Job
suffering from skin disease
திருவிழாக்
கூட்டங்களில் அவ்வப்போது நாம் காணும் ஒரு காட்சி, நம் தேடலை
இன்று துவக்கிவைக்கிறது. சிறுவன் ஒருவன், அப்பாவின் தோள்மீது அமர்ந்து பயணம்
செய்துகொண்டிருக்கிறான். அவன் கேட்ட ஏதோ ஒன்று அவனுக்குக் கிடைக்காததால், கோபமும், அழுகையும் அவன் முகத்தில் கொந்தளிக்கின்றன.
தன் கோபத்தை வெளிப்படுத்த, அவ்வப்போது, அப்பாவின் தலையில் தன் பிஞ்சுக் கையால் அடித்தவண்ணம் அங்கு அமர்ந்திருக்கிறான்.
அதேநேரம், அவனது மற்றொரு பிஞ்சுக்கரம், அப்பாவின் தலையை, சுற்றிவளைத்து, கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறது.
ஒரு கையால், அப்பாவின் தலையை, இறுகப் பற்றிக்கொண்டு, மற்றொரு கையால் அவரை அடித்தவண்ணம் செல்லும் அச்சிறுவன், நம் விவிலியத் தேடலின் நாயகன் யோபை அழகாகச் சித்திரிக்கிறான். தனக்கு
நேர்ந்த துன்பங்களைப் புரிந்துகொள்ள முடியாமல்,
கோபம், வருத்தம், குழப்பம் என்ற பல உணர்வுகளுடன்
போராடிக்கொண்டிருந்த யோபு, தன் கோபத்தை இறைவன் மீது காட்டினாலும், அவரை, நம்பிக்கையோடு இறுகப் பற்றிக்கொண்டிருந்தார்.
தன் கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும் விடைதெரியாமல் தவித்த யோபை, மேலும் குழப்பும் வண்ணம், அவரது நண்பர்கள் மூவர், யோபின் மீது மேற்கொண்ட
தாக்குதல்களை, சென்ற சில வாரங்கள் நாம் சிந்தித்து வருகிறோம்.
முதல் சுற்று உரையாடல்கள் முடிந்து, இரண்டாவது சுற்று உரையாடல்கள், இன்னும் தீவிரமான தாக்குதல்களாக மாறியுள்ளதை, தற்போது சிந்தித்து வருகிறோம். யோபு நூல், 18ம் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ள பில்தாதின் தாக்குதல்களுக்கு, யோபு அளிக்கும் பதிலுரை,
19ம் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
விவிலிய விரிவுரையாளரான வெய்ன் ஜாக்சன் (Wayne Jackson) என்பவர், 19ம் பிரிவில், யோபு கூறும் பதிலுரையை, நான்கு பகுதிகளாகப் பிரிக்க முயன்றுள்ளார். இந்தப் பதிலுரையில்
நம் தேடல் பயணத்தைத் தொடர்வோம்.
தன்னைப்
பழித்துரைக்கும் நண்பர்களைப் பற்றி 19ம் பிரிவின் முதல் பகுதியில் (யோபு 19:1-6) கடிந்து
பேசும் யோபு, இரண்டாவது பகுதியில் (யோபு 19:7-12), இறைவன் தன்னை எவ்வாறெல்லாம் வதைக்கிறார்
என்பதை பல உருவகங்கள் வழியே சித்திரிக்கிறார். தனக்கு நேர்ந்த துன்பங்களால், குறிப்பாக, தன் உடலுக்கு வந்த நோயால், தன் உறவினர், நண்பர்கள், மனைவி, மக்கள், பணியாளர் அனைவரும் தன்னை விட்டு
விலகியிருப்பதை, மூன்றாவது பகுதியில் (யோபு 19:13-22) மிகுந்த
வேதனையோடு எடுத்துரைக்கிறார். இதைத் தொடர்ந்து,
யோபு, இறைவன் மீது கொண்டுள்ள நம்பிக்கையை ஒரு சில வரிகளில் (யோபு 19:
23-27) மிக அழகாக கூறுகிறார். இவ்வாறு, வேதனை, கோபம், நம்பிக்கை என்ற உணர்வுகள் இணைந்து
ஒலிக்கும் யோபின் சொற்களைக் கேட்கும்போது, தந்தையின் தோள்மீது அமர்ந்து செல்லும்
சிறுவன், அவர் தலையை ஒருகையால் இறுகப் பற்றிக்கொண்டு, மற்றொரு கையால் அவரை அவ்வப்போது அடித்தவண்ணம் செல்லும் காட்சி,
நம் கண்முன் வலம்வருகிறது.
