09 August, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 32


Yoshitaka Kawamoto

பாசமுள்ள பார்வையில்: உயிர் பிரியும் வேளையில் அம்மாவின் நினைவு...

ஆகஸ்ட் 6 மற்றும் 9 தேதிகளில், ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களில் அமெரிக்க ஐக்கிய நாடு நடத்திய அணுகுண்டு தாக்குதல்கள், மனித வரலாற்றில் ஆழமான, ஆறாதக் காயங்களை உருவாக்கியுள்ளன. ஹிரோஷிமாவில் அமைந்துள்ள அமைதி நினைவு அருங்காட்சியகத்தின் இயக்குனராகப் பணியாற்றியவர், யோஷிடகா கவமோட்டோ (Yoshitaka Kawamoto) அவர்கள். 13 வயது நிறைந்த யோஷிடகா அவர்கள், 1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, ஹிரோஷிமாவில் தன் வகுப்பறையில் பிற மாணவர்களோடு அமர்ந்திருந்தார். அவ்வேளையில் நிகழ்ந்த அணுகுண்டு தாக்குதலின் விளைவாக, அவரது பள்ளி தரைமட்டமானது. யோஷிடகா அவர்களும் அந்த இடிபாடுகளில் சிக்கி, நினைவிழந்தார். 40 ஆண்டுகள் சென்று, 1985ம் ஆண்டு, TIME இதழுக்கு யோஷிடகா அவர்கள் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்:
"எனக்கு நினைவு திரும்பியதும், மனதில் தோன்றிய முதல் எண்ணம், சக மாணவர்களைக் காப்பாற்றவேண்டும் என்பதே. என் முகத்திலும், வலது கையிலும் அடிபட்டிருந்தாலும், நான் அந்த இடிபாடுகள் நடுவே, மெல்ல, மெல்ல ஊர்ந்து சென்றபடி, 'யாராவது உயிரோடு இருக்கிறீர்களா?' என்று குரல் கொடுத்தேன். அப்போது, அருகில், குவிந்து கிடந்த பலகைகள் நடுவிலிருந்து, என் நண்பன் ஓட்டா (Ota) கையசைத்தான். அவன்மீது குவிந்திருந்த பலகைகளை அகற்றி பார்த்தபோது, அவனது முதுகெலும்பு உடைந்திருந்ததென்று தெரிந்தது. இடதுகண்ணைக் காணவில்லை. அவன் எதையோ சொல்ல விழைந்தான். ஆனால் முடியவில்லை. அவனது உதடுகள் கிழிந்திருந்தன. தன் சட்டைப்பையிலிருந்து ஒரு சிறு குறிப்பேட்டை வெளியில் எடுத்து என்னிடம் தந்தான். அந்தக் குறிப்பேட்டின் முதல் பக்கத்தில் அவனது தாயின் புகைப்படம் இருந்தது. அதை அவன் சுட்டிக்காட்டினான். 'இதை நான் உன் அம்மாவிடம் கொடுக்கவேண்டுமா?' என்று கேட்டபோது, அவன் 'ஆம்' என்று தலையசைத்தான். அடுத்த நிமிடம், அவனது உயிர் பிரிந்தது" என்று யோஷிடகா அவர்கள் தன் பேட்டியில் கூறினார்.
உயிர் பிரியும் இறுதி நொடிகளில், சிறுவன் ஓட்டா, தன் அம்மாவின் நினைவுடன் விடைபெற்றான்.

