைத் தேர்ந்தெடுத்தார் என்று, மத்தேயு நற்செய்தி கூறியுள்ளது (மத். 4:12-17). கலிலேயக் கடற்கரையில் அவர் தேர்ந்தெடுத்த சீடர்களுடன் இறுதி சந்திப்பை மேற்கொண்டது, மீண்டும் கலிலேய மலைப்பகுதியே! தன் பணிவாழ்வைத் துவக்கிய அதே பகுதிக்கு, தான் சீடர்களைத் தேர்ந்தெடுத்த அதே பகுதிக்கு, தன் சீடர்களை மீண்டும் அழைத்து, அங்கிருந்து அவர்களது நற்செய்திப் பணி துவங்கவேண்டும் என்று இயேசு பணிக்கிறார்.
நற்செய்தியைப் பறைசாற்றுதல், சீடர்களை உருவாக்குதல் போன்ற உன்னத பணிகள், அவரவர் வாழும் சூழல்களில், இல்லங்களில் துவங்கவேண்டும் என்பதை இன்றைய நற்செய்தி வழியே இயேசு நமக்கு மீண்டும் நினைவுறுத்துகிறார். ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவின் கருப்பொருள் இதுவே!

'நற்செய்தியைப் பறைசாற்றுதல்' என்ற பணியை, பிரம்மாண்டமாக செய்யவேண்டும் என்ற ஆவலில், அதனை ஒரு கண்காட்சியாக, விளம்பரமாக மாற்றும்போது, அதன் விளைவுகள் பாதகமாக அமையக்கூடும். 1960களில், ஜோ பெய்லி (Joe Bayly) என்பவர், 'The Gospel Blimp', அதாவது, 'நற்செய்தி வானூர்தி' என்ற கதையை, ஓர் உவமையாக வெளியிட்டார். நற்செய்தியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ஒரு கிறிஸ்தவ குழுவினர், தங்கள் ஊரில், நற்செய்தி, அனைவரையும் அடையவேண்டும் என்ற ஆர்வத்தில், Blimp எனப்படும் வானூர்தி ஒன்றை வாடகைக்கு எடுத்தனர். பொதுவாக, பெரும் நிறுவனங்கள் வான் வழி விளம்பரங்களை மேற்கொள்ள, Blimp எனப்படும் வானூர்தியைப் பயன்படுத்தினர். அதே முறையைப் பின்பற்றி, இந்த விவிலிய ஆர்வலர்கள், விவிலிய வாசங்கள் அடங்கிய சிறு, சிறு நூல்களை, சிவப்பு பிளாஸ்டிக் பைகளில் அடைத்து, Blimp வழியே, ஊரெங்கும் போட்டனர். வானிலிருந்து விழுந்த அந்த பைகள், ஏறத்தாழ குண்டுகள் போல், ஒவ்வொரு வீட்டின் கூரையிலும் விழுந்தன. மேலும், அதே வானூர்தி வழியே, நற்செய்தி பாடல்கள் மிக சப்தமாக ஊரெங்கும் ஒலிக்கப்பட்டது. மக்கள் அதைக் கேட்டு தங்கள் காதுகளை மூடிக்கொண்டனர். அதே வேளையில், அந்த சப்தத்தால் பெரிதும் கலவரமடைந்த நாய்கள், ஊரெங்கும் ஊளையிட ஆரம்பித்தன. விவிலிய ஆர்வலர்கள் விரும்பியதற்கு முற்றிலும் எதிராக, மக்கள் அந்த 'விவிலியத் தாக்குதலை' வெறுத்தனர்.

