29 August, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 35



Burning house
பாசமுள்ள பார்வையில்:  தந்தை சொன்னதை நம்பி...

கடும்குளிர் காலத்தில் ஒரு நாள் நள்ளிரவில், ஊருக்கு ஓரத்தில் இருந்த அந்த வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. வீட்டில் இருந்த குழந்தைகளையெல்லாம் எழுப்பி, தந்தையும் தாயும் வீட்டுக்கு வெளியே விரைந்தனர். அந்த அவசரத்தில் ஒரு குழந்தையை மாடியில் விட்டுவிட்டு வெளியேறி விட்டனர். சன்னலருகே வந்து அழுது கொண்டிருந்த அச்சிறுமியை, தந்தை, சன்னல்வழியே குதிக்கச் சொன்னார்.
சிறுமி அங்கிருந்து, "அப்பா, ஒன்னும் தெரியலியே. ஒரே இருட்டா, புகையா இருக்கே. எப்படி குதிக்கிறது?" என்று கத்தினாள். அப்பா கீழிருந்தபடியே, "உனக்கு ஒன்னும் தெரியலனாலும் பரவயில்லமா. தைரியமா குதி. என்னாலே ஒன்னைப் பார்க்க முடியுது. குதிம்மா" என்று தைரியம் சொன்னார். தந்தை சொன்னதை நம்பி குதித்தாள் சிறுமி... தந்தையின் பாதுகாப்பான அரவணைப்பிற்குள் தஞ்சம் புகுந்தாள்.

Elihu rebukes Job
வேதனை வேள்வியில் யோபு – பகுதி 35

யோபு, தான் குற்றமற்றவர் என்பதையும், இறைவன் தன்னை வதைப்பது அநீதி என்பதையும், தன் இறுதி வாதங்களில் முன்வைத்தபோது, 'அப்ஜெக்க்ஷன் யுவர் ஆனர்' என்று தன் மறுப்புக்களைக் கூற முன்வந்த இளையவர் எலிகூவின் வாதங்களை, நாம் கடந்த வாரத் தேடலில் செவிமடுக்க ஆரம்பித்தோம். இன்று தொடர்கிறோம்.
தான் எத்தனையோ வழிகளில் கேள்விகள் எழுப்பியும், 'என் சொல் எதற்கும் அவர் பதில் கூறுவதில்லை' (யோபு 33:13) என்று யோபு வெளியிட்ட முறையீட்டிற்கு, எலிகூ முதலில் பதில் கூறினார். இறைவன் பல வழிகளில் மனிதர்களுக்குப் பதில் சொல்கிறார்; குறிப்பாக, கனவுகள், இரவுக்காட்சிகள், அயர்ந்து உறங்குகையில் ஒலிக்கும் குரல் (யோபு 33:15-16) இவற்றின் வழியே பதில் கூறுகிறார் என்று எலிகூ கூறினார்.
கனவுகள், காட்சிகள் வழியே இறைவன் தரும் எச்சரிக்கைகளுக்குச் செவிகொடாமல் தவறிழைப்போரின் சார்பாக, இறைவனிடம் பரிந்துபேச, வானதூதர்கள் உள்ளனர் என்பதையும், எலிகூ, 33ம் பிரிவில் விளக்கிக் கூறினார். இந்த எண்ணங்களை நாம் சென்ற தேடலில் சிந்தித்தோம்.

யோபு கடவுள் மீது சுமத்திய ஏனைய பழிகளுக்கு, இளையவர் எலிகூ கூறும் பதில்கள், 34, 35 மற்றும் 36ம் பிரிவுகளில் இடம் பெற்றுள்ளன. "நான் நேர்மையானவன்; ஆனால் இறைவன் என் உரிமையைப் பறித்துக் கொண்டார், நான் நேர்மையாக இருந்தும் என்னைப் பொய்யனாக்கினார்; நான் குற்றமில்லாதிருந்தும் என் புண் ஆறாததாயிற்று" (யோபு 34:5-6) என்று, இறைவன் மீது பழிசுமத்தும் யோபுக்கு, "உண்மையாகவே, கொடுமையை இறைவன் செய்யமாட்டார்; நீதியை, எல்லாம் வல்லவர் புரட்டமாட்டார்" (யோபு 34:12) என்று திட்டவட்டமாகக் கூறுகிறார், எலிகூ.
இதைத்தொடர்ந்து, யோபு எழுப்பிய ஒரு கேள்வியை, எலிகூ மீண்டும் நினைவு கூர்கிறார். "நான் பாவம் செய்யாததனால் எனக்கு என்ன ஆதாயம்? எனக்கு என்ன நன்மை?" (யோபு 35:3) என்று யோபு எழுப்பிய அந்தக் கேள்வி, மாசற்றோர் பலரின் உள்ளங்களை வதைக்கும் ஒரு கேள்வி.

