Mother
Teresa delivering her Acceptance Speech
பாசமுள்ள பார்வையில் – வானதூதராக வழியனுப்பி வைத்த அன்னை
1979ம்
ஆண்டு, அன்னை தெரேசா அவர்களுக்கு நொபெல் அமைதி விருது வழங்கப்பட்ட வேளையில், அவர் வழங்கிய
ஏற்புரையில், தன் வாழ்வு அனுபவங்கள் சிலவற்றைப் பகிர்ந்துகொண்டார்.
அவற்றில் ஒன்று, இதோ:
"வீதியில்
கிடந்த ஒருவரை எங்கள் இல்லத்திற்குக் கொணர்ந்தபோது, அவர் சொன்னதை நான் ஒருநாளும் மறக்கப்போவதில்லை.
அவரது உடல் முழுவதும், காயங்களால் நிறைந்து, புழுக்கள்
மண்டிக்கிடந்தது. முகம் மட்டுமே புழுக்களின் தாக்குதலிலிருந்து தப்பித்திருந்தது. அந்நிலையில்
இருந்த அவர், எங்கள் இல்லத்திற்கு வந்து சேர்ந்ததும், 'நான் இதுவரை வீதியில் ஒரு மிருகத்தைவிட கேவலமாகக் கிடந்தேன். இப்போது, ஒரு வானதூதரைப்போல் இறக்கப்போகிறேன்' என்று சொன்னார். சில நாள்கள் சென்று, அவர் இறைவன் இல்லத்தில் வாழச் சென்றார். ஆம், மரணம் என்பது, இறைவனின் இல்லம் செல்வதுதானே!"
மனிதர்கள்
என்றுகூட மதிக்க இயலாதவாறு உருக்குலைந்திருந்தோரை, வானதூதர்களாக
மாற்றி, வழியனுப்பி வைத்த அன்னை தெரேசா, 20 ஆண்டுகளுக்கு முன், 1997ம் ஆண்டு, செப்டம்பர் 5ம் தேதி இறைவனின் இல்லம்
சென்றார். கொல்கத்தா வீதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டு, அன்னையின் இல்லத்தில் சில நாள்கள்
தங்கியபின், வானதூதர்களாக இறைவனின் இல்லம் சென்றிருந்த
பலர், அன்னையை வரவேற்க அங்கு காத்திருந்தனர் என்று
உறுதியாகக் கூறலாம்.
அன்னை
தெரேசா அவர்கள் இறையடி சேர்ந்த செப்டம்பர் 5ம் தேதியை, அன்னையின் நினைவாக, அகில
உலக பிறரன்பு நாள் (International
Day of Charity) என ஐ.நா.அவை அறிவித்துள்ளது. 2013ம்
ஆண்டு முதல் இந்த உலக நாள் சிறப்பிக்கப்படுகிறது.
Then the
Lord answered Job out of the whirlwind
வேதனை வேள்வியில் யோபு – பகுதி 36
யோபு
நூலின் ‘கிளைமாக்ஸ்’, அதாவது, உச்சக்கட்டத்தில் இன்று நாம் அடியெடுத்து வைக்கிறோம்.
38ம் பிரிவில் துவங்கி, 42ம் பிரிவு முடிய, 5 பிரிவுகளில் இடம்பெற்றுள்ள, இந்த உச்சக்கட்ட நிகழ்வுகள், யோபு நூலை
நிறைவுக்குக் கொணர்கின்றன. இந்த உச்சக்கட்ட நிகழ்வுகள், ஒரு சூறாவளியுடன் ஆரம்பமாகின்றன. "ஆண்டவர் சூறாவளியினின்று
யோபுக்கு அருளிய பதில்" (யோபு 38:1) என்ற சொற்களுடன், இந்த உச்சக்கட்டம்
அறிமுகமாகிறது. இந்த அறிமுகச் சொற்கள், ஒரு சில சிந்தனைகளை எழுப்புகின்றன.
முதலில், இறைவனைக் குறிக்க இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள
சொல்.
'ஆண்டவர்' என்று தமிழில்
கூறப்பட்டுள்ள இச்சொல்லுக்கு இணையான எபிரேயச் சொல் - 'யாவே' (YHWH)! யோபு நூலில், 'யாவே' என்ற இச்சொல், முதல்முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்நூலின் 3ம் பிரிவிலிருந்து, 37ம் பிரிவு முடிய, யோபு, அவரது மூன்று நண்பர்கள், இறுதியில், இளையவர் எலிகூ என்ற, ஐவருக்குமிடையே நிகழ்ந்த உரையாடல்களில், 'கடவுள்' என்று பொருள்படும், 'எல்', 'எலோஹிம்', 'ஷத்தாய்' (El, Elohim, Shaddai) ஆகிய சொற்களே
பயன்படுத்தப்பட்டு வந்தன. 38ம் பிரிவில், முதல்முறையாக, 'யாவே' என்ற சொல்
பயன்படுத்தப்பட்டுள்ளது.