யோபு
நூல் 19: 2-3
என்
உள்ளத்தை எவ்வளவு காலத்திற்குப் புண்படுத்துவீர்? என்னை வார்த்தையால் நொறுக்குவீர்? பன்முறை என்னைப் பழித்துரைத்தீர்; வெட்கமின்றி என்னைத் தாக்கிப் பேசினீர்.
தன்
நண்பர்களைப் பார்த்து யோபு கூறும், உணர்வுபொங்கும் இச்சொற்களுடன், அவரது பதிலுரை ஆரம்பமாகிறது.
தன்னைப் பழித்துரைப்பதால், குற்றம் சாட்டுவதால், தன் நண்பர்கள் புகழைத் தேடிக்கொள்கின்றனர் என்று, யோபு, முதல் பகுதியில்
குறிப்பிடுகிறார்.
"பாட்டெழுதி
பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள்; குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும்
புலவர்களும் இருக்கிறார்கள்" என்று, ஒரு திரைப்படத்தில், நக்கீரரைப்
பற்றி, தருமி என்ற புலவர் கூறும் வேடிக்கை வரிகள் நினைவுக்கு வருகின்றன. வாழ்வில் சாதனைகள்
செய்து புகழ்பெறுவோர் ஒருபுறமிருக்க, மற்றவர்கள் சாதனையை, அல்லது, அவர்களது நல்வாழ்வை குறைகூறியே
புகழடைய விரும்புவோரும் உள்ளனர் என்பது, யோபு காலம் முதல், இன்றும், நம்மிடையே
நிலவிவரும் எதார்த்தம்.
தன்
நண்பர்களைச் சாடும் முதல் பகுதியைத் தொடர்ந்து,
இறைவன் தன்னை எவ்வாறு
துன்புறுத்துகிறார் என்பதை, 2வது பகுதியில், பல உருவகங்கள்
வழியே விவரிக்கிறார், யோபு. தன் "வழியை அடைத்தார், பாதையை இருளாக்கினார், மணிமுடியை தலையினின்று அகற்றினார், எல்லாப் பக்கமும் இடித்துத் தகர்த்தார்" (19: 7-12) என்று,
யோபு பட்டியலிடும் இவ்வரிகளில், அவரது வேதனையின் ஆழம் வெளிப்படுகிறது.
தனக்கு
உண்டான தோல் நோயால், தன் குடும்பத்திலிருந்து தான் எவ்வளவு தூரம்
வெறுத்து ஒதுக்கப்பட்டார் என்பதை, 3ம் பகுதியில், 13 முதல் 22 முடிய உள்ள 10 இறைச்
சொற்றொடர்களில், யோபு அப்பட்டமாகக் கூறுகிறார். உடன்பிறந்தோர், உற்றார், நண்பர், பணியாளர் அனைவரும் தன்னைவிட்டு அகன்று சென்றதைப் பற்றி யோபு விவரிக்கும்
வார்த்தைகள், வாசிப்போரின் மனதில் காயங்களை உருவாக்குகின்றன:
யோபு
நூல் 19: 17,19-20
என்
மனைவிக்கு என் மூச்சு வீச்சம் ஆயிற்று; என் தாயின் பிள்ளைகளுக்கு நாற்றம் ஆனேன். என் உயிர் நண்பர்
எல்லாரும் என்னை வெறுத்தனர்; என் அன்புக்குரியவராய் இருந்தோரும்
எனக்கெதிராக மாறினர். நான் வெறும் எலும்பும் தோலும் ஆனேன்.
நமக்கு
உண்டாகும் பல்வேறு நோய்களில், தோல் மீது உருவாகும் நோய்கள், நம்மை வெகுவாகத் தனிமைப்படுத்துகின்றன. உடலுக்குள் உருவாகும் பல
நோய்கள், கொடியனவாக இருந்தாலும், அவை வெளிப்படையாகத் தெரியாததால், உறவுகளும், நண்பர்களும் நம்மை நெருங்கிவரத் தயங்குவதில்லை. ஆனால், தோல் மீது உருவாகும் சிறு,
சிறு நோய்களும், மற்றவர்களை நம் அருகில் வரவிடாமல் தடுத்து விடுகின்றன. அப்போது
நாம் உணரும் தனிமையை, யோபு, இவ்வரிகளில் கூறுவதுபோல் தெரிகிறது.
இவ்வரிகளை சிந்திக்கும்போது, தொழுநோயால் துன்புறுவோரை, குறிப்பாக, அவர்கள், உறவுகளால் விலக்கப்படும்
துன்பத்தை சிந்தித்துப் பார்ப்பது நல்லது. உலகின் மிகப் பழமையான நோய்களில் ஒன்றாகக்
கருதப்படும், தொழு நோயினால், அல்லது, ஹான்சன் நோயினால் பாதிக்கப்பட்டோர், மனித சமுதாயத்திலிருந்து,
அன்றும், இன்றும் விலக்கிவைக்கப்படுகின்றனர் என்ற கொடுமையை நாம் அறிவோம்.