Job in great agony

வேதனை வேள்வியில் யோபு – பகுதி 32

யோபு வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த ஒரு கற்பனை காட்சி, நம் விவிலியத் தேடலை இன்று துவக்கிவைக்கிறது. வெளியூருக்குச் செல்லும் ஒருவர், தன்னிடமிருந்த நகைகளை, பக்கத்து வீட்டுக்காரரிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறார். அவர் திரும்பி வந்தபின், தன் நகைகளைத் தரும்படி பக்கத்து வீட்டுக்காரரைக் கேட்கும்போது, அந்த நகைகளெல்லாம் திருடப்பட்டுவிட்டன என்று அவர் கூறுகிறார். நகையைக் கொடுத்தவர், பக்கத்து வீட்டுக்காரர் மீதே சந்தேகம் கொள்கிறார். ஆனால், அவரோ, தான் அந்த நகைகளை எடுக்கவில்லையென்றும், அதற்கு இறைவனே சாட்சியென்றும் கூறுகிறார்.
இறைவனின் பெயரை வீணாகவோ, தவறாகவோ பயன்படுத்தக்கூடாது என்பது, இறைவன் வழங்கிய பத்துக்கட்டளைகளில் ஒன்று. அவ்விதம் பயன்படுத்தினால், அதற்குத் தகுந்த தண்டனையை இறைவனே தருவார் என்பது, யூதர்களிடையே நிலவிவந்த நம்பிக்கை. இத்தகைய விளைவை அறிந்தும், ஒருவர், இறைவன் பெயரைப் பயன்படுத்தினார் எனில், அவர் சொன்னதை முழுமையாக ஏற்கவேண்டும். இது, இஸ்ரயேல் மக்களிடையே நிலவிய பழக்கம். எனவே, நகைகளைக் கொடுத்தவர், நகைகளை எடுக்கவில்லை என்பதை, இறைவன் பெயரால் கூறும் தன் பக்கத்து வீட்டுக்காரரை நம்பியே ஆகவேண்டும்.
ஒருவர், இறைவனின் பெயரை, தவறாகப் பயன்படுத்தி, நீதித்தராசின் தட்டுக்களை நிலைகுலையைச் செய்திருந்தால், இறைவன், அவருக்குரியத் தண்டனையை வழங்கி, நீதித்தராசை மீண்டும் சமநிலைக்குக் கொணர்வார் என்பது, இஸ்ரயேல் மக்களிடையே நிலவிவந்த நம்பிக்கை. இந்த நம்பிக்கையை விளக்கிக்கூற, யூதப் பாரம்பரியத்தின் தொகுப்பான 'தால்முத்' (Talmud) நூலில் ஒரு கதை சொல்லப்பட்டுள்ளது:

தொழுகைக்கூடத்தின் தலைவராக இருந்த குரு ஒருவர், ஊருக்கு வெளியே நடந்து சென்ற வேளையில், தன் உயிருக்குப் பயந்து ஒருவர் ஓடிக்கொண்டிக்க, மற்றொருவர், கையில் கத்தியுடன் அவரைத் துரத்திச் சென்றதைப் பார்த்தார். அவர்கள் இருவரும் ஒரு குகைக்குள் ஓடி மறைந்தனர். குருவோ, குகைக்கு வெளியில் நின்றார். குகைக்குள் ஒருவர் அலறும் சப்தம் கேட்டது. சிறிது நேரம் சென்று, இரத்தம் சொட்டும் கத்தியுடன், துரத்திச் சென்றவர் வெளியே வந்தார். அங்கு நின்ற குருவைப் பார்த்து, "நான் பெரியதொரு குற்றம் செய்துவிட்டேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அப்படித்தானே? ஆனால், பாவம். அதற்கு உங்களால் சாட்சியம் எதுவும் சொல்லமுடியாது. ஏனெனில், குகைக்குள் நடந்தது என்ன என்பதை நீங்கள் நேரில் பார்க்கவில்லை. அப்படியே நீங்கள் பார்த்திருந்தாலும், நீங்கள் ஊரில் பெரியவர் என்றாலும், நீங்கள் சொல்லும் சாட்சியம் செல்லாது. ஏனெனில், சட்டப்படி, எந்த ஒரு பெரும் குற்றத்திற்கும் இருவர் சாட்சியம் சொல்லவேண்டும்" என்று சொல்லிவிட்டு, அம்மனிதர் உரத்த குரலில் சிரித்தபடியே புறப்பட்டார். அவர் அங்கிருந்து இரண்டடி எடுத்து வைப்பதற்குள், ஒரு பாம்பு அவரைக் கொத்தவே, அவர் அவ்விடத்திலேயே இறந்தார்.

தவறு செய்வோர் யாரும் தண்டனை பெறாமல் போவதில்லை, அதிலும், தன் தவறை மறைக்க இறைவனின் பெயரையோ, சட்டத்தின் பெயரையோ தவறாகப் பயன்படுத்துவோர், இறைவனாலேயே தண்டிக்கப்படுவர் என்பதை, யூதப் பாரம்பரியக் கதைகள் வலியுறுத்தியுள்ளன. தமிழில் நாம் பயன்படுத்தும் அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழியும், இதே கருத்தை வலியுறுத்துகிறது.

