01 August, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 31


Sabika Naqvi and Anannya Chatterjee on Delhi roads
 (Photo: The Quint)

பாசமுள்ள பார்வையில்:  கையளவு இறைச்சிக்காக...

"முகநூலில் வெளியான ஒரு டுவிட்டர் செய்திக்காக, அல்லது, கையளவு இறைச்சிக்காக ஒருவரையொருவர் வெறுப்பது இவ்வளவு எளிதாகிவிட்டதோ?" என்ற கேள்வியுடன், 23 வயது நிறைந்த இரு இளம்பெண்கள், டில்லி சாலைகளில், அன்பைப் பரப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சபிக்கா நக்வி (Sabika Naqvi) என்ற இளம்கவிஞர், டில்லியின் முக்கியமான சாலைகளின் ஓரமாக நின்று, கவிதை வரிகளை சப்தமாக வாசிக்க, அனன்யா சாட்டர்ஜி (Anannya Chatterjee) என்ற இளம் நடனக்கலைஞர், அக்கவிதை வரிகளுக்கு ஏற்றதுபோல், அபிநயங்களுடன் நடனம் ஆடுகிறார். சபிக்கா வாசித்த ஒரு கவிதையிலிருந்த சில வரிகள், இதோ:
அவர்கள் வந்தனர், நம் கதவைத்தட்டித் தந்தனர்... என்று ஆரம்பமாகும் இக்கவிதையின் முதல் பகுதியில் இந்தியாவில் அண்மைய மாதங்களில் வெறுப்பு கும்பல்களால் கொல்லப்பட்டவர்களைப் பற்றிய குறிப்புகளை சபிக்கா அவர்கள் பகிர்ந்துகொள்கிறார். பின்னர்... தன் கவிதையை இவ்வாறு தொடர்கிறார்:
அன்பு காட்டுவது மிகக் கடினமாகவும்,
வெறுப்பது மிக எளிதாகவும் மாறியது ஏன்?
சாலையில், ஒருவரோடு அன்பைப் பகிர்வது, - ஒருவரை முத்தமிடுவது - கடினமாகிப் போனது;
ஆனால், ஒருவரை உயிரோடு எரிப்பது, எளிதாகிப்போனது.
நாம் அதிக அன்பு காட்டுகிறோம்.
ஆனால், நம்மைப்போல் இருப்பவரிடம் மட்டுமே,
நமது மதம், நமது சாதியைச் சார்ந்தவரிடம் மட்டுமே,
நம் கடவுளை நம்புகிறவரிடம் மட்டுமே... அவ்வளவுதான்.

சுகமான இருக்கைகளில் அமர்ந்து,
சுடச்சுடப் பரிமாறப்படும் உணவுக்காகக் காத்திருக்கிறோம்.
அதேவைளையில், நம்மைச் சுற்றியுள்ள வெறுப்பைக் காணாமல்
முகத்தைத் திருப்பிக்கொள்கிறோம்.

ஒரு விடயத்தை மறந்துவிடுகிறோம்...
அதாவது, நாம் மௌனமாக இருந்தால்,
நாளையே நம்மைத் தேடி அடக்குமுறைக் காரர்கள் வருவர்.

மௌனமாக இருப்பவர்களும் கொலைகாரர்களே
நம்மைச் சுற்றி நடப்பதற்குப் பொறுப்பேற்காமல் விலகிச் செல்பவர்களும்
இந்த அநீதிக்கு உடன்போகும் குற்றவாளிகளே.

எது உண்மையிலேயே எளிதானது என அறிய விழைகிறேன்...
அன்பா? வெறுப்பா?
மார்பில் கத்தியால் குத்துவதா? மார்போடு அணைப்பதா?
புன்னைகை புரிவதா? கெட்டவார்த்தைகளைக் கக்குவதா?
நாட்டிலிருந்து ஒருவரைத் தூக்கி எறிவதா? அல்லது, நாட்டுக்குள் வரவேற்பதா?

உன் ஆன்மாவைக் கேள்:
உன் உடல் மனிதத்தன்மையுடன் உள்ளது;
உன் ஆன்மாவும் மனிதத்தன்மையுடன் உள்ளதா?