நேரடியான மனிதத் தொடர்பு இன்றி, கருவிகளைக் கொண்டு பறைசாற்றப்படும் நற்செய்தி, மக்களை, இறைவனிடமிருந்தும், நற்செய்தியிடமிருந்தும் தூரமாக்கும் என்பதை, ஜோ பெய்லி அவர்கள், இந்த உவமை வழியே கூறியுள்ளார். மே 28, இஞ்ஞாயிறன்று, கத்தோலிக்கத் திருஅவை, உலக சமூகத் தொடர்பு நாளை சிறப்பிக்கும் வேளையில், நற்செய்தியை எவ்விதம் நாம் மக்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும் என்பதை சிந்திப்பது உதவியாக இருக்கும். சமூகத் தொடர்புக் கருவிகள் உலகெங்கும் பரவியுள்ளன, மிகுந்த சக்தி மிக்கதாக மாறி வருகின்றன என்பதை அறிவோம். ஆனால், அக்கருவிகளைப் பயன்படுத்தும் ஊடகங்கள் அனைத்தும், மனிதர்களின் நம்பிக்கையைக் குலைக்கும் செய்திகளைப் பரப்புவதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றன என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் பல்வேறு உரைகளிலும், இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் 51வது உலக சமூகத் தொடர்பு நாளுக்கென வழங்கியச் செய்தியிலும் கூறியுள்ளார். நல்ல செய்திகளை மறைத்துவிட, அல்லது, குறைத்துவிட உலக ஊடகங்கள் ஒன்று திரண்டுள்ள இன்றையச் சூழலில், நற்செய்தியை தங்கள் வாழ்வாக்கியுள்ள ஒரு சிலரின் வழியே, இன்றும் நற்செய்தி பறைசாற்றப்படுகிறது என்பதை உணர்ந்து, இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

பல நேரங்களில், நாம், வாழ்வில் பகிர்ந்துகொள்ளும் நற்செய்திகள், வாய்வார்த்தைகளாக இருக்கவேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. வாய் வார்த்தைகளை விட நம் வாழ்வு நற்செய்தியாக மாற வேண்டும் என்பதை அசிசி நகர் புனித பிரான்சிஸ் சொல்லித் தந்தார்.
ஒரு நாள், புனித பிரான்சிஸ், ஓர் இளம் துறவியை அழைத்து, "வாருங்கள் நாம் ஊருக்குள் சென்று போதித்துவிட்டு வருவோம்" என்று கூறி, உடன் அழைத்துச் சென்றார். போதிப்பதற்கு தன்னை பிரான்சிஸ் அழைத்துச் செல்கிறார் என்று உணர்ந்த அந்த இளையவர் மிகவும் மகிழ்ந்தார். ஊருக்குள் நுழையும் நேரத்தில், ஒரு மரத்தின் மேலிருந்த கூட்டிலிருந்து கீழே விழுந்திருந்த ஒரு குஞ்சுப் பறவையை மீண்டும் மரமேறி அந்தக் கூட்டில் வைத்துவிட்டு இறங்கினார் பிரான்சிஸ். வயலில் அறுவடை செய்துகொண்டிருந்த பணியாள்களுடன் பிரான்சிஸ் இறங்கி வேலை செய்தார். இதைக் கண்ட அந்த இளம் துறவியும் குனிந்து வேலைகள் செய்தார். ஊருக்குள் சென்றதும், அங்கு ஒரு கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்த வயதானப் பெண்மணிக்கு பிரான்சிஸ் தண்ணீர் இறைக்க உதவினார். அவருடன் அந்தத் தண்ணீர் பாத்திரங்களை அவர் வீடுவரை சுமந்து சென்றார். இப்படி நாள் முழுவதும், அந்த ஊரில் இருந்த அனைவருடனும் சேர்ந்து பல பணிகள் செய்தார் பிரான்சிஸ். ஒவ்வொரு முறையும் பிரான்சிஸ் ஓர் இடத்தில் நிற்கும்போது, அந்த இடத்தில் அவர் போதிக்கப் போகிறார் என்று இளையவர் எண்ணினார். ஆனால், ஒரு வார்த்தையும் சொல்லாமல், பிரான்சிஸ் பல உதவிகளைச் செய்தார். அந்த நாள் இறுதியில் பிரான்சிஸ் கோவிலுக்குச் சென்றார். அவர் கட்டாயம் அந்த நேரத்தில் போதிப்பார் என்று இளையவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, பிரான்சிஸ் கோவிலில் அமைதியாக செபித்துவிட்டுக் கிளம்பினார்.
இருவரும் மீண்டும் ஊரைவிட்டு வெளியே வந்து, தங்கள் துறவகத்தை நோக்கிச் செல்லும்போது, இளையவர் தன் உள்ளத்தில் நிறைந்திருந்த ஏமாற்றத்தை வெளியிட்டார். "போதிப்பதற்காகத் தானே ஊருக்குள் சென்றோம். இப்போது போதிக்காமலேயே திரும்புகிறோமே!" என்று தன் உள்ளக் குமுறலைக் கூறினார்.  "நாம் தேவையான அளவு இன்று போதித்து விட்டோம். நமது செயல்கள் வார்த்தைகளை விட வலிவானவை. தேவைப்படும்போது மட்டும் வார்த்தைகளை நாம் பயன்படுத்தவேண்டும்" என்று அந்த இளையவருக்கு பிரான்சிஸ் கூறினார்.

