12 September, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 37


Declan Tell Me Why Cover

பாசமுள்ள பார்வையில் - 'ஏன் என்று எனக்குச் சொல்லுங்கள்'

செப்டம்பர் 11, இத்திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொலம்பியா நாட்டில் தன் திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து, வத்திக்கானுக்குத் திரும்பினார். பல ஆண்டுகளாக அமைதியிழந்து தவித்த அந்நாட்டினருக்கு, நம்பிக்கை தரும் வகையில் அமைந்த திருத்தந்தையின் பயணத்திற்காக, இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
இதே செப்டம்பர் 11, மனித சமுதாயத்தின் ஒட்டுமொத்த நினைவில் ஆழப்பதிந்த ஒரு வேதனை நாளாகவும் அமைந்துள்ளது. நியூ யார்க் நகரிலிருந்த உலக வர்த்தகக் கோபுரங்கள் மீது, 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, இரு விமானங்கள் மோதியதில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அந்தக் காட்சி, உலகெங்கும், ஊடகங்கள் வழியே, மீண்டும், மீண்டும் காட்டப்பட்டது.
இந்த நிகழ்வும், இதைத்தொடர்ந்து உலகின் முதல்தர நாடுகள் சில, சக்தியற்ற சில நாடுகள் மீது மேற்கொண்ட இராணுவத் தாக்குதல்களும், சிறுவர், சிறுமியரின் உள்ளங்களில் விடைதெரியாத கேள்விகளை எழுப்பியிருக்கவேண்டும்.
இளம் தலைமுறையினரின் பிரதிநிதியாக, டெக்லான் கால்ப்ரெய்த் (Declan Galbraith) என்ற 10 வயது சிறுவன், 2002ம் ஆண்டு வெளியிட்ட ஓர் அழகிய பாடலின் தலைப்பு - 'Tell Me Why' அதாவது, 'ஏன் என்று எனக்குச் சொல்லுங்கள்'. அக்கறையற்ற இவ்வுலகைப்பற்றி கூறும் அப்பாடலில் கேட்கப்பட்டுள்ள ஒரு சில கேள்விகள், இதோ:

என் கனவில் குழந்தைகள் பாடுகின்றனர்,
ஒவ்வொரு சிறுவன், சிறுமிக்காகவும் பாடப்படும் அன்புப்பாடல் அது.
என் கனவில், வானம் நீல நிறமாக, பூமி பசுமையாக உள்ளது.
சிரிப்பே இவ்வுலகின் மொழியாக உள்ளது.
பிறகு நான் விழித்தெழுகிறேன்.
இவ்வுலகில் தேவைகள் அதிகம் உள்ள மக்களே நிறைந்துள்ளனர்.
இது ஏன் என்று எனக்குச் சொல்லுங்கள்.

நான் ஒரு மனிதன் என்பதை நிரூபிக்க, என்ன செய்யவேண்டும்?
நான் என்பதை நிலைநாட்ட, சண்டையிட வேண்டுமா?
போர்களால் சூழப்பட்ட இவ்வுலகில், என் வாழ்வை வீணாக்க வேண்டுமா?
யாராவது எனக்குப் பதில் சொல்லுங்கள்.

அக்கறை கொண்டுள்ளோம் என்று சொல்வது ஏன்?
அதேநேரம், அக்கறையின்றி, நின்று வேடிக்கைப் பார்ப்பது ஏன்?
புலிகளை ஓட, ஓட விரட்டுவது ஏன்?
காடுகளை எரிப்பது ஏன்?
கடல்களை இறந்துபோக விடுவது ஏன்?
'டால்பின்கள்' அழுவது ஏன்?
அடுத்தவர் மீது பழியைப் போட்டு, கண்களை மூடி அமைதியடைவது ஏன்?
எங்களுக்குப் புரியவில்லை. யாராவது ஏன் என்று சொல்லுங்கள்.

