26 September, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 39


Father and son in a park

பாசமுள்ள பார்வையில் - 
"இன்னும் ஒரு 5 நிமிடங்கள், ப்ளீஸ்..."

இளம் தந்தையொருவர், 5 வயது மகன், ஹென்றியை அழைத்துக்கொண்டு, தன் வீட்டுக்கு முன்புறம் அமைந்திருந்த பூங்காவுக்குச் சென்றார். அங்கு, ஹென்றி ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்ததை, அருகிலிருந்த 'பெஞ்சில்' அமர்ந்து இரசித்துக் கொண்டிருந்தார் தந்தை. அவர் அருகே மற்றொரு இளம் தாய் வந்தமர்ந்தார். சிறிது நேர அமைதிக்குப் பின், அப்பெண், "சிவப்பு சட்டை போட்டு ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருப்பவன் என் மகன்" என்று பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தார். இளம் தந்தை, "அப்படியா? அவனுக்கருகே அடுத்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருப்பவன் என் மகன்" என்று கூறினார். அரைமணி நேரம் இருவரும் பல விடயங்கள் குறித்துப் பேசினர். பின்னர், இளம் தந்தை எழுந்து, தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தவண்ணம், தன் மகனிடம், "ஹென்றி, வா போகலாம்" என்று கூற, சிறுவன் அவரிடம், "இன்னும் ஒரு 5 நிமிடங்கள் அப்பா" என்று கெஞ்சினான். 5 நிமிடங்கள் சென்று, தந்தை மீண்டும் அழைக்க, ஹென்றி மீண்டும், "ப்ளீஸ் அப்பா. இன்னும் ஐந்தே நிமிடங்கள்" என்று கூறினான். இவ்வாறு, நான்கு, அல்லது, ஐந்து முறை நடந்தது.
இதைப்பார்த்துக்கொண்டிருந்த அந்த இளம் தாய், "நீங்கள் உண்மையிலேயே ரொம்ப பொறுமைசாலி" என்று புகழ்ந்தார். அந்த இளம் தந்தை, அப்பெண்ணிடம், "என் மகன் கேட்கும் ஐந்து நிமிடங்கள் அவனுக்காக மட்டுமல்ல, எனக்காகவும்தான்" என்று கூறியதும், அப்பெண் புரியாமல் அவரைப் பார்த்தார். இளம் தந்தை, தொடர்ந்து விளக்கம் அளித்தார்: "ஹென்றியின் அண்ணன் ஜூலியன், சென்ற ஆண்டு, இதே பூங்காவுக்கருகே, சாலை விபத்தில் இறந்தான். எங்கள் வீடு, பூங்காவுக்கு எதிரே இருப்பதால், என் மகன் ஜூலியன், பூங்காவில் சைக்கிள் ஓட்ட விரும்பி, என்னையும் அழைத்தான். ஆனால், நான் அப்போது வேலையில் மூழ்கியிருந்ததால், அவனோடு செல்ல மறுத்துவிட்டேன். ஜூலியன் வீட்டைவிட்டு, பூங்காவிற்குச் செல்ல, சைக்கிளில் சாலையைக் கடந்தபோது, குடிபோதையில் கார் ஒட்டி வந்த ஒருவர், ஜூலியன் மீது மோதியதால், வீட்டுக்கெதிரிலேயே அவன் இறந்துபோனான். என் மகன் ஜூலியன் என்னிடம் கேட்டதெல்லாம் ஒரு ஐந்து நிமிடங்கள்தாம். அதை அவனுக்கு அன்று நான் கொடுத்திருந்தால், அவன் ஒருவேளை இன்று உயிரோடு இருந்திருப்பான். இப்போது, ஹென்றி கேட்கும் ஐந்து நிமிடங்கள், அவனுக்காக மட்டுமல்ல, எனக்காகவும் தான். இந்தப் பூங்காவில் நான் அமரும் நிமிடங்கள் எல்லாம், என் ஜூலியனுக்காக நான் செலவிடும் நிமிடங்கள்" என்று அந்த இளம் தந்தை, கலங்கிய கண்களுடன் கூறி முடித்தார்.

