23 May, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 21

I know my Redeemer lives

யோபின் நண்பர் பில்தாது, "தீயவரின் ஒளி அணைந்துபோம்" (யோபு 18:5) என்று ஆரம்பித்து, யோபின் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடுக்கும் சாபக் கணைகள், யோபு நூல் 18ம் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன:
யோபு 18: 12,13,15,16-18
பட்டினி அவர்களின் வலிமையை விழுங்கிடும்; தீங்கு அவர்களின் வீழ்ச்சிக்குக் காத்திருக்கும். நோய் அவர்களின் தோலைத் தின்னும்... அவர்களின் கூடாரங்களில் எதுவும் தங்காது; அவர்களின் உறைவிடங்களில் கந்தகம் தூவப்படுகின்றது. கீழே அவர்களின் வேர்கள் காய்ந்துபோம்; மேலே அவர்களின் கிளைகள் பட்டுப்போம். அவர்களின் நினைவே அவனியில் இல்லாதுபோம்... ஒளியிலிருந்து இருளுக்குள் அவர்கள் தள்ளப்படுவர்; உலகிலிருந்தே அவர்கள் துரத்தப்படுவர்.

கடுகளவு கனிவும் இல்லாமல், ஒன்றன்பின் ஒன்றாக, பில்தாது சுமத்திய இந்தச் சாபங்களுக்கு, யோபு கூறிய பதில் மொழி, 19ம் பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பதிலுரையில், யோபு வெளிப்படுத்தும் வார்த்தைகள், இதுவரை அவர் வெளிப்படுத்தாத வேதனை உணர்வுகளை வெளிக்கொணர்கின்றன. இச்சொற்கள், யோபு என்ற தனி மனிதருடைய வேதனை மட்டுமல்ல, மாறாக, காரணம் ஏதுமின்றி காயப்பட்டுக் கதறும், அனைத்து மனிதரின் வேதனையை வெளிப்படுத்துவனவாக ஒலிக்கின்றன என்பது, பல விவிலிய விரிவுரையாளர்களின் கருத்து.

தன்னை இறைவன், எவ்வாறெல்லாம் துன்புறுத்தியுள்ளார் என்றும், குறிப்பாக, தன் தோல் மீது நோயை உருவாக்கியதால், தன்னை, மற்றவர்களிடமிருந்து எவ்வளவுதூரம் தனிமைப்படுத்தினார் என்றும் கூறும் யோபு, தன் மீது இரக்கம் காட்டுமாறு, நண்பர்களிடம் கெஞ்சுகிறார்:
யோபு 19: 21-22
என் மேல் இரங்குங்கள்; என் நண்பர்காள்! என் மேல் இரக்கம் கொள்ளுங்கள்; ஏனெனில் கடவுளின் கை என்னைத் தண்டித்தது. இறைவனைப் போல் நீங்களும் என்னை விரட்டுவது ஏன்? என் சதையை நீங்கள் குதறியது போதாதா?

19ம் பிரிவின் ஆரம்பத்திலிருந்து 22ம் இறைச்சொற்றொடர் முடிய, வேதனைக் கதறலை, பல வழிகளில் வெளிப்படுத்திய யோபிடம், ஒரு திடீர் மாறுதல் உருவாகிறது. தனக்குள் உருவான அந்த மாற்றம், அழியாமல் காக்கப்படவேண்டும் என்று யோபு விரும்புகிறார். எனவே, தன் வார்த்தைகள், ஏட்டுச்சுருளில் எழுதப்படவேண்டும் என்று சொல்லும் யோபு, அதே மூச்சில், தன் வார்த்தைகள் பாறையில் பொறிக்கப்படவேண்டும் என்று கூறுகிறார்.
யோபு 19: 23-24
ஓ! என் வார்த்தைகள் இப்பொழுது வரையப்படலாகாதா? ஓ! அவை ஏட்டுச்சுருளில் எழுதப்படலாகாதா? இரும்புக்கருவியாலும் ஈயத்தாலும் என்றென்றும் அவை பாறையில் பொறிக்கப்பட வேண்டும்.