God Confronts Job – Superbook

வேதனை வேள்வியில் யோபு – பகுதி 37

அமெரிக்க ஐக்கிய நாட்டில் புகழ்பெற்ற இசைக்கலைஞர் பாப் டிலன் (Bob Dylan) அவர்கள், 1963ம் ஆண்டு, "Blowing in the Wind", அதாவது, "காற்றில் வீசிக்கொண்டிருக்கிறது" என்ற பெயரில், புகழ்பெற்ற ஒரு பாடலை வெளியிட்டார். காலம் கடந்து புகழுடன் நிலைத்திருக்கும் ஆங்கிலப் பாடல்களில், இதுவும் ஒன்றெனக் கருதப்படுகிறது. 1960களில், போர்களால் காயமுற்று, சலித்துப்போயிருந்த மனித உள்ளங்களில் எழுந்த கேள்விகள், இந்தப்பாடலில் இடம்பெற்றுள்ளன. சமுதாயத்தில் நிலவும் அவலங்களைக் குறித்து, இப்பாடலில் எழுப்பப்பட்டுள்ள ஆழமான கேள்விகளில் சில, இதோ:
எத்தனை சாலைகள் வழியே ஒரு மனிதன் நடக்கவேண்டும்,
அவனை மனிதன் என்றழைப்பதற்குமுன்?
எத்தனைக் கடல்களை ஒரு வெண்புறா கடக்கவேண்டும்,
அது மணலில் உறங்குவதற்குமுன்?
எத்தனைமுறை பீரங்கிக் குண்டுகள் பறக்கவேண்டும்,
அவை என்றென்றும் தடை செய்யப்படுவதற்குமுன்?
எத்தனை ஆண்டுகள் சில மனிதர்கள் வாழவேண்டும்,
அவர்கள் மனிதர்களாக வாழும் அனுமதி பெறுவதற்குமுன்?
எத்தனை முறை மனிதர்கள் தங்கள் பார்வையைத் திருப்பிக்கொள்வர்,
அவர்கள் எதையும் காணவில்லை என்று தங்களையே ஏமாற்றிக்கொள்வதற்கு?

பதில், என் நண்பரே, காற்றில் வீசிக்கொண்டிருக்கிறது.
பதில், காற்றில் வீசிக்கொண்டிருக்கிறது.

இப்பாடலில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் உரிய விடைகள் எல்லா மனிதருக்கும் தெரியும்; ஆனால், தெரியாததுபோல் நடந்துகொள்கின்றனர் என்று, இப்பாடலின் ஆசிரியர் பாப் டிலன் அவர்கள் கூறியுள்ளார்.

வாழ்வில் பல முக்கிய கேள்விகள் கேட்கப்படுகின்றன. அக்கேள்விகளின் பதில்கள் எல்லாருக்கும் தெரிந்தவை. இருப்பினும், அவை தெரியாததுபோல் நடந்துகொள்கிறோம். பல நேரங்களில், கேட்கப்படும் கேள்விகளுக்குள்ளேயே பதிலும் புதைந்திருக்கும்.
"மீன்களுக்கு நீந்த கற்றுத்தர வேண்டுமா? பறவைகளுக்கு பறக்கத் தெரியாதா? இதற்கு நான் சம்மதிப்பேன் என்று கனவு கண்டாயா? கடவுள் கண்ணை மூடிக்கொள்வார் என்று நினைத்தாயா?" என்பன போன்ற கேள்விகள், குறிப்பிட்ட எண்ணங்களை வலியுறுத்த கேள்விகள் வடிவில் கேட்கப்படுகின்றன. இத்தகையக் கேள்விகளை ஆங்கிலத்தில் rhetorical questions அதாவது, சொல்லாடல் கேள்விகள் என்று கூறுவோம்.