வாய் வார்த்தைகளால் மேடைகளில் பறைசாற்றப்படும் நற்செய்தியைக் காட்டிலும், வாழ்க்கையால் உணர்த்தப்படும் நற்செய்திகள் இன்னும் ஆழமான தாக்கங்களை உருவாக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். வாழ்க்கையால் நற்செய்தியைப் பறைசாற்றிய பலரில், உலகப் புகழ்பெற்ற Albert Schweitzer என்ற மருத்துவரும் ஒருவர். இவர் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியொன்று நமக்குப் பாடமாக அமைகிறது.

Albert Schweitzer அவர்கள், 25 வயது இளைஞனாக இருந்தபோது, மறையுரை வழங்குவதில், இறையியல் வகுப்புக்கள் நடத்துவதில் தன்னிகரற்ற புகழ் பெற்றிருந்தார். ஆப்ரிக்க நாடுகளில் நிலவிவந்த தேவைகளைப் பற்றி கேள்விப்பட்ட ஆல்பர்ட் அவர்கள், தனது 30வது வயதில், பேராசிரியர் பதவியை விட்டுவிட்டு, மருத்துவம் படித்து, ஆப்ரிக்காவில் மிகவும் பின்தங்கிய ஒரு பகுதியில் மருத்துவ மனையொன்றை நிறுவி பணிசெய்யத் துவங்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார். இளமையில் நற்செய்தியை வார்த்தைகளாய் முழங்கிப் புகழ்பெற்ற ஆல்பர்ட் அவர்கள், தன் வாழ்வின் பிற்பகுதியில் நற்செய்தியை வாழ்வாக்கினார்.
இவரது நற்பணிகளுக்காக, 1952ம் ஆண்டு, உலக அமைதிக்கான நொபெல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. இப்பரிசைப் பெற்ற அடுத்த ஆண்டு, ஆல்பர்ட் அவர்கள், அமெரிக்காவின் சிக்காகோ நகருக்கு இரயிலில் சென்றார். அவரை வரவேற்க பத்திரிக்கையாளர்களும், பெரும் தலைவர்களும் இரயில் நிலையத்தில் காத்திருந்தனர். அவர் இரயிலை விட்டு இறங்கியதும், கரவொலியும், காமிரா ஒளிவிளக்களும் அந்த இடத்தை நிறைத்தன. தன்னை சிறிது நேரம் மன்னிக்க வேண்டும் என்று வேண்டியபடி, ஆல்பர்ட் அவர்கள், அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு சென்றார். அந்த இரயில் நிலையத்தில் இரு பெட்டிகளைச் சுமந்தபடி, தடுமாறி நடந்துகொண்டிருந்த வயதான, கறுப்பின பெண்மணி ஒருவருக்கு உதவிசெய்து, அவரை ஒரு பேருந்தில் ஏற்றிவிட்டபின், தனக்காகக் காத்திருந்த கூட்டத்திடம் வந்தார் ஆல்பர்ட். நடந்ததைக்கண்ட ஒரு பத்திரிகையாளர் மற்றொருவரிடம், "நான் இதுவரை கோவில்களில் மறையுரைகளைக் கேட்டிருக்கிறேன். இதுதான் முதல்முறையாக, ஒரு நடமாடும் மறையுரையைப் பார்த்திருக்கிறேன்" என்று கூறினார்.