Job restored to prosperity – Artwork by Laurent de La Hyre

வேதனை வேள்வியில் யோபு – பகுதி 39

யோபு நூலின் முடிவுரையான 42ம் பிரிவில் இன்று அடியெடுத்து வைக்கிறோம். ஆண்டவர் சூறாவளியிலிருந்து யோபிடம் பேசியதற்கு, யோபு வழங்கும் இரண்டாவது பதிலுரையோடு இந்தப் பிரிவு ஆரம்பமாகிறது. சூறாவளியிலிருந்து ஆண்டவர் தன் முதல் உரையை வழங்கி முடித்ததும், யோபு தன் கரங்களால் வாய்பொத்தி நின்றதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தச் செயல், யோபின் பணிவைக் காட்டும் அடையாளம். இரண்டாவது உரையின் இறுதியில், யோபு ஆண்டவர் முன்பு முற்றிலும் சரண் அடைவது, இவ்வாறு கூறப்பட்டுள்ளது:
யோபு நூல் 42: 1-6
அப்பொழுது யோபு ஆண்டவர்க்குக் கூறிய பதில்: நீர் அனைத்தையும் ஆற்றவல்லவர்; அறிவேன் அதனை; நீர் நினைத்த எதையும் தடுக்க இயலாது. 'அறிவில்லாமல் ஆலோசனையை மறைப்பவன் எவன்?" என்று கேட்டீர்; உண்மையில் நான்தான் புரியாதவற்றைப் புகன்றேன்; அவை எனக்கு விளங்கா அளவுக்கு விந்தையானவை. அருள்கூர்ந்து கேளும் அடியேன் பேசுவேன்; வினவுவேன் உம்மை; விளங்க வைப்பீர் எனக்கு. உம்மைப்பற்றிக் காதால் மட்டுமே கேள்விப்பட்டேன்; ஆனால் இப்பொழுது, என் கண்களே உம்மைக் காண்கின்றன. ஆகையால் என்னையே நொந்து கொள்ளுகின்றேன்; புழுதியிலும் சாம்பலிலும் இருந்து மனம் வருந்துகின்றேன்.

தான் சரணடைவதற்குக் காரணம், ஆண்டவரை நேரில் சந்தித்ததே என்று, யோபு, தன் இறுதிச் சொற்களில் கூறியுள்ளார். தான் அதுவரை பெற்றிருந்த இறை அறிவு, மனிதர்களிடமிருந்து கேட்டறிந்த உண்மைகளின் அடிப்படையில் அமைந்திருந்தது. கடவுளைப்பற்றி அவர் கேட்டறிந்த உண்மைகளையும், அவர் வாழ்வில் நிகழ்ந்த வேதனை அனுபவங்களையும் இணைக்க முடியாமல் யோபு துன்புற்றார் என்பதை இந்நூல் முழுவதும் நாம் புரிந்துகொண்டோம்.
பொதுவாக, ஒருவரது வாழ்வு சீராக, சமநிலையில் பயணிக்கும்போது, இறைவனைப்பற்றி நாம் கேட்டறிந்த அறிவு பயனுள்ளதாக இருக்கும். ஆனால், வாழ்வு தடம்புரண்டு, துன்பத்தில் சிக்கித் தவிக்கும்போது, கடவுளைப்பற்றியக் கேள்வியறிவு பயன் தராது. இறைவனைப்பற்றிய நேரடி அனுபவம், அறிவு, இவையே அந்த நெருக்கடி நேரங்களில் கரம் கொடுக்கும். இதுதான் யோபின் வாழ்விலும் நிகழ்ந்தது.

ஆண்டவரைப்பற்றி, யோபோ, அவரது நண்பர்களோ கொண்டிருந்த ஏட்டளவு அறிவு, அவர் அடைந்த துன்பங்களுக்கு தகுந்த பதிலிருக்க முடியாமல் திணறியது. இப்போதோ, சூறாவளியின் வழியே, ஆண்டவரை நேருக்கு நேர் சந்தித்துவிட்டார், யோபு. இச்சந்திப்பு, தனக்குத் தேவையான உண்மைகளை விளக்கியுள்ளன என்று யோபு கூறியுள்ளார்.