அர்த்தமுள்ள இந்துமதம் என்ற நூலில், கண்ணதாசன் அவர்கள், இந்தப் பழமோழிக்கு விளக்கம் தருவதுபோல் தன் அனுபவம் ஒன்றைப் பகிர்ந்துகொள்கிறார். இதோ கண்ணதாசன் அவர்களின் பகிர்வு:
மாயவரம் கொலை வழக்கு என்று பிரபலமான வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஏழு பேர் சிறைச்சாலையில், அந்த ஏழு பேரில், ஆறு பேர் நாளை தூக்குக்குப் போகப் போகிறோமே!என்று துடித்துக் கொண்டிருந்தார்கள். முருகா முருகா என்று ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், ஒருவன் மட்டும் சலனம் இல்லாமல் அமைதியாக இருந்தான்... நாளை சாகப்போகிறோம் என்ற கவலை அவனுக்கில்லை. அவன் சொன்னான்:
ஐயா, இந்தக் கொலைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. ஏற்கெனவே நான் மூன்று கொலைகள் செய்திருக்கிறேன். ஒவ்வொரு கொலை செய்யும்போதும் நான் ஊரில் இல்லாதது மாதிரி `அலிபி தயார் செய்துவிட்டு அந்தக் கொலையைச் செய்வேன். மூன்று கொலைகளிலும் நான் விடுதலையானேன். இந்தக் கொலை நடந்த அன்று நான் மாயவரத்திலேயே இருந்தேன். ஆண்டவன்தான் என்னை அங்கே இருக்க வைத்திருக்கிறான். பல நாட்களாக எனக்கு வலைவீசிய போலீசார், சரியான சாட்சியங்களோடு என்னைக் கைது செய்துவிட்டார்கள். காரணம், கொலை செய்தவர்களிலே மூன்று பேர் என் சொந்தக்காரர்கள். சாட்சியம் சரியாக இருந்ததால், எனக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது. ஐயா! இந்தக் கொலைக்காக நான் சாகவில்லை. ஏற்கெனவே செய்த கொலைகளுக்காகவே சாகப் போகிறேன்.
அவன் சொல்லி முடித்தபோது, `அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழியே என் நினைவுக்கு வந்தது என்று கண்ணதாசன் அவர்கள் கூறியுள்ளார்.

இறைவனின் பெயரைச் சொல்லித் தவறுகள் செய்வதும், இறைவனே இல்லை, அல்லது, இறைவன் என்ன செய்துவிடமுடியும் என்ற இறுமாப்பில் குற்றங்கள் புரிவதும், தகுந்த விளைவுகளைக் கொணரும் என்ற கருத்துக்களை இங்கு நாம் பேசுவதற்குக் காரணம், யோபு நூல், 31ம் பிரிவில் யோபு பயன்படுத்தும் இறுதி வாதங்கள். தன் மாசற்ற தன்மையை நிரூபிக்க அவர் இறைவனையே சாட்சியாக அழைக்கிறார். தான் செய்வதன் விளைவுகளை நன்கு அறிந்தவராக, யோபு இறைவனை நேரில் வரச்சொல்லி சவால் விடுகிறார்.

31ம் பிரிவில், யோபு, இருவகை வாதங்களைப் பயன்படுத்துகிறார். தான் குற்றங்களைப் புரிந்திருந்தால், அதற்குத் தகுந்த தண்டனைகளைச் சந்திக்க தயார் என்பது ஒருவகை வாதம். மற்றொரு வகை வாதத்தில், தான் எதையாவது செய்யத் தவறினேனா என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.

யோபு நூல் 31: 5-8
பொய்ம்மையை நோக்கி நான் போயிருந்தால், வஞ்சகத்தை நோக்கி என் காலடி விரைந்திருந்தால், சீர்தூக்கும் கோலில் எனை அவர் நிறுக்கட்டும்; இவ்வாறு கடவுள் என் நேர்மையை அறியட்டும். நெறிதவறி என் காலடி போயிருந்தால், கண்ணில் பட்டதையெல்லாம் என் உள்ளம் நாடியிருந்தால், என் கைகளில் கறையேதும் படிந்திருந்தால், நான் விதைக்க, இன்னொருவர் அதனை உண்ணட்டும்; எனக்கென வளர்பவை வேரொடு பிடுங்கப்படட்டும்.
தான் தவறுகள் செய்திருந்தால், அதற்குரிய சாபங்கள் தன்னைவந்து சேரட்டும் என்று தனக்குத்தானே சாபங்களை விடுத்துக்கொள்ளும் யோபின் வார்த்தைகள், அவர் குற்றமற்றவர் என்பதை இன்னும் ஆணித்தரமாக நிரூபிக்கின்றன. இதைத் தொடர்ந்து, தான் செய்யாமல் போன நற்செயல்கள் ஏதேனும் உண்டா என்ற ஆன்ம ஆய்வில் ஈடுபடும் யோபு, அவற்றை, கேள்விகளாக முன்வைக்கிறார்.