கோவில்களில், பிரசங்க மேடைகளில் பறைசாற்றப்படும் நற்செய்தியைவிட, இவ்வுலகை இறையரசாக மாற்றவேண்டும் என்ற அர்ப்பண உணர்வுடன் பணியாற்றிய ஆல்பர்ட் போன்ற பல்லாயிரம் உள்ளங்களின் வாழ்வு பறைசாற்றியுள்ள நற்செய்தியே, இருபது நூற்றாண்டுகளாய், அதிகமாய், ஆழமாய் இவ்வுலகில் வேரூன்றியுள்ளது என்று சொன்னால், அது முற்றிலும் உண்மை. வாழ்வால் நற்செய்தியைப் பறைசாற்றுவதற்குப் பெரும் அறிவாளிகள், பேச்சாளர்கள் தேவையில்லை. இயேசுவின் சீடர்களே இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.

இயேசு விண்ணேற்றம் அடைந்ததும் நிகழ்ந்ததாய்ச் சொல்லப்படும் ஒரு கற்பனைக் கதை இது. இயேசு விண்ணகம் சென்றதும், தலைமைத்தூதர்களில் ஒருவரான கபிரியேல், அவரைச் சந்தித்தார். "உங்கள் பணியைத் திறம்பட முடித்துவிட்டீர்கள். உலகில் உங்கள் நற்செய்தியைத் தொடர்ந்து பரப்புவதற்கு என்ன திட்டங்கள் வைத்துள்ளீர்கள்?" என்று கேட்டார்.
"என்னுடையப் பணியைத் தொடரும்படி, ஒரு சில மீனவர்களிடமும், வரி வசூலிப்பவர்களிடமும் சொல்லியிருக்கிறேன்" என்று இயேசு சொன்னதும், கபிரியேல் தூதர் அவரிடம், "யார்... அந்தப் பேதுரு, தோமா இவர்களைப் பற்றிச் சொல்கிறீர்களா? அவர்களைப் பற்றித்தான் உங்களுக்கு நன்கு தெரியுமே... ஒருவர் உங்களைத் தெரியாது என்று மறுதலித்தார், மற்றொருவர் உங்களை நம்பவில்லை. இவர்களை நம்பியா இந்தப் பணியை ஒப்படைத்தீர்கள்? கட்டாயம் வேறு சில நல்ல திட்டங்கள் உங்கள் எண்ணத்தில் இருக்கவேண்டும், இல்லையா?" என்று கேட்டார்.
இயேசு அவரிடம் அமைதியாக, "நற்செய்திப் பணியை இவர்களை நம்பியே நான் ஒப்படைத்துள்ளேன். இவர்களைத்தவிர, என்னிடம் வேறு எந்தத் திட்டமும் கிடையாது" என்று பதிலளித்தார்.