பல விவிலிய விரிவுரையாளர்கள், இந்தக் கேள்வியை, யோபு நூலின் கருப்பொருள் என்று கூறியுள்ளனர். நல்லவற்றை செய்து, நேர்மையாய் வாழ்வோர், பல்வேறு துன்பங்களை அனுபவிக்கும் வேளையில், அவர்கள் உள்ளங்களிலிருந்து வெடித்தெழும் கேள்வி, நல்லவராக வாழ்வதால் என்ன பயன்?’ என்ற கேள்வி. இக்கேள்வியின் பின்புலத்தில், வேதனை நிறைந்த மற்றொரு கேள்வியும் இணைந்து எழும். அதாவது, நன்மை செய்வோர் வீழ்வதும், தீமை செய்வோர் வாழ்வதும் ஏன்?’ என்ற கேள்வி. இது, மனித குலத்தை மீண்டும், மீண்டும் தாக்கிவரும் ஒரு கேள்வி. திருப்பாடலின் ஆசிரியர், இந்தக் கருத்தை, 73ம் திருப்பாடலில் இவ்வாறு கூறியுள்ளார்:
திருப்பாடல்கள் 73 12-13
பொல்லார்... என்றும் வளமுடன் வாழ்ந்து செல்வத்தைப் பெருக்கிக்கொள்கின்றனர். அப்படியானால், நான் என் உள்ளத்தை மாசற்றதாய் வைத்துக் கொண்டது வீண்தானா? குற்றமற்ற நான் என் கைகளைக் கழுவிக்கொண்டதும் வீண்தானா?

யோபை மையப்படுத்தி, யூத மத குரு ஹெரால்டு குஷ்னர் (Harold Kushner) அவர்கள் எழுதிய நூலின் தலைப்பு, 'The Book of Job - When Bad Things Happened to a Good Person' அதாவது, 'யோபு நூல் - நல்லவர் ஒருவருக்கு பொல்லாதவை நிகழ்ந்தபோது'. இந்த நூலின் தலைப்பு, குஷ்னர் அவர்களை, புகழ்பெற்ற எழுத்தாளராக உலகிற்கு அறிமுகம் செய்த மற்றொரு நூலின் தலைப்பைத் தழுவியிருந்தது. குஷ்னர் அவர்கள் எழுதிய அந்த நூலின் தலைப்பு - “When Bad Things Happen to Good People” அதாவது, "நல்லவர்களுக்குப் பொல்லாதவை நிகழும்போது". அரியதொரு நோயால் தன் மகன் ஆரோன் மிகவும் துன்புற்று, சிறுவயதில் இறந்தபோது, அந்தப் பேரிழப்பில் அர்த்தம் காணும் ஒரு முயற்சியாக, குஷ்னர் அவர்கள் எழுதிய நூல் அது. உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த ஒரு நூல் அது.
அந்த நூல் ஏற்படுத்திய தாக்கத்தைக் கண்டு, குஷ்னர் அவர்களின் நண்பர்களில் சிலர், அவரிடம் ஒரு வேண்டுகோளை முன் வைத்தனர். "நல்லவர்களுக்குப் பொல்லாதவை நிகழும்போது" என்பதைச் சிந்தித்த குஷ்னர் அவர்கள், "பொல்லாதவர்களுக்கு நல்லவை நிகழும்போது" - When Good Things Happen to Bad People - என்பதையும் ஒரு நூலாக எழுதவேண்டும் என்பதே, அவர்களது வேண்டுகோள்.

"பொல்லாதவர்களுக்கு நல்லவை நிகழும்போது", நம்மில் பலருக்கு கேள்விகள் எழுகின்றன. நல்லவர்களின் துன்பம் நம் மனங்களில் ஆழமான, விடை காண முடியாத கேள்விகளை எழுப்புகின்றன, உண்மைதான். ஆனால், பொல்லாதவர்கள் அனுபவிக்கும் செல்வம், மகிழ்வு இவற்றைக் காணும்போது, இன்னும் ஆழமான, ஆத்திரமான கேள்விகள் உள்ளத்தில் எழுகின்றன. பல நேரங்களில் இக்கேள்விகளுக்கு விரக்தி, வேதனை, கோபம் இவையே நமது விடைகளாகின்றன.