இதைத் தொடர்ந்து, யோபு வெளிப்படுத்தும் நம்பிக்கை அறிக்கை, நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது:
யோபு 19: 25-27
என் மீட்பர் வாழ்கின்றார் என்றும் இறுதியில் மண்மேல் எழுவார் என்றும் நான் அறிவேன். என் தோல் இவ்வாறு அழிக்கப்பட்ட பின், நான் சதையோடு இருக்கும்போதே கடவுளைக் காண்பேன். நானே, அவர் என் பக்கத்தில் நிற்கக் காண்பேன்; என் கண்களே காணும்; வேறு கண்கள் அல்ல; என் நெஞ்சம் அதற்காக ஏங்குகின்றது.
தனது நம்பிக்கை அறிக்கை, காலம் காலமாய் அழியாமல் காக்கப்படும் கல்வெட்டைப் போல இருக்கவேண்டும் என்று யோபு விரும்பியபடியே, இவ்வரிகள், ஏறத்தாழ 5000 ஆண்டுகளாய், பலருக்கு நம்பிக்கை தந்துள்ள வரிகளாக அமைந்துள்ளன. உயிர் வாழும் தன் இறைவனைக் குறித்து யோபு சொன்ன சொற்கள், பல பாடல்களாக, கவிதைகளாக உருவெடுத்துள்ளன.

I know my Redeemer lives

இந்த நம்பிக்கை அறிக்கையில், யோபு கூறும் சில சொற்களில், நாம் சிறிது ஆழமானத் தேடலை மேற்கொள்ள முயல்வோம். "என் மீட்பர் வாழ்கின்றார் என்று நான் அறிவேன்" என்று யோபு கூறுவது, இறைவனைக் குறித்து அவர் கொண்டிருக்கும் நேரடியான, நெருக்கமான, அனுபவத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள். விவிலியத்தில் 'அறிதல்' என்ற சொல், வெறும் ஏட்டளவு அறிவை சுட்டிக்காட்டும் சொல் அல்ல, அது, ஒருவர் மற்றொருவருடன் கொள்ளும் ஆழமான அனுபவ அறிவைச் சுட்டிக்காட்டும் சொல்.
தொடக்க நூல் 4ம் பிரிவின் துவக்கத்தில் நாம் வாசிக்கும் வரிகள் இதனை விளக்கும். "ஆதாம் தன் மனைவி ஏவாளுடன் கூடி வாழ்ந்தான். அவள் கருவுற்று, காயினைப் பெற்றெடுத்தாள்" (தொடக்க நூல் 4:1) என்று காணப்படும் இவ்வரிகள், எபிரேய மொழியில், "ஆதாம் தன் மனைவி ஏவாளை அறிந்தான். அவள் கருவுற்று, காயினைப் பெற்றெடுத்தாள்" என்று கூறப்பட்டுள்ளது. எபிரேய மொழியில், ஆழமான உறவைக் குறிக்க, 'jadac', அதாவது, 'அறிதல்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. "என் மீட்பரை நான் அறிவேன்" என்று யோபு கூறும்போது, இறைவனைப்பற்றி யோபு கொண்டிருந்த அறிவு, ஏடுகளில் படித்தறிந்ததல்ல, பிறரிடம் கேட்டறிந்ததல்ல; மாறாக, வாழ்வில், நேருக்கு நேர் பெற்ற அனுபவ அறிவு என்பதைப் புரிந்துகொள்கிறோம்.

அடுத்ததாக, நம் கவனத்தை ஈர்க்கும் பொருள்செறிந்த சொல், "மீட்பர்". எபிரேய மொழியில் “go'el” என்ற இச்சொல், பெயர்ச்சொல்லாக, வினைச்சொல்லாக, பல வடிவங்களில், பழைய ஏற்பாட்டில், 118 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. "மீட்பர்" அல்லது, “go'el” என்ற இச்சொல்லின் அடிப்படை பொருள்: "கடமைகளைச் செய்யும் உறவினர்". துன்பத்தில், பிரச்சனையில் இருக்கும் உறவினரை, சிக்கல்களிலிருந்து விடுவிப்பவரையே, "மீட்பர்" என்ற சொல் சுட்டிக்காட்டுகிறது. "மீட்பர்" என்ற சொல்லில் ஆய்வுகள் மேற்கொண்டுள்ள விவிலிய ஆய்வாளர்கள், அவர் ஆற்றவேண்டிய மூவகைக் கடமைகளைப்பற்றிக் கூறுகின்றனர்.

முதல் கடமை, பழி தீர்ப்பது. அதாவது, உறவினர் ஒருவரை, வேறொருவர் திட்டமிட்டு கொலை செய்துவிட்டால், மாசற்றவரின் இரத்தத்தைச் சிந்திய அவரைக் கொலை செய்து, பழி தீர்ப்பது, 'மீட்பருக்கு' உள்ள முதல் கடமை. இதைக் குறித்து மோசே வழங்கியச் சட்டங்கள், எண்ணிக்கை நூலிலும் (35:19-27), இணைச்சட்ட நூலிலும் (19:11-12) காணப்படுகின்றன.