இருபது நூற்றாண்டுகளைத் தாண்டி நற்செய்தி இன்றும் இவ்வுலகில் அர்த்தம் உள்ளதாக இருக்கிறது என்றால், அதற்குக் காரணம், தங்கள் அறிவுத்திறன் கொண்டு, வார்த்தைப் புலமை கொண்டு, நற்செய்தியைப் போதித்தவர்கள் அல்ல... நற்செய்தியும், அதன் மையமான இயேசுவும்தான் காரணம்.
இயேசுவும் அவர் வழங்கிய நற்செய்தியும் மையங்கள் என்பதை மறந்துவிட்டு, நற்செய்தியைப் போதிப்பவரின் புகழ், அவரது பேச்சுத் திறன் இவற்றை மையங்கள் என்று நாம் நம்பியபோதெல்லாம் பிரச்சனைகள் எழுந்துள்ளன என்பதை கிறிஸ்தவ வரலாறு மீண்டும் மீண்டும் நமக்குச் சொல்லித்தருகிறது.
வார்த்தைகளை அதிகம் கூறாமல், நற்செய்தியை வாழ்ந்து காட்டிய அசிசி நகர் புனித பிரான்சிஸ், மருத்துவர் Albert Schweitzer, புனித அன்னை தெரேசா என்று பல்லாயிரம் உன்னதப் பணியாளர்களின் வாழ்வால் நற்செய்தி இன்றும் நம்மிடையே வாழ்கிறது என்பதை எண்ணி, இறைவனுக்கு நன்றி சொல்வோம். விண்ணேற்றம் அடைந்த இயேசு நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள் என்று, சீடரிடம் கூறிய சொற்கள், நமது எடுத்துக்காட்டான வாழ்வின் வழியே நிறைவேறும் என்பதை நம்புவோம். செயல்படுத்துவோம்.


23 May, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 21

I know my Redeemer lives

யோபின் நண்பர் பில்தாது, "தீயவரின் ஒளி அணைந்துபோம்" (யோபு 18:5) என்று ஆரம்பித்து, யோபின் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடுக்கும் சாபக் கணைகள், யோபு நூல் 18ம் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன:
யோபு 18: 12,13,15,16-18
பட்டினி அவர்களின் வலிமையை விழுங்கிடும்; தீங்கு அவர்களின் வீழ்ச்சிக்குக் காத்திருக்கும். நோய் அவர்களின் தோலைத் தின்னும்... அவர்களின் கூடாரங்களில் எதுவும் தங்காது; அவர்களின் உறைவிடங்களில் கந்தகம் தூவப்படுகின்றது. கீழே அவர்களின் வேர்கள் காய்ந்துபோம்; மேலே அவர்களின் கிளைகள் பட்டுப்போம். அவர்களின் நினைவே அவனியில் இல்லாதுபோம்... ஒளியிலிருந்து இருளுக்குள் அவர்கள் தள்ளப்படுவர்; உலகிலிருந்தே அவர்கள் துரத்தப்படுவர்.

கடுகளவு கனிவும் இல்லாமல், ஒன்றன்பின் ஒன்றாக, பில்தாது சுமத்திய இந்தச் சாபங்களுக்கு, யோபு கூறிய பதில் மொழி, 19ம் பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பதிலுரையில், யோபு வெளிப்படுத்தும் வார்த்தைகள், இதுவரை அவர் வெளிப்படுத்தாத வேதனை உணர்வுகளை வெளிக்கொணர்கின்றன. இச்சொற்கள், யோபு என்ற தனி மனிதருடைய வேதனை மட்டுமல்ல, மாறாக, காரணம் ஏதுமின்றி காயப்பட்டுக் கதறும், அனைத்து மனிதரின் வேதனையை வெளிப்படுத்துவனவாக ஒலிக்கின்றன என்பது, பல விவிலிய விரிவுரையாளர்களின் கருத்து.