தொழுநோய், தொழுநோயாளி என்ற வார்த்தைகளைப் பற்றி கொஞ்சம் சிந்திப்போம். சில
ஆண்டுகளுக்கு முன்வரை நாம் ‘தொழுநோயாளி’ என்ற வார்த்தைக்குப் பதில் ‘குஷ்டரோகி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினோம். ஆங்கிலத்திலும் அவர்களை ‘leper’ என்று சொல்லிவந்தோம். நல்ல வேளையாக
இப்போது ஆங்கிலத்திலும், தமிழிலிலும் சரியான வார்த்தைகளைப்
பயன்படுத்துகிறோம். ஆங்கிலத்தில் ‘leprosy
patient’ என்றும், தமிழில், ‘தொழுநோயாளி’ என்றும் அழைக்கிறோம். குஷ்டரோகி
என்றோ, leper என்றோ சொல்லும்போது, நாம் குறிப்பிடும் மனிதர், அந்த நோயாகவே மாறிவிட்டதைப்போன்ற உணர்வை ஏற்படுத்துவதால்,
அவரை, மனிதப் பிறவியாகவே நாம் கருதுவதில்லை. இன்றும், இந்நிலை, பல இடங்களில் தொடர்வது,
வேதனைக்குரிய ஓர் உண்மை. நாம் பயன்படுத்தும் சொற்களை மாற்றும்போது எண்ணங்களும் மாறும்
என்பது உண்மை. ஒருவரை, ‘குஷ்டரோகி’ என்று சொல்வதற்குப் பதில்,
அவரை ஒரு ‘நோயாளி’ என்று குறிப்பிடும்போதே, அவரைப் பற்றிய நமது எண்ணங்களும் உணர்வுகளும் வேறுபடும். அவரைப்
பற்றி சிறிதளவாகிலும் உள்ளத்தில் மரியாதை பிறக்கும்.
இஸ்ரயேல்
மக்களிடையே தொழுநோயாளிகளைப் பற்றிய எண்ணங்களும் அவர்கள் நடத்தப்பட்ட முறைகளும் மிகக்
கொடுமையாக இருந்தன. விவிலியத்தில் பரிசுத்தம்,
புனிதம் என்ற சொற்களும், நலம் அல்லது சுகம் என்ற சொற்களும், ஒரே அடிப்படை சொல்லிலிருந்து வந்தவை. ‘கடோஷ்’ (Kadosh) என்ற எபிரேயச் சொல்லுக்கு,
இறைமை, முழுமை என்ற அர்த்தங்கள் உண்டு. எவையெல்லாம் முழுமையாக, நலமாக உள்ளனவோ, அவையெல்லாம் பரிசுத்தமானதாக, புனிதமானதாகக் கருதப்பட்டன. இந்த அடிப்படையில், நலம் இழந்தோரை இறைவனிடமிருந்து பிரிந்தவர்கள், எனவே பாவிகள் என்று தீர்மானித்தனர் யூதர்கள். அதிலும், தொழுநோயால்
பாதிக்கப்பட்டவர்கள், பெரும் பாவிகள் என்ற கண்டனம் எழுந்தது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள்
பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை, லேவியர் நூல் இவ்வாறு சொல்கிறது.
லேவியர்
நூல் 13: 44-46
தொழுநோயால்
பாதிக்கப்பட்டவர் கிழிந்த உடை அணிந்து, தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக்கொண்டு, தீட்டு, தீட்டு, என குரலெழுப்ப வேண்டும். நோயுள்ள
நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர். எனவே தீட்டுள்ள அவர் பாளையத்துக்கு வெளியே தனியாகக்
குடியிருப்பார்.
இத்தகையக்
கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, ஊருக்கு வெளியே, ஒரு குப்பைமேட்டில் அமர்ந்திருந்த யோபு, இறைவன் தன்னை எவ்வாறெல்லாம் வதைக்கிறார் என்பதை 19ம் பிரிவில் பட்டியலிடும்
அதே வேளையில், அதே இறைவன் மீது தனக்கு உள்ள நம்பிக்கையை, இப்பிரிவின் இறுதிப் பகுதியில் மிக உன்னதமான சொற்களில் அறிக்கையிடுகிறார்.
இந்த அற்புதமான வரிகள், நம் அடுத்தத் தேடலை வழிநடத்தும்.
No comments:
Post a Comment