யோபு நூல் 31: 16-17,19,21,29,33-34
ஏழையர் விரும்பியதை ஈய இணங்காது  இருந்தேனா? கைப்பெண்டிரின் கண்கள் பூத்துப்போகச் செய்தேனா? என் உணவை நானே தனித்து உண்டேனா? தாய் தந்தையற்றோர் அதில் உண்ணாமல் போயினரா? ஆடையில்லாமல் எவராவது அழிவதையோ போர்வையின்றி ஏழை எவராவது இருந்ததையோ பார்த்துக்கொண்டு இருந்தேனா? எனக்கு மன்றத்தில் செல்வாக்கு உண்டு எனக்கண்டு, தாய் தந்தையற்றோர்க்கு எதிராகக் கைஓங்கினேனா? என்னை வெறுப்போரின் அழிவில் நான் மகிழ்ந்ததுண்டா? அல்லது அவர்கள் இடர்படும்போது இன்புற்றதுண்டா? என் தீச்செயலை உள்ளத்தில் புதைத்து, என் குற்றங்களை மானிடர்போல் மறைத்ததுண்டா?  பெருங்கும்பலைக் கண்டு நடுங்கி, உறவினர் இகழ்ச்சிக்கு அஞ்சி, நான் வாளாவிருந்ததுண்டா? கதவுக்கு வெளியே வராதிருந்தது உண்டா?

தனக்குத்தானே சாபங்கள் வழங்கி, தான் செய்யத்தவறியவை ஏதேனும் உண்டா என்று கேள்விகளை அடுக்கி, யோபு தொகுத்து வழங்கும் இறுதி வாதங்களை, யூத மத குரு ஹெரால்டு குஷ்னர் அவர்கள், வேறு சொற்களில் கற்பனை செய்து, அழகாக விவரித்துள்ளார்:
"நான் இறைவனிடம் மன்றாடிக் கேட்டுவிட்டேன். நான் மாசற்றவன் என்பதை பல வழிகளில் அறிக்கையிட்டுவிட்டேன். இறைவன் இவ்வாறு செய்வதற்கு காரணத்தையாவது சொல்லவேண்டும் என்று கேட்டுவிட்டேன். ஆனால், இதுவரை இறைவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. எனவே, இனி நான் கெஞ்சப் போவதில்லை. இறைவனின் பெயரால், மீண்டும் நான் கூறுகிறேன். நான் மாசற்றவன். இறைவனுக்கோ, வேறு யாருக்கோ எதிராக நான் எதுவும் செய்யவில்லை. நான் சொல்வது பொய் என்றால், என் இறைவன் இங்கு நேரில் வந்து எனக்கெதிராகச் சாட்சி சொல்லட்டும். அவ்வாறு அவரால் சாட்சி சொல்ல முடியவில்லையென்றால், நான் மாசற்றவன் என்பதைச் சொல்வதற்காகிலும் இறைவன் இங்கு வரட்டும்" என்று சவால் விடும் வண்ணம், யோபு தன் வாதங்களை முடிக்கிறார்.

அவர் விரும்பிக் கேட்டதுபோலவே, இறைவன் அங்கு வருகிறார். ஆனால், இறைவன் அங்கு வருவதற்கு முன்,  வழக்கு மன்றத்தில் புதியதொரு திருப்பம் நிகழ்கிறது. அதுவரை, யோபும், அவரது நண்பர்கள் மூவரும் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த எலிகூ என்ற இளையவர், தன் வாதங்களைத் துவக்குகிறார். உணர்வு பொங்கப் பேசும் இந்த இளையவரின் வாதங்களுக்கு நாம் அடுத்த வாரம் செவிமடுப்போம்.


No comments:

Post a Comment