தன்னை இறைவன், எவ்வாறெல்லாம் துன்புறுத்தியுள்ளார் என்றும், குறிப்பாக, தன் தோல் மீது நோயை உருவாக்கியதால், தன்னை, மற்றவர்களிடமிருந்து எவ்வளவுதூரம் தனிமைப்படுத்தினார் என்றும் கூறும் யோபு, தன் மீது இரக்கம் காட்டுமாறு, நண்பர்களிடம் கெஞ்சுகிறார்:
யோபு 19: 21-22
என் மேல் இரங்குங்கள்; என் நண்பர்காள்! என் மேல் இரக்கம் கொள்ளுங்கள்; ஏனெனில் கடவுளின் கை என்னைத் தண்டித்தது. இறைவனைப் போல் நீங்களும் என்னை விரட்டுவது ஏன்? என் சதையை நீங்கள் குதறியது போதாதா?

19ம் பிரிவின் ஆரம்பத்திலிருந்து 22ம் இறைச்சொற்றொடர் முடிய, வேதனைக் கதறலை, பல வழிகளில் வெளிப்படுத்திய யோபிடம், ஒரு திடீர் மாறுதல் உருவாகிறது. தனக்குள் உருவான அந்த மாற்றம், அழியாமல் காக்கப்படவேண்டும் என்று யோபு விரும்புகிறார். எனவே, தன் வார்த்தைகள், ஏட்டுச்சுருளில் எழுதப்படவேண்டும் என்று சொல்லும் யோபு, அதே மூச்சில், தன் வார்த்தைகள் பாறையில் பொறிக்கப்படவேண்டும் என்று கூறுகிறார்.
யோபு 19: 23-24
ஓ! என் வார்த்தைகள் இப்பொழுது வரையப்படலாகாதா? ஓ! அவை ஏட்டுச்சுருளில் எழுதப்படலாகாதா? இரும்புக்கருவியாலும் ஈயத்தாலும் என்றென்றும் அவை பாறையில் பொறிக்கப்பட வேண்டும்.

இதைத் தொடர்ந்து, யோபு வெளிப்படுத்தும் நம்பிக்கை அறிக்கை, நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது:
யோபு 19: 25-27
என் மீட்பர் வாழ்கின்றார் என்றும் இறுதியில் மண்மேல் எழுவார் என்றும் நான் அறிவேன். என் தோல் இவ்வாறு அழிக்கப்பட்ட பின், நான் சதையோடு இருக்கும்போதே கடவுளைக் காண்பேன். நானே, அவர் என் பக்கத்தில் நிற்கக் காண்பேன்; என் கண்களே காணும்; வேறு கண்கள் அல்ல; என் நெஞ்சம் அதற்காக ஏங்குகின்றது.
தனது நம்பிக்கை அறிக்கை, காலம் காலமாய் அழியாமல் காக்கப்படும் கல்வெட்டைப் போல இருக்கவேண்டும் என்று யோபு விரும்பியபடியே, இவ்வரிகள், ஏறத்தாழ 5000 ஆண்டுகளாய், பலருக்கு நம்பிக்கை தந்துள்ள வரிகளாக அமைந்துள்ளன. உயிர் வாழும் தன் இறைவனைக் குறித்து யோபு சொன்ன சொற்கள், பல பாடல்களாக, கவிதைகளாக உருவெடுத்துள்ளன.