'யாவே' என்ற சொல்
குறிக்கும் 'ஆண்டவரு'க்கும், 'எலோஹிம்' போன்ற சொற்கள் குறிக்கும் 'கடவுளு'க்கும் வேறுபாடுகள் உள்ளன. 'யாவே' என்ற சொல், இறைவனை மனிதர்களுக்கு மிக நெருக்கமாகக் கொணரும் சொல். 'எலோஹிம்' போன்ற சொற்களோ, தூரத்தில், வானத்தில் உறையும் இறைவனைக் குறிக்கும்
சொற்கள்.
பழைய
ஏற்பாட்டில், விடுதலைப்பயண நூலில், எரியும் முட்புதர் வழியே, மோசேயைச் சந்திக்கவரும் இறைவன், தன்னை மோசேக்கு அறிமுகப்படுத்திக்கொள்ளும் வேளையில், 'யாவே' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.
எகிப்தில் அடிமைப்பட்டிருக்கும் இஸ்ரயேல் மக்களை விடுவிக்கும் பணிக்கென மோசேயை அழைக்கவந்த
இறைவன், தன்னை 'யாவே' என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். விடுதலை பெற்று எகிப்திலிருந்து
வெளியேறும் மக்களுடன், தான் நேரடியாகத் தொடர்புக்கொள்ளப்
போவதை உணர்த்தும்வண்ணம், இறைவன் தன்னை 'யாவே' என்று அடையாளப்படுத்திக்கொண்டார்.
இனி, தான், தூரத்தில், வானத்தில் உறையும் கடவுளாக அல்ல, மாறாக, இஸ்ரயேல் மக்களுடன் நேரடித் தொடர்பும், உறவும் கொள்ளும் ஆண்டவராக இருக்க விழைவதை, 'யாவே' என்ற அறிமுகத்தின் வழியே உணர்த்தினார்.
அத்தகைய ஒரு நேரடித் தொடர்பை யோபுடன் உருவாக்கவே, இறைவன் 'யாவே'யாக யோபைச் சந்திக்க வருகிறார்.
யோபு
நூல், 3ம் பிரிவு முதல் 37ம் பிரிவு முடிய உள்ள 35 பிரிவுகளில், யோபு, எலிப்பாசு, பில்தாது, சோப்பார், இறுதியாக, எலிகூ ஆகிய ஐந்துபேரும் மேற்கொண்ட
உரையாடலில், கடவுள், ஒரு கருத்தாகப் பேசப்பட்டார். இப்போது அந்த ஐவரை, குறிப்பாக, யோபை, இறைவன் நேருக்கு நேர் சந்திக்க வந்திருக்கிறார் என்ற எண்ணத்தை
வலியுறுத்த, 'யாவே' என்ற சொல், முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இறையியல்
வழியே, ஒரு கருத்தாக நாம் சிந்திக்கும் கடவுளுக்கும், மதத்தின் வழியே, ஓர் உறவாக நாம் சந்திக்கும் இறைவனுக்கும் உள்ள
வேறுபாட்டை, மார்ட்டின் பூபெர் (Martin Buber) என்ற மெய்யியல் அறிஞர், அழகாக விளக்கியுள்ளார். கடவுளைப்பற்றி அறிவுப்பூர்வமான கருத்துக்களைத்
தொகுத்து வழங்குவது, இறையியல். ஆனால், இறைவனை நேருக்கு நேர் உணர்வுப்பூர்வமாகச் சந்திப்பதற்கு உதவுவது, மதம் என்று, பூபெர் அவர்கள் கூறியுள்ளார். இறையியல் வழியே, இறைவனைப்பற்றி
சிந்தித்து, நம் அறிவை வளர்த்துக்கொள்ள முடியும்; ஆனால், மதத்தின் வழியே, நாம் இறைவனைச் சந்தித்து, உறவை வளர்த்துக்கொள்ள
முடியும்.
