30 May, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 22

The Visitation of Mary to Elizabeth.
(Church of Resurrection, St. Petersburg, Russia).

துன்புறும் அன்னையரைச் சந்திக்கும் மரியா

மே 31, கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தத் திருநாள். "மரியா புறப்பட்டு யூதேயா மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்" (லூக்கா 1: 39) என்று இத்திருநாளின் நற்செய்தி ஆரம்பமாகிறது. தேவையில் இருந்த தன் உறவினர் எலிசபெத்தை, அன்று தேடிச்சென்ற மரியா, இன்றும், தேவையில் இருப்போரைத் தேடி வருகிறார்.
தன் கருவிலும், கரங்களிலும் குழந்தை இயேசுவைத் தாங்கியவண்ணம், மரியன்னை மேற்கொண்ட பயணங்கள் கடினமானவை. கருவில் இயேசு உருவான அத்தருணமே, உறவினரான எலிசபெத்தைச் சந்திக்க, யூதேயா மலைப்பகுதியில் பயணமானார். தன் பேறுகாலம் நெருங்கிய வேளையில், பெத்லகேம் என்ற ஊருக்கு கடினமானதொரு பயணம் மேற்கொண்டார். இயேசுவின் உயிரைக் காப்பாற்ற, பச்சிளம் குழந்தையைச் சுமந்தவண்ணம், இரவோடிரவாக எகிப்துக்குத் தப்பித்துச் சென்றார். எருசலேமில் விழா கொண்டாடச் சென்றவர், அங்கு சிறுவன் இயேசு தொலைந்துபோனதை அறிந்து, மீண்டும், பதைபதைப்புடன் அவரைத் தேடி, எருசலேமுக்குச் சென்றார். இறுதியாக, தன் மகன் சிலுவை சுமந்து சென்றபோது, அவருடன் அச்சிலுவைப்பாதை பயணத்திலும் பங்கேற்றார். அன்னை மரியா மேற்கொண்ட இந்த துயரமான பயணங்களை, இன்றும், ஆயிரமாயிரம் அன்னையர் மேற்கொள்கின்றனர்.
நெருக்கடியானச் சூழல்களிலும், கருவில் வளரும் குழந்தையைக் கலைத்துவிடாமல் வாழும் அன்னையரை நினைவில் கொள்ள...
பிறந்தநாளன்றே, பச்சிளம் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு, புலம்பெயர்ந்து செல்லும் அன்னையரை நினைவில் கொள்ள...
திருவிழாக் கூட்டங்களில் குழந்தைகளைத் தொலைத்துவிட்டு, பரிதவிக்கும் அன்னையரை நினைவில் கொள்ள...
அநியாயமாகக் கொல்லப்படும் மகன்களை தங்கள் மடியிலேந்தி, மனம்நொறுங்கும் அன்னையரை நினைவில் கொள்ள...
மே 31ம் தேதி, தகுந்ததொரு தருணம்.

Job is Patient as His Friends Bemoan Him

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 22

"மனிதர்கள் அடைந்த வெற்றியைக் கண்டு, மலைத்துப் போகாதே! பொறாமை கொள்ளாதே! அந்த வெற்றிக்கு விலையாக, அவர்கள் அடைந்த துன்பங்களை மறவாதே!" என்று அறிஞர்கள் பலர் நமக்கு நினைவுறுத்தியுள்ளனர். இதையொத்த மற்றோர் அறிவுரை, இன்றைய விவிலியத் தேடல் வழியே நம்மை வந்தடைகிறது. தவறுகள் செய்வோர், குற்றம் புரிவோர், தாறுமாறான இன்பத்துடன் வாழ்வதைக் கண்டு அவர்கள் மீது பொறாமை கொள்ளாதே... அவர்களுக்கு நேரும் அழிவு பயங்கரமானது என்பதை மறவாதே! என்ற அறிவுரையை, யோபின் நண்பர் சோப்பார், யோபு நூல் 20ம் பிரிவில் அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளார். பலரும் அறியும்படி பகிரங்கமாக குற்றம் புரிந்த பலர், எவ்வித தண்டனையும் பெறாமல் வாழ்வதைக் கண்டு, நம்மில் பலருக்கு வேதனை நிறைந்த கேள்விகள் எழுந்துள்ளன. இந்தக் கேள்விகளுக்கு ஓரளவு தெளிவான பதிலை இன்றைய விவிலியத் தேடலில் பெற முயல்வோம்.