பொல்லாதவர்கள் எளிதில் செல்வம் சேர்க்கின்றனர்; சுகமாக வாழ்கின்றனர்; அவர்கள் எதைக் கண்டும் அஞ்சுவதில்லை; அவர்களை அரசோ, சட்டமோ, நீதிமன்றமோ, எதுவுமே கட்டுப்படுத்த முடியாது... என்பவையே நம் மனதில் அடிக்கடி பதிந்துவிடும் எண்ணங்கள். இவ்வெண்ணங்கள் மேலோட்டமானவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
பொல்லாதவர்களின் வாழ்க்கையை நாம் பெரும்பாலும் வெளியிலிருந்தே பார்க்கிறோம். அப்பார்வையில், அவர்கள் வாழும் வாழக்கை மகிழ்ச்சி நிறைந்ததாகத் தெரிகிறது. மகிழ்வு, நிம்மதி இவற்றை, உறைவிடம், உணவு, உடை, வசதி, வாகனம் என்ற அளவுகோல்கள் கொண்டு கணக்கிடும்போது, இத்தகைய முடிவுகள் எடுக்கிறோம். ஆனால், உண்மை நிலை என்ன?

தங்கள் செல்வச்செழிப்பை விளம்பரப்படுத்தி வாழ்ந்துவரும் பலரது வாழ்வு, உள்ளுக்குள் புரையோடிப்போன புண்ணாக இருப்பதை எண்ணிப்பார்க்கும்போது, பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட கல்லறை, ஓர் உருவகமாக மனதில் தோன்றுகிறது. விலையுயர்ந்த பளிங்கு கற்களால் கட்டப்பட்டு, வெளிப்புறத்தில் அழகாகத் தெரியும் அந்தக் கல்லறைகளுக்குள் இருப்பதெல்லாம், அருவருக்கத்தக்க வகையில் அழிந்துபோயிருக்கும் உடல்களே.
இந்தியாவில் காலமான ஒரு மாநில முதல்வரைப்பற்றி நாம் மறந்திருக்க வாய்ப்பில்லை. பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைக் குவித்து வைத்திருந்த அந்த முதல்வர் இறந்தபின்பு, அவர் வாழ்ந்த தனிமையான வாழ்வைப்பற்றி, மரணத்திலும் அவர் தனித்து விடப்பட்டதைப்பற்றி, இன்னும் பேசிவருகிறோம். அவர் சேர்த்துவைத்த சொத்துக்களெல்லாம் அவருக்கு உண்மையான மகிழ்வையோ, நிறைவையோ, உறவையோ தரவில்லை என்பதை, யாரும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

இதோ, இன்னும் ஒரு சில எடுத்துக்காட்டுகள்:
Johnson & Johnson என்ற பன்னாட்டு நிறுவனத்தின் உரிமையாளருடைய குடும்பத்தில் பிறந்த Casey Johnson என்ற இளம்பெண், தன் வளர் இளம் பருவத்திலேயே போதைப் பொருள்களுக்கு அடிமையாகி, தன் 30வது வயதில், தனிமையில், தன் பாழடைந்த மாளிகையில் இறந்துகிடந்தார். அவரது உடல், 4 நாள்கள் சென்று கண்டுபிடிக்கப்பட்டது.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் புகையிலை விற்பனையால் பல கோடி சம்பாதித்த Duke நிறுவனத்தின் வாரிசான Walker Inman என்பவர், போதைப்பொருள்களுக்கு தான் அடிமையானது மட்டுமன்றி, தன் இரட்டைக் குழந்தைகளையும், அவர்களுக்கு 2 வயதானபோதிலிருந்து, அப்பழக்கத்திற்கு அடிமையாக்கினார். அவரது மரணத்திற்குப் பிறகு, அவ்விருவரும், தற்போது, மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2003ம் ஆண்டு, தன் 16வது வயதில், 28 இலட்சம் டாலர்கள், 'லாட்டரி' பணம் வென்ற Callie Rogers என்ற பெண், அந்தப் பணத்தையெல்லாம் போதைப்பொருள்களிலும், கட்டுப்பாடற்ற வாழ்விலும் செலவழித்தபின், 2000 டாலர்கள் பணத்துடன், மிக வறிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

நல்லவராக வாழ்வதால் என்ன பயன் என்று கேள்வி எழுப்பிய யோபுக்கு, இளையவர் எலிகூ அளிக்கும் பதில் 35, 36 ஆகிய பிரிவுகளில் இடம்பெற்றுள்ளது. மனிதர்கள் செய்யும் நன்மை அல்லது தீமை, இறைவனை எவ்வகையிலும் பாதிப்பது இல்லை, மனிதர்கள் செய்யும் நன்மை, தீமையால் பாதிக்கப்படுவது மனிதர்களே என்பது, எலிகூ வழங்கும் ஒரு தெளிவு:

யோபு 35: 6-8
நீர் பாவம் செய்தால், அவருக்கெதிராய் என்ன சாதிக்கின்றீர்? நீர் மிகுதியான குற்றங்களைச் செய்வதால் அவருக்கு என்ன செய்து விடுகின்றீர்?நீர் நேர்மையாய் இருப்பதால் அவருக்கு நீர் அளிப்பதென்ன? அல்லது உம் கையிலிருந்து அவர் பெறுவதென்ன? உம் கொடுமை உம்மைப்போன்ற மனிதரைக் துன்புறுத்துகின்றது; உம் நேர்மையும் மானிடர்க்கே நன்மை பயக்கின்றது.