யோபு இறைவனிடம் சரணடையும் இந்த வரிகளில், இறுதியாக, அவர் சொல்வது, நம் கவனத்தை ஈர்க்கிறது. புழுதியிலும் சாம்பலிலும் இருந்து மனம் வருந்துகின்றேன். என்ற சொற்களை வாசிக்கும்போது, புழுதியும், சாம்பலும் நிறைந்த ஓரிடத்தில் யோபு மண்டியிட்டு மன்னிப்பு கேட்பதைப்போன்ற ஒரு காட்சி நம் மனங்களில் தோன்றுகிறது. ஆனால், இந்த வரியை, எபிரேய மொழியில் நேரடியாகக் காணும்போது, "புழுதியும், சாம்பலுமாக இருந்து மனம் வருந்துகிறேன்" என்றும் பொருள் கொள்ளமுடியும். பல விவிலிய விரிவுரையாளர்கள், இந்த மொழிபெயர்ப்பு பொருத்தமானதென்று கூறியுள்ளனர். இறைவனுக்கு முன், புழுதியாக, தூசியாக, சாம்பலாக மனிதர்கள் தங்களையே உருவாக்கப்படுத்திப் பேசுவது, விவிலியத்தில் இன்னும் சில இடங்களில் காணப்படுகிறது. இறைவன் மனிதரை உருவாக்கியது, மண்ணிலிருந்து, அல்லது, தூசியிலிருந்து என்பதை, தொடக்க நூலில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்.
தொடக்க நூல் 2: 7
அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்.

இதே யோபு நூலில், தன் துன்ப நிலையை விவரிக்கும்போது, கடவுள் சேற்றில் என்னை அமிழ்த்தி விட்டார்; புழுதியும் சாம்பலும்போல் ஆனேன் (யோபு 30:19) என்று யோபு தன்னை உருவகப்படுத்திப் பேசினார்.
ஆண்டவர் சோதோம் நகரை நெருப்பால் அழிக்கவிருப்பதாக ஆபிரகாமிடம் சொன்னபோது, அந்நகரில் 50 நீதிமான்கள் இருந்தால், அவர்களை முன்னிட்டாவது, அந்நகரை அழிக்காமல் விட்டுவிடவேண்டும் என்று, ஆபிரகாம், ஆண்டவரிடம் மன்றாடத் துவங்கினார். 50 நீதிமான்கள் இருந்தால் அழிக்கமாட்டேன் என்று ஆண்டவர் கூறியதும், ஆபிரகாம் தொடர்ந்து ஆண்டவரிடம் 45, 40 என்று நீதிமான்களின் எண்ணிக்கையை, படிப்படியாகக் குறைக்கத் துவங்குகிறார். இந்த எண்ணிக்கை பேரத்தை ஆரம்பிக்கும்போது, ஆபிரகாம் இறைவனிடம் கூறுவது இதுதான்:
தொடக்க நூல் 18:27-28
அப்பொழுது ஆபிரகாம் மறுமொழியாக, "தூசியும் சாம்பலுமான நான் என் தலைவரோடு பேசத் துணிந்துவிட்டேன்; ஒருவேளை அந்த ஐம்பது நீதிமான்களில் ஐந்து பேர் குறைவாயிருக்கலாம். ஐந்து பேர் குறைவதை முன்னிட்டு நகர் முழுவதையும் அழிப்பீரோ?" என்றார்.

மனிதர்கள் தூசி என்பதை இறைவன் நன்கு அறிவார் என்று திருப்பாடல் ஆசிரியர் கூறியுள்ளார்:
திருப்பாடல் 103: 14-16
அவர் நமது உருவத்தை அறிவார்; நாம் தூசி என்பது அவர் நினைவிலுள்ளது. மனிதரின் வாழ்நாள் புல்லைப் போன்றது; வயல்வெளிப் பூவென அவர்கள் மலர்கின்றார்கள். அதன்மீது காற்றடித்ததும் அது இல்லாமல் போகின்றது; அது இருந்த இடமே தெரியாமல் போகின்றது.

புழுதியாக, சாம்பலாக இறைவன்முன் சரணடையும் யோபின் இறுதி வார்த்தைகளை, யூத மத குரு, ஹெரால்டு குஷ்னர் அவர்கள், இவ்வாறு தொகுத்துக் கூறுகிறார்: "நான் இதுவரை பேசிவந்ததையும், என் நண்பர்கள் பேசியதையும் இப்போது நான் நிராகரிக்கிறேன். இப்போது, இறைவனை சந்தித்துவிட்டேன். நான் இவ்வுலகில் தனித்து விடப்படப் போவதில்லை என்ற உறுதியைப் பெற்றுள்ளேன். புழுதியைப்போல், சாம்பலைப்போல் நலிவுற்ற மனிதனாகிய நான், என் தற்போதைய நிலையில் ஆறுதல் அடைகிறேன்."