I know my Redeemer lives

இந்த நம்பிக்கை அறிக்கையில், யோபு கூறும் சில சொற்களில், நாம் சிறிது ஆழமானத் தேடலை மேற்கொள்ள முயல்வோம். "என் மீட்பர் வாழ்கின்றார் என்று நான் அறிவேன்" என்று யோபு கூறுவது, இறைவனைக் குறித்து அவர் கொண்டிருக்கும் நேரடியான, நெருக்கமான, அனுபவத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள். விவிலியத்தில் 'அறிதல்' என்ற சொல், வெறும் ஏட்டளவு அறிவை சுட்டிக்காட்டும் சொல் அல்ல, அது, ஒருவர் மற்றொருவருடன் கொள்ளும் ஆழமான அனுபவ அறிவைச் சுட்டிக்காட்டும் சொல்.
தொடக்க நூல் 4ம் பிரிவின் துவக்கத்தில் நாம் வாசிக்கும் வரிகள் இதனை விளக்கும். "ஆதாம் தன் மனைவி ஏவாளுடன் கூடி வாழ்ந்தான். அவள் கருவுற்று, காயினைப் பெற்றெடுத்தாள்" (தொடக்க நூல் 4:1) என்று காணப்படும் இவ்வரிகள், எபிரேய மொழியில், "ஆதாம் தன் மனைவி ஏவாளை அறிந்தான். அவள் கருவுற்று, காயினைப் பெற்றெடுத்தாள்" என்று கூறப்பட்டுள்ளது. எபிரேய மொழியில், ஆழமான உறவைக் குறிக்க, 'jadac', அதாவது, 'அறிதல்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. "என் மீட்பரை நான் அறிவேன்" என்று யோபு கூறும்போது, இறைவனைப்பற்றி யோபு கொண்டிருந்த அறிவு, ஏடுகளில் படித்தறிந்ததல்ல, பிறரிடம் கேட்டறிந்ததல்ல; மாறாக, வாழ்வில், நேருக்கு நேர் பெற்ற அனுபவ அறிவு என்பதைப் புரிந்துகொள்கிறோம்.

அடுத்ததாக, நம் கவனத்தை ஈர்க்கும் பொருள்செறிந்த சொல், "மீட்பர்". எபிரேய மொழியில் “go'el” என்ற இச்சொல், பெயர்ச்சொல்லாக, வினைச்சொல்லாக, பல வடிவங்களில், பழைய ஏற்பாட்டில், 118 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. "மீட்பர்" அல்லது, “go'el” என்ற இச்சொல்லின் அடிப்படை பொருள்: "கடமைகளைச் செய்யும் உறவினர்". துன்பத்தில், பிரச்சனையில் இருக்கும் உறவினரை, சிக்கல்களிலிருந்து விடுவிப்பவரையே, "மீட்பர்" என்ற சொல் சுட்டிக்காட்டுகிறது. "மீட்பர்" என்ற சொல்லில் ஆய்வுகள் மேற்கொண்டுள்ள விவிலிய ஆய்வாளர்கள், அவர் ஆற்றவேண்டிய மூவகைக் கடமைகளைப்பற்றிக் கூறுகின்றனர்.

முதல் கடமை, பழி தீர்ப்பது. அதாவது, உறவினர் ஒருவரை, வேறொருவர் திட்டமிட்டு கொலை செய்துவிட்டால், மாசற்றவரின் இரத்தத்தைச் சிந்திய அவரைக் கொலை செய்து, பழி தீர்ப்பது, 'மீட்பருக்கு' உள்ள முதல் கடமை. இதைக் குறித்து மோசே வழங்கியச் சட்டங்கள், எண்ணிக்கை நூலிலும் (35:19-27), இணைச்சட்ட நூலிலும் (19:11-12) காணப்படுகின்றன.

இரண்டாவது கடமை, கடனிலிருந்து மீட்பது. உறவினர் ஒருவர் பட்ட கடனால், அவர் தன் சொத்துக்களை, நிலங்களை இழந்து, இறுதியில் அவரும், அவரது குடும்பத்தினரும் கொத்தடிமைகளாக மாறிவிடும் சூழலில், 'மீட்பராக' வரும் உறவினர், தன் உறவினர் பட்ட கடனை அடைத்துஅவரையும்,அவரது குடும்பத்தினரையும், அவருக்குச் சொந்தமான சொத்துக்களையும் மீட்டுத் தரவேண்டும். இதை, லேவியர் நூல் இவ்வாறு கூறுகிறது:
லேவியர் 25: 25, 47-48
சகோதரருள் ஒருவன் ஏழ்மைக்கு உட்பட்டு, அவனுடைய சொத்தில் எதையேனும் விற்றால், அவனுடைய முறைஉறவினனான மீட்பன் வந்து, தன் சகோதரன் விற்றதை மீட்கட்டும்.... அன்னியரோ உன்னிடம் தற்காலிகமாகத் தங்கியிருப்பவரோ, வசதியாக வாழும்போது, அவர்களிடம் உள்ள உன் சகோதரர்கள் ஏழையாகி, அவர்களுக்கோ அவர்களின் இனத்திற்கோ விலையாகிப் போனால், விலையாகிப்போன அவர்கள் மீட்கப்பட வேண்டும்; அவர்கள் உறவினருள் ஒருவர் அவர்களை மீட்கட்டும்.