நல்லோர், தீயோர் அனைவருக்கும், அவரவருக்குரிய முடிவுகளை இறைவன் வழங்குகிறார் என்பதையும், குறிப்பாக, துன்பங்கள் வழியே, மனிதரின் செவிகளைத் திறந்து, அவர்கள் உண்மையைப் புரிந்துகொள்ள, இறைவன் வழிசெய்கிறார் என்பதையும், 36ம் பிரிவில் எலிகூ இவ்வாறு கூறியுள்ளார்:
யோபு 36: 5-7,15
இதோ! இறைவன் வல்லவர்; எவரையும் புறக்கணியார்; அவர் வல்லமையும் ஞானமும் கொண்டவர். கொடியவரை அவர் வாழவிடார்; ஒடுக்கப்படுவோர்க்கு உரிமையை வழங்குவார்; நேர்மையாளர்மீது கொண்ட பார்வையை அகற்றார்; அரசர்களை அரியணையில் அமர்த்துகின்றார்; என்றென்றும் அவர்கள் ஏற்றமடைவர்... துன்புற்றோரைத் துன்பத்தால் காப்பார்; வேதனையால் அவர்கள் காதைத் திறப்பார்.

யோபுக்குத் தேவையான பதில்களைத் தந்துவிட்ட திருப்தியில், இளையவர் எலிகூவின் கவனம், அடுத்ததாக, இறைவன் மீது திரும்புகிறது. இறைவன் எவ்வளவு ஆற்றல் மிக்கவர் என்பதை, இளையவர் எலிகூ, 36 இறைவாக்கியங்களில், ஒரு கவிதை வடிவில் கூறியுள்ளார். முகில், மழை, மின்னல், இடிமுழக்கம் இவற்றின் வழியே இறைவனின் ஆற்றலைக் காணமுடியும் (யோபு 36: 27-33) என்று கூறும் எலிகூ, யோபிடம் சில கேள்விகளை எழுப்புகிறார்:
யோபு 37 14-16
யோபே! செவிகொடும்; இறைவனின் வியத்தகு செயல்களை நின்று நிதானித்துக் கவனியும். கடவுள் எவ்வாறு அவற்றை ஒழுங்குபடுத்துகின்றார் என்றோ, அவர்தம் முகில்கள் எப்படி மின்னலைத் தெறிக்கின்றன என்றோ அறிவீரா? முகில்கள் எவ்வாறு மிதக்கின்றன என உமக்குத் தெரியுமா? அவை நிறை அறிவுள்ளவரின் வியத்தகு செயல்கள் அல்லவா!
இறைவனின் ஆற்றலால், இவ்வுலகிலும், வான்வெளியிலும் நிகழும் மாற்றங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பது யோபுக்குத் தெரியுமா என்று இளையவர் கேட்கும் கேள்விகள், அடுத்துவரும் உச்சக்கட்ட நிகழ்வுக்கு ஓர் அறிமுகமாக இருக்கின்றன.


ஆம்... 38ம் பிரிவு முதல், நாம் யோபு நூலின் கிளைமாக்ஸ், அதாவது, உச்சக்கட்டத்தில் அடியெடுத்து வைக்கிறோம். இந்த உச்சகட்ட நிகழ்வில் இறைவன் யோபை நேருக்கு நேர் சந்திக்கிறார். இச்சந்திப்பில், இறைவன் யோபிடம் கேள்வி மேல் கேள்வியாகத் தொடுக்கிறார். அக்கேள்விகளுக்கு ஒரு முன்னோடி போல, எலிகூவின் கேள்விகள் 37ம் பிரிவில் இடம்பெற்றுள்ளன. இறைவனுக்கும் யோபுக்குமிடையே நிகழும் இந்த உச்சக்கட்ட சந்திப்பையும், அதன் விளைவாக யோபின் வாழ்வில் உருவாகப்போகும் மாற்றங்களையும் நாம் அடுத்த சில தேடல்களில் சிந்திப்போம்.

No comments:

Post a Comment