இறையியல், மதம் என்ற இரு வழிகளில் நாம் பெறும் கடவுள் அனுபவங்களுக்கு இடையே
உள்ள வேறுபாட்டை விளக்க, பூபெர் அவர்கள் ஓர் எடுத்துக்காட்டைப்
பயன்படுத்தியுள்ளார். நாம் உணவு விடுதிக்குச் செல்கையில், உணவு வகைகளின் பட்டியல் அச்சிடப்பட்ட 'மெனு' அட்டை நமக்குத் தரப்படும். ஒரு
சில 'மெனு' அட்டைகளில், உணவு வகைகளின் படமும் அச்சிடப்பட்டிருக்கும். 'மெனு' அட்டை வழியே, உணவு வகைகளைப்பற்றிய விவரங்களை அறிந்துகொள்ளமுடியுமேதவிர, 'மெனு' அட்டையை நம்மால் சாப்பிடமுடியாது.
அங்கு அச்சிடப்பட்டுள்ள உணவு வகைகளை 'ஆர்டர்' செய்து, அவை நம் மேசைக்கு வந்தபின்னரே,
நம்மால் உணவைச் சுவைக்கமுடியும். இறையியல் என்பது, 'மெனு' அட்டை போன்றது; அந்த உணவை நேரில் சுவைப்பது, நாம் பின்பற்றும் மதம் போன்றது என்று, பூபெர் அவர்கள் விளக்கியுள்ளார்.
"ஆண்டவர்
சூறாவளியினின்று யோபுக்கு அருளிய பதில்" என்ற அறிமுக வரியில், அடுத்து நம் கவனத்தை
ஈர்க்கும் சொல், 'சூறாவளி'. சூறாவளி என்ன செய்யும்? சுழற்றி அடிக்கும், அனைத்தையும் தலைகீழாக புரட்டிப்போடும்.
யோபைச் சந்திக்க வந்த இறைவன், ஏன் சூறாவளியைத் தேர்ந்தார் என்ற
கேள்வி எழுகிறது. ஏற்கனவே பல நிகழ்வுகள் யோபின் வாழ்வைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கும்
வேளையில், மீண்டும் ஏன் ஒரு சூறாவளி? என்ற கேட்கத்தோன்றுகிறது. ஒருவேளை, இதுவரைப் புரட்டிப் போட்டவற்றை மீண்டும் நிமிர்த்திவைக்க மற்றொரு
சூறாவளியை இறைவன் தேர்ந்தெடுத்தாரோ என்று எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது. இந்நூலின்
இறுதியில் அதுதான் நிகழ்கிறது. யோபின் வாழ்வில் நுழைந்த பல புயல்கள், சூறாவளிகள்
வழியே, சிதைந்து, உடைந்து, புரட்டிப்போடப்பட்ட
அனைத்தும், மீண்டும் நல்ல நிலையில் நிமிர்த்தி வைக்கப்படுகின்றன.
இறைவன்
சூறாவளியின் வடிவில் யோபைச் சந்திக்க வந்ததைப்பற்றி சிந்திக்கும், யூத மத குரு ஹெரால்டு குஷ்னர் அவர்கள், இச்சூழலை, 23ம் திருப்பாடலுடன் இணைத்து சிந்திக்கிறார்.
"ஆண்டவரே
என் ஆயர்" என்று ஆரம்பமாகும் இத்திருப்பாடலில், முதல் மூன்று
இறை வாக்கியங்களில், திருப்பாடலின் ஆசிரியர், ஆண்டவரை, ஓர் ஆயனாகக் குறிப்பிட்டுப்
பேசும்போது, "அவர்" என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.
·
புல்வெளி மீது அவர் இளைப்பாறச் செய்வார்.
·
நீர் நிலைகளுக்கு அவர் அழைத்துச் செல்வார்.
·
அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்.
·
அவர் எனை நீதி வழி நடத்திடுவார்.
என்று,
ஆயனின் அற்புத குணங்களை விவரிக்கிறார் ஆசிரியர். 4ம் இறைவாக்கியத்தில், இறைவனுடன் நேருக்கு நேர் பேச ஆரம்பிக்கிறார்.
திருப்பாடல்
23: 4
மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.
நான்காம்
இறைவாக்கியத்திலிருந்து "அவர்" என்ற வார்த்தைக்குப் பதில் "நீர்"
என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.
·
நீர் என்னோடு இருப்பதால் நான் அஞ்சமாட்டேன்.
·
உமது கோல் என்னைத் தேற்றும்.
·
நீர் எனக்கு விருந்தினை ஏற்பாடு செய்கிறீர்.
·
நீர் என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்...
என்று
இப்பாடலின் இறுதிவரை இறைவனுடன் நேரடியாகவே பேசுகிறார் ஆசிரியர்.