இறுதியாக, மீட்பரின் மூன்றாவது கடமை, உறவினரை அடிமைத்தளைகளிலிருந்து விடுவிப்பது. உறவினரில் ஒருவர், அநீதமான முறையில் சிறைப்படுத்தப்பட்டு, அவரும், அவரது குடும்பத்தினரும் அடிமைகளாக நடத்தப்படும் சூழலில், அவர்களை விடுவிக்க, உறவினர் ஒருவர், 'மீட்பராக'ச் செயல்படுவார்.
இஸ்ரயேல் மக்கள், அடிமைகளாக, அன்னியரால் கடத்திச் செல்லப்பட்ட வேளையில், உறவினர்கள் வந்து ஆற்றவேண்டிய இந்த மீட்புப்பணியை, இறைவனே நேரில் வந்து ஆற்றுவார் என்று, இறைவாக்கினர்கள் வாக்களித்துள்ளனர்.
இறைவாக்கினர் எசாயா 43: 1ஆ, 3-4
யாக்கோபே, உன்னைப் படைத்தவரும், இஸ்ரயேலே, உன்னை உருவாக்கியவருமான ஆண்டவர் இப்போது இவ்வாறு கூறுகிறார்; அஞ்சாதே, நான் உன்னை மீட்டுக்கொண்டேன்; உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்தேன்; நீ எனக்கு உரியவன்...
ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் நானே; இஸ்ரயேலின் தூயவரும் உன்னை விடுவிப்பவரும் நானே; உனக்குப் பணயமாக எகிப்தையும், உனக்கு ஈடாக எத்தியோப்பியா, செபா நாடுகளையும் ஒப்புக்கொடுக்கிறேன். என் பார்வையில் நீ விலையேறப் பெற்றவன்; மதிப்புமிக்கவன்; நான் உன்மேல் அன்பு கூர்கிறேன், ஆதலால் உனக்குப் பதிலாக மானிடரையும் உன் உயிருக்கு மாற்றாக மக்களினங்களையும் கொடுக்கிறேன்.

அநியாயமான, ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சூழல் உறவினர்களுக்கு உருவாகும்போது, அங்கு குறுக்கிட்டு, அச்சூழலை சரியாக்குபவர், “go'el” எனப்படும் மீட்பர். அத்தகையச் சூழல் உருவாக, அவ்வுறவினரும் ஏதோ ஒருவகையில் காரணமாக இருந்தாலும், அதைச் சரியாக்க முன்வருபவரே, 'மீட்பர்'.
இந்த எண்ணங்களை நன்கு உணர்ந்திருந்த யோபு, தான் சிக்கியிருக்கும் அநீதமானச் சூழலிலிருந்து தன்னைக் காக்கவரும் தன் உறவினரான 'மீட்பர்' வாழ்கின்றார் என்று முழக்கமிடுகிறார். தன்னை இத்தகையைச் சிக்கலுக்கு உள்ளாக்கியதே இறைவன்தான் என்றாலும், அதே இறைவன், தன்னை மீட்கவரும் “go'el”ஆக, உறவினராக வருவார் என்பதை ஒரு விசுவாச அறிக்கையைப்போல வெளியிடுகிறார் யோபு.