யோபு நூலின் 'கிளைமாக்ஸ்' பகுதியில், 38,39,40 மற்றும், 41 ஆகிய பிரிவுகளில், இறைவன் யோபிடம் 77 கேள்விகளை எழுப்புகிறார். இவற்றில் பல, பதில்சொல்ல முடியாத, rhetorical கேள்விகள்.
இவ்வுலகில் நல்லோர் துன்புறுகையில், தீயோர் செழித்து வளர்கின்றனரே, இச்சூழலில் இறைவன் எங்கே? அவர் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்? என்ற கேள்விகளை, யோபு, தன் உரையில் எழுப்பினார். இந்தக் கேள்வி வழியே, இறைவன் இவ்வுலகை எவ்விதம் நடத்திச் செல்லவேண்டும் என்ற அறிவுரையை, யோபு, இறைவனுக்கு மறைமுகமாக வழங்கினார். இதற்குப் பதில் கூறும் வகையில், இறைவன் தன் முதல் கேள்வியை யோபிடம் கேட்டார்:
யோபு 38: 4-6
மண்ணகத்திற்கு நான் கால்கோள் இடும்போது நீ எங்கு இருந்தாய்? உனக்கு அறிவிருக்குமானால் அறிவிப்பாயா? அதற்கு அளவு குறித்தவர் யார்? உனக்குத்தான் தெரியுமே! அதன்மேல் நூல் பிடித்து அளந்தவர் யார்? எதன்மேல் அதன் தூண்கள் ஊன்றப்பட்டன? அல்லது யார் அதன் மூலைக் கல்லை நாட்டியவர்?

இந்தக் கேள்வி வழியே, இறைவன் கூற விழைவது என்ன என்பதை, யூத மத குரு ஹெரால்டு குஷ்னர் அவர்கள் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்: உலகை நான் படைத்தபோது, மனிதர்களின் உதவியை நான் தேடவில்லை. நான் படைத்த மனிதனாகிய நீ, இவ்வுலகை எவ்விதம் நான் வழிநடத்திச் செல்லவேண்டும் என்பதை இப்போது எனக்கு சொல்லித்தர முயற்சி செய்கின்றாயா? என்பதை, இறைவன், இந்த முதல் கேள்வி வழியே யோபிடம் கேட்கிறார்.

இறைவன் எழுப்பும் இரண்டாவது கேள்வி, கடலை மையப்படுத்தியது.
யோபு நூல் 38 8-11
கருப்பையினின்று கடல் உடைப்பெடுத்து ஓடியபொழுது அதனைக் கதவிட்டு அடைத்தவர் யார்? மேகத்தை அதற்கு மேலாடையாக்கி, காரிருளைப் பொதிதுணியாக்கி, எல்லைகளை நான் அதற்குக் குறித்து கதவையும் தாழ்ப்பாளையும் பொருத்தி 'இதுவரை வருவாய், இதற்குமேல் அல்ல; உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க!" என்று நான் இயம்பியபோது எங்கிருந்தாய் நீ?

பழமைவாய்ந்த அனைத்து மதங்களிலும் கடலுக்கு ஒரு முக்கிய இடம் தரப்பட்டுள்ளது. இஸ்ரயேல் சமுதாயத்திலும், கடலைப்பற்றி நிலவிய எண்ணங்கள் ஆழமானவை. படைப்பின் துவக்கத்தில், உலகமனைத்தும் நீரால் நிறைந்திருந்ததென்றும், பின்னரே, நிலம் தோன்றியதென்றும் தொடக்க நூலில் (தொ.நூ. 1:9-10) கூறப்பட்டுள்ளதை, இஸ்ரயேல் மக்கள் அறிந்திருந்தனர். அதேபோல், நோவா காலத்தில், இவ்வுலகை அழிக்க எண்ணிய இறைவன், உலகமனைத்தையும் பெருவெள்ளத்தில் மூழ்கச் செய்ததும் அவர்கள் நினைவில் இருந்தது (தொ.நூ. 7:17-24). நாம் வாழும் இந்த நூற்றாண்டிலும், 'சுனாமி' போன்ற ஆழிப்பேரலைகளால் மண்ணுலகம் நீரில் மூழ்குவதை நாம் அறிவோம்.
கட்டுக்கடங்காத கடல் நீரின் எல்லைகளை வரையறுப்பதும், கடல் தன் எல்லையை மீறி வராமல் இருக்க, அதனை காவல் காப்பதும், கடவுளின் முக்கியப்பணிகளில் ஒன்று என்பதை இஸ்ரயேல் மக்கள் நன்கு அறிந்திருந்தனர். இந்த எண்ணம், விவிலியத்தின் ஒரு சில இடங்களில் கூறப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, கடல் மீது தனக்குள்ள அதிகாரத்தைச் சுட்டிக்காட்டி, இஸ்ரயேல் மக்களிடம் கேள்வி கேட்கும் கடவுளை, இறைவாக்கினர் எரேமியா நூலில் நாம் இவ்வாறு சந்திக்கிறோம்:
இறைவாக்கினர் எரேமியா 5: 22
உங்களுக்கு என் மீது அச்சமில்லையா? என்கிறார் ஆண்டவர். என் முன்னிலையில் நீங்கள் நடுங்க வேண்டாமா? கடலுக்கு எல்லையாக மணலை வைத்தேன். இது என்றென்றும் உள்ள ஒரு வரம்பு, அதனைக் கடக்க முடியாது. அலைகள் அதன் மீது மோதியடிக்கலாம்; எனினும் அதன்மேல் வெற்றி கொள்ள முடியாது. அவைகள் சீறி முழங்கலாம்; எனினும் அதனை மீற முடியாது.