மனித வரலாற்றை இரத்தத்தில் தோய்த்த பல கொடுங்கோலர்களில், இத்தாலியைச் சேர்ந்த பெனிட்டோ முசோலினியும் ஒருவர். ஜெர்மனியின் அடால்ப் ஹிட்லருடன் இணைந்து, இவரும் பல இலட்சம் உயிர்களைக் கொன்று குவித்தார். 1943ம் ஆண்டு, இவர் தன் அதிகாரங்களை இழந்தபின் வழங்கிய ஒரு பேட்டியில், "ஏழு ஆண்டுகளுக்கு முன் நான் முக்கியமான மனிதனாக இருந்தேன். இப்போது நான் உயிரற்ற சடலமாக உலவிவருகிறேன்" என்று கூறினார். 1945ம் ஆண்டு, ஏப்ரல் 28ம் தேதி, முசோலினி, இத்தாலியிலிருந்து தப்பித்துச் செல்ல முயன்றபோது, அவரது எதிரிகள் அவரைச் சுட்டுக் கொன்றனர். அவரது சடலத்தை மிலான் நகரில் ஒரு சதுக்கத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டனர். மக்கள் அச்சடலத்தின் மீது கல்லெறிந்து, காரி உமிழ்ந்தனர்.

இரண்டு நாட்கள் சென்று, 1945ம் ஆண்டு, ஏப்ரல் 30ம் தேதி, ஹிட்லர், தற்கொலை செய்துகொண்டார். அவர் பதுங்கி வாழ்ந்த நிலத்தடி அறையில், அவர் தன்னைத்தானேச் சுட்டுக்கொண்டு இறந்தார் என்று சொல்லப்படுகிறது. அவர் ஒருவேளை 'சயனைட்' எனப்படும் நஞ்சையும் உட்கொண்டிருக்கலாம் என்று ஒரு சிலர் சந்தேகப்படுகின்றனர். அவரது உடல் உடனடியாக எரிக்கப்பட்டதால், இன்றுவரை, அவரது மரணம் குறித்து சரியான, உண்மையான விவரங்கள் வெளிவரவில்லை.

2016ம் ஆண்டு, டிசம்பர் மாதத் துவக்கத்தில், தமிழ்நாட்டில், அரசியல் தலைவர் ஒருவர் காலமானார். தமிழகத்தின் முதலமைச்சராகவும், பல கோடி மதிப்புள்ள சொத்துக்களைக் குவித்தவராகவும் கருதப்பட்ட அவரது மரணம், பதில் சொல்லமுடியாத பல கேள்விகளை விட்டுச் சென்றுள்ளது. அவரது மரணத்திற்குப்பின் வெளிவந்த உச்சநீதி மன்றத் தீர்ப்பு, அவரை ஒரு குற்றவாளியென முத்திரை குத்தியுள்ளது. கோடி, கோடியாய் சொத்துக்களைக் குவித்திருந்த அத்தலைவர், இறுதியில், ஒரு குற்றவாளியென முத்திரை குத்தப்பட்டு, ஓர் அனாதையைப்போல இறந்தது பற்றி, பலர், பலவிதமான கருத்துக்களை வெளியிட்டவண்ணம் உள்ளனர். அதேபோல், ஜெர்மன் நாடு முழுவதையும், ஏன்... சொல்லப்போனால், இவ்வுலகம் முழுவதையும் ஆளவேண்டும் என்ற கனவு வெறியுடன் செயல்பட்ட ஹிட்லர், இறுதியில், ஓர் அனாதையைப்போல இறக்கவேண்டியிருந்தது.

மனித வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது, ஹிட்லரைப் போன்ற, முசோலினியைப் போன்ற பலரை நாம் சந்திக்க முடியும். உகாண்டாவின் இடி அமின், கம்போடியாவின் போல் போட் (Pol Pot) போன்ற பலர், தங்கள் சுயநலக் கனவுகளுக்காக, தீமையின் மறுபிறப்பாகவே மாறினர். இவர்கள் அனைவரும் தங்கள் தீமைகளுக்கு ஏற்ற விளைவுகளைச் சந்தித்தனர் என்று வரலாறு சொல்கிறது. இதையே, யோபின் நண்பர் சோப்பார் தன் இரண்டாவது சுற்று உரையாடலில் யோபிடம் கூறினார். நோயுற்ற உடல், துன்புறும் மனசாட்சி, பாழாக்கப்பட்ட சொத்துக்கள், பிச்சையெடுக்கும் குடும்பம், மதிப்பு அனைத்தையும் இழந்த நிலை, இறுதியில் அழிவு என்று... கொடியவர்களுக்கு நேரும் அனைத்து கொடுமைகளையும் யோபு நூல் 20ம் பிரிவில், சோப்பார் பட்டியலிட்டுள்ளார்.