யோபு நூல் 3ம் பிரிவில் துவங்கி, 42ம் பிரிவு, 6வது இறைவாக்கியம் வரை நீடித்த யோபு நூலின் கவிதை, யோபு, இறைவனிடம் முற்றிலும் சரணடையும் மனநிலையுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து, யோபின் கதை நிறைவு செய்யப்படுகிறது. முதல் 2 பிரிவுகளில் கூறப்பட்ட கதை, மீண்டும் 42ம் பிரிவில் 7 முதல், 17 முடிய காணப்படும் 11 இறை வாக்கியங்களில் ஆனந்தமான முடிவை அடைகிறது.

இந்த இறுதிப்பகுதியில், ஆண்டவர், முதலில், யோபின் நண்பர்களில் ஒருவரான எலிப்பாசுவின் வழியாக, மூன்று நண்பர்கள் கூறிய கருத்துக்களை கடுமையாகச் சாடுகிறார். யோபு ஏதோ ஒருவகையில் தவறு செய்திருக்க வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் கூறிவந்த நண்பர்களை, இறைவனின் கடுமையான சொற்கள் குற்றவாளிகளாக்குகின்றன. இந்த மூன்று நண்பர்களும், தங்கள் குற்றங்களுக்குப் பரிகாரமாக எரிபலியை ஒப்புக்கொடுத்தபின், யோபின் மன்னிப்பையும் தேடவேண்டும் என்று இறைவன் பணிக்கிறார். அவர்கள் சார்பாக, யோபு மன்றாடினால், அவர்களை தான் மன்னிப்பதாக இறைவன் வாக்களிக்கிறார்.

ஆண்டவரின் சொற்களுக்கேற்ப, தன் நண்பர்கள் சார்பாக, யோபு, மன்றாடும்போது அந்த நால்வருக்கிடையே ஒப்புரவு நிகழ்கிறது. இந்த ஒப்புரவைத் தொடர்ந்து, யோபின் வாழ்வை இறைவன் இரண்டு மடங்காக ஆசீர்வதிக்கிறார் என்றும், யோபின் வேதனை, நோய் இவற்றின் காரணமாக அவரைவிட்டு விலகிச்சென்ற அனைவரும் மீண்டும் திரும்பிவருகின்றனர் என்றும் முடிவுரை கூறுகிறது (யோபு 42: 10). யோபின் மனைவியைக் குறித்து இப்பகுதியில் எதுவும் சொல்லப்படவில்லையெனினும், அவரும் மீண்டும் யோபிடம் திரும்பி வந்திருக்கவேண்டும் என்பதையும், அவரையும் யோபு ஏற்றிருப்பார் என்பதையும் நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

யோபுக்குப் பிறந்த 10 குழந்தைகளில், மூன்று பெண்களைக் குறித்து சொல்லப்பட்டுள்ளவை நம் கவனத்தை ஈர்க்கின்றன:
யோபு 42:13-15
அவருக்கு ஏழு புதல்வர்களும் மூன்று புதல்வியரும் பிறந்தனர். மூத்த மகளுக்கு எமிமா என்றும், இரண்டாவது மகளுக்குக் கெட்டிசியா என்றும், மூன்றாவது மகளுக்குக் கெரேன் அப்பூக்கு என்றும் பெயரிட்டார். யோபின் புதல்வியரைப் போல் அழகுவாய்ந்த நங்கையர் நாடெங்கும் இருந்ததில்லை. அவர்களின் தந்தை, அவர்களின் சகோதரர்களோடு அவர்களுக்கும் சொத்தில் உரிமை கொடுத்தார்.

பெண்களுக்கு சொத்தில் உரிமை வழங்குவது, இஸ்ரயேல் மக்களிடம் இல்லாத புதியதொரு மரபு. யோபு நூல், பல வழிகளில், புதிய எண்ணங்களை விதைத்துள்ளது என்பதற்கு, இந்த ஒரு இறைவாக்கியம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. யோபு நூலிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய புதிய, அல்லது, பழைய எண்ணங்களை, அடுத்த சில தேடல்களில் சிந்திப்போம்.


No comments:

Post a Comment