இரண்டாவது கடமை, கடனிலிருந்து மீட்பது. உறவினர் ஒருவர் பட்ட கடனால், அவர் தன் சொத்துக்களை, நிலங்களை இழந்து, இறுதியில் அவரும், அவரது குடும்பத்தினரும் கொத்தடிமைகளாக மாறிவிடும் சூழலில், 'மீட்பராக' வரும் உறவினர், தன் உறவினர் பட்ட கடனை அடைத்துஅவரையும்,அவரது குடும்பத்தினரையும், அவருக்குச் சொந்தமான சொத்துக்களையும் மீட்டுத் தரவேண்டும். இதை, லேவியர் நூல் இவ்வாறு கூறுகிறது:
லேவியர் 25: 25, 47-48
சகோதரருள் ஒருவன் ஏழ்மைக்கு உட்பட்டு, அவனுடைய சொத்தில் எதையேனும் விற்றால், அவனுடைய முறைஉறவினனான மீட்பன் வந்து, தன் சகோதரன் விற்றதை மீட்கட்டும்.... அன்னியரோ உன்னிடம் தற்காலிகமாகத் தங்கியிருப்பவரோ, வசதியாக வாழும்போது, அவர்களிடம் உள்ள உன் சகோதரர்கள் ஏழையாகி, அவர்களுக்கோ அவர்களின் இனத்திற்கோ விலையாகிப் போனால், விலையாகிப்போன அவர்கள் மீட்கப்பட வேண்டும்; அவர்கள் உறவினருள் ஒருவர் அவர்களை மீட்கட்டும்.

இறுதியாக, மீட்பரின் மூன்றாவது கடமை, உறவினரை அடிமைத்தளைகளிலிருந்து விடுவிப்பது. உறவினரில் ஒருவர், அநீதமான முறையில் சிறைப்படுத்தப்பட்டு, அவரும், அவரது குடும்பத்தினரும் அடிமைகளாக நடத்தப்படும் சூழலில், அவர்களை விடுவிக்க, உறவினர் ஒருவர், 'மீட்பராக'ச் செயல்படுவார்.
இஸ்ரயேல் மக்கள், அடிமைகளாக, அன்னியரால் கடத்திச் செல்லப்பட்ட வேளையில், உறவினர்கள் வந்து ஆற்றவேண்டிய இந்த மீட்புப்பணியை, இறைவனே நேரில் வந்து ஆற்றுவார் என்று, இறைவாக்கினர்கள் வாக்களித்துள்ளனர்.
இறைவாக்கினர் எசாயா 43: 1ஆ, 3-4
யாக்கோபே, உன்னைப் படைத்தவரும், இஸ்ரயேலே, உன்னை உருவாக்கியவருமான ஆண்டவர் இப்போது இவ்வாறு கூறுகிறார்; அஞ்சாதே, நான் உன்னை மீட்டுக்கொண்டேன்; உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்தேன்; நீ எனக்கு உரியவன்...
ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் நானே; இஸ்ரயேலின் தூயவரும் உன்னை விடுவிப்பவரும் நானே; உனக்குப் பணயமாக எகிப்தையும், உனக்கு ஈடாக எத்தியோப்பியா, செபா நாடுகளையும் ஒப்புக்கொடுக்கிறேன். என் பார்வையில் நீ விலையேறப் பெற்றவன்; மதிப்புமிக்கவன்; நான் உன்மேல் அன்பு கூர்கிறேன், ஆதலால் உனக்குப் பதிலாக மானிடரையும் உன் உயிருக்கு மாற்றாக மக்களினங்களையும் கொடுக்கிறேன்.

அநியாயமான, ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சூழல் உறவினர்களுக்கு உருவாகும்போது, அங்கு குறுக்கிட்டு, அச்சூழலை சரியாக்குபவர், “go'el” எனப்படும் மீட்பர். அத்தகையச் சூழல் உருவாக, அவ்வுறவினரும் ஏதோ ஒருவகையில் காரணமாக இருந்தாலும், அதைச் சரியாக்க முன்வருபவரே, 'மீட்பர்'.
இந்த எண்ணங்களை நன்கு உணர்ந்திருந்த யோபு, தான் சிக்கியிருக்கும் அநீதமானச் சூழலிலிருந்து தன்னைக் காக்கவரும் தன் உறவினரான 'மீட்பர்' வாழ்கின்றார் என்று முழக்கமிடுகிறார். தன்னை இத்தகையைச் சிக்கலுக்கு உள்ளாக்கியதே இறைவன்தான் என்றாலும், அதே இறைவன், தன்னை மீட்கவரும் “go'el”ஆக, உறவினராக வருவார் என்பதை ஒரு விசுவாச அறிக்கையைப்போல வெளியிடுகிறார் யோபு.


No comments:

Post a Comment