கொடியவர்கள், இவ்வுலகில் மகிழ்வுடன் வலம்வருவதுபோல் தோன்றினாலும், அவர்களுக்கு உண்மையில் என்ன நிகழும் என்பதை, சோப்பார், மிகக் கூர்மையான சொற்களில் படம்பிடித்துக் காட்டுகிறார். சோப்பாரின் கூற்றைக் கேட்கும்போது, ஹிட்லர், இடி அமின், முசோலினி ஆகியோரின் நினைவுகள் நம்மில் தோன்றி மறைகின்றன. இதோ, சோப்பாரின் கூர்மையான சொற்கள்:
யோபு நூல் 20: 5-9
கொடியவரின் மகிழ்ச்சி நொடிப்பொழுதே! கடவுளுக்கு அஞ்சாதவரின் களிப்பு கணப்பொழுதே! அவர்களின் பெருமை விசும்பு மட்டும் உயர்ந்தாலும், அவர்களின் தலை முகிலை முட்டுமளவு இருந்தாலும், அவர்கள் தங்களின் சொந்த மலம் போன்று என்றைக்கும் ஒழிந்திடுவர்; அவர்களைக் கண்டவர், எங்கே அவர்கள்? என்பர். கனவுபோல் கலைந்திடுவர்; காணப்படார்; இரவு நேரக் காட்சிபோல் மறைந்திடுவர். பார்த்த கண் இனி அவர்களைப் பார்க்காது; வாழ்ந்த இடம், அவர்களை என்றும் காணாது.

அவர்கள் விரும்பி உண்ட தீமையும், அநியாயமாகத் திரட்டியச் செல்வமும், அவர்களுக்குள் நஞ்சாக மாறும் என்பதை, சோப்பார் கடுமையாகச் சித்திரிக்கிறார்:
யோபு நூல் 20: 12-16
தீங்கு அவர்களின் வாயில் இனிப்பாய் இருப்பினும், நாவின் அடியில் அதை அவர்கள் மறைத்து வைப்பினும், இழந்து போகாமல் அதை அவர்கள் இருத்தி வைத்தாலும், அண்ணத்தின் நடுவே அதை அடைத்து வைத்தாலும், வயிற்றிலே அவர்களின் உணவு மாற்றமடைந்து, அவர்களுக்கு விரியன் பாம்பின் நஞ்சாகிவிடுமே; செல்வத்தை விழுங்கினர்; அதை அவர்களே கக்குவர்; இறைவன் அவர்களின் வயிற்றிலிருந்து அதை வெளியேற்றுவார். விரியன் பாம்பின் நஞ்சை அவர்கள் உறிஞ்சுவர்; கட்டு விரியனின் நாக்கு அவர்களைக் கொன்றுபோடும்.

ஏழைகளை வதைத்து, பிறரை ஏமாற்றி அவர்கள் திரட்டியச் செல்வத்தைப் பற்றி சோப்பார் பேசும்போது, சுயநலமிக்க அரசியல்வாதிகள், மனசாட்சியை மழுங்கடித்த வர்த்தக முதலைகள் பலர் நம் நினைவுகளில் வலம் வருகின்றனர்.
யோபு நூல் 20: 19-23
அவர்கள் ஏழைகளை ஒடுக்கி, இல்லாதவராக்கினர்; தாங்கள் கட்டாத வீட்டை அவர்கள் அபகரித்துக் கொண்டனர். அவர்களின் ஆசைக்கோர் அளவேயில்லை; ஆதலால், அவர்கள் இச்சித்த செல்வத்தில் மிச்சத்தைக் காணார். அவர்கள் தின்றபின் எஞ்சியது எதுவும் இல்லை; எனவே அவர்களது செழுமை நின்று நிலைக்காது. நிறைந்த செல்வத்திடை அவர்களுக்கு நெருக்கடி ஏற்படும்; அவலத்தின் பளுவெல்லாம் அவர்கள்மேல் விழும். அவர்கள் வயிறு புடைக்க உண்ணும்போது, இறைவன் தம் கோபக்கனலை அவர்கள்மேல் கொட்டுவார்; அதையே அவர்களுக்கு உணவாகப் பொழிவார்.