The agony of Job
வேதனை வேள்வியில் யோபு – பகுதி 31

16ம் நூற்றாண்டில், முகம் பார்க்கும் கண்ணாடியும், 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் நம் உருவங்களைப் பதிவு செய்யும் 'காமிரா'வும், 21ம் நூற்றாண்டின் துவக்கத்தில், நம்மை நாமே படமெடுத்துக்கொள்ளும் 'செல்ஃபி' முறையும் உருவாயின. கண்ணாடி முன் நாம் நின்றபோது, நமது சுயஉருவத்தைப் பற்றிய கூடுதல் தெளிவைப் பெற்றோம். 'காமிரா' மற்றும் 'செல்ஃபி' வழியே நாம் பதிவு செய்த உருவங்களை, இன்னும் சில ஆண்டுகள் சென்றபின்னரும் கண்டு இரசித்தோம். நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் 'ego' என்ற சுயமதிப்பை வளர்க்க, அல்லது, தகர்க்க, கண்ணாடி, 'காமிரா' மற்றும் 'செல்ஃபி' உதவுகின்றன.
இத்தகைய உதவிகள் ஏதும் இல்லாத காலத்தில் வாழ்ந்த ஒருவரின் சுயமதிப்பு, மற்றவர்கள் அவரைப்பற்றிக் கொண்டிருந்த எண்ணங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ஒருவர் பெற்றிருந்த செல்வம், புகழ், பதவி இவற்றின் அடிப்படையில் அவர் பெற்ற மதிப்பைவிட, அவரது நற்குணங்கள், சமுதாயத்தில் அவர் காட்டிய ஈடுபாடு இவற்றின் அடிப்படையில், அவர் பெற்ற மதிப்பு, இன்னும் உன்னதமானதாகக் கருதப்பட்டது.

இத்தகைய உன்னத மதிப்புடன் தான் வாழ்ந்ததாக, 29ம் பிரிவில் கூறும் யோபு, 30ம் பிரிவில், தன் மதிப்பு அனைத்தையும் இழந்து, இறுதியில், தன் உடல் நலனையும் இழந்ததைப்பற்றி கூறியுள்ளார். யோபின் உள்ளத்தைக் கீறி வெளிவரும் இந்த வேதனைக் கதறலின் ஒருசில வரிகள் இதோ:
யோபு நூல் 30: 10,15-19,30
என்னை அவர்கள் அருவருக்கின்றனர்; என்னைவிட்டு விலகிப் போகின்றனர்; என்முன் காறித் துப்பவும் அவர்கள் தயங்கவில்லை.... பெருந்திகில் மீண்டும் என்னைப் பிடித்தது; என் பெருமை காற்றோடு போயிற்று; முகிலென மறைந்தது என் சொத்து. இப்பொழுதோ? என் உயிர் போய்க்கொண்டே இருக்கின்றது; இன்னலின் நாள்கள் என்னை இறுக்குகின்றன. இரவு என் எலும்புகளை உருக்குகின்றது; என்னை வாட்டும் வேதனை ஓய்வதில்லை. நோயின் கொடுமை என்னை உருக்குலைத்தது; கழுத்துப்பட்டை போல் என்னை ஒட்டிக்கொண்டது. கடவுள் சேற்றில் என்னை அமிழ்த்தி விட்டார்; புழுதியும் சாம்பலும்போல் ஆனேன்... என் தோல் கருகி உரிகின்றது; என் எலும்புகள் வெப்பத்தால் தீய்கின்றன.

இவ்வரிகளில் யோபு பட்டியலிடும் வேதனைகள், 22ம் திருப்பாடலின் வரிகளை நம் நினைவுக்குக் கொணர்கின்றன. கல்வாரியில், சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசு, "என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?" (மாற்கு 15:34) என்று கதறியபோது, அவர், திருப்பாடல் 22ஐ செபித்துக்கொண்டிருந்தார் என்று, விவிலிய ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். யோபு நூல் 30ம் பிரிவில் கூறப்பட்டுள்ள பல வேதனை வரிகள், ‘துயர்மிகு புலம்பல் என்று பெயரிடப்பட்டுள்ள திருப்பாடல் 22லும் கூறப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.
திருப்பாடல் 22: 1,6,14-17
என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்?... நானோ ஒரு புழு, மனிதனில்லை; மானிடரின் நிந்தைக்கு ஆளானேன்; மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்... நான் கொட்டப்பட்ட நீர்போல் ஆனேன்; என் எலும்புகள் எல்லாம் கழன்று போயின; என் இதயம் மெழுகுபோல் ஆயிற்று; என் உள்ளுறுப்புகளின் நடுவே உருகிப் போயிற்று. என் வலிமை ஓடுபோலக் காய்ந்தது; என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது; என்னைச் சாவின் புழுதியிலே போட்டுவிட்டீர். தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழந்து கொண்டார்கள்; என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள். என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம்.