‘அவர்’ என்று ஆயனைப்பற்றி, ஆண்டவரைப்பற்றி பேசி வந்தவர், ‘நீர்’ என்று ஆயனிடம், ஆண்டவரோடு பேச ஆரம்பித்துள்ளது, நம்மை ஆழமாகச்
சிந்திக்கவைக்கும் ஒரு மாற்றம். இந்த மாற்றம் நிகழும் வரியும், முக்கியமான
ஒரு வரி... சாவின் நிழலும், இருளும்
சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடக்கும்போது, 'நீர்' என்று, இறைவனிடம் பேச ஆரம்பிக்கிறார்,
திருப்பாடலின் ஆசிரியர்.
துன்பங்கள் நம்மைச் சூழ்ந்து நெருக்கும்போது, நாம் இறைவனை
விட்டு அகன்றுவிடுகிறோம்; அல்லது, இறைவனை
நம் வாழ்விலிருந்து அகற்றிவிடுகிறோம். துயரத்தின் பிடியில் சிக்கிய பலர் கோவிலை, மதத்தை, கடவுளை
மறந்து,
மறுத்து வாழ்கின்றனர் என்பதை நாம் அறிவோம். இதற்கு நேர்மாறாக, துன்பங்களைச்
சந்திக்கும் பலர், இறைவனிடம் இன்னும் ஆழமான உறவு கொள்வதையும் நாம் அறிவோம்.
அத்தைகைய ஒரு நிலையில், திருப்பாடலின் ஆசிரியர் இருந்தார். அதே நிலையில், யோபு இருக்கிறார்.
துன்பத்தின்
அரக்கப்பிடியில் சிக்கித்தவித்த யோபு, இறைவனிடம் முறையிட்டாலும், கோபப்பட்டாலும்,
அவரைவிட்டு விலகவேயில்லை. எனவே, துன்பத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கும் அவரைச்
சந்திக்க வந்த இறைவன், நேரடியானத் தொடர்புகொள்ள வருகிறார் என்பதையே, 'யாவே' என்ற சொல் நமக்கு உணர்த்துகிறது.
சூறாவளியின்
வழியாக யோபைச் சந்திக்க வந்த இறைவன், யோபுடன் நேருக்கு நேர் மோத வந்திருப்பதைப்போல்
பேசுகிறார். தன் கேள்விகளுக்குப் பதில் சொல்ல,
யோபு ஒரு வீரனைப்போல்
தயாராக இருக்கவேண்டும் என்று இறைவன் அழைக்கிறார்.
யோபு
38: 1,3
ஆண்டவர்
சூறாவளியினின்று யோபுக்கு அருளிய பதில்: வீரனைப்போல் இடையினை இறுக்கிக்கட்டு; வினவுவேன் உன்னிடம், விடை எனக்களிப்பாய்.
இந்த
அழைப்பைத் தொடர்ந்து, அங்கு நிகழ்வது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
மனவேதனையுடன், அல்லது, கோபத்துடன்,
யோபு எழுப்பிய கேள்விகளுக்கு, இறைவன் பதில் சொல்ல வந்துள்ளார் என்று எண்ணியிருக்கும்
நமக்கு, ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது. பதில் சொல்வதை
விட்டுவிட்டு, 'யாவே' இறைவன்,
கேள்விக்கணைகளைத் தொடுக்கிறார்.
38
முதல், 41 முடிய உள்ள 4 பிரிவுகளில், ஆண்டவர், யோபிடம் 77 கேள்விகளைக் கேட்கிறார்
என்று, விவிலிய ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். இக்கேள்விகள் எல்லாம், பதில்சொல்ல
முடியாதவண்ணம், பதிலையும் தன்னகத்தே கொண்டிருக்கும் கேள்விகள். ஆண்டவர் யோபிடம்
எழுப்பிய இக்கேள்விகளில் நம் தேடல் பயணம் தொடரும்.
இறுதியாக
ஓர் எண்ணம்... செப்டம்பர் 5, இச்செவ்வாயன்று,
புனித அன்னை தெரேசா இறையடி சேர்ந்ததன் 20ம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் இவ்வேளையில், அந்த அன்னையின் பரிந்துரையால், நாம் துன்பங்களைத்
தாங்கும் பக்குவம் பெறவும், துன்பத்தின் கோரப்பிடியில் சிக்கியிருப்போருக்கு
நம்மால் இயன்ற ஆறுதல் தரவும், இறைவனை இறைஞ்சுவோம்.
No comments:
Post a Comment