இவ்வளவு அநீதிகளை செய்தவர்கள் இறந்தபின், அவர்களை ஏற்றுக்கொள்ள இந்த மண்ணும் மறுத்துவிடும் என்று சோப்பார் கூறுவது, கவிதை நயம் மிக்க, அதே நேரம், சுட்டெரிக்கும் உண்மை.
யோபு நூல் 20: 27,29
விண்ணகம் அவர்களின் பழியை வெளியாக்கும்; மண்ணகம் அவர்களை மறுத்திட எழுந்து நிற்கும்... இதுவே பொல்லார்க்குக் கடவுள் அளிக்கும் பங்கு; அவர்களுக்கு இறைவன் குறிக்கும் உரிமைச் சொத்து.
ஹிட்லர் போன்றோருக்கு சமாதி இல்லை என்பது, கொடியவர்களை ஏற்றுக்கொள்ள இந்த மண்ணே மறுப்பு சொல்லும் என்று சோப்பார் கூறிய வார்த்தைகளுக்கு நிரூபணமாக அமைந்துள்ளது.
இவ்வாறு, யோபின் நண்பர் சோப்பார், கொடியவர்களுக்கு வரும் தீமைகளை கடுமையாகப் பட்டியலிட்டதைக் கேட்டபின், யோபு, 21ம் பிரிவில் தன் பதிலை வழங்குகிறார். சோப்பார் கூறிய கொடுமைகள் எதுவும் தீயவர்களைத் தீண்டாது என்பதுபோல் யோபு பேசுவது, நமக்குள் அவ்வப்போது எழும் கேள்விகளை, எண்ணங்களை எதிரொலிக்கிறது:
யோபு நூல் 21: 7-9
தீயோர் வாழ்வதேன்? நீண்ட ஆயுள் பெறுவதேன்? வலியோராய் வளர்வதேன்? அவர்களின் வழிமரபினர் அவர்கள்முன் நிலைபெறுகின்றனர்; அவர்களின் வழித்தோன்றல்கள் அவர்கள் கண்முன் நிலைத்திருக்கின்றனர். அவர்களின் இல்லங்களில் அச்சமற்ற அமைதி நிலவுகின்றது. கடவுளின் தண்டனை அவர்கள்மேல் விழவில்லை.

தீயோர் எவ்விதத் தீங்குமின்றி வாழ்கின்றனர் என்று மனம் வெறுத்துப் பேசும் யோபு, ஒரு சில வரிகளுக்குப் பின், தெளிவடைந்து பேசுகிறார். தீயோரின் அழிவை அவர்களது கண்களே காணும் என்ற பாணியில் அவர் பேசுவது, சோப்பார் கூறியவற்றை உறுதி செய்கிறது:
யோபு நூல் 21: 17-20
எத்தனைமுறை தீயோரின் ஒளி அணைகின்றது? அழிவு அவர்கள்மேல் வருகின்றது? கடவுள் தம் சீற்றத்தில் வேதனையைப் பங்கிட்டு அளிக்கின்றார். அவர்கள் காற்றுக்குமுன் துரும்பு போன்றோர்; சூறாவளி அடித்துப் போகும் பதர் போன்றோர். அவர்களின் தீங்கை, கடவுள், அவர்களின் பிள்ளைகளுக்கா சேர்த்து வைக்கின்றார்? அவர்களுக்கே அவர் திரும்பக் கொடுக்கின்றார்; அவர்களும் அதை உணர்வர். அவர்களின் அழிவை அவர்களின் கண்களே காணட்டும்; எல்லாம் வல்லவரின் வெஞ்சினத்தை அவர்கள் குடிக்கட்டும்.

இவ்விதம், யோபுக்கும், அவரது நண்பர்களான எலிப்பாசு, பில்தாது, சோப்பார் ஆகிய மூவருக்கும் நிகழ்ந்த இரண்டாம் சுற்று உரையாடல், 21ம் பிரிவின் இறுதியில், நிறைவடைகிறது. மூன்றாவது சுற்று உரையாடலில் நம் தேடல் பயணம் அடுத்த வாரம் தொடரும்.


No comments:

Post a Comment