இவ்வாறு, இறைவன், படைப்பின் மீது, குறிப்பாக, கடலின் மீது தனக்குள்ள சக்தியைத் தெளிவுபடுத்தி, யோபிடம் ஆரம்பக் கேள்விகளைத் தொடுக்கிறார். யோபு நூல் 38, 39 ஆகிய இரு பிரிவுகளில், 71 இறைவாக்கியங்களில், இறைவன் எழுப்பும் கேள்விகளை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்:
முதல் பிரிவில், படைப்பையும், குறிப்பாக, கடலையும் பற்றி இறைவன் கேள்விகள் கேட்கிறார். (யோபு 38: 4-11) இரண்டாவது பிரிவில், விண்வெளி, பூமியின் எல்லைகள், ஒளி, இருள், உறைபனி, காற்று, மழை, இடி, மின்னல் என்று... படைப்பின் பல்வேறு அம்சங்களைக் குறித்து இறைவன் எழுப்பும் கேள்விகள் இடம்பெற்றுள்ளன. (யோபு 38: 12-38)

மூன்றாவது பிரிவில், பல்வேறு உயிரினங்களை இறைவன் படைத்து காத்து வருவதைக் குறித்து வரிசையாகக் கேள்விகளைத் தொடுக்கிறார். "பெண் சிங்கத்திற்கு இரை தேடுவாயோ?" (யோபு 38:39) என்று இறைவன் துவக்கும் இக்கேள்வித் தொகுப்பில், காக்கை, மான்குட்டி, காட்டுக்கழுதை, காட்டெருமை, தீக்கோழி என்று பல மிருகங்களைக் குறிப்பிட்டு ஒவ்வொன்றுக்கும் உரிய ஓர் இயல்பை வெளிச்சமிட்டு, அந்த இயல்பை வழங்கியது நீயா என்று யோபிடம் இறைவன் கேள்வி எழுப்புகிறார். அழகிய கவிதை நடையில் கூறப்பட்டுள்ள இந்தப் பகுதியிலிருந்து இரு எடுத்துக்காட்டுக்கள், இதோ:
யோபு 39: 19-20, 26-27
குதிரைக்கு வலிமை கொடுத்தது நீயோ? அதன் கழுத்தைப் பிடரியால் உடுத்தியது நீயோ? அதனைத் தத்துக்கிளிபோல் தாவச் செய்வது நீயோ?
உன் அறிவினாலா வல்லூறு பாய்ந்து இறங்குகின்றது? தெற்கு நோக்கி இறக்கையை விரிக்கின்றது? உனது கட்டளையாலா கழுகு பறந்து ஏறுகின்றது? உயர்ந்த இடத்தில் தன் உறைவிடத்தைக் கட்டுகின்றது?
இறைவன் தொடுத்த முதல் சுற்று கேள்விகளில், மனிதரைப்பற்றி அவர் பேசவேயில்லை. இது ஏன் என்பதை தீர ஆய்வு செய்தால், இறைவன் கூறவிழையும் ஓர் உண்மையைப் புரிந்துகொள்ள முடியும். அதாவது, படைப்பு அனைத்திற்கும் தாங்களே மையமென்று மனிதர்கள் நினைத்துக்கொண்டிருப்பது தவறு என்பதை இக்கேள்விகள் வழியே இறைவன் யோபுக்கும், நமக்கும், சொல்லித்தர விழைகிறார். இந்த எண்ணத்தை இன்னும் சிறிது ஆழமாக நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.


No comments:

Post a Comment