இத்திருப்பாடலின் முதல் 21 இறைவாக்கியங்களில், தான் அனுபவிக்கும் வேதனையைக் கூறும் திருப்பாடலின் ஆசிரியர், தொடர்ந்துவரும் இறைவாக்கியங்களில், இறைவன் எளியோரைக் காப்பவர் என்று அறிக்கையிடுகிறார்.

திருப்பாடல் 22: 22-26
உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்; சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன். ஆண்டவருக்கு அஞ்சுவோரே; அவரைப் புகழுங்கள். ஏனெனில், எளியோரின் சிறுமையை அவர் அற்பமாக எண்ணவில்லை; அதைக் கவனியாமல் இருந்துவிடவில்லை; தமது முகத்தை அவர்களுக்கு மறைக்கவுமில்லை; தம்மை நோக்கி அவர்கள் மன்றாடுகையில் அவர்களுக்குச் செவிசாய்த்தார். எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்; ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக! அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக!
எளியோரைக் காப்பவர் இறைவன் என்று திருப்பாடலின் ஆசிரியர் வெளியிட்டுள்ள இவ்வறிக்கை, இத்திருப்பாடலைத் தொடர்ந்து இடம்பெறும் ஆண்டவரே என் ஆயர் என்ற புகழ்மிக்க 23ம் திருப்பாடலுக்குத் தகுந்ததொரு முன்னுரையாக அமைந்துள்ளது.

தன்னை இறைவன் கைவிட்டார் என்று துவங்கினாலும், எளியோரை இறைவன் காக்கிறார் என்ற நம்பிக்கையுடன் திருப்பாடல் ஆசிரியர் கூறியுள்ள கருத்துக்களுக்கு, எதிர் துருவமாக அமைந்துள்ளன, யோபின் புலம்பல்கள். யோபு நூல், 30ம் பிரிவில், தன் துன்பங்களை, பல வழிகளில் படம்பிடித்துக் காட்டும் யோபு, இறைவனே இவ்விதம் தன்னை வதைக்கிறார் என்பதையும் சொல்லத் தயங்கவில்லை.
துன்பங்கள் சூழும் வேளையில், இறைவன் எங்கே என்று தேடுவது, அல்லது, இறைவன் இல்லை என்ற முடிவுக்கு வருவது ஒரு நிலை. இறைவன் தன்னைவிட்டு விலகிப் போய்விட்டார், இறைவன் இப்படிப்பட்டவர்தான் என்று தீர்மானிப்பது மற்றொரு நிலை. இரண்டாவது நிலை கூடுதல் ஆபத்தானது.

இறைவன் இல்லை என்று எண்ணுவதைவிட, இறைவன் இரக்கமற்று போனார் என்று சிந்திப்பது ஆபத்தான மனநிலை என்று, புகழ்பெற்ற இறையியலாளரும், எழுத்தாளருமான சி.எஸ்.லூயிஸ் (C.S.Lewis) அவர்கள் தன் நூல் ஒன்றில் எழுதியுள்ளார். தன் மனைவி, இறந்ததைத் தொடர்ந்து, தான் அடைந்த ஆழ்ந்த துயரத்தை, பல கோணங்களில் சிந்தித்து, அதன் விளைவாக, சிந்திக்கப்பட்ட ஒரு துயரம் என்ற பொருள்படும், "A Grief Observed" என்ற தலைப்பில், 1961ம் ஆண்டு, ஒரு நூலை வெளியிட்டார் லூயிஸ். தன் துயரத்தின் ஆழத்தில், இறைவனைப்பற்றி தான் கொண்டிருந்த சிந்தனைகளை அவர் இவ்வாறு பகிர்ந்துகொள்கிறார்:
"இறைவனை நம்புவதை நான் நிறுத்திக்கொள்வேன் என்ற ஆபத்து எனக்கில்லை. ஆனால், இறைவனைப் பற்றிய கொடூரமான எண்ணங்களை வளர்த்துக்கொள்வேன் என்பதே, உண்மையான ஆபத்து. என் வாழ்வில் இவையெல்லாம் நிகழ்ந்துள்ளன. எனவே, கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வருவதைக் காட்டிலும், ‘என் வாழ்வில் இவையெல்லாம் நிகழ்ந்துள்ளன. எனவே, கடவுள் இப்டித்தான்என்று அவரைப்பற்றி தவறான முடிவெடுப்பதைக் குறித்தே நான் மிகவும் அஞ்சுகிறேன்" என்று சி.எஸ்.லூயிஸ் அவர்கள் கூறியுள்ளார். இதையொத்த ஆபத்தில் யோபு சிக்கியிருப்பதை நாம் உணரலாம்.

தான் அடைந்துள்ள துன்பங்களுக்குக் காரணத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் வேதனைப்பட்ட யோபு, அந்நிலையிலிருந்து மாறி, தன்னைத் துன்புறுத்துவதே, இறைவனின் வேலையாக மாறிவிட்டது, என்ற கோணத்தில் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார். தன்னை இறைவன் எவ்வளவு கொடுமையாக நடத்துகிறார் என்பதை, யோபு விவரிக்கும் வரிகள், கூரிய அம்புகளாகப் பாய்ந்து வருகின்றன:
யோபு நூல் 30: 21-22
கொடுமையுள்ளவராய் என்மட்டில் மாறினீர்; உம் கை வல்லமையால் என்னைத் துன்புறுத்துகின்றீர்; என்னைத் தூக்கிக் காற்றில் பறக்கவிட்டீர்; புயலின் சீற்றத்தால் என்னை அலைக்கழித்தீர்.

"இவ்வாறெல்லாம் வாழ்ந்தேன், இப்போது, இந்த இழிநிலைக்குத் தாழ்ந்தேன்" என்பதை, 29, மற்றும் 30 ஆகிய இரு பிரிவுகளில் கூறும் யோபு, 31ம் பிரிவில், தன் வாதங்களை, ஒரு புதிய திசையில் திருப்புகிறார். பெரும்பாலான விவிலியப் பதிப்புக்களில், 31ம் பிரிவுக்கு, "தாம் குற்றமற்றவர் என்பதை யோபு விளக்குதல்" என்ற தலைப்பு வழங்கப்பட்டுள்ளது. 'குற்றமற்றவர்' என்ற நிலையைக் கடந்து, தான் எத்தகைய உன்னதமானப் பண்புகளுடன் வாழ்ந்தவர் என்பதை, யோபு, இப்பிரிவில், அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளார்.
எடுத்துக்காட்டாக, பிறருக்குரியதை தான் ஒருபோதும் அபகரித்ததில்லை என்பது மட்டுமல்ல, தனக்குரியதை பிறரோடு பகிர்ந்துகொண்டதாக யோபு குறிப்பிடுகிறார். அதேவண்ணம், தான் ஒருபோதும் பிற பெண்களுடன் தகாத உறவு கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, கன்னிப்பெண்களை தீய எண்ணத்தோடு தான் பார்த்ததே இல்லை என்று வலியுறுத்திக் கூறுகிறார்.
கண்களோடு நான் உடன்படிக்கை செய்துகொண்டேன்; பின்பு, கன்னி ஒருத்தியை எப்படி நோக்குவேன்? (யோபு 31:1) என்ற கேள்வியோடு துவங்கும் இப்பிரிவை, "The Code of the Jewish Gentleman", அதாவது, "யூத கண்ணியவானின் நன்னெறிக் கொள்கை" என்று தலைப்பிடுவதே தகுந்தது என்று, யூத மத குரு ஹெரால்டு குஷ்னர் அவர்கள் கூறியுள்ளார். யோபின் நன்னெறி வாழ்வை விளக்கும் 31ம் பிரிவில் நம் தேடல் பயணம் அடுத்தவாரம் தொடரும்.


No comments:

Post a Comment